ஆன்ட்ரூவிடமிருந்து நாங்கள் கற்றவை
நான் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கையில், ஒருசில நாட்களுக்குமுன் சம்பவித்திருந்த காரியத்தைக் குறித்து யோசிப்பது குதூகலமூட்டுவதாய் இருந்தது. அப்போதுதான் நான் ஒரு மகனுக்கு, என்னுடைய இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகி இருந்தேன். இன்று என் மனைவியாகிய பெட்டி ஜேனும் எங்கள் சின்ன ஆன்ட்ரூவும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார்கள்.
என்றாலும், அவர்கள் அங்கிருந்து வெளியே வருவதற்கான நேரத்திற்கு முன்னர், என் மனைவி தொலைபேசியில் அழைத்தாள். அவளுடைய குரலில் கவலைக்குரிய தொனி இருந்தது. நான் அவசரமாகப் போனேன். “ஏதோ பிரச்சினை இருக்கிறது!” என்று கூறியே அவள் வரவேற்றாள். மருத்துவர், குழந்தை மருத்துவ ஆலோசகரைக் கூட்டிக்கொண்டு வரும்படி நாங்கள் ஒன்றாக அமர்ந்து காத்திருந்தோம்.
அந்த ஆலோசகரின் முதல் குறிப்புதானே மனதை உடையச்செய்யும் செய்தியாக இருந்தது. அவர் குறிப்பிட்டார்: “உங்கள் மகனுக்கு டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்பு (Down’s syndrome) இருக்கிறதென்று எங்களுக்குத் தெளிவாக இருக்கிறது.” எங்கள் மகன் பெரும்பாலும் மன வளர்ச்சி குறைவுள்ளவனாக இருப்பான் என்று அவர் விவரித்தார். அதற்குமேல் அவர் கொடுத்த விளக்கம் எதையும் உண்மையில் நான் கிரகித்துக்கொள்ளவில்லை. கேட்கும் ஆற்றல் அனைத்தையும் என் உணர்விழந்த மூளை தொடர்பற்றுப்போகச் செய்திருந்தது. ஆனால், காணும் குறிப்புகள் தொடர்ந்து பதிவாகிக்கொண்டே இருந்தன.
அவர் ஆன்ட்ரூவை எடுத்து, ஏதோ கோளாறு இருக்கிறது என்ற உண்மைக்கு அவரை உணர்த்திய காரியங்களில் ஒன்றிற்கு எங்கள் கவனத்தை ஈர்த்தார். குழந்தையின் தலை வளைந்து தொங்கிக்கொண்டிருந்தது. இந்தத் தசை உரக் குறைபாடு, புதிதாகப் பிறந்த டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்பு குழந்தைகளின் தனி இயல்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஆலோசகருடன் நிகழ்ந்த ஒரு சந்திப்பில், மெதுவாக நாங்கள் புரிந்துகொள்ளும் நிலைக்குத் திரும்பியபோது எங்கள் மனதில் திரண்டு வந்த அநேக கேள்விகளை அவரிடம் கேட்டோம். அவன் எந்த அளவுக்கு ஊனமுற்றவனாக இருப்பான்? நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம்? நாங்கள் அவனுக்கு எவ்வளவு கற்பிக்க முடியும்? அவன் எந்தளவுக்கு கற்கும் ஆற்றலை உடையவனாக இருப்பான்? எங்களுடைய கேள்விகள் பலவற்றிற்கான பதில், அவன் வாழ்கிற சூழலையும் அவனுடைய உள்ளார்ந்த திறமைகளையும் சார்ந்ததாக இருக்கும் என்று அவர் விளக்கினார்.
அப்போதிருந்து 20-க்கும் அதிகமான வருடங்களில், நாங்கள் ஆன்ட்ரூவுக்கு, அவன் பெற தகுதியான அன்பையும் பாசத்தையும் கொடுக்கவும் எங்களால் கற்பிக்க முடிந்த அனைத்தையும் அவனுக்குக் கற்பிக்கவும் முயன்றிருக்கிறோம். ஆனால் பின்னோக்கிப் பார்த்தால், அது முழுவதுமாக, கொடுக்கும் பயிற்சியாகவே இருக்கவில்லை என்று நாங்கள் இப்போது உணருகிறோம்.
நல்ல புத்திமதி
ஆன்ட்ரூ இருப்பதை ஏற்பதற்கு நாங்கள் பழகிக்கொள்வதற்குள், அன்பான நண்பர்கள், தங்கள் சொந்த சோதனைகளை சகித்திருப்பதில் தாங்கள் சேகரித்தவற்றிலிருந்து எங்களுக்குப் புத்திமதி அளித்தனர். அவர்கள் நல்நோக்கோடுதான் அளித்தனர்; ஆனால் எதிர்பார்க்கப்படுகிறபடியே, எல்லா புத்திமதியும் ஞானமானதாகவோ பயனுள்ளதாகவோ அமையவில்லை. என்றபோதிலும், பல வருடங்களின் சோதனைக்குப் பின்னர், அவர்களுடைய புத்திமதி அருமையான இரண்டு ஞானத் திவலைகளாகக் கிடைத்தன.
ஆன்ட்ரூ உண்மையில் மன வளர்ச்சி குறைபாடுள்ளவனாக இல்லை என்று சொல்வதன்மூலம் சிலர் எங்களை ஆறுதல்படுத்த முயன்றனர். ஆனால் நெடுநாள் பழக்கப்பட்ட ஒரு நண்பர் இவ்வாறு அறிவுறுத்தினார்: “அந்த உண்மையை ஏற்க மறுக்காதீர்கள்! எவ்வளவு விரைவில் அவனுடைய குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு விரைவில் உங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் மாற்றியமைத்துக்கொண்டு, அவனுக்கு ஏற்றவிதத்தில் உதவ முயலுவீர்கள்.”
இன்னலைச் சமாளிக்க நாங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடங்களில் ஒன்று அதுவாகவே இருந்தது. நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் வரை துயரத்தை ஆற்ற முடியாது. அவ்வாறு ஏற்க மறுப்பது பெரும்பாலும் இயல்புணர்ச்சியாக இருந்தாலும், எவ்வளவு காலம் அந்த ஏற்க மறுத்தல் தொடர்கிறதோ, அவ்வளவு காலம் நாம் அதைச் சமாளிக்க முயலுவதற்கான முயற்சிகள் எடுப்பதையும், ‘எல்லா மனிதருக்கும் நேரிடுகிற எதிர்பாராத சம்பவங்களால்’ ஏற்படுத்தப்படும் வரையறைகளுக்குள் செயல்படுவதையும் தள்ளிப்போடுகிறோம்.—பிரசங்கி 9:11, NW.
வழக்கமான பள்ளி பாடத் திட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அல்லது சீர்ப்படுத்தும் பள்ளித் திட்டத்தில் இருந்த பிள்ளைகளின் பெற்றோரை நாங்கள் வருடங்களினூடே சந்தித்திருந்தபோது, நிஜத்தில் எத்தனை பிள்ளைகள் மனவளர்ச்சியில் குறைவுபட்டவர்களாக அல்லது மற்றபடி ஊனமுற்றவர்களாக இருக்கக்கூடும் என்று அடிக்கடி யோசித்திருந்தோம். “காணக்கூடாதவகையில் ஊனமுற்றவர்கள்” என்பவர்களில் உட்பட்டவர்களாக—ஆன்ட்ரூவைப் போலிராமல், உடல் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இன்றி சாதாரண பிள்ளைகளைப் போல தோன்றுகிறவர்களாக—அவர்களில் சிலர் இருக்கக்கூடுமா? டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்பை உடைய தனிநபர்கள் எளிதாகக் கண்டறியப்படத்தக்கவர்கள். ஆனால் மற்ற வகைகளான குறைபாடுகளுக்கு வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை. எத்தனை பெற்றோர், பிள்ளையின் குறைபாடுகளை ஏற்க மறுத்து நிஜத்திற்கு ஒவ்வாத எதிர்பார்ப்புகளை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருப்பதால், எல்லாரையும் கோபமடையச் செய்திருக்கிறார்கள்?—கொலோசெயர் 3:21-ஐ ஒப்பிடுக.
எங்களுடைய அனுபவம் மெய்ப்பித்துக்காட்டிய இரண்டாவது புத்திமதி இதுவே: பெரும்பாலானவர்கள் உங்கள் பிள்ளையை எப்படி நடத்துவார்கள் என்று கடைசியில் நீங்கள்தான் தீர்மானிப்பீர்கள். நீங்கள் அவனை நடத்தும்விதத்திலேயே பெரும்பாலும் மற்றவர்களும் அவனை நடத்துவார்கள்.
உடல் சம்பந்தமாகவும் மன சம்பந்தமாகவும் ஊனமுற்றிருப்பவர்களிடமாக மக்களின் மனநிலைகளில் கடந்த ஒருசில பத்தாண்டுகளாக அதிக மாற்றம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இவற்றில் அநேக மாற்றங்கள், ஊனமுற்றிருப்பவர்கள் சிலராலும், அவர்களுடைய உறவினர்களாலும், மற்ற சாதாரண மற்றும் வாழ்க்கைத்தொழிலரான வழக்கறிஞர்களாலும் தூண்டப்பட்டிருக்கின்றன. தங்கள் குழந்தைகளை நிறுவனங்களில் வைத்து கவனிப்பதற்கான புத்திமதியை அநேக பெற்றோர்கள் தைரியமாக அசட்டைசெய்து, அதன்மூலமாக ஸ்தாபிக்கப்பட்ட கருத்தைத் திருத்தியமைத்திருக்கின்றனர். ஐம்பது வருடங்களுக்கு முன்பாக, டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்பைப் பற்றிய மருத்துவ பாடப்புத்தகங்களில் பெரும்பாலானவை, நிறுவனங்களிலிருந்து சேகரித்த விவரப்பதிவுகளின் அடிப்படையில் இருந்தன. இன்று பெற்றோரும் மற்றவர்களும் பெரும்பாலும் புதிய முறைகளைப் பின்பற்றியிருப்பதால், எதிர்பார்ப்புகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.
அதிகப் பரிவைக் கற்றுக்கொள்ளுதல்
நாம் உண்மையிலேயே பரிவுள்ளவர்களாக இருக்கிறோம் என்று நினைத்து நம்மை எவ்வளவு எளிதாக ஏமாற்றிக்கொள்ளலாம் என்பது விநோதமாக இருக்கிறது. ஆனால் நாம் தனிப்பட்டவர்களாக உட்பட்டிருந்தாலொழிய, அநேக பிரச்சினைகளைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதல் அடிக்கடி மேலோட்டமானவையாகவே இருக்கக்கூடும்.
ஆன்ட்ரூவின் நிலைமை, ஊனமுற்ற நிலையில் இருப்பவர்களுக்கு தங்கள் நிலைமையின்மேல் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதை எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது. உண்மையில், பலவீனமானவர்கள், கற்பதில் மந்தமானவர்கள், வயதானவர்கள் ஆகியோரிடம் என்னுடைய மனோபாவம் உண்மையில் என்னவாக இருக்கிறது என்ற கேள்வியை நாங்கள் எதிர்ப்பட வைத்திருக்கிறது.
அடிக்கடி நாங்கள் பொது இடங்களில் ஆன்ட்ரூவுடன்கூட இருக்கும்போது, அவனை எங்கள் குடும்பத்தின் முழு அங்கத்தினனாக கூச்சமின்றி ஏற்றிருப்பதைக் கண்டு, முன்பின் தெரியாதவர்கள் எங்களிடம் வந்து தங்கள் ரகசியமான பாரங்களை எங்களுடன் பகிர்ந்திருக்கின்றனர். ஆன்ட்ரூ இருந்ததுதானே, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு நாங்கள் ஒற்றுணர்வைக் காண்பிக்க முடியும் என்று அவர்களுக்கு உறுதியளித்ததைப் போன்று இருந்தது.
அன்பின் வல்லமை
பெரிய அளவில் ஆன்ட்ரூ எங்களுக்குக் கற்றுக்கொடுத்த மிக முக்கியமான பாடம் என்னவென்றால், அன்பு என்பது வெறும் அறிவாற்றல் சார்ந்த காரியமல்ல என்பதாகும். நான் அதை விளக்குகிறேன். யெகோவாவின் சாட்சிகளாக எங்களுடைய வணக்கத்தின் அடிப்படைகளில் ஒன்று, இன, சமூக, அரசியல் சார்பான பிரிவுகள், மற்றும் தப்பெண்ணங்களுக்கு உண்மைக் கிறிஸ்தவம் மேம்பட்டு நிற்பதாகும். இந்த நியமத்தில் நம்பிக்கையுள்ளவர்களாய், ஆன்ட்ரூ எங்கள் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளால் ஏற்றுக்கொள்ளப்படுவான் என்று நாங்கள் அறிந்திருந்தோம். வழிபாட்டு நிகழ்ச்சிகளின்போது அவன் மரியாதைக்குரியவிதத்தில் உட்கார்ந்திருக்கும்படி எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று சொன்ன நிபுணர்களின் புத்திமதியைப் புறக்கணித்து, அவன் பிறந்ததுமுதல் அவனை எல்லாக் கூட்டங்களுக்கும், மேலுமாக பிரசங்க வேலையில் வீட்டுக்கு வீடு செல்வதிலும் எங்களுடன் கூட்டிக்கொண்டு செல்லும்படி பார்த்துக்கொண்டோம். எதிர்பார்த்தபடியே, சபை அவனை தயவுடனும் பரிவுடனும் நடத்துகிறது.
ஆனால் இதற்கப்பால் செல்லுகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவன்மேல் விசேஷித்த பிரியத்தை வைத்திருக்கிறார்கள். ஆன்ட்ரூவின் குறைந்தளவு அறிவாற்றலாலும் முற்றிலுமாக ஊனமாக்கப்படாத ஒரு திறமையுடன் அவனும் இதைப் புரிந்துகொள்வதாகத் தோன்றுகிறது. இந்த நபர்களிடம், அவன் தன் இயல்பான கூச்சவுணர்வை எளிதாக மேற்கொண்டு, கூட்டங்கள் முடிந்ததும் நேராக அவர்களிடம் செல்லுகிறான். அவனுக்காக விசேஷ பிரியத்தைக் கொண்டிருப்பவர்களை ஒரு கும்பலில்கூட கண்டுகொள்ளக்கூடிய இந்த இயல்பான திறன் அவனில் இருப்பதை நாங்கள் அடிக்கடி கவனித்திருக்கிறோம்.
அவன் அன்பை வெளிக்காட்டுவதைக் குறித்ததிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், செல்லப் பிராணிகளிடமும் ஆன்ட்ரூ மிகவும் சாதுவாக நடந்துகொள்கிறான். சிலவேளைகளில் எங்களுக்குத் தெரியாத யாரோவொருவரின் குழந்தையிடம் அவன் தயக்கமின்றி அணுகும்போது, ஆன்ட்ரூ கவனக்குறைவாய் மிக முரட்டுத்தனமாக விளையாடினால் அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்கு தயாராக நாங்கள் பக்கத்திலேயே இருப்போம். இருந்தாலும், அந்தக் குழந்தையை பால் கொடுக்கும் தாயைப் போல் அவன் கனிவுடன் தொடுவதைப் பார்த்தபோது, நாங்கள் பயந்ததைக் குறித்து எத்தனை முறை வெட்கப்பட்டிருக்கிறோம்!
நாங்கள் கற்றிருக்கும் பாடங்கள்
டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்பை உடைய எல்லா பிள்ளைகளும் தோற்றத்தில் ஒத்திருப்பதால், அவர்கள் அனைவரும் ஒரேவிதமான ஆளுமைகளைக் கொண்டிருப்பார்களென நாங்கள் எதிர்பார்த்தோம். என்றபோதிலும், அவர்கள் ஒருவரையொருவர் ஒத்திருப்பதைவிட தங்கள் குடும்பங்களையே அதிகப்படியாக ஒத்திருக்கிறார்கள் என்பதை விரைவில் அறிந்துகொண்டோம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மையான ஆளுமை இருக்கிறது.
ஆன்ட்ரூ, மற்ற அநேக இளைஞரைப் போலவே கடின வேலையை அனுபவித்து மகிழ்வதில்லை. ஆனால் ஒரு வேலை ஒரு பழக்கமாக ஆகும் வரையாக அதை மீண்டும் மீண்டும் அவனை வைத்து செய்விப்பதற்கான பொறுமையும் சகிப்புத்தன்மையும் எங்களுக்கு இருந்தால், அவனுக்கு அது இனிமேலும் வேலையாகத் தோன்றவில்லை என்பதை நாங்கள் கண்டோம். வீட்டிலுள்ள அவனுடைய வேலைகள் அவனுள் பாகமாக்கப்பட்ட இயல்பாகவே ஆயின; கூடுதலான வீட்டுவேலைகள் மட்டுமே வேலையாகக் கருதப்படுகின்றன.
ஆன்ட்ரூவின் வாழ்க்கையின்போது நாங்கள் கற்றிருக்கிற பாடங்களைப் பின்னோக்கிப் பார்த்தால், அக்கறைக்குரிய ஒரு முரண்படும் உண்மைதான் வெளிப்படுகிறது. ஆன்ட்ரூவை வளர்ப்பதில் நாங்கள் கற்றுக்கொண்ட கிட்டத்தட்ட எல்லா நியமங்களும், எங்கள் மற்ற பிள்ளைகளுடனும் பொதுவாக மக்களுடனும் கொண்டிருக்கக்கூடிய எங்கள் உறவுகளுக்கு சமமாகவே பொருந்துவதாக இருக்கின்றன.
உதாரணமாக, உண்மையான அன்புக்கு நம்மில் எவராவது சாதகமாகப் பிரதிபலிக்காமல் இருப்போமா? திறமைகள் அல்லது அனுபவத்தில் உங்களுடையதிலிருந்து பெரிதும் வேறுபட்டவராய் இருக்கும் ஒருவருடன் சாதகமற்ற முறையில் நீங்கள் எப்போதாவது ஒப்பிடப்பட்டால், அதை நியாயமற்றதாகவும் கவலைக்குரியதாகவும் உணரவில்லையா? முடிவாக, ஆரம்பத்தில் இன்பமற்றதாக இருந்த வேலைகள் காலப்போக்கில் கட்டுப்பாட்டுடன் அவற்றைச் செய்துவந்தபோது சகிக்கக்கூடியவையாகவும், திருப்திகரமானவையாகவும்கூட மாறியது, நம்மில் அநேகரைக் குறித்ததில் உண்மையாக இருந்திருக்கிறது அல்லவா?
மனிதத்தனமான குறுகியநோக்கினால், நாங்கள் ஆன்ட்ரூவுக்காக நிறைய கண்ணீர் வடித்திருக்கிறபோதிலும், சிறியதும் பெரியதுமான அநேக சந்தோஷங்களையும் பகிர்ந்திருக்கிறோம். ஆன்ட்ரூவுக்கு முற்றிலும் சம்பந்தமற்ற காரியங்களிலும், அவனால் நாங்கள் முன்னேறியிருக்கிறோம் என்று காண்கிறோம். வாழ்க்கையில் எந்த அனுபவமும், எவ்வளவு சோதனையளிப்பதாக இருந்தாலும் சரி, நம்மை கசந்துகொள்கிறவர்களாக ஆக்குவதற்கு மாறாக மேம்பட்டவர்களாக மாற்றியமைக்கும் ஆற்றலை உடையது என்பதைக் கற்றுக்கொண்டோம்.
எங்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேறொன்றும் இருக்கிறது. ஆன்ட்ரூவின் ஊனமுற்ற நிலைமை மாறுவதைக் காணும் மகத்தான நேரத்தை எதிர்நோக்கியிருப்பதில் நாங்கள் அதிக மகிழ்ச்சியைப் பெறுகிறோம். கடவுளுடைய நீதியான புதிய உலகில், எல்லா குருடர், செவிடர், முடவர், மற்றும் ஊமையர் செழுமையான ஆரோக்கியத்திற்கு கொண்டுவரப்படுவர் என்று பைபிள் வாக்களிக்கிறது. (ஏசாயா 35:5, 6; மத்தேயு 15:30, 31) அப்போது மனிதவர்க்கத்தினர் தங்கள் முழு ஆற்றலோடும் திகழ்கையில் மனதும் உடலும் குணமடைவதை நேரடியாகக் காண்பதில் எல்லாருக்கும் ஏற்படும் சந்தோஷத்தைக் கற்பனைசெய்து பாருங்கள்! (சங்கீதம் 37:11, 29)—அளிக்கப்பட்டது.
[பக்கம் 12-ன் பெட்டி]
குறைபாட்டின் அளவுகள்
டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்புள்ள நபர்களை சில நிபுணர்கள் மூன்று தொகுதிகளாகப் பிரிக்கின்றனர். (1) கற்கக்கூடியவர் (நடுத்தரமான): கணிசமானளவு கல்வித்திறன்களைக் கற்றுக்கொள்ளத்தக்கவர்கள். நடிகர்களாக அல்லது விரிவுரையாளர்களாகக்கூட ஆகியிருக்கும் சிலரை இந்தத் தொகுதி உட்படுத்துகிறது. சிலர் குறைந்தளவு மேற்பார்வையுடன் தனித்தியங்குகிறவர்களாக வாழ்வதிலும் வெற்றிகண்டிருக்கிறார்கள். (2) தொழில் பயிலக்கூடியவர் (சாதுவான): குறிப்பிட்ட நடைமுறை தொழில் திறன்களை கற்றுக்கொள்ளத்தக்கவர்கள். தங்களைத்தாங்களே ஓரளவுக்கு கவனித்துக்கொள்ள கற்பிக்கப்படலாம் என்றாலும், அதிகப்படியான மேற்பார்வை தேவைப்படுகிறது. (3) பாதுகாப்பிலிருப்போர் (கடுமையான): அதிகப்படியான மேற்பார்வை தேவைப்படுகிற, மிகவும் குறைந்தளவு செயல்படத்தக்க தொகுதி.
ஆன்ட்ரூவைப் பற்றி என்ன? அவன் “தொழில் பயிலக்கூடியவர்” என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவின்கீழ் வருகிறான் என்று நாங்கள் இப்போது அறிந்திருக்கிறோம்.