விஞ்ஞானப் புனைகதை—அதன் பிரபல வளர்ச்சி
அமெரிக்க திரைப்படத் தொழில், 1982-ம் வருடத்தில் முதன் முதலில் ஒரு இனத்தைக் கண்டது. 1982/83 காலகட்டத்தில், மிகப் பிரபலமான திரைப்படத்தின் “நடிகர்” ஒரு மனிதனே அல்ல. தி இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்ட்ரி ஆஃப் சினிமா-வின் பிரகாரம், ஈடி: தி எக்ஸ்ட்ராடெரஸ்டிரியல்! (ET: The Extraterrestrial!) என்ற திரைப்படத்தில் தாரகையாக வந்த ET ஆகும். அது விண்வெளியைச் சேர்ந்த விசித்திரமான ஆனால் ஓரளவுக்குக் கவர்ச்சியான கதாபாத்திரமாகும்.
விஞ்ஞானப் புனைகதை (science fiction [SF]), சமீப ஆண்டுகளில் மிதமிஞ்சி பிரபலமாகியிருக்கிறது என்பதற்கு இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி வெறும் ஒரு அத்தாட்சியே. ஒருகாலத்தில் மலிவான தாள்களில் அச்சிட்ட பத்திரிகைகளுக்கென்றே ஒதுக்கப்பட்டிருந்ததும் தனித்திருப்போரும், கனவில் மிதப்போரும் அனுபவிக்கும் ஒன்றாக கருதப்பட்டதுமான விஞ்ஞானப் புனைகதை, தற்போதுள்ள பொழுதுபோக்கின் நிலைநாட்டப்பட்ட ஒரு பாகமாக ஆகிவிட்டது. ஆனால் அதன் பிரபலமான திடீர் வளர்ச்சிக்குப்பின் இருப்பது என்ன?
இந்தக் கேள்விக்கு விடையளிக்க, முதலில் நாம் விஞ்ஞானப் புனைகதையின் வரலாற்றை ஆழ்ந்தாராய வேண்டும். விசித்திரப் பாணியில் அமைந்த கதைகளை மனிதன், பிரமிக்க வைப்பதற்காக, மனதில் பதியவைப்பதற்காக அல்லது வெறுமனே பொழுதுபோக்கிற்காகத் தொன்றுதொட்டே சொல்லிக்கொண்டு வந்திருக்கிறான். ஆயினும் 17-ம் 18-ம் நூற்றாண்டுகளில், விஞ்ஞானப்பூர்வ மற்றும் பொருள் முன்னேற்ற சகாப்தத்திற்குள் ஐரோப்பா நுழைந்தது. பாரம்பரிய கருத்துக்களையும் அதிகாரங்களையும் பலர் சவால்விட தொடங்கினார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் விஞ்ஞான வளர்ச்சியானது எதிர்காலத்தில் மனிதவர்க்கத்தை எவ்வாறெல்லாம் பாதிக்கலாம் என்று சிலர் ஊகிக்க ஆரம்பித்தார்கள்.
விஞ்ஞானப் புனைகதையை உண்மையிலேயே தோற்றுவித்தது யார் என்பது விவாதத்திற்கான ஒரு பொருளாக இருக்கிறது. விண்வெளிப் பயணத்தை உள்ளடக்கிய புனைகதை புத்தகங்களை, பதினேழாம் நூற்றாண்டின் ஆசிரியர்கள் பிரான்ஸஸ் காட்வின் மற்றும் சிர்ரானோ ட பர்ஜரக் எழுதினார்கள். 1818-ல் மேரி ஷெல்லியின் ஃப்ராங்கன்ஸ்டீன், அல்லது தி மார்டன் ப்ரமித்தியஸ் என்ற புத்தகம் உயிரைப் படைக்கும் திறமையுடைய ஒரு விஞ்ஞானியைப் பற்றியும், பயங்கரமான பின்விளைவுகளைப் பற்றியும் வர்ணித்தது.
ஆயினும், சில எழுத்தாளர்கள் இந்த வகையான புனைகதைகளை மனித சமுதாயத்தில் நிலவிய குறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவதற்காக உபயோகித்தார்கள். எனவே 18-ம் நூற்றாண்டின் ஆங்கில சமுதாயத்தை ஜானத்தன் சுஃப்ட் எள்ளி நகையாடியபோது, தன்னுடைய அங்கதத்தைக் கற்பனை கடற்பயணத் தொடர்களாகப் புனைந்தார். அதன் விளைவுதான் கலீவர்ஸ் டிராவெல்ஸ், மனதில் பதியக்கூடிய ஒரு உருவகக் கதை, அது விஞ்ஞானப் புனைகதையின் “தலைசிறந்த முதல் இலக்கிய படைப்பு” என்று அழைக்கப்பட்டது.
ஆனால், ஜூல்ஸ் வர்ன் மற்றும் ஹெச். ஜி. வெல்ஸ் ஆகிய எழுத்தாளர்கள் விஞ்ஞானப் புனைகதை நாவலை நவீன வடிவில் அளித்ததற்காகப் பெரும்பாலும் போற்றப்பட்டார்கள். வெற்றிபெற்ற நாவல்களின் வரிசையில் ஒன்றாகிய புவியிலிருந்து நிலவு வரை (ஆங்கிலம்) என்ற நாவலை 1865-ல் வர்ன் எழுதினார். 1895-ல், ஹெச். ஜி. வெல்ஸின் புகழ்பெற்ற புத்தகம் தி டைம் மெஷின் தோன்றியது.
புனைகதை நிஜமாதல்
1900-களின் துவக்கத்திற்குள், இந்தக் கற்பனையாளரின் கனவுகளில் சிலவற்றை விஞ்ஞானிகள் நனவாக்க துவங்கினார்கள். டீ க்ரோசன் (மாமேதைகள்) என்ற புத்தகத்தின் பிரகாரம், வர்ன் கனவு கண்ட மனிதனை ஏந்திச்செல்லும் விண்வெளி ஊர்தியை நனவாக்குவதற்காக ஜெர்மனைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் ஹர்மான் ஓபர்ட் பல வருடங்களைச் செலவழித்தார். ஓபர்ட்டின் கணக்குகள் விண்வெளி பயணத்திற்கு விஞ்ஞானப்பூர்வமான அடித்தளம் ஒன்றைப் போட உதவின. ஆயினும், விஞ்ஞானப் புனைகதையால் தூண்டப்பட்ட விஞ்ஞானி அவர் ஒருவர் மாத்திரம் அல்ல. பிரபல விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ரே பிரட்பர்ரி கூறுகிறார்: “ஜெர்மனியில் வெரன்ஹர் ஃபான் பிரானும் அவருடைய உடன் பணிபுரிவோரும், ஹாஸ்டன் மற்றும் கேப் கென்னடியில் இருந்த அனைவரும் பிள்ளைகளாக இருந்தபோது ஹெச். ஜி. வெல்ஸ் மற்றும் ஜூல்ஸ் வர்ன் ஆகியோரின் படைப்புகளைப் படித்தார்கள். அவர்கள் வளர்ந்தவுடன், அவையனைத்தையும் நனவாக்கவேண்டும் என்று முடிவுசெய்தார்கள்.”
உண்மையில், விஞ்ஞானப் புனைகதை பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் துவக்கமுனையாக இருந்திருக்கிறது. “விஞ்ஞானப் புனைகதை முன்னுரைக்காத புதிய பொருட்களின் தோற்றம் அல்லது கண்டுபிடிப்புகள்,” வெகு சிலவாகத்தான் இருந்திருக்கின்றன என்று ஆசிரியர் ரானா ஆட் உரிமை பாராட்டுகிறார். நீர்மூழ்கி கப்பல்கள், இயந்திர மனிதர்கள், மனிதனை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டுகள் எல்லாம் நிஜமாவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே விஞ்ஞானப் புனைகதையின் சர்வசாதாரண பொருட்களாக இருந்தன. இவ்வாறாக, “விஞ்ஞானப் புனைகதையைப் படிப்பது நம் மூளையை விரிவாக்குவதாகும்,” என்று விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஃப்ரடரிக் ப்போல் உறுதியளிக்கிறார்.
நிச்சயமாகவே, எல்லா விஞ்ஞானப் புனைகதைகளும் உண்மையில் விஞ்ஞானத்தைப்பற்றியது அல்ல. சிலர் விஞ்ஞான கற்பனை என்று அழைக்கப்படுவதன் எண்ணங்களாகவே, மிகப் பிரபலமான விஞ்ஞானப் புனைகதை புத்தகங்களும் திரைப்படங்களும் உண்மையில் இருக்கின்றன. விஞ்ஞானப்பூர்வமாக நம்பக்கூடியதாக இருப்பதுதான் பெரும்பாலும் விஞ்ஞானப் புனைகதையின் தனி முத்திரை ஆகும், அதற்குமாறாக கற்பனைக் கதைகள், ஆசிரியரின் கற்பனா திறனுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மந்திரஜாலமும் மாந்திரீகமும்கூட ஒருவேளை பங்கு வகிக்கக்கூடும்.
இருந்தபோதிலும், விஞ்ஞானப் புனைகதையின் எதிர்கால நோக்குநிலைகள் எவ்வளவு துல்லியமானவை? எல்லா விஞ்ஞானப் புனைகதைகளும் படிப்பதற்கோ பார்ப்பதற்கோ தகுதியுள்ளவையா? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும்.
“புவியிலிருந்து நிலவு வரை” என்ற ஜூல்ஸ் வர்னின் நாவல், விண்வெளி பயணத்திற்கான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு அதிகத்தைச் செய்தது