உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/22 பக். 16-18
  • வசீகரிக்கும் எதியோபியா

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வசீகரிக்கும் எதியோபியா
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மக்களும் அவர்களின் பண்பாடும்
  • பூகோள அம்சங்கள்
  • வனவிலங்குகள்
  • வழிநடத்துதலுக்கும் பாதுகாப்புக்கும் யெகோவாவையே நம்பியிருத்தல்
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
  • எத்தியோப்பியா
    சொல் பட்டியல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • உண்மையான உலகளாவிய சகோதரத்துவத்தில் மகிழ்ச்சியாக இருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 2/22 பக். 16-18

வசீகரிக்கும் எதியோபியா

எதியோபியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

பல வருடங்களாக எதியோபியா மறைந்த பேரரசாக அறியப்பட்டது. அதன் பல நூற்றாண்டுத் தனிமைநிலை முடிவுற்றிருக்கையிலும், அதன் வசீகரிக்கும் வரலாற்றைப் பற்றியும், பலவிதமான மக்களையும் பண்பாடுகளையும் பற்றியும், மேலும் அபூர்வ பூகோள அம்சங்களைப் பற்றியும் இன்று பலருக்குத் தெரியவில்லை. ஏறக்குறைய ஐந்து கோடி மக்களோடு—கிட்டத்தட்ட ஃபிரான்ஸின் ஜனத்தொகையளவு—அது கவனியாமல் விட்டுவிடப்பட முடியாத ஒரு தேசமாகும்.

“கறுத்த முகங்களின் பிரதேசம்” என்ற பொருளுடைய “எதியோபியா” என்ற வார்த்தையைப் பண்டைய கிரேக்கர்கள் புனைந்ததாகத் தெரிகிறது. என்றபோதிலும், அதன் ஆரம்ப அரசியல் வரலாறு மர்மத்தாலும் பழங்கதையாலும் மூடப்படுகிறது. எதியோபியா, பைபிளின் புகழ்பெற்ற பண்டைய சேபாவின் பகுதியென்றும் அதன் ராஜஸ்திரீ, அரசனாகிய சாலொமோனைச் சந்தித்த செல்வச்செழிப்புள்ள, உயர்பதவியிலிருந்தவள் என்றும் பாரம்பரியம் பலமாக உறுதியளிக்கிறது. இவ்விதமாக, சாலொமோனுக்கும் இந்த ராஜஸ்திரீக்கும் இடையே ஏற்பட்ட காதலின் பலனாகக் கருதப்படும் மானலிக் என்ற பெயருடைய ஒருவரின் பரம்பரையாகத் தாங்கள் இருப்பதாய் முன்பு எதியோபியாவை ஆண்ட பல ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டனர்.

இருந்தபோதிலும், எல்லா சாத்தியத்திலும், சேபா நாடு உண்மையில் தென்மேற்கு அரேபியாவில் அமைந்துள்ளது.a பைபிள் அதன் எபிரெய (“பழைய ஏற்பாடு”) மற்றும் கிரேக்க (“புதிய ஏற்பாடு”) பகுதிகள் இரண்டிலுமே எதியோபியாவைக் குறிப்பிடுகிறது. உதாரணமாக, அப்போஸ்தலர் அதிகாரம் 8, கிறிஸ்தவத்துக்கு மாறின ஓர் எதியோபிய “அண்ணகன்”-ஐ, அல்லது அரச அதிகாரியைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் தற்கால எல்லைகளின்படி, பைபிளின் எதியோபியா இப்போது சூடான் என்றறியப்படும் பகுதியை முன்பு உள்ளடக்கியிருந்தது.

நமது பொது சகாப்தத்தின் மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், ஆக்சூம் ராஜ்யம் எதியோபியாவில் நிறுவப்பட்டிருந்தது. நான்காம் நூற்றாண்டில் அரசர் ஏஜானாவின் ஆட்சியின்கீழ் அது அதன் சிகரத்தை எட்டியிருந்தது. மதம் மாறியிருந்த ஏஜானா தானேயும், தன் பேரரசை “கிறிஸ்தவ”த்துக்கு மாற்றியிருந்தார். சிறிது காலம் எதியோபியா மேற்கத்திய உலகோடு தொடர்பு வைத்திருந்தது, ஆனால் அத்தகைய உறவுகள் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் துண்டிக்கப்பட்டன. தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா விளக்குகிறது: “கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு, வடக்கிலும் கிழக்கிலும் ஆக்கிரமிக்கும் முஸ்லீம்களுக்கு எதிராகவும், தெற்கில் புறமதப் படையெடுப்பாளர்களுக்கு எதிராகவும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஏனைய கிறிஸ்தவ உலகிலிருந்து எதியோபியா தனிமைப்படுத்தப்பட்டது.” குறிப்பாக எகிப்து மற்றும் நூபியாவின்மீது முஸ்லீம்களின் வெற்றியானது எதியோபியாவை ஏனைய கிறிஸ்தவமண்டலத்திலிருந்து தனிமைப்படுத்தியது.

பிற ஆப்பிரிக்க நாடுகளைப் போலல்லாமல், இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும், 1935 முதல் 1941 வரையிலுமான குறுகியகால இத்தாலியர்களின் வருகையைத் தவிர, ஐரோப்பியக் காலனியின் நீண்ட காலக் குடியிருப்பை எதியோபியா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. 1974-ல், ஓர் இராணுவ பலாத்காரப் படை பழைய பேரரசுக்கு ஒரு வன்முறையான முடிவைக் கொண்டு வந்தது. 1991-லிருந்து, ஒரு புதிய அரசாங்கம், இத்தேசத்தைப் புதிய அம்சங்களை ஏற்றுக்கொள்ளும் சுயாதீன சமுதாயமாக்குவதில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் விளைவாக, ஒரு சமயம் மறைந்த நாடாக இருந்த இதைக் கூர்ந்து நோக்குவது இப்போது சாத்தியமாயுள்ளது.

மக்களும் அவர்களின் பண்பாடும்

எதியோபியர்களைப் பற்றி அனுமானிப்பது கடினமாயுள்ளது, ஏனெனில் அவர்களிடையே நிறைய வேறுபாடு உள்ளது. மிகக் கொடிய வெப்பமிகுந்த டனக்கில் பாலைவனத்தைச் சுற்றிவரும் ஆஃபார் நாடோடிகள் உள்ளனர். மேற்கே கறுத்த தோலையுடைய நைல் நதிப்படுகையின் மக்கள் உள்ளனர். தெற்கில் குறிப்பாக ஓரோமோ மக்கள் வசிக்கின்றனர். அம்ஹாரா மக்கள் மத்திய மேட்டுப்பகுதியில் வாழ்கின்றனர், அங்கே அவர்கள் காற்றுநிறைந்த மலையுச்சியைப் பண்படுத்துகின்றனர். ஆகவே, ஆச்சரியத்துக்கிடமின்றி, எதியோபியாவில் கிட்டத்தட்ட 300 மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு இனத்தொகுதிகளும் தங்கள் சொந்த சிகையலங்காரங்களையும், உடை உடுத்தும் விதத்தையும், கட்டடக்கலையையும் உடையனவாய் இருக்கின்றன. கட்டடக்கலையானது, தெற்கில் வட்டவடிவமான மூங்கில் டூக்கல்-களிலிருந்து மத்திய எதியோபியாவில் சுடப்படாத களிமண் கற்களால் கட்டப்பட்ட வீடுகள் வரையிலும் மேலும் வடக்கில் கல்லால் கட்டப்பட்ட மாடிக் கட்டட அமைப்புகளையும் கொண்டதாய் மாறுபடுகிறது.

அங்கே தனிப்பட்ட பெயர்களின் வசீகரிக்கும் பல்வேறு வகையும் உள்ளது. வெறுமனே அடையாளப்படுத்துவதற்கும் மேலாக, அயல்நாட்டுப் பெயர்களைப் போன்று ஒலிக்கும் பெயர்கள் பெரும்பாலும் எப்போதும் உள்ளூரில் நன்கறியப்பட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன. ஃபக்ரே (என் அன்பு), டெஸ்ட்டா (சந்தோஷம்), சீனைட் (நற்குணம்), என்னெட் (விசுவாசம்), ஆபீபா (மலர்), அல்லது டரூன்னேஷ் (நீ நல்லவள்) போன்ற பெயர்களால் பெண்கள் அழைக்கப்படுகின்றனர். ஆண்களுடைய பெயருக்கு சில உதாரணங்களாவன: பர்ஹானூ (ஒளி), வால்ட மார்யாம் (மேரியின் மகன்), கெப்ர இயேசூஸ் (இயேசுவின் ஊழியன்), ஹைல ஸெலாஸா (திரித்துவத்தின் வல்லமை), அல்லது டெக்லே ஹைமானோட் (மதத்தின் செடி).

இப்பெயர்களில் பல, ஆர்த்தடாக்ஸ் மதத்தின் செல்வாக்குக்கு தெளிவான நிரூபணத்தை அளிக்கின்றன. உண்மையில், மதமானது நிஜமாகவே எதியோபியப் பண்பாடு முழுவதிலும் பரவிப் படர்கிறது! 13 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியானது, முழுவதும் மதப் பண்டிகைகளைக் கொண்டதாயுள்ளது. இவற்றுள் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை, “சிலுவைப் பண்டிகை”யான மஸ்கல், கிறிஸ்துவின் முழுக்காட்டுதலைக் கொண்டாடும்படியான பல்வேறுபட்ட ஊர்வலங்களோடுகூடிய டம்காட் ஆகியவை. எதியோபியாவின் பெரும்பாலான பாரம்பரியக் கலையானது மத இயல்பு கொண்டவை என்றால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

பூகோள அம்சங்கள்

எதியோபியாவைப் பற்றிய உங்கள் கணநேரக் கண்ணோட்டம் அதன் வியப்பூட்டும் பூகோளத்தையும் உட்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சமானது, கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு ஆகும், அது கென்யாவிற்குப் போகும் அதன் பாதையில் தேசத்தை இரண்டாகப் பிரிக்கிறது. பல வெப்ப நீரூற்றுகளும் குகைகளும் அதன் விளிம்புகள் நெடுகக் காணப்படுகின்றன. அதன் பாதையில் ஏழு அழகிய ஏரிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் 2,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள மேட்டுநிலங்கள் மேலெழும்பி, சிம்யேன் மலைகளில் வடக்கே முடிவடைகின்றன. இவை 4,600 மீட்டருக்கும் மேல் உயர்ந்த ஒரு சிகரத்தைக் கொண்டிருப்பதால் ஆப்பிரிக்காவின் கூரை என்று அழைக்கப்படுகின்றன! இப்பகுதியின் உயரமான சுவர் தாங்கி போன்ற மலைகளும் ஒளிவீசும் மலையருவிப் பள்ளத்தாக்கும் கண்கவர்க் காட்சியாகும். நீலநைல் நதியின் ஊற்றுமூலமாக விளங்கும் டானா ஏரி அங்கிருந்து வெகுதொலைவில் இல்லை. இது சூடானை நோக்கி மேற்காகப் பாயும், தனக்கே உரித்தான, கவர்ச்சியூட்டும் மலையருவியைக் கொண்டுள்ளது. டானா ஏரிக்கு அருகே, நீலநைல் நதியும் ஓர் அழகிய காட்சியை அளிக்கிறது—புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சியின் ஒரு சிறிய உரு போன்று செங்குத்தான பாறைகளின்மீது அருவியாய் விழும் டீஸஸாட் நீர்வீழ்ச்சி. வடகிழக்கில், ஆப்பிரிக்காவின் மிகத் தாழ்வான பகுதியாகவிருக்கும் ஒரு பாலைவனமான டனக்கில்-ஐ பலநிறமுடைய வடிநிலங்கள் அலங்கரிக்கின்றன. அது கடல் மட்டத்திற்கும் தாழ்வாக உள்ளது.

கோதுமை, பார்லி, வாழைப்பழங்கள், சோளம், மற்றும் பருத்தி போன்றவற்றிலிருந்து திராட்சை வகைகள், ஆரஞ்சு வகைகள், மற்றும் ஏராளமான நறுமணப்பொருட்கள் வரை பரவியுள்ள ஓர் ஆச்சரியமான பல்வேறுவகைப் பயிர்களை எதியோபியா உற்பத்தி செய்கிறது. எதியோபியா காபிச் செடியின் பிறப்பிடமாகவும் உரிமைபாராட்டுகிறது, மேலும் இந்நாள்வரை அது பெருமளவு காபிக்கொட்டையை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அதுமட்டுமன்றி, டெஃப் என்றழைக்கப்படும் அபூர்வமான தானியமும் இருக்கிறது. அது புல்லைப் போலவே இருக்கிறது, மேலும் அதன் சிறிய விதைகள் அரைக்கப்பட்டு, எதியோபியாவின் முக்கிய ஆகாரப் பொருளும், தேசிய உணவு வகையுமான யன்ஜரா-வாகப் பயன்படுத்தப்படுகின்றன. யன்ஜரா ஒரு விசேஷமான அடுப்பில் தயாரிக்கப்பட்டு, அலங்காரமான மெஸாப் எனப்படும் ஒரு பெரிய வட்டவடிவமான கூடையில் பொதுவாக வைக்கப்படுகிறது. அநேக எதியோபிய வீடுகளின் தரைகளில் வைக்கப்படுகையில், அந்த மெஸாப் பயனுள்ளதாகவும் அதேசமயத்தில் அழகிற்குப் பேர்போகும் ஒரு பகுதியில் இன்றியமையாததாகவும் இருக்கிறது!

வனவிலங்குகள்

வனவிலங்குகளைப் பொறுத்தமட்டில் எதியோபியா அளிப்பதற்காக எதைக் கொண்டுள்ளது? ஏராளம். உண்மையில், எதியோபியா பலவகை மானின விலங்குகளும், சிங்கங்களும் வாழும் பல ஒதுக்கமாயுள்ள வன வாழ்விடங்களைக் கொண்டுள்ளது. 830-க்கும் மேலான பறவை இனங்கள் இந்நாட்டில் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது, அவற்றுள் சில எதியோபியாவில் மட்டுமே காணப்படுகின்றன.

அதிக அசாதாரணமாகக் காணப்படும் விலங்குகளில் ஒன்றானது, ஒய்யாரமான வாலியா இபெக்ஸ்; அது சிம்யேன் மலைகளின் மிக உயர்ந்த இடங்களில் மட்டுமே குடியிருக்கும் ஓர் உயரிய வரையாடு ஆகும். அவற்றுள் வெறும் சில நூறு ஆடுகள் மட்டுமே, யாரும் செல்லமுடியாத செங்குத்தான பாறைகளினூடே இன்னும் வாழ்கின்றன. அடிகாணமுடியாத பாதாளத்தில் சறுக்கி விழுந்துவிடாமல் அவற்றால் தாண்ட முடியும். மேலும் அழகிய கெலடாவும் அங்கு வாழ்கிறது. அது நீளமான மயிரைக் கொண்டிருப்பதாலும் முனைப்பாகத் தென்படும் சிவந்த புள்ளியை அதன் மார்பில் கொண்டிருப்பதாலும், சிங்கக் குரங்கு என்றும் இரத்த ஒழுக்கு இதயங்கொண்ட குரங்கு என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. விலங்குகளைக் காண நீங்கள் தொலைதூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை. ஏன், எதியோபியாவின் சாலைகள்கூட பொதுவாக ஒட்டகங்களாலும் கோவேறுக்கழுதைகளாலும் மாடுகளாலும் கழுதைகளாலும் நிரம்பி வழிகின்றன!

மறுப்புக்கிடமின்றி, இந்த நாட்டில் தொல்லைகள் இராமல் இல்லை. தலைநகரான அடிஸ் அபாபா, பத்து லட்சம் மக்களுக்கு மேல் வாழும் ஒரு நவீன பெருநகராகும். ஆனால் அது வீடில்லா, வேலையில்லாப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறது. வறட்சியினாலும் உள்நாட்டுப் போரினாலும் வீடில்லாமை, நொண்டியாதல் ஆகிய விளைவோடுகூட, பலர் விதவைகளாகவும் அனாதைகளாகவும் ஆகியிருக்கின்றனர். அவர்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வான பரிகாரம், கிறிஸ்து இயேசுவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யமே என்பதை எதியோபியர்கள் புரிந்துகொள்ள இத்தேசத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் கடினமாக உழைத்து வருகின்றனர்.—மத்தேயு 6:9, 10.

அதற்குள்ளாக, எதியோபியா தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தேசமாகும். ஆகவே, வசீகரிக்கும் இத்தேசத்தை ஒருவேளை என்றாவது ஒருநாள் நீங்கள் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு கிட்டுகையில் இன்னுமொரு கணநேரக் கண்ணோட்டத்தைச் செலுத்தும்படியாக, இச்சுருக்கமான கணநேரக் கண்ணோட்டம் உங்கள் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

[அடிக்குறிப்பு]

a மேலுமான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட வேதாகமத்தின் பேரில் உட்பார்வையில் (ஆங்கிலம்) “ஷீபா” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 18-ன் படங்கள்]

“மெஸாப்” எதியோபியாவின் தேசிய உணவான “யன்ஜரா”வைப் பரிமாறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்