அலைகளுக்கு அடியிலுள்ள உலகை பாதுகாப்பாக ஆராய்தல்
ஆஸ்திரேலியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஒப்பிடுகையில் ஒருசிலரே நேரடியாகக் கண்டிருக்கக்கூடிய, உள்ளத்தைக் கவரும் உலகமொன்று உண்டு. கடல் மட்டத்திற்குச் சற்று கீழே அது அமைந்துள்ளது. அதுதான் அலைகளுக்கு அடியிலுள்ள உலகம்; உங்களால் ஆராயப்படுவதற்குத் தயாராக காத்திருக்கிறது. ‘அத்தகைய பயணம் எவ்வளவு பாதுகாப்பானது? இந்த நீரடி உலகத்தைப் போய்ப் பார்க்கவேண்டுமானால், நான் நீந்துவதில் கெட்டிக்காரனாக இருக்கவேண்டுமா? எனக்கு நீந்தவே தெரியாதென்றால் என்னால் போகவே முடியாதா?’ என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.
இரண்டு ஆய்வு முறைகள்
நீரடி உலகத்தை ஆய்வதற்கு இரண்டு முறைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன—ஸ்னார்க்களிங் (snorkeling) மற்றும் ஸ்க்யூபா முக்குளிப்பு (scuba diving) என்பவையே அவை.a
ஸ்னார்க்கள் என்பது வளைந்த ஒரு குழாயைக் கொண்டுள்ள உபகரணமாகும். நீந்துபவர் முகம்குப்புற தண்ணீர் மட்டத்திற்குக்கீழ் தலையை அமிழ்த்திக்கொண்டு நீந்துகையில், நீந்துபவரின் வாய்க்குள் இக்குழாய் பொருத்தப்பட்டு, நீர் மட்டத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும். நீந்துபவர் காற்றுக்காக தண்ணீருக்கு வெளியே தலையைத் தூக்காமலேயே சுவாசிக்க இது உதவுகிறது. முகமூடியொன்று அவருடைய கண்களைப் பாதுகாக்கிறது.
ஆனால் ஸ்க்யூபாவோ, சுவாசிக்க உபயோகிக்கும் ஒரு உபகரணத்தோடு இணைக்கப்பட்டுள்ள அழுத்தப்பட்ட காற்றடங்கிய ஒரு சிலிண்டர் அல்லது சிலிண்டர்களைக் கொண்ட ஒரு கருவியைக் குறிக்கிறது. எனவே ஸ்க்யூபா முக்குளிப்பு தெளிவாகவே தண்ணீர் மட்டத்திலிருந்து அதிக ஆழத்திற்கு மூழ்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. இது அதிக நுணுக்கம் வாய்ந்ததாக இருக்கிறது; ஆகவே பெரும் செலவு வைக்கக்கூடியதாக இருக்கலாம்.
ஆனால் எளிமையான மற்றும் மிக மலிவான இந்த ஸ்னார்க்களிங் பொழுதுபோக்கு, நீர் மட்டத்தில் இருந்துகொண்டே இந்த நீரடி உலகத்தின் நேர்த்திமிக்க திளைப்பை நீங்கள் கண்டுகளிக்க உங்களுக்கு உதவும். ஸ்னார்க்களிங்கில் ஆர்வமுடைய ஒருவர் தன்னுடைய முதல் அனுபவத்தை இப்படித்தான் விவரிக்கிறார்: “நான் பதினான்கு வயது பையனாக இருக்கும்போதே, ஆயிரக்கணக்கான சிறு மீன்களின் பெருங்கூட்டத்தினூடே முதன்முதலாக ஸ்னார்க்களிங் செய்துகொண்டு போனது எனக்கு இன்னும் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. நீந்திச் செல்கையில் அந்த மீன்கள் ஒரு உயிருள்ள சுரங்கப்பாதையை உருவாக்கியதைப்போல் எனக்குத் தோன்றிற்று. சூரிய ஒளியில் அவற்றின் வெள்ளிநிற உடல்கள் அழகிய ஒரு தோற்றத்தை உருவாக்கின. பரவசத்தில் நான் மெய்மறந்தேன். ஆகவே ஸ்னார்க்களிங்மீது தீராத மோகம் கொள்ள ஆரம்பித்தேன்.”
ஆனால் உண்மையிலேயே அது பாதுகாப்பானதுதானா?
கடற்கரைக்குக் காரை ஓட்டிச் செல்வதைக் காட்டிலும் ஸ்னார்க்களிங் மிக மிகப் பாதுகாப்பானதுதான் என்கிறார் 20 வருடங்களுக்கு மேலாக எவ்வித ஆபத்துமின்றி ஸ்னார்க்களிங்கை அனுபவித்துக் களித்த ஆர்வலர் ஒருவர்! தண்ணீரில் இருக்கும்போது, பாதுகாப்பு என்பது செயலைவிட அதிகம் நபரைச் சார்ந்ததாக இருக்கிறது. நீங்கள் தகுதிபெற்ற ஒரு நீச்சல்காரராக இல்லாவிடில், அமைதியான, ஆழமில்லாத இடத்திற்கு அப்பால் போக துணியக்கூடாது; மேலும் உங்களுடைய உயரத்தைவிட ஆழமான இடத்திற்கு அப்பால் நீங்கள் ஒருபோதும் போகக்கூடாது. மெய்யாகவே, நான்கே நான்கு அடி ஆழமுடைய தண்ணீரில் பார்ப்பதற்கு ஏராளமானவை இருக்கலாம். நீங்கள் திறமையையும் நம்பிக்கையையும் அடைய அடைய ஆபத்து ஏதுமின்றி உங்களால் ஆழமான தண்ணீருக்குள் போகமுடியும். அப்படி இருந்தாலும்கூட திறமையுள்ள ஒருவர் எப்போதும் உங்களோடிருக்க வேண்டும். முக்குளிப்பதில் அனுபவசாலிகள் கரையிலிருந்து அதிக தூரத்திற்கோ ஆழத்திற்கோ ஒருபோதும் தன்னந்தனியாக போகாதிருப்பதைத் தங்களுடைய நியமமாக்கிக் கொள்கின்றனர். பாதுகாப்பு அம்சம் மட்டுமல்லாமல், ஸ்னார்க்களிங் அனுபவத்தைக் கூட்டாளி ஒருவரோடு பகிர்ந்துகொள்ளுதல் ஓய்வுநேரத்தை நிம்மதியாகவும் சந்தோஷத்துடனும் கழிப்பதாக இருக்கும்.
உங்கள் முகத்தைத் தண்ணீரில் அமிழ்த்திக்கொண்டு ஸ்னார்க்கள் வழியாக சுவாசிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் தேவைப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் விடாப்பிடியாக முயற்சித்தால், அது உண்மையிலேயே கடினமானதல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள். புதிதாக கற்றுக்கொள்ளும் சிலர் நீச்சல் குளத்திலோ அல்லது அலைகள் இல்லாத கடற்கரையோரங்களின் ஆழம் குறைந்த இடங்களிலோ பழகிக்கொள்கிறார்கள். சிலர் குளிக்கும் தொட்டி ஒன்றிலும்கூட பழகிக்கொள்கின்றனர்.
தேவைப்படும் சாதனங்கள்
ஸ்னார்க்களிங்குக்குத் தேவைப்படும் சாதனங்கள் ஒப்பிடுகையில் எளிமையானவையும் விலை குறைந்தவையுமாக இருக்கின்றன: ஒரு முகமூடி, இரண்டு முக்குளிப்பு துடுப்புகள், மற்றும் ஸ்னார்க்கள்தானேயும் ஆகும். குளிர்காலத்தில் அல்லது சாதாரணமாக நீந்தமுடியாதளவு குளிராக இருக்கும் தண்ணீரில் ஸ்னார்க்களிங் செய்ய திட்டமிடுகிறீர்களானால், அதற்கேற்ற விசேஷ உடை (wet suit) உங்களுக்கு ஒருவேளை தேவைப்படலாம். ஆகவே இது செலவை கணிசமாக அதிகரிக்கும். தொடங்குவதற்குத் தேவையாக இருக்கும் அடிப்படையான மூன்று சாதனங்களை மட்டும் நாம் சிந்திக்கலாம்.
முகமூடி நன்கு பொருந்துவதாயும், தண்ணீர் புகாததாயும், போட்டுக்கொள்வதற்கு சுகமாயும் இருக்கவேண்டும். முகமூடிக்கு வெளியில் இருந்தே மூக்கைக் கிள்ளிப் பிடித்துவிட்டுக் கொள்வதற்கு வசதியாக இருக்கும் ஒரு சமன்படுத்தியும் (equalizer), அதாவது, வரிசையான உட்குழிவுகளும் அதில் இருக்கவேண்டும். இதற்கான காரணம் பிற்பாடு விளக்கப்படும். முகமூடி அதிக காட்சி எல்லையை உடையதாகவும், குறைந்த கன அளவைக் கொண்டதாகவும், அதாவது உள்ளேயுள்ள காற்றின் அளவைக் குறைக்கும்படி கண்ணாடி உங்கள் முகத்திற்கு அருகாமையிலும் இருக்கவேண்டும். போட்டுக்கொள்வதற்கு மிகவும் சுகமாக இருக்கும் முகமூடிகள் சிலிக்கோனிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கிட்டப்பார்வை உள்ளவர்களுடைய பார்வைக்கு ஏற்றாற்போல் சரிசெய்யப்பட்ட முகமூடிகளும்கூட இப்பொழுது கிடைக்கின்றன.
அடுத்ததாக இருப்பது துடுப்புகள், ஒவ்வொரு காலுக்கும் ஒன்று. அவை வேகமாக நீந்துவதற்காக கால்களில் அணிந்துகொள்ளும், வழக்கமாக ரப்பரால் செய்யப்பட்டிருக்கும் paddle-களைப் போன்ற கருவிகளாகும். தெரிந்தெடுப்பதற்கு இவற்றில் இரண்டு வகையுண்டு: பாதம் முழுவதையும் மூடும் வகை மற்றும் குதிங்கால் பகுதி திறந்திருக்கும் வகை, ஆழமான பகுதியைச் சென்றடைய, அலசிகள் (barnacles) நிறைந்த பாறைகளினூடே அல்லது ஆழமற்ற பகுதிகளில் உள்ள பவளப் பாறைகளினூடே (coral beds) நடந்து செல்வதற்கு காலணிகள் தேவைப்படுமானால், குதிங்கால் பகுதி திறந்திருக்கும் வகை தேவைப்படுகிறது. இது உங்கள் துடுப்புகளை உங்கள் காலணிகளுக்கு மேல் சுலபமாக போட்டுக்கொண்டு ஸ்னார்க்களிங் செய்யத் தொடங்குவதற்கு வசதியாக இருக்கிறது. பாதம் முழுவதையும் மூடும் வகையானது உங்கள் கால்களில் நேரடியாக பொருந்துகிறது. துடுப்புகளோடு சேர்த்து வேறு காலணிகள் அணியத் தேவையில்லை என்றால் மட்டுமே இதைப் பயன்படுத்தமுடியும்.
கடைசியாக ஸ்னார்க்கள். முக்கியமாக புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு, எளிய J-வடிவ ஸ்னார்க்கள் மிகச் சிறந்ததாக இருக்கிறது. ஏனென்றால் சுலபமாக சுவாசிப்பதே மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. மிகவும் ஏற்றவகை ஸ்னார்க்களில் குறைந்தது 3/4 அங்குல விட்டமும் 12 முதல் 14 அங்குல நீளமும் உள்ள துளை இருக்கவேண்டும் என்று முக்குளிப்பின் பேரிலான ஒரு கையேடு ஆலோசனை கூறுகிறது.
ஸ்னார்க்களை உபயோகிக்க உதவும் ஆலோசனைகள்
ஏற்கெனவே விவரித்ததுபோல, தண்ணீர் மட்டத்தில் நீந்துகையில் தண்ணீருக்கு வெளியே தலையைத் தூக்காமலேயே சுவாசிக்க இது உதவுகிறது. தண்ணீர் மட்டத்திற்கு அடியில் முக்குளிப்பதைப்பற்றி என்ன? இதுவும் சாத்தியமே, ஆனால் முதலாவது நன்கு ஒரு பெருமூச்சு இழுத்துக்கொள்ள வேண்டும். சந்தேகமின்றி, நீர்மட்டத்திற்குக்கீழ் ஸ்னார்க்கள் செல்லும்போது அதனுள் தண்ணீர் புகுந்துவிடும். முக்குளிக்கும் ஒருவர் நீர்மட்டத்திற்கு மேலே வரும்போது பெரும்பாலும் அவரது ஸ்னார்க்களிலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதை நீங்கள் ஒருவேளை பார்த்திருக்கலாம். இது பீச்சுமுறையில் தண்ணீரை வெளியேற்றுதல் (blast method of clearing water) என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இம்முறை கற்றுக்கொள்வதற்கு சுலபம்தான், ஆனால் அதற்கு வேகமாக காற்றை ஊதவேண்டியிருக்கும். எனவே ஸ்னார்க்களை வெற்றிகரமாக நீங்கள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தால், உங்கள் நுரையீரல்களில் இன்னும் போதுமான காற்றை வைத்துக்கொண்டே நீர்மட்டத்திற்கு வரவேண்டும்.
இடப்பெயர்ச்சி முறை (displacement method) மேம்பட்டது என்பதாக சிலர் கருதுகின்றனர், ஆனால் இதற்கு அதிகம் பயிற்சி தேவையாயிருக்கிறது. இந்த முறை எவ்வாறு வேலை செய்கிறது? நீங்கள் முக்குளித்தப்பின் நீர்மட்டத்தை அணுகுகையில், தலையை நிமிர்த்தி நேராக பாருங்கள். உங்கள் ஸ்னார்க்களின் முனையானது சற்று கீழ்நோக்கி இருக்கவேண்டும். உங்கள் தலை இந்த நிலையில் இருக்கும்போது, உங்கள் ஸ்னார்க்களினுள் புகுந்திருக்கும் தண்ணீரை இடம்பெயரச் செய்ய கொஞ்சமாக காற்று ஊதினாலும் போதும். உங்கள் முகம் நீர்மட்டத்தைத் தொடும்வரைக்கும் தலையை இதே நிலையில் வைத்திருங்கள். அந்த நொடிப்பொழுதில் முகத்தைக் கீழே தாழ்த்தி, மேல்நோக்கி காற்றை வெளியேவிடுங்கள். ஸ்னார்க்களில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டபின் அதனுள் தண்ணீர் புகாமலேயே இருக்கும். ஆகவே எந்தவித முயற்சியுமின்றி உங்களால் மூச்சுவிடமுடிவதைக் காண்பீர்கள்.
நீங்கள் நீர்மட்டத்தில் இருந்துகொண்டிருக்கும்போதே கடந்து போகிற அலையால், அவ்வப்போது ஸ்னார்க்களில் தண்ணீர் புகுந்துவிட்டால் கலக்கமடைந்துவிடாதீர்கள். அவ்வாறு தண்ணீர் புகுமானால் வேகமாக காற்றை ஊதுங்கள், அப்போது ஸ்னார்க்களில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேறிவிடும்.
ஸ்னார்க்களிங்கை அனுபவித்து மகிழுங்கள்
நீர்மட்டத்தில் இருக்கும்போது, சீராக மூச்சுவிடவும்—உறுதியாக உள்ளிழுக்கவும், பின்னர் வேகமாக வெளிவிடவும் கற்றுக்கொள்ளுங்கள். இதனால் உண்டாகும் பிரயோஜனத்தை உங்களுடைய நுரையீரல்களில் உணருவீர்கள். ஸ்னார்க்களிங்கை சந்தோஷத்துடன் அனுபவிப்பதன் ரகசியமே, நீங்கள் எவ்வளவு தூரமாக நீந்துகிறீர்கள் அல்லது எவ்வளவு வேகமாக நீந்துகிறீர்கள் என்பதல்ல, ஆனால் நீந்திக்கொண்டே போகும்போது எவ்வளவு அதிகத்தைப் பார்த்து ஆராய்கிறீர்கள் என்பதிலேயே அடங்கியிருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீர்மட்டத்திற்குக் கீழே முக்குளிக்க நீங்கள் விரும்பும்போது, நன்கு ஓய்வெடுத்து முடிந்தளவு அதிகம் ஆக்ஸிஜனை மிச்சப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் நீருக்கடியில் அதிகநேரம் உங்களால் தங்கியிருக்க முடியும். ஆனால் நீருக்குள் தம் பிடிப்பதில் புதிய சாதனைகளைப் படைக்க முயற்சிக்காதீர்கள்!
நீங்கள் அப்படியே நீந்திச் செல்லுகையில், உங்களுடைய கைகள் உங்களுடைய பக்கவாட்டில் மிதக்கும்படி தளர்த்திவிடுங்கள். உங்களுடைய முழங்கால்களை சற்று வளைத்து வைத்துக்கொண்டு, உங்களுடைய துடுப்புகளை மட்டும் உபயோகித்து, நீண்ட, சீரான அசைவுகளை ஏற்படுத்துங்கள். தொடக்கத்தில் சிரமமேதுமின்றி சுமுகமாக இதைச் செய்ய முயற்சி தேவைப்படும், ஆனால் சிறிது காலத்திற்குப்பின் அது தானாகவே வந்துவிடும். முகமூடி பனித்துளிகளால் மறைக்கப்பட்டு பார்வை மங்கினால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? இதைத் தடுக்க சுலபமான ஒரு வழி என்னவென்றால், முகமூடியை போட்டுக்கொள்ளும் முன்பே சிறிது உமிழ்நீரைத் தொட்டு அதன் கண்ணாடிமேல் தடவுங்கள். ஓரிரு நொடிகள் கழித்து அந்த உமிழ்நீரை அலசிவிடுங்கள்; அப்போது கண்ணாடி நீண்ட நேரத்திற்குத் தெளிவாக இருப்பதைக் காண்பீர்கள்.
முக்குளிக்கும்போது சில சமயங்களில் உங்கள் நடுக்காதில் வலி ஏற்படுவதை உணரலாம். இது நடுக்காது அழுத்தம் என்றழைக்கப்படுகிறது. செவிப்பறையின் இருபுறங்களிலும் உள்ள அழுத்தத்தில் ஏற்படும் வித்தியாசத்தால் இது உண்டாக்கப்படுகிறது. சாதாரணமாகவே, நீருக்கடியில் மூன்று முதல் ஆறு அடி ஆழத்திற்கு இறங்கிய பிறகு தொடங்குகிறது. இதெல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து இந்த வலியை அசட்டை செய்துவிட்டு இன்னும் ஆழத்திற்கு போகாதீர்கள். ஆழமாக போகப்போக அது மோசமாகிக்கொண்டுதான் போகும்; செவிப்பறை கிழிந்தும்கூட போகலாம். வலி ஏற்படுவதற்கு முன்னமே ஒவ்வொரு மீட்டருக்கு அல்லது அதற்கும் குறைந்த ஆழத்திற்கு இறங்கியதும் அழுத்தத்தைச் சமன்படுத்திக் கொள்ளும்படி பேடி டைவர் மேனுவல் என்ற பத்திரிகை சிபாரிசு செய்கிறது. மூக்கைக் கிள்ளிப் பிடித்துக்கொண்டு மெதுவாக ஊதுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இதன் காரணமாகத்தான் முகமூடி போட்டுக்கொண்டிருக்கும்போதே மூக்கைக் கிள்ளிப் பிடித்துவிட்டுக் கொள்வதற்கு வசதியாக முகமூடியில் ஒரு சமன்படுத்தி இருக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க இந்த முறை மிக எளிதானதாக, அநேகமாக இயற்கையாக வரக்கூடியதாகவே ஆகிவிடுகிறது. எனினும் வலிமட்டும் ஏற்பட்டுவிட்டால், நீர்மட்டத்திற்கு மேல் வருவது மிகச் சிறந்ததாக இருக்கிறது. வலி ஏற்பட்ட பிறகு, சமன்படுத்த எவ்வளவுதான் தொடர்ந்து முயற்சித்தாலும் அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இருக்காது.
ஒரு வகை பொழுதுபோக்காக, ஸ்னார்க்களிங் நற்பயனளிக்கக்கூடியதாகவும், அறிவுபுகட்டுவதாகவும், கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. அநேகமாக எல்லா வயதினருக்குமே, உடற்பயிற்சி, சுத்தமான காற்று, சூரியவொளி ஆகிய மூன்றையும் சேர்த்துப் பெறுவதற்கான மிகச் சிறந்த ஒரு வழியாக இது இருக்கிறது. நீருக்கடியில் வாழும் கடல் உயிரினங்களில் குறைந்தபட்சம் ஒருசிலவற்றையாவது வெறுமனே அடையாளம் கண்டுபிடித்து, அவற்றின் பெயர்களைச் சொல்லக்கூடிய அளவுக்குத் தெரிந்து வைத்திருப்பதுதானே, விருப்பமுள்ளவர்களுக்கு ஸ்னார்க்களிங்கை ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒன்றாக்கும். இருந்தபோதிலும், பிஜியில் இப்போதுதான் ஸ்னார்க்களிங் செய்துவிட்டுத் திரும்பிய டோனியைப்போல், பெரும்பாலானோருக்கு “பிரம்மிக்கவைக்கும் வண்ணங்கள் நிறைந்த மற்றொரு உலகத்தில் இருப்பதுதானே,” ஸ்னார்க்களிங்கை பயனுள்ளதாகவும் மகிழத்தக்கதாகவும் ஆக்குகிறது. “நான் எங்கு இருந்தேன் என்றே மறந்துபோகுமளவுக்கு, என்னைச் சுற்றியிருந்த அழகினால் கிளர்ச்சியூட்டப்பட்டேன்!” என்று ஒப்புக்கொள்கிறார் அவருடைய தோழி லீனா.
ஸ்க்யூபா முக்குளிப்பைப் பற்றியென்ன?
நல்ல நீச்சல்காரர்களாக இருப்பவர்களுக்கும், ஆழ்கடலின் அதிசயங்களால் கவரப்படுகிறவர்களுக்கோ அல்லது ஒருவேளை நீருக்கடியில் புகைப்படம் எடுக்க விரும்புபவர்களுக்கோ, ஸ்க்யூபா முக்குளிப்பே அடுத்த படியாக இருக்கிறது. நீங்கள் நல்ல ஆரோக்கியம் உடையவராகவும், உங்கள் உபகரணங்களை நன்கு பராமரிப்பவராகவும், அடிப்படை விதிமுறைகளைக் கைக்கொள்கிறவராகவும் இருப்பீர்களேயானால், நீங்கள் நம்பிக்கையுடன் தண்ணீருக்குள் இறங்கலாம். இருந்தபோதிலும், முதலாவதாக முறையான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளாமல், தேவையானால், நன்கு மதிக்கப்படக்கூடிய பயிற்சியாளரிடம் லைசென்ஸ் பெறாமல் ஒருபோதும் ஸ்க்யூபா முக்குளிப்பிற்குப் போய்விடாதீர்கள். அப்படியே அவற்றைப் பெற்றிருந்தாலும்கூட, உங்களுடைய லைசென்ஸ் அனுமதிக்கும் ஆழ வரம்பிற்குக்கீழே நீங்கள் செல்லக்கூடாது. எப்போதும் ஒரு கூட்டாளியோடு சேர்ந்தே முக்குளியுங்கள். ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில், அப்படிப்பட்ட ஒரு பயிற்சியைத் தொடங்குமுன் முக்குளிப்பு சம்பந்தமான மருத்துவ சோதனை ஒன்றில் தேர்ச்சி பெறவேண்டும் என்று சட்டம் தேவைப்படுத்துகிறது.
ஸ்க்யூபா உபகரணங்கள் அதிக விலையுயர்ந்தவையாக இருக்கலாம். ஸ்னார்க்களிங்குக்கு உபயோகப்படுத்தப்படும்—முகமூடி, துடுப்புகள், ஸ்னார்க்கள் போன்ற—அடிப்படையான உபகரணங்களோடுகூட, ஒருவேளை வெப்பமாக இருக்கிற வெப்பமண்டல கடல்களைத் தவிர, நிச்சயமாக முக்குளிப்பிற்கான விசேஷ உடை ஒன்று தேவைப்படும். ஒரு மிதவைக் கட்டுப்பாட்டு (buoyancy-control) உபகரணம், எடைதாங்கும் பெல்ட் (weight belt) ஒன்று, ஒரு கத்தி, சுவாசிப்பதற்கு பயன்படும் உபகரணம் ஒன்று (உங்களுடைய கூட்டாளியின் உபகரணத்தில் காற்று சப்ளையில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமாயின் அதிகப்படியாக ஒன்றும்), ஒரு ஸ்க்யூபா கலனொன்றும் உங்களுக்குத் தேவைப்படும். முக்குளிப்புக் கடிகாரம், ஆழமானி, எவ்வளவு காற்று உங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, உங்களுடைய கலத்திற்கு நீரில் மூழ்கக்கூடிய ஒரு அழுத்தமானி போன்ற அத்தியாவசிய கருவிகளும் உங்கள் கைவசம் இருக்கவேண்டும். பிரபலமான அநேக முக்குளிப்புப் பகுதிகளில் இக்கருவிகள் வாடகைக்குத் தயாராகக் கிடைக்கும். நீங்கள் அடிக்கடி முக்குளிக்கப் போவதில்லையென்றால், சொந்தமாக விலைகொடுத்து வாங்குவதைவிட வாடகைக்கு எடுப்பதே பெரும்பாலும் சிக்கனமானதாக இருந்திருக்கிறது.
பெருங்கடலையும் அதன் உயிரினங்களையும் மதித்தல்
“சூரியவொளி வீசும் க்வீன்ஸ்லாந்து கடற்கரையில் அமைந்திருக்கும் கெலயுன்ராவின் அருகேயுள்ள ஒரு பாறையில் சுமார் ஆறடி தூரத்தில் திரியும் வண்ணமிகு வண்ணத்துப்பூச்சி மீனைக் கவனித்துக்கொண்டே நான் ஸ்னார்க்களிங் செய்துகொண்டிருந்தேன்,” என்று விவரிக்கிறார் ஸ்னார்க்களிங் ஆர்வலர் பீட்டர். “பின்னர் திடீரென்று மினுங்கும் ஈட்டியொன்று காட்சியில் தோன்றி கடுமையாக முட்டி நின்றது. அந்தச் சிறிய மீன் வீணாக போராடியது—அதன் செவுள்களினூடே ஒரு பாறைக்கு எதிராக ஊடுருவக் குத்தப்பட்டது. அதற்குக் காரணமாயிருந்த பையன், வெறுமனே குறிவைத்துப் பழகுவதற்காக அந்த அழகிய மீனைக் கொன்றதாக ஒப்புக்கொண்டான்! அது மிகச் சிறியதாகையால் சாப்பிட உதவாது.” வருந்தத்தக்க வகையில், இப்படிப்பட்ட கரிசனையற்ற செயல்கள் உலகம் முழுவதிலும் அதிகமதிகம் செய்யப்பட்டு வருகின்றன.
தூய்மைக்கேடும்கூட அதன் முத்திரையைப் பதித்திருக்கிறது. அதிகம் விரும்பிப் போகும் இடங்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளாலும், குளிர்பான டப்பாக்களாலும் நிரப்பப்பட்டு, குப்பைத் தொட்டிகளைப்போல் காட்சியளிக்கின்றன. சில நாடுகளில் அழிக்கும் தன்மையையுடைய ரசாயனப் பொருட்கள் கலப்பதும் அதிகரிக்கும் பிரச்சினையாக இருக்கிறது. இப்படி கழிவுகளும் குப்பைக்கூளங்களும் அதிகரிக்க அதிகரிக்க, மீன்கள் வேறெங்கோ இடம்பெயர்ந்து செல்கின்றன, பவளம் மாண்டுபோகிறது.
ஸ்க்யூபா முக்குளிக்கும்போது எப்போதுமே ஒரு கையுறை அணிவது நல்ல பழக்கமாக இருக்கிறது. அப்படியே அணிந்திருந்தாலும் எதைத் தொடுகிறீர்கள் என்பதைப்பற்றி எச்சரிப்பாக இருப்பது நன்மை பயக்குகிறது. உதாரணமாக, எந்தப் பருவத்திலும் காணப்படும் கடல் ஊமத்தையின், விளையாட்டு ஊசிகளைப்போல் நீட்டிக்கொண்டிருக்கும் முட்கள் பாதுகாக்கப்படாத கைகளைக் குத்தித் துளைத்துவிடுகின்றன. பகட்டான வண்ணத்துப்பூச்சி காட் மீன், சிறியதாக இருந்தாலும், தனது சிகப்பும் வெள்ளையுமான வரிகளைக் காட்டிக்கொண்டு, ஜம்பமாக நீந்திச் செல்கையில் ‘ம்ம். நெருங்காதே. இது என்னுடைய எல்லை!’ என்று எச்சரிப்பதைப் போன்று தோன்றுகிறது. அதன் ஓரக் குஞ்சங்களில் விஷமுள்ள பசையால் மூடப்பட்டிருக்கும் நீண்ட முட்கள் மறைந்திருக்கின்றன. அவற்றிற்கெதிராக உரசிச் செல்வதுதானே வேதனை தருவதாக இருக்கலாம்.
மற்ற உயிரினங்கள் கண்களை ஏமாற்றுகின்றன. உதாரணமாக, கடற்பாசிகளைப் போல் தோற்றமளிக்கும் கடல் ராட்சச மீன் ஒளிந்துகொள்வதில் புத்திசாலியாகும். முக்குளிக்கும் எவருடைய கண்களின் உன்னிப்பான பார்வைக்கும் டிமிக்கிக் கொடுத்துவிட்டு, தாவரத்தின் ஒரு துண்டைப்போல் காட்சியளிக்கிறது. இதற்கு மாறாக, எழில்மிக்க, ஜொலிக்கும் வர்ணங்களைக்கொண்ட நியூடிப்ராங்க்ஸ் என்றவொரு கடல் அட்டை அப்படியே உங்கள் கவனத்தைக் கவர்ந்துவிடுகிறது. இது என்ன எச்சில் ஊறவைக்கும் பதார்த்தமா? இல்லவேயில்லை என்று அதைத் தின்னப்போகும் விலங்கு விரைவில் தெரிந்துகொள்ளும். ஏனென்றால் அதற்கு பாதுகாப்பாக, அருவருப்பான சில ரசாயனப்பொருட்கள் அதில் அடங்கியிருக்கிறது.
பலனளிக்கும் அநேக காட்சிகள்
ஸ்னார்க்களிங் செய்வோருக்கும் ஸ்க்யூபா முக்குளிப்போருக்கும் சரிசமமாக, பெருங்கடல் உண்மையிலேயே ஏராளமான உயிரினங்களால் நிறைந்திருக்கிறது. கரையிலிருந்து துடுப்புகளால் மெதுவான ஒருசில வீச்சுகளின் தூரத்திலேயே காணப்படும் பவளப்பாறைகள் எண்ணற்ற படைப்புகளின் மற்றும் வர்ணங்களின் ஓவியக்காட்சியாகத் திகழ்கின்றன. “அனைத்து வடிவங்களிலும் அளவுகளிலும் உள்ள, வர்ணஜாலம் நிறைந்த மீன்களால் சூழப்பட்டிருப்பதன், சில உங்கள் கையிலிருந்து தீனி தின்பதன் கிளர்ச்சி ஈடிணையற்றது. அது நெஞ்சத்தை நெகிழ்விக்கும் ஒரு அனுபவமாக இருக்கிறது,” என்றார் முக்குளிக்கும் ஒருவர். அவர் மேலும் கூறியதாவது: “அவற்றின் மத்தியில் ஒருவராக, அநேகமாக புவியீர்ப்பு சக்தியால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாதவாறு தொங்கிக்கொண்டிருப்பது, நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறது.”
எனவே, ஸ்னார்க்களிங் செய்யவோ ஸ்க்யூபா முக்குளிக்கவோ உங்களுக்கு எப்பொழுதாவது வாய்ப்பு கிடைக்குமானால், முக்குளிப்பதில் அனுபவசாலிகளாக இருப்பவர்கள் சிபாரிசு செய்யும் எளிய முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொண்டால் மிகவும் பத்திரமாகவே இருப்பீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அலைகளுக்கு அடியிலுள்ள உலகின் அழகை ஆராய்ந்து பார்க்கும் வளமூட்டும் இந்த அனுபவத்தை ஒருவேளை நீங்களும் ஒருநாள் அனுபவித்து மகிழலாம்.
[அடிக்குறிப்புகள்]
a “தன்னிறைவு பெற்ற நீரடி மூச்சு சாதனம்” (self-contained underwater breathing apparatus) என்ற ஆங்கிலப் பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயரே “ஸ்க்யூபா” (SCUBA) என்பதாகும். ஸ்க்யூபா முக்குளிப்பவர்கள் இருப்பதை எச்சரிக்கப் பயன்படுத்தும் தற்போதைய சர்வதேச கொடி வெள்ளை-நீல ஆல்ஃபா கொடியாகும். சில நாடுகள், மேலே காட்டப்பட்டுள்ளதுபோல, வெள்ளை வரிகளைக் கொண்ட சிவப்புநிற கொடிகளை இன்னும் உபயோகிக்கின்றன.
[பக்கம் 16-ன் படம்]
வண்ணத்துப்பூச்சி காட்
[பக்கம் 17-ன் படம்]
ஃப்ளெமிங்கோ டங்
[பக்கம் 17-ன் படம்]
ப்ளூ டேங்
[பக்கம் 17-ன் படம்]
பவளத்தின் மீது நியூடிப்ராங்க்ஸ்
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
By courtesy of Australian International Public Affairs