இன்றைய விஞ்ஞானப் புனைகதையை—கண்ணோட்டமிடுதல்
வாகனங்கள், தொலைபேசிகள், கம்ப்யூட்டர்கள் — இவற்றின் கண்டுபிடிப்பை, 130 ஆண்டுகளுக்கு முன்பே யாராவது ஒருவர், முன்காட்சியாக ஒருவேளைக் கண்டிருக்க முடியுமா? விஞ்ஞானப் புனைகதை (SF) எழுத்தாளர் ஜூல்ஸ் வர்ன் கண்டார்! சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஜூல்ஸ் வர்னின் இருபதாம் நூற்றாண்டில் பாரிஸ் என்ற தலைப்பைக் கொண்ட ஆங்கில நாவலின் கையெழுத்துப் பிரதியில் இந்தப் பிரமிப்பூட்டும் விஞ்ஞான உட்பார்வைகள் காணப்பட்டன. முன்பு வெளியிடப்படாத இந்த நாவலில், நவீன காலத்து ஃபேக்ஸ் மெஷினை ஒத்திருக்கும் அதிசயமான ஒரு சாதனத்தைக் குறித்தும்கூட விவரித்திருக்கிறார்!a
ஆயினும், கூர்மதியுடைய அநேக விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்களும்கூட உண்மையான தீர்க்கதரிசிகள் என்னும் இலக்கை அடைவதில் பல ஒளியாண்டுகள் தவறியிருக்கிறார்கள். உதாரணமாக, பூமியின் மையத்திற்குப் பயணம் (ஆங்கிலம்) என்ற ஜூல்ஸ் வர்னின் நாவல் படிப்பதற்குக் கவர்ச்சியூட்டுவதாக உள்ளது, ஆனால் அத்தகைய ஒரு பயணத்தை மேற்கொள்ளுதல் கூடாதகாரியம் என்று இப்போது விஞ்ஞானிகள் அறிந்திருக்கிறார்கள். அல்லது முன்பே சிலர் குறிப்பிட்டவாறு, ஜூப்பிட்டர் அல்லது மற்ற கோள்களுக்கு மனிதனை ஏற்றிக்கொண்டு செல்லும் பயணம், 2001-ம் வருடத்தில் பெரும்பாலும் நடக்குமென்று தோன்றவில்லை.
நடந்தேறி இருக்கின்ற பிரமிக்கவைக்கும் பல விஞ்ஞான முன்னேற்றங்களையுங்கூட விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்கள் முன்னுரைக்க தவறினார்கள். மாதாந்திர அட்லாண்டிக் (ஆங்கிலம்) பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில், விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் தாமஸ் எம். டிஷ் ஒத்துக்கொள்கிறார்: “SF கற்பனைசெய்ய தவறிய தன்னாள்வியல் [கம்ப்யூட்டர்] சகாப்தம் . . . , கண்ணாடி அறை விளைவு அல்லது ஓஸோன் அடுக்கில் சேதம் அல்லது எய்ட்ஸ் ஆகிய அனைத்தையும் கவனியுங்கள். புதிய நிலவியல் சார்ந்த அரசியலின் (geopolitical) சமநிலையற்ற அதிகாரத்தைக் கவனியுங்கள். இவை அனைத்தையும் கவனமாய்ப் பார்த்தப்பிறகு, இவற்றைப்பற்றி SF என்ன சொல்கிறது என்று கேளுங்கள். கிட்டத்தட்ட ஒரு வார்த்தைகூட இல்லை.”
விஞ்ஞானப் புனைகதை—பெரும் தொழில்
நிச்சயமாகவே, விஞ்ஞானப் புனைகதை ஒரு ஊகிக்கப்பட்ட விஞ்ஞானமாக ரசிகர்களுக்கு இராமல், பொழுதுபோக்காக இருக்கிறது. அப்படியிருந்தும், அதனுடைய மதிப்பை அந்த அம்சத்திலும்கூட சவால்விடுவோர் இருக்கிறார்கள். விஞ்ஞானப் புனைகதைகளுக்குத் தனி கவனம் செலுத்தின, மலிவான காகிதங்களில் அச்சிடப்பட்ட பத்திரிகைகள் வெளியிடப்பட்டபோது, விஞ்ஞானப் புனைகதை ஒரு தரம் குறைந்த இலக்கியம் என்ற பெயரை இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் பெற ஆரம்பித்தது. இவற்றுள், பிரமிக்கவைக்கும் கதைகள் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை முதன் முதலில் 1926-ல் விற்பனைக்கு வெளிவந்தது. இதனை துவக்கிவைத்த யுகோ ஜர்ன்ஸ்பாக் ஒரு வார்த்தையை உருவாக்கியதற்காகப் போற்றப்படுகிறார், அதுவே “விஞ்ஞானப் புனைகதை” என்ற பதமாக உருபெற்றது. இந்த உணர்ச்சிமிக்க பரபரப்பான வீரதீர கதைகளில் ஒருவேளை இலக்கிய பண்பு இருந்தால் அது மிகவும் கொஞ்சம் என்று பலர் உணருகிறார்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் விஞ்ஞானப் புனைகதை அதிக கருத்தூன்றி கருதப்படலாயிற்று. அந்தப் போரில் விஞ்ஞானம் வகித்த வியக்கவைத்த பங்கு விஞ்ஞானத்திற்குப் புதிய மதிப்பைக் கொடுத்தது. விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்கள் முன்னுரைத்தவை அதிக நம்பகமானது என தோன்ற துவங்கியது. ஆகவே, விஞ்ஞானப் புனைகதை காமிக்ஸ், பத்திரிகைகள், தாள் அட்டையிட்ட நூல்கள் அதிகரிக்கத் துவங்கின. மிக அதிகளவில் விற்பனையாகும் நூல்களின் வரிசையை, கெட்டியான அட்டையிடப்பட்ட விஞ்ஞானப் புனைகதை புத்தகங்கள் எட்டிப்பிடித்தன. ஆனால் விஞ்ஞானப் புனைகதை, மக்கள் சந்தையின் எதிர்பார்ப்புகளைச் சந்திக்க போராடும்போது, இலக்கிய தராதரம்—விஞ்ஞானப்பூர்வமான திருத்தத்தன்மை—பெரும்பாலும் இரையாக்கப்படுகிறது. “பெரும் எண்ணிக்கையான தரம்குறைந்த கற்பனை நாவல்களையும்,” சேர்த்து இப்போது “ஓரளவு படிக்கத்தகுந்ததாய் உள்ளவையும் மற்றும் மிதமான பொழுதுபோக்கு அம்சம் உள்ளவையும்கூட” வெளியிடப்படுகின்றன என்று விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ராபர்ட் ஏ. ஹைய்ன்லைன் புலம்புகிறார். “இரண்டாம் தரமான சரக்கும்” கூட அச்சிடப்படுகின்றன என்று எழுத்தாளர் அர்சல கே. லஜின் மேலும் கூறுகிறார்.
இத்தகைய கருத்து வெளிப்பாடுகளின் மத்தியிலும், குறிப்பிடத்தக்க புகழ்விளம்பரத்தை, விஞ்ஞானிகளால் அல்ல, ஆனால் திரைப்படத் தொழிலால் பெற்றுக்கொண்டு, புகழின் புதிய உச்சநிலைகளை விஞ்ஞானப் புனைகதை எட்டியிருக்கிறது.
வெள்ளித்திரையில் விஞ்ஞானப் புனைகதை
1902-லிருந்து விஞ்ஞானப் புனைகதை திரைப்படங்கள் வெளிவரத் துவங்கின, அப்போது எ டிரிப் டூ தி மூன் என்ற திரைப்படத்தை ஜார்ஜ் மேல்யெஸ் தயாரித்தார். அதற்குப்பின் திரைப்படத்திற்குச் செல்லும் இளம் தலைமுறையினர் பிளாஸ் கார்டென் என்ற திரைப்படத்தால் வசீகரிக்கப்பட்டார்கள். ஆனால் 1968-ல், மனிதன் நிலவில் இறங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வெளிவந்த 2001: எ ஸ்பேஸ் ஆடசி என்ற திரைப்படம், கலைநய அங்கீகாரத்தைப் பெற்றதோடு, வியாபார ரீதியிலும் வெற்றியைக் கண்டது. விஞ்ஞானப் புனைகதை திரைப்படங்களுக்கென்று பெரிய பட்ஜட்டை ஒதுக்கிட இப்போது ஹாலிவுட் துவங்கியுள்ளது.
1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் ஆரம்பத்திலும் வெளிவந்த ஏலியன், ஸ்டார் வார்ஸ், பிளேடு ரன்னர் மற்றும் ஈடி: தி எக்ஸ்ட்ராடெரஸ்டிரியல் போன்ற திரைப்படங்கள், ஐ.மா. திரை அரங்கங்களின் வருமானத்தில் பாதியை அள்ளிவழங்கின. நிச்சயமாகவே, விஞ்ஞானப் புனைகதையால் அளிக்கப்பட்ட ஜுராஸ்ஸிக் பார்க், எல்லா காலத்துக்குமான மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்றாகும். அந்தப் படத்தின் கதாபாத்திரங்களைத் தழுவி சுமார் 1,000 விற்பனைப்பொருட்கள் வந்து குவிந்தன. டிவியும் களத்தில் குதித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்டார் டிரக் என்ற பிரபல தொலைக்காட்சி படம், விண்வெளியைப் பற்றிய கூடுதலான எண்ணற்ற நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமாயிற்று.
ஆயினும், பெரும்பான்மையினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதன் மூலம் விஞ்ஞானப் புனைகதைக்கு ஓரளவு மதிப்பைக் கொடுத்த பண்புகளையும்கூட சில விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்கள் தியாகம் செய்துவிட்டதாகப் பலர் உணருகிறார்கள். ‘இப்போது, விஞ்ஞானப் புனைகதை வெறுமனே ஒரு பிரபலமான வணிகக்குறியாக இருக்கிறது, இனிமேலும் அதன் பொருளடக்கத்தால் அல்ல, ஆனால் வியாபார நுணுக்கங்களால் அடையாளம் காணப்படுகிறது,’ என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆசிரியர் கார்ல் மிக்காயேல் ஆர்மர் வாதிடுகிறார். இன்றைய விஞ்ஞானப் புனைகதை திரைப்படங்களின் உண்மையான “நட்சத்திரங்கள்” மனிதர் அல்ல, ஆனால் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுக்கப்பட்ட காட்சிகளும், ஓசைகளுமே என்று மற்றவர்கள் புலம்புகிறார்கள். “அதன் பல காட்சிகள் அருவருப்பானவை மற்றும் கீழ்த்தரமானவை,” என்றும்கூட ஒரு திறனாய்வாளர் கூறுகிறார்.
உதாரணமாக, விஞ்ஞானப் புனைகதை என்று அழைக்கப்படும் பல திரைப்படங்கள் விஞ்ஞானத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ இல்லை. வன்முறையைச் சித்தரிப்பதற்கென்றே சிலசமயங்களில் எதிர்கால நிகழ்வின் பின்னணிகள் வெறுமனே மேடையின் பின் திரையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய பல விஞ்ஞானப் புனைகதைகளை எழுத்தாளர் நார்மன் ஸ்பின்ராடு கவனிக்கையில், அவற்றில் யாராவது ஒருவர் “சுடப்படுகிறார், கத்தியால் குத்தப்படுகிறார், ஆவியாக்கப்படுகிறார் (vaporized), லேசரால் தாக்கப்படுகிறார், குதறப்படுகிறார், விழுங்கப்படுகிறார் அல்லது வெடித்து சின்னாபின்னமாக்கப்படுகிறார்.” பல திரைப்படங்களில் இந்த வன்முறை திகிலூட்டும் விதத்தில் விவரமாகக் காட்டப்படுகிறது!
பல விஞ்ஞான கற்பனைக் கதைபுத்தகங்களிலும் திரைப்படங்களிலும் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட பொருள் விளம்பரப்படுத்தப்படுவது கவலைக்குரிய மற்றொரு அம்சமாகும். இத்தகைய கதைகள் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் வெறும் உருவகக் கதையின் போர்கள் மட்டுமே அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று சில ஆட்கள் கருதியபோதிலும், இவற்றில் சில, உருவகக் கதையையும் தாண்டிச் சென்று ஆவிக்கொள்கைப் பழக்கத்தையும் முன்னேற்றுவிப்பதாகத் தோன்றுகிறது.
சமநிலைக்கான தேவை
நிச்சயமாகவே, கற்பனை பொழுதுபோக்கையே பைபிள் கண்டனம் செய்வதில்லை. யோதாமின் மரத்தைப்பற்றிய உவமையில் அஃறிணை செடிகள் ஒன்றோடொன்று பேசுவதைப்போன்றும், திட்டங்களையும் சதிகளையும் தீட்டுவதைப்போன்றும்கூட சித்தரிக்கப்பட்டுள்ளன. (நியாயாதிபதிகள் 9:7-15) அவ்விதமே தீர்க்கதரிசியாகிய ஏசாயாவும் நீண்டகாலத்திற்கு முன் மரித்துவிட்ட தேசத்தின் ஆட்சியாளர்கள் கல்லறையில் சம்பாஷிப்பதாகச் சித்தரிக்கையில் கற்பனை செய்யப்பட்ட முறையைத்தான் கையாண்டார். (ஏசாயா 14:9-11) இயேசுவின் சில உவமைகளில்கூட நிஜத்தில் நடைபெறாத காரியங்கள் அடங்கியிருந்தன. (லூக்கா 16:23-31) அத்தகைய கற்பனை செய்யப்பட்ட முறைகள் வெறுமனே பொழுதுபோக்கிற்கு அல்ல, ஆனால் போதிப்பதற்கும் கற்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.
இன்று சில எழுத்தாளர்கள், எதிர்கால நிகழ்வுகளின் பின்னணிகளை முறையாகப் போதிக்க அல்லது பொழுதுபோக்கிற்காக ஒருவேளை உபயோகிக்கலாம். ஆயினும், தூய மற்றும் ஆரோக்கியமான காரியங்களில் கவனத்தை ஒருமுகப்படுத்த பைபிள் நம்மை அறிவுறுத்துகிறது என்பதை மனசாட்சியுள்ள கிறிஸ்தவ வாசகர்கள் மனதில் வைத்திருப்பார்கள். (பிலிப்பியர் 4.8) ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்றும்கூட அது நமக்கு நினைப்பூட்டுகிறது. (1 யோவான் 5:19) பரிணாமம், மனிதனின் அழியாமை மற்றும் மறுபிறவி போன்ற பைபிளுடன் ஒத்திசையாத கருத்துகளையும் தத்துவங்களையும் பரவச்செய்யும் அடித்தளங்களாகச் சில விஞ்ஞானப் புனைகதை திரைப்படங்களும் புத்தகங்களும் சேவிக்கின்றன. ‘லௌகிக ஞானத்திற்கும் மாயமான தந்திரத்திற்கும்,’ இரையாகமல் இருக்க பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (கொலோசெயர் 2:8) எல்லா வகையான பொழுதுபோக்கைப் போன்றே, விஞ்ஞானப் புனைகதை பேரிலும் முன் எச்சரிக்கையானது பொருத்தமாக இருக்கிறது. நாம் எதைப் படிக்கிறோம் அல்லது எதைப் பார்க்கிறோம் என்பதில் தெரிவு செய்கிறவர்களாக இருக்கவேண்டும்.—எபேசியர் 5:10.
முன் குறிப்பிட்டதைப் போன்றே, பல பிரபலமான திரைப்படங்கள் வன்முறை நிறைந்ததாக இருக்கின்றன. ‘கொடுமையில் பிரியமுள்ளவனை அவருடைய உள்ளம் வெறுக்கிறது,’ என்று யெகோவாவைப்பற்றி சொல்லியிருக்கையில், இரத்தத்தைச் சர்வசாதாரணமாக சிந்தும் ஒரு திரைப்படத்தை நாம் பார்ப்பது அவருக்குப் பிரியமாக இருக்குமா? (சங்கீதம் 11:5) ஆவிக்கொள்கையை வேதாகமம் கண்டனம் செய்வதால், மாயவித்தை அல்லது சூனியம் போன்ற காரியங்களைச் சிறப்பித்துக் காட்டும் புத்தகங்களை அல்லது திரைப்படங்களைப் பொருத்தமட்டில் நல்ல பகுத்துணர்வை உபயோகிக்க கிறிஸ்தவர்கள் விரும்பக்கூடும். (உபாகமம் 18:10) பெரியவர்கள் கற்பனையிலிருந்து உண்மையை எந்தவித சிரமமின்றி பகுத்தறிந்துவிடலாம், ஆனால் எல்லா பிள்ளைகளாலும் இயலாது என்பதையும்கூட உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே, தங்கள் பிள்ளைகள் எவற்றைப் படிக்கிறார்கள் மற்றும் பார்க்கிறார்கள், அவற்றால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்று மேலும் கவனிப்பவர்களாகப் பெற்றோர் இருக்க விரும்புவர்.b
சிலர் வேறுவகையான புத்தகங்கள், பொழுதுபோக்கு விரும்பத்தக்கது என்று ஒருவேளை தீர்மானிக்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்கள் இந்தக் காரியத்தின் பேரில் மற்றவர்களைக் குற்றவாளியாக நியாயம் தீர்க்க அல்லது தனிப்பட்டவர் விருப்பத்தின் பேரில் சர்ச்சைகளை எழுப்ப தேவையில்லை.—ரோமர் 14:4.
இதற்கு மாறாக, பல்வேறு வகையான கற்பனைக் கதைகளை எப்போதாவது பொழுதுபோக்கிற்காகத் தெரிவுசெய்ய விரும்பும் கிறிஸ்தவர்கள், சாலொமோனின் எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது: “அநேக புத்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.” (பிரசங்கி 12:12) இன்றைய உலகில் பலர் விஞ்ஞானப் புனைகதை புத்தகங்கள் மற்றும் திரைப்படத்தினிடமாகத் தங்களுக்கு இருக்கும் பக்தியில் ஐயத்துக்கிடமின்றி மிதமிஞ்சி விட்டார்கள். விஞ்ஞானப் புனைகதை மன்றங்கள் மற்றும் மாநாடுகள் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளன. டைம் பத்திரிகையின் பிரகாரம், ஸ்டார் டிரக் டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் சிறப்பித்து காட்டப்பட்ட கிலிங்கன் என்னும் கற்பனை மொழியைக் கற்றுக்கொள்ள ஐந்து கண்டங்களின் ஸ்டார் டிரக் ரசிகர்கள் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். அத்தகைய மிதமிஞ்சிய நடத்தை 1 பேதுரு 1:13-ல் கொடுக்கப்பட்டுள்ள பைபிளின் ஆலோசனையுடன் ஒத்திசைவதில்லை: ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள் [“சமநிலையோடு இருங்கள்,” NW, அடிகுறிப்பு].’
விஞ்ஞானப் புனைகதை அதன் சாதகமான சூழ்நிலையின் கீழும்கூட எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது என்னும் மனிதனின் ஆர்வத்தைத் திருப்தி செய்ய முடியாது. எதிர்காலத்தை அறிந்துகொள்ள உண்மையிலேயே விரும்புவோர் ஒரு நம்பகமான மூலத்தினிடமாகத் திரும்பவேண்டும். நாம் இதை நமது அடுத்த கட்டுரையில் கலந்தாராயலாம்.
[அடிக்குறிப்புகள்]
a வர்ன் கூறிய “ஃபோட்டோகிராஃபிக் டெலிகிராஃப், எந்தவித எழுத்து, கையெழுத்து அல்லது வடிவமானாலும் அவற்றின் ஒப்பு உருவ நேர்படியை நீண்ட தொலைவுக்கு அனுப்ப அனுமதித்தது.”—நியூஸ்வீக், அக்டோபர் 10, 1994.
b மார்ச் 22, 1978, ஆங்கில விழித்தெழு! இதழில் வெளிவந்த “உங்கள் பிள்ளை எதைப் படிக்க வேண்டும்?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 7-ன் படம்]
பிள்ளைகளின் பொழுதுபோக்கை பெற்றோர் மேற்பார்வையிட வேண்டும்
[பக்கம் 7-ன் படம்]
விஞ்ஞானப் புனைகதையைப் பொருத்தமட்டில் கிறிஸ்தவர்கள் தெரிவு செய்கிறவர்களாக இருக்கவேண்டும்