மிகவும் அசட்டை செய்யப்பட்ட நமது காலத்து கலைஞர்
“இயற்கை என்பது கடவுளின் கலைவேலைப்பாடு.”—சர் தாமஸ் ப்ரௌன், 17-ம் நூற்றாண்டு மருத்துவர்.
லியனார்டோ டா வின்ஸி, ரெம்ப்ராண்ட், வேன் காக்—இந்தப் பெயர்களெல்லாம் லட்சக்கணக்கான ஆட்களுக்குத் தெரிந்த பெயர்களே. இவர்கள் தங்கள் கைப்பட வரைந்த ஓவியங்களில் ஒன்றையும் ஒருபோதும் நேரில் பார்த்திருக்கக்கூடமாட்டீர்கள், இருப்பினும் இந்த மனிதர்களெல்லாம் மிகச் சிறந்த ஓவியர்கள் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இவர்களுடைய கலைவேலைப்பாடுதானே, ஒருவகையில் இவர்களை அழியாப் புகழ் பெற்றவர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது.
புதிரான ஒரு புன்முறுவலை, உணர்ச்சிகளை ஊடுருவும் ஒரு சித்திரத்தை, படைப்பிலுள்ள அழகின் ஒரு காட்சியை அவர்கள் துணியில் ஓவியமாகத் தீட்டினர். அது இன்றும்கூட பார்ப்பவரின் கற்பனையைத் தொடுகிறது. நூற்றாண்டுகள் நம்மை அவர்களிடமிருந்து பிரித்தாலும் அவர்களைக் கவர்ந்ததெதுவோ அதுவே நம்மையும் கவர்ந்திழுக்கிறது.
நாம் கலைஞர்களாகவோ கலைத் திறனாய்வாளர்களாகவோ இல்லாமல் இருக்கலாம், எனினும் கலைத்திறத்தின் நேர்த்தியை நம்மால் உணரமுடிகிறது. நாம் போற்றுகிற வேலைப்பாட்டின் கலைஞனைப் போலவே நமக்கும் அழகை உணர்ந்து ரசிப்பதற்கான திறமை இருக்கிறது. வண்ணம், வடிவம், அலங்கார அமைப்புகள், ஒளி ஆகியவற்றை உணர்ந்துகொள்வதற்கான நம்முடைய திறமையை நாம் ஏனோதானோவென்று எடுத்துக்கொள்கிறோம், ஆனால் இது நம்முடைய வாழ்க்கையின் பாகமாக இருக்கிறது. கண்ணுக்கு இனிய பொருட்களையோ ஓவியங்களையோ வைத்து நம் வீடுகளை அலங்கரிக்க விரும்புகிறோம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ரசனைகள் வித்தியாசப்பட்டாலும், அழகை உய்த்துணரக்கூடிய இந்தத் திறமையானது, மனிதவர்க்கத்தினர் பெரும்பாலானோருக்கு இருக்கும் பொதுவான ஒரு பரிசாக இருக்கிறது. இது நம்மை நமது படைப்பாளரோடு நெருங்க ஈர்க்கக்கூடிய பரிசாக இருக்கிறது.
அழகின் பரிசு
அழகை உணருவதற்கான திறமை, மனிதவர்க்கத்தை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் அநேக குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. “அழகை ரசிப்பதற்கான திறமையுள்ள விலங்கு என்று மனிதனை விவரிக்கக்கூடும்,” என்பதாக சுமா ஆர்ட்டிஸ்—இஸ்டோர்யா ஹெனரால் டெல் ஆர்ட்டெ (கலையைப் பற்றிய விரிவு ஆராய்ச்சிநூல்—கலையின் பொது வரலாறு) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. நாம் விலங்குகளைவிட வித்தியாசப்பட்டவர்களாக இருப்பதால், படைப்பை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறோம். அழகான ஒரு சூரிய அஸ்தமனத்தை ஒரு நாய் போற்றுகிறதா?
நம்மை அவ்வாறு படைத்தது யார்? “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்,” என்று பைபிள் விளக்குகிறது. (ஆதியாகமம் 1:27) நம்முடைய முதல் பெற்றோர் தோற்றத்தில் கடவுளைப் போலவே இருந்தார்கள் என்பதல்ல. அதைவிட தமக்கு இருக்கும் குணாதிசயங்களை கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார் என்பதாகும். இதில் ஒன்றுதான் அழகை ரசிப்பதற்கான திறமை.
அறிந்துகொள்ள முடியாத ஏதோவொரு செயல்பாட்டினால் மனித மூளை அழகை உணர்ந்துகொள்ளுகிறது. முதலாவதாக, நம்முடைய கவனத்தைக் கவரும் பொருட்களின் சப்தங்கள், வாசனைகள், வண்ணங்கள், வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவலை நம் புலனுணர்வுகள் மூளைக்குக் கடத்துகின்றன. ஆனால் அழகோ, வெறுமனே நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றை நமக்குத் தெரியப்படுத்தும் இந்த மின்ரசாயன உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தத்தைவிட அதிகமாக இருக்கிறது. ஒரு மரத்தையோ, பூவையோ, அல்லது பறவையையோ ஒரு விலங்கு எவ்விதத்தில் பார்க்கிறதோ அவ்விதத்தில் நாம் பார்ப்பதில்லை. இந்தப் பொருட்கள் நமக்கு உடனடியான எந்த நடைமுறை பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போனாலும், எப்படியோ அவை நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. அவற்றின் அழகின் மதிப்பை உணர்ந்துகொள்ள நம்முடைய மூளை நமக்கு உதவுகிறது.
இந்தத் திறமை நம்முடைய உணர்ச்சிகளைத் தொட்டு, நம்முடைய வாழ்க்கைக்கு வளமூட்டுகிறது. ஸ்பெய்னில் வாழும் மேரி, பல வருடங்களுக்குமுன் நவம்பர் மாதம் ஒரு மாலைவேளையில் ஒதுக்கமாயுள்ள ஏரிக்கரையோரத்தில் நின்று சூரியன் மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்ததை தெளிவாக நினைத்துப் பார்க்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நாரைகள் ஒன்றுக்கொன்று அழைப்பு விடுத்து, அலையலையாய்த் திரண்டு என்னை நோக்கி பறந்துவந்தன. சிலந்தி வலைப் பின்னலைப் போன்று ஆயிரக்கணக்கான பறவைகள் செவ்வானத்தினூடே கோர்வையாய்ப் பறந்துசென்றன. ரஷ்யாவிலிருந்தும் ஸ்காண்டிநேவியாவிலிருந்தும் தொடங்கும் அவற்றின் வருடாந்தர இடப்பெயர்ச்சிப் பயணம் அவற்றை இந்த ஸ்பானிய ஓய்விடத்திற்குக் கொண்டுவந்திருந்தது. அந்த அனுபவம் அவ்வளவு இனிமையாக இருந்ததால் அது என்னை அழ வைத்தது.”
அழகின் இந்தப் பரிசு எதற்கு?
அழகை உணர்ந்துகொள்ளும் திறமை, தம்முடைய அறிவுள்ள படைப்பு தம் கலை வேலைப்பாடுகளை ரசித்து மகிழவேண்டும் என்று விரும்பும் அன்பான படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை அநேகருக்குத் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறது. அழகை உணர்ந்துகொள்வதற்கான நம்முடைய திறமைக்கு அன்பான ஒரு படைப்பாளரையே காரணராகக் காண்பது எவ்வளவு நியாயமானதாகவும் திருப்தியளிப்பதாகவும் இருக்கிறது. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்றும், பகிர்ந்துகொள்ளுதலே அன்பின் சாராம்சமாக இருக்கிறது என்றும் பைபிள் விளக்குகிறது. (1 யோவான் 4:8; அப்போஸ்தலர் 20:35) யெகோவா படைப்புத் திறன் மிக்க தம்முடைய வேலைப்பாடுகளை நம்மோடு பகிர்ந்துகொள்ளுவதில் ஆனந்தம் அடைந்திருக்கிறார். மிகவும் இனிமையான ஒரு இசை கேட்கப்படாமல் போனாலோ அல்லது எழில்மிகுந்த ஒரு ஓவியம் பார்க்கப்படாமல் போனாலோ, அவற்றின் அழகு இழக்கப்படும். பகிர்ந்துகொள்வதற்கும் ரசித்து மகிழ்வதற்கும்தான் கலையானது படைக்கப்படுகிறது—ரசிப்பவர்கள் இல்லையென்றால் அது உயிரற்றதாகிவிடுகிறது.
ஆம், யெகோவா அழகானவற்றை ஒரு நோக்கத்தோடுதான்—பகிர்ந்துகொள்வதற்கும் ரசித்து மகிழ்வதற்கும்தான் படைத்தார். உண்மையில், நம்முடைய முதல் பெற்றோரின் வீடு, “இன்பம்” என்று அர்த்தப்படும் ஏதேன் என்று அழைக்கப்படுகிற பரந்த பரதீஸிய பூங்காவாக இருந்தது. கடவுள் இந்தப் பூமியை தம்முடைய கலைவண்ணங்களால் நிரப்பியதுமட்டுமன்றி, அவற்றைக் கவனிப்பதற்கும் போற்றுவதற்குமான திறமையையும் மனிதவர்க்கத்திற்கு கொடுத்திருக்கிறார். மிகுதியான என்னே அழகு காண்பதற்கு இருக்கிறது! பால் டேவீஸ் கூறியதுபோல “ஆர்வத்துக்குரிய, செழுமையான அண்டத்தை உருவாக்குவதற்கு இயற்கை ‘விசேஷித்த முயற்சிகள் எடுப்பதாக’ சிலவேளைகளில் தோன்றுகிறது.” அண்டத்தைப்பற்றி ஆராய்வதற்கும் அதை அனுபவித்து மகிழவும் தேவையான திறமையோடு நம்மைப் படைப்பதற்கு யெகோவா ‘விசேஷித்த முயற்சிகளை எடுத்திருக்கும்’ சரியான காரணத்தால்தான் இந்த அண்டம் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் செழுமையானதாகவும் இருப்பதாக நாம் காண்கிறோம்.
இயற்கையின் அழகை உணர்ந்துகொள்ளுதலும், அதை காப்பியடிப்பதற்கான ஆசையும், குகை ஓவியர்கள் முதற்கொண்டு பாவியல் கலைஞர்கள் (Impressionists) வரையுள்ள எல்லா பண்பாட்டினருக்கும் பொதுவானதுதான். ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் ஸ்பெய்னின் வடபகுதியில் குடியிருந்தவர்கள், காண்ட்டேப்ரியாவிலுள்ள அல்டாமிரா குகைகளில் விலங்குகளின் விளக்கமான படங்களை வரைந்து வைத்தனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னால், பாவியல் கலைஞர்கள் தங்களுடைய ஸ்டூடியோவிற்கு வெளியே வந்து வயலில் பூத்துக்குலுங்கும் மலரின் வண்ணங்களின் காட்சிகளையோ, தண்ணீர்மேல் ஒளிபடும்போது ஏற்படும் மாறுபட்ட அலங்கார அமைப்பையோ வரைய முயன்றனர். சிறு பிள்ளைகளும்கூட அழகான பொருட்களை உடனடியாக உணர்ந்துகொள்ளுகின்றனர். மெய்யாகவே, பென்ஸில்களும் பேப்பர்களும் அவர்களிடம் கொடுக்கப்படும்போது அவர்கள் பார்க்கின்ற எதுவும் தங்களுடைய கற்பனாசக்தியைக் கவர்ந்திழுக்குமானால், அதை வரைய மிகவும் ஆசைப்படுகின்றனர்.
இப்பொழுதெல்லாம், வயதுவந்தவர்களில் அநேகர், தங்களைக் கவர்ந்த அழகான காட்சியை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்காக அதை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் நம்முடைய மனதோ, ஒரு கேமரா இல்லாமலே, நாம் பல பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிற அழகான பொருட்களின் உருவங்களை ஞாபகப்படுத்திப் பார்க்கமுடிகிற திறமை படைத்ததாய் இருக்கிறது. தெளிவாகவே, தாம் நேர்த்தியாக அலங்கரித்து வைத்த பூமியாகிய நம்முடைய வீட்டை நாம் மகிழ்ந்து அனுபவிக்கும் திறமையோடு கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். (சங்கீதம் 115:16) இருப்பினும் அழகை ரசிப்பதற்கான திறமையைக் கடவுள் நமக்குக் கொடுத்ததற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.
‘அவருடைய குணாதிசயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன’
இயற்கையில் காணப்படும் கலைத் திறனுக்கான நம்முடைய போற்றுதலை அதிகரிப்பதானது, நம்மைச் சூழ்ந்திருக்கும் கைத்திறமுள்ள வேலைப்பாடுகளையெல்லாம் படைத்த நம்முடைய படைப்பாளரை அறிந்துகொள்ள நமக்கு உதவக்கூடும். கலிலேயாவில் வளர்ந்துவரும் காட்டு மலர்களைக் கூர்ந்து கவனிக்கும்படி இயேசு ஒரு சந்தர்ப்பத்தில் தம் சீஷர்களிடம் சொன்னார். அவர் சொன்னதாவது: “காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 6:28, 29) ஒரு அற்பமான காட்டு மலரின் அழகு, கடவுள் மனித குடும்பத்தின் தேவைகளை அசட்டை செய்யவில்லை என்பதை நமக்கு ஞாபகமூட்ட உதவக்கூடும்.
ஒரு மனிதனை அவனுடைய “கனிகளினாலே” அல்லது கிரியைகளினாலே நாம் தீர்மானிக்கமுடியும் என்றும்கூட இயேசு சொன்னார். (மத்தேயு 7:16-20) எனவே, கடவுளுடைய கலை வேலைப்பாடுகள் அவருடைய ஆளுமையின்பேரில் நமக்கு உட்பார்வையை அளிக்கும் என்று மட்டுமே நாம் எதிர்பார்க்கலாம். ‘உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும் அவருடைய குணாதிசயங்களில்,’ சில யாவை?—ரோமர் 1:20.
“கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்,” என்று வியந்து கூறினார் சங்கீதக்காரன். (சங்கீதம் 104:24) பூமியின் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் “தீட்ட” அவர் உபயோகித்திருக்கும் வண்ணங்களை வைத்தேகூட கடவுளுடைய ஞானத்தை புரிந்துகொள்ளமுடியும். “வண்ணம் மனதுக்கும் கண்களுக்கும் பேரின்பத்தைத் தருகிறது,” என்று ஃபாப்ரிஸ் மற்றும் ஜெர்மானி தங்களுடைய கோலோரெ, டிஸிண்யோ எட் எஸ்ட்டாட்டிகா நெலார்ட்டெ க்ராஃபிக்கா (வண்ணம்—ஓவியக்கலையில் அழகும் அமைப்பும்) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகின்றனர். கண்ணுக்கு இதமாக இருந்து மனதைக் கட்டியெழுப்பும் இணக்கமான மற்றும் முரண்பாடான வண்ணங்கள் எங்கும் இருக்கின்றன. ஆனால் கண்ணுக்கு மிகவும் பகட்டாகத் தெரிவது பளபளக்கும் வானவில்போன்ற வண்ணங்களால் ஏற்படுத்தும் வண்ண விளைவுகளாக ஒருவேளை இருக்கலாம். இது ஞானமான அமைப்புமுறைக்கான ஒரு தெளிவான அத்தாட்சி.
வானவில்போன்ற வண்ணங்கள் முக்கியமாக தேன்சிட்டுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. a அவற்றின் சிறகுகளை அவ்வளவு பிரகாசமாக மினுங்கவைப்பது எது? அவற்றின் தனிச்சிறப்பு வாய்ந்த இறகுகளின் மேல்பாகத்தின் மூன்றிலொரு பகுதி—ஒருவகையில் பட்டகம் செய்வதைப்போலவே—சூரிய ஒளியை தெளிவான வானவில்போன்ற வண்ணங்களாகப் பிரிக்கின்றன. தேன்சிட்டுகளுக்கு இருக்கும் மாணிக்கம், நீலமணி, மரகதம் போன்ற பொதுப் பெயர்கள் அணிகலன்களைப் போன்ற இந்தப் பறவைகளை அலங்கரிக்கிற மிளிரும் சிகப்புகளுக்கும், நீலங்களுக்கும், பச்சைகளுக்கும் அத்தாட்சி அளிக்கின்றன. “நேர்த்தியான இந்தப் படைப்புகளின் மகத்தான அழகின் நோக்கம் என்ன?” என்று தேன்சிட்டுகள் என்ற தனது ஆங்கில புத்தகத்தில் கேட்கிறார் குட்வின். “இதுவரை அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்டது வரை, காண்பவரை மயக்குவதைத் தவிர பூமியில் அதற்கு வேறு எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை,” என்று அவர் பதிலளிக்கிறார். நிச்சயமாகவே எந்தவொரு மனித ஓவியனும் இத்தகைய வண்ணங்களை இதுவரை தீட்டியது கிடையாது!
இடிமுழக்கம்போன்ற பேரிரைச்சலோடு விழும் நீர்வீழ்ச்சி, ஏறியிறங்கும் கடலோதங்கள், மோதும் கடலலைகள், அல்லது ஒரு காட்டில் வானுயர வளர்ந்துநிற்கும் மரங்கள் புயல்வேக காற்றில் அசைந்தாடுதல் ஆகியவற்றில் இருந்து கடவுளுடைய வல்லமையை நாம் புரிந்து கொள்ளலாம். அபாரமான சக்திவாய்ந்த இந்தக் கலை வேலைப்பாடு அமைதியான ஒரு காட்சி மனதில் பதிவதுபோலவே மனதில் ஆழப்பதிவதாய் இருக்கக்கூடும். கலிபோர்னியாவைச் சேர்ந்த சியர்ரா நிவாடாவில் உள்ள டக்லஸ் ஃபிர் மரக்காடு ஒன்றில் ஒரு புயற்காற்றால் ஏற்படுத்தப்பட்ட விளைவைப் பற்றி பிரபல அமெரிக்க இயற்கை நிபுணர் ஜான் முயிர் ஒருமுறை இவ்வாறு விவரித்தார்:
“அவை இளையவையாக இருந்தாலும் சுமார் 100 அடி உயரமானவையாக இருந்தன. வளைந்துகொடுப்பதாகவும் தூரிகைபோன்றும் இருந்த அவற்றின் நுனிபாகங்கள் இயற்கையின் திளைப்பில் அசைந்தாடி சுழன்றன. . . . மெல்லிய நுனிக்கிளைகள் எழுச்சியுண்டாக்கும் கனமழையில் படபட என்று அடித்துக்கொண்டு அதிகபட்ச விசிப்பொலி உண்டாக்கின. முன்னோக்கியும் பின்னோக்கியும், வட்டவட்டமாகவும் வளைந்து சுழன்றன. அப்போது விவரிக்கமுடியாத குத்துநிலை மற்றும் கிடைநிலை வளைவுகளின் சேர்வுகளை உருவாக்கின.” சங்கீதக்காரன் ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் எழுதியதுபோல, ‘பெருங்காற்று கர்த்தரைத் துதிக்கிறது’—அது அவருடைய அசாதாரணமான வல்லமையின் மாதிரியை நமக்குக் கொடுக்கிறது.—சங்கீதம் 148:8, 12.
ஒரு பறவை வெகுகாலமாகவே ஜப்பானியர்களுக்கு அன்பின் சின்னமாக இருந்துவந்திருக்கிறது. இது அழகான ஜப்பானிய நாரை. இதன் நுட்பமான காதல்சந்திப்பு நடனங்கள் எந்தவொரு பாலே நடனத்தைப் போன்றும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. இந்த நாட்டியப் பறவைகள் ஜப்பானில் “விசேஷித்த இயற்கை நினைவுச்சின்னம்” என்று வகைப்படுத்தப்படும் அளவுக்கு விலைமதிக்கத்தக்கவையாய் இருக்கின்றன. நாரைகள் வாழ்நாள் முழுவதும் ஜோடியாக இணைந்து 50 வருடங்களுக்கோ அதற்கு அதிகமான காலத்திற்கோ வாழலாம். ஆகவேதான் ஜப்பானியர்கள் இந்த நாரைகளை திருமணத்தில் நேர்மையின் சிகரமாகக் கருதுகின்றனர்.
கடவுளுடைய அன்பை பற்றி என்ன? ஆர்வத்துக்குரிய வகையில், யெகோவா தமக்கு உண்மைத்தன்மையோடு இருப்பவர்களை அன்புடன் பாதுகாப்பதை, தாய்ப் பறவை தனது குஞ்சை கடுமையான காலநிலையிலிருந்து பாதுகாக்க தன்னுடைய இறக்கைகளைப் பயன்படுத்துவதற்கு ஒப்பாக பைபிள் பேசுகிறது. “தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிற” கழுகைப்பற்றி உபாகமம் 32:11 பேசுகிறது. குஞ்சு கூட்டைவிட்டு வெளியேறி பறக்க உற்சாகப்படுத்துவதற்காக தாய்ப் பறவை இவ்வாறு செய்கிறது. அபூர்வமாகப் பார்க்கப்பட்டபோதிலும், கழுகுகள் தங்களுடைய செட்டைகளின்மேல் சுமந்து செல்வதன்மூலம் தங்களுடைய குஞ்சுகளுக்கு உதவி செய்த சம்பவங்களைப்பற்றி தகவல்கள் இருக்கின்றன.—சங்கீதம் 17:9.
நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கை உலகை நாம் உற்று நோக்கும்போது, குறிப்பிட்ட சில நியமங்கள் செயலில் இருப்பதை நாம் கவனிக்கிறோம். அவையும்கூட கடவுளுடைய ஆளுமையின் அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.
பல்வகைமை வாழ்க்கையின் உயிரூட்டம்
பல்வகைமை கடவுளுடைய கைவேலைப்பாட்டில் உடனடியாக வெளிப்படுகிற ஒன்றாக இருக்கிறது. தாவரங்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவற்றின் பல்வகைமை பிரமிக்கவைக்கிறது. ஒரேவொரு ஹெக்டேர் வெப்பமண்டலக் காட்டில் 300 வித்தியாசப்பட்ட மர வகைகளும், 41,000 வகை பூச்சிகளும்; மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 1,500 வகை வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கலாம்; ஒரேவொரு மரத்தில் மட்டும் 150 வகை வண்டுகளும் இருக்கலாம்! இரண்டு மனிதர்கள் ஒரே மாதிரி இல்லாதிருப்பதுபோலவே ஓக் மரங்களிலும் அல்லது புலிகளிலும் இருப்பதில்லை என்று சொல்லப்படலாம். மனிதக் கலைஞர்கள் மத்தியில் உயர்வாய் போற்றப்படும் பண்பாகிய தற்பண்பு (originality) இயற்கையின் உள்ளியல்பான பாகமாக இருக்கிறது.
சந்தேகமின்றி, இயற்கையில் உள்ள கலையின் ஒருசில அம்சங்களை மட்டுமே சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறோம். அதை மிகக்கூர்ந்து கவனிப்போமானால், கடவுளுடைய ஆளுமையின் இன்னுமநேக அம்சங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு கடவுளால் கொடுக்கப்பட்ட நம்முடைய கலைத்திறத்தை உபயோகப்படுத்தவேண்டும். தலைசிறந்த கலைஞரின் கலைத்திறத்தை இன்னும் அதிகமாகப் போற்ற நாம் எப்படி கற்றுக்கொள்ளலாம்?
[அடிக்குறிப்புகள்]
a வெப்பமண்டல அமெரிக்காவைச் சேர்ந்த பிரில்லியண்ட் புளூ மார்ஃபோஸ் போன்ற அநேக வண்ணத்துப் பூச்சிகளுக்கு அவற்றின் இறக்கைகளில் வானவில்போன்ற வண்ணங்கள் இருக்கின்றன.
[பக்கம் 7-ன் பெட்டி]
நம்மைப் படைத்தது யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்
பைபிள் மொழிபெயர்ப்பாளர் ரானல்ட் நாக்ஸ் ஒருமுறை அறிவியல் அறிஞர் ஜான் ஸ்காட் ஹால்டேனோடு கடவுளைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். “லட்சக்கணக்கான கிரகங்களைக் கொண்ட இந்த அண்டத்தில், இக்கிரகங்களில் குறைந்தது ஒன்றிலாவது உயிர் தோன்றியேயாக வேண்டுமல்லவா?” என்று விவாதித்தார் ஹால்டேன்.
“சர், ஸ்காட்லண்ட் யார்டு உங்களுடைய ட்ரங்க்குப் பெட்டியில் ஒரு சடலத்தைக் கண்டுபிடித்துவிட்டால், ‘உலகத்தில் லட்சக்கணக்கான ட்ரங்க்குப் பெட்டிகள் இருக்கின்றன. நிச்சயமாகவே அவற்றில் ஒன்றிலாவது ஒரு சடலம் இருக்கவேண்டுமே’ என்று அவர்களிடத்தில் சொல்வீர்களா? இருப்பினும் சடலத்தை யார் அங்கே போட்டது என்று தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்,” என்று பதிலளித்தார் நாக்ஸ்.—தி லிட்டில், ப்ரௌன் புக் ஆஃப் அனிக்டோட்ஸ்.
தெரிந்துகொள்ளும் நம்முடைய ஆர்வத்தினால் மட்டுமல்லாமல் வேறொரு காரணத்துக்காகவும்—நாம் தகுந்த புகழை அவருக்கு உரித்தாக்குவதற்கும்—நம்மைப் படைத்தது யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். திறமைவாய்ந்த ஒரு ஓவியனுடைய ஓவியத்தை வீம்புபிடித்த திறனாய்வாளன் ஒருவன், பெயிண்ட் கடையில் தற்செயலாக ஏற்பட்ட சம்பவத்தைவிட ஒன்றும் அவ்வளவு பிரமாதம் இல்லையென்று விவரிப்பானானால் அந்த ஓவியன் எவ்வாறு பிரதிபலிப்பான்? அதைப்போலவே, இந்த அண்டத்தைப் படைத்த படைப்பாளரின் கலைத்திறத்திற்கு குருட்டாம்போக்கில் தற்செயலாக நடந்த நிகழ்ச்சியைக் காரணமாகக் காட்டுவதைவிட, அவரை நாம் அதிகம் மட்டந்தட்டமுடியுமா?
[படத்திற்கான நன்றி]
Courtesy of ROE/Anglo-Australian Observatory, photograph by David Malin
[பக்கம் 9-ன் படம்]
பறந்துசெல்லும் நாரைகள்
ஸ்பெய்னின் அல்டாமிராவில் குகை ஓவியங்கள்
[பக்கம் 9-ன் படங்கள்]
டால்ஃபின்கள், தேன்சிட்டுகள், நீர்வீழ்ச்சிகள், இவையெல்லாம் தலைசிறந்த கலைஞருடைய ஆளுமையின் அம்சங்களை வெளிப்படுத்துகின்றன
[படத்திற்கான நன்றி]
Godo-Foto
G. C. Kelley, Tucson, AZ
Godo-Foto