கென்யாவின் அநாதை காண்டாமிருகக் குட்டிகள்
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
கானகத்தில் ஒரு குட்டி விலங்கு தன் பெற்றோரிடமிருந்து பிரிந்துவிட்டால் அதற்கு என்ன நேரிடும்? மற்ற மிருகங்களால் ஒருவேளை அது கொல்லப்படும். இதை தடுப்பதற்கு கென்யாவில் உள்ள காட்டு இலாகா அதிகாரிகள் அப்படிப்பட்ட குட்டிகளை மீட்டு அவற்றை விலங்குகளின் ‘அநாதை இல்லத்திற்கு’ எடுத்து செல்கின்றனர். இவற்றில் பிரபலமான ஒன்று, நைரோபி நேஷனல் பார்க்கில் டாஃபினி ஷெல்டிரிக் என்பவரால் நடத்தப்படுகிறது. இவர், காட்டு எருமை, மறிமான், புனுகுப் பூனை, காட்டுப் பன்றிகள், கீரிகள், யானைகள், காண்டாமிருகங்கள் போன்றவற்றிற்கு இவ்விதம் அடைக்கலம் கொடுத்து வளர்ந்தபின் மறுபடியும் கானகத்தில் கொண்டுவிடும் பணியை பல பத்தாண்டுகளாக செய்து வந்திருக்கிறார்.
மேக்னட், மேக்னம் என்று பெயரிடப்பட்ட இரண்டு கருப்பு காண்டாமிருகக் குட்டிகள் சென்ற வருடம் அவரது பராமரிப்பில் இருந்தன. நைரோபி வன சரணாலயத்தில் இன்றும் உயிருடன் இருக்கும் ஈடித் என்ற காண்டாமிருகத்தின் குட்டியே மேக்னட். இந்தக் குட்டி எப்படியோ தன் தாயிடமிருந்து பிரிந்து விட்டபடியால் 1997-ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இந்த அநாதை இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேக்னட்டின் தாயை காட்டு இலாகா அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்குள் ஐந்து நாட்கள் ஓடிவிட்டன. இவ்வளவு நாட்கள் கடந்துவிட்டதாலும் அதனிடம் மனித வாடை வீசுவதாலும் அந்தக் குட்டியை அதனுடைய தாய் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
மேக்னம் ஜனவரி 30, 1997-ல் பிறந்தது. அதனுடைய தாயின் பெயர் ஸ்கட்; அந்தத் தாய் வேகமாக ஓடினபோது அதன் முன்னங்கால் ஒரு குழியில் இடறியதால் வலது கால் உடைந்து விட்டது. அதன் காயத்தை சரிசெய்ய எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அதன் எலும்பில் சீழ் பிடித்துவிட்டதால் அதனைக் கருணைக் கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
காண்டாமிருகத்தை வளர்த்தல்
காண்டாமிருகக் குட்டிகள் சமர்த்தாக நடந்துகொள்ளும், அவற்றை கையாளுவதும் சுலபம்தான்; ஆனால் அவற்றை வளர்ப்பதோ பெரும்பாடு. நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறை அது ஒரு பெரிய பாட்டில் நிறைய பால் குடித்துவிடும். அத்தோடு முடிந்ததா, புதர் செடிகளையும் புதர்களையும்கூட ஒரு கை பார்த்துவிடும். காண்டாமிருகக் குட்டிகள் பிறக்கும்போது சுமார் 40 சென்டிமீட்டர் உயரமும் 30 முதல் 40 கிலோ எடையும் இருக்கின்றன. ஆனாலும் அவை மிக வேகமாக கொழுகொழுத்து ஒரு நாளைக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் குண்டாகும்! முழு வளர்ச்சியடைந்த காண்டாமிருகம் ஒரு டன்னுக்கும் அதிக எடையுள்ளதாக இருக்கும்.
மேக்னட்டையும் மேக்னத்தையும் பராமரிப்பவர்கள் பார்க்கிற்குள் தினமும் நீண்ட தூரம் ‘வாக்கிங்’ அழைத்து செல்வர். உடற்பயிற்சிக்காக மட்டுமே இப்படிப்பட்ட வாக்கிங் அழைத்துச் செல்லப்படவில்லை; இதன் முக்கிய நோக்கம் இந்தக் குட்டிகளை என்றாவது ஒரு நாள் காட்டில் கொண்டுவிடுவதற்காகவே. இது எவ்விதம் செய்யப்படுகிறது என்பதை இப்போது கவனிக்கலாம்.
காண்டாமிருகங்களுக்கு கண்கள் நன்றாக தெரியாது, ஆனால் அபார மோப்ப சக்தியும் வியப்புக்குரிய ஞாபக சக்தியும் அவற்றிற்கு உண்டு. ஆகவே அவை தங்கள் இனத்தை முதலாவது மோப்பத்தால்தான் அடையாளம் கண்டுகொள்ளுகின்றன. அவை மலத்தை (middens) குறிப்பிட்ட இடங்களிலும் சிறுநீரை புதர்களிலும் கழிப்பதன் மூலம் தங்களுடைய பிராந்தியத்தின் எல்லைகளை தீர்மானிக்கின்றன.
சாதாரணமாக ஒரு குட்டி அதன் தாயால் பாதுகாக்கப்படுகிறது; ஆகவே, மற்றொரு குட்டியை அது ஈனும் வரை அதனுடைய தனிப்பட்ட வாடை தாயுடைய வாடையோடு கலந்துவிட, தாயோடு கூடவே அலையும். இதன் மூலம் அந்தக் குட்டி அங்கு வாழும் காண்டாமிருக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுவிடும். ஆகவே புதிய குட்டிகளான மேக்னட்டிற்கும் மேக்னத்திற்கும் இது ஒரு சவாலை முன்வைக்கிறது. அப்பகுதியில் வாழும் காண்டாமிருகங்கள் அவற்றை நேரிடையாக ‘சந்திப்பதற்கு’ முன் அவை தங்களுடைய மலத்தையும் சிறுநீரையும் அந்தப் பிராந்தியத்தில் கழித்திருக்க வேண்டும். தினமும் வாக்கிங் போகும்போது இந்தக் குட்டிகள் இதை செய்வதன்மூலம் தாங்களும் அச்சமூகத்தினரே என்று காட்டுகின்றன. ஆகவே இந்த முறையில் அவற்றின் வாடையை மற்ற காண்டாமிருகங்கள் கண்டுபிடித்து, ‘ஆய்வு செய்து,’ கடைசியாக ஏற்றுக்கொள்கின்றன. ஆகவே மனிதர்கள் விலங்குகளை வளர்த்து கானகத்தில் கொண்டுவிடப்படும் செயலானது மிகவும் சிக்கலான, பல ஆண்டுகளை உட்படுத்தும் நடவடிக்கையாகும்.
அநாதைகளுக்கு எதிர்காலம் உண்டா?
ஆப்பிரிக்காவில் 1970-ல் சுமார் 65,000 கருப்பு காண்டாமிருகங்கள் இருந்ததாக இயற்கை பாதுகாப்பு நிதியம் குறிப்பிடுகிறது. ஆனால் இன்றோ அவை 2,500-க்கும் குறைவாகவே இருக்கின்றன. இப்படி திடீரென குறைந்ததற்கு திருட்டுத்தனமாக வேட்டையாடுபவர்களே காரணம்; அவர்கள் தோலுக்காகவும் கொம்பிற்காகவும் அவற்றைக் கொன்றுகுவித்தனர். கள்ள மார்க்கெட்டில் காண்டாமிருகங்களின் கொம்புகளுக்குத் தங்கத்தைவிட மவுசு அதிகம். ஏன் இந்த நிலை?
கிழக்கத்திய நாடுகளில் காண்டாமிருகக் கொம்பினை அரைத்து குடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அவ்விதம் செய்வதால் ஓரளவிற்கு குணம் கிடைக்கலாம் என்று வேதியியல் ஆய்வும் காட்டுகிறது; ஆனால் அதற்கு கொஞ்சமல்ல அதிகம் குடிக்க வேண்டும் என்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் காய்ச்சலை சரிசெய்ய மருந்தா இல்லை?
காண்டாமிருகத்தின் கொம்பை சிலர் சமூக காரணங்களுக்காக நாடுகிறார்கள். ஒரு மத்திய கிழக்கு நாட்டில் ஓர் ஆண் பிச்சுவா கத்தியை வைத்திருப்பது வீரத்திற்கு அழகு என கருதப்படுகிறது. புதிய காண்டாமிருகக் கொம்பின் கைப்பிடி உள்ள கத்தி ஒன்றிற்கு 22,000 ரூபாய் வரையும், அதேசமயம் பழைய கொம்பாக இருந்தால் அதற்கு 46,000 ரூபாய் வரையும் கொடுக்க ஆட்கள் தயார்.
திருட்டுத்தனமாக வேட்டையாடுபவர்களால், 20 வருடங்களுக்குள் 95 சதவீதத்திற்கும் அதிகமான காண்டாமிருகங்களை கென்யா இழந்தது. 1990-களின் ஆரம்ப ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 20,000-லிருந்து வெறும் 400-க்குக் குறைந்து விட்டது. அதைத் தொடர்ந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை தற்சமயம் சுமார் 450-ஐ எட்டியிருக்கிறது. கருப்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை சமநிலையில் உள்ள அல்லது அதிகரித்து வருகிற மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் கென்யாவும் ஒன்று. ஆகவே மேக்னட் மற்றும் மேக்னத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்பதாகவும், அவை காலப்போக்கில் தங்களுடைய காண்டாமிருக சமூகத்தில் ஒன்றாக கலந்து சந்தோஷமாக நெடுநாள் வாழும் என்பதாகவும் அவற்றை பாதுகாப்பவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
[பக்கம் 12-ன் படம்]
மேக்னம் (இடது புறம்), நான்கு மாத குட்டி மேக்னட்