தேரையா தவளையா—வித்தியாசம் என்ன?
நூற்றாண்டுகளாக தேரைகளையும் தவளைகளையும் பற்றி மோசமான அபிப்பிராயம் இருந்துவந்திருக்கிறது. “அவை பாலுண்ணிகளை உண்டுபண்ணுகின்றன.” “சூனியக்காரிகள் ஆட்களை தேரைகளாகவும் தவளைகளாகவும் மாற்றமுடியும்.” அருவருப்பான தவளையை ஓர் இளவரசி முத்தமிட்டபோது அழகிய இளவரசனாக மாறிய கட்டுக்கதையை யார்தான் கேள்விப்பட்டதில்லை? என்றபோதிலும், “செசமி ஸ்ட்ரீட்,” மற்றும் “தி மப்பட் ஷோ” என்ற குழந்தைகளுக்கான டிவி நிகழ்ச்சியில் வருகிற கெர்மிட் தி ஃப்ராக் பிரபல்யமானது முதற்கொண்டு, தவளைகள் மக்கள் மத்தியில் அதிக ஆதரவுபெற்று வந்திருக்கின்றன. தவளைகளையும் தேரைகளையும் பற்றிய உண்மை என்ன? அவை எவ்விதத்தில் வித்தியாசப்படுகின்றன?
எந்தத் தப்பபிப்பிராயங்களையும் நாம் சரிசெய்து கொள்வோமாக—தேரைகள் அல்ல, வைரஸ்கள் பாலுண்ணிகளை உண்டுபண்ணுகின்றன. அதைப்போலவே கட்டுக்கதைகள், அவற்றின் பெயரே சுட்டிக்காட்டுகிறபடி அவை—கட்டுக்கதைகள், கற்பனைக்கதையும் புராணக்கதையும் அடங்கியவை. சூனியக்காரிகள் வாழ்ந்துவந்தபோதிலும், ஒரு ஆளை தவளையாக அல்லது ஒரு தேரையாக அவர்களால் மாற்றமுடியாது.
தவளைகளும் தேரைகளும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன, ஆனால் தவளைகள் அன்டார்க்டிகாவில் இல்லை, தேரைகள் ஆர்க்டிக்கில் இல்லை. தவளைகளிலும் தேரைகளிலும் ஏறக்குறைய 3,800 சிற்றினங்கள் இருக்கின்றன, அவற்றில் 300-க்கும் அதிகமானவை தேரைகளாகும். எனவே ஒரு தவளையிலிருந்து தேரையை நீங்கள் எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்? தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா பதிலளிக்கிறது: “இனமரபுத் தூய்மையுடைய பெரும்பாலான தவளைகளுக்கு இருப்பதைவிட, இனமரபுத் தூய்மையுடைய தேரைகளுக்கு அகலமான, தட்டையான உடலும் கருமையான, உலர்ந்த தோலும் உள்ளன. இனமரபுத் தூய்மையுடைய தேரைகள் பொதுவாக பாலுண்ணிகளால் மூடப்பட்டிருக்கின்றன, ஆனால் இனமரபுத் தூய்மையுடைய தவளைகளுக்கு வழுவழுப்பான தோல் உள்ளது. இனமரபுத் தூய்மையுடைய பெரும்பாலான தவளைகளைப் போலில்லாமல், இனமரபுத் தூய்மையுடைய பெரும்பான்மையான தேரைகள் நிலத்தில் வாழ்கின்றன. பருவமடைந்த தேரைகள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே தண்ணீருக்குச் செல்கின்றன.” தவளைகள் பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகில் காணப்படுகின்றன, நீங்கள் வருவதைக் கேட்கும்போது தண்ணீருக்குள் துள்ளிக் குதித்துவிடுகின்றன. பெரும்பாலான தவளைகளுக்கு அவற்றினுடைய மேல்தாடையில் மட்டுமே பற்கள் உள்ளன. தேரைகளுக்கு பல் இல்லை. எனவே, அவை இரண்டுமே தங்களுடைய இரையை முழுவதுமாக விழுங்கிவிடுகின்றன.
அநேக தவளைகளும் தேரைகளும் வீரியமிக்க விஷத்தைப் பிறப்பிக்கின்றன. கோஸ்டா ரிகாவிலுள்ள விஷமுள்ள, சிவப்புநிற அம்புத் தவளை (டென்ட்ரோபேட்ஸ் பியூமிலியோ) ஒரு எடுத்துக்காட்டாகும். சில தவளைகளின் விஷம் ஒரு ஆளை எளிதாகக் கொல்லமுடியும். பையாலஜி என்ற நூல் குறிப்பிடுகிறது: “வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் உள்ளூர் பழங்குடியினர், அநேக சமயங்களில் இந்தத் தவளைகளின்மீது தங்களுடைய அம்பின் முனையைத் தேய்ப்பதன் மூலம் அவற்றை விஷமாக்கிக் கொள்கிறார்கள்.” பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில், ‘அசுத்தமான ஏவப்பட்ட கூற்றுகள்’ தவளைகளுக்கு ஒப்பிடப்படுகின்றன. ஏன் அவ்விதமாக? ஏனென்றால் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, தவளைகள் உணவுக்கு அசுத்தமானவையாக இருந்தன. தேரைகள் பைபிளில் குறிப்பிடப்படவில்லை.—வெளிப்படுத்துதல் 16:13, NW; லேவியராகமம் 11:12.
[பக்கம் 31-ன் படங்கள்]
வலது: தேரை. கீழே: தவளை