உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/22 பக். 19-24
  • ஒரு தவளையின் குழந்தை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு தவளையின் குழந்தை
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒரு கேய்ஷாவாக என் வேலை
  • யார் என் தாய்?
  • போருக்கிடையில் ஒரு மகன்
  • குடும்பக் கடமைகள்
  • என் மகளுக்கானதை அளித்தல்
  • மதம் ஒரு பிரச்சினையாகிறது
  • என் வாழ்வில் மாற்றங்கள்
  • என் ஒப்புக்கொடுத்தலுக்கேற்ப வாழ்வது
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • தத்தெடுத்தல்—அதை நான் எப்படி கருத வேண்டும்?
    விழித்தெழு!—1996
  • யெகோவாவின் தவறாத ஆதரவுக்கு நன்றியறிதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • தத்துப் பிள்ளையாக இருப்பதன் சவால்களை சமாளிப்பது எப்படி?
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 2/22 பக். 19-24

ஒரு தவளையின் குழந்தை

“ஒரு தவளையின் குழந்தை ஒரு தவளையே.”

இந்த ஜப்பானியப் பழமொழி ஒரு குழந்தை அதன் பெற்றோரைப் போலவே இருக்கும்படி வளர்கிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

என் தாய் ஒரு கேய்ஷாவாயிருந்தார்.

என் தாயால் நிர்வகிக்கப்பட்டுவந்த ஒரு கேய்ஷா ஹவுஸில் நான் வளர்ந்தேன். ஆகவே நான் சிறுமியாயிருந்ததிலிருந்து, மிகவும் விலைமதிப்புள்ள கிமோனோக்களை அணிந்திருந்த அழகிய பெண்களால் சூழப்பட்டிருந்தேன். நான் பெரியவளாகும்போது அவர்களது உலகிலேயே நானும் சேர்ந்துவிடுவேன் என்று எனக்குத் தெரிந்தது. 1928-ல் ஆறாம் மாதம் ஆறாம் தேதி நான் ஆறு வயதாயிருந்தபோது, என் பயிற்சி ஆரம்பித்தது. 666 என்ற எண் வெற்றிக்கு உத்தரவாதமளித்ததாகக் கூறப்பட்டது.

ஜப்பானின் பாரம்பரியக் கலைகளை—நடனமாடல், பாட்டுப்பாடல், இசைக்கருவிகளை மீட்டல், தேநீர் உபசாரம் செய்தல் மேலும் அது போன்றவற்றை—நான் பயின்றேன். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் நான் வீட்டுக்கு ஓடிப்போய் உடைகளை மாற்றிக்கொண்டு என் வகுப்புக்குச் சென்றேன். அங்கு என் பள்ளி நண்பர்களுடன் மறுபடியும் இருப்பேன், ஏனெனில் நாங்களனைவரும் கேய்ஷாவின் பிள்ளைகள். அது சுறுசுறுப்பான காலமாயிருந்தது, நான் அதை அனுபவித்தேன்.

அக்காலத்தில், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, கட்டாயப் பள்ளி 12 வயதாகையில் முடிவுற்றதால், அப்போதிலிருந்தே நான் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஓர் அனுபவமற்ற கேய்ஷாவாக, நான் என் கால்கள்வரை தொங்கிய கையுடைய பகட்டான கிமோனோக்களை உடுத்தினேன். நான் என் முதலாவது நியமிப்பின்போது குதூகலமாய் உணர்ந்தேன்.

ஒரு கேய்ஷாவாக என் வேலை

என் வேலை, மகிழ்ச்சியளிப்பதையும் ஒரு விருந்தளிப்பவரின் வேலையைச் செய்வதையும் அடிப்படையில் உட்படுத்தியது. செல்வந்தர்கள் தனிப்பட்ட ரெஸ்ட்டாரன்ட்டுகளில் இரவு விருந்துகளுக்கு ஏற்பாடு செய்கையில், அவர்கள் ஒரு கேய்ஷா ஹவுஸை அழைத்து சில கேய்ஷாக்களின் சேவையைக் கேட்டுக்கொள்வர். கேய்ஷாக்கள் அம்மாலைநேரத்தை உயிர்ப்பூட்டவும் ஒவ்வொரு விருந்தினரும் தான் நல்ல நேரத்தைக் கொண்டிருந்த திருப்தியுடன் வீடுதிரும்பும்படி நிச்சயப்படுத்திக்கொள்ளவும் எதிர்பார்க்கப்பட்டனர்.

இதைச் செய்வதற்கு, ஒவ்வொரு விருந்தினரின் தேவையையும் அனுமானித்து—விருந்தினர் தனக்குத் தேவையானதாக உணருவதற்கு முன்பே—அதற்கானதைச் செய்யவேண்டியிருந்தது. ஒரு கணநேரத்தில் கவனிப்பதைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டியதாயிருந்ததைத்தான் மிகக் கடினமான ஒன்றாய் நான் நினைக்கிறேன். விருந்தினர் திடீரென்று நடனத்தைக் கண்டுகளிக்க விரும்பினால், அப்போது நாங்கள் நடனமாடினோம். இசை விரும்பப்பட்டால், எங்கள் இசைக்கருவிகளை எடுத்து, கேட்டுக்கொள்ளப்பட்ட இசையை மீட்டினோம் அல்லது எந்த வகையான பாடல் கேட்டுக்கொள்ளப்பட்டதோ, அதைப் பாடினோம்.

ஒரு பொதுவான தப்பெண்ணமானது, எல்லா கேய்ஷாக்களும் உயர்தரமான, அதிக விலைபேசும் விலைமகள்கள் என்பதாகும். ஆனால் இது உண்மையல்ல. தங்களையே விலைபேசுவதன் மூலம் தங்கள் பிழைப்பை ஓட்டும் கேய்ஷாக்கள் இருந்தபோதிலும், ஒரு கேய்ஷா அந்தளவுக்குக் கீழ்த்தரமான வேலை செய்வது அவசியமில்லை. நான் ஒருபோதும் அப்படிச் செய்யாததால் எனக்குத் தெரியும். ஒரு கேய்ஷா ஓர் உபசரிப்பாளர். அவர் நன்றாக தனது திறமையைக் காட்டினால், அது அவருக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து வேலையையும், விலைமதிப்புள்ள பரிசுகளையும், ஏராளமான வெகுமதிகளையும் கொண்டுவருகிறது.

மறுப்புக்கிடமின்றி, பலர் மிகச் சிறந்த கேய்ஷாவாக ஆவதில்லை. மிகப் பெரும்பாலான கேய்ஷாக்கள் ஜப்பானின் பாரம்பரியக் கலைகள் ஏதோவொன்றை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருக்கலாம். ஆனால் ஜப்பானிய நடனம், பூக்கள் அலங்காரம், தேநீர் உபசாரம், டாயிகோ என்றறியப்படும் ஜப்பானிய முரசு மற்றும் மூன்று-நரம்புகள் இணைக்கப்பட்ட ஷாமிஸென் என்ற இசைக்கருவியில் மூன்று பாணிகளில் இசை மீட்டுதல் உட்பட அத்தகைய ஏழு கலைகளில் நான் டிப்ளமோ வைத்திருந்தேன். இத்தகுதிச்சான்றுகள் இல்லாவிடில், வெறுமனே என் வாழ்வை ஓட்டுவதற்காக வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளும் எல்லாவற்றையும் செய்யும் தேவையை நான் ஒருவேளை உணர்ந்திருப்பேன்.

ஜப்பான் பொருளாதார ரீதியில் நிலையாக இல்லாதபோது, பெண்பிள்ளைகள் சிலசமயங்களில் தங்கள் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக கேய்ஷாவாக ஆவதைத் தெரிந்தெடுத்தனர். தங்கள் பயிற்சிக்காகவும் கிமோனோக்களுக்காகவும் பணத்தைக் கடன் வாங்கினர். மற்றவர்கள் தங்கள் குடும்பங்களால் கேய்ஷா ஹவுஸ்களுக்கு விற்கப்பட்டனர். அவர்களை உடையவர்கள், அதிகம் செலவழித்திருக்க, அப்பிள்ளைகள் அதைத் திரும்பச் செலுத்தும்படியாக எதிர்பார்க்கப்பட்டனர். அவர்களது பயிற்சி பிந்தி ஆரம்பிக்கப்பட்டதுடன், கடனோடு ஆரம்பிக்கப்பட்டதால் இச்சூழ்நிலைகளில் கேய்ஷாக்கள் மிகவும் சாதகமற்றவர்களாயிருந்தனர். இக்கேய்ஷாக்களில் பலர் பொருளாதாரப் பொறுப்புகளை எதிர்ப்படுவதற்காக ஒழுக்கக்கேட்டை நாடினர் அல்லது வற்புறுத்தப்பட்டனர்.

விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் அரசியல் உலகிலிருந்த புகழ்பெற்ற மக்களால் என் சேவைகளுக்கு கிராக்கியாகிவிட்டது. மந்திரி சபையினரும் பிரதம மந்திரிகளும் என் வாடிக்கையாளர்களுள் இருந்தனர். இத்தகையோர் என்னை மரியாதையோடு நடத்தினர், மேலும் என் சேவைக்காக எனக்கு நன்றி தெரிவித்தனர். பொது உரையாடல்களில் அழைக்கப்பட்டாலொழிய நான் கலந்துகொள்ளாவிடினும், என் அபிப்பிராயத்திற்காக சில சமயங்களில் வினவப்பட்டேன். ஆகவே அவ்வப்போதுள்ள செய்திகளை அறிந்திருப்பதற்காக நான் செய்தித்தாள்களை வாசித்தேன், அதோடுகூட தினமும் வானொலியில் கேட்டேன். நான் சேவை செய்த விருந்தினர் கூட்டங்கள் பொதுவாக ஒப்பந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டதால் நான் சமயோசிதமாகவும் கேட்ட காரியங்களையே திரும்பச் சொல்லாதபடியும் பார்த்துக்கொள்ளவேண்டியிருந்தது.

யார் என் தாய்?

1941-ல் ஒரு நாள், நான் 19 வயதாயிருக்கையில், ஒரு விடுதிக்கு அழைக்கப்பட்டேன், அங்கு இரு பெண்கள் எனக்காகக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களில் ஒருவர் என்னைப் பெற்றவர் என்பதாகவும், அவர் என்னை வீட்டிற்குக் கூட்டிச்செல்வதற்காக வந்திருந்ததாகவும் அறிவித்தார். அவரோடுகூட வந்திருந்த பெண், கேய்ஷாக்களை வேலைக்கு அமர்த்தியிருந்ததால் எனக்கும் வேலை தர முன்வந்தார். நான் என்னை வளர்த்த தாயை ஆதரிப்பதைக்காட்டிலும் என்னைப் பெற்ற தாயை ஆதரிக்கவேண்டும் என்று அவர் எண்ணினார். என்னை வளர்த்திருந்த தாய் என் சொந்தத் தாய் அல்லள் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சம்கூட ஏற்படவில்லை.

குழப்பமுற்றவளாய் நான் வீட்டிற்கு விரைந்துசென்று, நடந்ததை என் வளர்ப்புத் தாயிடம் கூறினேன். அவர் எப்போதுமே தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தார், இருந்தபோதிலும் இப்போது அவர் கண்களில் கண்ணீர் ததும்பியது. நான் ஒரு வயதாக இருக்கையில் ஒரு கேய்ஷா ஹவுஸில் ஒப்படைக்கப்பட்டிருந்ததை தான்தானே எனக்குச் சொல்ல விரும்பியிருந்ததாக அவர் கூறினார். உண்மையைக் கேள்விப்பட்டபோது, மக்களிடம் உள்ள எல்லா நம்பிக்கையையும் நான் இழந்தேன், மேலும் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு அமைதியாகிவிட்டேன்.

என்னைப் பெற்ற தாயை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன். அவர் என் வெற்றியை அறிந்தவராய், தனக்கு ஆதரவளிக்க நான் வேலைசெய்யும்படி விரும்பினது எங்கள் குறுகிய சந்திப்பின்மூலம் தெளிவாயிருந்தது. அவரது நண்பரின் தொழில் நடந்த இடத்திலிருந்து, அங்கு வேலைபார்ப்பது ஒழுக்கக்கேட்டை உட்படுத்தியதை நான் அறிந்துகொண்டேன். நான் என் உடலை அல்ல, என் கலைத்திறனையே விற்க விரும்பினேன். ஆகையால் நான் சரியான தீர்மானத்தையே செய்திருப்பதாக அப்போதும், இப்போதும்கூட உணருகிறேன்.

என் வளர்ப்புத் தாயுடன் நான் நிலைகுலைந்தபோதிலும், நான் எப்போதும் பிழைப்பை நடத்தமுடியும்படி அவர்தான் என்னைப் பயிற்றுவித்திருந்தார் என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதைப்பற்றி அதிகம் நினைக்க நினைக்க, அதிகம் அவருக்குக் கடன்பட்டிருந்ததை நான் உணர்ந்தேன். அவர், ஒழுக்கக்கேட்டிற்காகவே கேய்ஷாவின் சேவையை விலைபேசும் ஆண்களிலிருந்து என்னைப் பாதுகாக்கும் வகையில் கவனத்தோடும் முரண்பாடில்லாமலும் நான் வேலைபார்க்கும் இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார். இன்றுவரை, நான் அதற்காக அவருக்கு நன்றியுடனிருக்கிறேன்.

அவர் ஒழுக்கமுறை விதிகளை எனக்குக் கற்றுக்கொடுத்தார். அவர் வலியுறுத்திய ஒரு காரியமானது, நான் உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லவேண்டும் என்பது. பொறுப்பேற்கவும் என்னிடமே கண்டிப்புடன் நடந்துகொள்ளவும்கூட எனக்குக் கற்பித்தார். அவர் கற்பித்திருந்த ஒழுக்கமுறை விதிகளைப் பின்பற்றி, நான் என் வேலையில் வெற்றியடைந்தேன். என்னைப் பெற்ற தாயிடமிருந்து அத்தகைய உதவியை நான் பெற்றிருந்திருப்பேனா என்று சந்தேகிக்கிறேன். என்னைத் தத்தெடுத்து வளர்த்தது ஒருவேளை மிகவும் கரடுமுரடான வாழ்விலிருந்து என்னை விடுவித்தது. ஆகவே அது அவ்வாறாக நிகழ்ந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியுறத் தீர்மானித்தேன்.

போருக்கிடையில் ஒரு மகன்

1943-ல் நான் ஒரு மகனைப் பெற்றேன். “பாவம்” என்று உணராத பாரம்பரிய ஜப்பானியப் பண்பாட்டிற்கிசைய, நான் ஏதோ தவறானதை அல்லது வெட்ககரமானதைச் செய்துவிட்டதாக நினைக்கவில்லை. என் மகனால் நான் கிளர்ச்சியுற்றேன். அவனுக்கென்றே வாழவும் உழைக்கவும் வேண்டியதாயிருந்த—நான் கொண்டிருந்தவற்றுள் மிக மதிப்புவாய்ந்த ஒன்றாக அவன் எனக்கிருந்தான்.

1945-ல் டோக்கியோவில் குண்டுவீச்சு மிகமோசமாயிருந்தது, நான் என் மகனோடு நகரைவிட்டு ஓடவேண்டியதாயிற்று. அங்கு உணவுப்பொருள் அதிகமில்லாததால் அவன் மிகவும் நோய்வாய்ப்பட்டுவிட்டான். குழப்பத்தில் மக்கள் இரயில் நிலையத்தில் ஒரே கூட்டமாய்த் திரண்டுவிட்டனர், ஆனால் நாங்கள் எப்படியோ சமாளித்து, வடக்கே ஃபூக்கஷிமாவுக்குச் செல்லும் ஓர் இரயிலில் ஏற முடிந்தது. அங்கு, பிரயாணிகள் விடுதி ஒன்றில் அன்றிரவு நாங்கள் தங்கியிருந்தோம். ஆனால் என் சிறு பையனை நான் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்வதற்கு முன்பாகவே அவன் ஊட்டக்குறைவினாலும் உடல் வறட்சியினாலும் இறந்துவிட்டான். அவனுக்கு வயது இரண்டுதான் ஆகியிருந்தது. நான் துயரில் ஆழ்ந்துவிட்டேன். அந்த விடுதியில் இருந்த பாய்லர் மேன், குளிக்கும் நீரைத் தான் சூடுபடுத்தும் நெருப்பில் என் மகனின் உடலைத் தகனித்தார்.

அதற்குப்பிறகு சீக்கிரத்தில் போர் முடிவுற்றது, நான் டோக்கியோவுக்குத் திரும்பிச் சென்றேன். குண்டுவீச்சால் அந்நகரம் தரைமட்டமாகியிருந்தது. என் வீடும் எனக்குச் சொந்தமான எல்லா பொருட்களும் போய்விட்டிருந்தன. நான் ஒரு சிநேகிதியின் வீட்டிற்குச் சென்றேன். அவர் தன் கிமோனோக்களை எனக்கு இரவலாகக் கொடுத்தார், நான் மீண்டும் வேலைசெய்ய ஆரம்பித்தேன். டோக்கியோவின் புறநகர்ப்பகுதியில் இருந்த ஓரிடத்திற்கு காலிசெய்து போய்விட்டிருந்த என் வளர்ப்புத் தாய், நான் அவருக்குப் பணம் அனுப்பவேண்டுமென்றும் டோக்கியோவில் தனக்காக ஒரு வீடுகட்ட வேண்டுமென்றும் வற்புறுத்தினார். அவ்வாறு கேட்கப்பட்டவை, என்னை எப்போதையும்விட மிகத் தனிமையிலிருப்பதாக உணரச்செய்தன. நான் இன்னும் என் மகனுக்காக துயருற்றிருந்தேன், மேலும் ஆறுதலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இருந்தபோதிலும், அவர் என் குழந்தையைப் பற்றிக் குறிப்பிடக்கூட இல்லை. அவரது அக்கறையெல்லாம் தன்னைப்பற்றியேதான் இருந்தது.

குடும்பக் கடமைகள்

பாரம்பரியமானது, நாங்கள் வைத்திருக்கும் எல்லா பொருட்களுக்காகவும் எங்கள் பெற்றோருக்கும் மூதாதையருக்கும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என்று கற்பித்தது. மேலும், எந்தக் கேள்வியுமின்றி தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதன்மூலமும் அவர்கள் இறக்கும்வரை அவர்களைக் கவனித்துக் கொள்வதன்மூலமும் தங்கள் பெற்றோருக்குத் திருப்பிச் செய்ய வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். ஆகவே நான் என் கடமையைச் செய்தேன், ஆனால் என் வளர்ப்புத் தாய் கேட்டுக்கொண்டவை மிஞ்சினவையாய் இருந்தன. தான் தத்தெடுத்து வளர்த்திருந்த தனது சகோதரனின் இரு பிள்ளைகளையும்கூட நான் ஆதரிக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். எனக்கு 19 வயதாகும்வரை, அவர்களை என் சொந்த சகோதரனாகவும் சகோதரியாகவுமே நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

பல கேய்ஷாக்கள் திருமணம் செய்யாதவர்களாயிருந்தனர், மேலும் அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகளையுடையவர்களாய் இருப்பதைத் தவிர்த்தனர். அவர்கள் பொருளாதார ஆதரவைப் பெறுவதற்காகவும் தங்களுக்கு வயதாகையில் ஒரு வசதியான வாழ்வை அனுபவிப்பதற்காகவுமே பொதுவாக ஏழைக் குடும்பங்களிலிருந்து சிறு பெண்பிள்ளைகளைத் தத்தெடுத்து, அவர்களை கேய்ஷாவாகப் பயிற்சியளித்தனர். விசனகரமாக, ஏன் எனக்கு இப்படிப்பட்ட கவனிப்பும் பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது என்பதை நான் கண்டுகொள்ள ஆரம்பித்தேன். அது வெறுமனே எதிர்காலத்தின் பொருளாதாரப் பாதுகாப்பிற்காகவே இருந்தது.

இதையெல்லாம் நான் ஏற்றுக்கொண்டேன். ஆனாலும், என் வளர்ப்புத்தாயோடுகூட நல்ல உடல்நலமும் வேலைசெய்யும் திறனும் உடையவர்களாயிருந்த என் “சகோதரனை”யும் “சகோதரி”யையும் நான் ஏன் ஆதரிக்கவேண்டும் என்று ஆச்சரியப்படவே செய்தேன். இருந்தபோதிலும், அம்மூவரையும் ஆதரித்தேன், அவர்கள் கேட்ட எல்லாவற்றையும் செய்தேன். கடைசியாக, 1954-ல் தான் மரித்ததற்கு முந்திய தினத்தன்று, என் தாய் தன் படுக்கையில் முழங்காலிட்டு, குனிந்து, சம்பிரதாயப்படி எனக்கு நன்றி தெரிவித்தார். நான் போதியளவு செய்திருந்ததாக அவர் கூறினார். இவ்விதமான ஓர் ஒப்புகையும் நன்றியறிக்கையும் வருடக்கணக்காக நான் செய்திருந்த வேலையை ஈடுசெய்துவிட்டது. நான் என் கடமைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றியிருந்ததை அறிந்த திருப்தியானது இன்னும் என்னைக் கண்ணீர்விடும்படியாக உந்துகிறது.

என் மகளுக்கானதை அளித்தல்

1947-ல், நான் ஒரு பெண்குழந்தைக்குத் தாயானேன், மேலும் அவளுக்காக செல்வத்தைக் குவிப்பதற்குக் கடினமாய் உழைக்கத் தீர்மானித்தேன். ஒவ்வொரு இரவும் நான் வேலைக்குச் சென்றேன். கின்ஜாவிலுள்ள காபுகிஜாவைப்போன்ற ஜப்பானின் முக்கிய அரங்கங்களில் மேடை நிகழ்ச்சிகளை நடத்தவும் ஆரம்பித்தேன். இதுவும் நல்ல ஊதியமளித்தது.

நடனமாயிருந்தாலும்சரி, அல்லது ஷாமிஸெனை மீட்டினாலும்சரி, எப்போதும் நானே முக்கியப் பங்கு வகித்தேன். இருந்தாலும், மற்ற கேய்ஷாக்கள் கனவுமட்டுமே காணக்கூடிய வெற்றியை நான் அடைந்திருந்தபோதிலும், நான் சந்தோஷமாயிருக்கவில்லை. ஒருவேளை நான் திருமணம் செய்திருந்தால் அவ்வளவு தனிமையாய் உணர்ந்திருக்க மாட்டேன். ஆனால் ஒரு கேய்ஷாவின் வாழ்வுக்கு திருமணம்செய்துகொள்வது ஒத்துவராது. எனக்கிருந்த ஒரே ஆறுதல் என் சிறு மகளான ஆயிகோ தான். ஆகவே அவளைச் சுற்றியே என் வாழ்வை அமைத்துக்கொண்டேன்.

பொதுவாக, பெற்றதோ தத்தெடுத்ததோ, கேய்ஷாக்கள் தங்கள் மகள்களை அதே வேலையைச் செய்யும்படியே பயிற்றுவித்தனர். நான் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றினேன், ஆனால் அதற்குப்பிறகு அவளுக்காக நான் ஏற்படுத்திக்கொண்டிருந்த வாழ்க்கைமுறையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். தொடரப்பட்டால், தலைமுறை தலைமுறையாக ஒரு மெய்யான குடும்பத்தை உடையவர்களாயிருப்பது என்பது என்னவென்றே தெரியாமற்போவதை அது அர்த்தப்படுத்தும். அந்தச் சங்கிலித் தொடரை முறிக்க விரும்பினேன். ஆயிகோவும் அவளுக்குப் பிறகு அவளது குழந்தைகளும் திருமணத்தையும், ஒரு வழக்கமான குடும்ப வாழ்க்கையையும் அனுபவிக்கும்படி விரும்பினேன். இந்தத் தவளையின் குழந்தை ஒரு தவளையாகும்படி நான் விரும்பவில்லை!

ஆயிகோ தனது வளரிளம்பருவத்தை அடைகையில், அவள் கட்டுப்படுத்தப்பட முடியாதவளானாள். சில வருடங்களுக்கு முன்பு என் வளர்ப்புத் தாயின் மரணம் சம்பவித்ததிலிருந்து, ஆயிகோவின் நண்பர்களாயிருந்தவர்கள் நான் வேலைக்கு அமர்த்தியிருந்த பெண்கள் மட்டுமே. என் நேரமும் கவனமும் அவளுக்கு மிக அதிகமாகத் தேவைப்பட்டது. ஆகவே, நான் என் 30-களில், என் வாழ்க்கைத்தொழிலின் உச்சக்கட்டத்தில் இருந்தபோதிலும் கேய்ஷா உலகைப் பின்னே தள்ளிவிட்டு, நடனமாடுவதையும் ஷாமிஸெனை மீட்டுவதையும் மட்டும் ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தேன். ஆயிகோவுக்காகவே விட்டுவிட்டேன். நாங்கள் மாலை உணவை சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம், அதனால் ஏறக்குறைய உடனே அவள் பக்குவமடைந்தாள். அவளுக்காக என் நேரத்தைக் கொடுத்தது பயன் விளைவித்தது.

காலப்போக்கில் நாங்கள் ஓர் அமைதலான குடியிருப்புப் பகுதிக்கு மாறிச்சென்றோம், அங்கு நான் ஒரு சிறிய சிற்றுண்டிச்சாலையைத் திறந்தேன். ஆயிகோ வளர்ந்தாள், மேலும் நான் நடத்திக்கொண்டிருந்த வாழ்க்கைமுறையைப் புரிந்துகொண்ட கிமிஹீரோ என்ற ஒரு பெருந்தன்மையானவரை அவள் மணந்ததனால் நிம்மதியடைந்தேன்.

மதம் ஒரு பிரச்சினையாகிறது

1968-ல், ஆயிகோ என் முதல் பேரக்குழந்தையைப் பெற்றாள். அதற்குப்பிறகு வெகுசீக்கிரத்தில் அவள் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தாள். இது எனக்கு ஆச்சரியமூட்டியது, ஏனெனில் ஏற்கெனவே நாங்கள் ஒரு மதத்தில் இருந்தோம். என் தாய்—என் வளர்ப்புத் தாய்—இறந்தபிறகு, எங்கள் வீட்டில் ஒரு பெரிய புத்த வழிபாட்டிடத்தைக் கட்டியிருந்தேன், மேலும் நான் அவரை வழிபடுமாறு ஒழுங்காக அதற்குமுன்பாக முழங்கால்படியிடுபவளாயிருந்தேன். மேலுமாக, நடந்த எல்லாவற்றைப் பற்றியும் அவரிடம் அறிக்கையிட குடும்பக் கல்லறைக்கு நான் ஒவ்வொரு மாதமும் ஒழுங்காகச் சென்றேன்.

மூதாதையர் வழிபாடு என்னைத் திருப்திப்படுத்தியது. என் மூதாதையரைக் கவனித்துக்கொள்ளும்படியும் அவர்களுக்கு நன்றிதெரிவிக்கும்படியும் நான் எதைச் செய்யவேண்டுமோ அதையே செய்துகொண்டிருந்ததாய் உணர்ந்தேன். அப்படியே செய்யும்படி ஆயிகோவையும் வளர்த்தேன். ஆகவே, அவள் மூதாதையரை வழிபடுவதில் இனிமேலும் கலந்துகொள்ளமாட்டாள் என்றும் நான் இறந்தபிறகு என்னையும் வணங்கமாட்டாள் என்றும் என்னிடம் கூறியபோது திகிலுற்றேன். ‘அது எப்படி முடியும்,’ நான் என்னையே கேட்டுக்கொண்டேன், ‘குழந்தையை நான் வளர்த்த விதம் ஒன்றாயிருக்க, தங்கள் முன்னோருக்கு நன்றிகெட்டவர்களாயிருக்கும்படி மக்களுக்குக் கற்பிக்கும் ஒரு மதத்தில் அவள் சேர்ந்துகொண்டது எப்படி?’ அடுத்த மூன்று வருடங்களுக்கு, எனக்குமேல் ஒரு கரிய மேகம் தொங்கிக்கொண்டிருந்ததுபோல் இருந்தது.

ஆயிகோ ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டப்பட்டபொழுது ஒரு திருப்புக்கட்டம் வந்தது. ஒரு சாட்சியாயிருந்த, ஆயிகோவின் சிநேகிதி, என் மகளின் முழுக்காட்டுதலுக்கு நான் ஆஜராகாதிருந்ததால் ஆச்சரியப்பட்டு, தான் என்னைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்தார். நான் அதிகக் கோபமடைந்தேன், ஆனாலும் வெறுமனே சரியான நடத்தைமுறை எனக்குள் உறுதியாகப் பதிக்கப்பட்டிருந்ததால், அவர் வந்தபோது அவரை வரவேற்றேன். அதே காரணத்துக்காகவே, அவர் அடுத்த வாரமும் தான் மீண்டும் வருவதாகத் தெரிவித்தபோது என்னால் மறுக்கமுடியவில்லை. இச்சந்திப்புகள் பல வாரங்களாகத் தொடர்ந்தன, அவை என்னை அவ்வளவாய்க் கோபமூட்டியதால் முதலில் அவர் கூறியவற்றிலிருந்து நான் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை. என்றபோதிலும், படிப்படியாக, அந்தக் கலந்தாலோசிப்புகள் என்னைச் சிந்திக்க வைத்தன.

என் தாய் கூறியவற்றை நான் ஞாபகப்படுத்த ஆரம்பித்தேன். மரணத்திற்குப்பின் தான் வணங்கப்படவேண்டும் என்று அவர் விரும்பியபோதிலும், இறப்புக்குப்பின்னான வாழ்க்கை ஒன்றைப்பற்றி அவர் நம்பவில்லை. அவர் கூறுவார், பிள்ளைகளைப் பற்றி பெற்றோர் மிக அதிகம் விரும்புவது யாதெனில், தங்கள் பெற்றோர் உயிருடனிருக்கும்போதே, அவர்களிடம் தயவாய் நடந்துகொள்ள வேண்டும், அவர்களிடம் கனிவுடன் பேச வேண்டும். நான் பிரசங்கி 9:5, 10 மற்றும் எபேசியர் 6:1, 2 போன்ற வசனங்களை வாசிக்கையில், அதே காரியத்தையே பைபிள் உற்சாகப்படுத்துவதைக் கண்டபோது, என் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவை விழுந்ததுபோல் உணர்ந்தேன். நான் உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லவேண்டும் என்பதுபோன்ற, என் தாய் எனக்குக் கற்பித்திருந்த மற்ற காரியங்களும்கூட பைபிளில் இருந்தன. (மத்தேயு 5:37) இன்னும் வேறெதையும் பைபிள் கற்பித்தது என்பதையறியும் ஆவலில் ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பிற்கு நான் ஒத்துக்கொண்டேன்.

நான் பைபிள் அறிவில் முன்னேறுகையில் என் வாழ்வில் பெரும்பாலும் உணர்ந்த வருத்தமும் விரக்தியும் மறைந்துவிட்டன. நான் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பிக்கையில், மிகவும் கவரப்பட்டேன். இங்கு வித்தியாசமான ஓர் உலகம் இருந்தது. மக்கள் நிஜமானவர்களாகவும், தயவானவர்களாகவும், சிநேகப்பான்மையானவர்களாகவும் இருந்ததால் அது என் இதயத்தைக் கவர்ந்துவிட்டது. விசேஷமாய், யெகோவாவின் இரக்கத்தைக் குறித்துக் கற்றறிகையில் நான் உந்தப்பட்டேன். அவர் மனந்திரும்பும் எல்லா பாவிகளையும் அன்புடன் மன்னிக்கிறார். ஆம், அவர் என் கடந்தகாலத் தவறுகளையெல்லாம் மன்னிப்பார், மேலும் நான் ஒரு புதிய வாழ்வை அனுபவிக்க அவர் எனக்கு உதவுவார்!

என் வாழ்வில் மாற்றங்கள்

நான் யெகோவாவை சேவிக்க விரும்பியபோதிலும், பொழுதுபோக்கு உலகில் அதிகமான தொடர்பை வைத்திருந்தேன். அப்பொழுது நான் என் 50-களில் இருந்தேன், ஆனால் இன்னும் மேடையில் நடித்துக்கொண்டிருந்தேன். காபுகிஜாவில், டான்ஜுரோ இச்சிக்காவா என்பவர் சுக்கரோக்கு-வை நிகழ்த்தியபோது, நான் ஒரு தலைவியாயும், ஷாமிஸென் இசைக்கலைஞர்களின் இரண்டு ஒழுங்கமைப்பாளர்களில் ஒருத்தியாயும் இருந்தேன். சுக்கரோக்கு-வுக்குத் தேவைப்பட்ட காட்டோபுஷீ பாணியிலமைந்த பக்கவாத்தியத்தை வெகு சில ஷாமிஸென் மீட்டும் கலைஞர்களே அளிக்கமுடியும்; நான் வேலையை விட்டுவிட்டால் என் இடத்தைப் பூர்த்திசெய்ய எவரும் இருக்கமாட்டார். ஆகையால் நான் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தேன்.

என்றபோதிலும், ஜப்பானியப் பொழுதுபோக்கின் ஒரு பாரம்பரிய முறையில் உட்பட்டிருந்தவராயுமிருந்த ஒரு வயதான சாட்சி, நான் வேலையை விட்டிருந்திருக்க வேண்டும் என்று ஏன் நினைத்தேன் என்று கேட்டார். “தங்களை ஆதரித்துக்கொள்வதற்கு மக்கள் வேலை செய்யவேண்டும்” என்று அவர் விளக்கினார். நான் வேதப்பூர்வமல்லாத எதையும் செய்து கொண்டிருக்கவில்லை என்றும், நான் யெகோவாவை சேவித்துக்கொண்டே என் நடிப்புத்தொழிலையும் தொடரலாம் என்றும் நான் புரிந்துகொள்ள எனக்கு உதவினார்.

கொஞ்ச நாட்களுக்கு ஜப்பானின் முதன்மையான அரங்கமாகிய காபுகிஜாவில் நான் தொடர்ந்தேன். பிறகு, கூட்டநாட்களின் இரவுகளில் காட்சிகள் தொடர்ந்தபோது, அந்த இரவுகளில் வேறு எவரையாவது எனக்குப் பதில் போட்டுக்கொள்ளும்படிக் கேட்டேன். என்றாலும், விரைவில், எங்கள் கூட்டநேரங்கள் மாற்றப்பட்டதால், நான் வேலைக்கும் போய்க்கொண்டு அதேநேரம் கூட்டங்களிலும் பங்கெடுக்க முடிந்தது. ஆனாலும், குறித்த நேரத்தில் கூட்டங்களுக்குச் செல்வதற்காக, வழக்கமாயிருந்தபடி, சக நடிகர்களோடு இளைப்பாறுவதற்குப் பதிலாக, அடிக்கடி நான் காட்சி முடிந்ததும் காத்துக்கொண்டிருக்கும் வாடகைக்காரில் வேகமாகச்சென்று ஏறவேண்டியிருந்தது. முடிவில், விட்டுவிடத் தீர்மானித்தேன்.

அப்போது ஜப்பானின் முக்கிய நகரங்களில் செயலாற்றவேண்டி ஓர் ஆறு-மாதத் தொடர்நிகழ்ச்சிக்காக நாங்கள் ஒத்திகைபார்த்துக் கொண்டிருந்தோம். வேலையை விட்டுச் செல்லும் பேச்சை எடுப்பது அதிகத் தொல்லையை உண்டாக்குவதாயிருக்கலாம். ஆகையால், என் எண்ணங்களைக் குறிப்பிடாமலே, எனக்குப் பிறகு தொடருவதற்காக ஒருவரைப் பயிற்றுவிக்க ஆரம்பித்தேன். சுற்றுப் பிரயாணம் முடிவுற்றபோது, சம்பந்தப்பட்டிருந்த ஒவ்வொரு நபரிடமும், நான் என் கடமைகளை நிறைவேற்றியிருந்ததாகவும் வேலையை விட்டுவிடப்போவதாகவும் விளக்கினேன். சிலர் கோபமடைந்தனர். பிறர் நான் தற்பெருமை கொண்டிருப்பதாகவும் வேண்டுமென்றே அவர்களின் தொல்லைக்குக் காரணமாயிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். அது எனக்கு ஓர் எளிதான சமயமாயிருக்கவில்லை, ஆனால் நான் என் தீர்மானத்தில் உறுதியாயிருந்து, 40 வருடங்களாக செயலாற்றியபிறகு வெளியேறினேன். அப்போதிலிருந்து, நான் ஷாமிஸெனைக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன், இது சிறிதளவு வருமானத்தை அளிக்கிறது.

என் ஒப்புக்கொடுத்தலுக்கேற்ப வாழ்வது

அதற்குச் சில வருடங்களுக்கு முன்பு, என் வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்தேன். ஆகஸ்ட் 16, 1980-ல் முழுக்காட்டப்பட்டேன். இப்போது என்னை ஆட்கொண்டிருக்கும் உணர்வெல்லாம் யெகோவாவுக்கு ஆழ்ந்த நன்றியுடனிருப்பதுதான். பைபிளில் யோவான் 4:7-42-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் சமாரியப்பெண்ணைப் போலவே நான் ஒருவகையில் இருந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறேன். இயேசு அவளிடம் தயவாகப் பேசினதால் அவள் மனந்திரும்பினாள். அதேபோன்று, “இருதயத்தைப் பார்க்கிற” யெகோவா, தயவாக எனக்கு வழியைக் காண்பித்தார், மேலும் அவருடைய இரக்கத்தால்தான், நான் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்க முடிந்திருக்கிறது.—1 சாமுவேல் 16:7.

1990 மார்ச்சில், நான் 68 வயதை நெருங்குகையில், யெகோவாவின் சாட்சிகளுடைய முழு-நேர ஊழியர்கள் அழைக்கப்படுகிறபடி, ஒரு பயனியரானேன். தன் மூன்று பிள்ளைகளோடு, ஆயிகோவும்கூட ஒரு பயனியர். “ஒரு தவளையின் குழந்தை ஒரு தவளையே” என்ற ஜப்பானியப் பழமொழிக்கேற்ப, தங்கள் தாயைப்போலவே இருக்கும்படி அவர்கள் வளர்ந்தனர். ஆயிகோவின் கணவர் சபையில் ஒரு கிறிஸ்தவ மூப்பராக உள்ளார். சத்தியத்திலுள்ள என் குடும்பத்தினரால் சூழப்பட்டிருக்கவும், சபையில் அன்பான சகோதர சகோதரிகளைக் கொண்டிருக்கவும் நான் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!

என் மூதாதையருக்கு நான் நன்றியுடனிருப்பதைப்போன்றே, எந்த மனிதரும் எனக்குச் செய்யமுடிந்திருப்பதைவிட மேலாக எனக்குச் செய்திருக்கும் யெகோவாவுக்கு என் மிகுந்தளவான நன்றி உரியது. குறிப்பாக, அவரது இரக்கத்துக்கும் ஆறுதலுக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும் என்பதே அவரை நித்தியமாய்த் துதிக்கும்படி நான் விரும்ப என்னை உந்துவிக்கிறது. —சாவாக்கோ டாகாஹாஷியால் கூறப்பட்டபடி.

[பக்கம் 19-ன் படம்]

நான் எட்டு வயதாயிருக்கையில் பழகுவது

[பக்கம் 20-ன் படம்]

என் வளர்ப்புத் தாயோடு

[பக்கம் 21-ன் படம்]

என் மகளே என் வாழ்வின் பெருமையாயிருந்தாள்

[பக்கம் 23-ன் படம்]

இந்தக் குடும்ப வழிபாட்டிடத்துக்கு முன்பாக நான் என் தாயை வணங்கினேன்

[பக்கம் 24-ன் படம்]

என் மகள், அவளது கணவர், மற்றும் என் பேரக்குழந்தைகளோடு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்