நிலத்தடிக் கல்லறைகள்—அவை என்னவாக இருந்தன?
இத்தாலியிலுள்ள விழித்தெழு! நிருபர்
பண்டைய ரோமின் ஆழமான பகுதிகளில் மறைந்திருக்கும் இருண்ட பாதைகளில் நிலத்தடிக் கல்லறைகள் இருக்கின்றன. அவை உண்மையில் என்னவாக இருக்கின்றன? அவை ஏன் கட்டப்பட்டன?
அடிப்படையில், நிலத்தடிக் கல்லறைகள் என்பவை பாறைகளைக் குடைந்தெடுத்துக் கல்லறைகளாகப் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளாக இருக்கின்றன. நிச்சயமில்லாத அர்த்தத்தை (ஒருவேளை, “குடைவுகளில்” என்பதை) உடைய அந்த வார்த்தையாகிய “நிலத்தடிக் கல்லறைகள்” என்பது ரோமுக்கு அருகிலுள்ள அப்பியு பாதையிலுள்ள குறிப்பிட்ட ஒரு கல்லறைத் தோட்டத்தை விவரிக்கும் இடப்பெயராக இருந்தது என்று கருதப்படுகிறது. காலப்போக்கில், அது நிலத்திற்கடியிலுள்ள கல்லறைகள் அனைத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நிலத்தடிக் கல்லறைகள் இருக்கிறபோதிலும், ரோமில் உள்ளவையே சிறப்பாக அறியப்பட்டவையாயும் மிகப் பெரியவையாயும் இருக்கின்றன—அவை மொத்தமாக பல நூறு கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ரோமுக்கும் மற்ற மாகாணங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திய தண்டலாளர்களின் நெடுஞ்சாலைகளில், அந்தச் சரித்திரப்பூர்வமான நகர மையத்திற்கு வெளியே ஒருசில கிலோமீட்டர் தொலைவில் சுமார் 60 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
முதல் நூற்றாண்டின்போது, ரோம கிறிஸ்தவர்கள் தங்களுக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டங்களை வைத்திருக்கவில்லை, ஆனால் தங்களில் இறந்தவர்களைப் புறமதத்தினருக்குப் பக்கத்தில் புதைத்தார்கள் என்று தோன்றுகிறது. இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில், கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டினவர்கள் ஏற்கெனவே புறமத சிந்தையால் செல்வாக்குச் செலுத்தப்பட ஆரம்பித்திருக்கையில், மதமாறிய செல்வந்தர்கள் “கிறிஸ்தவ” கல்லறைத் தோட்டங்களுக்கு நிலம் கிடைக்கும்படி செய்தனர். நகரத்தைவிட்டு வெகு தூரம் செல்லாமல் இடப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்காகத் தோண்டுதல் தொடங்கியது.
நிலத்தடிக் கல்லறைகளின் வரலாறு
குன்றுகளின் பக்கவோரங்களில் அல்லது பயன்படுத்தாமல் விடப்பட்ட கற்சுரங்கங்களில் முதலில் தோண்டுதல்கள் செய்யப்பட்டிருக்கலாம். “பின்னர், சுமார் ஓர் ஆள் உயர அளவான பாதைவழியில் வேலை தொடங்கியது. அதற்கு வலது மற்றும் இடது பக்கங்களில் சுரங்கப்பாதைகள் தோண்டப்பட்டன; அவை முடிவடையும் போது முதல் பாதைக்கு இணையான மற்றொரு பாதை அமைக்கப்பட்டு அவற்றோடு இது பின்னர் இணைக்கப்படும் வகையில் இடப்பட்டது. இவ்வாறு ஆரம்பத்தில் எளியதும் பின்னர் போகபோக பெரிய மற்றும் அதிக சிக்கலானதுமான வலைப்பின்னல் வேலையமைப்பு உருவாக்கப்பட்டது,” என்பதாக லூட்விக் ஹெர்ட்லிங் மற்றும் எங்கில்பர்ட் கிர்ஸ்க்பாம் ஆகியோர் நிலத்தடிக் கல்லறைகள் பற்றிய தங்கள் புத்தகத்தில் விளக்குகின்றனர்.
மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது; இதற்குள்ளாக, கிறிஸ்தவம் என்ற பெயரில் இருந்த மதம், முழுமையாக புறமதப் போதனைகளாலும் பழக்கங்களாலும் கறைபடுத்தப்பட்டிருந்தது. பொ.ச. 313-ல் கான்ஸ்டன்டைனின் பெயரளவிலான மதமாற்றத்துடன், நிலத்தடிக் கல்லறைகள் ரோம சர்ச்சின் சொத்தாக ஆயின; முடிவில் சில பேரளவானவற்றைக் கொண்டிருந்தன. மொத்தத்தில், ரோம நிலத்தடிக் கல்லறைகள், கோடிக்கணக்கானவற்றை இல்லையென்றாலும் லட்சக்கணக்கான கல்லறைகளையாவது கொண்டிருந்திருக்கலாம்.
இந்தக் காலத்தின்போது கல்லறைத் தோட்டங்கள் அலங்கரிக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டன; அதிகரித்துவரும் விஜயம் செய்பவர்கள் வருவதற்கு ஏற்றவிதத்தில் புதிய படிக்கட்டுகள் கட்டப்பட்டன. போப்புகள் மற்றும் தியாகிகளுடையதாக எண்ணப்பட்ட கல்லறைகளின் புகழ் அந்த அளவுக்குப் பரவியிருந்த (குறிப்பாக வட ஐரோப்பாவில்), நிலத்தடிக் கல்லறைகள், அநேகர் கும்பலாக யாத்திரைகளை மேற்கொள்வதற்கான இடங்களாக ஆகிவிட்டன. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோம் கைப்பற்றப்பட்டதற்கும் அயல்நாட்டவரின் முதல் படையெடுப்புகளுக்கும் பின்னர், அந்த முழு பகுதியும் மிகவும் ஆபத்தானதாகிவிட்டது; நிலத்தடிக் கல்லறைகளைக் கல்லறைத் தோட்டங்களாகப் பயன்படுத்தியதும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
எட்டாம் நூற்றாண்டின்போது, படையெடுத்துவந்த சேனைகளால் மட்டுமல்லாமல், ஹெர்ட்லிங்கும் கிர்ஸ்க்பாமும் கூறுகிறபடி “ஆதரவளிக்கும் ரோம மத்தியஸ்தர்களாலும்” அந்தக் கல்லறைகள் கொள்ளையாடவும் சூறையாடவும்பட்டன; தங்கள் பிரதான கோயில்கள் மற்றும் குருமாடங்களின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக “இறந்தவர்களின் எலும்புகளுக்காக அதிக பேராசையுள்ளவர்களான ஜெர்மானிய மற்றும் ப்ராங்கிய குருமட முதல்வர்களுக்கு” புனித நினைவுச் சின்னங்களை அதிகளவில் இவர்கள் கொடுத்தனர். நிலத்தடிக் கல்லறைகளைத் திரும்ப நிலைநாட்டவோ பாதுகாக்கவோ முடியாதவராக போப் பால் I, மீந்திருக்கும் எலும்புகளின் பெரும்பாகத்தைப் பாதுகாப்பாக நகரச் சுவர்களுக்குள் கொண்டுசென்றார்; அங்கு, “புனித தியாகிகளின்” மீதி எலும்புகள் என்பதாக நம்பப்பட்டவற்றின் மீது பின்னர் பெரிய கோயில்கள் கட்டப்பட்டன. நிலத்தடிக் கல்லறைகள் தாமே கைவிடப்பட்டு மறக்கப்பட்டன.
அந்தப் பிரபலமான கல்லறைகளுக்கு விஜயம்செய்பவர்களை வழிகாட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஐந்திலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பண்டைய பயணிகள் வழிகாட்டுப் புத்தகங்கள், அறிஞர்களுக்கு மதிப்புள்ள குறிப்புகளை அளித்தன; அவர்கள் 17-வது நூற்றாண்டிலும் பின்னர் 19-வது நூற்றாண்டிலும், சேதமடைந்தும் மற்றும் தாவரங்களின் மத்தியிலும் மறைந்துகிடக்கும் கல்லறைகளைத் தேடவும், கண்டுபிடிக்கவும், ஆராயவும் தொடங்கினார்கள். அப்போதிலிருந்து, அதிகப்படியான ஆராய்ச்சியும் திரும்ப நிலைநாட்டலும் நடத்தப்பட்டு வருகிறது; இன்று உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும் இந்த இடங்கள் பலவற்றைச் சென்று பார்ப்பது சாத்தியமாக இருக்கிறது.
நிலத்தடிக் கல்லறை ஒன்றைச் சென்று பார்த்தல்
அப்போஸ்தலன் பவுல் ரோமுக்கு சிறைகொண்டு செல்லப்பட்டபோது பயணம் செய்த அப்பியு பாதையில் நாம் இருக்கிறோம். (அப்போஸ்தலர் 28:13-16) பண்டைய நகரச் சுவர்களைவிட்டு மூன்றே கிலோமீட்டர் வெளியே இருக்கிறபோதிலும்கூட, நாம் அதற்குள் நாட்டுப்புறப் பகுதியில் வந்துவிட்டு இருக்கிறோம்; முன்னொரு காலத்தில் அதிக போக்குவரத்துடையதாக இருந்த நெடுஞ்சாலையின் நினைவுச்சின்னங்கள் மற்றும் இடிபாடுகளின் மத்தியில் ஓங்கி வளர்ந்திருக்கும் ஊசியிலை மற்றும் சைப்ரஸ் மரங்களால் சூழப்பட்டிருக்கிறோம்.
நுழைவுச் சீட்டை வாங்கின பிறகு, சுமார் 12 மீட்டர் ஆழத்திற்கு ஒரு செங்குத்தான படிக்கட்டு வழியாக நாம் இறங்குகிறோம். இந்த நிலத்தடிக் கல்லறை ஐந்து வித்தியாசமான மட்டங்களில் அடுக்கியமைக்கப்பட்டிருப்பதாகவும், 30 மீட்டர் ஆழம் வரையாகச் செல்கிறதாகவும், அதற்குக்கீழ் தண்ணீர் காணப்பட்டதாகவும் வழிகாட்டுகிறவர் விவரிக்கிறார். உண்மையில், மெதுவானதும், ஊறி உட்புக இடந்தரும் இயல்புடையதுமான சாம்பல் செறிவுடைய எரிமலை பாறைகளால் ரோம் மிகுதியாக சூழப்பட்டிருக்கிறது; அதைத் தோண்டி எடுப்பது எளிதாக இருக்கிறது; ஆனால் அதேநேரத்தில் பலமானதாகவும் கெட்டியானதாகவும் இருக்கிறது.
ஒரு மீட்டர் அகலமும் சுமார் இரண்டரை மீட்டர் உயரமுமுள்ள இடுக்கமான இடைவழி ஒன்றில் நாம் நடந்துகொண்டிருக்கிறோம். கரும் பழுப்பு நிற சுவர்கள் சொரசொரப்பாகவும் ஈரமாகவும் இருக்கின்றன; இந்த நெருக்கமான சுரங்கப்பாதைகளைக் குடைந்தெடுத்த வேலையாட்களின் கடப்பாரைகளால் விடப்பட்ட அடையாளக்குறிகள் இன்னும் அந்தச் சுவர்களில் தெளிவாகக் காணப்படுகின்றன. இரு பக்கங்களிலுமுள்ள கல்லறைகள் நெடுங்காலமாகவே திறக்கப்பட்டு சூறையாடப்பட்டிருக்கின்றன; ஆனால், சில இன்னும் சிறிய எலும்பு துண்டுகளைக் கொண்டிருக்கின்றன. இருட்டினூடே நாம் சென்றுகொண்டிருக்கையில், ஆயிரக்கணக்கான கல்லறைகளால் சூழப்பட்டிருக்கிறோம் என்பதை உணருகிறோம்.
இறந்தவர்களைப் புதைப்பதற்கு மிகச் சிக்கனமான, நடைமுறையான வழி எதுவென்றால், சுவர்களில் ஒன்றன்மேல் ஒன்றாக நீள்சதுர வடிவில் மாடக்குழிகளைத் தோண்டிவைப்பதாகும். இந்தக் குழிகள் வழக்கமாக ஒரு உடலையும், ஆனால் சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்றையும் கொண்டிருந்தன. அவை செங்கற்கள், சலவைக்கல் துண்டுகள், அல்லது மண் ஓடுகளால் அடைக்கப்பட்டு, சுண்ணாம்புப் பூச்சால் பூசப்பட்டிருக்கின்றன. அநேக கல்லறைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் ஒன்றுமில்லை. வெளியே வைக்கப்பட்டுள்ள சிறிய பொருள்களால் அவை அடையாளங்காணப்படலாம்—புதிய சுண்ணாம்பில் ஒரு நாணயம் அல்லது ஒரு கடற்சிப்பி பதிக்கப்பட்டிருத்தல் அல்லது, பிரிஸ்கில்லாவின் நிலத்தடிக் கல்லறையில் காணப்படுவதுபோல் எலும்பால் செய்யப்பட்ட ஒரு சிறிய பொம்மை, குறுகிய காலத்திலேயே தங்கள் மகளை இழந்த துக்கத்தால் துயருற்றிருந்த பெற்றோரால் அது ஒருவேளை அங்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அநேக கல்லறைகள் சிறியவையாக, புதிதாகப் பிறந்த குழந்தைகளை வைப்பதற்குப் போதுமானவையாகவே இருக்கின்றன.
“நிலத்தடிக் கல்லறைகளின் வயதை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?” என்று கேட்கிறோம். “அதைப்பற்றி ஊகிப்பதற்கான அவசியம் ஏதுமில்லை,” என்று வழிகாட்டுகிறவர் பதிலளிக்கிறார். “இந்த அடையாளக்குறியைப் பார்க்கிறீர்கள் அல்லவா?” ஒரு மாடக்குழியை அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஓட்டில் முத்திரையிடப்பட்டுள்ள அடையாளக்குறியைப் பார்ப்பதற்காக குனிகிறோம். “அந்த ஓடு உண்டாக்கப்பட்டபோது அந்தச் செங்கல் முத்திரை அதில் பதிக்கப்பட்டது. இவற்றைச் செய்த தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை அரசு சொத்தாக இருந்தவை, அவை உற்பத்தி செய்த செங்கற்களிலும் ஓடுகளிலும், எந்த சுரங்கத்திலிருந்து மண் எடுக்கப்பட்டது, பட்டறை, முதலாள், அந்த வருடம் அதிகாரத்தில் இருந்த தண்டலாளர்கள் (உயர் ஆட்சி அதிகாரிகள்) ஆகியோரின் பெயர்கள் போன்றவற்றைக் குறிப்பிடும் தகவலைப் பதித்து வைத்திருந்தன. அந்தக் கல்லறைகளின் சரியான தேதியை நிர்ணயிப்பதற்கு இது மிக பயனுள்ள ஒரு அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையானது பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் மத்திபத்தை சேர்ந்ததாகவும் மிக சமீபத்தியது சுமார் பொ.ச. 400-ஐ சேர்ந்ததாகவும் இருக்கிறது.”
கருத்துக்கலவை
இந்த இடங்களைப் பயன்படுத்தியவர்களில் சிலர் பரிசுத்த வேத எழுத்துக்களைப் பற்றி ஓரளவு அறிவைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது; ஏனென்றால் பல கல்லறைகள் பைபிள் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. என்றபோதிலும், மரியாள் வழிபாடு அல்லது சிலுவையேற்றம் என்பதாக அழைக்கப்பட்டது போன்ற பிற்பாடு பொதுவானதாக ஆன “புனித” கலையின் மற்ற பொருள்களின் பேரிலான எதைப்பற்றிய குறிப்பும் அங்கு இல்லை.
பைபிளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத படங்களையும் நாம் காண்கிறோம். “அது உண்மைதான்,” என்று வழிகாட்டுகிறவர் ஒத்துக்கொள்கிறார். “இதிலும் மற்ற நிலத்தடிக் கல்லறைகளிலும் அநேக காட்சிகள் புறமத கலையிலிருந்து கடன்வாங்கப்பட்டிருக்கின்றன. கிரேக்க-ரோம அரை தெய்வமும் வீரனுமான ஆர்ஃபியஸைக் காணலாம்; இந்த வாழ்க்கையிலும் மறுவாழ்க்கையிலும் ஆத்துமா வகிக்கும் பாகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் க்யூபிட் மற்றும் சைக்கியைக் காணலாம்; மறுவாழ்வில் ஆனந்தப் பரவசத்தைக் குறிக்கும் நன்கு அறியப்பட்ட டையனீஷிய அடையாளமாகிய திராட்சச்செடி மற்றும் திராட்சைப் பழ அறுவடையையும் காணலாம். ஜெஸ்யூட் அறிஞர் ஆன்டானியோ ஃவேரூராவின்படி உருவமில்லாதவர்களை ஆளுருவப்படுத்தியிருப்பது முழுமையாக விக்கிரகக் கலையிலிருந்து எடுக்கப்பட்டது: தெய்வங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நான்கு பருவகாலங்கள்; சோளம் மற்றும் லில்லிகளின் கதிர்களால் சூடப்பட்ட வேனிற்காலம் போன்றவை.”
திரும்பத் திரும்ப காணப்படும் பொருள்கள் இவை: அழியாமையின் அடையாளமாகிய மயில், ஏனென்றால் அதன் மாம்சம் அழிக்கப்படமுடியாததாகக் கருதப்படுகிறது; அழியாமையை அடையாளப்படுத்தும் புராணக்கதையிலுள்ள ஃபீனிக்ஸ் பறவையும், ஏனென்றால் அது தீயில் எரிந்து மீண்டும் அதன் சாம்பலிலிருந்து எழுந்ததாகச் சொல்லப்படுகிறது; பறவைகள், பூக்கள், மற்றும் பழங்களால் சூழப்பட்டு, மறுவாழ்வில் விருந்தனுபவிக்கும் இறந்தவர்களின் ஆத்துமாக்கள். புறமத மற்றும் பைபிள் கருத்துக்களின் நிஜமான கலவை!
அதில் பொறிக்கப்பட்டுள்ள சில எழுத்துக்கள், இறந்தவர்கள் உயிர்த்தெழுதலுக்காகக் காத்துக்கொண்டு அயர்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை வெளிக்காட்டுவதாகத் தோன்றும் விசுவாசத்தை வெளிக்காட்டும் நெகிழவைக்கும் கூற்றுக்கள்: “ஆக்விலினா அமைதியாகத் தூங்குகிறாள்.” (யோவான் 11:11, 14) வேதப்பூர்வ போதனைகளுக்கு மாறாக, இறந்தவர்கள் உயிருடன் இருப்பவர்களுக்கு உதவமுடியும் அல்லது அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்ற கருத்தை, பொறிக்கப்பட்டுள்ள மற்ற எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன: “உன் கணவனையும் பிள்ளைகளையும் நினைவில் வைத்துக்கொள்”; “எங்களுக்காக ஜெபியுங்கள்”; “நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்”; “நான் சமாதானத்துடன் இருக்கிறேன்.”
ஆனால் வேதப்பூர்வ மற்றும் புறமத எண்ணத்தின் கலவை ஏன் இருக்கிறது? சரித்திராசிரியரான ஜே. ஸ்டீவன்ஸன் சொல்கிறார்: “தங்களுடைய புறமதப் பின்னணியிலிருந்து வரக்கூடிய கருத்துக்களால் சில கிறிஸ்தவர்களின் கிறிஸ்தவம் பாதிக்கப்பட்டிருந்தது.” தெளிவாகவே, ரோமிலிருந்த “விசுவாசிகள்,” இயேசுவின் உண்மையான சீஷர்களால் கடத்தப்பட்ட அறிவுக்கு இசைவாக இனிமேலும் செயல்பட்டுக்கொண்டில்லை.—ரோமர் 15:14.
சுற்றுலாவை நாம் தொடர்கையில், இறந்தவர்களுக்கு வேதப்பூர்வமற்ற பக்தி காண்பிப்பதன் பாதிப்பு மிகவும் தெளிவாகிறது. ஒரு தியாகி என்பதாகக் கருதப்பட்ட ஒருவருக்கு அருகில் புதைக்கப்படும்படி அநேகர் விரும்பினர்; பரலோக பேரின்பத்தில் தன்னுடைய ஸ்தானத்திலிருந்துகொண்டு, அதைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவருக்கு அதே பலன் கிடைக்கும்படியாக உதவுவதற்கு அந்தத் தியாகி பரிந்துபேச முடியும் என்ற கருத்துடன் அவ்வாறு விரும்பினர்.
நிலத்தடிக் கல்லறைகள் நகரத்திற்குக் கீழேயே இருப்பதாக அநேகர் எண்ணுகின்றனர், ஆனால் அது அவ்வாறு இல்லை. அவை யாவும் நகர மையத்திலிருந்து ஒருசில கிலோமீட்டர் வெளியே இருக்கின்றன. உண்மையில், நகரச் சுவர்களுக்கு உள்ளே புதைப்பதை ரோம சட்டம் தடை செய்தது. பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பன்னிரண்டு பலகைகளிலுள்ள சட்டம் இவ்வாறு குறிப்பிட்டது: Hominem mortuum in urbe ne sepelito neve urito (இறந்தவர்கள் நகரத்திற்குள் புதைக்கப்படவோ எரிக்கப்படவோ கூடாது).
வழிகாட்டுகிறவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்தக் கல்லறைத் தோட்டங்கள் அரச அதிகாரங்களால் நன்கு அறியப்பட்டதாகவே இருந்தன; எந்தளவுக்கு அறியப்பட்டிருந்தனவென்றால், பேரரசராகிய வாலேரியன் நடத்திய துன்புறுத்தலின்போது, கிறிஸ்தவர்கள் நிலத்தடிக் கல்லறைகளுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கையில், போப் சிக்ஸ்டஸ் II அங்கு காணப்பட்டபோது கொல்லப்பட்டார் (பொ.ச. 258).”
அந்தப் பாதையின் மற்றுமொரு மூலையைத் தாண்டி நோக்குகையில், பகலின் மங்கலான ஒளி அந்த நடைக்கூடத்தின் கடைசி பகுதியை ஒளியூட்டுவதைக் காண்கிறோம்; நம் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உணர்கிறோம். நமக்கு வழிகாட்டியவர், அக்கறையூட்டும் விஷயங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி கூறி, அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, மறுபடியும் மேலே வருவதற்கு மற்றொரு செங்குத்தான படிக்கட்டின் வழியாக ஏறுகையில், நாம் கண்டவற்றைக்குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
இவை உண்மைக் கிறிஸ்தவத்தின் இடிபாடுகளாக இருக்கக்கூடுமா? நிச்சயமாக இல்லை. இயேசுவாலும் அவருடைய சீஷர்களாலும் போதிக்கப்பட்ட கோட்பாடுகள், அப்போஸ்தலர்களின் மரணத்திற்குக் கொஞ்சகாலத்திற்குப்பின் கறைபடுத்தப்படும் என்பதாக வேத எழுத்துக்கள் தீர்க்கதரிசனமாக எடுத்துரைத்தன. (2 தெசலோனிக்கேயர் 2:3, 7) உண்மையில், இறந்தவர்களையும் தியாகிகளையும் பற்றிய நம்பிக்கைகளையும் அழியாத ஆத்துமாவைப்பற்றிய கருத்தையும்குறித்து நாம் கண்டிருக்கிற அத்தாட்சி, இயேசுவின் போதனைகளின் அடிப்படையிலான விசுவாசத்திற்குச் சான்றுபகரவில்லை; ஆனால் மாறாக, நம்முடைய பொது சகாப்தத்தின் இரண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டுகளில், விசுவாச துரோக ரோம கிறிஸ்தவர்களில் ஏற்கெனவே இருந்த பலமான புறமத செல்வாக்கிற்குச் சிறந்த சான்றாக இருக்கின்றன.
[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]
போப்களின் கல்லறைகளாக எண்ணப்பட்டவை, பலர் யாத்திரைகள் மேற்கொள்வதற்கான இடங்களாக ஆகிவிட்டன
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
ஒரு நிலத்தடிக் கல்லறைக்கு ஐந்து மட்டங்கள் இருக்கின்றன, நூறடி ஆழம் வரையாகச் செல்கிறது
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
முன்னறிவிக்கப்பட்டபடி பைபிள் சத்தியத்திலிருந்து விலகிச்சென்ற விசுவாச துரோகத்தின் செல்வாக்கை நிலத்தடிக் கல்லறைகள் காண்பிக்கின்றன
[பக்கம் 17-ன் படங்கள்]
வலது: ஒருசில பறவைகள் அழியாமையின் அடையாளங்களாகப் பயன்படுத்தப்பட்டன
[படத்திற்கான நன்றி]
Archivio PCAS
வலது ஓரத்தில்: ரோம நிலத்தடிக் கல்லறைகள் சிலவற்றின் சிக்கலான திட்டவரைபடம்
கீழ் வலதுபக்கம்: செங்கல் முத்திரை, கல்லறைகளின் தேதியைக் கணக்கிடுவதற்குப் பிரயோஜனமானவை
கீழே: போப்களின் நிலத்தடி அறைகள்
[படத்திற்கான நன்றி]
Soprintendenza Archeologica di Roma
Bottom: Crypt of the popes