பவழம்—அபாயத்திலும் மாண்டுகொண்டும்
வெப்ப மண்டலத்தில்தானே பெருங்கடல் மிகமிகத் தெளிவாய் இருக்கிறது. படிகத்தைப் போன்ற தெளிவு. நீலநிறப் படிகம். 15 மீட்டருக்குக் கீழே உள்ள அவ் வெண்ணிற மணற்பாங்கான அடித்தளம் நீங்கள் தொட்டுவிடும் அளவுக்கு மிக அருகில் இருப்பதுபோல் தோன்றுகிறது! நீச்சல் ஷூக்களையும் முகமூடியையும் போட்டுக்கொள்ளுங்கள். வெதுவெதுப்பான நீரில் நீங்கள் மெதுவாக வழுக்கிச் செல்கையில், உங்கள் ஸ்னார்க்களை சரிசெய்துகொள்ளுங்கள், அக் காட்சியை நீர்க்குமிழிகள் ஒருகணம் மறைக்கின்றன. பிறகு கீழே பாருங்கள். அதோ! சிவப்பும் நீலமும் கலந்த பெரிய கிளி மீன், பவழத்தைக் கடித்துக்கொண்டும், மணற்பாங்கான அடித்தளத்தின் ஒரு பாகமாய் ஆகின்ற அவற்றின் சிறுதுண்டுகளைத் துப்பிக்கொண்டும் இருப்பதைப் பாருங்கள். திடீரென, வெப்ப மண்டல மீனொன்றின் வெள்ளிநிற வானவில்—சிவப்பு, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, ஊதா—பளிச்சிடுகிறது. எங்குப்பார்த்தாலும் உயிரிகளும் அவற்றின் சலனங்களும் இருக்கின்றன. அவை உங்கள் புலன்களைத் திணறடிக்கின்றன.
இதுவே பவழக் காடு. அது, கீழுள்ள மணற்பாங்கான அடித்தளத்திலிருந்து வளர்ந்து, ஆயிரக்கணக்கான உயிருள்ள கைகளைப் போன்ற ஓர் அமைப்பைப் பெறுகிறது. சற்று முன்னே, ஆறு மீட்டருக்கு மேலான உயரமும், சுமார் அதே அகலமுமுடைய எல்க்மான் கொம்பு பவழம் சிறப்பாகக் காட்சியளிக்கிறது. சுமார் 23 மீட்டருக்கப்பால், எல்க்மான் கொம்பு பவழத்தைவிட சிறிதான கலைமான் கொம்பு பவழம் இருக்கிறது; அவற்றின் ஒல்லியான கிளைகள் ஒரு காடுபோல் அப்பகுதியை நிரப்புகின்றன. இப் பவழங்கள் எவ்வளவு பொருத்தமாய்ப் பெயரிடப்பட்டுள்ளன—நடைமுறையில் பார்க்கப்போனால், அவை விலங்குகளின் கொம்புகளைப் போலவே தோற்றமளிக்கின்றன! மீனும் பிற கடல் உயிரிகளும் உணவையும் உறைவிடத்தையும் பெற அவற்றின் கிளைகளைத் தேடிச்செல்கின்றன.
தாவரங்களால் ஆனதாய் முன்பு கருதப்பட்ட பவழம், போலிப்கள் என்றழைக்கப்படும் விலங்குகளின் சமுதாயங்களால் உண்டாக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் அமைப்பாக இப்போது அறியப்பட்டுள்ளன. பெரும்பாலான போலிப்கள், 2.5 சென்டிமீட்டர் விட்டத்தைவிடக் குறைவாக, சிறியவையாய் இருக்கின்றன. அம் மெல்லுடல் பவழ போலிப், பிசினால் மூடப்பட்ட திசுவைக்கொண்டு தனக்கு அருகிலுள்ளதோடு ஒட்டிக்கொள்கிறது. பகல் நேரத்தில் பவழம் கல்லைப்போன்று காணப்படுகிறது, ஏனெனில் போலிப்கள் எலும்புக்கூட்டிற்குள் தங்களை இழுத்துக்கொள்கின்றன. ஆனால் இரவில், அவற்றின் நீட்டப்பட்ட உணரிழை மெதுவாக அசைகையில், அவை மாற்றப்படுகின்றன, அப்போது அப் பாறை மிருதுவான, குஞ்சம்போன்ற தோற்றத்திலிருக்கிறது. கடல்நீரிலிருந்து பெறப்பட்ட கால்சியம் கார்பனேட்டால் ஒன்றாக ஒட்டவைக்கப்பட்ட அவற்றின் எலும்புக்கூட்டுச் சேர்க்கையே போலிப்கள் வசிக்கும் கல்போன்ற அந்த “மரம்” ஆகும்.
அந்தந்த பவழ சமுதாயம் அதற்கென்றே தனித்தன்மையுள்ள எலும்புக்கூட்டின் வடிவத்தை அமைக்கிறது. உலக முழுவதிலும், ஆச்சரியமான வடிவங்களிலும், அளவுகளிலும், நிறங்களிலுமுள்ள, 350-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பவழ வகைகள் உள்ளன. அவற்றின் பொதுப்பெயர்கள் நிலத்திலுள்ள பொருட்களை—மரம், தூண், மேஜை, அல்லது குடை பவழம் போன்ற பொருட்களை—அல்லது, கார்னேஷன் (carnation), கீரைவகை (lettuce), ஸ்ட்ராபெர்ரி, காளான் பவழம் போன்ற தாவரங்களை உங்களுக்கு நினைப்பூட்டும். மூளை வடிவிலுள்ள அப் பெரிய பவழத்தைப் பார்த்தீர்களா? அது ஏன் அவ்வாறு பெயர் பெற்றது என்பதைக் காண்பது எளிது!
நீருக்கடியிலுள்ள இக் காடு, நுண்ணோக்கியில் மட்டுமே காணக்கூடிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் முதல், திருக்கைகள், சுறாக்கள், பெரிய மரி விலாங்குகள், கடலாமைகள் வரையான உயிர்களால் நிறைந்திருக்கிறது. மேலும் இங்கே நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிராத மீன்களும் உள்ளன—அடர் மஞ்சள் நிற கோமாளிமீன், ஊதா நிற பியூ கிரிகரீஸ், கறுப்பு வெள்ளை நிற மூரிஷ் ஐடல்ஸ், ஆரஞ்சு நிற டிரம்ப்பட் மீன், அடர் நீலநிற சர்ஜன் மீன், கருநீல நிற ஹேம்லெட்ஸ், அல்லது காவி மற்றும் பழுப்பு நிற சிங்க மீன் ஆகியவை. பார்பர்ஷாப் ஷிரிம்ப், வண்ணம் தீட்டப்பட்டதுபோன்ற லாப்ஸ்டர்ஸ், அல்லது சிவப்பு நிற ஹாக் மீனைப் பற்றியென்ன? எல்லா நிறங்களிலும், எல்லா அளவுகளிலும், எல்லா வடிவங்களிலும் உள்ளன. சில அழகியவை, சில விநோதமானவை—ஆனால் எல்லாமே அக்கறைக்குரியவை. பாருங்கள், அங்கே ஒரு கடல் சிலந்தி அந்தத் தூண் பவழத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது! அது ஓர் இரட்டையோட்டுச் சிப்பியைத் திறந்து தின்றுகொண்டிருக்கிறது. நிலத்திலுள்ள காட்டில் இருப்பதைப் போலவே, ஒரு பிரமாண்டமான அளவில் பல்வகை உயிரிகள் இக் கடல் உலகின் சுற்றுச்சூழலிலும் பின்னிப்பிணைந்துள்ளன; அவையனைத்தும் அதன் பல்வகைமையைச் சார்ந்துள்ளன. பவழத்தின் இனப்பெருக்கச் சுழற்சியும், புது பவழப் பாறை சமுதாயங்களைக் கட்டுவதற்கென்று பெருங்கடல் நீரோட்டங்களின்மீது பயணம் செய்யும் அவற்றின் திறமும் ஜூன் 8, 1991, (ஆங்கில) விழித்தெழு!-வில் விவரிக்கப்பட்டுள்ளன.
பவழப் பாறைகள் பூமியிலேயே மிகப் பெரிய உயிரியல் அமைப்பை உருவாக்குகின்றன. இவற்றுள் ஒன்று, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரைக்கு அப்பால் 2,010 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டும், இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் சேர்த்துள்ள அளவான ஒரு பரப்பளவையும் கொண்ட கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) ஆகும். ஒரு பவழத்தின் எடை, பல டன்களாக இருக்கலாம்; பெருங்கடலின் தரையிலிருந்து ஒன்பது மீட்டருக்கும் மேல் வளரலாம். ஆழமற்ற வெப்ப மண்டலம் சார்ந்த எல்லா நீர்களிலும் 60 மீட்டர் ஆழத்திலும் பவழப் பாறைகள் வளருகின்றன; இடத்துக்கு இடம் மாறுபடும் தன்மைகளை அவை பெற்றிருப்பதால், பவழத்தின் ஒரு துண்டைப் பரிசோதிப்பதன் மூலம், அது வளர்ந்த பெருங்கடலையும், இடத்தையும்கூட நிபுணர்கள் கூற முடியும். பவழப் பாறையின் வளர்ச்சிக்குத் தேவையான சுற்றுச்சூழலுக்கு, நீரிலுள்ள குறைந்த ஊட்டச்சத்துகள் போதுமானவையாய் இருப்பதே, அவற்றுக்கு அருகாமையில் உள்ள பெருங்கடல் வழக்கத்துக்கு மாறாக தெளிவாய் இருப்பதற்குக் காரணமாய் உள்ளது. போலிப்களின் ஒளி ஊடுருவும் உடலில் வாழும் மஞ்சள் பழுப்பு நிறப் பாசிகளிலிருந்தும் (algae) (விஞ்ஞான ரீதியில் ஜூக்ஸான்தெல்லே என்று அழைக்கப்படுகிறது), போலிப்களின் உணரிழைகளால் பிடிக்கப்பட்ட நுண்ணுயிர்களிலிருந்தும் பவழத்துக்கு ஊட்டச்சத்து அளிக்கப்படுகிறது. முடிவில், ஆயிரக்கணக்கான கடல் சார்ந்த உயிரினங்களுக்கு வீடான ஒரு பவழப் பாறை உண்டாகிறது; மற்றபடி அவற்றிற்கு பெருங்கடல் உறைவிடமற்றதாகியிருக்கும்.
கடல் சார்ந்த சுற்றுச்சூழல் மண்டலங்கள் அனைத்திலும் உயிரியல் ரீதியில் மிகவும் பலனுள்ளவையாயும் பவழப் பாறைகள் இருக்கின்றன. யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் அதை இவ்வாறு விளக்கியது: “வெப்ப மண்டல மழைக் காடுகளுக்குச் சமமாக பவழப் பாறைகள் இருக்கின்றன: அலைபாயும் கடல் விசிறிகள் (sea fans), கடல் சாட்டைகள் (sea whips), இறகுபோன்ற க்ரினாய்டுகள் (crinoids), நியான் ஒளியைப்போன்ற நிறமுடைய மீன் (neon-hued fish), புரையுடலிகள், ஷிரிம்ப், லாப்ஸ்டர், நட்சத்திர மீன் ஆகிய உயிரிகள், மற்றும் அச்சந்தரத்தக்க சுறாக்கள், பிரமாண்டமான மரி விலாங்குகள் ஆகிய உயிரிகள் போன்ற அளவற்ற ஜீவஜந்துக்களால் நிறைந்துள்ளன. இவையனைத்தும் வாழிடத்துக்காக, தொடர்ந்து உருவாகும் பவழத்தையே சார்ந்துள்ளன.” மோதும் அலைகளுக்கும் கரையோரப் பகுதிக்கும் இடையே ஒரு தடையை அளிப்பதன் மூலமும், ஆயிரக்கணக்கான வெப்ப மண்டலத் தீவுகளுக்கு அஸ்திவாரமிடுவதன் மூலமும் பவழப் பாறைகள் நிலத்திலுள்ள உயிர்களை ஆதரிக்கவும் செய்கின்றன.
ஆரோக்கியமான பவழம், ஒளிபுகும் பவழ-போலிப் ஆதரவாளரில் வாழும் பாசிகளுடைய தன்மையின் அடிப்படையில் காவி, பச்சை, சிவப்பு, நீலம், அல்லது மஞ்சள் நிறமுடையது. அந்தப் பாசிபோன்ற நுண்ணுயிர்த் தாவரங்கள், ஊட்டச்சத்துக்காக, அவற்றின் விலங்குக் கூட்டுயிரிகளின் வழியாக ஒளிவீசும் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி, கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட, போலிப்களின் கழிவுப்பொருட்களை உறிஞ்சுகின்றன. அதன் பங்கில், ஒளிச்சேர்க்கையின் மூலமாக அப் பாசிகள், பவழத் திசுக்களுக்கு ஆக்ஸிஜனையும், உணவையும், ஆற்றலையும் அளிக்கின்றன. பாசிகளுடன் கொள்ளும் இக் கூட்டாண்மை, பவழம் வேகமாக வளரவும், ஊட்டச்சத்து குறைந்த வெப்ப மண்டல நீர்களில் உயிர்வாழவும் உதவுகின்றன. இரண்டும் தாவர மற்றும் விலங்கு உலகத்தை மிகச் சிறந்த வகையில் அனுபவிக்கின்றன. என்னே ஒரு கைதேர்ந்த, ஞானமான வடிவமைப்பு!
வெளிறிய உயிரற்ற எலும்புக்கூடுகள்
கீழே அதிகளவான நடவடிக்கை உள்ளது என்பதில் ஆச்சரியமில்லை! இதோ, அது என்ன? வெளிறிய உயிரற்ற எலும்புக்கூடுகள். கிளைகள் முறிந்து, துண்டுதுண்டாகின்றன. சில ஏற்கெனவே சிதைந்துவிட்டன. பவழக் காட்டின் இப் பகுதி மாண்டுவிட்டது, அல்லது மாண்டுவருகிறது. மீன்கள் இல்லை. ஷிரிம்ப் இல்லை. லாப்ஸ்டர் இல்லை. ஒன்றுமேயில்லை. அது நீருக்கடியிலுள்ள ஒரு பாலைவனம். நம்பமுடியாமல் நீங்கள் வெறித்துப் பார்க்கிறீர்கள். என்னே அதிர்ச்சி! உங்களது இயற்கையான எளிமையின் இன்பந்தரும் அனுபவம் அழிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நீங்கள் படகிற்கு வந்தபிறகும்கூட, தொல்லைதரும் கேள்விகள் நிலைத்திருக்கின்றன. இப் பாழான நிலைக்கு எது காரணமாய் இருந்திருக்கக்கூடும்? ஏதோ ஒரு விபத்தா? நோயா? இயற்கைக் காரணங்களா? உங்களுக்குப் பதில்கள் வேண்டும்.
கல்போன்ற பவழம் உரமானதாய்த் தோன்றினபோதிலும், அது மிகமிக மென்மையானது. மனிதர் தொடுவதுகூட சேதத்தை விளைவிக்கலாம்; ஆகவே ஞானமான முக்குளிப்போர் அதைக் கையாளுவதைத் தவிர்ப்பர், மேலும் கவனமாக படகோட்டுவோர் அதன்மீது நங்கூரமிடுவதைத் தவிர்ப்பர். பவழத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தும் பிற பொருட்கள், வேதியியல் தூய்மைக்கேடு, கொட்டப்பட்ட எண்ணெய்கள், கழிவுநீர், மரம் வெட்டுதல், பண்ணையிலிருந்து வரும் கழிவுகள், தூர்வாரியைப் பயன்படுத்துவது, வீழ்படிவுகள், உப்பில்லாத நீர் நுழைதல் ஆகியவை. படகின் அடிக்கட்டைகள் நேராக மோதுவது, அழியுமாறு சேதப்படுத்துகிறது. மேலுமாக, உச்சநிலையிலுள்ள வெப்பநிலை பவழத்தைச் சேதப்படுத்தி அழிக்கலாம். அழுத்தம் ஏற்படுகையில், பாசிகளை அடர்ந்த மேகமாகப் பவழம் வெளித்தள்ளுகிறது; அதை மீன் விரைவில் உண்ணுகிறது. அழுத்தநிலைகள் பல வாரங்களாக, மாதங்களாகத் தொடர்ந்திருந்தால், வெளிறுகிறது, பவழமும் மாளுகிறது. பவழம் மாளுகையில், பவழப் பாறையின் சுற்றுச்சூழல் அழிகிறது. உயிரிகள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பு பிரிக்கப்பட்டு மறைகிறது.
வெப்ப மண்டல பெருங்கடல்கள் அனைத்திலும் வெளிறுவது பரவலாய் ஆகிவருகிறது. அதன் விளைவாக, உலகளவிலான கடல் அறிவியல் சமுதாயம் எச்சரிப்புக்குள்ளாகிறது. பெரியளவில் வெளிறுகையில், சேதத்தைத் தடுக்கமுடிவதில்லை. வெளிறும் பவழ அளவும் அதைத் தொடர்ந்த அதன் அழிவும் சமீப ஆண்டுகளில் உலகின் வெப்ப மண்டல கடல்கள் முழுவதிலும் நேர்ந்துள்ளவற்றால் உலகின் கவனத்திற்கு வேதனையுடன் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, இடையிடையேயும் இட எல்லைக்குட்பட்டும் பவழம் வெளிறியிருக்கும் அதே சமயத்தில், தற்போதைய திடீர் அதிகரிப்புகள், தீவிரத்தன்மையில் இதுவரை கண்டிராத அளவுள்ளன, மேலும் அவற்றின் பரப்பெல்லை பூகோள அளவிலானவை. பவழப் பாறையின் சுற்றுச்சூழல்களுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையில், பூமி முழுவதிலுமுள்ள பெரும்பாலான உயிர்வாழ் பவழ இனங்களை ஏதோவொன்று தாக்கிவருகிறது.