பனிமனிதனின்—மனதிற்குள்ளும் சமுதாயத்திற்குள்ளும்—உட்பார்வை
யூட்ஸியிடமாக திரும்பிப் போகலாம் வாருங்கள். அவன் காட்டுமிராண்டியாக, முட்டாளாக, கலைச்சுவை எதுவுமற்றவனாக இருந்தானா? அவனுடைய பாத்திரங்கள், கருவிகள், துணிமணிகள் எதை வெளிப்படுத்துகின்றன?
அவனுடைய கருவிகள் அவனுக்கு எறியும் கலையில் (ballistics) மிகச் சிறந்த அறிவு இருந்ததைக் காட்டுகின்றன. செய்து முடிக்கப்பட்ட இரண்டு அம்புகளும் அவற்றிற்கே உரித்தான இறகுகளைக் கடைமுனையில் கொண்டிருந்தன. பறந்து செல்கையில் இந்த அம்பு சுழன்று, சுமார் 30 மீட்டர் தூரம்வரை அதிகபட்ச துல்லியத்தோடு பாய்ந்து செல்லும்வண்ணம் இந்த இறகுகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒட்டப்பட்டிருந்தன. அவன் அணிந்திருந்த தோலாலான ஆடைகள் (பல்வேறு விலங்குகளின் தோல்கள்) அந்தக் காலத்தில் இருந்த ஆடையணிகளின் ரசனையைப்பற்றி நமக்கு ஓரளவு சொல்கின்றன. இன்று, ஒரு ஆடை உடலை மூடுவதற்காக மட்டுமல்லாமல் ஒருசில அழகு தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும். யூட்ஸியின் நாட்களில் எப்படி? அந்தக் கண்டுபிடிப்புகளைப்பற்றி விவரிக்கையில், டைம் பத்திரிகை சொல்கிறது: “அவனுடைய மேலங்கி மொசைக் டிசைனைப்போல தோன்றும்படி, தசைநாரின் அல்லது தாவரநாரின் நூலைக்கொண்டு திறம்பட இழைமடித் தையலிடப்பட்டிருந்தது.” தோலின் துண்டுகளும் அவை வேண்டுமென்றே தைக்கப்பட்டிருந்த விதமும் “ஒட்டுப் போட்டதைப் போன்ற தோற்றம்” அளித்தன என்று டெர் மான் இம் ஐஸ் (பனிக்கட்டியில் இருந்த மனிதன்) சொல்கிறது. அந்த மேலங்கிக்குமேல் பனிமனிதன் “குளிரிலிருந்து பாதுகாக்க மிகப் பொருத்தமான, புல்லினால் பின்னப்பட்ட மற்றொரு மேலங்கியை அணிந்திருந்தான். ஓய்வெடுக்கும் இடைவேளையின்போது தன்னுடைய உடல் தரையில் படாமல் இருக்க இதை ஒரு ‘மெத்தை’யைப்போல பயன்படுத்தியிருந்திருக்கலாம்.”—ஃபோக்கஸ்.
அவன் பயன்படுத்திய கருவிகளில் “எதிர்பாராதளவு தொழில்நுட்ப முன்னேற்றமும்” காணப்பட்டது என்று குறிப்பிடுகிறது டைம். உதாரணமாக, பிச்சுவா கத்தி, “புல்லினால் பின்னப்பட்ட நுணுக்க வேலைப்பாடுகளைக் கொண்ட ஒரு உறையோடு” சேர்ந்து முழுமை பெற்றிருந்தது. அப்படியென்றால், ஜோவான்னி மாரியா பாச்செ லையி இட்டாலியானி டெலேட்டா டெலா ப்யேட்ரா (கற்கால இத்தாலியர்கள்) என்ற தனது புத்தகத்தில் விவரித்ததுபோல, பனிமனிதன் தெளிவாகவே, உண்மையிலேயே “உயர்ந்த தரத்தையும் மேம்பட்ட பண்பாட்டையும் கொண்ட” ஒரு சகாப்தத்தில் வாழ்ந்துவந்தான்.
யூட்ஸிக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட காளான்களை (mushrooms) பற்றியும் குறிப்பிடலாம். அவை தீ மூட்டுவதற்குப் பயன்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றின் நோய்க்கெதிராக போராடும் தன்மைக்காகவும் மருந்தாக பயன்படும் தன்மைக்காகவும், பனிமனிதன் எடுத்துச் செல்லத்தக்க ஒருவித “முதலுதவிப் பெட்டி”யின் பாகமாக அவற்றைத் தன்னோடு வைத்திருந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதாக வல்லுநர்கள் சொல்லுகின்றனர்.
அழகை ரசிப்பதற்கான ரசனை, அறிவுத் திறன், மருத்துவ அறிவு, உலோகப் பணி, விவசாயம், கலை போன்ற துறைகளில் அறிவு—இவையாவும், அடிக்கடி தெரிவிக்கப்படும் தவறான கருத்துக்கு எதிராக, பனிமனிதனின் சமகாலத்தவர் பல்கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. “[பொ.ச.மு.] நான்காம் ஆயிரவருட காலத்தில் பெரும்பாலானோர் பெற்றிருந்த திறமைகள் எவையும் ஏதாவதொன்று இன்று வாழும் நம்மில் வெகு சிலருக்கே இருக்கிறது,” என்பதாக பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் லாரன்ஸ் பார்ஃபீல்ட் கூறினார். உதாரணமாக, கல்லறைகளிலிருந்து மீட்கப்பட்ட கலாச் சித்திரங்களிலும் உலோக மற்றும் மண்ணாலான கைவினைப் பொருட்களிலும் நயமான அவர்களுடைய ரசனைகள் வெளிப்படுகின்றன.
மதச் சூழ்நிலை
தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “ஆராய்ச்சியாளர்களின் அறிவுக்கெட்டியவரை, ஏதாவதொரு வகையில் வழிபாட்டுணர்ச்சி இல்லாத எந்த ஜனமும் எங்கும், எப்போதும், ஒருபோதும் வாழ்ந்ததேயில்லை.” பண்டைய காலங்களில் மதம் எந்தளவு முக்கிய பங்கு வகித்தது என்பதைப்பற்றி பேசுகையில், டிட்ஸையார்யோ டெலெ ரேலிஜோனி (டிக்ஷனரி ஆஃப் ரிலிஜன்ஸ்) இவ்வாறு சொல்கிறது: “அனுதின வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மத சம்பந்தமான திட்டங்களில் இணைவைத்துப் பார்க்கமுடியாத அளவு பொருட்களும் சக்திகளும் செலவிடப்பட்டன.”
இதுவரை கிடைத்துள்ள அத்தாட்சிகளின்படி, யூட்ஸியின் காலத்தில் வழிபாட்டுணர்ச்சி மிகப் பரவலாக இருந்துவந்தது. விதவிதமான மற்றும் கவர்ச்சிகரமான இறுதிச்சடங்குகளுக்குச் சான்று பகரும் பண்டையகால கல்லறைகள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய மக்களில் குறிப்பிட்ட இனத்தவருடைய கடவுட்களின் தெய்வத்துவங்களைச் சித்தரித்துக் காட்டும் சிறு களிமண் உருவங்களும் டஜன்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
பூர்வீக மனித வரலாறும் பைபிளும்
பூர்வீக காலங்களின்பேரில் செய்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டபடி, அப்போதைய நாகரீகங்கள் முன்னேற்றமடைந்தவையாக இருந்தன. முழு வளர்ச்சியடைந்த ஒரு சமுதாயமாக மாறுவதற்காக, ஆயிரம் இடர்பாடுகளுக்கு மத்தியில், போராடி அநேகமாக அற்ப முன்னேற்றத்தையே அடையும் பழங்கால நாகரீகங்களாக அவை இருந்ததாக ஒருவருக்குத் தோன்றுவதில்லை. வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை, சமுதாயங்கள் பலதரப்பட்ட அளவுகளில் இருந்தன, ஆனால் முழு வளர்ச்சி அடைந்தவையாய் இருந்தன.
பைபிளைப் படிக்கும் எவருக்கும் இது அர்த்தமுடையதாய் இருக்கிறது. மனித வரலாற்றில் வெகு காலத்திற்கு முன்பே—குறிப்பாக மக்கள் “பூமியின்மீதெங்கும் சிதறிப்போக” தொடங்கியபின்—முன்னேற்றமடைந்த, முழு வளர்ச்சியடைந்த நாகரீகங்கள் தோன்றின என்றும் அவற்றின் அங்கத்தினர்களுக்கு அறிவுத் திறனும் ஆவிக்குரிய திறமையும் இருந்தன என்றும் ஆதியாகம புத்தகம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.—ஆதியாகமம் 11:8, 9.
வெகு முற்பட்ட காலங்களில்கூட “செம்பையும் இரும்பையும் உருக்கி அடித்து எல்லா வகையான கருவிகளையும்” உருவாக்குவதைப்போன்ற தொழில்நுட்ப மற்றும் கலைத் திறமைகள் மனிதவர்க்கத்திற்கு இருந்தன என்பதற்கு பைபிள் அத்தாட்சியளிக்கிறது. (ஆதியாகமம் 4:20-22, NW) பைபிள் பதிவின்படி, மனிதர்கள் எப்போதுமே ஏதாவதொரு தெய்வத்தை வழிபடும் விருப்ப உணர்ச்சியைக் கொண்டிருந்திருக்கின்றனர். (ஆதியாகமம் 4:3, 4; 5:21-24; 6:8, 9; 8:20; எபிரெயர் 11:27) காலம் கடந்துபோகையில் அவனுடைய மதவுணர்வு தரம்குறைந்து போனது என்றாலும், மனிதன் “மாற்றமுடியாத வண்ணம் மதவுணர்வுடையவனாக” இருந்துவருகிறான், என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது.
தொடக்கத்திற்கான ஆராய்ச்சி
யூட்ஸியின் கண்டுபிடிப்பினால் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியால் பதிலளிக்க முடியவில்லை. இருப்பினும் அவன் வாழ்ந்த மனித சமுதாயத்தைப்பற்றி நாம் ஓரளவு அறிந்துகொள்ளும்படி அது செய்திருக்கிறது. அது முன்னேற்றமடைந்த சமுதாயமாக, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்றழைக்கப்படும் காலத்தைப்பற்றி பொதுவாக நினைக்கப்படுவதைவிட வெகு வித்தியாசமான படமாக இருக்கிறது. அநேகர் கருதுவதைவிட வெகு நவீனமானதாக இருந்தது.
முடிவாக, நேஷனல் ஜியாகரஃபிக் சொன்னபடி, பனிமனிதனின் கண்டுபிடிப்பினாலும் உடமைகளாலும் நாம் பெறக்கூடிய தகவல்கள் தவிர, “அவனைப்பற்றிய வேறு எதுவானாலும், பாதி மர்மமும் பாதி ஊகிப்புமாகவே இருக்கிறது.” இதற்கிடையில், யூட்ஸி ஆஸ்திரியாவிலுள்ள இன்ஸ்ப்ரூக்கில் குளிர்ப்பதன அறை ஒன்றில் கிடக்கிறான். ஆனால் பல்வேறு துறைகளையும் சேர்ந்த 140 ஆராய்ச்சியாளர்களோ, பனியில் கண்டெடுக்கப்பட்ட பனிமனிதனின் இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களை வெளிப்படுத்த போராடிக்கொண்டிருக்கின்றனர்.
[பக்கம் 8-ன் படம்]
இன்ஸ்ப்ரூக்கில் மருத்துவம்சார்ந்த சட்ட ஆய்வுத்துறை வல்லுநர்கள் பனிமனிதனின் உடலில் ஆய்வு நடத்துகின்றனர்
[படத்திற்கான நன்றி]
Foto: Archiv Österreichischer Alpenverein/Innsbruck, S.N.S. Pressebild GmbH