சாத்தான் வழிபாட்டின் கையாட்கள்—போதைப்பொருட்களும் ஹெவி மெட்டல் இசையும்
மனித பண்புகளைப் பற்றிய டென்வர் நிறுவன பல்கலைக்கழகத்தின் இயக்குநராகிய கார்ல் A. ரஷ்கே எழுதினார்: “சாத்தானுடைய யுகத்தின் மூன்றாவது பத்தாண்டை நோக்கி நாம் செல்கையில், போதைப்பொருட்கள், ஹெவி மெட்டல் [இசை], முரட்டுத்தனம், மட்டுமீறிய வன்முறை ஆகியவை யாவும் சீரழிந்த மனிதகுலத்தின்மேல் அச்சுறுத்தும் சின்னக்கொடிகளாக அசைந்தாடுபவையாய் ஆகியிருப்பது, எதிர்பாராத ஒன்றல்ல.” அவர் மேலுமாகச் சொன்னார்: “சுவிசேஷ பாடல்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இருப்பதுபோன்ற தொடர்பே ஹெவி மெட்டல் ராக் இசைக்கும் சுய பாணியான சாத்தான் வழிபாட்டிற்கும் இருக்கிறது என்று சொல்லக்கூடும். வெறுமனே சுவிசேஷ பாடல்களை வானொலியில் கேட்டு வெகு சிலரே கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுகிறார்கள். ஆனால் ஹெவி மெட்டல் மிக பலமான உந்துவிப்பாக இருக்கிறது. இளைஞர் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கிற அருவருப்பான காரியங்களை அது நியாயப்படுத்துகிறது.”
வாழ்க்கையின் கவலைகளிலிருந்து திருப்பத்தை அளிக்கும் இயல்பான பொழுதுபோக்குகளாக இன்றைய இளைஞரில் பலர் நினைக்கக்கூடிய ஹெவி மெட்டல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக இது ஒரு பலமான குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் நியாயமானவையா? போதைப்பொருட்களும் ஹெவி மெட்டல் இசையும் சாத்தான் வழிபாட்டிற்கு சாத்தியமான அறிகுறிகளாக இருக்கலாமா? சாத்தானிய வணக்கத்தாரின் வன்முறையை நேரடியாக எதிர்ப்பட்டிருக்கிறவர்கள் மற்றும் அவற்றை விசாரணை செய்திருப்பவர்களின் குறிப்புகளைக் கவனியுங்கள்.
“ஹெவி மெட்டல் இசையின் உணர்ச்சியைக் கிளறும் செய்தி, ஆச்சரியத்திற்கிடமின்றி, ‘மதச்சார்பானதாக’ இருக்கிறது; பிரபஞ்சத்தைக் கண்காணிக்கும் உயர்வான சக்தி ஒன்றை அறிவிக்கும் அர்த்தத்தில் அது அவ்வாறு இருக்கிறது. என்றபோதிலும், அந்தச் சக்தி கடவுள் இல்லை,” என்று ரஷ்கே, கறுப்பு வர்ணமிடப்பட்டது (Painted Black) என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுதினார். “இது . . . பெரும்பிசாசாலேயே வகுத்தமைக்கப்பட்டிருக்கிறது.” மேலுமாக, அவர் சொன்னார்: “சாத்தானிய சக்தி மற்றும் வன்முறையானது, நம்பிக்கையிழந்த மற்றும் குன்றிய மனச்சாட்சியை உடைய இளைஞர் எளிதாக தூண்டுவிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. . . . ஏமாற்றுவிக்கப்பட்ட அனுபவம் மனதில் பதிந்திருப்பதால் தொந்தரவுபடுத்தப்பட்ட மற்றும் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட இளைஞர், அந்த உயர்வான சக்தி தீமையாக இருக்கவேண்டும் என்று நம்புகின்றனர். ஹெவி மெட்டல் இந்த ‘இறையியலை’ உறுதிசெய்து, இசையில் அதைச் செயலாற்ற வைக்கிறது.”
ஹெவி மெட்டல் இசையைப் பற்றி ஐக்கிய மாகாணங்களின் சட்டமாமன்றத்தின் முன் சான்றுபகர்ந்த டென்னெஸீ பல்கலைக்கழகத்தின் டாக்டர் பால் கிங்கின்படி, குழம்பியிருக்கும் பேரெண்ணிக்கையான இளைஞரின் இசைத் தெரிவு என்னவென்றால், “வன்முறை, பகை, கலகம், இழிவான பாலுறவு, பெண்கள் துர்ப்பிரயோகம், சாத்தானை மகிமைப்படுத்துதல் ஆகிய இயல்புக்கு மாறான பொருள்களாகும். வளரிளமை பருவத்தினர் ஒருவரின் வாழ்க்கைப் பாணி, போதைப்பொருட்களை உட்படுத்துகிறதென்றால், இந்தத் தெரிவு இன்னுமதிக சாத்தியத்தை உடையதாய் இருக்கிறது.” ஹெவி மெட்டல் இசை, தீமையின் சக்தியை மகிமைப்படுத்தி, பாராட்டுகிறது என்று கிங் சொன்னார். ஹெவி மெட்டல் இசையில், “இசை நிகழ்ச்சிகளின்போது தீங்கான செயல்கள் புதிய உச்சநிலைகளில் மகிமைப்படுத்தப்படுகின்றன,” என்று அவர் சொன்னார்.
ஹெவி மெட்டலின் உள்ளார்ந்த செய்தியின் விளைவுகளைப் பின்வரும் சம்பவங்களில் கவனியுங்கள்.
கடந்த வருடம், அ.ஐ.மா.-லுள்ள நியூ ஜெர்ஸியில், இரண்டு 15 வயது பையன்கள், பிரின்ஸஸ் என்ற பெயருடைய, வீட்டில் வளர்த்த லாப்ரடார் நாயை மூர்க்கத்தனமாகக் கொன்றுவிட்டனர். “அது சாத்தானுக்கான பலி,” என்று அவர்கள் உரிமைபாராட்டினர். அவர்கள் அந்த நாயை அதன் சங்கிலியைப் பிடித்துத் தூக்கி, தொங்கிய நிலையில் வைத்துக்கொண்டு, சாகும்வரையாக அடித்தனர்; அதன் நாக்கைக் கிழித்தெடுத்து, சாத்தானிய சடங்காச்சாரமாகப் பயன்படுத்தினர். அந்த நாயின் உருச்சிதைக்கப்பட்ட உடலை ஒரு பெரிய உலோக கொக்கியில் அறைந்து வைத்து பக்கத்துவீட்டுப் புறத்தில் தொங்கவிட்டனர். அந்த நாயின் தலையில் சாத்தானிய அடையாளக்குறிகள் இருந்தன; மேலும் பென்டாகிராம் (ஐந்து முனைகளுள்ள விண்மீன் வடிவம்—ஒரு சாத்தானிய அடையாளம்) அந்த நாயின் உடலுக்குக் கீழுள்ள நிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. கொலை செய்த அன்று இரவு, அவர்கள் (கடவுளைக் கொல்லுதல் என்று அர்த்தப்படும்) டீயிஸைட் என்ற டெத் மெட்டல் குழு இசையைக் கேட்டிருந்தனர்; அதில் மிருகங்களைச் சித்திரவதைச் செய்வதையும் கொலைசெய்வதையும் பற்றி பெருமையடித்துக்கொண்டு அந்த முன்னணி பாடகர் பாடுகிறார்.
கலிபோர்னியாவில், பருவவயது காதலர்கள் இருவர், அந்தப் பெண்ணின் தாயைக் குத்தி, திருக்கு குறடால் அடித்துக் கொடூரமாகக் கொன்றனர்; நண்பர்களின் கருத்துப்படி அவர்கள் சாத்தான் வழிபாட்டால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். அதே சமுதாயத்தில், மற்றொரு இளைஞன் சாத்தானுக்கு ஒரு ஜெபத்தைச் சொல்லிவிட்டு, தன் தந்தையைச் சுட்டுக் கொன்றான். அந்தக் குற்றத்திற்கு ஹெவி மெட்டல் இசையே காரணம் என்று அந்தக் குற்ற வழக்கை விசாரித்த போலீஸார் சந்தேகமின்றி நம்பினர். “அடிப்படையில், நீங்கள் உங்கள் பெற்றோருக்குச் செவிகொடுக்க வேண்டாம் என்றும், உங்களுக்கு விருப்பமான விதத்தில் வாழ்க்கையை வாழவேண்டும் என்றும் அந்த இசை கற்பிக்கிறது,” என்று ஒரு போலீஸ் அதிகாரி சொல்லுகிறார்.
இங்கிலாந்தில், தொடர்ச்சியாக ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டவர்கள், கற்பழிப்பு மற்றும் வன்முறையின் செய்திகளைக் கொண்டிருக்கும் பாடல்களை இசைக்கும் ஒரு ஹெவி மெட்டல் இசைக் குழுவின் அடையாளச் சின்னத்தைக் கற்பழித்தவர்களில் ஒருவன் பச்சைக் குத்தியிருந்ததாக போலீஸாருக்கு அறிவித்தனர்.
அ.ஐ.மா.-லுள்ள அர்கன்ஸாஸிலுள்ள நாட்டுப்புறத்தைச் சார்ந்த பருவவயதினன் ஒருவன் தன் பெற்றோரை ஒரு குறுந்தடியால் அடித்து, பின்னர் கசாப்பு கத்தியால் துண்டுதுண்டாக்கும்படி முயன்றான். அவனுடைய டேப்பில் ஒரு ஹெவி மெட்டல் குழுவின் பாட்டாகிய, “பலிக்கான பீடம்” என்பது தானாகவே பாடும்படி அமைக்கப்பட்டிருந்ததைப் போலீஸார் கண்டனர்; அதில் அந்தப் பாட்டின் வார்த்தைகள் இவ்வாறு அலறின: “கையில் பட்டாக்கத்தியுடனும், தூய கன்னியின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டும், பிரதான பூசாரி காத்திருக்கிறான். சாத்தானின் கொலை, சடங்காச்சார மரணம், அவனுடைய ஒவ்வொரு கட்டளைக்கும் பதிலளியுங்கள். சாத்தானின் எல்லைக்குள் நுழையுங்கள் . . . துதியின் பரிசுத்த வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளுங்கள், ‘சாத்தானுக்கு ஜே.’”
ஹெவி மெட்டல் இசைக் குழுக்களின் அலறும் அங்கத்தினர்களால் பாடப்பட்ட—இசையரங்குகளில் தீவிர கிளர்ச்சியுடன் அவர்களுடைய ரசிகர்களால் உதடுகள் அசைக்கப்பட்டதும் அல்லது டேப்புகளில் மணிக்கணக்காகக் கேட்கப்பட்டதுமான—மற்ற பாடல்களின் வார்த்தைகளைப் பொறுத்தமட்டில்—அப்படிப்பட்ட செய்திகள், காரியங்களை மனதில் பதியவைக்கத்தக்கதாயுள்ள இளைஞர்மீது என்ன செல்வாக்கைக் கொண்டிருக்கின்றன? உதாரணமாக, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: “ஒருவரை முடமாக்கும் தீங்கான குற்றத்தில் நமக்குத் தலைவனான சாத்தான் நாம் எடுக்கும் ஒவ்வொரு முதல் அடியிலும் நமக்கு வழிகாட்டுகிறான்,” மேலும் “உங்கள் இரத்தத்தைச் சிந்துங்கள், அது என்னிடம் ஓடி வரட்டும். என் கையைப் பிடித்துக்கொண்டு, உங்கள் உயிரை விட்டுவிடுங்கள் . . . நீங்கள் இரத்தம் சிந்திவிட்டீர்கள். நான் உங்கள் ஆத்துமாவை வைத்திருக்கிறேன்.”
“குழந்தையைப் பாலின துர்ப்பிரயோகம் செய்யும் ஒருவரை, ஆபாசம் தூண்டக்கூடும் என்பதை நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாகக் கொண்டோமானால், கொல்லுங்கள், உருச்சிதையுங்கள், ஊனமாக்குங்கள், சித்திரவதை செய்யுங்கள், துடைத்தழியுங்கள் ஆகியவற்றைப் போன்ற வார்த்தைகளின் அலறல், மூளை குழம்பியிருக்கும் ஒருவரைச் சரியாக அந்தக் காரியங்களையே செய்யும்படி அவை உண்மையில் தூண்டுவிக்கக்கூடும் என்ற கருத்தை நாம் ஏன் சிந்தித்துப் பார்க்கக்கூடாது?” என்று கார்ல் ரஷ்கே எழுதினார்.
போதைப்பொருள் துர்ப்பிரயோகமும் சாத்தான் வழிபாடும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன என்பது எங்குமுள்ள ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது. “போதைப்பொருட்களை உட்கொள்ளாத சாத்தான் வழிபாட்டாளர் ஒருவரை ஒருபோதும் கண்டிராததாக,” குற்றங்களைத் துப்பறிபவராக முன்னாளில் இருந்த டேவட் டோமா குறிப்பிடுகிறார். போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல், காரியங்களைச் சிக்கலாக்குகிறது என்று டீன் பத்திரிகை அறிவித்தது; “அவ்வாறு பிசாசு வணக்கத்திற்குத் திரும்புகிறவர்களுக்கு, போதைப்பொருட்கள் மற்றும் மதுபானத்தின் பாதிப்பால் ஏற்பட்டுள்ள மங்கலான திரையின் வழியாக நோக்கும்போது எது உண்மையிலே நிஜமானது என்றும் எது வெறுமனே நிஜமானதாகத் தோன்றுகிறது என்றும் வேறுபடுத்திக் காண்பதை மேன்மேலுமாக கடினமாக்குகிறது.”
“கட்டாயமாகச் சூதாடுகிறவர்களுடன் லாட்டரிகள் எப்படி தொடர்புடையனவாய் இருக்கின்றனவோ அதேவிதமாகவே ஹெவி மெட்டல் அதிகப்படியான போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுடன் தொடர்புடையதாய் இருக்கிறது,” என்று ரஷ்கே கூறினார். “வேதியல்ரீதியில் சார்புத்திறனுள்ள வளரிளமைப்பருவத்தினன், தற்செருக்கு, மூர்க்கத்தனம், திருட்டு, பாலின காரியங்களில் மட்டுமீறுவது ஆகியவற்றை உட்படுத்தும்—அவற்றோடு மெட்டல் குழுக்களின் கூக்குரலாலும் அலறுதலாலும் பலப்படுத்தும்—ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கிறான்.”
சந்தேகமின்றி, ஒரு இளைஞனின் மூளையிலிருந்து அறிவுள்ள நிலை துடைத்தகற்றப்பட்டு, இயல்புக்கு மாறான பாலுணர்ச்சியும் வன்முறையும் அதன் இடத்தை நிரப்புகையில், அவன் எளிதில் சாத்தானின் செல்வாக்குக்கு இரையாகிறான்.
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
மூளையிலிருந்து அறிவுநிலை துடைத்தகற்றப்பட்டு, இயல்புக்கு மாறான பாலுணர்ச்சியும் வன்முறையும் உள் நிரம்பும்போது, சாத்தானின் செல்வாக்குக்கு ஒருவர் எளிதாக இரையாகிறார்
[பக்கம் 7-ன் படம்]
உங்கள் மனதை எவற்றால் நிரப்புகிறீர்கள்?