எதிர்காலம் உண்மையில் எதைக் கொண்டிருக்கிறது
பல விஞ்ஞானப் புனைகதை ஆர்வலர்கள், துருவி ஆராயும் மனதையும், மனித சமுதாயத்தை மாற்றவேண்டும் என்ற ஆவலையும், எதிர்காலத்தைப் பற்றியதில் பேரார்வத்தையும் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றி சொல்வதற்கு பைபிள் அதிகத்தை உடையதாயிருக்கிறது, ஆனால் எதிர்காலத்தில் மனிதனுக்கு நிகழவிருக்கும் காரியங்களின் பேரிலுள்ள பைபிளின் நோக்குநிலை, விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்களின் கற்பனைகளை ஒத்திருந்தால் ஒருவேளை மிகச் சிறியளவிலே அவ்வாறு இருக்கின்றன.
எதிர்காலம் எப்படி இருக்கக்கூடும் என்று பற்பல வித்தியாசமான கருத்துகளை விஞ்ஞானப் புனைகதை அளிக்கிறது. ஆனால், இவற்றில் ஏதேனும் ஒன்றில் உங்கள் உயிரைப் பணயம் வைப்பீர்களா? உங்கள் தெரிவை எதன் அடிப்படையில் செய்வீர்கள்? இந்தக் கற்பனைக்காட்சி தொடர்நிகழ்ச்சிகள் அல்லது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளின் போக்குகள் அனைத்தும் உண்மையாக இருக்க முடியாது. உண்மையில், அவை அனைத்தும் யூகத்தை—கற்பனையை—உள்ளடக்கியிருப்பதால், இவற்றில் ஒன்றாவது உண்மை என்று நம்பிக்கையுடன் உங்களால் சொல்ல இயலுமா? ஒன்றுகூட அப்படி உண்மையாக இருப்பது அதிக சந்தேகம்தான்.
ஒன்றும் நிறைவேறவில்லை
ஏற்கெனவே, பல விஞ்ஞானப் புனைகதையின் கற்பனைக்காட்சிகள் நிறைவேறவில்லை. எந்த வகையில்? இந்தப் பூமியில் ஒரு முன்னேற்றுவிக்கப்பட்ட நாகரிகத்தின் பாதையில் எவ்வாறு விஞ்ஞானம் வழிநடத்தும் என்று கூறப்பட்ட கற்பனைக்காட்சிகள் நிறைவேறவில்லை. இன்றைய மெய்மையானது ஒரு முன்னேற்றுவிக்கப்பட்ட நாகரிகத்திற்கு முற்றிலும் வித்தியாசமாக, நேரெதிராக உள்ளது. கார்ல் மிக்காயேல் ஆர்மர் குறிப்பிடுகிறார்: “எதிர்காலத்தால் நாம் திணறடிக்கப்பட்டிருக்கிறோம்.” “அணு சக்தியின் உலகளாவிய மரண பயங்கள், சுற்றுச்சூழல் பேரழிவுகள், பட்டினி, வறுமை, ஆற்றல் பற்றாக்குறைகள், [மற்றும்] மாநிலத்தால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம்,” ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
வேறு வார்த்தையில் சொன்னால், விஞ்ஞானப் புனைகதைகளில் விவரிக்கப்பட்டிருந்த பூமியின் மற்றும் மனித குடும்பத்தின் எதிர்காலம் நிறைவேற்றத்தினிடமாக முன்னேறவில்லை. இதற்கு மாறாக பூமியில் நிலைமைகள் சீரழிந்து கொண்டிருக்கையில், மனிதனுடைய நிலைமை எதிர்த்திசையில் சென்றுகொண்டிருக்கிறது. எந்தவித விஞ்ஞானப்பூர்வ அல்லது தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், அதிகமதிகமான குற்றச்செயல், வன்முறை, வறுமை, இன பகைமைகள், குடும்பத்தில் பிளவு ஆகியவற்றையே மனித சமுதாயம் உலகம் முழுவதிலும் அனுபவிக்கிறது.
சில விஞ்ஞானப்பூர்வமான முயற்சிகள், மனிதனுடைய தொல்லைகளை இன்னும் பெருமளவில் அதிகரித்துள்ளன. வெறுமனே சில உதாரணங்களை கவனியுங்கள்: நமது காற்றில், தண்ணீரில், மற்றும் உணவில் உள்ள இரசாயன தூய்மைக்கேடு; இந்தியாவிலுள்ள போபாலில் நிகழ்ந்த பேரழிவு, அங்கு ஒரு தொழிற்சாலை விபத்தினால் ஏற்பட்ட விஷவாயு கசிவு 2,000 ஆட்களின் மரணத்திலும், சுமார் 2,00,000 ஆட்கள் காயமடைவதிலும் விளைவடைந்தது; உக்ரேனின் செர்னாபலில் உள்ள அணு மின் நிலையத்தில், அணு உலையில் ஏற்பட்ட கசிவு, பல மரணங்களிலும், புற்று நோயும் மற்ற உடல் ஆரோக்கிய பிரச்சினைகளும் பெரும் பரப்பளவுக்கு அதிகரிப்பதிலும் விளைவடைந்தது.
விண்வெளியில் குடியேற்றமா?
வாழ்க்கையின் துயரங்களிலிருந்தும், பூமியில் மனித திட்டங்களின் தோல்விகளிலிருந்தும் நிவாரணத்தை, எதிர்காலத்தைப் பற்றிய பெரும் எண்ணிக்கையான விஞ்ஞானப் புனைகதை புத்தகங்கள் இன்னும் மற்றொரு வழியில் அளிக்கின்றன. அவை ஆர்வலரை கற்பனை செய்யப்பட்ட விண்வெளி கற்பனைக் காட்சிகளினிடமாக அழைத்து செல்கின்றன. வான் மண்டலங்களுக்கு இடையே விண்வெளி கலன்களை மனிதன் உபயோகித்து மற்ற கோள்களுக்கும், பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுக்கும் குடியேறுதல் முதலியன வழக்கமான கருப்பொருளாக உள்ளன. அத்தகைய தூண்டுதல் அநேகரை, நியூ யார்க் செய்தித்தாளின் ஆசிரியருக்கு எழுதிய ஒரு நபர் உணர்ந்ததைப் போன்றே அநேகரை உணரும்படி அப்படிப்பட்டவை தூண்டின: “விண்வெளியின் புதிய கண்டுபிடிப்புகளில்தான் மனிதனின் எதிர்காலம் சார்ந்துள்ளது.”
உண்மைதான், பூமிக்கு அருகே விண்வெளி ஓடத்தை பறக்கவிடுவதனாலும் கருவிகளை இறக்கிவிட்டு விண்வெளியைக் கூர்ந்து பார்ப்பதனாலும் விண்வெளி ஆராய்ச்சியானது தொடருகிறது. ஆனால் விண்வெளியில் வாழ்வதைப்பற்றி என்ன? இன்னும் விரிவான அளவில் விண்வெளி ஊர்திகள் விடப்படுவதைக்குறித்து மனிதர்கள் பேசுகிறபோதிலும், நிலவிலோ அருகாமையில் இருக்கும் மற்ற கோள்களிலோ குடியேற, தற்போது திட்டவட்டமான திட்டங்கள் ஏதுமில்லை—மற்ற வான்மண்டலங்களில் குடியேறும் திட்டங்கள் மிகக் குறைவே. உண்மையிலேயே, சமீப எதிர்காலத்தில் விண்வெளியில் குடியேறுவதற்காக மனிதனால் செய்யப்படும் முயற்சிகள் நடைமுறையில் விரும்பி தெரிவுசெய்யப்படக்கூடிய ஒன்றாக இல்லை. பல தேசங்களின் தற்போதைய வெவ்வேறு விண்வெளி திட்டங்கள் அதிக செலவை உட்படுத்துகிறது, அதன் காரணமாக அவை மீண்டும் கணக்கிடப்பட்டிருக்கின்றன அல்லது கைவிடப்பட்டிருக்கின்றன.
மெய்மை என்னவென்றால், மனிதர்களால் முன்னேற்றுவிக்கப்படும் விண்வெளி சாகசங்கள் எதிலும் மனிதவர்க்கத்தினுடைய எதிர்காலம், உங்களுடைய எதிர்காலம் கிடையாது. உங்களுடைய எதிர்காலம் இங்கு இதே பூமியில் இருக்கிறது. விஞ்ஞானிகள், மனித அரசாங்கங்கள் அல்லது வசனகர்த்தாக்கள் ஆகியோரால் அந்த எதிர்காலம் நிர்ணயிக்கப்படுவதில்லை. நாம் ஏன் அவ்வளவு நிச்சயமாக இருக்கலாம்?
ஏனென்றால் அந்த எதிர்காலம், பூமியின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனால் நிர்ணயிக்கப்படும். எந்த விஞ்ஞானப் புனைகதை கற்பனைக்காட்சியும் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுடன் போட்டியிட முடியாது. அந்தப் புத்தகத்தில்—கடவுளின் ஏவப்பட்ட வார்த்தையில், அவர் மனிதவர்க்கத்துடன் தொடர்புகொண்டுள்ளார்—மனிதருக்கு எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நமக்கு அவர் சொல்கிறார். (2 தீமோத்தேயு 3:16, 17; 2 பேதுரு 1:20, 21) அது என்ன சொல்கிறது?
மானிட குடும்பத்தின் எதிர்காலம்
கிறிஸ்துவின் பொறுப்பிலிருக்கும் புதிய அரசாங்கத்தின் மூலம் மனித சமுதாயத்தை முழுமையாகச் செப்பனிடப்போகும் கடவுளின் நோக்கத்தை, கடவுளின் வார்த்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. அந்தப் பரலோக அரசாங்கம் பைபிளில் கடவுளின் ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது.—மத்தேயு 6:9, 10.
தானியேல் 2:44-ன் ஏவப்பட்ட தீர்க்கதரிசனம் அந்த ராஜ்யத்தைப்பற்றி அறிவிக்கிறது: “அந்த [இன்று இருக்கும்] ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை . . . அது அந்த [தற்போதுள்ள] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”
கடவுளுடைய ராஜ்யத்தில் இந்தப் பூமியில் நிலவ இருக்கும் எதிர்கால வாழ்க்கையைப்பற்றி, கடவுளின் வல்லமையான கிரியை நடப்பிக்கும் சக்தியால் ஏவப்பட்டு பேதுருவும்கூட எழுதினார். அவர் கூறியதாவது: “[கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் [கடவுளுடைய பரலோக ராஜ்யம்] புதிய பூமியும் [அந்த ராஜ்யத்தின் கீழிருக்கும் புதிய மனித சமுதாயம்] உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13.
கடவுளுடைய பரலோக ராஜ்ய ஆட்சியின் கீழ், பூமியில் வாழ்வதற்கான சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? சிருஷ்டிகரின் வாக்குறுதியானது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:4, 5.
சிருஷ்டிகர் வாக்களிக்கும் அத்தகைய எதிர்காலம் வியக்கவைக்கும் ஒன்றாக இருக்கிறது. இது விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்களின் அல்லது விஞ்ஞானிகளின் எத்தகைய கற்பனைக்காட்சிகளிலிருந்தும் முற்றிலும் வித்தியாசமானது. கற்பனைக்காட்சிகளில் மாயவித்தை, கற்பனை உயிரிகள், சுற்றுச்சூழல்கள் அடிக்கடி சிறப்பித்துக் காட்டப்படுகின்றன. எதிர்காலத்திற்கான கடவுளின் நிச்சயமான வாக்குறுதிகளில் உண்மை கிறிஸ்தவர்கள் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் அதிகத்தைச் செய்கிறார்கள். அவற்றின் பேரில் தங்களுடைய உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.
அத்தகைய நம்பிக்கையுடன், ஏன் அவர்களால் அவ்வாறு செய்ய முடிகிறது? ஏனென்றால், அவர்கள் ‘தேவன் பொய்யுரையாதவராக’ இருப்பதனால், இந்த ‘நம்பிக்கை வெட்கப்படுத்தாது,’ என்று கடவுளுடைய வார்த்தையிலிருந்து அறிந்திருக்கிறார்கள். உண்மையில், “தேவனால் பொய் சொல்லவே முடியாது.” (ரோமர் 5:5; தீத்து 1:3; எபிரெயர் 6:18, NW) கடவுளின் ஊழியனாகிய யோசுவா நீண்ட காலத்திற்கு முன் குறிப்பிட்டதைப்போல்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை . . . அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசுவா 23:14.
பெரும்பாலான விஞ்ஞானப் புனைகதை, இந்தப் பொல்லாத பழைய உலகின் கனவியல் கோட்பாடுகளையே பிரதிபலிக்கின்றன. அது எவ்வாறு? அறிவொளி என்று பெயரளவில் அழைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான், விஞ்ஞானப் புனைகதை ஆரம்பமானது, அப்போது, பலர் பாரம்பரிய அதிகாரத்தைப் புறக்கணித்தார்கள், மனிதன் தன் சொந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும் என்று நம்பினார்கள். சமுதாயத்தின் பெருவாரியான தொல்லைக்கு உலகப்பிரகாரமான மதத்தைச் சரியாகவே அவர்கள் குற்றம் சாட்டினார்கள், ஆனால், கடவுள் இருக்கிறார் என்ற சத்தியத்தையும் அவருடைய நோக்கத்தையும் சேர்த்து பிறகு அவர்கள் புறம்பே தள்ளிவிட்டார்கள். காரியங்கள் நிறைவேறிக்கொண்டிருந்த விதத்திலிருந்து அவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள், எனவே அவர்கள் மற்ற கருத்துக்களை நாடினார்கள்.
ஆயினும், மனித கருத்துக்கள், எவ்வளவுதான் சிறப்பாகச் சிந்திக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் செயலாக்கத்திற்கான வாய்ப்பில் மட்டுப்பட்டதாக இருக்கின்றன. நம் சிருஷ்டிகர் சொல்கிறார்: “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.”—ஏசாயா 55:9.
உண்மையான விஞ்ஞானப்பூர்வ கண்டுபிடிப்பு
கடவுளுடைய புதிய உலகில், அறிவைப் பெறுவதற்கான மனிதவர்க்கத்தின் இயற்கையான வேட்கை, உண்மையான விஞ்ஞானப்பூர்வ ஆய்வின் மூலம் ஓரளவுக்குத் தணியும். கற்பனைக்காட்சிகளைக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை, ஏனெனில் நிஜமே ஆரோக்கியமான மற்றும் சத்தியமான வழியில் மனதை ஈர்ப்பதாகவும் கற்பிப்பதாகவும் இருக்கும்.
புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் தன்னை ‘கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கிற ஒரு சிறுவனுக்கு’ ஒப்பிட்டு, “[அவனுக்கு] முன் பெருங்கடல் அளவான உண்மைகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன,” என்று சொன்னபோது அவர் எவ்வாறு உணர்ந்தார் என்பதை பலர் அப்போது அறிந்துகொள்வார்கள். சந்தேகமில்லாமல், கடவுள் தம்முடைய புதிய உலகில், தூண்டுதலளிக்கும் ஒரு கண்டுபிடிப்பை அடுத்து மற்றொன்றினிடமாக அவர் உண்மையுள்ள மனிதர்களை வழிநடத்துவார்.
ஆம், யெகோவா ‘சத்தியபரராக’ இருப்பதால், விஞ்ஞான ஆராய்ச்சியெல்லாம் அப்போது, முழுக்கமுழுக்க உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மனிதனின் பூலோக சுற்றுச்சூழலிலிருந்தும், விலங்குலகத்திடமிருந்தும்கூட கற்றுக்கொள்ள அவர் நம்மை அழைக்கிறார். (சங்கீதம் 31:5; யோபு 12:7-9) நேர்மையான விஞ்ஞானப்பூர்வ முயற்சி, சத்தியத்தின் கடவுளால் வழிநடத்தப்படுவது, நிச்சயமாகவே கடவுளுடைய புதிய ஒழுங்கின் கவரத்தக்க ஒரு அம்சமாகும். அனைத்து கற்பனைத்திறங்கள், கண்டுபிடிப்புகள், மனித வாழ்விலும், வாழ்க்கைத்தரத்திலும் நிகழும் அற்புதமான முன்னேற்றங்கள் ஆகிய அனைத்திற்கும் உரிய பெருமையை எந்த மனிதனுக்கும் அல்ல ஆனால் சர்வலோகத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுக்கு அளிக்கப்படும்.
விரைந்து வந்துகொண்டிருக்கும் புதிய உலகில், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களெல்லாம் கடவுளின் அன்பான பராமரிப்புக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் அவரை மகிமைப்படுத்துவார்கள். அவர்கள் பெரும் மகிழ்ச்சியால் அவரைச் சேவிப்பார்கள், வெளிப்படுத்துதல் 4:11-ல் விவரிக்கப்பட்டிருப்பதைப்போன்று சொல்வார்கள்: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”
[பக்கம் 9-ன் படம்]
மனிதவர்க்கத்தின் எதிர்காலம் இந்தப் பூமியில் இருக்கிறது