முகமூடிக்கு—பின்னால் உள்ள அர்த்தம்
கையில் ஒரு கோடரியுடன் அந்த மரம்வெட்டி மத்திய ஆப்பிரிக்க காட்டுக்குள் உள்ள மரத்தின் அருகே செல்கிறான். அவனுடைய வேலை மதசம்பந்தமானதாக, ஆப்பிரிக்காவில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக எணணற்றமுறை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
அந்த மரம்வெட்டி ஆழ்ந்த மரியாதைக்குப் பாத்திரமான ஒரு ஆவி அந்த மரத்தினுள் வாசம் செய்கிறது என்று நம்புகிறான். அந்த ஆவியின் கோபத்திலிருந்து தன்னையே பாதுகாத்துக்கொள்ள, அந்தக் காட்டிற்குள் செல்லுமுன் அவன் குறிசொல்லும் ஒருவனிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டான். பிறகு அவன் ஒரு சுத்திகரிப்பு சடங்கை நிறைவேற்றிவிட்டு, அந்த மரத்தின் ஆவிக்கு ஒரு பலியையும் கொடுத்தான்.
தனது கோடரியால் அந்த மரத்தை ஒரு வெட்டு வெட்டுகிறான். வெட்டிய இடத்தில் தனது உதடுகளை வைத்து, அடுத்து அந்த மரத்தோடு ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள, சிறிது சாறை உறிஞ்சுகிறான். அந்த மரத்தை வெட்டி வீழ்த்தியதும், அந்த ஆவி தங்குவதற்கு வேறெங்காவது ஒரு இடத்தைக் கண்டுபிடித்துக்கொள்ள போதுமான சமயம் கொடுக்கும்படி, அவன் அதை சில நாட்களுக்கு தரையிலேயே கிடக்கும்படி விட்டுவிடுகிறான். அந்த ஆவி பிரிந்துபோனாலும், அந்த மரத்திற்கே சொந்த சக்தி இருப்பதாக அவன் நம்புகிறான். அந்த மரத்தின் மரக்கட்டையைக் கையாளுபவர்கள் தங்களுடைய சொந்த பாதுகாப்புக்காக, நிர்ணயிக்கப்பட்ட பாரம்பரிய சடங்காச்சாரங்களைக் கவனமாக பின்பற்றவேண்டும். அந்த மரத்தின் சக்தி அந்தளவுக்கு வல்லமைவாய்ந்ததாக இருக்கிறது.
சிற்பியின் திறம்பட்ட கரங்களிலே, அந்த மரக்கட்டை ஒரு முகமூடியாக மாறுகிறது. முகமூடி உருவெடுக்கையில், அந்த மரக்கட்டை இன்னும் அதிக ஆற்றலைப் பெறுவதாக நம்பப்படுகிறது. சிற்பி தன் மனதுக்குத் தோன்றிய வடிவில் வடிவமைக்கும் சுதந்திரம் அவனுக்கு இல்லை; தனது இனத்தொகுதியினர் பாரம்பரியமாக அமைத்துவைத்த வடிவிற்கு இசைவாகத்தான் உருவாக்கவேண்டும். அப்படி அவன் செய்யவில்லையென்றால், அவனுடைய சமுதாயத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் ஆபத்திலும், அந்த முகமூடியின் ஆவி சக்தியின் கோபத்தை சம்பாதித்துக்கொள்ளும் ஆபத்திலும் இருக்கிறான்.
முகமூடி செய்து முடிக்கப்பட்டதும், மந்திரவாதி மந்திர கூட்டுப்பொருட்களை அந்த முகமூடியில் தடவுகிற ஒரு சமர்ப்பண சடங்குமுறையை நிறைவேற்றுகிறான். இந்த முகமூடிக்கு இப்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி பேரளவில் இருப்பதாகவும், இது எந்த ஆவிக்கு சமர்ப்பிக்கப்பட்டதோ அந்த ஆவியின் உறைவிடமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. மத பண்டிகைகளில் அணிந்துகொள்ள முகமூடி இப்போது தயாராக உள்ளது.
ஆப்பிரிக்காவில் முகமூடியின் அர்த்தம்
ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதி முழுவதிலும், முகமூடிகள் வழிபாட்டில் உபயோகிக்கப்படுகின்றன. முகமூடிகள்—அவற்றின் அர்த்தமும் வேலையும் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது: “முகமூடியால் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும்: இதை சிறிய முகமூடியைப்போல ஒரு மந்திரப் பொருளாக பயன்படுத்தலாம்; அல்லது இதை அணிந்தும்கொள்ளலாம். அவ்வாறு அணிந்துகொண்டால், அதன் வேலை மூதாதையர்களையும், ஆவியாட்களையும், அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆட்களையும் வேண்டிக்கொள்வதாகும்.”
இன்னும் விரிவான விளக்கம் கொடுப்பவராக, அறிஞர் ஜெஃப்ரி பேரின்டர், ஆப்பிரிக்காவிலுள்ள மதம் என்ற தனது ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: “[மரத்தாலான ஆப்பிரிக்க முகமூடிகள்] இயல்பானவையோ, விதிமுறையான வடிவிலுள்ளவையோ, அல்லது பண்பியல்பானவையோ, மத சம்பந்தமானவையாக இருக்கின்றன. அவை மரித்தவர்களையோ அல்லது தங்களுடைய சடங்காச்சாரங்களில் பணிவிடை செய்யும் ஆவியாட்களையோ, அல்லது மரித்தோரோடு தொடர்புடைய அல்லது பில்லி சூனியத்தை அடக்கும்படியாக சேவிக்கும் ‘ரகசிய சங்கங்களையோ’ பிரதிநிதித்துவம் செய்கின்றன. முகபாவமற்ற அல்லது குலைநடுங்கவைக்கும், விகாரமான அல்லது பண்பியலான முகமூடிகள், பயப்படுத்த இறந்தோருக்கு இருக்கும் வல்லமையையும் மரணம் முடிவல்ல என்பதற்கான நம்பிக்கையையும் மிகவும் வல்லமைவாய்ந்த முறையில் வெளிக்காட்டுகின்றன. இறந்தவர்களைப்போல நடிப்பவர்களால் அணிந்துகொள்வதற்காக இவை உண்டாக்கப்படுகின்றன. அவர்களுடைய உடல்கள் முகமூடிகளுக்கு அடியில் வழக்கமாகவே அங்கிகளால் மூடப்பட்டிருக்கும். அவற்றை மனிதர்கள் என்று சொல்லக்கூடாது ஆனால் ஆவியாட்கள் என்றே சொல்லவேண்டும்.”
அவை ஈமச்சடங்குகளில் பயன்படுவதும், சூனியங்களுக்கு எதிராக பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி, தொடக்க சடங்குகள், விழாக்கள், நீதிவிசாரணை விவகாரங்கள், கருவுருச் சடங்குகள், “இறந்தவர்களோடு தொடர்புகொள்ளுதல்” ஆகியவற்றிலும் முகமூடிகள் முக்கியமான பாகம் வகிக்கின்றன. சிலசமயங்களில் முகமூடிகள் கிறிஸ்தவ மண்டலத்தின் கொண்டாட்டங்களிலும், சடங்காச்சாரங்களிலும்கூட சிறப்பம்சமாக இருக்கின்றன. உதாரணமாக சியர்ரா லியோனில் முகமூடியணிந்த “பேய்கள்” திருமண வைபவங்களில் தங்களுடைய மரியாதையைக் காண்பிப்பதற்கு, சர்ச்சின் முற்றம்வரை நடனமாடிவருகின்றன. இவ்விதமான அனைத்து உபயோகத்திலும் முகமூடிகளுக்கு ஒரே அடிப்படை அர்த்தம்தான் இருக்கிறது. “அவற்றின் வேலை கடினமானதாக இருக்கவேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டிருந்தாலும் சரி அல்லது சுலபமானதாக மற்றும் பொழுதுபோக்காக இருக்கவேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டிருந்தாலும் சரி,” இந்த முகமூடிகள், “தெய்வீக வல்லமையின் கொள்கலங்களாக இருக்கின்றன,” என்று ஆப்பிரிக்க முகமூடிகள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இனப் பிரிவுகளில், சுமார் 100 பிரிவுகள் முகமூடிகளை உண்டாக்குகின்றன. ஒரு பிரிவு உண்டாக்கும் முகமூடிகளின் வடிவம் மற்ற பிரிவுகள் உண்டாக்கும் முகமூடிகளின் வடிவத்திலிருந்து பெரிதும் வித்தியாசப்படுகின்றன, மேலும், அவை என்ன நோக்கத்திற்குப் பயன்படுகின்றன என்பதை அனுசரித்தும் வேறுபடுகின்றன. எனினும், இத்தனை வித்தியாசங்கள் இருந்தபோதிலும், ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஸ்தாபிக்கப்பட்ட வடிவமைப்புகளும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மூதாதையர்களின் ஆவியை விவரிக்கும் முகமூடிகள் அவற்றிற்கே உரித்தான சாந்தமுள்ள ஒரு தோற்றத்தை உடையவையாய் இருக்கின்றன. ஆனால் மனித ஆவியல்லாதவற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகமூடிகளோ பெரும்பாலும் பார்ப்பதற்கு விகாரமாகத் தோன்றுகின்றன. உயர்ந்த குவிமாடத்தைப் போன்ற நெற்றி விவேகத்தையும் ஆழ்ந்த ஆவிக்குரிய தன்மையையும் குறிக்கிறது. வெளியே துருத்தியிருக்கும் கண்கள் அல்லது கடுகடுப்பான முகபாவனை ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு நிலையைக் குறித்துக்காட்டுகிறது. வெள்ளை நிறப்புள்ளிகள் இறந்தோரின் ஆவிகளையும் ‘வானுலக’ பண்பையும் குறிக்கின்றன. கொம்புள்ள விலங்குகளை, முக்கியமாக ஆப்பிரிக்க எருமையையும் மறிமானையும் விவரிக்கும் முகமூடிகள், பேயோட்டுதல், ஆவி கூடுவிட்டுகூடு பாய்தல், பில்லிசூனியம் ஆகியவற்றின் சடங்குகளோடு தொடர்புடையவையாய் இருக்கின்றன.
முகமூடி செயல்படுகிறது
ஆப்பிரிக்காவில் முகமூடிகள் சுவற்றில் வெறுமனே தொங்கவிடப்படுவதில்லை; சடங்கிலும் நடனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அவை அணிந்திருப்பவரின் முகத்தை மட்டுமோ அல்லது முழு தலையையுமோ மூடலாம். அந்த ஆளுடைய உடலின் எஞ்சிய பாகங்கள் நீண்ட அங்கிகளாலோ அல்லது ரஃபியா பனைமரக் கீற்றுகளாலோ அல்லது மரங்களிலிருந்து எடுக்கப்படும் நாரினாலோ அலங்கரிக்கப்படுகின்றன.
அணிந்திருப்பவர் அந்த முகமூடியின் ஆவி சக்தியோடு நேரடித் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறார். என்ன நடக்கிறது என்பதை தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு விளக்குகிறது: “முகமூடியை அணிந்தவுடன், அணிந்திருப்பவர் சிலசமயங்களில் மனநிலை மாற்றத்திற்கு உள்ளாகிறார். ஒரு பிரம்மையில் இருக்கும்போது அந்த முகமூடியால் விவரிக்கப்பட்டிருக்கும் ஆவியின் குணாதிசயத்தை பெறுகிறார். எனினும், சாதாரணமாக, அணிந்திருப்பவர் யாரைப்போல் நடிக்கிறாரோ அவரோடு சாமர்த்தியமாக ஒரு ‘கூட்டாளி’ ஆகிறார் . . . ஆனால் அணிந்திருப்பவர் அவர் உருவாக்க உதவிசெய்யும் ஆளோடு அடிக்கடி உள்ளத்தில் முழுவதுமாக பின்னிப்பிணைந்திருப்பதாகத் தோன்றும். அவர் தனது சொந்த ஆள்தன்மையை இழந்துவிட்டு, தனது சுய இச்சை ஏதுமின்றி, அந்த முகமூடியின் ஆளுக்கு அடிமையாயிருக்கிற ஒரு இயந்திர மனிதனைப்போல மாறுகிறார்.”
அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு—கிட்டத்தட்ட எப்பொழுதும் ஆண்கள் மட்டுமே—இந்த முகமூடி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நபரை பிரதிநிதித்துவம் செய்வது மட்டுமல்ல. உயிருள்ள இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளே முகமூடியின் உருவெடுத்திருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக அந்த முகமூடிதானே புனிதமானதாக இருக்கிறது, ஆகவே விதிமுறைகளை மீறும் எவரும் கண்டிப்பாக சமுதாயத்தினால், சிலசமயங்களில் மரணதண்டனை விதித்தும்கூட, தண்டிக்கப்படுவார். அந்த மரம்வெட்டியைப் போலவும் அந்தச் சிற்பியைப் போலவும், அணிந்திருக்கும் இந்த நபர், தனது பாதுகாப்புக்காக, அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
சேகரிப்பவருக்கு முகமூடி குறிப்பது
குறிப்பாக கடந்த 100 வருடங்களாக, உலகமுழுவதிலும் ஆப்பிரிக்க முகமூடிகள் ஆர்வத்தோடு சேகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. சேகரிப்பவருக்கு இந்த முகமூடி ஆப்பிரிக்காவில் பாரம்பரிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு குறிப்பதைவிட அதிக வித்தியாசமான ஒன்றைக் குறிப்பதாக இருக்கிறது.
சேகரிப்பவர்கள் அதை புனிதமான ஒன்றாக, மத சம்பந்தமான பொருளாக, கருதுவதற்குப் பதிலாக, முகமூடியை ஆப்பிரிக்க பண்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு கலை வேலைப்பாடாகவே கருதுகின்றனர். முகமூடி சமுதாயத்தில் செய்துமுடிக்கும் வேலையைவைத்து அதை மதிப்பிடாமல், அதன் ஒளிவுமறைவின்மை, உயிரூட்டம், உணர்ச்சியின் ஆழம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அதை மதிப்பிடுகின்றனர். சேகரிப்பாளர்கள் கேட்கின்றனர்: அந்த மரக்கட்டையைத் தானேயும், அதன் நார்வரி அமைப்புகளையும், அதன் வடிவமைப்பையும் எந்தளவுக்கு சிற்பி அறிந்து வைத்திருக்கிறான்? பண்பாட்டுப் பாரம்பரியத்தால் விதிக்கப்பட்டிருக்கும் பாணியைப் பின்பற்றுகிறபோதிலும், சிற்பி தனது படைப்பாற்றலையும், புத்திக்கூர்மையையும் எந்தளவுக்குத் திறமையுடன் உபயோகிக்கிறான்?
சந்தேகமேதுமின்றி, அந்த வேலைப்பாட்டின் தரத்தில் இருக்கும் மதத்தின் பங்கை சேகரிப்பாளர் அசட்டை செய்துவிடுவதில்லை. வழக்கமாகவே, சிற்பியின் உள்நோக்கில் இருக்கும் வித்தியாசங்களின் காரணமாக, வழிபாட்டில் உபயோகிக்கப்படுகிற முகமூடிகளுக்கும் சுற்றுலாத் துறைக்காக வடிவமைக்கப்படும் முகமூடிகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. கறுப்பு ஆப்பிரிக்காவின் முகமூடிகள் என்ற ஆங்கில புத்தகம் சொல்வதாவது: “சிற்பி . . . சர்வ-சக்தியுடைய ஆவிக்குரிய ஒரு ஆளை உருவமைக்கும், இந்தப் பொறுப்பில் தனக்கிருக்கும் விசேஷித்த சமுதாய கடமையை நிறைவேற்றும், தனது பணிக்கான பயபக்தி, ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து உந்துவிப்பு அம்சங்களைப் பெற்றார். இந்த மத விசுவாசம் சீர்கெட்டுப்போனவுடனே . . . அவருடைய வேலைப்பாடு, தெளிவாகவே தொழில்நுணுக்கச் சாதனைகளாக இருந்தபோதிலும், அது உயிரற்றதாகவும் கீழ்த்தரமான கலைத் தரமுடையதாகவுமே மாறிவிட்டது.”
அருங்காட்சியகங்களில் வைப்பதற்காக முகமூடிகளை சேகரிப்பவர்கள் சாதாரணமாகவே கலைநயத்திற்காக சேகரிப்பவர்களைவிட, ஒரு முகமூடி அது தோன்றிய சமுதாயத்தில் என்ன பாகத்தை நிறைவேற்றியிருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்கின்றனர். இருப்பினும், வருடங்களினூடே பெரும்பாலான முகமூடிகள் பெறப்பட்டிருக்கும் முறையின் காரணமாக, அத்தகைய குறிப்பிடப்பட்ட தகவல்கள் அடிக்கடி கிடைப்பதில்லை. சிலவை நினைவுச் சின்னங்களாகவும், மற்றவை ராணுவப் படையெடுப்பின் கொள்ளைப் பொருட்களாகவும் சேகரிக்கப்பட்டன. இன்னும் மற்றவை வியாபாரத்திற்காக பெருமளவில் சேகரிக்கப்பட்டவையாகவும் இருந்தன. இதன் விளைவாக, தனிப்பட்ட முகமூடி ஆதியில் என்னவாக இருந்தது என்பதும் அதன் பயனும் அடிக்கடி அறியப்படாமலே இருக்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு முகமூடி குறிப்பது
இவ்வாறு, முகமூடிகள் பாரம்பரிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஒன்றையும், கலை மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சிகளுக்காக சேகரிப்பவர்களுக்கு மற்றொன்றையும் குறிக்கின்றன. கிறிஸ்தவர்களுக்கு அவை வேறொன்றை குறிக்கின்றன.
முகமூடிக்கோ அது உருவாக்கப்பட்ட மரத்திற்கோ இயல்பாகவே இயற்கைக்கு அப்பாற்பட்ட எந்தவித சக்தியும் கிடையாது என்று பைபிள் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது. ஒரு மரக்கட்டையை எடுத்து அதன் பகுதியை உணவு சமைக்கவும், குளிர்காயவும், அதில் எஞ்சிய பகுதியை வைத்து, தான் உதவிக்காக நாடிப்போகும் ஒரு கடவுளாகவும் வடிவமைத்த ஒருவனுடைய புத்தியீனத்தை ஏசாயா தீர்க்கதரிசி விவரிக்கிறார். (ஏசாயா 44:9-20) இதே நியமம் மதசம்பந்தமான முகமூடிகளுக்கும் பொருந்துகிறது.
இருந்தாலும்கூட, ‘வானமண்டலங்களில் பொல்லாத ஆவிகளின் சேனைகள்’ இருக்கின்றன என்பதை கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். (எபேசியர் 6:12) சாத்தானின் வல்லமையின்கீழ், பொய்மதத்தின் வாயிலாக அவை மக்களை தவறாக வழிநடத்துகின்றன.—வெளிப்படுத்துதல் 12:9.
மனிதர்களோடு தொடர்புகொள்ள பேய்கள் ஜடப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன என்பதையும் கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆகவேதான், கடவுளின் ஊழியர்கள் ஆவிக்கொள்கையை உடைய மதத்தோடு தொடர்புடைய எதையும், ஒரு மாந்தரீகப்பொருள், ஒரு தாயத்து, ஒரு மந்திர வளையம், அல்லது ஒரு முகமூடி ஆகிய எதுவாக இருப்பினும் அவற்றை வைத்திருப்பதில்லை. இதைச் செய்வதில் அவர்கள் எபேசுவிலுள்ள பூர்வக் கிறிஸ்தவர்கள் வைத்த முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர். அவர்களைப்பற்றி பைபிள் கூறுகிறது: “மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.”—அப்போஸ்தலர் 19:19.
யெகோவாவைச் சேவிக்க விரும்புகிறவர்கள் முகமூடிகளையோ அல்லது பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட வேறு எதையுமே பயன்படுத்துவதில்லை அல்லது வைத்திருப்பதில்லை. நைஜீரியாவிலுள்ள பயஸ் என்ற ஒரு கிறிஸ்தவ மூப்பர் சொன்னது சரியான உதாரணமாக இருக்கிறது. அவர் சொன்னதாவது: “முகமூடிகள் அவற்றை உபயோகிப்பவர்களின் மதநம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. முகமூடிகளுக்கு பெயர்கள் இருக்கின்றன, அவை பிரதிநிதித்துவம் செய்யும் கடவுளைப் பொருத்து அவை வணங்கப்படுகின்றன அல்லது பயம் காண்பிக்கப்படுகின்றன. நான் என் வீட்டில் ஒருபோதும் முகமூடியை வைத்திருக்கமாட்டேன். ஏனென்றால், முகமூடி யெகோவாவை வருத்தப்படவைக்கிறது மட்டுமல்லாமல் வீட்டிற்கு வருவோர் அது பிரதிநிதித்துவம் செய்யும் மதநம்பிக்கைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நினைத்துக்கொள்வார்கள்.”
இஸ்ரவேலர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட தெளிவான நியாயப்பிரமாணத்தை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்: “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிரு”க்கிறேன்.—யாத்திராகமம் 20:4, 5.
[பக்கம் 23-ன் பெட்டி]
பல பண்பாடுகளிலுமுள்ள முகமூடிகள்
“முகமூடி” என்ற வார்த்தை உங்களுக்கு அர்த்தப்படுத்துவது என்ன? சில பண்பாடுகளில் இப்பதம் ஏதோவொன்றை மூடிமறைப்பதைக் குறிப்பதற்கான உருவக அணியாக இருக்கிறது. நீங்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக இருப்பீர்களானால், முகமூடி என்றால், தளக்கட்டுப் பந்தாட்டம், கத்திச் சண்டை ஆகியவற்றில் உள்ளதுபோல, முகத்தில் அடிபடாமல் பாதுகாக்கும் ஒன்று என்பதாக நினைக்கலாம். ஒருவேளை நச்சுப்புகை காப்பு முகமூடி, அறுவை சிகிச்சை முகமூடி, அல்லது முகமூடி நடனத்தில் பயன்படுத்துவதைப் போன்ற முகமூடியை நீங்கள் நினைக்கலாம்.
எனினும், இன்று அநேகருக்கு, முகமூடிகள் மதத்தை அர்த்தப்படுத்துகின்றன. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “மத நடனங்களில் உள்ள பயன் விளைவிக்கக்கூடிய மற்றும் ஊறு விளைவிக்கக்கூடிய புனித அல்லது பரிசுத்த சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகமூடிகள்—குறிப்பாக நேப்பாளம், திபெத், ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள சன்னியாசி மடங்களிலும், பெரும்பாலான பூர்வீக சமுதாயங்களிலும்—புனிதத்தன்மையைப் பிரதிநிதித்துவம் செய்யும் பொருட்கள் அடங்கிய [ஒரு] வகையை உருவாக்குகின்றன. அவை சிலைகள் வணங்கப்படுவதைப்போல சாதாரணமாக வணங்கப்படுகின்றன.”
பூர்வீக காலங்களிலிருந்தே மதசம்பந்தமான முகமூடிகள் அனைத்துப் பண்பாடுகளிலும் எல்லா காலப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை ஒருவேளை நம் மூதாதையர்களின் மத மற்றும் சமுதாய வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கக்கூடும். முகமூடிகள்—அவற்றின் அர்த்தமும் வேலையும் என்ற புத்தகம் கூறுகிறது: “தொடக்கத்தில், ஒவ்வொரு முகமூடியுமே முக்கியத்துவத்தால் நிறைந்திருந்தது. மேலும் முகமூடிதானேயோ அல்லது முகமூடியை அணிந்திருந்தவரோ மர்மமாக ஏதோவொரு சக்தியையோ ஆவியையோ பிரதிநிதித்துவம் செய்தது அல்லது செய்தார்.”