பிசாசு நிஜமான ஓர் ஆளா?
பிசாசைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? கெட்ட காரியங்களைச் செய்வதற்கு ஜனங்களைத் தூண்டுகிற நிஜமான ஓர் ஆள் என்று நினைக்கிறீர்களா, அல்லது அவன் வெறுமனே ஒரு தீய குணத்தைத்தான் குறிக்கிறானா? பிசாசுக்கு அஞ்சி நடுங்க வேண்டுமா, அல்லது பிசாசு என்பதெல்லாம் ஒரு மூடநம்பிக்கை அல்லது கட்டுக்கதை என்று எண்ணி ஒதுக்கித் தள்ளிவிட வேண்டுமா? “பிசாசு” என்ற வார்த்தை அண்டத்திலுள்ள ஏதோவொரு அழிக்கும் சக்தியைக் குறிக்கிறதா? நவீனகால இறையியலாளர்கள் பலர் வாதிடுகிறபடி, அது மனிதரிலுள்ள தீய குணங்களைக் குறிக்கும் ஒரு வார்த்தைதானா?
பிசாசு யார் என்ற இந்தக் கேள்வியைக் குறித்ததில் மனிதரிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதில் ஆச்சரியமில்லை. மாறுவேஷம் போடுவதில் கில்லாடியாக இருக்கும் ஒருவனுடைய உண்மையான அடையாளத்தைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! அதுவும் தான் யார் என்பதை மறைப்பதற்கு உறுதிபூண்டிருக்கும் ஒருவனைக் கண்டுபிடிப்பது இன்னும் எவ்வளவு கஷ்டம்! பிசாசை அப்படிப்பட்ட ஒருவனாகத்தான் பைபிள் வர்ணிக்கிறது. அவனைச் சாத்தான் என அழைத்து, அது இவ்வாறு கூறுகிறது: “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” (2 கொரிந்தியர் 11:14) அவன் தீயவனே, என்றாலும் மற்றவர்களை வஞ்சிக்க நல்லவன் போல் நடிக்கிறான். உண்மையில் பிசாசு என்ற ஒருவன் இல்லை என மக்களை நம்பச் செய்துவிட்டால், அது அவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற இன்னும் வசதியாகப் போய்விடும்.
அப்படியானால், உண்மையில் பிசாசு யார்? அவன் எப்பொழுது தோன்றினான், எப்படி தோன்றினான்? இன்றைக்கு மக்கள்மீது எப்படி செல்வாக்குச் செலுத்துகிறான்? அப்படி செல்வாக்குச் செலுத்தினால், அதை தடுத்து நிறுத்த நாம் ஏதாவது செய்ய முடியுமா? பிசாசின் சரித்திரத்தை ஆதிமுதல் பைபிள் துல்லியமாக எடுத்துரைக்கிறது, இந்தக் கேள்விகளுக்கு நம்பகமான பதில்களையும் அது தருகிறது.
[பக்கம் 3-ன் படம்]
தான் யார் என்பதை மறைப்பதற்கு உறுதிபூண்டிருக்கும் ஒருவனுடைய அடையாளத்தைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம்!