© Kim, Hyun-tae/iNaturalist. Licensed under CC-BY-4.0
யாருடைய கைவண்ணம்?
தவளையும் தன் வாயால் கூடும்—ஜப்பானிய மரத் தவளை
விட்டு விட்டுக் கத்துவதில் ஆண் ஜப்பானிய மரத் தவளைகளோடு போட்டி போட யாராலும் முடியாது. அதன் சத்தத்தைக் கேட்கும்போது ஒழுங்கே இல்லாமல் கன்னாபின்னா என்று கத்துவது போல் நமக்கு தோன்றலாம். அவை கும்பலாக காட்டுக் கத்து கத்தினால் கூட ஒரு ஆண் தவளையுடைய சத்தத்தை அதன் ஜோடியால் தனியாக கண்டுபிடித்து விட முடியும். அதன் ரகசியம் என்ன? ஜப்பானில் இருக்கிற ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தவளைகளைப் பற்றிப் படிக்கிறார்கள். ஒரே பகுதியில் வாழ்கிற ஆண் தவளைகள் அங்கே இருக்கிற பெண் தவளைகளுக்கு சிக்னல் கொடுப்பதற்காக, யார் எப்போது சத்தம் போட வேண்டும் என்று தங்களுக்குள் பக்காவாக பிளான் பண்ணி வைத்துக்கொண்டு அதை அப்படியே செயல்படுத்துகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இப்படி யோசித்துப் பாருங்கள்: பெண் தவளைகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆண் ஜப்பானிய மரத் தவளைகள் சத்தம் போடுகின்றன. இந்த சத்தம், ஆண் தவளையின் குரல்வளையில் இருந்து உருவாகிறது. அங்கிருந்து அது குரல்பைக்குள்ளே போகிறது. அந்த குரல்பை ஒரு ஸ்பீக்கர் மாதிரி அந்த சத்தத்தை எதிரொலிக்க வைத்து இன்னும் ரொம்ப சத்தமாக கேட்க வைக்கிறது. குரல்பை என்பது தவளையுடைய தொண்டைக்குக் கீழே இருக்கிற பலூன் போன்ற ஒரு பை.
ஒரு ஆண் தவளையின் சத்தத்தை மட்டும் எப்படித் தனியாக தெரிந்துகொள்ள முடிகிறது? எப்படியென்றால், ஆண் ஜப்பானிய மரத் தவளைகள் ஒழுங்கில்லாமல் கன்னாபின்னா என்று ஒரேயடியாக கத்துவதற்கு பதிலாக, ஒவ்வொன்றும் அதனுடைய சான்ஸ் வருகிற வரைக்கும் பொறுமையாக காத்திருந்து கத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தத் தவளைகள் இந்த டெக்னிக்கில் கத்துவதால்தான் கும்பலாக காட்டுக் கத்து கத்துவதைத் தவிர்க்க முடிகிறது, ஒரு ஆண் தவளையுடைய சத்தத்தை மட்டும் தனியாக கேட்கவும் முடிகிறது. இப்படி விட்டுவிட்டுக் கத்துவதால் இந்தத் தவளைகளுக்கு சக்தி வீணாவதில்லை, இடையிடையே அவற்றுக்கு கொஞ்சம் ஓய்வும் கிடைக்கிறது.
ஜப்பானிய மரத் தவளைகள் சத்தம் போடும் இந்த விதத்தை ஆராய்ச்சியாளர்கள் காப்பி அடித்திருக்கிறார்கள். வயர்லெஸ் தகவல்தொடர்புக்கு இந்த முறையைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். பல வித்தியாசமான தகவல்கள் ஒரே சமயத்தில் பரிமாறப்படுவதைத் தடுப்பதற்காக அவர்கள் அதிநவீன ‘பார்முலா’-வை பயன்படுத்துகிறார்கள். இதனால், தகவல்கள் ஒன்றுக்கொன்று குறுக்கிடுவது கிடையாது. குறைவான சக்தி மட்டுமே செலவாகிறது, பரிமாறப்படுகிற தகவல்களை நம்மால் நம்பவும் முடிகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தங்களுக்குள் பக்காவாக பிளான் பண்ணி வைத்துக்கொண்டு சான்ஸ் வரும்போது மட்டும் சத்தம் போடுகிற இந்த ஜப்பானிய மரத் தவளைகளுடைய திறமை தானாகவே வந்திருக்குமா? அல்லது யாராவது அதை அப்படிப் படைத்திருப்பார்களா?