உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/8 பக். 16-19
  • கடலின் படிக அரண்மனைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடலின் படிக அரண்மனைகள்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆரம்பமும் வாழ்க்கை சரித்திரமும்
  • பனிப்பாறை இடப்பெயர்ச்சி
  • பனிப்பாறைகள் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன
  • யெகோவாவுடைய படைப்பின் ஓர் அதிசயம்
  • அன்டார்க்டிகா—ஆபத்திலிருக்கும் நிலப்பகுதி
    விழித்தெழு!—2000
  • அன்டார்க்டிகா—கடைசி எல்லை
    விழித்தெழு!—2000
  • உங்கள் தலை வலிக்கும்போது
    விழித்தெழு!—1988
  • டிரினிடாட் நான்கு நாட்களில் கட்டி முடிக்கிறது!
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/8 பக். 16-19

கடலின் படிக அரண்மனைகள்

கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

“முன்னால் பனிப்பாறை!” என்பதாக கவலையுள்ள காவற்காரன் சத்தமிடுகிறான். கப்பலின் மேடையிலிருக்கும் கப்பல் பணியாளர்களின் தொகுதி உடனடியாக பிரதிபலிக்கிறது. ஒரு மோதலைத் தவிர்ப்பதற்காக என்ஜின்களின் இயக்கத் திசை மாற்றப்படுகின்றன. ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது. கப்பலின் வலப்பக்கத்தில் அழிவுக்கேதுவான ஆழமான வெட்டு ஏற்பட்டுவிடுகிறது.

மூன்றுக்கும் குறைவான மணிநேரங்களுக்குள், அப்போது உலகிலேயே மிகப் பெரிய இன்பச்சுற்றுலா பயணக்கப்பலாக இருந்த அதை வட அட்லான்டிக் கடல் அகப்படுத்திக்கொள்கிறது. ஏப்ரல் 15, 1912 அன்று, ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்கா வரையான அதன் முதல் பயணத்தின் ஐந்தே நாட்களில், டைட்டானிக் மேல்மட்டத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் கீழே கடல் தரையில் போய் நிற்கிறது. சுமார் 1,500 பயணிகளும் கப்பல் பணியாளர்களின் தொகுதியும் கடலில் சாகின்றனர்.

அந்தப் பெரிய பனிப்பாறையில் என்ன மிஞ்சியிருந்தது? அது கிட்டத்தட்ட அப்படியே பழுதடையாமல் இருந்தது. அதன் முனைதான் டைட்டானிக்குடன் மோதியது. அதற்கடுத்த நாள், ஒன்றுமே நடக்காததுபோல் தென்புறமாக வெப்பமான தண்ணீர்களில் அது மிதந்து செல்வதை தேடுகிறவர்கள் கண்டார்கள். பெரிய கடலுக்குள் மெதுவாக உருகும் அந்தப் பனிப்பாறையின் மறைவு சீக்கிரத்தில் மறக்கப்படும். என்றாலும், டைட்டானிக் மூழ்கியது ஓர் அதிர்ச்சிதரும் கடல்-பேரழிவாக இன்னும் நினைவுகூரப்படுகிறது.

பனிப்பாறைகள்! அவை அவ்வளவு கவர்ச்சிகரமானவையாகவும் கம்பீரமானவையாகவும், அதேநேரத்தில் உறுதியானவையுமாக இருக்கின்றன. அவற்றை எப்போதாவது அருகிலிருந்து பார்த்து, மனிதன் மீதும் இயற்கையின் மீதும் அவை கொண்டிருக்கும் பாதிப்பை உணர்ந்திருக்கிறீர்களா? அவை ஏன், எவ்வாறு உருவாகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? மேலும், பனிப்பாறைகளால் ஏற்படும் ஆபத்தின் சாத்தியத்திலிருந்து கடலில் மக்களைப் பாதுகாப்பதற்கு என்ன செய்யப்படுகிறது? (“சர்வதேச பனிக் காவல்” என்ற பெட்டியைப் பார்க்கவும்.)

ஆரம்பமும் வாழ்க்கை சரித்திரமும்

பனிப்பாறைகள், மிகப் பெரிய நன்னீர் பனிக்கட்டிகளைப் போன்றவை. வடக்கிலும் அன்டார்க்டிக்கிலுமுள்ள பனியாறுகளிலிருந்தும் பனிப் படலங்களிலிருந்தும் அவை வருகின்றன. அன்டார்க்டிக் பனிமூடி, பூமியிலுள்ள பனிப்பாறைகளில் சுமார் 90 சதவீதத்தை உருவாக்குகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருந்ததா? அதுவே மிகப் பெரியவற்றையும் உருவாக்குகிறது. இவை நீர்மட்டத்திற்குமேல் 100 மீட்டர் உயரமாக எழும்பிநின்று, நீளத்தில் 300 கிலோமீட்டருக்கும் அகலத்தில் 90 கிலோமீட்டருக்கும் மேலான அளவுடையவையாக இருக்கலாம். பெரிய பனிப்பாறைகள் 20 லட்சத்திற்கும் நான்கு கோடி டன்னுக்கும் இடைப்பட்டவையாக இருக்கலாம். மேலும் வெண்பனித்திவலைகளைப் போலவே, எந்த இரு பனிப்பாறைகளும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சில தட்டையாக, அல்லது சமதளமான மேற்பரப்பை உடையவையாக இருக்கின்றன. மற்றவை ஆப்பு வடிவத்தை உடையவையாக, முகடு, அல்லது குவிமாடம் போன்று அமைந்தவையாக இருக்கின்றன.

வழக்கமாய், ஒரு பனிப்பாறையின் சுமார் ஏழில் ஒரு பங்கு அல்லது பத்தில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்குமேல் காணப்படுகிறது. இது முக்கியமாக சமதளமான மேற்பரப்பை உடைய பனிப்பாறைகளைக் குறித்ததில் உண்மையாக இருக்கிறது. ஒரு ஐஸ் கட்டி, ஒரு கிளாஸ் தண்ணீரில் மிதக்கையில் எதைக் காண்கிறீர்களோ பெரும்பாலும் அதைப்போன்றே அது இருக்கிறது. என்றபோதிலும், வெளியே தெரிகிற பனிப்பாறை பகுதிக்கும் மூழ்கியிருக்கிற பனிப்பாறை பகுதிக்கும் இடையிலுள்ள விகிதம், அந்தப் பனிப்பாறையின் வடிவத்தைப் பொறுத்து வித்தியாசப்படுகிறது.

அன்டார்க்டிக் பனிப்பாறைகள் சமதளமான மேற்பரப்பையும் பாளம் போன்ற பக்கங்களையும் உடையவையாய் இருக்கின்றன; ஆர்க்டிக் பனிப்பாறைகளோ பெரும்பாலும் ஒழுங்கற்றவையாகவும் கோபுரம்போன்ற அமைப்புகளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. பெரும்பாலும் கிரீன்லாந்தை மூடியிருக்கும் பெரிய பனிமூடியிலிருந்து வரும், இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட இவை, அட்லான்டிக் கடலைக் கடந்துசெல்லும் கப்பற்பயணப்பாதைக்குள் நகர்ந்துசெல்லக்கூடும் என்பதால் மனிதனுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன.

பனிப்பாறைகள் எப்படித்தான் உருவாக்கப்படுகின்றன? பூமியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், பனியும் உறையும் மழையும் சேர்ந்து குவிவது, உருகுதல் மற்றும் நீராவி ஆகுதல் ஆகியவை போக இன்னும் மிகுதியாக இருக்கிறது. இது நிலப்பரப்புகளில் உருவாகும் பனிப் படலங்களை நகரும் பனியாற்றுக்கட்டிகளாகும்படிச் செய்கின்றன. வருடந்தோறும், அதிக பனியும் மழையும் பெய்யும்போது, தொடர்ச்சியான படிவுகள் ஏற்படுகின்றன. கிரீன்லாந்தைப் போன்ற பரந்தகன்ற நிலப் பகுதிகளின் மீது இது பெரிய பனி வயல்களை உருவாக்குகிறது. காலப்போக்கில், அந்தப் பனிப் படலம், கனமான பனியாறை உயர்ந்த சரிவுகளிலிருந்து பள்ளத்தாக்குகளுக்கும் கடைசியில் கடலுக்குள்ளும் மிக மெதுவாக நகர்ந்து வரும்படி செய்யுமளவிற்கு கனமாகவும் கெட்டியாகவும் ஆகிறது. அந்த நகர்தலைக் குறித்து விவரிக்கையில், வட துருவம், தென் துருவம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் பெர்னார்ட் ஸ்டோன்ஹௌஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடினமான பனிக்கட்டி மீள்தன்மை உடையது, ஆனால் எளிதில் உருமாற்றம் அடையத்தக்கது; அழுத்தத்தின்கீழ் அதன் அறுகோணமுடைய படிகக் கட்டிகள் வரிசையாகச் சேர்ந்து, ஒன்றன்மேல் ஒன்றாகச் சறுக்கி, பனியாறுகளுடன் தொடர்புடையதாக நாம் கருதும் வழுகிச்செல்லுதலையும் வீழ்ச்சியையும் உருவாக்குகின்றன.”

சமநிலையற்ற நிலப்பரப்பில், ஆறிய வெல்லப்பாகுபோல பனிக்கட்டி ஆறு ஒன்று மிகவும் மெதுவாக நகர்ந்துசெல்வதைச் சற்று கற்பனை செய்துபாருங்கள். ஏற்கெனவே ஆழமான செங்குத்தான கீறல்களைக் கொண்டிருக்கும் இந்தப் பெரிய பனிக்கட்டிப் படலம் கடற்கரையோரத்தைச் சென்றெட்டியதும் குறிப்பிடத்தக்க கண்கவர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தும்படியாக மேலுமாகப் பாதிக்கப்படுகிறது. கடலின் ஏற்றவற்றங்கள், துவள்கிற அலைகள், நீரடியிலுள்ள அரித்தல் செயல் ஆகியவற்றின் ஒன்றுசேர்ந்த விளைவாக, கடலுக்குள் சுமார் 40 கிலோமீட்டர் வரையாக நீண்டிருக்கக்கூடிய பெரிய நன்னீர் பனிக்கட்டி, பனியாறிலிருந்து இடியோசையுடன் உடைந்து செல்லும். ஒரு பனிப்பாறை பிறக்கிறது! “மிதக்கும் படிக மாளிகை” என்பதாக பார்வையாளர் ஒருவர் அதை விவரித்தார்.

ஆர்க்டிக்கில், வருடந்தோறும் 10,000-க்கும் 15,000-க்கும் இடைப்பட்ட பனிப்பாறைகள் உருவாகின்றன. இருந்தாலும் ஒப்பிடுகையில் ஒருசிலவையே, நியூபௌண்ட்லாந்தின் கரையோரத்திலுள்ள தென்புறத் தண்ணீர்களைச் சென்றெட்டுகின்றன. அவ்வாறு சென்றெட்டுகிறவற்றிற்கு என்ன சம்பவிக்கிறது?

பனிப்பாறை இடப்பெயர்ச்சி

பனிப்பாறைகள் அகற்றித் தள்ளப்பட்டப் பிறகு, கடல் நீரோட்டம் அவற்றில் சிலவற்றை மேற்கு மற்றும் தெற்கு திசை நோக்கி, முடிவாக பனிப்பாறை பாதை என்று அடைப்பெயரிடப்பட்ட லாப்ரடார் கடலுக்குச் செல்லும்படி திசைதிருப்புவதற்குமுன் அவற்றில் பெரும்பாலானவற்றை ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளச் செய்கிறது. தாங்கள் உருவாகிய இடத்திலிருந்து திறந்த அட்லான்டிக் கடலுக்கு லாப்ரடார் மற்றும் நியூபௌண்ட்லாந்தின் கடல்திசைநோக்கி சுமார் இரண்டு வருட நகர்ந்துவருதலை தாக்குப்பிடிக்கிற பனிப்பாறைகள் குறுகிய ஆயுளை அனுபவிக்கின்றன. அதிக வெப்பமான தண்ணீர்களை நோக்கி நகர்ந்து செல்லுகையில், உருகுதல், அரித்தல், மற்றும் அதிகமாக அகற்றித் தள்ளப்படுதல் ஆகியவற்றின் காரணமாக அவை மிகுந்த சேதத்தை அடைகின்றன.

வழக்கமாக, பகலின்போது பனிக்கட்டி உருகி, பிளவுகளில் தண்ணீர் தேங்குகிறது. இரவில் இந்தத் தண்ணீர் உறைந்து, இந்தப் பிளவுகளில் விரிவடைந்து, அங்கிருந்து துண்டுகள் முறிந்துசெல்லும்படி செய்கிறது. இது அந்தப் பனிப்பாறையின் வடிவத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் புவியீர்ப்பு மையத்தை மாற்றியமைக்கிறது. அதன் பிறகு அந்தப் பனிக்கட்டி, முற்றிலும் புதிய பனிக்கட்டி வடிவம் ஒன்றுடன் தண்ணீருக்குள் உருண்டு செல்கிறது.

இந்தச் சுழற்சி தொடர்ந்து, அந்தப் பனிக்கட்டி மாளிகைகள் மேலுமாகத் தகர்ந்து அளவில் குறையும்போது, சுமார் ஒரு சராசரி வீட்டின் அளவுடையதைப் போன்ற “பனிப்பாறை துண்டுகள்” என்றழைக்கப்பட்ட பனிப்பாறைகளையும், சிறிய அறை ஒன்றின் அளவுடைய ‘உறுமும் சிறு பனிக்கட்டிகளையும்’ தங்களிலிருந்து உருவாக்குகின்றன—பின்னால் குறிப்பிடப்பட்ட இவை அலைகளில் மிதக்கும்போது உண்டுபண்ணும் சத்தத்தின் காரணமாக அவ்வாறு பெயரிடப்பட்டிருக்கின்றன. உறுமும் சிறிய பனிக்கட்டிகள் சில கடற்கரையோரத்தின் ஆழமற்ற தண்ணீர்களிலும் கடற்கழிகளிலும்கூட தத்தித்தடுமாறிச் செல்லக்கூடும்.

சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி, அதிக தென்புறமாகவுள்ள தண்ணீர்களின் சூழல், பனிப்பாறையானது சிறிய நன்னீர் பனிக்கட்டித் துண்டுகளாக விரைவில் சிதைந்து, பின்னர் திரண்ட கடலின் பாகமாகும்படி செய்விக்கும். என்றபோதிலும், அது சம்பவிக்கும் வரையாக பனிப்பாறைகள் எச்சரிக்கையுடன் கருதப்படவேண்டும்.

பனிப்பாறைகள் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன

கடலைத் தங்கள் வாழ்க்கைப் பிழைப்பிற்காக நம்பியிருக்கும் மீனவர்கள் பனிப்பாறைகளை ஒரு தொந்தரவாகவும் ஓர் அபாயமாகவும் கருதும் மனச்சாய்வைக் கொண்டிருக்கின்றனர். மீனவர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “சுற்றுலா பயணிகள் பனிப்பாறைகளை விரும்பக்கூடும், ஆனால் மீனவர்களுக்கு சாத்தியமான ஓர் அச்சுறுத்தலாகவே அது இருக்கிறது.” மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களின் அளவைப் பார்க்க திரும்பிவருகையில், ஏற்றவற்றத்தாலும் நீரோட்டத்தாலும் நகர்த்தப்பட்ட ஒரு பனிப்பாறை தங்கள் விலைமதிப்புள்ள வலைகளையும் தங்கள் மீன்களையும் அழித்துவிட்டிருப்பதையே கண்டிருந்ததும் உண்டு.

பனிப்பாறைகள் மதிப்பிற்குத் தகுதியானவை. “நீங்கள் விலகியே இருப்பது நல்லது,” என்பதாக பாய்மரக் கப்பல் தலைவர் ஒருவர் சொல்கிறார். “பனிப்பாறைகளின் செயல்பாட்டைக் குறித்து முன்னறிவது மிகவும் அரிது! உயரமானவற்றிலிருந்து பெரிய பகுதிகள் தகர்ந்து விழலாம், அல்லது அடியில் இடிக்கும்போது பெரிய கட்டிகள் தகர்ந்து, மேலெழும்பி உங்களிடமாக வரலாம். மேலும், பனிப்பாறை சுழன்று உருண்டு செல்ல முடியும்; இவையனைத்தும் மிக நெருங்கிச்செல்ல துணியும் எவருக்கும் பேரழிவுக்குரியதாக இருக்கலாம்!”

கடலின் அடித்தரையைப் பனிப்பாறைகள் உரசுவது, அக்கறைக்குரிய மற்றொரு அம்சமாகும். “ஒரு பனிப்பாறையின் இழுவை, தண்ணீரின் ஆழத்துக்குக் கிட்டத்தட்ட சமமாக இருந்தால், அதன் அடிப்பாகம் நீண்ட ஆழமான பள்ளங்களைத் தோண்டுவதாக அறியப்பட்டிருக்கிறது. எண்ணெய் தோண்டியெடுக்கப்படும் பகுதிகளில் அப்படிப்பட்ட செயல், கடல் தரையில் கட்டப்பட்டுள்ள எண்ணெய் ஊற்றுக்கண்கள் போன்ற அமைப்புகளின்மீது அழிவுக்குரிய பாதிப்பைக் கொண்டிருக்கும்,” என்று ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

பனிப்பாறைகள் இல்லாமலேயே நாம் நன்றாக இருக்கலாம் என்று நீங்கள் இதற்குள் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். என்றபோதிலும், பனிப்பாறையைப் பற்றிய கதை எவ்விதத்திலும் எதிர்மறையானதாக மட்டுமே இல்லை. நியூபௌண்ட்லாந்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார்: “பல வருடங்களுக்கு முன்பு, குளிர்சாதன வசதி சாதாரணமாக இல்லாதபோது, சில சிறிய கடற்கரையோர கிராமத்து மக்கள், தண்ணீரை ஐஸ் போல் குளிராக வைத்திருப்பதற்காகப் பனிப்பாறையிலிருந்து சிறிய துண்டுகளைக் கொண்டுவந்து தங்கள் கிணறுகளில் போடுவார்கள். வீட்டில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் உற்பத்தியில் உதவுவதற்கு மரத்தூள்களுள்ள தொட்டிகளில் பனிப்பாறையிலுள்ள பனிக்கட்டித் துண்டுகளைப் பாதுகாத்து வைப்பது மற்றொரு பழக்கம்.”

மிதக்கிற இந்தப் பெரிய பனிக்கட்டி மலைகளிடமாக சுற்றுலா பயணிகள் விசேஷமாக ஈர்க்கப்படுகிறார்கள். அட்லான்டிக்கின் பரந்தக் காட்சியை அனுபவிப்பதற்கும் இந்தக் கடல் அரக்கர்களை தங்கள் கண்களுக்கு விருந்தாக்கிக் கொள்வதற்கும் ஏற்ற வசதியான இடத்தை நியூபௌண்ட்லாந்தின் கரடுமுரடான கரையோரத்தில் அவர்கள் தேடுகிறார்கள். அந்த நொடியைப் படம் பிடித்து வைப்பதற்காக காமராக்கள் இயங்குகின்றன.

ஏறக்குறைய என்றும் குறைவுபடாத குடிநீர் வழங்கும் ஆற்றலையும் பனிப்பாறைகள் கொண்டிருக்கின்றன. என்றுமில்லாத அளவில் தண்ணீர் மாசுபட்டிருக்கும் இக்காலத்தில், பனிப்பாறை தண்ணீரை வடிகட்டுதலும் புட்டிகளில் அடைத்து வைத்தலும் காலப்போக்கில் சாத்தியமான ஒரு முயற்சியாக இருக்கலாம். பெரிய அளவில் தண்ணீரைப் பெற, ஒரு பெரிய “பனிப்பாறையை” கண்டுபிடித்து, பதப்படுத்தும்படி துறைமுகத்துக்கு இழுத்து வரும் ஓர் எளிய காரியமாகவே அது தோன்றக்கூடும். நிஜத்திலோ, இதுவரையிலும் எதிர்த்து நிற்க முடியாததாக நிரூபித்திருக்கும் மிகப் பெரிய ஒரு சவாலாக அது இருந்திருக்கிறது.

யெகோவாவுடைய படைப்பின் ஓர் அதிசயம்

வானம் மற்றும் பூமியின் படைப்பாளர் கேட்கிறார்: “யார் வயிற்றிலிருந்து பனிக்கட்டி பிறந்தது?” (யோபு ஆகமம் 38:29, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) எலிகூ அதை அறிந்திருந்தான், ஏனென்றால் ஏற்கெனவே அவன் சொல்லியிருந்தான்: “கடவுளின் மூச்சால் தண்ணீர் பனிக்கட்டியாகிறது.”—யோபு ஆகமம் 37:10, கத்.பை.

இவ்வாறாக, கடலின் இந்த உன்னதமான, மிளிரும் அதிசயங்களை நாம் காண்கையில், அவற்றை அங்கு வைத்த படைப்பாளரிடமாக நம்முடைய எண்ணங்கள் திரும்புகின்றன. சங்கீதக்காரனைப்போல் நாமும் சொல்கிறோம்: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.” அவர் மேலுமாகச் சொன்னார்: “உமது கிரியைகள் அதிசயமானவைகள்.”—சங்கீதம் 104:24; 139:14.

உண்மையிலேயே, யெகோவா அதிசயங்களைச் செய்விக்கும் படைப்பாளர். அவரை மேலுமாகத் தெரிந்துகொள்ள நாம் எவ்வளவாக ஏங்குகிறோம்! அவருடைய வார்த்தைக்குக் கவனம் செலுத்துவதன்மூலமாக நாம் இதைச் செய்யலாம்.—ரோமர் 11:33.

[பக்கம் 18-ன் பெட்டி]

சர்வதேச பனிக் காவல்

டைட்டானிக் பயணக் கப்பலின் அவலத்திற்குப் பின்னர், பனிப்பாறைகள் காணப்படும் இடங்களைக் கண்டறிந்து, கடல் மற்றும் காற்றுச் சுழல்களின் அடிப்படையில் அவற்றின் அசைவுகளை முன்னறிவிப்பதற்கும், பின்னர் பொது மக்களுக்கு பனிக்கட்டி எச்சரிக்கைகளைக் கொடுப்பதற்கும் சர்வதேச பனிக் காவல் (International Ice Patrol [IIP]) 1914-ல் நிறுவப்பட்டது. கடலிலுள்ள இந்த படிக அரக்கர்களிடமிருந்து பாதுகாப்பை அளிப்பதற்காக, பனிக்கட்டியின் பண்புகளையும் அவை செயல்படும்விதத்தையும் பற்றி அறிவைச் சேகரிப்பதற்காக எல்லா முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது, வானவூர்தி மூலமாக காணுதல் மற்றும் ரடார் கவனக் கண்காணிப்பு, வாணிக கப்பல்களிலிருந்து பனிக்கட்டி-காணும் அறிக்கைகள், செயற்கைக்கோள் படப்பிடிப்புகள், கடலியல்சார்ந்த ஆய்வுகள் மற்றும் முன்னறிவிப்புகள் ஆகியவற்றை உட்படுத்துகிறது.

[பக்கம் 16, 17-ன் படம்]

முகடு போன்றவை

குவிமாடம் போன்றவை

சமதளமான மேற்பரப்புடையவை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்