உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்ய வரைபடங்கள்
பிரிட்டனில் உள்ள விழித்தெழு! நிருபர்
முன்பின் தெரியாத நாட்டிற்கோ நகரத்திற்கோ வழியைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாகும். முதலில் நீங்கள் சுற்றுப்புறச்சூழலை அறிந்துகொள்ள வேண்டும். பிறகு எது மிகச் சிறந்த பாதை என்பதைத் தீர்மானியுங்கள். எப்படி கண்டுபிடிப்பீர்கள்? உங்களுக்குத் தேவை ஒரு வரைபடம்!
வரைபடங்கள்—எப்போதிருந்து பயன்படுத்தப்பட்டன, ஏன்?
வரைபடம் வரைதல் அல்லது நிலப்படத்துறை (cartography) என்று அழைக்கப்படும் இது, நீண்ட பல்வேறுபட்ட சாதகமான மற்றும் பாதகமான வரலாற்றைக் கொண்டு திகழ்கிறது. வரைபடம் வரைதல் 4,300 வருடங்களுக்கு முன்னரே பாபிலோனியாவில் களிமண்ணில் செதுக்கப்பட்டதாக சில அதிகார வட்டாரங்கள் கண்டுபிடித்துள்ளன. ஆனால், பண்டைய கிரேக்கர்கள் வரைந்த விளக்கப் படங்களே, தற்கால வரைபடங்களுக்கு முன்னோடிகளாகும். பண்டைய உலக வரைபடங்களை, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் கிளாடியஸ் டாலமி வரைந்தபின்னர், நிலப்படத்துறை இருண்ட காலத்திற்குள் மூழ்கியது. கண்டுபிடிக்கப்படாத இடங்கள், இராட்சத மிருகங்களின் மற்றும் இராட்சதர்களின் குடியிருப்புகளாகக் காண்பிக்கப்பட்டன. மதமும்கூட வரைபடம் வரைதலில் மிக அதிக செல்வாக்குச் செலுத்தியது. அதனால், அநேக வரைபடங்கள், ஏதேன் தோட்டம் ஒரு மதிப்பிற்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த உலகை சித்தரித்துக் காண்பித்தன. அன்றுவரை அறியப்பட்டிருந்த அந்த உலகின் வரைபடங்களில், ஜெரூசலமும் மத்திய கிழக்கும் முதன்மையான இடத்தைத் தாங்கி வந்தன.
பண்டைய பிரிட்டனின் வரைபடங்களும்கூட, மத செல்வாக்கைப் பிரதிபலித்தன. இங்கிலாந்தின் மத புண்ணியத் தலங்களுக்கு, புனித யாத்திரிகர்கள் செல்கின்ற பாதையை அத்தகைய வரைபடங்களுள் ஒன்று காண்பித்தது. “புனித யாத்திரிகரின் வடக்குப் பெருஞ்சாலை”யை விவரிக்கையில், இந்த வரைபடம் டார்ரம் நகரின் வடக்கிலிருந்து தென்கடலோர துறைமுகம் டொவர் வரை வழிகாட்டியது.
தற்கால நிலப்படத்துறையின் தந்தை ஜெரார்டூஸ் மர்கேட்டர் (1512-94) ஆவார். அவர் வடிவமைத்த வரைபட எறியம் (map projection) அதனுடைய துல்லியத்திற்கு, கடல்வழி வல்லுநர்களிடையே பிரசித்தி பெற்றது. தற்கால அட்லஸ்களில் மர்கேட்டரின் எறியத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட பல வரைபடங்கள் காணப்படுகின்றன.
நில சொந்தக்காரர்களுக்கு வரைபடங்கள் ஆசீர்வாதமாக விளங்கின. எல்லைக் கோடுகள் தெளிவாக வரையப்பட்ட விவரப்படங்களைப் பார்த்தல் சட்டரீதியான சர்ச்சைகளைத் தீர்க்க உதவியது. நில உரிமையின் துல்லியமான பதிவின் அடிப்படையில் வரிவிதிப்பு சார்ந்துள்ளதால், வரைபடங்களில் அரசாங்கத்தின் ஆர்வமும் வளர்ந்தது.
இந்நாட்களில், வரைபடங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. அட்லஸ்கள் பள்ளிப் பிள்ளைகளுக்குப் புவியியலின் அடிப்படை அம்சங்களை மனதில் பதியவைக்க உதவுகின்றன. வானிலை அறிவிப்பாளர்களுக்கு விளக்கப்படங்கள் ஒருவேளை வரப்போகும் வானிலை நிலவரத்தைத் தெளிவாக படம்மூலம் காட்டுவதற்கு உதவுகின்றன. பொதுப் போக்குவரத்தை சிறந்தமுறையில் பயன்படுத்த வரைபடம் நமக்கு உதவும். குடும்ப உல்லாசப் பயணத்திற்கு இயற்கைக்காட்சிகள் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வரைபடம் உதவலாம்.
துறை வல்லுநர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படவில்லை. நகர அமைப்பாளர்களுக்கு மக்கள்-நெருக்கத்தைக் காட்டும் வரைபடங்கள் இருக்கின்றன. மூழ்கிப்போன கப்பல்களை அல்லது தாதுப்பொருட்களின் இருப்பிடங்களைத் தேடுவோருக்குக் கடலடி வரைபடங்கள் உதவுகின்றன. தொல்பொருள் ஆய்வு வரைபடங்கள், பண்டைய இடங்களைத் தோண்டுவோருக்கு உதவுகின்றன. ஏன், விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு நிலவின் மற்றும் சில கோள்களின் வரைபடங்கள்கூட கிடைக்கின்றனவே! விவரங்கள் அதிகமடங்கிய செல்வமாக வரைபடங்கள் இருப்பதால், நீங்கள் அவற்றைப் புரிந்துகொள்ளும் கலையை வளர்த்து முன்னேற்றுவிப்பது உங்களுடைய நன்மைக்காகவே.
ஒரு வரைபடத்தை அறிந்துகொள்ளுவது எவ்வாறு
வரைபடங்களிலிருந்து அதிக நன்மையடைவது வேறு மொழியைக் கற்றுக்கொள்வதைப் போன்றதாகும். வேறு மொழியை நீங்கள் படிக்கும்போது புதிய சொற்களையும் வித்தியாசமான இலக்கணத்தையும் எதிர்ப்படுவீர்கள். வரைபட மொழியில் குறியீடுகள் சொற்களுக்கு ஒப்பிடப்படலாம், அதே சமயத்தில் தள வேறுபாட்டு எல்லைக்கோட்டின் (contour) அளவைகளும் குறுக்கு நெடுக்கானக் கோடுகளும் (grid) இலக்கணமாகச் செயல்படுகின்றன. வரைபடத்தில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய கட்டத்துடன் பெரும்பாலான வரைபடங்கள் வரையப்படுகின்றன. இது குறியீடுகளை விளக்குவதற்கு அகராதியைப்போல் பயன்படுகிறது.
குறியீடுகள் அவற்றின் அர்த்தத்தை அறிவிக்க கவனமாகத் தெரிவுசெய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கலங்கரை விளக்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அதைப் போன்றேயுள்ள குறியீட்டைத் தேடுங்கள். சர்ச்சுகளும் மசூதிகளும் கறுப்புக் கட்டங்களின் மீது அல்லது வட்டங்களின் மீது சிலுவைகள் அல்லது பிறைநிலவுகள் மூலம் அடையாளம் காணப்படலாம்.
நீங்கள் எவ்வாறு இத்தகைய குறியீடுகளின் அர்த்தங்களை நன்கு தெரிந்துகொள்ளலாம்? “இனிமையான பொழுதுபோக்கான ‘வரைபடத்தை மேலோட்டமாகப் பார்த்தலை,’” ஃபாலோ தி மேப்-ன் ஆசிரியர் ஜான் வில்சன் சிபாரிசு செய்கிறார். அவர் மேலும் கூறுகிறார்: “சாதாரணமாக உங்கள் கண்களை வரைபடத்தின் மீது அலைபாய விட்டு, குறியீடுகளை எதிர்ப்படுகையில் அவற்றின் பொருள்களை மனதில் கொண்டுவாருங்கள்.”
உங்கள் வரைபடம் காட்டுவதிலிருந்து உங்களுடைய இடம் முற்றிலும் வித்தியாசமாய் இருப்பதாகக் காண்கிறீர்களா? ஏன் இப்படி? ஏனெனில், நாம் நம்முடைய சுற்றுவட்டாரங்களை இயல்பாகவே தரைமட்டத்திற்குமேல் 1.5-லிருந்து 1.8 மீட்டர் வரையான உயரத்திலிருந்து பார்க்கிறோம். ஆனால், வரைபடங்கள் ஒவ்வொரு புள்ளியிலிருந்து செங்குத்தாக மிகவும் உயரத்திலிருந்து நிலத்தின் தோற்றத்தைக் காட்டுகின்றன. இந்தக் கோட்பாட்டை கிரகிக்க, வரைபட இலக்கணத்தை நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
அளவை, உயரம், இடம்
கடல்மட்டத்திற்கு மேல் உள்ள உயரத்தின் வேறுபாடுகளையும் நிலத்தில் மனிதன் அமைத்த எத்தகைய வடிவங்களின் உயரத்தின் வேறுபாடுகளையும் பதிவு செய்வது வரைபடம் வரைபவரின் சவாலாகும். இவை அனைத்தும் அடக்கமான அளவுள்ள தாளில் அச்சிடப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு வரைபடங்கள் அளவையிடப்படும் வகையில் வரையப்படுகின்றன. ஒரு பிரபலமான பிரிட்டிஷ் வரைபடங்களில் ஒன்று, நாட்டின் அளவை 1:50,000 என்பதாகக் காட்டுகிறது. இதன் அர்த்தமானது வரைபடத்தின் ஒவ்வொரு சென்டிமீட்டரும் புவி மேற்பரப்பின் 50,000 சென்டிமீட்டரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
தட்டையான வரைபடம் எப்படி உயரத்தின் வேறுபாடுகளைக் காட்டமுடியும்? குன்றைச் சரிவாக நிழலிட்டுக் காட்டுவது மூன்றாவது பரிமாணத்தைச் சேர்ப்பதற்கான ஒரு வழியாகும். வரைபடத்தினுடைய மேற்பகுதியின் இடதுகை ஓரத்தின் இடத்திலிருந்து சூரியன் பிரகாசிக்க தோன்றுகிறது. கிழக்கு மற்றும் தென்கிழக்குத் திசையை நோக்கியிருக்கும் சரிவுகள் நிழலில் இருப்பதால், அடர்த்தியான நிறம் தீட்டப்படுகின்றன. நவீனகாலத்து வரைபடங்கள் பெரும்பாலும் சராசரி கடல்மட்டத்திற்கு மேல் சமமான உயரத்திலுள்ள புள்ளிகளை இணைக்கும் தள வேறுபாடு எல்லைக்கோடுகளை உடையதாய் இருக்கின்றன. அவற்றை மென்மையான வண்ணங்களால் அச்சிடுதல், வரைபடத்தின் மற்ற அம்சங்களிலிருந்து திசைதிருப்பப்படுவதை தவிர்க்கிறது.
பல வரைபடங்கள், குறுக்கு நெடுக்குக் கோடுகள் முறையைப் பயன்படுத்துகின்றன, இது உங்களின் இடத்தைத் தெளிவாகக் கண்டுகொள்ள உங்களுக்கு உதவுகிறது. இந்தக் கோடுகள் கிரிடு என்றழைக்கப்படுகின்றன. இந்தக் கிரிடு, எந்த இடத்தையும் அகரவரிசை எழுத்துத் தொகுப்பின்மூலமோ அல்லது எண்கள் தொகுப்பின் மூலமோ கொடுக்கப்படுவதற்கு உதவுகிறது. அது கிரிடு கோடுகளுக்கிடையில் அந்த இடத்தை குறிக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு நகரம் G-13 என்பதில் அமைந்துள்ளது என்றால், செங்குத்தாக G என்றும் கிடையாக எண் 13 என்றும் அர்த்தம். இந்த இரண்டு புள்ளிகளும் எங்கு சந்திக்கின்றனவோ, அங்கே நீங்கள் நகரைக் காணலாம். ஆயினும், உங்களின் வரைபடம் துல்லியமான படத்தைக் காட்டியது என்று எவ்வாறு உறுதியாக இருக்கலாம்?
கம்ப்யூட்டர் யுகத்தில் வரைபடங்கள்
இராணுவத்தின் தேவைகள் துல்லியமான வரைபடங்களை வெளியிடுவதில் பெரும்பாலும் விளைவடைந்திருக்கின்றன. கடந்த 40 வருடங்களாக, வான்வெளி நிழற்படங்களை ஸ்டீரியோஸ்கோப் மூலம் ஒத்துப்பார்த்தல் முறையைப் பயன்படுத்தி துல்லியமாக வரைபடம் வரைதல் கூடியகாரியமாகியது, பல நாடுகள் அதேமாதிரியான திட்டங்களைப் பின்பற்றுகின்றன.
ஏற்கெனவே, சில வாகனங்களில் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நகரும் வரைபடங்களைக் காட்டும் காட்சித்திரைகள் இருக்கின்றன மற்றும் வீட்டிலுள்ள கம்ப்யூட்டர்களுக்கு விவரங்கள் அதிகமடங்கிய பயண வரைபடங்களும் உள்ளன. “மைக்ரோ சிப்ஸ் சக்கரத்தை வழிநடத்துகிறது,” என்று தி அப்சர்வர்-ன் தலைப்புச்செய்தி வாசித்தது. பேசும் இணைப்பான்களுடன் (speech synthesizers) இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தின் செய்திகளைக் கொண்ட கம்ப்யூட்டர் டிஸ்க்குகளைப் பயன்படுத்தும் ஒரு பரிசோதனைத் திட்டத்தை அந்த அறிக்கை மேலும் விளக்கியது. கம்ப்யூட்டர் திரை வரைபடத்தில் தான் அடையவேண்டிய இடத்தை காட்டுவதற்காக ஓட்டுனர் வெறுமனே சில கட்டளை வார்த்தைகளை உட்செலுத்துகிறார். அந்தக் குழப்பமான சாலை சந்திப்புகளுக்காகக் கவலைப்பட தேவையேயில்லை! ஏன்? ஏனென்றால் ஒவ்வொரு சந்திப்பையும் கார் நெருங்கும்போது, ஓட்டுனர் செல்லவேண்டிய திசையை ஒரு குரல் சொல்கிறது. திசைமானி மற்றும் சக்கரம் ஆகியவற்றால் தூண்டப்படும் கருவிகள் காரின் போக்கை பதிவு செய்கின்றன. தற்கால முன்னேற்றங்கள் இன்னும் அதிக நம்பகமானவையாகவும் எளிமையானவையாகவும் உள்ளன.
வரைபடங்களின் எதிர்காலத்தைப் பற்றி இது எதை அர்த்தப்படுத்துகிறது? காகித வரைபடங்கள் எல்லாம் வெறும் சேகரிப்புக்குரிய பொருட்களாக மாறிவிடுமா? காலம்தான் பதில் சொல்லும். எது எப்படியிருந்தாலும், உங்களுடைய பயணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல பயன்கொண்ட சாதனமாக வரைபடம் தொடர்ந்து இருக்கும்.
[பக்கம் 23-ன் வரைப்படம்/படங்கள்]
பயன்படுத்தியுள்ள குறியீடுகளை விளக்க பல வரைபடங்கள் வழிகாட்டும் குறிப்புகளடங்கிய அல்லது விளக்கக்குறிப்புகளடங்கிய அட்டவணையை உடையதாயிருக்கின்றன
பொதுவாக மென்மையான நிறங்களிலுள்ள தள வேறுபாட்டு எல்லைக்கோடுகள் உயரத்தின் வித்தியாசத்தைக் காட்டுகின்றன
வரைபடத்தில் இடத்தைத் துல்லியமாக குறிப்பிட கிரிடு முறை உதவுகிறது
வரைபடம் பொதுவாக ஒரு அங்குலம் அல்லது ஒரு சென்டிமீட்டருக்குச் சமமான புவியின் மேற்பரப்பைக் காட்டுகிறது (இங்கு காட்டப்படவில்லை)
மைல்கள் அல்லது கிலோமீட்டர் அளவைகள் இடங்களுக்கு இடையே உள்ள தூரங்களை அளவிட உங்களுக்கு உதவும்
[படத்திற்கான நன்றி]
Crown Copyright Reserved
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
From the book Die Heiligkeit der Gesellschaft Jesu