பாரிஸின் பாதாள உலகம்
பிரான்ஸில் விழித்தெழு! நிருபர்
போன் நம்பரை சுழற்றினேன். மறு முனையிலிருந்து பதில் வரும்வரை, மனது திக்-திக் என்று அடித்துக்கொண்டது. “ஹலோ! ஹலோ! என்னுடைய கார் சாவி, சாக்கடையில் விழுந்துவிட்டது! தயவுசெய்து கொஞ்சம் சீக்கிரம் வாங்க!” சிறிது நேரத்திற்குள் துப்புரவு தொழிலாளர் படை வந்து இறங்கியது. அவர்களது பொன்னான பணி: சாக்கடை அடைப்புகளை நீக்கி, கழிவுநீர் வெளியேற வழிசெய்தல்; சாவி, மூக்குக்கண்ணாடி, மணிபர்ஸ் என எந்தப் பொருள் சாக்கடையில் விழுந்தாலும் எடுத்துக்கொடுப்பது. நம் வீட்டு செல்லப்பிராணிகள் விழுந்துவிட்டால்கூட மீட்டுக்கொடுப்பார்கள். பாரிஸில் 18,000 சாக்கடை திறப்புகளில் செல்லப்பிராணிகள் விழுந்து, மறைவது சர்வசகஜம். அவர்கள் என் சாவியை எடுத்துக்கொடுத்தார்கள். சாவி கிடைத்துவிட்டதில் எனக்கு ஏக சந்தோஷம். அவர்களுக்கு மனமார நன்றிசொன்னேன்.
அடுத்த நாள், ம்யூசே டி ஏகூ-வை (சாக்கடைகளின் அருங்காட்சியகத்தை) விசிட் செய்ய முடிவுசெய்தேன். இது ஸீன் ஆற்றின் இடது கரையில், ஈஃபில் டவருக்கு அருகில், சுற்றுலா பயணிகள் வரும் பிரபல படகுத்துறைக்கு எதிர்புறத்தில் அமைந்துள்ளது. சுமார் 130 வருடங்களாக, தன் பாதாள உலகை காட்சிப்பொருளாக காட்டுவதில் பாரிஸுக்கு ஏகப்பட்ட பெருமை. இப்படி பெருமையடித்துக்கொள்ள அந்த அருங்காட்சியகத்தில் என்னதான் இருக்கும் என்ற எண்ணம் மனதுக்குள் எட்டிப்பார்த்தது. ஆனால், இந்த அரிய மியூசியத்தை காண, ஆர்வ குறுகுறுப்போடு, 90,000-க்கும் அதிகமானோர் ஒவ்வொரு வருடமும் ஆஜராகிறார்கள் என்றதும் என் எண்ணம், மனம் என்னும் ஓட்டுக்குள் ஓடி ஒளிந்தது. 19-ம் நூற்றாண்டின் பிரபல பிரஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹகோ பாரிஸின் பாதாள சாக்கடைகளை “ராட்சத கடல் விலங்கின் குடல்கள்” என்று வர்ணித்தார். என்னோடு நீங்களும் டூர் வருகிறீர்களா?
திறந்திருக்கும் “குடல்களுக்குள்”
பாதாள மியூசியத்தில், ஐந்து மீட்டர் ஆழத்தில் இறங்கியதும், நான் கண்ட முதல் காட்சிப்பொருள்—பஞ்சு அடைக்கப்பட்ட எலி! பார்த்ததும் ஏதோ ஒருவித பயம் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது. அதை காட்டி, பாரிஸ் மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று எலிகள் என்ற கணக்கில் பாதாள சாக்கடைகளில் எலிகளின் கூட்டம் எக்கச்சக்கமாக வலம் வருவதாக சொன்னார்கள். கொடிய விஷத்தைக்கூட ‘கொண்டா’ என்று தின்றுவிட்டு திரியுமாம். இவற்றிற்கு நித்தம் ‘ராஜ’ உணவாம். இவை தினம் 100 டன் எடையுள்ள, அதாவது மொத்த கழிவுப்பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை விழுங்கி ஏப்பம் விடுமாம்.
கற்கள், ஆணிகள், சாவிகள், இன்னும் பிற கனமான பொருட்கள் கழிவுநீரிலும், மழை நீரிலும் அடித்துக்கொண்டு வரும்போது சாக்கடைகளில் அடைப்புகள் ஏற்படுகின்றன. தண்ணீர் சொட்டுகிற சத்தம் பின்னணி இசையாக காதில் விழ, 2,100 கிலோமீட்டர் நீளமுள்ள மகா ‘குடலிலிருந்து’ கழிவுநீரை அகற்றும் இயந்திரங்களை பார்வையிட்டேன். ஒவ்வொரு வருடமும் சுமார் 1,000 துப்புரவு தொழிலாளர்கள், 15,000 கனமீட்டர் கழிவுநீரை அகற்றுகிறார்கள். கும்மிருட்டாக இருக்கும் பாதாள சாக்கடைகளில் நாற்றமடிக்கும் கழிவுநீர் கொட்டிக்கொண்டிருக்கும். சுவர்கள் எல்லாம் வழுக்கும். திடீரென்று சாக்கடைகளில் கழிவுநீர் மட்டம் அதிகரித்துவிடும். அதனால் பாதாள சாக்கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாடு எப்போதும் பெரும் பாடு.
பாதாள சாக்கடைகளின் மேற்பரப்பில் (கூரைகளில்) பெரும் குழாய்களை பாம்புபோல் வளைந்து நெளிந்து சென்றன. அவற்றிற்குள் குடிநீர் குழாய்களும், போன் ஒயர்களும், போக்குவரத்து விளக்கு ஒயர்களும் செல்கின்றன.
ரோமர்கள் தொடங்கியது
பாரிஸில் முதன்முதலாக சாக்கடைக்கு வழிவகுத்த பெருமை ரோமர்களுக்கே சேரும். ரோமர்கள் வசித்த பகுதியில் வென்னீர் குளியலுக்கென்று இடங்கள் இருந்தன. இன்றும் இவை பாழடைந்த இடிபாடுகளுக்குள் உள்ளன. இந்த இடிபாடுகளில் சுமார் 18 மீட்டர் நீளத்திற்கு ரோமர்கள் அமைத்த சாக்கடையை இப்போதும் காணலாம். ரோம பேரரசு விழுந்ததும், சுகாதாரமும் வீழ்ந்தது. சுத்தம் சுகாதாரம் இன்றி பல நூற்றாண்டுகளுக்கு பாழாய் கிடந்தது பாரிஸ். கழிவுநீரை வெளியேற்ற வெறும் வடிகால்கள் அல்லது சாக்கடைகளே (தெருக்களின் மத்தியில் சென்ற சாக்கடைகளே) இருந்தன. துர்நாற்றமடிக்கும் அந்தச் சாக்கடைகள் தொற்றுநோய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக இருந்தன. 1131-ல் அரசன் ஆறாம் லூயிஸின் தலைச்சன் மகன் சாக்கடையில் விழுந்ததால், தொற்றுநோய் வந்து இறந்துபோனான்.
திறந்திருந்த சாக்கடைகள் குப்பைத்தொட்டிகளாயின. ஆகவே ஒருசில மூடிய சாக்கடைகளை அமைத்தார்கள். அவை அடிக்கடி அடைத்துக்கொண்டன. ஸீன் ஆற்றில் தண்ணீர் மட்டம் அதிகரிக்கும் போதெல்லாம், சாக்கடை நீர் வெளியே தெருக்களில் பாய்ந்து, நாற்றமெடுக்கும் கொழ-கொழ சேற்றையும், குப்பைக்கூளங்களையும் தெருக்களில் தேக்கிவிட்டு செல்லும். அந்தக் காலத்தில், பாரிஸில் சாக்கடை வசதிகள் குறைவு. 1636-ல், 4,15,000 மக்களுக்கு வெறும் 20 கிலோமீட்டர் நீளமுள்ள சாக்கடை மாத்திரம் இருந்தது. நூற்றி ஐம்பது வருடங்களுக்கு பிறகும் அவ்வளவாக முன்னேற்றம் அடையவில்லை. வெறும் மூன்று கிலோமீட்டர் நீளம் அதிகரிக்கப்பட்டது. நெப்போலியன் காலத்தில் சாக்கடை ‘குடல்கள்’ அஜீரணத்தால் பெரிதும் அவதிப்பட்டன.
19-ம் நூற்றாண்டில், எத்தனை சாக்கடைகள் உள்ளன, எங்கே உள்ளன, எந்த நிலையில் உள்ளன என்று ஆராய்ந்து, அவற்றை வரைபடங்களாக தீட்டினார்கள். அப்படி செய்தபோது, கிட்டத்தட்ட 200 சுரங்கப்பாதைகள் இருக்கும் உண்மை தெரியவந்தது. இவற்றில் பல, மக்களுக்கு தெரியாமலே இருந்தன. ஆனால், எத்தனையோ நூற்றாண்டுகளாக கேட்பாரற்று கிடந்த சுரங்கப்பாதைகளில் டன் கணக்கில் சேறும் சகதியும் இருக்குமே! அவற்றை வெளியே எடுப்பது எப்படி? அந்தச் சுரங்கங்களில் புதையல் இருக்கும் சேதி, பாரிஸ் நகரெங்கும் காட்டுத்தீபோல் பரவியது. புதையல் வெறியர்கள் வந்து குவிந்தார்கள். சேற்றை வாரி இறைத்து, காசுகளையும், நகைநட்டுகளையும், போர் கருவிகளையும் கண்டெடுத்தார்கள்.
சாக்கடையை சீரமைத்தல்
ஒருவழியாக சாக்கடைகள் சீரமைக்கப்பட்டன. நவீனமயமாக்கி, ஒவ்வொரு வீட்டுக்கும் இணைப்பு கொடுத்து, விரிவாக்கப்பட்டன. திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், அதை சமாளிக்கும் அளவுக்கு பெரிய பெரிய குழாய்களை பொருத்தினார்கள். 1878-ல், 650 கிலோமீட்டர் நீளத்திற்கு பாதாள (நிலத்தடி) சாக்கடை வசதிகள் செய்யப்பட்டன. “சாக்கடை ‘புத்தாடை அணிந்து’ . . . புதுப் பொலிவு பெற்றது” என்று எழுதினார் விக்டர் ஹகோ.
20-ம் நூற்றாண்டில் சாக்கடை வசதிகள் இரு மடங்காக விரிவாக்கப்பட்டன. நகரத்தின் பிரதி பிம்பமாக அல்லது நகரின் மறு உருவமாக பாதாள சாக்கடை ஆனது. பிரதி பிம்பமா! அப்படியென்றால்? ஒவ்வொரு பாதாள சாக்கடையிலும், அதற்கு மேலே இருக்கும் தெருவின் பெயரும், அத்தெருவில் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கையும் குறிப்பிடும் தகடை அல்லது வில்லையை பொருத்தியிருக்கிறார்கள். சாக்கடைகளை சீரமைத்து, புதுப்பிக்கும் திட்டம் 1991-ல் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக 33 கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த முக்கிய பத்தாண்டு திட்டத்தால், ஒவ்வொரு நாளும் 1.2 கோடி கன மீட்டர் கழிவுநீரை அகற்ற வசதிசெய்யப்பட்டுள்ளது. இதற்காக தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, கம்ப்யூட்டர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
சுரங்கத்திற்குள்ளேயே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்த எனக்கு, மூச்சு முட்டுவது போலிருந்தது. வெளியே போய்விட நான் நினைப்பதற்கும், அருங்காட்சி டூர் முடிவதற்கும் சரியாக இருந்தது. ஆனால் இந்தப் பாதாள சாக்கடைகளோடு பாரிஸின் பாதாள உலகம் முடிந்துவிடவில்லை. இன்னொன்றும் உள்ளது. “பாரிஸின் அதலபாதாளத்தை பார்க்க வேண்டுமென்றால், 60 லட்சம் மனித எலும்புக்கூடுகளை குவித்து வைத்திருக்கும் இருபது மீட்டர் ஆழத்திலுள்ள நிலத்தடி கல்லறைகளை போய் பாருங்கள்” என்றார் அருங்காட்சியகத்தில் நினைவு பொருட்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரி. அடேங்கப்பா! 60 லட்சம் எலும்புக்கூடுகளா! எங்கிருந்து கொண்டுவந்தார்கள்?
காற்றில் நஞ்சை கலந்த சர்ச்சுகள்
பாரிஸில் நிலத்தடி கல்லறைகள் (catacombs) உள்ளன. இங்கே, 18-ம் நூற்றாண்டு முதல் மனித எலும்புகளை சேகரிக்க ஆரம்பித்தார்கள். இறந்தவர்களை சர்ச் வளாகத்திற்குள் அல்லது பக்கத்தில் புதைக்கும் பழக்கம் இடைநிலைக்காலத்தில் ஆரம்பித்தது. இப்படி செய்ததால் சர்ச்சுகளுக்கு கணிசமான தொகை கிடைத்தது. ஆனால் நகர மத்தியில் கல்லறைகள் அமைந்திருந்ததால், சுகாதாரத்திற்கு பெரும் கேடுவிளைவித்தது. 7,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள செயின்ட் இன்னோசென்ட் என்ற பெரிய கல்லறைக்கு அக்கம் பக்கத்தில் வாழ்ந்த மக்கள் பயத்தாலேயே செத்து செத்து பிழைத்தார்கள். ஏனென்றால், இந்த கல்லறைக்கு சுமார் 20 சர்ச்சுகள் சடலங்களை அனுப்பி வைக்கும். அதோடு அடையாளம் தெரியாத அநாதை பிணங்களையும், கொள்ளை நோய்க்கு பலியான சடலங்களையும் அங்கேதான் அனுப்பிவைப்பார்கள்.
1418-ல் பிளாக் டெத் (Black Death) என்னும் கொள்ளைநோய்க்கு பலியான சுமார் 50,000 சடலங்கள் வந்துசேர்ந்தன. 1572-ல் செயின்ட் பர்த்தலோமியூ நாளில் நடந்த படுகொலையில் பலியான ஆயிரக்கணக்கான சடலங்கள் செயின்ட் இன்னோசென்ட் கல்லறைக்கு வந்தன. a அந்தக் கல்லறையை மூடச்சொல்லி பொதுமக்கள் குரலெழுப்பினார்கள். சிலநேரங்களில், சுமார் பத்து லட்ச பிணங்களை பத்தே மீட்டர் ஆழத்தில் போட்டு, தரைமட்டத்துக்கு மேல் இரண்டு மீட்டர் உயரத்திற்கு மலையென குவித்தனர். அந்தக் கல்லறை எல்லாவிதமான தொற்று நோய்களை ‘பிரசவிக்கும்’ மருத்துவமனையாக ஆனது. அங்கே வீசிய துர்நாற்றம் குடலை குமட்டியது. காற்று பயங்கரமாக மாசு அடைந்ததால் பாலும், ஒயினும் உடனே புளித்துப்போயின. ஆனாலும் நகரின் மத்தியில் இருந்த கல்லறைகளை மூடுவதை கிறிஸ்தவ குருமார்கள் எதிர்த்தார்கள்.
1780-ல், பொது கல்லறை ஒன்று உடைந்துபோனதால், அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளின் நில அறைகளில் (சுரங்க அறைகளில்) ஆயிரக்கணக்கான சடலங்கள் வந்து விழுந்தன. பொருத்திருந்த மக்கள் பொங்கி எழுந்தார்கள். கல்லறைக்கு உடனே சீல் வைத்தார்கள். பாரிஸில் சடலங்களை புதைப்பதை ரத்துசெய்தார்கள். நிறைய கல்லறைகளிலிருந்து சடலங்களை சும்மாகிடந்த டான்ப்-ஈஸ்வார் என்ற கல்லெடுக்கும் சுரங்கத்தில் கொண்டுபோய் வைத்தார்கள். இரவுநேரத்தில் பிணங்கள் ‘வீடு மாறும்’ செயல் திகிலடைய வைத்தது. புதுகல்லறை-புகு-‘விழா’ 15 மாதங்கள் நீடித்தன. இந்த ‘புதிய’ கல்லறைக்கு மேலும் 17 கல்லறைகளிலிருந்தும், 300 பல்வேறு சர்ச் கல்லறைகளிலிருந்தும் எலும்புக்கூடுகள் வந்துசேர்ந்தன. எலும்புகளை சுரங்கத்திற்குள் எறிந்த நுழைவாயிலின் அளவு 17.5 மீட்டர். இப்போது அங்கே படிக்கட்டுக்கள் போட்டிருக்கிறார்கள். இதன் வழியே நிலத்தடி கல்லறைக்கு செல்ல முடியும்.
பாரிஸ் நிலத்தடி கல்லறைக்கு விசிட்
பாரிஸ் இலத்தீன் குவார்ட்டருக்கு தெற்கே, டான்ஃபர்-ராஷ்ரோ சதுக்கத்திலிருந்து 91 படிகள் கீழே இறங்கி, நிலத்தடி கல்லறையை அடைந்தேன். 1787-ல் முதன்முதலாக இந்த நிலத்தடி கல்லறையை வந்து பார்த்தவர்களில் ராஜ குலத்து சீமாட்டிகளும் இருந்தனர். தீவட்டிகளின் வெளிச்சத்தில் இதை பார்த்தார்கள். இன்றோ, ஒவ்வொரு வருடமும் 1,60,000 பேர் வந்து பார்க்கிறார்கள்.
படிக்கட்டுகளிலிருந்து இறங்கியதும், குறுகலான சுரங்கங்கள் நிறைய உள்ளன. அவற்றில் அடுக்கடுக்காக ஷெல்ஃபுகள் அல்லது பரண்கள் போல் அமைத்து, எலும்புக்கூடுகளை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். 11,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்ட நிலத்தடி கல்லறையில் நான் பயந்து பயந்து மெல்ல சென்றேன். ஏனென்றால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட இந்தச் சுரங்கத்தில் ஃபிலிபர்ட் அஸ்பர் என்பவர் 1793-ல் காணாமல் போனார். 11 வருடங்களுக்குப்பின் அவரது சாவியையும், உடைகளையும் வைத்து அவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டது.
பாரிஸில் சுமார் 30 சதவிகித நிலம் சுரங்கங்களாக தோண்டப்பட்டுள்ளது. இப்படி சுரங்கம் தோண்டுவதற்கு நீண்டகாலமாக எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் 1774-ல், ரூ டென்ஃபர் (ஹெல் ஸ்ட்ரீட், தற்போதைய டான்பர்-ரோசாரியோ) என்ற இடத்தில், 300 மீட்டர் பரப்பளவு, 30 மீட்டர் ஆழத்தில் போய் விழுந்தது. பாரிஸே படுகுழிக்குள் விழுந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. “நாம் பார்க்கும் கட்டிடங்களின் அஸ்திபாரங்கள் அடியில் அகற்றப்படுகின்றன” என்று ஒரு எழுத்தாளர் எழுதினார். நிலத்தடி கல்லறைகளுக்கு முட்டுக்கொடுக்க பிரமாண்டமான வளைவுகளை கட்டினார்கள்.
என்னுடைய ஷூவில் அப்பியிருந்த சேற்றை பார்த்தபோது, “நிலத்தடி கல்லறைகளை அமைக்கும்போதே, தரையையும் கொஞ்சம் பூசியிருக்கலாமே!” என்ற ஆதங்கம் ஏற்பட்டது. அங்கிருந்த சகதியில் கால் வழுக்கியது. நல்லவேளை, பக்கத்தில் இருந்த பெரிய பித்தளை கதவை பிடித்துக்கொண்டேன். கதவுக்குப் பின்னால் மனித எலும்புகளையே சுவர்களாக அமைத்திருக்கும் நீண்ட பாதை ஒன்று சென்றது. பல்லை இளிக்கும் மண்டை ஓடுகளை, உளுத்துப்போன கை-கால் எலும்புகளை வரிசையாகவும், சிலுவைகள் போலும், பூ வளையங்கள் வடிவிலும் அமைத்திருந்த காட்சி வயிற்றில் புளியைக் கரைத்தது. மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்று நம்புகிற மனிதன் நம்பிக்கையை வெளிப்படுத்தும் பைபிள் வசனங்களையும், கவிதைகளையும் கற்பலகைகளில் பொறித்திருந்தார்கள்.
நிலத்தடி கல்லறையை விட்டு வெளியே வரும்போது, சாக்கடையில் என்னுடைய ஷூவை கழுவினேன். என்னுடைய சாவி மறுபடியும் சாக்கடையில் விழுந்துவிடக்கூடாது என்று சர்வ ஜாக்கிரதையோடு இருந்தேன்! அதிசயிக்க வைக்கும் பாரிஸின் பாதாள உலக டூர் அவ்வளவு சீக்கிரம் மனதைவிட்டு நீங்காது. பாரிஸைகாணும் ஒருவர், அதன் அதலபாதாளத்திலும் ஓர் உலகம் உண்டு என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! ஏப்ரல் 22, 1997 இதழில், பக்கங்கள் 7-8-ஐக் காண்க.
[பக்கம் 25-ன் படம்]
பாரிஸ் பாதாள சாக்கடையின் நுழைவாயில்
[படத்திற்கான நன்றி]
Valentin, Musée Carnavalet, © Photothèque des Musées de la Ville de Paris/Cliché: Giet
[பக்கம் 25-ன் படம்]
பாதாள சாக்கடை பார்வையாளர்கள்
[படத்திற்கான நன்றி]
J. Pelcoq, The Boat, Musée Carnavalet, © Photothèque des Musées de la Ville de Paris/Cliché: Giet
[பக்கம் 25-ன் படம்]
பாரிஸ் பாதாள சாக்கடையின் குறுக்கு-வெட்டு தோற்றும்
[படத்திற்கான நன்றி]
Ferat, Musée Carnavalet, © Photothèque des Musées de la Ville de Paris/Cliché: Briant
[பக்கம் 26-ன் படம்]
பல்லை இளிக்கும் மண்டை ஓடுகளை, உளுத்துப்போன கை-கால் எலும்புகளை வரிசையாகவும், சிலுவை போலும், வட்டவடிவிலும் அமைத்திருக்கும் காட்சி
[பக்கம் 26-ன் படம்]
நுழைவாயிலில் பொறித்திருக்கும் வேதவசனம்: “பாவமே சாவின் கொடுக்கு.”—1 கொரிந்தியர் 15:56
[பக்கம் 26-ன் படம்]
கழிவுநீரை அகற்றும் இயந்திரங்கள்
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Map background on pages 24-7: Encyclopædia Britannica/9th Edition (1899)