பனியில் கண்டெடுக்கப்பட்ட பிரேதம்
இத்தாலியிலுள்ள விழித்தெழு! நிருபர்
பார்த்தவுடனே அது ஏதோ ஒரு கொலை நடந்த காட்சியைப்போல் தோன்றியிருக்கலாம். காய்ந்து கருவாடாகிப்போன ஒரு சடலம் தலைகுப்புற, பனிக்கட்டியில் பாதி புதைந்து கிடந்தது. ஒரு அசம்பாவித மரணமா? பழிக்குப்பழியாக செய்யப்பட்ட ஒரு கொலையா? அல்லது ஏதோ மலையேறுதலுக்கு இரையான இன்னொரு பலியாளா? அது என்னவாக இருந்தாலும், கடல் மட்டத்திலிருந்து 3,200 மீட்டர் உயரத்தில் டைரோலியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நிசப்தத்தில் அவன் அங்கு என்ன செய்துகொண்டிருந்தான்? அவன் யார்? எப்படி இறந்தான்?
“பனிமனிதன்” என்று உடனடியாக பெயர் சூட்டப்பட்ட, அல்லது ஹோமோ ட்யெரோலென்ஸிஸ் என விஞ்ஞானிகளால் அழைக்கப்பட்ட அவன், ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள சிமிலெயுன் மலையில் (யூட்ஸ்டாலர் ஆல்ப்ஸ் மலைத்தொடரில்), உல்லாசமாக உலாவ வந்த ஒரு ஜெர்மானிய தம்பதியால் செப்டம்பர் 1991-ல் எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டான். அந்த வருடம் நிலவியிருந்த வழக்கத்திற்கு மாறான வெப்பம் மிகுந்த கோடைகாலம் பெரும்பாலான பனியை உருக்கிவிட்டிருந்தது. இது புதைந்து கிடந்த அழிபாடுகளையெல்லாம் வெளிக்கொண்டுவந்தது. இல்லாவிட்டால் இந்த அழிபாடுகளெல்லாம் மறைந்தே கிடந்திருக்கும்—எவ்வளவு காலங்களுக்கு என்று யாருக்குத் தெரியும்? இந்தக் கண்டுபிடிப்பு சம்பந்தமாக தொடக்கத்தில் இருந்த சில ஐயப்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் தீர்த்துக்கொண்ட பிறகு, அந்தச் சடலம் பனிக்கட்டியிலிருந்து முரட்டுத்தனமாக வெட்டியெடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கையில் சிதைவு ஏற்பட்டது. என்றபோதிலும், இது சாதாரணமான ஒரு சடலம் இல்லையென்பது விரைவில் தெட்டத்தெளிவாயிற்று. அவ்வளவு உயரத்திற்கு உல்லாசமாக நடந்துபோகிற நவீனகால ஆட்கள் சாதாரணமாக பயன்படுத்தும் பொருட்களைவிட வெகு வித்தியாசமான அநேக பொருட்கள் அந்த உடலைச்சுற்றி சிதறிக்கிடந்தன.
அந்தச் சடலம் மிகவும் பழமையானது என்பது சிலருக்குப் புரிந்துவிட்டது. தொடக்க சோதனைகளுக்குப் பிறகு, ஆஸ்திரியாவில் உள்ள இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கான்ராட் ஷ்பின்ட்லர், வியக்கத்தக்க ஒரு அறிக்கையை விடுத்தார்—சிமிலெயுன் மலையில் கண்டெடுக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட அந்த உடலானது பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையானது! கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மேன்மேலும் நடத்தப்பட்ட சோதனைகளும் ஆராய்ச்சிகளும், அவர்கள் ஆராய்ந்துகொண்டிருந்த சடலமானது, “பெரும்பாலும் எந்தவொரு சிதைவுமின்றி இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனிதர்களிலேயே முழுமையானதும் மிகப் பழமையானதும்” என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வரும்படி செய்தது. (டைம், அக்டோபர் 26, 1992) (பக்கத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கின் ஜெர்மானிய பெயராகிய யூட்ஸ்டால் என்பதிலிருந்து வந்த) யூட்ஸி என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்ட இந்தப் பனிமனிதன், பொ.ச.மு. சுமார் 3000 ஆண்டில் இறந்தான் என்பதாக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட்ட பிறகு, இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அந்த மனிதனுக்கு என்ன சம்பவித்தது என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் உறுதுணைபுரியும் மற்ற கைவினைப் பொருட்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று தேடிப்பார்க்க தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் சிமிலெயுன் மலைக்குப் பலதடவைகள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்? பனிக்கட்டியில் மூடிக்கிடந்த ஒரு பிரேதத்தைப்பற்றி ஏன் இவ்வளவு ஆர்வம் இருந்துவந்திருக்கிறது? அவனைப் பற்றியுள்ள மர்மத்தில் எதையாவது தீர்க்க முடிந்திருக்கிறதா?
[பக்கம் 3-ன் படம்]
பனிமனிதன் யூட்ஸி
[படத்திற்கான நன்றி]
Foto: Archiv Österreichischer Alpenverein/Innsbruck, S.N.S. Pressebild GmbH