மாதவிடாய்க்கு முன்னான நோய்க்குறித் தொகுப்-—கட்டுக்கதையா நிஜமா?
அவளுடைய நடத்தை நிலையற்றதாயும் முன்னரே உணர்ந்துகொள்ள முடியாததாயும் இருக்கிறது. அவள் ஒருகணம் ஒத்திசைந்து செல்பவளாக இருக்கிறாள்; மறுகணமே தர்க்கம்செய்பவளாக இருக்கிறாள். நம்பிக்கையற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லுகிறாள். அவளுக்கு ஆறுதலளிக்க நீங்கள் முயற்சிக்கிறபோதிலும், நீங்கள் செய்கிறதும் சொல்லுகிறதுமான அனைத்துக்கும் மிதமிஞ்சிய விதத்தில் பிரதிபலிக்கிறாள். ஒரு சிறிய விவாதம் அளவுக்கதிகமாக வெடித்து, கடுமையான தர்க்கமாகிவிடும் சாத்தியம் இருக்கிறது. சில நாட்களுக்கு, அல்லது சுமார் ஒரு வாரத்திற்குப்பின், இந்த “மாற்றுருவான” பெண் திடீரென்று மறைந்துவிடுகிறாள்; அவள் மறுபடியும்சில காலத்திற்கு . . . தன் நிஜவுருவுக்குத் திரும்புகிறாள்.
எல்லா பெண்களும் இவ்விதமான திடீர் மனநிலை மாற்றங்களை அனுபவிப்பதில்லை என்பது ஒத்துக்கொள்ளத்தக்கதே. என்றபோதிலும், மாதவிடாய் தொடங்குவதற்கு முன்னர், சில பெண்கள் தங்களில் அப்படிப்பட்ட மாற்றங்கள் இருப்பதை உணர்ந்திருக்கக்கூடும். இந்த மனநிலை மாற்றங்களை உண்டுபண்ணுவது எது? இப்படிப்பட்ட நடத்தை, உண்மையிலேயே மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் மாற்றங்களின் விளைவாக இருக்கிறதா?
PMS என்றால் என்ன?
மனநோய் மருத்துவம் பற்றிய அமெரிக்க பத்திரிகை (ஆங்கிலம்) சொல்லுகிறபடி, “வாழ்க்கையின் சில அம்சங்களுடன் குறுக்கிடுவதற்குப் போதுமான கடுமையுடைய அறிகுறிகள் சுழற்சியாக நிகழ்வதையும்,” அவை நிலையாக மாதவிடாய்க்கு முன்னர் தோன்றுவதையும் அனுபவிக்கும் பெண்கள் மாதவிடாய்க்கு முன்னான நோய்க்குறித் தொகுப்பை (premenstrual syndrome [PMS]) கொண்டிருக்கக்கூடும். PMS-ஐ கண்டறியத்தக்க ஆய்வகப் பரிசோதனைகள் ஒன்றும் இல்லையென்றாலும், PMS உடைய பெண்கள் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போதும், ஓரிரு வார காலப்பகுதிக்கு அறிகுறி-இல்லாத நிலையை அனுபவிக்கவேண்டும். இந்த விளக்கத்தின்படி, 10 சதவீதமான பெண்கள் மட்டுமே PMS-ஐக் கொண்டிருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கணிக்கிறார்கள்.
வேறு சில சிகிச்சை மருத்துவர்கள் PMS-ஐப் பற்றி வித்தியாசமான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். பெண்களில் அதிக சதவீதமானோர், 40-லிருந்து 90 சதவீதமானோர் வரையாக PMS-ஐ அனுபவிக்கின்றனர் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். எடை கூடுதல், களைப்பு, மூட்டு வலி, வயிற்றுப்பிடிப்புகள், ஒற்றைத் தலைவலிகள், எரிச்சலடைதல், மார்பகம் கூச்சவுணர்வுள்ளதாகுதல், அழக்கூடிய நேரங்கள், உணவிற்கான பேராசை, மனநிலை மாறுதல்கள் ஆகியவைபோன்ற பல்வேறு குறைகளை அனுபவிப்பதையும் அந்தப் பதம் உள்ளடக்குவதாக அவர்கள் விவரிக்கிறார்கள். 150-க்கும் மேற்பட்ட அறிகுறிகள் PMS-வுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பெண்கள், மாதவிடாய் நின்றிருப்பவர்களுங்கூட இந்த அறிகுறிகளில் ஒன்றையாவது அல்லது பலவற்றையாவது அனுபவிக்கக்கூடும். என்றாலும், பொதுவாக, ஒரு பெண் 30-லிருந்து 40 வயதுக்கு இடைப்பட்ட சமயத்தில் PMS-ஐ அனுபவிக்கிறாள். பெரும்பாலான பெண்களுக்கு, PMS அறிகுறிகள் வேதனையளிப்பவையாய் இருக்கின்றன, ஆனால் சமாளிக்கத்தக்கவையாகவே இருக்கின்றன. இந்தக் கட்டுரையில், கடுமையில் குறைந்த PMS-ஐ அனுபவிக்கும் இவர்கள்மீது நாம் கவனம் செலுத்துவோம்.
ஐக்கிய மாகாணங்களில், PMS என்பது “ஒரு பொதுவான உடல்நல பிரச்சினையாக” கருதப்படுகிறது என்றும், ஆனால் மற்ற நாடுகளில் இந்த அறிகுறிகளின் வகையிலும் கடுமையிலும் அநேக வித்தியாசங்கள் இருக்கின்றன என்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆய்வாளராகிய நான்சி ரிம் அறிக்கை செய்தார். “அதிக குறிப்பிடத்தக்க சரீரப்பிரகாரமான அறிகுறிகளை சில அறிக்கைசெய்கின்றன, மற்றும்சில சமுதாயங்கள் அதிகப்படியாக உணர்ச்சிசம்பந்தமான அறிகுறிகளை அறிக்கைசெய்கின்றன,” என்று அவர் சொல்கிறார். சீனாவில் ஆய்வுகளை நடத்தியிருக்கிற ரிம், சீனர்களை ஓர் உதாரணமாக மேற்கோள் காட்டினார். “சீன பண்பாட்டின்படி உணர்ச்சிப்பூர்வமான அறிகுறிகளைக் கொண்டிருப்பது ஏற்கத்தகாததாக இருக்கிறது.” அதன் விளைவாக, மாதவிடாய் பிரச்சினைகளைப் பற்றிக் கேட்கும்போது, பெண்கள் தசைப்பிடி வலிகளையே குறிப்பிடுவார்கள்.
PMS-ன் தொடக்கங்கள்
PMS முதன்முதலாக, நியூ யார்க்கைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் டி. ப்ரான் என்பவரால் 1931-ல், “மாதவிடாய்க்கு முன்னான அழுத்தத்திற்கான ஹார்மோன் சம்பந்தப்பட்ட காரணங்கள்” என்ற அவருடைய கட்டுரையில் கலந்தாலோசிக்கப்பட்டது. மாதவிடாய்க்கு முன்னர், களைப்பு, கவனக்குறைவு, நரம்பு அழுத்தம் ஆகியவற்றால் கஷ்டப்படும் பெண்களை அவர் கவனித்தார்.
22 வருடங்கள் கழித்து, காட்டாரீனா டால்டன் மற்றும் ரேமண்ட் க்ரீன் என்ற ஆங்கிலேய மருத்துவர்கள், மருத்துவப் பத்திரிகை ஒன்றில் ஒரு ஆய்வுக்கட்டுரையைப் பிரசுரித்தபோதுதான் “மாதவிடாய்க்கு முன்னான நோய்க்குறித் தொகுப்பு” என்ற பதத்தை அதில் உருவாக்கி இருந்தனர். PMS என்பது “உலகில் மிகப் பொதுவானதும், ஒருவேளை மிகப் பழமையானதுமான நோயாக இருக்கிறது” என டாக்டர் டால்டன் குறிப்பிட்டார். PMS ஒரு பெண்ணின் நடத்தையின்மீது கொண்டிருக்கக்கூடிய பாதிப்புகளைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புகள் 1980-ல் அறியப்படலாயின. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பிரிட்டிஷ் பெண்களின் நோயைக் கண்டறியும்படி அவரும் வேறு மருத்துவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் ஹார்மோன் சம்பந்தமான ஏற்ற இறக்கங்களால் அவளுடைய நடத்தை பாதிக்கப்படலாம் என்று அவர்கள் ஆய்வில் எடுத்துக்கூறினர். PMS பாதிப்பைப் பற்றி அவர்கள் கண்டறிந்ததை அடிப்படையாகக் கொண்டு, இரு சம்பவங்களிலும் அந்தக் கொலைக் குற்றச்சாட்டுகள் குறைக்கப்பட்டன. ஒரு தீர்ப்பில், “குறைந்தளவான பொறுப்பு” என்ற அடிப்படையில், மனிதகொலைக்காக குறைந்தளவு குற்றச்சாட்டை அந்த எதிர்வாதி பெற்றார்.
மேற்கூறப்பட்டபடி, பெண்களின் பாகத்தில் நாசகரமான நடத்தையின் சம்பவங்கள் எங்கோ ஒன்று நிகழ்பவையாகத் தோன்றலாம். அப்படிப்பட்ட நடத்தைக்கும், மாதவிடாய் காலத்தையொட்டின சமயத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் வேதனையூட்டும் சிறிய அறிகுறிகளுக்குமான காரணம், மருத்துவ மற்றும் மருத்துவ சம்பந்தமற்ற பத்திரிகைகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட நடத்தை நிஜமாகவே, ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் சார்ந்த ஏற்ற இறக்கங்களின் சுழற்சியின் விளைவாக இருக்கிறதா? அல்லது அலைக்கழியும் ஹார்மோன்கள் மற்றும் கட்டுக்குட்பட்டிராத பெண்ணுடல் ஆகியவற்றைப் பற்றிய கருத்து வெறும் ஒரு கட்டுக்கதையாக இருக்கிறதா? ஒரு பெண்ணின் நடத்தையின்மீது ஹார்மோன் சார்ந்த ஏற்ற இறக்கங்கள், ஏதாவது பாதிப்பைக் கொண்டிருக்கலாமென்றால், அவை என்ன பாதிப்பைக் கொண்டிருக்கின்றன என்பதைக் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. மாதவிடாய் சுழற்சியின்போது மூளை மற்றும் அண்டப்பை ஹார்மோன்களுக்கு இடையிலுள்ள செயலாற்றுதலைக் குறித்து இன்னுமதிகமான புரிந்துகொள்ளுதல், ஏன் சில பெண்கள் PMS-ல் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு முக்கியமான காரியமாக இருக்கிறது என்று அநேக ஆய்வாளர்களும் மருத்துவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.
மாதவிடாய் சுழற்சி
சுமார் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை, ஒரு பெண்ணின் உடல் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களை உட்படுத்தும் அதிக சிக்கலான சுழற்சியில் ஈடுபடுகிறது. அநேகரால் “சாபம்” என்பதாகக் குறிப்பிடப்படும் “மாதவிடாய்” (“menstruation”) என்ற அந்த வார்த்தை “மாதம்” என்று அர்த்தமுடைய மென்ஸிஸ் (mensis) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது.
அந்தச் சுழற்சியைத் தொடங்குவதற்கு, மூளையிலுள்ள ஹைபோதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பிக்கு செய்தியை அனுப்புகிறது. அந்தச் செய்தியைப் பெற்றவுடன் பிட்யூட்டரி, ஃபாலிக்கிள் தூண்டும் ஹார்மோனை (FSH) சுரக்கிறது. FSH இரத்தத்தின் வழியாக அண்டகத்திற்குச் சென்று எஸ்ட்ரோஜன் உற்பத்திசெய்யப்படுவதைத் தூண்டுவிக்கிறது. எஸ்ட்ரோஜன் அதிகரிக்கும்போது, லூட்டினைஸிங் ஹார்மோனை (LH) வெளியே அனுப்புவதன்மூலம் பிட்யூட்டரி பிரதிபலிக்கிறது. FSH சுரப்பதை LH குறைக்கிறது. ஒரு முட்டை செல் முதிர்ச்சியடைந்து கருப்பைக்குள் செல்கிறது. அந்த முட்டை செல் விடுவிக்கப்பட்டப்பின், ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்கப்படுகிறது. அந்த முட்டை கருத்தரிக்கும்படி செய்யப்படாவிட்டால், ப்ரோஜெஸ்ட்ரோன் மற்றும் எஸ்ட்ரோஜன் அளவுகள் விரைவாகக் குறைகின்றன.
ஆதரிப்பதற்கு ஹார்மோன்கள் இல்லாததால், கருப்பையின் உள்வரி சிதைவுறுகிறது; இரத்தம், திரவம், மற்றும் சில திசுக்கள் யோனிக்குழாய் வழியாகக் கசிந்துவிடுகின்றன. அந்த உள்வரியை முழுமையாகக் களைய ஒரு பெண்ணின் கருப்பைக்கு சுமார் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் தேவைப்படுகிறது; இவ்வாறு ஒரு மாதவிடாய் சுழற்சி முடிவடைகிறது. ஒரு சுழற்சி முடிவடைந்ததும், மூளை மீண்டும் ஹார்மோன்களைச் சுரக்கிறது; அதன்மூலம் அடுத்த சுழற்சிக்கான அறிகுறியை அளிக்கிறது.
ஹார்மோன்களின் போராட்டமா?
எஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோனின் அளவுகள் சமநிலையற்றிருப்பதே ஒரு பெண்ணின் மாதவிடாய்க்கு முன்னான அறிகுறிகளுக்கு காரணம் என சிலர் வாதாடுகின்றனர். முழுமையான சமநிலையை அடையத்தக்கவிதத்தில் ஹார்மோன்கள் வழக்கமாக ஒன்றுக்கொன்று இசைந்து செயல்படுகின்றன என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஒன்றைவிட மற்றொன்று அதிகமாக உற்பத்தி செய்யப்படுகையில், ஒரு போராட்டம் நடக்கிறது; அதில் ஏற்பட்ட சேதங்கள் பெண்ணுடலில் விட்டுவிடப்படுகின்றன.
எஸ்ட்ரோஜன் உயரளவுகளில் காணப்படுவது, சில பெண்களை எரிச்சலடைகிறவர்களாக உணர வைக்கக்கூடும். இன்னும் மற்றவர்களுக்கு, ப்ரோஜெஸ்ட்ரோன் அதிகமாகக் காணப்படுகிறது; அது அவர்களை மனச்சோர்வடைந்தவர்களாகவும் களைப்படைந்தவர்களாகவும் உணர வைக்கிறது.
ஹார்மோன்கள் சமநிலையற்றிருப்பது PMS-ஐ உருவாக்குகிறது என்ற கோட்பாட்டை மற்ற ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. குறிப்பிட்ட சில பெண்களில், உளம்சார்ந்த மற்றும் சமூக காரணங்கள் மாதவிடாய்க்கு முன்னான அறிகுறிகளை உருவாக்குவதில் பெரும் பாகத்தை வகிக்கின்றன என்று அவர்கள் வாதாடுகின்றனர். நோயாளியைக் கவனித்தல் (ஆங்கிலம்) PMS-ன் காரணங்களை விளக்குவதாய், “கடுமையான PMS-ஐ கொண்டிருக்கும் அல்லது கொண்டிராத பெண்களின் பிறப்புறுப்புகளின் ஹார்மோன்களில் சுரக்கும் விதங்கள், விகிதங்கள், அளவுகள், அல்லது நேரக்கணக்குகள் ஆகியவற்றில் தெளிவான எந்த வித்தியாசங்களும் காணப்படவில்லை” என்று குறிப்பிடுகிறது.
உதாரணமாக, அழுத்தம், PMS அறிகுறிகளைத் தீவிரப்படுத்த, தாமதப்படுத்த, அல்லது அவற்றின் கடுமையைக் கூட்டக்கூடும். PMS—மாதவிடாய்க்கு முன்னான நோய்க்குறித் தொகுப்பும் நீங்களும்: அடுத்த மாதம் வித்தியாசமானதாக இருக்கலாம் (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஹார்மோன்கள் சுரக்கப்படுவதை அழுத்தம் தடை செய்கிறது, போதுமானளவு ஹார்மோன்கள் சுரக்கப்படாமல் இருப்பது, PMS அறிகுறிகளை மோசமாக்குவதற்கு ஏற்ற வகையான ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிநடத்தலாம்.” மாதவிடாய்க்கு முன்னர் மருத்துவ, பொருளாதார, அல்லது குடும்ப பிரச்சினைகள் அதிக கடுமையானதாகவும் சமாளிப்பதற்குக் கடினமானதாகவும் தோன்றக்கூடும்.
இகழப்படுவது பற்றிய பயம்
ஒரு பெண் தன்னுடைய மாதவிடாய் சம்பந்தப்பட்ட அறிகுறிகளை வெளிக்காட்டினால், அவள் அவ்வளவாக விரும்பப்படும் ஒரு வேலையாளாக அல்லது தீர்மானம் எடுப்பவளாகக் கருதப்படமாட்டாள் என்று சில ஆய்வாளர்கள் வாதாடுகிறார்கள். “சமுதாயம் பெண்களை அவர்களுடைய இடத்தில் வைப்பதற்கான ஒரு வழியாக அது இருக்கிறது. நீங்கள் மாதத்திற்கு ஒரு முறை பலத்தை இழந்துவிடுகிறவர்களாக இருந்தால், இந்த முக்கியமான, சக்திவாய்ந்த, செல்வாக்கான காரியங்களைச் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது அதன் அர்த்தம்,” என்று பார்ப்ரா சாமர் என்ற உளவியல் மருத்துவர் வாதாடுகிறார்.
பெண்கள் PMS-ஐ ஏற்றிருக்கிறார்கள், ஏனென்றால் இது அவர்களுடைய நடத்தைக்கு ஒரு சாக்குப்போக்காக அந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது என்பதாக மற்ற ஆய்வாளர்கள் வாதாடுகிறார்கள். PMS என்பது “பெண்களை ‘என்னைத் துயரகரமாக உணரவைக்கும் அளவில் என் வாழ்க்கையில் என்ன தவறு நேர்ந்திருக்கிறது?’ என்று சொல்ல வைக்காமல், ‘என்னிடம் மருத்துவரீதியில் என்ன தவறு நேர்ந்திருக்கிறது?’ என்று சொல்லவிடுகிறது” என்று ரெட்புக் பத்திரிகையில் ஒரு பேட்டியில், தி மிஸ்மெஷர் ஆஃப் உமன் என்பதன் எழுத்தாசிரியரான டாக்டர் காரல் டாவ்ரிஸ் குறிப்பிடுகிறார்.
1985-ல், அமெரிக்க உளவியல் சங்கத்தின் (American Psychiatric Association [APA]) பெண்களுடைய குழு ஒன்றில் பெண் உளவியல் மருத்துவர்கள், PMS-ஐ APA-வின் நோய்க்குறி அறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேட்டில் உட்படுத்தியிருப்பதற்கு எதிராக வாதாடினார்கள். தற்போதைய (1987) கையேட்டின் பிற்சேர்க்கையில் அது “அண்டச்சுரப்புத்திசு சிதைவுறும் சமயத்தில் உடல்நலமற்றிருக்கும் கோளாறு” (late luteal phase dysphoric disorder) என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிற போதிலும், அதன் அடுத்த பதிப்பில் முக்கிய பொருளடக்கத்திலேயே அதை “மாதவிடாய்க்கு முன்னான உடல்நலமற்றிருக்கும் கோளாறு” (“premenstrual dysphoric disorder” [PMDD]) என்பதாகப் பட்டியலிடும்படி APA-வின் சிறப்புப் பணி பிரிவு எடுத்துரைத்திருக்கிறது. அந்தக் கையேட்டில் அதைப் பட்டியலிடுவது அதை ஒரு அதிகாரப்பூர்வமான உளவியல் சம்பந்தமான கோளாறாக ஆக்கிவிடும்.
“அந்தப் புத்தகத்தில் எந்த இடத்தில் இருப்பதற்கும் அது தகுதியானதாக இல்லை, ஏனென்றால் அது ஒரு மனக்கோளாறு அல்ல,” என்பதாக அந்தச் சிறப்புப் பணி பிரிவுக்கு முன்னாள் கருத்துரையாளராக இருந்த டாக்டர் பாலா கப்லான் குறிப்பிடுகிறார். “அடுத்த முறை ஒரு பெண், அரசு தலைமை வழக்குரைஞராவதற்கு வேட்பாளராகக் குறிப்பிடப்படுகையில், ‘உங்களுக்கு PMDD இருந்திருக்கிறதா?’ என்பதாக அவர் கேட்கப்படுவார்” என்று அவர் சொன்னார்.
பரிகாரத்திற்காகத் தேடுதல்
PMS பிரச்சினையைக் குறித்து மருத்துவத் தொழில் தொடர்ந்து விவாதித்துக்கொண்டே இருக்கிறது. PMS-ன் உண்மையான காரணத்தையும் சிகிச்சையையும் பற்றி அநேக கோட்பாடுகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு அறிகுறிகளை உருவாக்குகிற 18 வகைகளான PMS இருக்கக்கூடும் என்று சில மருத்துவர்கள் உணருகிறார்கள். PMS அறிகுறிகளைத் தூண்டுவதில் துத்தநாகம் பங்குவகிக்கக்கூடும் என்பதாக சமீப ஆய்வு ஒன்று அறிக்கைசெய்கிறது. விட்டமின்-B6 குறைவு அந்தப் பிரச்சினையின் மூல காரணமாக இருக்கக்கூடும் என்றும் அது சிலருக்கு லேசான மனச்சோர்வை ஏற்படுத்துகிறது என்றும் மற்றொரு ஆய்வு குறிப்பிடுகிறது.
ஒளி மருத்துவம், தூக்கத்தைக் கையாளும் முறை, ஆழ்ந்த ஓய்வெடுக்கும் முறை, உளச்சோர்வு போக்கும் மருந்துகள், ப்ரோஜெஸ்ட்ரோன் உள்வைப்பு மருந்துகள் ஆகியவை போன்ற சிகிச்சைகள் மீண்டும் மீண்டும் வரும் PMS அறிகுறிகளிலிருந்து விடுபட நாடும் பெண்களால் முயற்சி செய்யப்பட்டவையாகும். இது வரையாக, நிலையாக பலன்தரும் எந்த சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மாதவிடாய்க்கு முன்னதாக, சமாளிக்க முடியாத அறிகுறிகளால் கஷ்டப்படும் பெண்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒவ்வொருவருக்கு ஏற்படும் PMS-ம் தனிப்பட்டதாகும்; ஒவ்வொரு பெண்ணுக்கும் அறிவும் அனுபவமும்வாய்ந்த மருத்துவ ஆலோசனையும் சரியான கவனிப்பும் அவசியம். தைராய்ட் நோய், இடமகல் கருப்பை அகப்படலம், மனச்சோர்வு போன்ற மற்ற கடுமையான நிலைமைகளையும் PMS ஒத்திருக்கலாம் என்பதால் உடல் பரிசோதனை முக்கியமானதாக இருக்கிறது.
மருத்துவரை முதன்முதலாகச் சந்திக்கச் செல்வதற்கு முன்னதாக ஒரு பெண், மாதவிடாய்க்கு முன்னர் தான் அனுபவிக்கும் உடல் சம்பந்தமான மற்றும் உணர்ச்சி சம்பந்தமான அறிகுறிகளைப் பற்றிய ஒரு விவரமான பதிவேட்டையோ நாட்காட்டியையோ வைத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. மனநிலை மாற்றங்கள், எரிச்சலடைதல், அல்லது மனச்சோர்வுக்கு தான் உள்ளாகக்கூடிய நாட்களை அவள் அறிந்திருப்பது, அதற்கேற்றாற்போல் தன் அட்டவணயை மாற்றியமைத்துக்கொள்ள அவளுக்கு உதவுகிறது. அவள் PMS-ஐ அனுபவித்துக்கொண்டிருக்கிறாளா என்பதைத் தீர்மானிக்கவும் அது அவளுக்கு உதவலாம்.
அவளுடைய வாழ்க்கையில் அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய அம்சங்களைக் குறைத்துக்கொள்ளும்படியும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கக்கூடும். ஊட்டச்சத்துள்ள உணவும் ஒழுங்கான உடற்பயிற்சியும் PMS-ஐ சமாளிக்க உதவலாம். மாவுச்சத்து அதிகமாகவும் புரதச்சத்து குறைவாகவும் உள்ள உணவு, மாதவிடாய்க்கு முன்பு மனச்சோர்வடையும் சில பெண்களின் மனநிலை மாற்றங்களில் முன்னேற்றத்தைக் காண உதவியதாக பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறியது. ஒரு நாளில், ஒழுங்கான உடற்பயிற்சி அல்லது சுறுசுறுப்பான நடையும்கூட களைப்பையும் மந்தமான மனநிலையையும் எதிர்த்து சமாளிக்க உதவக்கூடும்.
நிச்சயமாகவே, குடும்ப அங்கத்தினர்கள், குறிப்பாக கணவன் உதவி செய்யலாம். ஒரு பெண்ணின் மாதாந்தர சுழற்சி அவளுக்கு கஷ்டங்களை உருவாக்குகையில், அவர்கள் விசேஷித்த வகையில் தயவாக, கரிசனையாக, புரிந்துகொள்ளுதலுடன் இருக்க முயலவேண்டும்.
விவாதம் தொடர்கிறது
ஒரு பெண் தன் மாதவிடாய் சுழற்சியின்போது இயல்பாக அனுபவிக்கும் உணர்ச்சிப்பூர்வ மற்றும் உடல்சம்பந்தமான மாற்றங்களை ஒரு “நோய்க்குறித் தொகுப்பு” என்பதாக குறித்துவிடுவது சரியல்ல என்று சிலர் கூறுகின்றனர். PMS பெண்களுக்கு இகழ்ச்சியை உண்டுபண்ணுகிறது என்பதாகச் சொல்லிக்கொண்டு இன்னும் மற்றவர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள்.
என்றபோதிலும், பல பெண்களுக்கு PMS நிஜமானதாகவே இருக்கிறது. ஒவ்வொரு மாதமும், ஒரு குடும்பத்தையும் ஒரு வேலையையும் சமாளிப்பதைக் கடினமாக்குகிற அறிகுறிகள் அனுபவிக்கப்படுகின்றன. மருத்துவத் தொழிலில் உள்ளவர்களும் அல்லாதவர்களுமான அநேகர் PMS-ன் நிஜமான தன்மையைக் குறித்து தொடர்ந்து விவாதித்துக்கொண்டே இருப்பதால், பரிகாரத்திற்கும் புரிந்துகொள்ளுதலுக்குமான தேடுதல் சோர்வூட்டுவதாக நிரூபிக்கும்.
[பக்கம் 15-ன் படம்]
விசேஷமானவிதத்தில் தயவாகவும் கரிசனையாகவும் இருப்பதன்மூலம் குடும்ப அங்கத்தினர்கள் உதவி செய்யலாம்.