எமது வாசகரிடமிருந்து
மதமும் போரும் அக்டோபர் 22, 1994 இதழில் வெளியான “மதம் போரை ஆதரிக்கையில்” தொடர் கட்டுரைகளுக்காக என் போற்றுதலைத் தெரிவித்துக்கொள்ள நான் விரும்புகிறேன். க்ரோவேஷியாவிலிருந்த செர்பியர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நான் வாழ்ந்தபோதிலும், அச்சமயம் நான் சிறுபெண்ணாக இருந்தபடியால் அது என் நினைவில் இல்லை. இந்தச் சிக்கலான துயர்நிறைந்த நிலை என் ஆழ்ந்த கவலைக்கும் ஆர்வத்திற்குமுரிய விஷயமாக இருந்துவந்திருக்கிறது. மதத்தின் பங்கையும் இத்தேசிய தொகுதிகளிடையே பிரிவினையையும் விரோதத்தையும் தூண்டிவிட அது எடுக்கும் ஓயாத முயற்சிகளையும் நீங்கள் தெளிவாக எடுத்துக்காட்டிய விதத்தை நான் மெச்சினேன்.
எம். கே., ஐக்கிய மாகாணங்கள்
“நாங்கள் ஹிட்லரின் போரை ஆதரிக்கவில்லை” என்ற கட்டுரை என் நெஞ்சைத் தொட்டது. நான் ஏறக்குறைய அழுதேவிட்டேன், அவ்வளவு நன்றாக அது எழுதப்பட்டிருந்தது. எனக்கு 15 வயது. என்னுடைய பள்ளியிலோ அல்லது பிரசங்க வேலையிலோ நான் எதிர்ப்படும் எந்தச் சிறு துன்புறுத்தலையும் என்னால் கையாளமுடியும் என்பதை அறிந்துகொள்வதில் நான் உற்சாகமடைகிறேன்.
ஏ. எம்., ஐக்கிய மாகாணங்கள்
வோல்பார்ட் குடும்பம் எதிர்ப்பட்ட சோதனைகளைப் பற்றி வாசித்தபோது என்னால் கண்ணீர் விடாமல் இருக்கமுடியவில்லை. அவர்களுடைய சோதனைகள் என்னுடைய சிறு சோர்வுகளை ஒன்றுமே இல்லாததுபோல் தோன்ற செய்கின்றன. இந்த ஒழுங்குமுறை முடிவுக்கு வருகையில் கிறிஸ்தவர்களாக நாம் அதுபோன்ற எதிர்ப்பை எதிர்ப்படக்கூடும் என்பதை அறிந்தவளாய் விடாமுயற்சியுடன் நிலைத்திருக்க அந்தக் கட்டுரை என்னை உற்சாகப்படுத்தியது.
எம். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
நிவாரணப் பணிகள் ருவாண்டாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி எனக்குக் கவலை ஏற்பட்டது. “ருவாண்டாவின் அவலத்திற்கு பலியானவர்களைக் கவனித்தல்” (டிசம்பர் 22, 1994) என்ற கட்டுரையை வாசித்தப்பின் அவர்கள் எவற்றையெல்லாம் அனுபவிக்கிறார்கள் என்பதைப் பற்றி இப்போது கொஞ்சம் நான் அறிந்திருக்கிறேன். அநேகர் இறந்துபோனதாக அக்கட்டுரை குறிப்பிட்டது. அவர்களை பரதீஸில் மீண்டும் சந்திக்கமுடியும் என்ற நம்பிக்கைதான் என்னைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ள உதவியது. அது வருமுன் ருவாண்டாவிலுள்ள என் உடன் விசுவாசிகளுக்காக நான் ஜெபிப்பேன்.
ஜே. டி., ஜப்பான்
விளங்கமுடியாத ஓநாய் யெகோவாவின் படைப்புகளைப்பற்றி நீங்கள் பிரசுரிக்கும் தகவல் நிறைந்த, மகிழ்வூட்டுகிற கட்டுரைகளுக்கு நன்றி. “கேனிஸ் லூப்பஸ்” பற்றி “விளங்கமுடியாத பிராணி—வெறுக்கப்படுவதும் விரும்பப்படுவதும்” (செப்டம்பர் 8, 1994) என்ற கட்டுரை மிகவும் ஆர்வத்துக்குரியதாக இருந்தது. ஆனால் கட்டுரையின் முதல் பக்கத்திலுள்ள படத்தில் காணப்படும் அந்த மிருகம் ஓநாயைவிட மிகவும் சிறிதாக தோன்றுகிறது.
எஸ். டபிள்யு., ஜெர்மனி
கூர்ந்த பார்வையுடைய இந்த வாசகரின் கருத்துக்களை நாங்கள் மெச்சுகிறோம். அப்படத்தில் காணப்படும் நிழலுருவம் ஓநாயல்ல, ஒரு கோயோட்டின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து வரையப்பட்டதாக தோன்றுகிறது. இப்பிழை ஏற்பட்டதற்கு வருந்துகிறோம்.—ED.
சாத்தான் வழிபாடு “சாத்தான் வழிபாடு—அதன் கவர்ச்சி” (செப்டம்பர் 22, 1994) என்ற உங்களுடைய தொடர்கட்டுரை முழுவதும் ஹெவி-மெட்டல் இசையைப் பற்றி மாறாசலிப்பூட்டும் விதத்தில் பொதுப்படையான கருத்துக்களை நீங்கள் எழுதியிருப்பது எனக்குத் திகைப்பூட்டுவதாய் இருந்தது. இத்தகைய மாறாசலிப்பூட்டும் தன்மையுள்ள விவரிப்புக்குப் பொருந்தும் இசைக்குழுக்கள் உள்ளன என்பது உண்மையாய் இருப்பினும், ஹெவி மெட்டல்-இசையிலுள்ள மற்ற பயனளிக்கும் விளைவுகளை உங்கள் கட்டுரை சொல்லாமல் விட்டுவிடுகிறது.
சி. சி., ஐக்கிய மாகாணங்கள்
எல்லா ஹெவி-மெட்டல் இசையும் சாத்தான் வழிபாட்டை நேரடியாக ஆதரிப்பதில்லை என்பது ஒருவேளை உண்மையாயிருக்கக்கூடும். ஆயினும், பிரபல ஹெவி-மெட்டல் இசைக்குழுக்களின் அருவருப்பான தோற்றமும் நடத்தையும் யாவரும் அறிந்ததே. போதைமருந்துகளோடும் வன்முறையோடும் இந்த இசைப்பாணியின் நீண்டநாள் தொடர்பும் அதுபோன்றே அறியப்பட்டிருக்கிறது. இவ்வுண்மைகளின் காரணமாக, இந்த இசையின் எந்த வகையோடும் ஈடுபடுவதைப்பற்றி வாசகர்களை எச்சரிக்க கடமைப்பட்டவர்களாக உணர்ந்தோம்.—ED.
நீங்கள் எழுதியவை அனைத்தும் உண்மை. எங்களுடைய மூத்தமகள் கிறிஸ்தவப்பெண்ணாக வளர்க்கப்பட்டாள். ஆனால் பிறகு அவள் வரவர கலகத்தனம் மிகுந்தவளாக ஆனாள். ஹெவி-மெட்டல் இசையை கேட்கும் பிள்ளைகளோடு அவள் தோழமைகொண்டிருந்தாள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். ஹெவி-மெட்டல் கேசட்டுகளை மறைத்து வைத்திருந்து இரவில் ஹெட்போன்கள் மூலம் அப்பாடல்களை அவள் கேட்பாள். இவற்றில் சில சாத்தானிய பாடல்களாக இருந்தன. அவளுடைய அறையில் சாத்தானிய சின்னங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததைப் பின்னர் நாங்கள் கண்டுபிடித்தோம். இறுதியில் அவள் எங்கள் வீட்டைவிட்டு வெளியேறி இப்போதும் ஆவிக்குரிய வகையில் இறந்துபோன நிலையில் இருக்கிறாள். இவையெல்லாம் ஹெவி-மெட்டல் இசையுடன் தான் ஆரம்பித்தது.
டி. பி., ஐக்கிய மாகாணங்கள்