எமது வாசகரிடமிருந்து
PMS “மாதவிடாய்க்கு முன்னான நோய்க்குறித் தொகுப்பு—கட்டுக்கதையா நிஜமா?” (ஆகஸ்ட் 8, 1995) என்ற கட்டுரையை நீங்கள் பிரசுரித்திருந்ததற்காக என் மனப்பூர்வமான நன்றியை நான் தெரிவிக்க வேண்டும். நான் ஒவ்வொரு மாதமும் ஏன் அப்படிப்பட்ட வருத்தமூட்டும் உணர்வுகளை அனுபவித்தேன் என்பதைப் புரியாதிருந்ததால் அப்படிப்பட்ட ஒரு கட்டுரைக்காக நான் ஜெபித்ததுண்டு. அந்தக் கட்டுரையைப் படித்தவுடன், நான் நிம்மதிப்பெருமூச்சு விட்டேன்; எனக்கிருந்த பிரச்சினையானது ஆவிக்குரிய பலவீனத்தினால் ஏற்படவில்லை என்பதை இப்போது நான் உணருகிறேன்.
ஒய். இ., ஜமைகா
எனக்கு நினைவிருக்குமளவிற்கு, PMS பிரச்சினையால் நான் கஷ்டப்பட்டிருக்கிறேன், ஆனால் நான் மேற்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்றாக அதை எப்போதுமே அப்படியே விட்டுவிட்டேன். PMS என்பது ஓர் உண்மையான பிரச்சினை என்றும் கலந்தாலோசிக்க வேண்டிய ஒன்று என்றும் நான் உணருவதற்கு இக்கட்டுரை எனக்கு உதவியது.
ஒய். எம்., இங்கிலாந்து
சுமார் 12 ஆண்டுகளாக, எனக்கிருந்த PMS பிரச்சினை என் குழந்தையும் என் கணவரும் வருத்தமடையும்படி செய்திருக்கிறது. எனக்கிருந்த அறிகுறிகளை முழுமையாக இக்கட்டுரை விளக்கியது! என்னை விசேஷமாய் சந்தோஷப்படச் செய்தது என்னவென்றால் பொதுவாக விழித்தெழு! பத்திரிகையைப் பற்றி அதிகக் குறைகூறும், சத்தியத்திலில்லாத என் கணவரின் பிரதிபலிப்புதான். அவர் அக்கட்டுரையில் அதிக ஆர்வம் காட்டியதோடு, ‘இக்கட்டுரை நமக்குக் கிடைத்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன்’ என்றும் கூறினார்.
கே. ஓ., ஜப்பான்
விபசாரம் “பைபிளின் கருத்து: விபசாரம்—மன்னிப்பதா மன்னிக்காமல் இருப்பதா?” (ஆகஸ்ட் 8, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. பல ஆண்டுகளாக மோசமாக நடத்தப்பட்டபிறகு, என் கணவரிடமிருந்து ஒரு வேதப்பூர்வமான மணவிலக்கை நான் பெற்றேன். இருந்தபோதிலும், நான் அவ்விதம் செய்ததற்காக சிலர் என்னைக் குற்றமுள்ளவளாக உணரச் செய்தனர், நானும் இந்த உணர்வோடு பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்தேன். யெகோவா என்னை நிராகரித்துவிட்டிருந்ததாகவும்கூட நான் நினைத்தேன். என்றபோதிலும், இக்கட்டுரை என்னிலிருந்த பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தியது, மேலும் அது என்னை அதிகம் உற்சாகப்படுத்தியது.
ஏ. கே., செக் ரிபப்ளிக்
ஆப்பிரிக்க முகமூடிகள் “முகமூடிக்கு பின்னால் உள்ள அர்த்தம்” (ஆகஸ்ட் 8, 1995) என்ற உங்கள் கட்டுரை மிகவும் அறிவொளியூட்டுவதாய் இருந்தது. உண்மை கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட முகமூடிகளை வைத்திருக்கமாட்டார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் வெறுமனே ஞாபகச் சின்னங்களாக தயாரிக்கப்படும் அல்லது ஒருபோதும் மத சம்பந்தமான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாமல் இருக்கும் முகமூடிகளைப் பற்றியதென்ன?
ஜே. ஏ., ஐக்கிய மாகாணங்கள்
பொய் மத நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட முகமூடிகளைப் பற்றிதான் எமது கட்டுரை விசேஷமாகக் கலந்தாராய்ந்தது. “வணக்கத்தில் பயன்படுத்தப்படும் முகமூடிகளுக்கும் சுற்றுப்பயண தொழில்துறைக்காக செதுக்கப்பட்ட நகல்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது” என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். மேலைநாடுகளில், அவ்விதம் வர்த்தகரீதியில் தயாரிக்கப்படும் முகமூடிகள் மதசம்பந்தமான எந்த அர்த்தத்தையும் ஒருபோதும் உடையதாய் இல்லாமலிருக்கலாம், ஆனால் பொதுவாக அலங்காரக்கலையாக நோக்கப்படலாம். ஆகவே, அவ்விதம் செய்வது, மற்றவர்களின் மனசாட்சிகளில் ஏற்படுத்தும் விளைவுகளை மனதில் கொண்டு, அப்படிப்பட்ட முகமூடிகளை காட்சிக்கு வைப்பதுபற்றிய ஒரு தனிப்பட்ட தீர்மானத்தை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:29)—ED.
காண்டாமிருகம் அத்தியாவசியமல்லாத ஒரு தகவல் குறிப்பை—ஒருபோதும் இன்பத்துக்காக வாசிக்கும் பழக்கம் இல்லாத என்னைப்போன்ற எவராவது ஒருவருக்கும்கூட—இன்பகரமானதாய் ஆக்கும் உங்கள் திறனுக்காக என் போற்றுதலையும் பிரியத்தையும் தெரிவிக்க நான் விரும்புகிறேன். “அந்த விலையேறப்பெற்ற கொம்புகளுக்கு கீழுள்ள விலங்கு” (ஆகஸ்ட் 8, 1995) என்ற கட்டுரையை இப்போதுதான் வாசித்து முடித்தேன். பொதுவாக நான் இதுபோன்ற கட்டுரைகளை கடமையுணர்வுடன் வாசிக்க ஆரம்பிப்பேன். என்றபோதிலும், முடிவில், வாசிப்பதற்கு அவை எவ்வளவு அனுபவிக்கத்தக்க ஒன்றாய் இருக்கின்றன என்பதைக்கண்டு நான் ஆச்சரியப்படவே செய்கிறேன்!
ஜே. எம்., ஐக்கிய மாகாணங்கள்
செலஸ்ட் ஜோன்ஸின் சரிதை நான் 17 ஆண்டுகளாக உங்கள் பத்திரிகைகளை வாசித்து வந்திருக்கிறேன். “கடவுளுடைய கவனிப்பினால் நான் எப்படி நன்மையடைந்தேன்” (ஜூன் 22, 1995) என்ற கட்டுரையில் செலஸ்ட் ஜோன்ஸின் அனுபவத்தைப்பற்றி வாசித்தபிறகு, நான் அதற்கான என் போற்றுதலை எழுதித் தெரிவிக்க வேண்டியதாயிற்று.
எம். எம்., கொலம்பியா
செலஸ்ட் ஜோன்ஸ் அக்டோபர் 27, 1995-ல் காலமானார். அவருடைய மரணத்துக்கு முன்பு, அவருடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்காக நன்றிதெரிவித்து உலகமுழுவதிலுமிருந்த வாசகரிடமிருந்து பல கடிதங்களை அவர் பெற்றார்.—ED.