உலகத்தைக் கவனித்தல்
பிரேஸிலில் வீணாக்கப்பட்ட உணவு
பிரேஸிலின் வேளாண் அமைச்சகத்தின்படி, “அந்த நாடு வருடந்தோறும் 2.34 பில்லியன் டாலர் மதிப்புள்ள (ஐ.மா.) அரிசி, அவரை, சோளம், சோயா, கோதுமை, காய்கறிகள், மற்றும் பழங்களை வீணாக்குகிறது,” என்று யு எஸ்டாடோ டி சௌன் பௌலூ சொல்லுகிறது. “மற்ற [பண்ணை] பொருட்களிலும் நுகர்வோர் வீணாக்குவதிலுமுள்ள இழப்புகளைக் கணக்கிடுகையில், அதன் தொகை 4 பில்லியன் டாலர் (ஐ.மா.) வரையாகச் செல்லுகிறது.” ஆனால் வேளாண் விளைச்சலில் 20 சதவீதமும் பழ உற்பத்தியில் 30 சதவீதமும் ஏன் வீணாக்கப்படுகிறது? ‘சேமித்துவைக்கும் திறனில் குறைவுபடுதல், உற்பத்திசெய்யும் தொழில்நுட்பம் போதாமை, ஆபத்தான ரோடுகள், பயிர்களின் பராமரிப்பில் குறைவுபடுதல்’ ஆகியவை கொடுக்கப்பட்ட காரணங்களில் அடங்கும். வீணாக்குவதைக் கட்டுப்படுத்துவதற்கு விதிகள் இல்லாமல் இருப்பதைக் குறித்து வருந்துபவராய் வேளாண் அமைச்சகத்தைச் சேர்ந்த பெனடிட்டோ ரோஸா இவ்வாறு கூறுவதாக மேற்கோள் காட்டப்படுகிறது: “அப்படி வீணாக்கப்பட்ட உணவு, தேவையிலிருக்கும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.”
திங்கள்கிழமை காலை நோய்க்குறி
“திங்கள்கிழமை காலைகளில் வேலைக்குத் திரும்பிவருவதன் அழுத்தம் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை 33 சதவீதம் அதிகரிக்கிறது,” என்று ஷார்னல் டோ ப்ராஸில் அறிக்கை செய்கிறது. நோய் தாக்கிய 2,636 பேர்மீது நடத்தப்பட்ட ஜெர்மானிய ஆய்வு, “இதயத் திறனிழப்பால் பாதிக்கப்படும் அபாயம் ஒரு வாரத்தின் கிழமையையும் மணிநேரத்தையும் பொறுத்து வேறுபடுகிறது என்பதைக் காண்பித்தது.” என்றபோதிலும், திங்கள்கிழமைகள் விசேஷமாக ஆபத்தானவையாக இருந்ததாகக் காணப்பட்டது; மேலும் மாரடைப்புகள் அந்நாளின் மீதமுள்ள நேரத்தில் ஏற்படுவதைவிட காலையில் ஏற்படுவதற்கு மூன்று மடங்கு அதிக சாத்தியம் இருக்கிறது. வாழ்க்கைத்தொழிலர்களையும் அலுவலகப் பணியாளர்களையும்விட தொழிற்சாலையில் வேலைசெய்கிறவர்கள் திங்கள்கிழமை-காலை நோய்க்குறியால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். “வாரயிறுதி ஓய்விற்குப்பின் உடனேயே மிகக் கடுமையான ஒரு வழக்கமுறைக்கு மாறுவது, மாரடைப்புகளை ஏற்படுத்துகிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்று அந்த ஆய்வை வழிநடத்திய பேராசிரியர் ஷ்டிஃபான் வில்லிக் கூறுகிறார். இதய பிரச்சினைகளை உடையவர்கள் தங்கள் வேலைவாரத்தை அமைதியான முறையில் தொடங்க வேண்டும் என்பதாக ஆலோசனை கூறப்பட்டது.
‘உலகின் பிரதான சூதாட்ட நாடு’
“உலகின் பிரதான சூதாட்ட நாடாக ஜப்பான் ஆகியிருக்கிறது,” என்று ஆஸாஹீ ஈவ்னிங் நியூஸ் கூறுகிறது. மிக அதிகமான பணம் (65 சதவீதம்) பின்பால் (Pinball) இயந்திரங்களைப் பயன்படுத்தி பாச்சிங்கோ-வில் சூதாட்டம் செய்யப்படுகிறது. மேலும், உள்ளூர் குதிரை பந்தயத்தில் மற்ற எந்த நாட்டையும்விட அதிகமாக ஜப்பானியர்கள் செலவிடுகிறார்கள். 1992-ல் விற்பனைகள், ஐக்கிய மாகாணங்களில் விற்பனையானதைவிட இரு மடங்கு அதிகமானதாகவும் ஹாங்காங், பிரிட்டன், மற்றும் பிரான்ஸில் விற்பனையானதைவிட நான்கு மடங்கு அதிகமானதாகவும் இருந்தது. விற்பனையை அதிகரிப்பதற்கு, இளம் பெண்கள் தற்போது குறியிலக்காக வைக்கப்படுகிறார்கள். நகோயாவிலிருந்து ஓர் இளம் பெண் இவ்வாறு சொன்னாள்: “என் பெற்றோர் குறைகூறுகிறார்கள், ஆனால் நான் அவர்களிடம் எப்போதும் சொல்கிறேன், ‘தேசிய மற்றும் உள்ளூர் அரசுகள் அவற்றை ஒழுங்கமைக்கின்றன. அவை எவ்வாறு மோசமாக இருக்க முடியும்?’” உண்மையில், ஜப்பானிய சட்டம், சூதாட்டத்தை நியமத்தின்படி தடைசெய்கிறது, ஆனால் பொது சூதாட்டம் “சட்டப்பூர்வமானதைப்போல் நடைமுறையில் இருக்கும் பொருளாதாரமாக” இருக்கிறது என்று ஆய்வாளர் ஹிரோஷி டாக்யூச்சி கூறுகிறார். சூதாட்டத்திலிருந்து பெறப்படும் மொத்த தொகை ஒரு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 4 சதவீதத்தைவிட அதிகமாக இருந்தால், அது ஒரு சமுதாய பிரச்சினையாகிறது. ஜப்பானுடையது இப்போது 5.7 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது.
சர்ச்சுகள் குற்றச்செயலலையால் பாதிக்கப்படுகின்றன
சமீப வருடங்கள் வரையாக, ஆஸ்திரேலிய சர்ச்சுகள், அங்கு ஆராதனைகள் நடத்தப்படாத சமயங்களிலும் பொதுவாக பூட்டப்படாமல் விடப்பட்டன. ஆனால் திருடுகள், உடைத்து உட்புகுதல்கள், சர்ச் கட்டடங்களுக்கு பழுதுண்டாக்குதல், மற்றும் பாதிரிமார் தாக்கப்பட்டிருக்கும் பல சம்பவங்கள் ஆகியவற்றின் காரணமாகத் தற்போது நிலைமை மாறியிருக்கிறது என்று தி வீக்கென்ட் ஆஸ்ட்ரேலியன் என்ற செய்தித்தாள் அறிக்கைசெய்கிறது. “நம் மத்தியிலுள்ள பல சர்ச் வட்டாரங்கள் இப்போது தங்கள் சர்ச்சுகளைப் பூட்டிவைக்கின்றன. அது மிகவும் வருத்தகரமானது என்று நினைக்கிறேன்,” என்று கத்தோலிக்க ஆர்ச் பிஷப்பாகிய ஜான் பேத்தர்ஸ்பி சொன்னார். “மதத்திற்கான மதிப்பில் ஒரு சீரழிவு ஏற்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சமுதாயம் முழுமையாக மதசார்பற்றதாக ஆக்கப்பட்டிருப்பதானது, அநேக மக்கள் சர்ச்சை சமுதாயத்திலுள்ள எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் வேறுபடுத்திக் காணாத அளவுக்கு ஒரு சூழலை உண்மையில் ஏற்படுத்தியிருக்கிறது; அதன் காரணமாக, அதற்கான அந்தத் தனி மதிப்பு மறைந்துவிட்டிருக்கிறது. சில மக்கள் சர்ச்சை வெறுமனே மற்றொரு கட்டடமாகவே காண்கின்றனர்.”
பல்கலைவல்ல போப்
போப் ஜான் பால் II, ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் ஆவிக்குரிய தலைவர் மட்டுமல்லாமல், ஒரு நாடக ஆசிரியராகவும், எழுத்தாசிரியராகவும், ஒலிப்பதிவு செய்யப்படும் கலைஞராகவும் இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவருடைய புத்தகமாகிய நம்பிக்கையின் உணர்வுநிலையைத் தாண்டுதல் (ஆங்கிலம்), அநேக வாரங்களுக்கு மிகச் சிறந்த அளவில் விற்பனையாகும் புத்தகப் பட்டியலில் இருந்தது. அந்த நாடகப்படைப்பு, நகைக்காரனின் கடை (ஆங்கிலம்) என்றழைக்கப்பட்ட ஒரு இசை நாடகம், கடந்த டிசம்பரில் நியூ யார்க் நகரில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நடைபெற்றது. அது 1960-ல் ஆன்ஜே யாவின் என்ற புனைப்பெயரைக் கொண்டு போப்பால் எழுதப்பட்டது. “போப் ஒரு நாடக ஆசிரியராக, நடிகராக, இயக்குநராக, க்ராகௌவிலுள்ள உள்ளூர் செய்தித்தாளுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் நாடக திறனாய்வாளராகவும் இருந்தார்” என்று அந்த நாடகத்தின் தயாரிப்பாளர் விளக்கினார். போப் ஜெபமாலை சொல்வதைப் பதிவுசெய்திருக்கும், அதிகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் இரட்டை காம்பேக்ட் டிஸ்கும் (CD) இருக்கிறது. மேலும் போப்பானவர் பெயர்பெற்ற உலக சுற்றுப்பயணியாகவும் இருக்கிறார்; இந்த வருடத்தில்தானே ஐந்து கண்டங்களுக்குச் செல்ல திட்டங்கள் வைத்திருக்கிறார். ஜனவரியில் அவருடைய 63-வது பயணம், “போப்பாதிக்கம் வீழ்ச்சியிலிருக்கிறதென்ற கருத்தை நீக்கி, அவருடைய ஆரோக்கியமோ அவருடைய வயதோ உலக நடவடிக்கைகளுக்கு அவருடைய ஒழுக்கரீதியான எதிர்நோக்கைக் காண்பிப்பதிலிருந்து அவரைத் தடை செய்யாது என்ற கருத்தை உருவாக்குவதற்காக 74-வயதான போப்பால் எடுக்கப்பட்ட முயற்சியாகும்” என்று தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையால் விவரிக்கப்பட்டது.
இரத்தம்—ஆபத்தான ஒரு “மருந்து”
“இரத்தமேற்றுதல்களை மறுப்பதில் யெகோவாவின் சாட்சிகள் செய்வதுதான் சரியாக இருக்கக்கூடுமா?” என்று இங்கிலாந்தின் ஸன்டே டெலிகிராஃப் கேட்கிறது. இரத்தமேற்றுகையில், ஹெப்படைட்டிஸ் C மற்றும் எய்ட்ஸ் வைரஸால் தொற்றப்பட்ட இரத்தம் கலந்துவிடலாம் என்பது தற்போதைய அச்சங்களில் உட்பட்டு இருக்கிறது. “ஆனால் தொழில்பூர்வ பத்திரிகைகளில் விவரிக்கப்பட்டுள்ள பல ஆபத்துக்களில் நோய்தொற்று என்பது ஒன்று மட்டுமே,” என்பதாக டெலிகிராஃப் சொல்லுகிறது. “இரத்தமேற்றுதல் காரணமாக 20 சதவீதம் என்ற உயர்ந்த விகிதம் வரை முரணான விளைவுகள் ஏற்படுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்பதுபோன்ற ஆய்வுகளைப் பற்றி பொது மக்கள் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. அதைப்போலவே, வயிறு அல்லது பெருங்குடல் அறுவை சிகிச்சைகளின்போது இரத்தமேற்றப்பட்டிருத்தல், எளிதில் குணமடையாமல் இருப்பதற்கான மிகச் சிறந்த அறிகுறி என்பதாகக் கண்டுபிடித்திருக்கும் ஆய்வுகளைப் பற்றியும் அவர்கள் அறிந்திருப்பதில்லை.” உயர்ந்த சதவீதமான இரத்தமேற்றுதல்கள் தேவையின்றி கொடுக்கப்படுகின்றன என்றும் இரத்தமேற்றும் பழக்கங்கள் வெகு வித்தியாசப்பட்டவையாயும், அறிவியல்பூர்வ விவரங்களைக்காட்டிலும் பழக்கத்தையே அதிகமாகச் சார்ந்திருக்கின்றன என்றும் ஆய்வுகள் காண்பிக்கின்றன. “பெரும்பாலான அறுவைசிகிச்சையாளர்கள் மிக அற்பமானதாக கருதி கையாளும் ஒரு வல்லமையான மருந்து” என்பதாக இரத்தத்தை அழைத்து, ராயல் விக்டோரியா இன்ஃபர்மரியைச் சேர்ந்த அறுவைசிகிச்சை கன்ஸல்டன்ட் டாம் லெனார்ட் இவ்வாறு குறிப்பிட்டார்: “இரத்தம் ஒரு புதிய மருந்தாக இருந்தால், அதற்குரிய வியாபார உரிமத்தைப் பெற்றிருக்காது.”
சத்தத்திலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
“அளவுக்கதிகமான சத்தம் இன்னும் பிறவாத மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கேடுவிளைவிப்பதாக இருக்கலாம்” என்று ரேடியோ ஃப்ரான்ஸ் இன்டர்நேஷனலின் செய்தி அறிக்கை ஒன்று சொல்லுகிறது. குறிப்பாக தாயின் கருப்பையிலிருக்கும் சிசு, தாய் எந்தெந்த உரத்த சத்தங்களுக்கெல்லாம் உள்ளாக்கப்படுகிறாளோ, அவற்றால் எளிதில் அதிர்ச்சியூட்டப்படும் நிலையில் உள்ளது. ஒரு தாயின் வயிற்றுச் சுவரும் பனிக்குடப்பாய்மமும் (amniotic fluid) வெளியிலுள்ள சத்தங்களிலிருந்து மிகக் குறைந்தளவு பாதுகாப்பையே அளிப்பதால், ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே ஊனமுற்றதாக இருக்கக்கூடும். உதாரணமாக, அநேக ராக் இசை குழுக்களிலும் இரவுநேர க்ளப்களிலும் பெரும்பாலும் பொதுவாகவுள்ள ஒலியளவுகளான 85 முதல் 95 டெசிபெல்களுக்கு இடைப்பட்ட ஒலியளவுகளுக்கு உள்ளாக்கப்பட்ட தாய்மார்களின் பிள்ளைகளில் உயர்-அதிர்வெண் அலைவரிசை சப்தத்தை கேட்கும் திறனை இழக்கும் அபாயம் மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது. கேட்கும் திறனுக்கு ஊறு விளைவிப்பதோடுகூட, குறிப்பாக தாய் கருவுற்றிருக்கும் கடைசி மாதங்களின்போது உரத்த சத்தங்களுக்கு அடிக்கடி உள்ளாக்கப்படுவது, இன்னும் பிறவாத ஒரு குழந்தையின் இதயத் துடிப்பு வீதத்தையும் அதிகரிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
“உணர்ச்சிப்பூர்வ முதலுதவி”
ஒரு விபத்து சம்பவிக்குமிடத்து முதலுதவி என்பது சரீரப்பிரகாரமான காயங்களுக்குக் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்தவேண்டும். காயப்பட்டவர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான உதவியும் தேவை என்பதாக ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் என்ற ஜெர்மானிய செய்தித்தாள் அறிவிக்கிறது. என்ன வகையான உதவி தேவை? “உணர்ச்சிப்பூர்வ முதலுதவி” அளிப்பதற்கு ஜெர்மானிய உளவியல் மருத்துவ தொழிலர்கள் கூட்டுறவு நான்கு எளிய படிகளை யோசனையாகக் கூறுகிறது. விபத்துக்கு உள்ளானவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுடன் நடத்தப்பட்ட பேட்டிகளின் விளைவுகளே அந்த ஆலோசனைகள். பரிந்துரை செய்யப்பட்ட படிகள் இவையே: “நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைத் தாக்கப்பட்டவரிடம் சொல்லுங்கள். காயப்பட்டவரை கவனச் சிதறல்களுக்கு ஆளாகாமல் காத்துக் கொள்ளுங்கள். தொடுவதன்மூலம் தொடர்பு கொள்ளுங்கள். பேசுங்கள், அவர் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.” இந்தப் படிகளை மருத்துவர்கள் மற்றும் வாகனம் ஓட்டப் பயிற்றுவிக்கும் பள்ளிகளின் மூலமாக முன்னேற்றுவித்து, முதலுதவி பாடத் திட்டங்களில் அவற்றைச் சேர்த்துக்கொள்ளச் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
“இந்தியாவின் சிறிய ‘சுமைவிலங்குகள்’”
இந்தியாவிலுள்ள 1.7 கோடி முதல் 4.4 கோடி வரையாக உள்ள குழந்தை தொழிலாளிகளைக் குறித்து டைம்ஸ் ஆஃப் இன்டியா அறிக்கை அவ்வாறே அழைத்தது. சுமார் 2.3 கோடி திடகாத்திரமுள்ள பெரியவர்கள் வேலையின்றி இருக்கிறபோதிலும், தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் சிறு பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதைப் பெரும்பாலும் தெரிந்துகொள்கின்றனர்; இவர்கள் எதிர்ப்பின்றி முழு ஆள் சம்பளத்தில் பாதியைப் பெற்றுக்கொண்டும், தங்கள் வேலைகளால் உடலுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக்குறித்து பெரும்பாலும் கேள்விகேட்காமலும் வேலை செய்கிறார்கள். சிறுவர் உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சில மேலை நாடுகள் மறுத்தபோதுதான் சில தயாரிப்பாளர்கள் சிறுவர்களை பெரியவர்களால் மாற்றீடு செய்தனர். அப்படிப்பட்ட துர்ப்பிரயோகத்தைத் தடுப்பதற்கும் பிள்ளைகளுக்குத் தேவையான அடிப்படை கல்வியை அளிக்கும்படி பெற்றோரைக் கட்டாயப்படுத்துவதற்கும் இந்திய அரசு அதிக கண்டிப்பான சட்டங்களை வாக்குறுதி செய்திருக்கிறது. இந்திய ஜனாதிபதியாகிய டாக்டர் ஷங்கர் தயாள் ஷர்மா சொல்லுகிறார்: “பாரம்பரியமோ பொருளாதார தேவையோ எதுவும் சிறுவர் உழைப்பை நியாயப்படுத்த முடியாது; மேலும் அப்படிப்பட்ட தன்னல பயன்படுத்துதலை நீக்குவது இன்றைய பெரிய சவால்களில் ஒன்று.” என்றபோதிலும், கொடிய வறுமையானது “கடுமையான உண்மையாக” இருக்கிறது என்பதும் ஒரு பிள்ளையின் சம்பாத்தியம் அந்தக் குடும்பத்திற்கு மிகவும் தேவைப்பட்ட ஆதரவை அளிக்கிறது என்பதுமான அடிப்படையில் அந்தப் பழக்கத்தை அநேகர் நியாயமென கருதுகின்றனர்.