வேலையில்லா திண்டாட்டத்திலிருந்து விடுதலை எப்படி, எப்போது?
தன் சிருஷ்டிகரைப் போன்றே, மனிதன் வேலையில் சந்தோஷத்தை அனுபவிக்கலாம், அது “கடவுளின் பரிசு” என்று சரியாகவே வரையறுக்கப்படுகிறது. (பிரசங்கி 3:12, 13; யோவான் 5:17) ஆர்வத்தைத் தூண்டும் ஒரு வேலை நமக்கு மகிழ்ச்சியளிக்கலாம், மேலும் நம்மை பயனுள்ளவராகவும் விரும்பப்படும் ஒரு நபராகவும் உணரச் செய்யலாம். ஒருவர் ஒரு வேலையை அவ்வளவு விருப்பத்தோடு செய்யாவிட்டாலும், அதை இழப்பதை விரும்பவே மாட்டார். ஓர் ஊதியத்துக்கு உத்தரவாதமளிப்பதோடு, சம்பளம் கொடுக்கப்படும் வேலைவாய்ப்பு ஓர் உருவையும், நோக்கத்தையும், தனித்துவத்தையும் ஒருவரின் வாழ்க்கைக்கு அளிக்கிறது. பொதுவாக, “வேலையில்லாதவர் எல்லாவற்றையும்விட ஒரு வேலையைப் பெறவே விரும்புகிறார்” என்றால் அது மிகையாகாது.
ஒரு வேலை தேடி
நாம் ஏற்கெனவே பார்த்திருந்த விதமாக, தொழிலாளர் சந்தையிலுள்ள சூழ்நிலை மிகவும் சிக்கலாய் உள்ளது. அதன் விளைவாக, ஒரு வேலைக்காகத் தேடிக்கொண்டிருப்பதற்கு செல்லுபடியாகும் பல முறைகள் உள்ளன. வேலையில்லாமல் இருப்போருக்காக அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் உதவிகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றைப் பெறத் தகுதி உடையவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; எங்கெல்லாம் பொருந்துகிறதோ, அங்கெல்லாம் அவர்கள் வேலைவாய்ப்பின்மை அலுவலகங்களில் தங்கள் பெயரைப் பதிவுசெய்து கொள்ளலாம், மேலும் அளிக்கப்படும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறர் தங்கள் சொந்த வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்வதன்மூலம் ஒரு வேலை கிடைக்கப்பெறுகின்றனர். ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சுய-வேலைவாய்ப்புடையோர் ஆரம்பத்தில் அதிகப் பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளதால் அப்பணத்தை மீண்டும் கட்டுவது எளிதாய் இல்லாமல் இருக்கலாம். நிதி சம்பந்தமான மற்றும் வரிச் சட்டங்களைப் பற்றியெல்லாம் அறிந்திருந்து அதை மதிக்க வேண்டியதும் தேவையான ஒன்றாகும்—சில நாடுகளில் இவ்விதமாகச் செய்வது ஓர் எளிதான காரியமல்ல!—ரோமர் 13:1-7; எபேசியர் 4:28.
வேலையைக் கண்டுபிடிப்பதற்காக சிலர், பல்வேறு முறைகளோடும் விடாமுயற்சியோடும் அதற்காகத் தங்களையே அர்ப்பணிப்பவர்களாய், ஒரு வேலையைத் தேடியலையும், கடினமான ஒரு வேலையைச் செய்திருக்கின்றனர். மற்றவர்கள், பணியாளர்களுக்காக விடுத்திருக்கும் நிறுவனங்களுக்கு எழுதிப்போட்டிருக்கின்றனர், அல்லது உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரங்களைச் செய்திருக்கின்றனர்—அவற்றுள் சில வேலை-வேண்டுதல் அறிவிக்கையை இலவசமாக அச்சிடுகின்றன. இந்தப் பொருளின்மீது பயனுள்ள, நடைமுறையான ஆலோசனையை—இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும்—விழித்தெழு! அடிக்கடி கொடுத்துள்ளது.a—பக்கம் 11-ல் உள்ள பெட்டிகளைக் காண்க.
நீங்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற விதமாக வேலையைச் செய்ய விருப்பமுள்ளவராயிருக்க வேண்டும்—நீங்கள் சாதாரணமாய் விரும்பாத வேலைகள் உட்பட எல்லா விதமான வேலைகளையும் செய்யும் விருப்பமுள்ளவராயிருக்க வேண்டும். வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் முதலாவது கேட்கப்படும் கேள்விகளில் முன்பு வேலைபார்த்த அனுபவத்தைப் பற்றியவையும் வேலைக்குச் செல்லாமல் இருந்த காலப்பகுதியைப் பற்றியவையும் அடங்கும் என்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்டகாலமாய், திரும்பத்திரும்ப வேலைக்குப் போகாமல் இருப்பது, காரியங்களை அனுமானிக்கும் ஆற்றலுள்ள வேலையளிப்பவர் ஒருவருக்கு எதிர்மறையான கருத்தைக் கொடுக்கும்.
ஒருவர் பள்ளியிலிருக்கும்போதே, திறமைகளைப் பெறுவதில் ஞானத்தோடு தன் நாட்களை செலவழித்திருந்தாரானால், அவர் தனது முதலாவது வேலைவாய்ப்பைப் பெறுவது எளிது. “வேலையில்லா திண்டாட்டம் முக்கியமாக திறமையற்றவர்களையே பாதிக்கிறது” என்பதாக நிதி அறிவியல் ஆசிரியர், ஆல்பெர்ட்டோ மாயாக்கி கூறுகிறார்.
உணர்ச்சிப்பூர்வமான ஆதரவின் முக்கியத்துவம்
உடன்பாடான ஒரு நோக்குநிலையை உடையவராயிருப்பது ஒரு முக்கியமான அம்சமாகும். ஒரு வேலையைக் கண்டுபிடிப்பதற்கும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கும் இடையே வேறுபாட்டை இது உண்டாக்கக்கூடும். வேலையில்லாமல் இருப்பவர்கள் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை அதிகமாகப் போற்றுவார்கள், அதுவே அவர்கள் தங்களைப் பிரித்துவைத்துக் கொள்ளாதபடியும் அசட்டை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதபடியும் அவர்களுக்கு உதவுகிறது. தங்கள் வேலையை இழக்காதவர்களோடு ஒருவர் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பதால் விளைவடையக்கூடிய சுய மரியாதை இழப்பை மேற்கொள்ள அவருக்கு உதவி செய்யும்.
கொஞ்சப் பணத்தை வைத்து சமாளிப்பது எளிதானதாய் இல்லாதிருக்கலாம். “வேலை கிடைக்காததை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், மீந்திருந்த நேரத்தை நல்ல விதத்தில் பயன்படுத்துவதை நான் கடினமாக உணர்ந்தேன்” என்று ஸ்டீவனோ கூறுகிறார். “அச்சூழ்நிலை என்னை அவ்வளவு கடினமாக உணரச் செய்ததால் என் அன்பான நண்பர்கள் சிலர்மீது குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டேன்,” என்று ஃபிரான்சஸ்கோ நினைவுகூருகிறார். இச்சந்தர்ப்பத்தில்தான் குடும்பம் ஆதரவளிக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது. வருவாய் குறைவுபடுவது, வாழ்வின் வசதிகளைக் குறைத்துக்கொள்வதற்காக, குடும்ப அங்கத்தினர்கள் அனைவராலும் மாற்றியமைத்துக்கொள்ளப்பட வேண்டியதாய் இருக்கலாம். 23 ஆண்டுகள் ஒரே நிறுவனத்திற்காக வேலை செய்தபிறகு, தனது 43-வது வயதில் வேலைநீக்கம் செய்யப்பட்ட ஃபிரான்கோ கூறுகிறார்: “நான் வேலைநீக்கம் செய்யப்பட்ட அந்தச் சமயத்திலிருந்தே, என் மனைவி உடன்பாடான மனநிலையுள்ளவளாயும், எனக்கு அதிக உற்சாகமளிப்பவளாயும் இருந்தாள்.” “பொருட்கள் வாங்கும்போது தன் மனைவி முன்யோசனையோடு நடந்துகொள்வதற்காக” ஆர்மன்டோ குறிப்பாக தன் மனைவிக்கு நன்றியுள்ளவராய் இருக்கிறார்.—நீதிமொழிகள் 31:10-31; மத்தேயு 6:19-22; யோவான் 6:12; 1 தீமோத்தேயு 6:8-10.
உடன்பாடான ஒரு நோக்குநிலையை உடையவராய் இருப்பதற்கும், மிக முக்கியமான மதிப்பீடுகளை மறந்துவிடாமல் இருப்பதற்கும் பைபிள் நியமங்கள் நமக்கு உதவி செய்யக்கூடும். விழித்தெழு!-வால் பேட்டிகாணப்பட்டவர்களான மேற்கூறப்பட்டவர்கள், பைபிளிலிருந்து ஆறுதலளிக்கும் மறுநிச்சயத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் கடவுளோடு மிகவும் நெருங்கியிருப்பதாக உணரும்படி இது செய்திருக்கிறது. (சங்கீதம் 34:10; 37:25; 55:22; பிலிப்பியர் 4:6, 7) யெகோவா தேவனோடு ஒரு நெருக்கமான உறவை வைத்திருப்பது மிகவும் முக்கியமான காரியமாய் உள்ளது, ஏனெனில் அவர் வாக்களிக்கிறார்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”—எபிரெயர் 13:5.
ஒருவர் வேலையில்லாதிருக்கிறாரோ இல்லையோ, அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள பண்புகளை அபிவிருத்தி செய்யும்படி ஒவ்வொருவரையும் கடவுளுடைய வார்த்தை உத்வேகப்படுத்துகிறது. யெகோவாவின் சாட்சிகளுக்கு சில சமயங்களில் வேலை தானாக அவர்களைத் தேடி வருவதும், நேர்மையான பணியாளர்களாக அவர்கள் போற்றப்படுவதும் வியப்பூட்டுவதாயில்லை. அவர்கள் கடின உழைப்பாளர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் இருப்பதன் அவசியத்தைக் கூறும் பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள், அதன் காரணமாய் அவர்கள் சோம்பேறியாயில்லை.—நீதிமொழிகள் 13:4; 22:29; 1 தெசலோனிக்கேயர் 4:10-12; 2 தெசலோனிக்கேயர் 3:10-12.
வேலையில்லா திண்டாட்டப் பேயிலிருந்து விடுதலை
வேலையில்லாமல் இருப்பதை அழுத்திக் காட்டும் வகையில் ஒரு மூலகாரணம் உள்ளது—மனிதரின் தன்னலமும் பேராசையும். பைபிள் கூறுவதுபோல, ‘ஒரு மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’—பிரசங்கி 8:9.
வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினை—மற்ற பிரச்சினைகளும்கூட—இப்போது அதன் ‘கடைசிநாட்களிலுள்ள’ மனித அரசாட்சியை நீக்குவதன்மூலம் தீர்க்கப்படும். (2 தீமோத்தேயு 3:1-3) உண்மையிலேயே புதியதோர் உலகம் தேவையாய் இருக்கிறது. ஆம், ஒரு நீதியான சமுதாயம் நியாயமும் நேர்மையுமான ஆட்சிக்கு உட்பட்டு வாழவும் வேலைசெய்யவும் கூடிய ஓர் உலகம், பேராசையே இல்லாத ஓர் உலகம் தேவை. (1 கொரிந்தியர் 6:9, 10; 2 பேதுரு 3:13) ஆகவேதான், கடவுளுடைய ராஜ்யம் வரும்படியாகவும் அவருடைய சித்தம் பூமியில் செய்யப்படும்படியாகவும் ஜெபிக்கும்படி மக்களுக்கு இயேசு கற்பித்தார்.—மத்தேயு 6:10.
மனிதகுலத்தின் முதன்மையான பிரச்சினைகளை நீக்குவதை தீர்க்கதரிசனமாக விவரிப்பதாய், அந்த ராஜ்யத்தின் பயன்களை கடவுளுடைய வார்த்தை விளக்குகிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; . . . நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை.” (ஏசாயா 65:21-23) வேலையில்லா திண்டாட்டப் பேய் விரைவில் என்றென்றுமாக மறைந்துவிடும். கடவுள் கொண்டுவரப் போகும் தீர்வுகளைப் பற்றி இன்னும் அதிகமாக நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவீர்களாகில், தயவுசெய்து உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.
[அடிக்குறிப்பு]
a காண்க: விழித்தெழு! அக்டோபர் 22, 1994, பக்கங்கள் 16-18; ஆங்கிலத்தில் ஆகஸ்ட் 8, 1991, பக்கங்கள் 6-10; ஜனவரி 22, 1983, பக்கங்கள் 17-19; மற்றும் ஜூன் 8, 1982, பக்கங்கள் 3-8.
[பக்கம் 11-ன் பெட்டி]
வீட்டில் வேலையை உருவாக்குதல்
• செவிலித்தாயாக இருத்தல், குழந்தை பராமரிப்பு
• சொந்தத் தோட்டத்தின் காய்கறிகளையும் பூக்களையும் விற்றல்
• தையல் வேலை, மாற்றித் தைக்கும் வேலை, உடைகளைச் செப்பனிடுதல்
• தயாரிப்பாளர்களுக்குத் துண்டுவேலை செய்தல்
• ரொட்டி தயாரிப்பு வேலையும் உணவு தயாரித்தலும்
• மெல்லிய மெத்தை செய்தல், குரோஷா வேலை, பின்னல் வேலை; முடிச்சிட்ட நூல் தோரணங்கள் செய்தல், மண்பாண்டம் செய்தல்; பிற கைவினைப் பொருட்கள்
• இருக்கைகளுக்குத் திண்டுறை தைத்து இணைத்தல்
• வணிகக் கணக்குமுறை, தட்டச்சு வேலை, வீட்டுக் கம்ப்யூட்டர்கள் பராமரிப்பு வேலை
• தொலைபேசியில் மறுஉத்தரவளிக்கும் சேவை
• முடி திருத்தும் வேலை
• உணவு மற்றும் தங்கும் வசதி செய்தல்
• விளம்பரதாரர்களுக்கு தபால் உறைகளின்மீது முகவரி எழுதி பூர்த்தி செய்யும் வேலை
• கார் கழுவுதலும் மெருகிடுதலும் (வாடிக்கையாளர்கள் உங்கள் வீட்டிற்குக் காரைக் கொண்டுவருதல்)
• விருப்பப் பிராணியைப் பராமரித்துப் பழக்குவித்தல்
• பூட்டைச் செப்பனிடுதலும் சாவி தயாரித்தலும் (வீட்டில் ஒர்க் ஷாப்)
• இவற்றுள் பெரும்பாலான வேலைகளுக்கான விளம்பரங்கள் இலவசமாகவே செய்யப்படலாம், அல்லது செய்தித்தாளில் குறைந்த விலையில் செய்யப்படலாம், அல்லது கடைகளின் அறிவிக்கைப் பலகைகளில் போடப்படலாம்
[பக்கம் 11-ன் பெட்டி]
வீட்டுக்கு வெளியே வேலையை உருவாக்குதல்
• ஹவுஸ்-சிட்டிங் (மக்கள் விடுமுறையில் வெளியூர் செல்லும்போதும், தங்கள் வீடு பார்த்துக்கொள்ளப்படும்படி விரும்பும்போதும்)
• சுத்தம் செய்தல்: கடைகள்; அலுவலகங்கள்; கட்டுமான வேலை முடிந்த பிறகு, தீப்பிடித்து முடிந்த பிறகு, மக்கள் காலிசெய்த பிறகு வீடுகள், குடியிருப்புக் கட்டடங்கள்; வீட்டுவேலை (மற்றவர்களின் வீடுகளில்); ஜன்னல்கள் (வேலை பார்க்குமிடத்திலும் வீட்டிலும்)
• பழுதுபார்த்தல்: எல்லாவிதமான கருவிகளும் (பழுது பார்ப்பது எப்படி என்பதைப் பற்றி எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் நூலகங்களில் கிடைக்கும்)
• கைத்திறமிக்க வேலைகள்: வீடுகளின் வெளிப்புறத்தில் பலகையாலும் உலோகத்தாலும் அலங்காரவேலை செய்தல்; சுவர் அலமாரிகள் கட்டுதல், கதவுகள் செய்தல், தலைவாயில்கள் அமைத்தல்; பெயின்ட்டிங்; வேலி கட்டுதல்; மேற்கூரை கட்டுதல்
• பண்ணை வேலை: பயிரிடுதல், பழம் பறித்தல்
• உட்புற இயற்கைக்காட்சி அமைத்தலும், தாவரங்களின் பராமரிப்பும்: அலுவலகங்களில், வங்கிகளில், பெரிய பெரிய கடைகளிலும் முற்றங்களிலும், பொதுக்கூடங்களில்
• சொத்தை மேற்பார்வையிடுதல்: வாயிற்காவலர்கள், மேற்பார்வையாளர் (சில சந்தர்ப்பங்களில் தனித்தனி குடியிருப்புக் கட்டடங்களையும் உட்படுத்துகிறது)
• ஈட்டுறுதி, வீடு, நில உடைமைகள்
• தளவிரிப்பு அமைத்தல், சுத்தம் செய்தல்
• செய்தித்தாள் விநியோகம் (வயது வந்தவர்களும் சிறுவர்களும்), பிற விநியோக சேவைகள்: விளம்பரங்கள், நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள்
• நகர்த்துதல், பொருட்களை சேமித்து வைத்தல்
• இயற்கைக்காட்சி அமைத்தல், மரத்தைக் கத்தரித்து சீர்செய்தல், புல் தரை பராமரிப்பு, மரம் வெட்டுதல்
• பள்ளிப் பேருந்து ஓட்டுநர்
• புகைப்படத் தொழில் (உருவப் படங்களும் பொது நிகழ்ச்சிகளும்)
• மீனவர்களுக்குத் தூண்டில் இரை விநியோகித்தல்
• வேலையை மாற்றிக்கொள்ளுதல்: மின்சார வேலைகளுக்குப் பதிலாக காரைப் பழுதுபார்த்தல், குழாய்ப்பணிக்குப் பதிலாக தையல்வேலை செய்தல் முதலியன
[பக்கம் 10-ன் படம்]
“நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:22