மாளும் பவழப் பாறைகள்—மனிதர் காரணரா??
உலகில் உயிர்வாழும் பவழப் பாறைகளில் 5 முதல் 10 சதவீதம் வரையானவை மடிவதற்கு மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணராய் ஆகியிருக்கின்றனர் என்றும், அடுத்த 20 முதல் 40 வரையான ஆண்டுகளில் இன்னும் 60 சதவீதம் இழக்கப்படலாம் என்றும் பவழப் பாறைகளைப் பற்றி நடந்த 1992 சர்வதேச தொடர்பேச்சு அறிக்கை செய்தது. வெகு தொலைவிலிருக்கும் பகுதிகளிலுள்ள பவழப் பாறைகள் மட்டுமே ஓரளவு ஆரோக்கியமாய் இருப்பதாக ஆஸ்திரேலியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மரைன் சயன்ஸ்-ஐச் சேர்ந்த கிளைவ் விக்கின்ஸன் கூறுகிறார். சேதப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கொண்ட “பவழப் பாறைகள், ஆசியாவில் ஜப்பான், தைவான், பிலிப்பீன்ஸ், இந்தோனீஷியா, சிங்கப்பூர், இலங்கை, மற்றும் இந்தியாவையும்; ஆப்பிரிக்காவில் கென்யா, டான்ஜானியா, மொஸாம்பிக் மற்றும் மடகாஸ்கரையும்; அமெரிக்காக்களில் டொமினிகன் குடியரசு, ஹைதி, கியூபா, ஜமைகா, ட்ரினிடாட், டுபாகோ மற்றும் ஃப்ளாரிடாவையும் உள்ளடக்குகின்றன. சீரழிவுக்கான காரணங்கள் வேறுபடுகின்றன, ஆனால் கடற்கரையோரத்தில் மிகுந்துள்ள ஜனத்தொகையும், கடற்கரையோரத்தில் பலமான விரிவாக்கமுமே எல்லாவற்றாலும் பகிர்ந்துகொள்ளப்படும் காரணிகளாய் உள்ளன,” என்று யூஎஸ்ஏ டுடே செய்தித்தாள் கூறினது.
பவழப் பாறைகள், கடல்நீரில் பொதுவாக அவற்றின் இடத்தைப் பொறுத்து, 25 டிகிரி செல்ஸியஸுக்கும் 29 டிகிரி செல்ஸியஸுக்கும் இடையேயான வெப்பநிலைகளில் வாழ்கின்றன. ஆனால் ஆரோக்கியமான பவழத்திற்கு, வெப்பநிலையின் குறைந்த மட்டளவு, மாளும் வெப்பநிலைக்கு மிக அருகில் இருக்கிறது. கோடைகாலத்தின் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையைவிட ஒன்று அல்லது இரண்டு டிகிரி அதிகரிப்பு சாவுக்கேதுவானதாய் இருக்கலாம். இட எல்லைக்குட்பட்ட பவழ வெளிறுதலுக்கும், அதைத் தொடர்ந்த அழிவுக்கும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உலகளவிலுள்ள பொதுவான ஒரு காரணம், உலகளாவிய வெப்பமாய் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் பலர் சந்தேகிக்கின்றனர். “பவழம் வெளிறுதல் சம்பந்தமான 1987-ம் ஆண்டு அறிக்கைகளோடு சேர்ந்து உலகளாவிய வெப்பத்தைப் பற்றிய ஆழ்ந்த கவலையும் உள்ளது. ஆகவே, நிலக்கரிச் சுரங்கத்தில் கானரி பறவையாக பவழப் பாறைகள் விளங்குகின்றன என்பதாக சில விஞ்ஞானிகளும் பிற ஆய்வாளர்களும் முடிவெடுத்தபோது, அது ஆச்சரியமாயில்லை—இது உலகளவிலான சமுத்திர வெப்பநிலைகளில் அதிகரிப்புக்கு முதலாவதான அறிகுறியாக இருக்கிறது. எல்லைக்குட்பட்ட கடல் நீரின் அதிகரித்திருக்கும் வெப்பநிலைகள் வெளிறுதலுக்குக் காரணமாக இருப்பதாய்த் தோன்றியபோதிலும், இப்போதைக்கு, இவ் விளைவை உலகளாவிய வெப்பத்துடன் இணைப்பது முடிவானதாய் இருக்க முடியாது,” என்று இம் முடிவின்மீது சயன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை அறிக்கை செய்தது.
“அசாதாரணமாக வெப்பமடைந்துள்ள சமுத்திரங்கள், பவழம் வெளிறுவதில் சமீபத்திய அதிகரிப்புகளைத் தூண்டின என்னும் கொள்கையைக் கரிபியனைப் பற்றிய சமீப ஆய்வுகள் ஆதரித்திருக்கின்றன,” என்று யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் கூறினது. “ஐம்பது ஆண்டுகளில் இன்னும் கொஞ்சம் மழைக் காடுகளாவது மீந்திருக்கும்; ஆனால் இப்போது பவழப் பாறைகள் மடியும் விகிதத்தில், அவை அவ்வளவு நீண்ட காலத்திற்குள்ளே, எங்கும் காணப்படாமல் போய்விடும்,” என்று குளோபல் கோரல் ரீஃப் அலையன்ஸின் தலைவரான தாமஸ் ஜே. காரோ, பவழப் பாறைகளின் நிலையை அமேஸான் மழைக் காடுகளின் இழப்புடன் எதிர்மறையாக ஒப்பிட்டார்.
உலகளாவிய நாசம்—பல காரணங்கள்
மத்திப அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையோரம் நெடுக, 1983-ல், 95 சதவீதம் வரையான பவழம் மடிந்தது. அதே சமயத்தில் மத்திப மற்றும் மேற்கு பசிபிக்கில் அதைப் போன்ற, ஆனால் அதைவிடக் குறைந்த அழியும் தன்மையுடைய வெளிறுதல் நிகழ்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்பையும், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களைச் சேர்ந்த பகுதிகளையும் கடும் வெளிறுதல் தாக்கியது. தாய்லாந்து, இந்தோனீஷியா, கலாப்பகஸ் தீவுகளும் சேதம் அடைந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டன. அதன் பிறகு, பஹாமா, கொலம்பியா, ஜமைகா, பியூர்டோ ரிகோ ஆகிய இடங்களுக்கு அருகிலும், அதோடு, தென் டெக்ஸஸ், ஃப்ளாரிடா, அ.ஐ.மா. ஆகிய இடங்களுக்கு அருகிலும் அதிகளவு வெளிறுதல் நிகழ்ந்தது.
உலகளாவிய விதத்தில் பவழப் பாறைகளின் அழிவு வெளித்தோன்றியது. “ஒப்பிடுகையில் குறைந்த காலத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ள பவழப் பாறைகளின் சுற்றுச்சூழல் மண்டலங்களில், தற்போதுள்ள அளவு வெளிறுதல் நடைபெறுவது ஒருபோதும் காணப்படவில்லை. யுனிவர்சிட்டி ஆஃப் மியாமியில் ஓர் உயிரியலாளராய் பணிபுரியும் பீட்டர் கிளின், கிழக்கு பசிபிக்கில் கடுமையாக வெளிறிய 400 வயதுடைய பவழங்களை ஆய்வு செய்திருந்தபோது, கடந்த காலத்தில் அதையொத்த பேரழிவுகளின் அத்தாட்சி எதையும் காணவில்லை. 1980-களின்போது ஏற்பட்ட பொதுவான வெப்பம் பவழப் பாறைகளின்மீது ஒரு கடுமையான விளைவை ஏற்படுத்தியிருக்கலாம், மேலும் கண்ணாடி அறை விளைவு (greenhouse effect) இன்னும் மிகுந்த வெப்பநிலைகளுக்கு வழிநடத்தினால் பவழப் பாறைகளின் எதிர்காலத்தை முன்கூறலாம் என்று கடுமையாக வெளிறுவது குறித்துக் காட்டுகிறது. விசனகரமாக, உலகளாவிய வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு கிட்டத்தட்ட நிச்சயமாய் தொடர்ந்திருப்பதோடு, இன்னும் அதிகரிக்கும். மேலும், உலகளவிலான வெளிறும் சுழற்சிகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கும்” என்று நேச்சுரல் ஹிஸ்ட்ரி கூறினது.
“புற ஊதாக் கதிரியக்கத்தால் சேதமடையாமல் உயிர்வாழ் பிராணிகளைக் காக்கும் ஓஸோன் அடுக்கு மெல்லியதாவதும்கூட, பவழப் பாறைகளின் சமீபத்திய மறைவுக்கு ஓரளவு பொறுப்பேற்கலாம்” என்று கூறுவதன் மூலம் மற்றொரு காரணத்தை யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் குறிப்பிட்டது.
உலக ஜனத்தொகையில் பாதிக்கு மேலானோர் வாழும் கடற்கரையோரப் பகுதிகளில், மனிதர் பொறுப்பின்றி இருப்பது பவழப் பாறைகளைக் கடுமையாய் அழுத்தியிருக்கிறது. உலக பாதுகாப்பு சங்கம், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவற்றின் ஆய்விலிருந்து, 93 நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் பவழப் பாறைகளை மக்கள் சேதப்படுத்தியிருந்தனர், அல்லது அழித்திருந்தனர் என்று தெரியவந்தது. விரிவாக்கப் பகுதியினர் பலர், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நேரடியாக சமுத்திரத்தில் ஊற்றிவிடுவதன் மூலம், அதன் தூய்மையைக் கெடுக்கின்றனர்.
உப்புநீரிலும் வடிகட்டப்பட்ட கசடிலும் வளரும் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநில மரங்கள், மரத்துண்டுகளுக்காகவும் எரிபொருளுக்காகவும் வெட்டப்படுகின்றன. கட்டடப் பொருட்களுக்காக பவழப் பாறைகள் கீறப்பட்டு, வெட்டியெடுக்கப்படுகின்றன. இலங்கையிலும் இந்தியாவிலும், பவழப் பாறைகளின் முழு பகுதிகளும் சிமெண்ட்டாக அரைக்கப்பட்டுள்ளன. பெரிய மற்றும் சிறிய கப்பல்கள் நங்கூரத்தைப் பவழப் பாறைகளின்மீது போடுகின்றன, அல்லது அவற்றின்மீது படுமாறு செல்கின்றன; அப்போது அவற்றைச் சிறுசிறு கற்களாக உடைக்கின்றன.
ஃப்ளாரிடாவைச் சேர்ந்த ஜான் பெனகேம்ப் கோரல் ரீஃப் ஸ்டேட் பார்க்கில் என்ன நடக்கிறது என்பதை நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகை விளக்கியது: “அவர்களின் படகுகள், நீரையும் அதிலுள்ள யாவற்றையும் பெட்ரோலியப் பொருள்களாலும் கழிவுநீராலும் தூய்மைக்கேடாக்குகின்றன. திறமையின்றி ஓட்டுபவர்கள் பவழப் பாறைகளின்மீது மோதுகின்றனர். பிளாஸ்டிக் ஃபோம் கப்புகள், அலுமினிய டப்பாக்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், மைல்கணக்கான சிக்குவிழுந்த தூண்டில்கள் ஆகியவற்றைக் கடலில் சிதறவிடுகின்றனர். இக் குப்பை எங்கும் போகாது—அது, நடைமுறையில், அழிக்கமுடியாதது.”
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
By courtesy of Australian International Public Relations
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Bahamas Ministry of Tourism