பார்வையற்றோர்—அவர்களுக்கு என்ன நம்பிக்கை?
ஜான் மில்டன் என்பவர் முழு குருடராக இருந்தபோதிலும், பாரடைஸ் லாஸ்ட் மற்றும் பாரடைஸ் ரீகெய்ன்ட் என்ற தன்னுடைய காப்பியங்களை இயற்றினார். குருடும் செவிடுமாக இருந்தது, ஹெலன் கெலரை, உடல்நலக் குறைகளை உடையவர்களுக்கு உதவுவதிலிருந்து தடுத்து நிறுத்தவில்லை. ஆம், பார்வையற்ற அநேகர் நன்றாகச் சமாளித்துக்கொள்கிறார்கள். ஆனால் எல்லாரும் நல்ல பார்வையை அனுபவிக்க முடியுமென்றால், எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கு அன்பான ஒருவரோ ஒரு நண்பரோ குருடராக அல்லது குறைந்த பார்வையை உடையவராக இருந்தால் நீங்கள் இதை முக்கியமாக ஒத்துக்கொள்ளக்கூடும்.
சில நாடுகளில், பார்வை குறைவுபடும் மக்களுக்கு தினசரி வாழ்க்கையின் முறைமைகளை மறுவாழ்வுத் திட்டங்கள் கற்பிக்கின்றன என்பது மெய்யே. பிரெய்லும் பயிற்றுவிக்கப்பட்ட வழிநடத்தும் நாய்களும், பார்வையற்றவர்கள் தங்களுடைய பல தேவைகளைக் கவனித்துக்கொள்ள உதவுகின்றன. என்றபோதிலும், பல மக்கள், கண் தெரியாமையை மிக மோசமான குறைபாடாகக் கருதுகின்றனர். ஒரு எழுத்தாளர் இவ்வாறு உறுதியாகக் கூறினார்: “பார்வையற்றிருப்பது, நம்முடைய புலனுணர்விற்குரிய உலகின் மிக முக்கியமான பகுதிக்குள் செல்வதற்கான திறமையை இழப்பதாகும்.” அதே நேரத்தில், அநேகர் மற்றவர்கள்மீது அதிகப்படியாகச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.
பார்வையற்ற நிலைமை ஏன் அவ்வளவு பரவலாக இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கக்கூடும். கண்ணிமையரிப்பு நோயைப்பற்றி (trachoma) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுமார் 90 லட்சம்பேர் பார்வையிழப்பதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. அதைக் குறித்து தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது: “அந்த நோய் தொற்றுவதாகவும் மோசமான சுகாதார சூழ்நிலைகளில் மக்கள்தொகுதிகள் நெருக்கடியில் கூடிவாழும் இடங்களில் தழைப்பதாகவும் இருக்கிறது. கழுவுவதற்கான தண்ணீர் தட்டுப்பாடும் மனித கழிவினிடமாக கவர்ந்திழுக்கப்படும் எண்ணற்ற ஈக்களும் இந்த நோய் பரவுவதற்கு உதவுகின்றன. சில வழிகளில், கண்ணிமையரிப்பு நோய் ஒரு மருத்துவ பிரச்சினையாக இருப்பதைவிட அதிகமாக ஒரு சமூக பிரச்சினையாக இருக்கிறது; வாழ்க்கைத் தராதரங்கள் முன்னேற்றுவிக்கப்பட முடிந்து, அளவுக்கதிகமான நெருக்கடி குறைக்கப்பட்டு, ஈக்களின் தொல்லை நீக்கப்பட்டு, போதுமான தண்ணீர் வழங்கும் வசதிகள் செய்யப்பட்டால், கண்ணிமையரிப்பு நோய் நிகழ்வு விரைவில் குறைந்துவிடுகிறது.” ஏறக்குறைய இன்னும் பத்து லட்சம் பேர் ஆன்கோசெர்கையஸெஸ் நோயால் துன்பப்படுகின்றனர். அல்லது நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோயை (xerophthalmia) பற்றியென்ன? பெயர் கஷ்டமானதாக இருந்தாலும், உண்மை என்னவென்றால், பார்வையின்மைக்கு அது ஒரு பொதுவான காரணமாக இருக்கிறது. நீரிழிவு, தொண்டை அடைப்பான், தட்டம்மை, செங்காய்ச்சல், மற்றும் பாலின உறவுகளால் கடத்தப்பட்ட நோய்களும் பார்வையின்மைக்கு வழிநடத்தக்கூடும்.
நமக்கு வயதாகையில், நம் ஒளித்திரையிலுள்ள மாக்குலா சீர்கெடுதல், கண்நீர் அழுத்தம் (glaucoma) போன்ற கோளாறுகள் காரணமாக நம்முடைய பார்வை குறையக்கூடும். விழிப்புரைகளின் (cataracts) பாதிப்பையும் நாம் விட்டுவிடமுடியாது. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது: “உலகில் பல நாடுகளில், பார்வையின்மைக்கான காரணங்களின் பட்டியலில் விழிப்புரை இன்னும் உயரளவிலேயே இருக்கிறது; மேலும் இது அதிக கவலைக்குரியதாய் இருக்கிறது ஏனென்றால், இதை அறுவை சிகிச்சையின்மூலம் அவ்வளவு எளிதாகக் குணப்படுத்தலாம்.”
கண் மருத்துவயியலில் புதிய கண்டுபிடிப்புகள் இருப்பினும், பார்வையின்மையை முழுமையாக நீக்கிப்போடுவது நீண்ட எதிர்காலத்திற்குரியதாகத் தோன்றுகிறது. அதே என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “பார்வையின்மையைத் தடுத்தலிலும் அதற்குரிய மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையிலும் ஏற்படும் முன்னேற்றங்கள், மருத்துவ கவனிப்பிற்கு வாய்ப்புவசதிகளை உடைய மக்களுக்கு மட்டுமே பயனுடையவையாய் இருக்கும். உலக மக்கள்தொகையின் பெரும்பகுதியினரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தராதரங்களை முன்னேற்றுவிக்க முடியும்வரையாக, தடுக்கப்படக்கூடிய பார்வையின்மை தற்போதைய உயரளவிலேயே நிலைத்திருக்கும்.”
பார்வையின்மைக்கு எதிரான போராட்டத்தில், நுண்ணுயிர்க் கொல்லிகளும் அறுவை சிகிச்சையும் நிச்சயமாக அவற்றிற்குரிய இடத்தைக் கொண்டிருந்தாலும், நிரந்தரமான குணப்படுத்துதலுக்கான நம்பிக்கையானது, கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சம்பவித்த ஏதோ ஒன்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
இயேசுவின் நாளில் பார்வையற்றோரைக் குணப்படுத்துதல்
தூசி நிறைந்த சாலை வழியாக, தன்னுடைய 30 வயதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு மனிதர் நடந்துசெல்வதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் கடந்துசெல்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, சாலையருகே இருந்த இரண்டு குருடர்கள் இவ்வாறு சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்: “எங்களுக்கு இரங்கும்”! பார்வையாளர்கள் அவர்களைப் பேசாமலிருக்கும்படி அதட்டியபோதிலும், அந்தக் குருடர்கள் “எங்களுக்கு இரங்கும்” என்று சத்தமாகக் கூப்பிட்டார்கள். அந்த மனிதர் தயவாகக் கேட்கிறார்: “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள்”? ஆவலுடன் அவர்கள் பதிலளிக்கிறார்கள்: “எங்கள் கண்களைத் திறக்கவேண்டும்.” இப்போது கற்பனைசெய்து பாருங்கள்: அந்த மனிதர் அவர்களுடைய கண்களைத் தொடுகிறார்; அவர்கள் உடனே பார்வையை அடைகிறார்கள்!—மத்தேயு 20:29-34.
முன்பு பார்வையற்றிருந்த இந்த மனிதர்களுக்கு என்னே ஓர் சந்தோஷம்! என்றாலும், பார்வையின்மை அவ்வளவு பரவலானதாக இருக்கிறது. இது ஒரே ஒரு சம்பவம் மட்டுமே. அது ஏன் உங்களுடைய கவனத்தை ஈர்க்கவேண்டும்? ஏனென்றால், நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே அந்தக் குருடர்களுக்குத் தயவாகப் பார்வையை அளித்தவர். உண்மையில், ‘தரித்திரருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்படி அபிஷேகம் செய்யப்பட்டது’ மட்டுமல்லாமல், இயேசு, ‘குருடர்கள் பார்வையைத் திரும்ப பெறும்படி செய்வதற்காகவும் அனுப்பப்பட்டார்.’—லூக்கா 4:18, 19.
கடவுளுடைய வல்லமையான பரிசுத்த ஆவியின் மூலமாகச் செய்யப்பட்ட அப்படிப்பட்ட அற்புதகரமான குணப்படுத்துதல்களைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். நாம் வாசிக்கிறோம்: “ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.” (மத்தேயு 15:31) அப்படிப்பட்ட குணப்படுத்துதல்களில், எந்தப் பணத்திற்குமில்லாமல், அல்லது தன்னைப்பற்றி பகட்டாரவாரம் செய்யாமல், அல்லது, தன் சொந்த மகிமையைத் தேடாமல், யெகோவா தேவனின் அன்பையும் இரக்கத்தையும் இயேசு சிறப்பித்துக் காட்டினார். என்றபோதிலும், “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்த” ஆவிக்குரிய விதத்தில் பார்வையற்றும் உதவியற்றுமிருந்த மக்களிடமும் இயேசு பரிவுடையவராய் இருந்தார்.—மத்தேயு 9:36.
அப்படிப்பட்ட வரலாறு அக்கறையூட்டுவதாய் இருந்தாலும், இன்றைய நிலைமையைப் பற்றியதென்ன என்று நீங்கள் யோசிக்கக்கூடும். இயேசு செய்ததுபோல் இன்று மக்களை ஒருவரும் குணப்படுத்துவதில்லை என்பதால், அந்தக் குணப்படுத்துதல்கள் நமக்கு அர்த்தமுடையனவாய் இருக்கின்றனவா? பார்வையற்றவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? பின்தொடரும் கட்டுரையைத் தயவுசெய்து வாசியுங்கள்.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“உலக மக்கள்தொகையின் பெரும்பகுதியினருடைய ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தராதரங்களை முன்னேற்றுவிக்க முடியும்வரையாக, தடுக்கக்கூடிய பார்வையின்மை தற்போதைய உயரளவிலேயே நிலைத்திருக்கும்.”—தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா