நதிக்குருடு—ஒரு பயங்கரமான கொள்ளைநோயை வெல்லுதல்
நைஜீரியாவில் உள்ள விழித்தெழு! நிருபர்
அந்தக் காட்சியானது மேற்கு ஆப்பிரிக்காவின் பல நதிப்புற கிராமங்களைப் போன்றதாயிருந்தது. வாட்டும் சூரியனிலிருந்து தங்களுக்கு நிழல்தந்த ஒரு பெரிய மரத்தின்கீழ் ஒரு மக்கள்தொகுதி பெஞ்சுகளின்மீது உட்கார்ந்திருந்தது. அவர்களில் ஐவர்—நால்வர் ஆண்கள் மற்றும் ஒருவர் பெண்—முற்றிலும் குருடராகவும் நிரந்தரக் குருடராகவும் இருந்தனர்.
“தாங்கள் ஏன் பூர்வ கிராமத்தில் குருடராகிக் கொண்டிருந்தார்கள் என்று அறியாதிருந்தார்கள்” என்று தொள-தொளவென்று ஒரு வெண்மைநிற அங்கி தரித்திருந்த கிராமத்தலைவர் சொன்னார். “பெரும்பாலான முதியோர் அங்கு குருடர்களாகவே இறந்தனர். . . . தங்களுக்கு விரோதமாக ஏதோ பிசாசு இருந்ததாக அவர்கள் நினைத்தனர். தங்களைப் பாதுகாக்கும் பொருட்டு தாங்கள் வழிபடும் தெய்வங்களிடம் உருக்கமாகப் பிரார்த்தித்தனர். தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு உணவைப் படைக்குமாறு அவர்களுடைய மூதாதையர் கூறினர். ஆகவே அவர்கள் கோழிக்குஞ்சுகளையும் ஆடுகளையும் பலியாகக் கொன்றனர். ஆனாலும் இன்னும் அவர்கள் குருடர்களாகிக் கொண்டே இருந்தனர்.”
காலப்போக்கில், மருத்துவர்கள் வந்து குருட்டுத்தன்மை ஓர் ஆவித்தொடர்புடைய மூலத்திலிருந்து வரவில்லை என்று விளக்கினர். அது ஆங்க்கோஸெர்ஸியாஸிஸ், அல்லது நதிக்குருடு என்றும் அது அவ்விதம் பெயரிடப்பட்டிருப்பது, அதைப் பரப்பும் சின்னஞ்சிறிய கடிக்கும் ஈக்கள் தங்கள் முட்டைகளை வேகமாகப் பாய்ந்தோடும் நதிகளின்மீது இடுவதனாலேயாகும்.
சந்தோஷகரமாக, நதிக்குருடு மற்ற வெப்பமண்டலத்தைச் சார்ந்த நோய்களைப்போன்று எளிதில் பாதிக்கும் தன்மை கொண்டதல்ல. நகர்வாழ் மக்களையோ அல்லது தொற்றப்பட்ட பகுதிக்கு ஒரு முறை விஜயம் செய்யும் ஆட்களையோ அது பயமுறுத்தும் நிலையில் இல்லை. பல வருடங்களாக திரும்பத்திரும்ப பாதிக்கப்பட்ட பிறகுதான் குருட்டுத்தன்மை ஏற்படுகிறது.
என்றபோதிலும், நதிக்குருடு ஓர் அச்சந்தரும் வெப்பமண்டல நோயாகவும், இலட்சக்கணக்கானவர்களின் உயிரைப் பாழாக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது. மத்தியக்கிழக்கின் சில பகுதிகளிலும் மத்திப மற்றும் தென்னமெரிக்காவிலும் அது சீற்றங்கொண்டபோதிலும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிரிக்காவின் நிலநடுக்கோட்டுப் பகுதியிலுள்ள ஈக்கள் நிரம்பிய நதிகளுக்கருகில் வசிப்பவர்களும் வேலை செய்பவர்களுமே ஆவர். சில கிராமங்களில் நடைமுறையில் ஒவ்வொருவருமே இந்நோயைப் பெற்றுள்ளனர். அ.ஐ.மா., ஜார்ஜியா, அட்லான்டாவிலுள்ள கார்ட்டர் நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டதன்படி, சுமார் 12 கோடியே 60 இலட்சம் மக்கள் பாதிக்கப்படும் அபாயநிலையில் உள்ளனர். இன்னும் 1 கோடியே 80 இலட்சம் மக்கள் தங்கள் உடல்களில் நதிக்குருட்டிற்குக் காரணமான ஒட்டுண்ணிப்புழுக்களை எடுத்துச்செல்கின்றனர். ஏற்கெனவே பகுதியாகவோ முழுவதுமாகவோ குருடானவர்களின் எண்ணிக்கை 10-லிருந்து 20 இலட்சத்திற்குள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இப்போது, நூற்றாண்டுகளாக இருந்துவரும் கொள்ளைநோய் WHO (உலக சுகாதார அமைப்பு) மற்றும் வேறு நிறுவனங்களின் ஐக்கியப்பட்ட முயற்சிகளினால், பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களோடு சேர்ந்து அடக்கியாளப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்காவின் பெரும்பாலும் கொடுமையான மற்றும் நம்பிக்கையற்ற நிலைக்கு எதிராக, இது நன்கு வேலை செய்யும் ஒரு நோய்க்-கட்டுப்பாடு திட்டமாக இருக்கிறது. “இருபதாம் நூற்றாண்டின் மதிப்புவாய்ந்த மருத்துவ மற்றும் மேம்பாட்டு வெற்றிகளுள் ஒன்றாக” இத்திட்டம் வாழ்த்தப்படுகிறது.
ஒரு பயங்கரமான கொள்ளைநோய்
நதிக்குருடு பெண் கறுப்பு ஈக்களின் (ஸிமுலியம் இனம்) பல இனங்களால் பரப்பப்படுகிறது. நோய்தொற்றப்பட்ட ஈ ஒரு மனிதரைக் கடிக்கும்போது, அது ஓர் ஒட்டுண்ணிப்புழுவின் (ஆங்க்கோஸெர்ஸா வல்வுலஸ்) லார்வாக்களைப் படியவைக்கிறது. மெதுவாக, நோய்தொற்றப்பட்ட மக்களின் தோலுக்கடியில், லார்வாக்கள் முதிர்ச்சியடைந்து 60 சென்டிமீட்டர் நீளமான புழுக்களாக விரிவடைகின்றன.
அவை சினைப்படுத்தப்பட்ட பிறகு, பெண் புழுக்கள் ஒவ்வொன்றும் மைக்ரோஃபிலரியாக்கள் என்று அழைக்கப்படும் சின்னஞ்சிறிய புழுக்களை உண்டாக்க ஆரம்பிக்கின்றன, இதை 8 முதல் 12 வருடங்கள் வரை அவை தொடர்ந்து செய்வதால், கோடிக்கணக்கானவற்றை உண்டாக்குகின்றன. கறுப்பு ஈயால் எடுத்துச்செல்லப்பட்டு, அதனுள்ளேயே விரிவாகி, ஒரு மனிதனுக்குள் கடத்தப்பட்டாலொழிய மைக்ரோஃபிலரியாக்கள் பெரிதாக வளருவதில்லை. பெரும்பாலும், இச்சின்னஞ்சிறிய, முதிராத புழுக்கள் தோலினூடாக தொற்றி ஏறி, காலப்போக்கில் கண்களைத் தாக்கலாம். ஒரு பலியாளில் சுமார் 20 கோடி புழுக்கள் கூடிக்கொண்டிருக்கலாம். அவை அத்தனையாகப் பெருகியிருப்பதால் தோலின் மிகச்சிறிய துண்டுகளைச் சீவியெடுப்பதை நோய்க்கண்டுபிடிப்பு உட்படுத்துகிறது. ஒரு நுண்ணோக்கியினடியில், தோலின் ஒரு மாதிரி, நூற்றுக்கணக்கான வளைந்து நெளியும் நுண்புழுக்களை வெளிக்காட்டலாம்.
இந்த ஒட்டுண்ணிகள் தங்களுடைய மனித பலியாட்களை வாதிக்கின்றன. வருடம் கடந்துசெல்கையில் தொற்றப்பட்டவரின் தோல் தடித்து செதில் போலாகிறது. பொதுவாக நிறமிழப்புப் படலங்கள் தோன்றுகின்றன. முதலைத்தோல், பல்லியின் தோல் அல்லது சிறுத்தைத்தோல் என்றெல்லாம் பரவலாக விளக்கிச் சொல்லப்படுபவற்றைப் பலியாட்கள் விருத்தி செய்கின்றனர். அரிப்புணர்ச்சி தீவிரமடைவதால், அறிக்கை காண்பிக்கிறபடி அது சிலரைத் தற்கொலை செய்துகொள்ளும்படியும் தூண்டியிருக்கிறது. இளம்புழுக்கள் கண்களைத் தாக்கினால், காலப்போக்கில் பார்வை பழுதடைகிறது, மேலும் பலியானவர் முற்றிலும் குருடாகிறார்.
கறுப்பு ஈ எங்கும் பரவியுள்ள ஏழ்மையான, நாட்டுப்புறங்களில், குருட்டுத்தன்மை தாங்கிக்கொள்ள விசேஷித்த வகையில் கடினமான ஒரு சுமையாக உள்ளது. ஒரு காரணம், கிராம மக்கள் பலர் குருட்டுத்தன்மை தெய்வீக தண்டனையின் ஒரு விளைவு என்றும், குருடர்கள் தங்கள் சமுதாயங்களில் பயனற்றவர்கள் என்றும் மூடநம்பிக்கை கொண்டுள்ளனர். மற்றொரு காரணம், அரசு சார்ந்த சமூகநலன்கள் ஏதும் இல்லாததால், பலியாட்கள் முற்றிலும் தங்கள் குடும்பங்களைச் சார்ந்திருக்கும்படி செய்வதாகும். பர்க்கினா ஃபாஸோவில் நதிக்குருட்டிற்கு பலியான ஸாட்டா என்ற ஒரு பெண் சொன்னார்: “ஒரு குருடருக்கு, அவர் ஓர் ஆணாக இருந்தாலும், அல்லது பெண்ணாக இருந்தாலும், துன்பம் ஒன்றுதான். ஓர் இளம் பெண் குருடாகவும் திருமணமாகாமலும் இருந்தால், அவள் ஒரு கணவனைப் பெறமாட்டாள். நான் குருடானதற்கு முன்பு திருமணமானேன், ஆனால் என் கணவன் மரித்தார். என் சகோதரன் இளைஞனாயிருக்கும்போது குருடானதால், ஒரு மனைவியைப் பெற முடியவில்லை. நாங்கள் இருவருமே எங்கள் குடும்பங்களால் ஆதரிக்கப்படுகிறோம்—உணவுக்காகவும், எல்லாவற்றுக்காகவும். அது மிக மோசமானது.”
நதிக்குருடு பொதுவாயுள்ள பகுதிகளில், மக்கள் விலகியோடுவதற்கு ஈயாலும் நோயாலும் கட்டாயப்படுத்தப்படுவதால் பொதுவாக தங்கள் கிராமங்களை விட்டுச் செல்கின்றனர். நீரையடுத்துள்ள வளமான நிலம் கவனிக்கப்படாமல் தரிசுநிலமாகி விடுகிறது. அதன் காரணமாக, இது, ஏழ்மையையும் பஞ்சத்தையும் அளிக்கிறது.
கறுப்பு ஈயை எதிர்த்துப் போராடுதல்
ஏழு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நதிக்குருடைக் கட்டுப்படுத்தும் சர்வதேச முயற்சிகள் 1970-களின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. நோயை எடுத்துச்செல்லும் கறுப்பு ஈயைத் தாக்கும் வகையில், லார்வாக்களைக் கொல்லும் மற்றும் உயிர்ச்சிதைவை ஏற்படுத்தும் புழுக்கொல்லிகளோடும் பூச்சிக்கொல்லிகளோடும் ஹெலிகாப்டர்களும், சிறிய ஆகாயவிமானங்களும், லாரிகளும் இறங்கின. கறுப்பு ஈ, அதிக தாக்கப்படும் நிலையில் இருக்கையில்—அதன் புழுப்பருவத்தின்போது—அதைத் தாக்கி, அதைக் கொல்லுவதே குறிக்கோளாக இருந்தது.
நதிகள் முழுவதையும் நச்சுப்படுத்தவேண்டிய தேவை இருக்கவில்லை. பெண் கறுப்பு ஈக்கள் தங்கள் முட்டைகளை தண்ணீரின்மீது இடுகின்றன என்றும் அம்முட்டைகள் பாய்ந்தோடும் ஆற்றுப்பரப்பிற்கு அடியிலுள்ள கிளைகளோடும் பாறைகளோடும் ஒட்டிக்கொள்கின்றன என்றும் அனுபவம்வாய்ந்தவர்கள் அறிந்தனர். வெளிவரும் லார்வாக்கள் உயிரோடிருப்பதற்குத் தேவையான அதிகளவு ஆக்ஸிஜனை வேகமாகப் பாய்ந்தோடும் தண்ணீர்கள் மட்டுமே அளிக்கின்றன. இது, நதிகளுக்கருகில் குஞ்சுபொறிக்கும் இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாயும் கண்டுகொள்ளப்படுபவையாயும் இருந்ததை அர்த்தப்படுத்தின.
குஞ்சுபொறிக்கும் இடங்களில் மருந்து தெளிப்பதன் நோக்கம் கறுப்பு ஈக்களை முற்றிலும் அகற்றுவதற்கு அல்ல, அது ஒரு கூடாத காரியம். ஆனால் ஈக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம், ஒட்டுண்ணி கடத்தப்படும் சங்கிலித்தொடர் முறிக்கப்படக்கூடும் என்று அனுபவம்வாய்ந்தவர்கள் நம்பினர். ஈக்கள் குறைவது தொற்றுநோய் புதிதாகப் பரவுதல் குறைவதை அர்த்தப்படுத்தும். கோட்பாட்டளவில், ஏற்கெனவே நோய்தொற்றப்பட்ட மக்களில் இருந்துகொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் படிப்படியாக மரிக்கும்வரை ஈக்கள் நசுக்கப்பட்டால், ஓர் ஒட்டுண்ணியும் மீந்திராத காலம் வரும். ஆகவே, ஓர் ஈ ஒருவரைக் கடித்ததனால், மற்றவர்களுக்குக் கடத்துவதற்காக ஒட்டுண்ணிகளைச் சேகரிக்காது.
இத்திட்டம் சவாலிடுவதாய் இருந்தது. ஈக்கள், சென்றடையக் கடினமாயுள்ள பல இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும், அவை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பறக்கக்கூடுமாதலால், ஒரு பரந்த அளவிலான பரப்பளவில் கறுப்பு ஈக்களை எதிர்த்துப் போராடவேண்டியுள்ளது. மேலுமாக, ஒரு மாதமளவிற்கு அசட்டையாக இருந்துவிட்டால்கூட பல்லாண்டு செய்த வேலையை வீணாக்கும் வகையில் ஈயின் இனப்பெருக்கம் மீண்டும் தலையெடுக்கக்கூடுமாதலால், தனிப்பட்ட விழிப்புணர்ச்சியைத் தேவைப்படுத்தும்.
1970-களில் ஆரம்பித்து, நெடுந்தொலைவிலுள்ள பாய்ந்தோடும் நீர்நிலைகளின்மீது 19,000 கிலோமீட்டருக்கு மேல் ஆகாயவிமானம் குறிப்பாகத் தெளித்தது. அதன் விளைவாக, இத்திட்டத்தில் பங்குகொண்ட நாடுகளில் பாதிக்கப்பட்ட 80 சதவீத இடங்களிலிருந்து இந்நோய் அகற்றப்பட்டது.
ஆண்டுக்கொருமுறை ஓரிரு மாத்திரைகள்
அதன்பிறகு, நதிக்குருடுக்கு எதிரான போராட்டத்தில் 1987-ல் ஆரம்பித்து, மற்றொரு கருவி புதிதாக உபயோகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இம்முறை, கறுப்பு ஈயைத் தாக்குவதற்குப் பதிலாக, மனித உடலுக்குள் இருந்த ஒட்டுண்ணிகளின்மீது குறி வைக்கப்பட்டது. அந்தக் கருவி, அமெரிக்க ஃபார்மஸூட்டிகல் கம்பெனி ஒன்றின் ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்பட்ட, மெக்டஜன் (ஐவர்மெக்டின்) என்று பெயரிடப்பட்ட பாதுகாப்பான மற்றும் பலன்தரும் மருந்தாக இருந்தது.
நோயின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு, நோய்த்தொற்றப்பட்டவர் ஒருவர் ஒரேவொரு முறை—ஓரிரு மாத்திரைகள்—ஒவ்வொரு ஆண்டும் எடுக்கவேண்டும். மெக்டஜன் முதிர்ந்த ஒட்டுண்ணிப்புழுக்களை உடலிலிருந்து கொல்லுவதில்லை, ஆனால் அது மிக நுண்ணிய புழுக்களைக் கொல்லுவதன்முலம், முதிர்ந்தவை இன்னுமதிக மைக்ரோஃபிலரியாக்களை உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்துகிறது. இது பலியானவரில் நோய் வளர்ச்சியடைவதை நிறுத்துகிறது, மேலும் மற்றவர்களுக்கு நோய் கடத்தப்படுவதைக் குறைக்கிறது. இந்த மருந்து விழிவெண்படலத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட காயங்களை குணமாக்கி, மற்ற காயங்கள் இன்னும் மோசமாகாதபடி தடுக்குமளவிற்கு வேலை செய்கிறது. ஆனாலும், அது கண்களின் பழைய காயங்களைச் சீர்ப்படுத்தவோ அல்லது ஒரு முறை குருடானபின் மீண்டும் பார்வையளிக்கவோ முடியாது.
என்றபோதிலும், பிரச்சினையானது, பகிர்ந்தளிப்பதில்—தேவையிலிருக்கும் மக்களுக்கு மருந்து போய்ச்சேருவதில்—இருந்தது. நெடுந்தொலைவிலுள்ள ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழும் திரளானவர்கள் கால்நடையாகத்தான் சென்றெட்டப்பட முடியும். ஒரு வாகனத்தைப் பயன்படுத்துவது, புதர்களை நீக்குவதையோ அல்லது பாலங்கள் கட்டுவதையோகூட பொதுவாக தேவைப்படுத்துகிறது. சில சமயங்களில் சமூகவிரோதம், மூலதனம் குறைவுபடுதல், மற்றும் உள்ளூர் ஆட்சிமுறைகள் பகிர்ந்தளிப்பதிலுள்ள கஷ்டங்களை அதிகரிக்கின்றன. இருந்தபோதிலும், இத்தகைய தடைகளிருந்தாலும், 1995-ன் ஆரம்பத்தில் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் சுமார் 3 கோடியே 10 இலட்சம் மெக்டஜன் மாத்திரைகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
வருங்கால எதிர்பார்ப்புகள்
கடந்த 20 வருடங்களாக, ஆங்க்கோஸெர்ஸியாஸிஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், பிரான்ஸைப் போன்று 3 மடங்கு பரப்பளவைக் கொண்ட 11 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நதிக்குருடுக்கு எதிராகப் போராடியுள்ளது. விளைவுகள் என்னவாக இருந்திருக்கின்றன? WHO-வின் மதிப்பின்படி, புழுக்கொல்லிகளையும் மெக்டஜனையும் சேர்த்து உபயோகித்ததானது, இந்தப் பழங்கால மற்றும் பயங்கரமான கொள்ளைநோயால் முன்பு ஒருமுறை பயமுறுத்தப்பட்ட மூன்று கோடிக்கும் மேலான மக்களைப் பாதுகாக்கும்வகையில் வேலைசெய்துள்ளது. ஒட்டுண்ணியால் வினைமையாகத் தொற்றப்பட்ட 15 இலட்சத்திற்கும் மேலான மக்கள் இப்போது முற்றிலும் குணமடைந்துள்ளனர். மேலுமாக, நதிக்குருடைக் கீழ்ப்படுத்துவது சுமார் 6 கோடி ஏக்கர் பரப்பளவுள்ள விளைநிலத்தை—சுமார் 1 கோடியே 70 இலட்சம் மக்களுக்கு ஒரு வருடத்திற்கு உணவளிக்கப் போதுமான நிலத்தை—பண்படுத்திப் பயிர்செய்வதற்கென்றும் விடுவிக்கிறது.
போர் முடிவடையவேயில்லை. நதிக்குருடு எதிர்த்துப்போராடப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகள் பாதியளவிற்கும் குறைவாகவே நோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டுள்ளன.
சமீப வருடங்களில் நோயை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. இரண்டே வருடங்களில், 1992 முதல் 1994 வரை, மெக்டஜனால் வைத்தியம் செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை, 54 இலட்சத்திலிருந்து 1 கோடியே 10 இலட்சமாக இரண்டு மடங்குக்கும் மேலாகியது. 1994-ன் பிற்பகுதியில் ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்தியக்கிழக்கிலுள்ள சுமார் 32 நாடுகள் மெக்டஜன் வைத்தியத் திட்டங்களை நிறுவியிருந்தன. அவை, காலப்போக்கில் சுமார் 2 கோடியே 40 இலட்சம் மக்களைக் குருடாவதிலிருந்து பாதுகாக்கலாம்.
பான் அமெரிக்க சுகாதார அமைப்பு அமெரிக்க நாடுகளில் ஒரு பொது உடல்நல பயமுறுத்தலாயிருந்த இந்நோயை 2002 வருடவாக்கில் முற்றிலும் நீக்கிவிடும் நம்பிக்கையில் உள்ளது. மெய்தான், ஆப்பிரிக்காவில் இவ்வேலை கடினமாயுள்ளது. என்றபோதிலும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி கூறுகிறது: “இப்போது குருட்டுத்தன்மையுடன் வளர்ந்துவரும் சந்ததி, பார்வையிழப்பு வயோதிபத்தின் ஒரு சாதாரண பங்காக இருந்துவந்திருக்கிற இடங்களில் முன்புபோல எதிர்கால பயமுறுத்தலை அளிக்கிறதில்லை என்பது ஏற்கெனவே தெளிவாயுள்ளது.”
குருட்டுத்தன்மையால் பயமுறுத்தப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைப்பற்றி அறிவது இருதயத்திற்கு அனலூட்டுகிறது. தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது, இயேசு கிறிஸ்து குருடர்களாயிருந்த பலருக்கு அற்புதமாகப் பார்வையளிப்பதன் மூலம் அன்பார்ந்த அக்கறையையும் காட்டினார். (மத்தேயு 15:30, 31; 21:14) கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பூமியில் நடக்கவிருக்கும் காரியங்களை சிறியளவில் இது காட்டியது. நிச்சயமாகவே, எந்தவிதக் குருட்டுத்தன்மையாலும் ஒருவரும் கொடுமைப்படுத்தப்படாத காலம் வந்துகொண்டிருக்கிறது. கடவுளுடைய வார்த்தை முன்னுரைக்கிறது: ‘அப்போது குருடரின் கண்கள் திறக்கப்படும்.’—ஏசாயா 35:5.
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
“அவர்கள் குருட்டுத்தன்மைக்காக ஆவிகளைக் குற்றஞ்சாட்டுபவர்களாய் இருந்தனர். இப்போது, புழுக்கள்தான் காரணம் என்று அவர்களுக்குத் தெரியும்”
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
ஆண்டுக்கொருமுறை ஓரிரு மாத்திரைகள் நதிக்குருடைத் தடுக்கலாம்