அந்த விலையேறப்பெற்ற கொம்புகளுக்கு—கீழுள்ள விலங்கு
தென் ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்
திடீரென்று, அந்தக் காண்டாமிருகம் தாக்குவதற்கு வேகமாக பாய்ந்து ஓடி வந்துகொண்டிருந்தது. அந்த மனிதன் ஒரு பக்கமாக பின்வாங்கி அருகிலுள்ள ஒரு சிறிய மரத்தைநோக்கி தலைதெறிக்க ஓடினான். ஆனால் இந்தக் காண்டாமிருகமோ ஆச்சரியப்படத்தக்க வேகத்தில் திரும்பி, அந்த மனிதன் ஓடித் தப்பித்துக்கொள்ள அவகாசம் கொடுக்காதவண்ணம் ஓடிவந்தது. மரத்தைச் சுற்றிப் பலமுறை துரத்தியபின் இறுதியில் அவனைத் தனது கொம்பால் வளைத்துப் பிடித்து காற்றிலே தூக்கி எறிந்தது. அந்த அப்பாவி மனிதன் கீழே மிதந்து வந்து, முதலில் காண்டாமிருகத்தின் தோள்பட்டைகளில் இடித்து பிறகு நிலத்தில் விழுந்தான். மிதித்து அல்லது குத்திக் கொல்லப்படுவதை எதிர்பார்த்தவனாய் அவன் அங்கு விழுந்துகிடந்தான். காண்டாமிருகம் அடியெடுத்து வைத்து முன்னோக்கி வருகையில், அந்த மனிதன் தன் பாதத்தை உயர்த்திக் காட்டினான். ஆனால் அந்தக் காண்டாமிருகமோ சும்மா அதை மோப்பம்பிடித்துவிட்டு, அவனைவிட்டு விலகிப்போயிற்று!
இதுதான் ஆப்பிரிக்காவின் கறுப்புக் காண்டாமிருகம்—அனாவசியமாக தலையிடும் மனோபாவமும் வம்பிழுக்கும் சுபாவமுள்ளதாகவும் எளிதில் கிளர்ச்சியடையக்கூடியதாகவும் இருக்கிறது. காண்டாமிருகத்திற்கு (அதன் பார்க்கும் திறன் குறைவு என்ற காரணத்தால்,) காணமுடியாத ஏதோவொன்றை அதன் கூர்மையான மோப்ப சக்தியோ கேட்கும் திறனோ உணர்த்திவிட்டால், அது கிளர்ச்சியடைந்து அந்த வாசனையின் அல்லது சப்தத்தின் மூலத்தை—அது ரயிலிலிருந்து சிறிய வண்ணத்துப் பூச்சி வரை எதுவாக இருந்தாலும் சரி—சென்று தாக்குகிறது! இதன் உயரம் தோள்பட்டைவரை சுமார் 5 அடியும், எடை 1,000 கிலோகிராம் வரையும் இருக்கிறது. இருந்தபோதிலும், இது ஒரு மணிக்கு சுமார் 55 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லமுடிவதோடு, சட்டென்று 180 டிகிரி கோணத்திற்குத் திரும்பவும் முடியும்.
இது தாக்குவதற்காக பாய்ந்தோடி வருவது சிலசமயங்களில் சும்மா பாவலா காட்டுவதற்காக, அல்லது முற்றிலும் கிண்டலுக்காக மட்டுமேயாக இருக்கிறது. “எந்தளவுக்கு அதிக தூசி பறந்ததோ அந்தளவுக்கு ரூஃபஸ் மகிழ்ச்சியடைந்தான்,” என்று ரூஃபஸ் என்றழைக்கப்பட்ட ஒரு குட்டி கறுப்புக் காண்டாமிருகத்தை ஒரு சமயம் வைத்திருந்த யுயில்லீன் கேர்னி கூறுகிறார். ரூஃபஸ் ஒருமுறை புதர்களினூடே “மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க செறுமிக்கொண்டு அடித்து நொறுக்கிக்கொண்டு தோட்டத்தைத் தாக்க” ஓடிவந்து, “வராந்தாவின் முன்பு சட்டென நின்றான். படிக்கட்டுகள்வரை பெருமிதத்துடன் நடந்துசென்று [அவருடைய] சாய்வு நாற்காலியின் அருகே படுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தை பிரியத்துடன் நினைத்துப் பார்க்கிறார்.”
கறுப்புக் காண்டாமிருகத்திற்கான இந்தப் பாசத்தை அதன்பேரில் ஆராய்ச்சி நடத்தியிருக்கும் அநேகர் அனுபவித்திருக்கின்றனர். இருந்தாலும், மனிதர்கள் மத்தியில் ஆளுமை வித்தியாசப்படுவதைப் போலவே காண்டாமிருகங்கள் மத்தியிலும் ஆளுமை வேறுபடுகிறது என்பதை அவர்கள் அனைவருமே ஒத்துக்கொள்கின்றனர். அப்படியானால், உண்மையிலேயே சீற்றமடையும் காண்டாமிருகம் ஜாக்கிரதை! கறுப்புக் காண்டாமிருகத்தை, “தாராளமாக ஒருபோதும் நம்பிவிடக்கூடாது, நியாயமான தூரத்தில் தள்ளியே நிற்கவேண்டும்,” என்று ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் வாழும் விலங்குகளைக் காண வழிநடத்துவதற்கு பிரபலமான கைடு ஒருவர் எச்சரிக்கிறார். வருந்தத்தக்க வகையில் இவை கொடியதாக இருப்பதற்கு மனிதர்கள் அவற்றைப் படுத்தும் பாடே பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. மனிதன் தன்னைத்தானே காண்டாமிருகத்திற்கு இருக்கிற ஒரேவொரு எதிரியாக ஆக்கிக்கொண்டான் என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார், தொடக்கத்தில் விவரிக்கப்பட்ட காண்டாமிருகத்தின் தாக்குதலிலிருந்து உயிர்தப்பிய பேராசிரியர் ரூடால்ஃப் ஷெங்கல் என்பவர்.
ஆப்பிரிக்காவின் மற்ற காண்டாமிருகத்தைப்பற்றி, அதாவது வெள்ளைக் காண்டாமிருகத்தைப்பற்றி என்ன? இதன் வழக்கமான அமைதி சுபாவம், முரட்டுத்தனமுடைய இதன் ஒன்றுவிட்ட சகோதரனை அதிக வித்தியாசமுள்ளதாக ஆக்குகிறது. இதன் உருவம் கறுப்புக் காண்டாமிருகத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது, இது உலகிலேயே உள்ள நிலவாழ் விலங்குகள் அனைத்திலும் மூன்றாவது பெரிய விலங்காகத் திகழ்கிறது. இதன் தலை நான்கு ஆண்கள் சேர்ந்து தூக்கவேண்டிய அளவுக்குப் பெரிதாக இருக்கிறது! இருப்பினும், தனது கறுப்பு ஒன்றுவிட்ட சகோதரனைப்போலவே விரைவியக்கமுடையதாக இருக்கிறது.
காட்டில் மனிதனால் எதிர்க்கப்படும்போது, வெள்ளைக் காண்டாமிருகம் வழக்கமாகவே ஒரு மனிதனின் உருவத்தையும் சத்தத்தையும் உணர்ந்து அல்லது மோப்பம் பிடித்து அலறியடித்துக்கொண்டு ஓடிவிடும். எனினும், இதை அவ்வளவு அசட்டையாக கருதிவிடவேண்டாம் என்று காண்டாமிருகம் என்ற தங்களது ஆங்கில புத்தகத்தில் டேரிலும் ஷார்னா பால்ஃபோரும் எச்சரிக்கின்றனர். “கறுப்புக் காண்டாமிருகத்தைவிட வெள்ளைக் காண்டாமிருகம் சமீப வருடங்களில் அநேகரைக் காயப்படுத்தியிருக்கிறது,” இதன் காரணம் மனிதன் இதற்குத் தகுந்த “மதிப்பைக் காட்டாததனால்” இருந்திருக்கலாம் என்று அவர்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள்.
விருப்பமான பொழுதுபோக்கு
ஆப்பிரிக்காவின் காண்டாமிருகங்கள் குறிப்பிட்ட விருப்பத்தைக் காட்டுகின்றன. அதுதான் சேற்றுக்கான விருப்பம்—ஏகப்பட்ட விருப்பம்! தாங்கள் புரள்வதற்கான சேற்றுப்பகுதியை நெருங்கியதும் அநேகம் தங்களுடைய வேகத்தை அதிகரித்து, விரைவில் அனுபவிக்கப்போகும் சுகத்திற்கான ஆனந்தக் களிப்பில் கிறீச்சொலி எழுப்புகின்றன. இந்த காண்டாமிருகம் சேற்றினுள் மெதுவாக மூழ்கும்போது, “நிம்மதியான ஒரு பெருமூச்சு சப்தத்தைக் கேட்கலாம், திருப்தியடைந்த அந்த விலங்கு நீராடலைத் தொடருமுன் சில நிமிடங்களுக்கு ஒருக்களித்து படுத்துக் கிடக்கும். அடிக்கடி சரியாகவே மல்லாக்கப்படுத்துக்கொண்டு கால்களை வானத்தை நோக்கி உதைக்கிறது,” என்று இதை அடிக்கடி கவனித்த பால்ஃபோர் கூறுகிறார்.
சேற்றில் புரண்டு விளையாடும் பொழுதுபோக்கிற்கான விருப்பத்தில் தங்களுடைய அனைத்து மதிப்பையும் மறந்துவிட்டு, இந்த இரண்டு காண்டாமிருக இனங்களும் சிலவேளைகளில் ஒரே சேற்றுப்பகுதியில் புரண்டு விளையாடுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட இளம் ரூஃபஸ் சிலவேளைகளில், “சேற்றுக்குளியல் முடிவதற்கு முன்னமே, சேற்றைவிட்டு வெளியே குதித்தெழுந்து, தோட்டத்தைச் சுற்றி ஒரு ஓட்டம் ஓடி, பழக்கப்படாத குதிரையைப்போல் முதுகை வளைத்து துள்ளிகுதித்து, மீண்டும் சேற்றில் குளிக்கும் சுகத்தை அனுபவிக்க சேற்றுக்குள் திரும்பிப் போகிறான்.” சேற்றுக்குளியல் என்றால் அவனுக்கு அவ்வளவு ஆசை.
எனினும், சந்தோஷமான பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் வேறு காரியங்களுக்கும் சேறு பயன்படுகிறது. உடன் காண்டாமிருகங்களோடும் சேற்றை விரும்பும் மற்ற விலங்குகளோடும் தோழமைக் கூட்டங்களை நடத்துமிடமாகவும் சேறு பயன்படுகிறது; எரிச்சலூட்டும் பூச்சிக்கடிகளிலிருந்து காண்டாமிருகத்திற்கு ஓரளவு விடுதலையளிக்கிறது; சுள்ளென்று அடிக்கும் வெயிலின் சூட்டிலிருந்து அவற்றின் உடல்களைக் குளிர்விக்கிறது. ஆகவே காண்டாமிருகங்கள் சிலவேளைகளில் தங்களது சேற்றுப் படுக்கையில் மணிக்கணக்காக தொடர்ந்து படுத்துக் கிடப்பதைப் பார்ப்பதில் ஆச்சரியமேதுமில்லை.
எது எந்த இனம்?
எந்தக் காண்டாமிருகம் எந்த இனத்தைச் சேர்ந்தது என்று ஒருவருக்கு எப்படி வித்தியாசம் தெரியும்? அதில் ஒன்று உண்மையிலேயே கறுப்பாகவும் மற்றொன்று வெள்ளையாகவும்தான் இருக்கிறதா? அதுதான் இல்லை. உங்களால் சாம்பல்நிறத்தைக் காணமுடியுமென்றால், இரண்டுமே சாம்பல்நிறமுடையவைதான்—ஆனால் சாம்பல்நிறத்தின் வித்தியாசமான வண்ணச்சாயலில் இருக்கின்றன. நீங்கள் மெய்யாக பார்க்கவிருக்கும் நிறம் எதுவென்றால், அவை கடைசியாக படுத்துக்கிடந்த சேறு தோலின்மேல் படிந்து காய்ந்திருக்கும் நிறமாகவே இருக்கும்.
ஆனால் எது எந்த இனம் என்பதை வாயின் வடிவம் உடனடியாக உங்களுக்குக் காட்டிக்கொடுக்கும். கறுப்புக் காண்டாமிருகம் பசுந்தளிரையும் கிளைகளையும் இலைகுலைகளையும் தின்னும் பிராணியாகும். ஆகவே புதர்களிலிருந்து இலைகளையும் கிளைகளையும் வளைத்துப் பிடிப்பதற்கு அல்லது மாட்டியிழுப்பதற்கு பயன்படும்வகையில் இதன் மேலுதடு கூர்மையாக இருக்கிறது. ஆகவே இதன் மிகச் சரியான பெயர் கொக்கி-உதட்டுக் காண்டாமிருகம் என்பதாகும். வெள்ளைக் காண்டாமிருகமோ, மறுபட்சத்தில், புல்லுண்ணி விலங்காகும். எனவே இதன் மூஞ்சியின் முன்பகுதி புல்லை அறுக்க ஏற்றவகையில், புல்லறுக்கும் பொறியைப்போல தட்டையாக இருக்கிறது. எனவே, இதன் மிகச் சரியான பெயர் சதுர-உதட்டு காண்டாமிருகம் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் ஏதோவொரு காரணத்திற்காக ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் வந்து குடியேறிய டச்சுக்காரர்களிடம் இருந்து தோன்றியதாகத் தெரிகிற இந்தக் கறுப்பு அல்லது வெள்ளை வேறுபாடு தொடர்ந்து நிலைத்து வந்திருக்கிறது.
விலையேறப்பெற்ற அந்தக் கொம்புகள்
“மூக்கு-கொம்புடைய” என்று அர்த்தப்படுத்தும் இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து காண்டாமிருகத்தின் ரைனாசிரஸ் என்ற ஆங்கிலப் பெயர் உருவாயிற்று. காண்டாமிருகத்தின் கொம்புகள் எதனால் ஆனவை? அவை ஒட்டிப்பிடித்த மயிர் என்பதாகவும், காரணம் அவை அடிப்பகுதிக்கருகில் தேய்வுற்று பிரிந்துவரும் தன்மையுடையவையாய் இருக்கின்றன என்பதாக சிலர் விவரிக்கின்றனர். இருப்பினும் அவை உண்மையான மயிர் அல்ல, ஆனால் “நுண்ணோக்காடியில் பார்த்தால் குளம்புள்ள விலங்குகளின் குளம்புகளுக்கு ஒத்தவையாகவே இருக்கின்றன,” என்பதாக தென் ஆப்பிரிக்காவின் தேசிய பூங்கா வாரியத்தின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் கெரீ ட க்ராஃப் கூறுகிறார்.
விரல் நகம் வளருவதைப்போல இந்தக் கொம்பு வளர்ந்துகொண்டு வருகிறது. கர்ட்டி என்ற பெயருடைய பிரபலமான கறுப்புக் காண்டாமிருகம் ஒன்று 1.4 மீட்டர் நீளமுள்ள ஒரு கொம்பை கம்பீரமாகத் தாங்கி நின்றது, மற்றும் வெள்ளைக் காண்டாமிருகத்தின் கொம்பு ஒன்று, இரண்டு மீட்டர் வரை வளர்ந்தது! சில சமயங்களில் சம்பவிப்பதுபோல, கொம்பு முறிந்து போகுமானால், வருடத்திற்கு சுமார் எட்டு சென்டிமீட்டர் என்ற வீதத்தில் அது தானாகவே வளர்ந்து மாற்றீடு செய்துவிடும்.
காண்டாமிருகங்களின் கொம்புகள் அவ்வளவு விலையேறப்பெற்றவையாய் கருதப்படுவதேன்? அநேகர் அவற்றை மருந்துகளாக உபயோகிக்கின்றனர். மற்றவர்களோ காண்டாமிருக கொம்பினாலான கைப்பிடியுள்ள பட்டாக்கத்தி வைத்திருக்கும் கௌரவத்தை அனுபவித்து மகிழ்கின்றனர். லாபத்திற்காக பேராசை பிடித்துத் திரியும் ஆட்களால் ஆயிரக்கணக்கான காண்டாமிருகங்கள் அடித்துக் கொல்லப்படுமளவுக்கு இவை ஏகப்பட்ட கிராக்கி உள்ளவையாயும், இவற்றின் வர்த்தகம் கொள்ளை லாபம் தரக்கூடியதாகவும் இருக்கிறது.
ஒரு காலத்தில் முழுவதுமாக நசிந்து போகும் தருவாயிலிருந்த வெள்ளைக் காண்டாமிருகம், பாதுகாப்பாளர்களின் கடும் முயற்சிகளால், தற்போது ஓரளவு திரும்ப நிலைபெற்றுவருகிறது. ஆனால் இதன் கறுப்பு இன ஒன்றுவிட்ட சகோதரனின் நிலைமை அவ்வாறில்லை. விலங்கிலிருந்து கொம்புகளை அகற்றுவதையும் உட்படுத்தும் திருட்டு அலையை அறவே ஒழித்துக்கட்ட பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் இந்த மாபெரும் பணி குறைந்த பலனையே கொடுக்கிறது. காண்டாமிருகத்தின் கொம்புகள் ஒரு கிலோ 2,000 டாலருக்கு விற்பதால், கொம்பு அகற்றப்பட்ட காண்டாமிருகத்துடைய கொம்பின் அடிப்பாகத்தைக் கொத்தியெடுப்பதும்கூட லாபமளிப்பதாக இருக்கும் என்பதாக கள்ளர்கள் நினைக்கின்றனர். ஆயினும் நம்பக்கூடியவகையில், வருங்கால தலைமுறைகளும் கிளர்ச்சியூட்டும் இந்த விலங்கோடு பழகி மகிழ்வது சாத்தியமாகும்படி, மனிதனின் பேராசை வெற்றிபெறப்போவதில்லை.
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
இரண்டும் சாம்பல்நிறத்தில் இருப்பதால், கறுப்புக் காண்டாமிருகத்திற்கும் வெள்ளைக் காண்டாமிருகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எப்படி அறிந்துகொள்வீர்கள்?
[பக்கம் 26-ன் படம்]
வெள்ளைக் காண்டாமிருகமும் அதன் குட்டியும்
[படத்திற்கான நன்றி]
National Parks Board of South Africa
-