பனிமனிதனின்—மர்மம்பற்றிய துப்புகள்
நூற்றாண்டுகளாக யூட்ஸி மரணத்தில் அயர்ந்திருந்தான். கடல் மட்டத்திற்கு 3,200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில், பனி நிரம்பி கிடக்கும் குறுகிய மலையிடுக்கில், பக்கத்தில் உள்ள பனிப் படலத்தின் (glacier) இடப்பெயர்ச்சியிலிருந்து அவனைக் காப்பாற்றிய ஒரு குழியிலே அவன் கிடந்தான். அவனுடைய உடல் மட்டும் பனிப் படலங்களோடு சேர்ந்து உறைந்து போயிருக்குமேயானால், அது சுக்குநூறாக நொறுக்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டிருக்கும். அவன் கிடந்த பாதுகாப்பான இடமே அவன் சிதைவேதுமின்றி முழுமையாக பாதுகாக்கப்பட்டிருப்பதற்கான காரணமாய் இருந்திருக்கக்கூடும்.
அவனுடைய உடல் கிடந்த இடத்திலிருந்து ஒருசில மீட்டர் தூரம் தள்ளி, தெளிவாகவே அவனுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பாகமாக இருந்த சாமான்கள் சிதறிக்கிடந்தன: பசுமைமாறா ஊசியிலை மரத்தால் செய்யப்பட்ட, நாண் கட்டப்படாத ஒரு வில், 14 அம்புகளை (பயன்படுத்தக்கூடிய நிலையில் இரண்டும் மற்றவை செய்து முடிக்கப்பெறாத நிலையிலும்), அதனுள் கொண்டிருக்கும் மான்தோலாலான அம்புக்கூடு ஒன்று, சிக்கிமுக்கிக் கல்லாலான வெட்டும் பரப்பைக்கொண்ட ஒரு பிச்சுவா கத்தி, ஒரு கோடரி, பழங்காலத்தில் சுமைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சட்டம் என்பதாகக் கருதப்படும் ஒரு சாதனம், தோல் பை ஒன்று, பூர்ச்சமரப்பட்டைக் கலம், துண்டுத் துணிகள், இதர தட்டுமுட்டுச் சாமான்கள், பொருட்கள் போன்றவை.
கண்டுபிடிக்கப்பட்டபோது சிமிலெயுன் மனிதன் (அவனுடைய பெயர்களில் மற்றொன்று) தன் துணிமணிகள் சிலவற்றையும், குளிரிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வைக்கோல் திணிக்கப்பட்ட தோல் காலணிகளையும் அணிந்துகொண்டுதான் இருந்தான். அவனுடைய தலைக்கு அருகில் வைக்கோலால் பின்னப்பட்ட ஒரு “பாய்” கிடந்தது. ஒரு மாலைவேளை களைப்பினாலும் குளிரினாலும் ஆட்கொள்ளப்பட்டவனாய், அந்தப் பனிமனிதன் அமைதியாய் நித்திரையில் ஆழ்ந்து, ஆயிரமாயிர வருடங்களுக்குப் பிறகே பகல் வெளிச்சத்தைக் “காண” எழுந்ததுபோல தோன்றியது. இந்தக் கண்டுபிடிப்பு “ஒரு சகாப்தத்தின், ஒரு சமுதாயத்தின், ஒரு உயிரியல் ஜனத்தின் ஒரு நொடிநேர புகைப்படமாக (snapshot)” இருந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் ஃப்ராஞ்ச்சேஸ்கோ ஃபேடேலெ சொல்லுகிறார். அவர் சிமிலெயுன் மனிதனை “காலப் பெட்டகம்” (time capsule) என விவரித்தார்.
அவன் பாதுகாத்து வைக்கப்பட்டது எப்படி?
யூட்ஸி அந்தச் சூழ்நிலையில் இவ்வளவு காலமாக சிதைவேதுமின்றி பாதுகாத்து வைக்கப்பட்ட முறையின்பேரில் அனைவருக்கும் கருத்து ஒருமைப்பாடில்லை. “அப்படியே அவன் கண்டுபிடிக்கப்பட்ட குழி அவனுக்குக் கொடுத்ததாக சொல்லப்படும் பாதுகாப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூட, அவன் பாதுகாக்கப்பட்ட விதமானது ஏறக்குறைய அற்புதமாகவே இருக்கிறது,” என நேச்சர் கூறுகிறது. மிகவும் நம்பத்தகுந்ததாக தற்போது எண்ணப்படும் கருத்து என்னவென்றால், “சாத்தியக்கூறற்ற மூன்று நிகழ்ச்சிகள்” சேர்ந்ததனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறான் என்பதே. (1) குளிர், சூரியவொளி, மலைக்காற்று (கதகதப்பான, உலர்ந்த காற்று) போன்றவற்றின் விளைவுகளால் துரிதமாக ஏற்படும் இயற்கையால் பதப்படுத்தப்பட்டது (நீர் வற்றிப்போதல்); (2) கொன்று தின்னும் விலங்குகள் பார்க்கமுடியாதபடி உடலை மறைத்துவிடும் பனியால் விரைவில் மூடப்பட்டது; (3) இடம் பெயரும் பனிப் படலங்களிலிருந்து குழியால் பாதுகாக்கப்பட்டது ஆகியவையே இம்மூன்று நிகழ்ச்சிகளாகும். இருந்தபோதிலும், உலர்ந்த மலைக்காற்று இவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆல்ப்ஸ் மலைப்பகுதிக்கு வந்தெட்டாதென்று அடித்துச் சொல்லும் சிலருக்கு இந்த விளக்கமும்கூட நம்பக்கூடியதாக தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும், பனிமனிதனைப் பற்றிய சில விஷயங்கள் நிச்சயமாக இருக்கின்றன. அவன் 25-க்கும் 40-க்கும் இடைப்பட்ட வயதுள்ளவனாயும், சுமார் 160 சென்டிமீட்டர் உயரமும் சுமார் 50 கிலோகிராம் எடையும் உள்ளவனாயும் இருந்தான் என்று உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது. வலிமையும் நெகிழ்வுமுள்ளவனாயும் நல்ல சதைப்பற்றுடையவனாயும் இருந்தான். பழுப்பு நிறமுடைய அவனுடைய முடி நன்கு பராமரிக்கப்பட்டதாயும் கிரமம் தவறாமல் வெட்டப்பட்டதாயும் இருந்தது. இவன் வாழ்ந்த காலத்திய மத்திய மற்றும் வட ஐரோப்பிய குடிமக்களின் அதே மரபணுக் குழுமத்தை (gene pool) சேர்ந்தவனாயிருந்தான் என்று திசு மாதிரிகளை வைத்து சமீபத்தில் நடத்திய டி.என்.ஏ. ஆராய்ச்சிகள் நிரூபித்தன. தேய்ந்துபோன அவனுடைய பற்கள் கடினமான ரொட்டியை சாப்பிட்டான் என்று காண்பிப்பது மட்டுமல்லாமல், ஒரு விவசாய சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருந்திருக்கலாம் என்றும் நினைக்க வைக்கிறது. அவனுடைய துணிகளில் காணப்பட்ட கோதுமை மணிகள் இதற்குச் சாட்சி பகருகின்றன. கோடைகால இறுதியிலோ இலையுதிர்கால தொடக்கத்திலோ இறந்தான் என்பதைத் தீர்மானிக்க முடிந்திருப்பது ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. எப்படி? கோடைகால பிற்பகுதியில் பழுக்கும் விதவிதமான காட்டு ப்ளம் பழங்களில் மீதியானவை அவனுடைய பையில் காணப்பட்டன. அவை ஒருவேளை, இறுதியில் அவனிடமிருந்த உணவின் பாகமாக இருந்திருக்கலாம்.
“துப்பாக்கி ஏந்தியிருக்கும் இடைக்கால போர்வீரன்”
ஆனால் யூட்ஸி எதை வெளிப்படுத்துகிறான்? இந்தக் கண்டுபிடிப்பினால் எழுப்பப்பட்ட அநேக கேள்விகளை ஆர்க்கேயோ என்ற இத்தாலிய பத்திரிகை இவ்வாறு சுருங்கக் கேட்கிறது: “அவன் ஒரு போர்வீரனா அல்லது வேட்டைக்காரனா? அவன் ஒருவன் மட்டும் தனியாக சென்றானா அல்லது தன்னுடைய கூட்டத்தாரோடு சென்றானா? அல்லது மறுபட்சத்தில், தன்னுடைய கூட்டத்தாரில் தெரிந்தெடுத்த ஒருசிலரோடு மட்டும் அந்த மலைகளைக் கடந்துகொண்டிருந்தானா? . . . அவனுடைய உடல் மட்டும்தான் அங்கு பனிக்கட்டிகளால் சூழப்பட்டுக் கிடந்ததா, அல்லது வேறு உடல்களும் கிடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாமா?” இதற்கான பதில்களையெல்லாம், முக்கியமாக சிமிலெயுன் மலையின்மீது கண்டெடுத்த சாமான்களை ஆராய்வதன்மூலமும், அவற்றின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முயற்சிப்பதன்மூலமும் உறுதிப்படுத்த வல்லுநர்கள் வகைதேடியிருக்கின்றனர். 3,200 மீட்டருக்கும் கூடுதலான உயரத்திற்கு இந்த யூட்ஸி ஏன் சென்றான் என்பதைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒவ்வொன்றும் வேறு சில விவரத்தால் முரண்படுத்தப்படுகிறது. ஒருசில உதாரணங்களை நாம் சிந்திக்கலாம்.
ஒருபோதும் நாண் கட்டப்படாத அந்த வில்லும் அம்புகளும் அவன் ஒரு வேட்டைக்காரனாக இருந்தான் என்று உடனடியாக முடிவுக்கு வரும்படியாக செய்கின்றன. இது புதிரைப் புரிய வைக்கிறதா? ஒருவேளை புரிய வைக்கலாம், ஆனால் கிட்டத்தட்ட 1.8 மீட்டர் நீளமுள்ள அந்த வில், “இவனைப் போன்ற உயரமுள்ள ஒரு ஆளுக்கு மிகப் பெரியதாக இருந்தது” என்றும், “ஆல்ப்ஸ் மலைகளுக்கே உரித்தான விலங்குகளை வேட்டையாட தேவையானதைவிட நிச்சயமாகவே இது மிகப் பெரியதாய் இருந்தது” என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் க்ரிஸ்டஃபர் பர்க்மன் கூறுகிறார். தன்னால் பயன்படுத்த முடியாத ஒரு வில்லை அவன் ஏன் வைத்திருந்தான்? அது மட்டுமல்லாமல், மலைகளில் பயணம் செய்யும் ஒருவன் அதிகமாக இருக்கும் பாரத்தையெல்லாம் விட்டுவிட்டுச் செல்லவேண்டும். “இந்த மனிதனின் வில்லும் அவனுடைய 14 அம்புகளில் 12 அம்புகளும் செய்து முடிக்கப்படாமல் இருக்கின்றன. ஆனால் அவனுடைய மற்ற கருவிகளோ (பிச்சுவா கத்தியும் கோடரியுமோ) நீண்டநாள் உபயோகத்தினால் மழுங்கிப்போய் இருந்தன. இதுதான் குறிப்பாக புதிராயிருக்கிறது,” என்று நேச்சர் குறிப்பிடுகிறது.
ஒருசில மீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் கோடரியைப் பற்றியதென்ன? முதலில் அது வெண்கலமாக இருக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் அது மெய்யாகவே செம்பினால் செய்யப்பட்டது என்று சோதனைகள் காண்பித்தன. இதன் காரணமாகவும் மற்ற காரணங்களுக்காகவும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் யூட்ஸியை செப்புக் காலத்தின் தொடக்கத்தை, அதாவது பொ.ச.மு. நான்காம்-மூன்றாம் ஆயிர வருட காலத்தைச் சேர்ந்தவனாக கணக்கிட விரும்புகின்றனர். “இவன் 4,800 முதல் 5,500-க்கு இடைப்பட்ட வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கிறான் என்று . . . கார்பன்-14 பரிசோதனைகள் உறுதிப்படுத்தின,” என்பதாக ஆடுபான் பத்திரிகை கூறிற்று.a எனினும் மற்ற சாமான்கள் பனிமனிதனை அதைவிட சற்று முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவனாக கணக்கிடும்படி சில வல்லுநர்களை வற்புறுத்துவதாக இருக்கும். தெளிவாகவே, சிமிலெயுன் மனிதனை ஒரு குறிப்பிட்ட பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்தவனென குறிப்பிடுவது முடியாத காரியமாகும். அந்தச் செப்புக் கோடரியைப்பற்றி குறிப்பிடும்போது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் இவ்வாறு கருதுகிறார்: யூட்ஸி “தான் வாழ்ந்த சகாப்தத்தில் இருந்ததைவிட அதிக தொழில்நுட்ப முன்னேற்றமடைந்த ஒரு கருவியை வைத்திருந்தான். இது, துப்பாக்கி ஏந்தியிருக்கும் இடைக்கால போர்வீரன் ஒருவனை நாம் கண்டுபிடித்ததுபோல் இருந்தது. உண்மையில், அந்தச் சகாப்தத்தில் கிழக்கத்திய பண்பாட்டினர் மட்டுமே செம்பைப்பற்றி அறிந்திருந்தனர்.”
மேலும், நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, பனிமனிதனின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குக் கோடரி மதிப்புமிக்க ஒரு சாதனமாக இருந்திருக்கலாம். அவனுடைய பிச்சுவா கத்தியின் உறையைப் போன்ற மற்ற கைவினைப் பொருட்களும் மிக மிக முன்னேற்றம் அடைந்தவையாய் இருந்ததால், சந்தேகமேதுமின்றி “கௌரவப் பொருட்களாக” இருந்தன. ஆனால் யூட்ஸி உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த ஒருவனாக, ஒரு தலைவனாக இருந்திருந்தால், அவன் மரிக்கும் சமயத்தில் ஏன் தனிமையில் இருந்தான்?
பாப்புலர் ஸயன்ஸ் சொல்கிறபடி, இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கான்ராட் ஷ்பின்ட்லர் இவ்வாறு கருதுகிறார்: “தொடக்கத்தில் மர்மமான பச்சைகுத்தியதன் அடையாளங்கள் என்று கருதப்பட்டவை, மிகச் சரியாகவே தேய்வுற்ற முழங்காலாகவும், கணுக்காலாகவும் அவனுடைய முதுகெலும்பிலுள்ள சிதைந்துபோன முள்ளெலும்புகளாகவும் இருந்தன. பனிமனிதனை அவனுடைய டாக்டர் ஒருவேளை வலி ஏற்படும் பகுதிக்கு மேலுள்ள தோலில் சூடு வைத்து மூலிகைச் சாம்பலைக் காயத்தின்மீது தடவி மருத்துவம் பார்த்திருந்திருக்கலாம்.”
யூட்ஸி செம்மையாக அடிக்கப்பட்டு ரத்தம் வடியவடிய ஓடிவந்து, மற்றவர்கள் வலைவீசித் தேடிக்கொண்டிருக்கையில், தலைமறைவாக இருக்கும்போது இறந்துபோன அகதியாக இருந்திருக்கலாம் என்ற கருத்தானது, சமீபத்தில் சிகாகோவில் நடைபெற்ற மருத்துவம்சார்ந்த சட்ட ஆய்வுத்துறை வல்லுநர்களுடைய கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. அவனுடைய விலா எலும்புகள் அநேகம் உடைந்திருந்தன என்றும் ஒரு தாடை முறிந்திருந்தது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்தக் காயங்கள் அவனுக்கு எப்போது ஏற்பட்டன—சாவதற்கு முன்பா பின்பா என்று சரியாக சொல்லப்பட முடியாது. வன்முறைக்குப் பலியாகியிருந்தால், “பிறகு ஏன் அவன் தன் கருவிகளை,” செப்புக் கோடரியைப் போன்ற “‘மதிப்புமிக்க’ கருவிகளையும்கூட வைத்திருந்தான்?” என்று கேட்கிறது ஆர்க்கேயோ.
முழு விவரம் தருவதற்கு தற்போது கிடைத்துள்ள தகவல்கள் போதாது என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர், ஆகவே அநேக கேள்விகள் பதிலளிக்கப்படாமலேயே இருக்கின்றன. ஆனால் யூட்ஸி எந்த நாகரீகத்தைச் சேர்ந்திருந்தானோ அது மிக நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டதாயும் முன்னேற்றமடைந்ததாயும் இருந்ததென்பது மட்டும் தெளிவாக இருக்கிறது.
யூட்ஸியும் அவனது சமுதாயமும்
சிமிலெயுன் மனிதனின் சமுதாயத்தை வல்லுநர்கள் விவரிக்கையில், அவனுடைய சமகாலத்தவர்கள் குடியிருந்ததாக கருதப்படும் ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதிகளின் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக்கொண்டே கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும், சில பகுதிகள் மற்ற பகுதிகளைவிட அதிகம் முன்னேற்றமடைந்திருந்தன என்றும், செப்புத் தொழில் போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை மத்திய கிழக்கில் தோன்றின என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நமக்குக் கூறுகின்றனர்.
ஆடஜே ஆற்று வடிநிலத்தில் உள்ள விவசாய கிராமம் ஒன்றில் யூட்ஸி வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஒரு மறுகருத்து சொல்கிறது. இந்த ஆறு இத்தாலிய தீபகற்பத்தை மத்திய ஐரோப்பாவோடு இணைக்கும் ஒரு முக்கிய வியாபார வழியாக இருந்தது. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் இப்பகுதியில், சுமார் 2,000 மீட்டர் உயரத்திலும்கூட, பல்வேறு இடங்களில் அநேக குடியேற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காலத்தின் விவசாய கிராமங்கள் அவற்றிற்கே உரித்தான பாணியில் மூன்றோ நான்கோ வீடுகளால், ஒருவேளை அதிகபட்சம் சில டஜன் வீடுகளால் மட்டுமே ஆனவையாய் இருந்தன. எப்படிப்பட்ட வீடுகள்? அகழ்வாராய்ச்சிகள் தரைகளைப்பற்றி மட்டுமே வெளிப்படுத்தியிருக்கின்றன; அவற்றில் பெரும்பாலானவை மண்ணைப் பிசைந்து தளம் போடப்பட்டிருக்கின்றன. வீடுகளில் ஒரே ஒரு அறை மட்டும் இருந்தது; அடுப்பு, சில சமயங்களில் சூட்டடுப்பு, பொதுவாக வீட்டின் நடுவில் இருந்தது. கூரையோ முக்கோணச் சுவர் முகடு உடையதாய் இருந்திருக்கலாம். இக்கூரைகள் ஆல்ப்ஸ் மலையிலுள்ள அநேக ஏரிகளுக்கு அருகில் காணப்பட்ட குத்தூண்கள்மீது கட்டப்பட்ட, அவனுடைய சமகாலத்தவர்களின் வீடுகளிலுள்ள கூரைகளைப்போல இருந்தன. ஒரு அறையைக்கொண்ட ஒவ்வொரு குடிசையும் ஒரு குடும்பம் வசிப்பதற்குப் போதுமான இடவசதியை அளித்திருக்கலாம்.
கால்நடைகளை வளர்த்த அத்தகைய விவசாய சமுதாயத்தினரிடையே எவ்விதமான தொடர்புகள் இருந்துவந்தன? சந்தேகமின்றி வாணிபம்தான். உதாரணமாக, சிமிலெயுன் மலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் கோடரி, இன்னும் தெற்கே, கார்டா ஏரிக் கரைகளில் உற்பத்தி செய்யப்பட்டவற்றிற்கு ஒத்திருந்தது. ஆகவே இது ஒருவேளை வியாபார நடவடிக்கைக்கான ஒரு பொருளாக இருந்திருக்கலாம். யூட்ஸியின் சாமான்களோடு சில சிக்கிமுக்கிக் கற்களும் காணப்பட்டன. ஆடஜே ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியினூடே இவை வர்த்தகத்தில் விலையேறப்பெற்ற பொருட்களாக இருந்தன. மக்கள் பெரும்கூட்டங்களாக இடம்விட்டு இடம் மாறிப் போவதை அவசியப்படுத்திய நடவடிக்கைகளில் ஒன்று கால்நடைகளின் பருவகால இடப்பெயர்ச்சியாகும். டைரோலில் இடையர்கள் இன்றும் செய்வதைப் போலவே, அவர்கள் புதுப்புது மேய்ச்சல் நிலங்களைத் தேடி தங்களுடைய மந்தைகளை ஆல்ப்ஸ் கணவாய்களினூடே கூட்டிச் சென்றனர். பனிமனிதனின் தொடக்கத்தைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் என்னென்ன முடிவுக்கு வந்திருக்கின்றனர்?
[அடிக்குறிப்புகள்]
a கார்பன்-14 பரிசோதனைகள் எந்தளவு நம்பக்கூடாதவை என்பதன்பேரிலான தகவல்களுக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில விழித்தெழு! செப்டம்பர் 22, 1986-ல் பக்கங்கள் 21-6-ஐயும், உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) பக்கம் 96-ஐயும் பார்க்கவும்.
[பக்கம் 5-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இத்தாலிய எல்லைக்குள் சிமிலெயுன் பனிப்படலத்தின்மீது பனிமனிதன் கண்டுபிடிக்கப்பட்டான்
ஜெர்மனி
ஆஸ்திரியா
ஸ்விட்ஸர்லாந்து
ஸ்லோவேனியா
இத்தாலி
சிமிலெயுன்
பனிப்படலம்
இன்ஸ்ப்ரூக்
போல்ஸேனோ
ஏட்ரியாடிக் கடல்
100 மைல்
100 கி.மீ.
[பக்கம் 7-ன் படங்கள்]
X குறி யூட்ஸி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுகிறது. உள்படங்கள்: 1. செப்புக் கோடரி, 2. சிக்கிமுக்கிக்கல் பிச்சுவா கத்தி, 3. தாயத்தாக இருக்கலாம், 4. மரக் கைப்பிடியில் உள்ள மான்கொம்பு முனை
[படத்திற்கான நன்றி]
Foto: Prof. Dr. Gernot Patzelt/Innsbruck
Fotos 1-4: Archiv Österreichischer Alpenverein/Innsbruck, S.N.S. Pressebild GmbH