வரைபடக்கலை—உலகை அறிய உதவும் வழிகாட்டி
கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
“பரதீஸ் எங்கோ கிழக்கு மூலையில் இருக்கிறது. எருசலேமைச் சுற்றியே எல்லா நாடுகளும் தேசங்களும் இருக்கின்றன. உலகமோ கடல்நீரால் சூழப்பட்ட தட்டையான தகடு. இப்படித்தான் இடைநிலைக்காலத்தில் வாழ்ந்த வரைபடக் கலைஞர்களும், மதத்துறவிகளும் உலகைப் பற்றி நினைத்தனர்.”
மேற்கோள்காட்டிய இந்த வார்த்தைகளையே, தி ரீடர்ஸ் டைஜஸ்ட் கிரேட் வோர்ல்ட் அட்லஸின் பதிப்பாசிரியர்கள் அதன் முன்னுரையில் எழுதி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மத நம்பிக்கைக்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை. ஆகவே இடைநிலைக்காலத்தின் ஆரம்பத்தில், கார்டோகிரஃபி அல்லது வரைபடக்கலை ஏன் எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை என்பதற்கான காரணம் ஓரளவிற்கு புரிகிறது.
புவியியலைப் பற்றி அறிய வரைபடங்கள் (மேப்புகள்) அடிப்படையானவை. நம்மை சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்வதற்கு இவை தேவை. இருப்பினும், அநேகருக்கு புவியியலைப் பற்றிய அறிவு இடைநிலைக்காலத்தில் இருந்ததைவிட அதிகம் வளர்ந்துவிடவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த எழுத்தாளர் மார்க் ட்வேன் அவருடைய நாளில் இருந்த இப்பிரச்சினையை சுட்டிக்காட்ட ஹக் ஃபின் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உபயோகித்தார். ஹக்கும் அவர் நண்பர் டாம் சேயரும் பலூனில் உயரே பறந்தனர். தரை பச்சை நிறமாகத் தெரிவதால் தாங்கள் இன்னமும் இண்டியானா மாகாணத்தை அடையவில்லை என நண்பரிடத்தில் கூறினார். ஏனெனில், மேப்பில் இண்டியானா (அ.ஐ.மா) இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததை ஹக் பார்த்திருந்தார்.
அமெரிக்காவிலுள்ள ஓர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், தான் புவியியல் பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன், உலகப்படத்தில் ஐக்கிய மாகாணங்களைக் காண்பிக்கும்படி ஓரிரு மாணவர்களிடம் கேட்பார். பத்து வருடங்களாக இதே முறையைக் கையாண்டு பாடம் நடத்துகிறார். ஆனால் இதுவரை அவர் கேட்ட முதல் மாணவனோ அல்லது இரண்டாவது மாணவனோ அமெரிக்க மாகாணத்தை சரியாக சுட்டிக்காட்டவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்! இதைவிட ஆச்சரியம் என்னவெனில், “அமெரிக்கர்களில் பத்தில் மூன்று பேருக்குகூட மேப்பில் எது வடக்கு, எது தெற்கு என வேறுபடுத்திக்காட்டத் தெரியவில்லை” என்று டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
வரைபடக்கலையின் சரித்திரம்
வரைபடம் அமைத்தல் மிகப் பழமையான, ஆனால் வித்தியாசமான தகவல் தொடர்பு முறையாகும். வரைபடங்களை கல்லிலும், மரத்திலும் செதுக்கினர். மணல், பேப்பர், தோல் சுருள் ஆகியவற்றிலும் வரைந்தனர். துணியிலும் தோலிலும் பெயின்ட் செய்தனர். பனியின் மேல் வடிவங்களை கையால் செய்தனர்.
மேப்புகளிலேயே மிகப் பழமையானது பொ.ச.மு. 2300-ம் ஆண்டிற்குரியது என்று தி வோர்ல்டு என்ஸைக்ளோப்பீடியா நிர்ணயிக்கிறது. இது, “பாபிலோனியாவைச் சேர்ந்த சிறு களிமண் பலகை. அது மலைப் பாங்கான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ஒரு எஸ்டேட்டைக் காட்டுவதாக” என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. சமூக வளர்ச்சிக்கான முதல் முயற்சியாக, நகர எல்லை சுவர்களின் இதே மாதிரியான களிமண் படங்களை பாபிலோனியர்கள் பயன்படுத்தினர்.
இரண்டாம் நூற்றாண்டில், அலெக்சாண்ட்ரியாவை சேர்ந்த புவியியல் அறிஞர் தாலமி உலகம் உருண்டை என்று அறிந்திருந்தார். ஆனால், பொ.ச.மு. 8-ம் நூற்றாண்டிலேயே பைபிள் இந்த உண்மையை வெளிப்படுத்திவிட்டது. கடவுளைப் பற்றி அது சொல்லும்போது, “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்” என்கிறது. (ஏசாயா 40:22) ஈக்வினாக்ஸ் பத்திரிகையின்படி, “உலகின் வடிவத்தை வரைபடமாக (காஸ்மோகிரஃபி) வரைய முதன்முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு வரையப்பட்ட வரைபடங்களில்” தாலமியின் படங்களே முதலில் இடம்பெற்றன.
1400-களின் பிற்பகுதியில் தாலமியின் படங்கள் அட்லஸில் அச்சிடப்படும்வரை வெகு சிலரே அவற்றைப் பற்றி அறிந்திருந்தனர். அதற்கு பிறகு கொலம்பஸ், கேபட், மெகல்லன், ட்ரேக், வெஸ்புகி போன்ற மாலுமிகளுக்கு அவைகள் புவியியல் குறிப்புகளின் ஆதாரமாயின. தாலமியின் மேப்பில் ஐரோப்பிய-ஆசிய நிலபரப்பு மிகைப்படுத்திக் காட்டப்பட்ட போதிலும், அவரது கோள வடிவ உலக மேப் இன்றும் நவீன மேப்புகளை ஒத்திருக்கின்றன. இவ்வாறு மிகைப்படுத்திக் காட்டியதால், “அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கொலம்பஸ் தன் கடல் பிரயாணத்தை மேற்கொண்டபோது, அங்கிருந்து ஆசியாவுக்குள்ள தூரத்தை குறைவாக மதிப்பிட்டார். இதன் விளைவாக, அவர் பயணத்தின்போது இடையில் அமைந்திருந்த புதிய உலகத்தை கண்டுபிடித்ததை உணரத் தவறினார்” என்று தி ரீடர்ஸ் டைஜஸ்ட் வேல்ட் அட்லஸ் குறிப்பிடுகிறது. புதிய உலகம் என்று அழைக்கப்பட்ட அது, அமெரிகோ வெஸ்புகி என்பவருக்குப் பிறகு அமெரிக்கா என்று பெயரிடப்பட்டது. பின்னர் 1507-ல் முதன்முதலாக உலக மேப்பில் சேர்க்கப்பட்டது.
கண்டுபிடிப்புகளின் சகாப்தத்தில், அதாவது 1500-1700 ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கடல் பிரயாணங்கள் மேப் வரைபவர்களுக்குத் தேவையான மிக துல்லிய தகவல்களைக் கொடுத்தன. அவர்களுடைய படங்கள், அல்லது மேப்புகள், யுத்த நடவடிக்கைக்குத் தேவையான ஆவணங்களாயின. அவை “அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த ஏதுக்கள்” என்றும் “யுத்தப் போராயுதங்கள்” என்றும் வர்ணிக்கப்பட்டன. மேப் வரைபவர்கள், இரகசியத்தை காப்பவர்களாய், தனிமையில் வேலை செய்பவர்களாய், அவர்களுடைய உயிரையும் கொடுத்து மேப்புகளைப் பாதுகாத்தனர். எதிரி ஒருவன் கப்பலில் ஏறிவிட்டால், கனமான பொருள் வைக்கப்பட்ட சாக்குப்பையில் மேப்புகளை போட்டு, கடலில் தூக்கி எறிந்துவிடுவர். நீண்ட காலமாக, தேசங்கள் தங்களுடைய அரசாங்க மேப்புகளை அதிக கவனமாக பாதுகாத்தனர்; மேலும், போர் காலங்களில் வெகு சிலரே அவற்றைப் பார்க்க முடியும்.
மேலும் மேலும் புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், பழைய எல்லைகளை திரும்பவும் வரையறுக்க வேண்டியதாயிற்று. ஜெர்மானிய புவியியல் வல்லுநர் கேரார்டுஸ் மெர்காடர் (1512-1594) இந்தத் தேவையை உணர்ந்து, அறிவியல் சார்ந்த மேப்புகளை முதன்முதலாக வரைந்தார். அவருடைய புத்தகத்தில், புராணக்கதைகளில் வரும் அட்லஸ் என்னும் ராட்சதனின் உருவத்தை பயன்படுத்தினார். அப்போதிலிருந்தே, மேப்புகளின் தொகுப்பிற்கு “அட்லஸ்” என்ற பெயர் வந்தது.
நவீன நாட்களில் கார்டோகிரஃபி
புவியியல் அறிவு அதிகமாக வளர வளர, மேப்புகளின் தரமும் உயர்ந்தது. இந்த வளர்ச்சியில் புதிய வரைபட தொழில் நுணுக்கங்கள் முக்கிய பாகத்தை வகித்தன. 19-ம் நூற்றாண்டின் கடைசியிலும், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆய்வாளர்களின் (சர்வேயர்கள்) கடினமான வேலையைக் குறித்து கனடியன் ஜியோக்ரஃபிக் பின்வருமாறு விவரிக்கிறது: “வெயிலிலும் குளிரிலும், குதிரைமீதும், படகிலும், கட்டுமரத்திலும் கால்நடையாகவும், . . . நகரங்களையும் வீட்டைச் சுற்றியுள்ள நிலங்களையும், காடுகளையும் வயல்களையும், சகதியான ரோடுகளையும் பூச்சிகள் நிறைந்த சதுப்பு நிலங்களையும் அவர்கள் அளந்தனர். தூரத்தை அளப்பதற்கு சர்வேயர்-செயின்களையும், கோணங்களை அளப்பதற்கு ட்ரான்சிட்டுகளையும் [டெலஸ்கோப் பொருத்தப்பட்ட தியோடலைட் என்னும் கருவி] பயன்படுத்தினர். நட்சத்திரத்தின் உதவியால் பெஞ்சு மார்க்குகளை [உயரத்தை குறிக்கும் ஒரு முறை] நிறுவினர். . . . சவுண்டிங் முறையில் கடற்கரையோர நீரின் ஆழத்தையும் அளந்தனர்.”
20-ம் நூற்றாண்டில், வரைபடக்கலை கிடுகிடுவென முன்னேறியது. கேமராக்கள் பொருத்தப்பட்ட விமானங்கள், வான் ஒளிப்படங்களை எடுக்க ஆரம்பித்தன. பிறகு, 1950-களில் பூமியைச் சுற்றிய செயற்கைகோள்கள், வரைபடக்கலையை விண்வெளி சகாப்தத்திற்கு கொண்டு சென்றன. ஒருசில ஆண்டுகளுக்கு முன் பூமியில் எந்தவொரு இடத்தையும் கணிப்பதற்கு பல மாதங்கள் எடுத்தன. ஆனால், 1980-களின் இறுதியில், புவி-இலக்கு அலைவாங்கிகள் மூலம் (global-positioning receivers) நில சர்வேயர்கள் இதை ஒரு மணி நேரத்திற்குள் துல்லியமாக செய்து முடித்தனர்.
இன்று கார்டோகிராஃபர்கள் எலக்ட்ரானிக்ஸ் உதவியோடு வரைகின்றனர். பூமியோடு தொடர்புடைய அதிநவீன கருவிகளைக் கொண்ட செயற்கைகோள்களின் உதவியால் அவர்கள் மேப்புகளை அவ்வப்பொழுது சரிசெய்கின்றனர். விசேஷித்த சாஃப்ட்வேர் புரோகிராமுள்ள கம்ப்யூட்டரில், கார்டோகிரஃபி சம்பந்தப்பட்ட தகவல்களையும், மற்ற கோடிக்கணக்கான தகவல்களையும் மேப் வரைபவர்கள் சேகரித்து வைக்க முடிகிறது. முன்பு, மேப்புகளை கையினால் வரைவது அதிக நேரம் எடுத்தது. ஆனால், இப்பொழுதோ குறிப்பிட்ட விவரங்களை உடைய மேப்பை ஒருசில நிமிடங்களில் வரைந்திடலாம்.
புவியியல் தகவல் அமைப்பின் (Geographic Information System [ஜிஐஎஸ்]) உதவியால், அப்போதைக்கப்போது கிடைக்கும் எல்லா விவரங்களையும் மேப்பில் பதிவு செய்ய முடியும். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நகர சாலைகளின் மேப்பை ஜிஐஎஸ் நொடிப்பொழுதில் தயாரித்து அளிக்கக்கூடும். அதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு வண்டிகளை பின்தொடரவும், அவற்றின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் முடியும். பால் பண்ணையாளர்களுக்குத் தேவையான மாட்டுத்தீவன உற்பத்தியை நிர்வகிக்கவும் முடியும்.
வரைபடம்—நிஜத்தின் பிரதிபிம்பமா?
“மேப்புகள் உண்மையற்றவையாக இருக்கலாம், ஆனால் அவை ஒருபோதும் ஒரு வேடிக்கை பொருள் அல்ல” என்று கவிஞர் ஹௌவர்ட் மெக்கார்டின் எழுதினார். உதாரணமாக, ஒரு பேப்பரில் கையால் வரைந்த மேப்பை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். அதில் நீங்கள் போகவேண்டிய வழி காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கிருந்து திரும்பி வருவதற்கான வழி காண்பிக்கப்படவில்லை எனில், அது வேடிக்கையான விஷயமில்லையே. எல்லா மேப்புகளும் உண்மையானதாகவும் நிஜத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கும் என நாம் ஒருவேளை எதிர்பார்க்கலாம். ஆனால், உண்மை என்னவெனில் எல்லா மேப்புகளும் அப்படி இருப்பதில்லை.
பழங்கால சுவடிகளைக் காப்பவர் ஒருவர், சுவரில் மாட்டுகிற, கனடாவின் க்யூபெக் மேப்பை வாங்கினார். அதில், அப்பட்டமான ஒரு தவறை பிறகு கவனித்தார். “லாப்ரடார் முழுசையும் க்யூபெக்கின் பகுதியாக காட்டியிருந்தாங்க” என்று அவர் விளக்குகிறார். “இந்த தப்பை என்னோட வேலை செய்யற ஃப்ரெண்டுகிட்ட சொன்னப்போ, இது கவனக்குறைவுனால வந்த தப்பில்ல; ஆனா, வேணும்னே தப்பா காட்டியிருக்காங்கன்னு அவரு சொன்னப்போ எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.” 1927-ல் லாப்ரடாருக்கும் க்யூபெக்கிற்கும் இடையில் எல்லைக்கோடு வரையறுப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் குறித்து க்யூபெக் திருப்தி அடையவில்லை எனத் தெரிகிறது; அதனாலேயே இந்த நிஜம் மேப்பில் காட்டப்படவில்லை.
தெரிந்தே செய்யப்பட்ட ஏமாற்று வேலைகளுக்கு உதாரணங்களாக அநேக மேப்புகளை அதே நண்பர் சுட்டிக் காட்டினார். பிற்பாடு இந்த சுவடி-காப்பாளர், கெனடியன் ஜியோகிரஃபிக் என்ற பத்திரிகையில், “ஏமாற்றும் மேப்புகள்“ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அதில் “ஒரு குறிப்பிட்ட கருத்தை ஆதரிக்கும் நோக்கில் மேப்புகள் சுலபமாக மாற்றி அமைக்கப்படுகிறது” என்று எடுத்துரைத்தார். மேலும், “மேப்புகள் எப்பொழுதும் நிஜத்தை அப்படியே பிரதிநிதித்துவம் செய்கின்றன என்றே எனக்கு கற்றுக்கொடுத்திருந்தார்கள். ஆனால், முழுவதுமே பொய்யான மேப்புகளும் இருக்கின்றன!” என எழுதினார்.
1991-ல், டொராண்டோவின் தி க்ளோப் அண்ட் மெயில் அறிவிப்பதாவது, “சோவியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் க்யூரைல் தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என்று சொல்லும் ஜப்பானிய அரசு அதிகாரிகளின் பிரதிநிதிகள், சர்ச்சைக்குரிய அந்த இடத்திற்கு வேறு நிறம் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர்.” நிறம் மாற்ற வேண்டும் என்று ஏன் அவர்கள் கேட்டனர்? நேஷனல் ஜியோக்ரஃபிக்கின் தலைமை கார்டோகிராஃபர் ஜான் கார்வர், ஜூனியர் இவ்வாறு விளக்குகிறார்: “மேப்பில் ஜப்பான் பச்சை கலரில் இருப்பதால், அவர்கள் நிறம் மாற்றப்பட வேண்டும் என்று விரும்பினார்கள்.”
எனவே, ஒரு குறிப்பிட்ட அம்சத்தை முக்கியப்படுத்திக் காண்பிக்கவோ அல்லது ஒரு குறிப்பிட்ட அம்சத்தோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கவோ மேப்பில் இருக்கும் நிறங்களை பயன்படுத்தலாம். உதாரணமாக, 1897-ல், க்ளாண்டைக்கின் கிளைநதியோரம் நெடுக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை வெட்டி எடுக்க சுமார் ஒரு லட்சம் பேர் அங்கு வந்து குவிய மேப்புகள் உதவின. மேப் தயாரிப்பவர்கள் அலாஸ்காவிற்கும் யுகானுக்கும் அடர்-மஞ்சள் நிறம் கொடுத்தனர்; இதன் மூலம் அந்த இடங்களில் தங்கம் அதிகம் கிடைக்கலாம் என மறைமுகமாக உணர்த்தினர்.
சில ஜனங்களுடைய மனப்பான்மை காரணமாக மேப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. உதாரணமாக, 1982-ல் “தலைகீழ் மேப்” தயாரிக்கப்பட்டது. அதில் தென் அரைக்கோளம் மேலே இருந்தது. ஏன் அந்தவிதமாக மாற்றினார்கள்? ஏனெனில், மேப்பின் மேலே இருந்தால் உயர்வான, மதிப்புக்குரிய நிலையை சுட்டிகாட்டுவதாக நினைத்தனர். தென் கோளத்தில் இருக்கும் ஏழை நாடுகள் மீது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதாக நினைத்தனர்.
வரைபடக் கலைஞர்களின் திறமைக்கு சவால்
நிஜத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று கார்டோகிராஃபர்கள் விரும்பினாலும், தட்டையான பரப்பில் மேப்பை வரைவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கோளப் பரப்பை தட்டையான தளத்தில் வரையும்போது உருவச் சிதைவு உண்டாகும். இது, உரித்த முழு ஆரஞ்சுப் பழத்தோலை தட்டையாக்க செய்யும் முயற்சிக்கு சமமாக இருக்கிறது. கண்டங்களின் வடிவம் துல்லியமாக இருந்தாலும், அவைகளின் அளவு விகிதம் வேறுபடுகிறது. எனவே, ஜான் கார்வர், ஜூனியர், இவ்வாறு சொல்கிறார்: “பூமியைக் கோள வடிவில் காட்டும் புவிக் கோளமே (க்ளோப்) துல்லியமான ஒரே மேப் ஆகும்.” ஆனால், க்ளோப்பை எல்லா இடத்திற்கும் தூக்கிச் செல்வது கடினமாதலால், தட்டையான, பல வண்ணங்களைக் கொண்ட உலக மேப் பயனுள்ளது மற்றும் பாராட்டிற்குரியது.
1988-ல் நேஷனல் ஜியோக்ரஃபிக் ஒரு புதிய உலக மேப்பை வெளியிட்டது. இதைப் பற்றி அறிவிக்கும் போது, வரைபடக் கலைஞர்கள் எதிர்ப்படும் சவாலை டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு விளக்குகிறது: “கண்டங்கள் மற்றும் கடல்களின் சரியான வடிவத்தையும் அளவையும் மேப்பில் உள்ள உருவங்கள் பெரும்பாலும் காண்பிப்பதில்லை.” நேஷனல் ஜியோக்ரஃபிக் சொஸைட்டியால் 1988-ல் வெளியிடப்பட்ட உலக மேப்பை, அதே சொஸைட்டியால் ஒருசில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட உலக மேப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால், நீங்களே இந்த உண்மையை எளிதில் புரிந்து கொள்வீர்கள்!
இந்த மேப்புகளில் காணப்படும் அடிப்படை வேறுபாடுகளைப் பற்றி டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “நேஷனல் ஜியோக்ரஃபிக் சொஸைட்டி அதனுடைய 1.1 கோடி அங்கத்தினர்களுக்கு இந்தப் புதிய உலக மேப்பை அனுப்பி இருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்த நேஷனல் ஜியோக்ரஃபிக்கின் மேப்போடு ஒப்பிடும்போது, சோவியத் யூனியன் பதினெட்டு மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இழந்திருக்கிறது; அதாவது, மூன்றில் இரண்டு பாகத்திற்கும் அதிகமான பகுதியை அது இழந்துவிட்டது.”
பூமியில் ஒரு இடத்தின் அளவை சரியான விகிதத்தில் மேப்பில் காட்டுவதற்கு, தாலமியின் காலத்தில் இருந்தே கார்டோகிராஃபர்கள் அரும்பாடுபட்டு வந்திருக்கிறார்கள். உதாரணமாக, நேஷனல் ஜியோக்ரஃபிக், 66 வருடங்களாக பயன்படுத்திய மேப்பில், அலாஸ்கா அதனுடைய உண்மையான அளவைவிட ஐந்து மடங்கு பெரியதாக இருந்தது! அமெரிக்காவின் கார்டோகிராஃபர்களில் அதிக அனுபவம் உடைய ஆர்தர் ராபின்சன் மேப்பைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்: “அறிவியலைப் போல் மேப் வரைதலும் ஒர் கலையே.” உருவச் சிதைவுகளால் ஏற்படும் பிரச்சினைகளை நாம் அறிந்திருப்பதால், ஆர்தரின் கூற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 1988-ல் நேஷனல் ஜியோக்ரஃபிக் சொஸைட்டி வெளியிட்ட மேப்பைக் குறித்து, “புவியியலையும் கலைச்சுவையையும் சமநிலைப்படுத்தி கிடைக்கப் பெற்ற மிகச் சிறந்த ஒன்று” என ஜான் கார்வர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேப்பின் எதிர்காலம் என்ன?
அநேக மக்கள் நினைப்பதைவிட மேப் வரைதல் அதிகத்தை உட்படுத்துகிறது. பூமியைப் பற்றி அறிவு பெருகப் பெருக, இன்னும் துல்லியமான மேப்புகள் கிடைக்கும். ஆனால், புவி அறிவு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆகவே, எழுத்தாளர் லாய்ட் ப்ரௌன் பல ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு சொன்னார்: “பல நூற்றாண்டுகளாக மனிதர் எதிர்பார்த்து கனவு காணும் மிகத் துல்லியமான உலக மேப் கிடைக்க வேண்டுமென்றால், எந்தவித பயமும் இல்லாமல் எல்லா மனிதர்களும் அயல் நாட்டவரின் கரையை நோக்கி கடலில் பிரயாணம் செய்யும் காலம் வரும் வரை, தடை ஏதுமின்றி அல்லது சுட்டுவீழ்த்தப்படுவோம் என்ற பயமின்றி எந்த நாட்டிலும் செல்ல முடியும் அல்லது எந்த நாட்டிற்கும் பறந்துசெல்ல முடியும் என்கிற காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் அது கிடைக்கலாம்.”
மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், பைபிள் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், கடவுளுடைய நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் முழு பூமியும் ஒன்றிணைக்கப்படும். அவரைக் குறித்து பைபிள் தீர்க்கதரிசனம் இவ்வாறு அறிவிக்கிறது: “ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார்.” (சங்கீதம் 72:8) எல்லை சச்சரவுகளும் அரசியல் போட்டிகளும் முழுமையாக நீக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று சண்டையிடும் தேசங்கள் இனி என்றுமே இல்லாமல் போகும்போது, எந்தப் பிழையும் இல்லாத, திருத்தமான ஓர் உலக மேப்பை வரைந்திடலாம்.
[பக்கம் 16, 17-ன் படம்]
தாலமியும் அவருடைய உலகப்படமும்
ஜெரார்டுஸ் மெர்காடர்
[படத்திற்கான நன்றி]
தாலமியும் மெர்காடரும்: culver pictures; தாலமியின் உலக மேப்: Gianni Dagli Orti/Corbis; க்ளோப்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.; background on pages 16-19: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck