வேலையில்லா திண்டாட்டம் ஏன்?
பல நாடுகளில் அதிகமானோர் அல்லும்பகலும் உழைக்கும் வகையில் நீண்டநேர கடின உடல் உழைப்பின்மூலம், ஒருவேளை குறைந்த ஊதியத்திற்கென்று அபாயகரமான ஒரு வேலையையுங்கூட செய்வதன்மூலம் தங்களை ஆதரித்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வெகுகாலமாய், மற்ற நாடுகளில் வாழ்ந்துவந்த பலர், ஒரு முறை ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் அல்லது அரசுத்துறையில் சேர்ந்துவிட்டால், அவர்கள் அப்பணியிலிருந்து ஓய்வு பெறும்வரையில் ஒரு பாதுகாப்பான வேலையாக, அதைக்குறித்து நிச்சயமாயிருந்தனர். ஆனால் இன்று, எந்த வகுப்பைச் சேர்ந்த பணியாளருக்கும் தான் விரும்பும் வேலைவாய்ப்பையும், பாதுகாப்பையும் அளிக்கக்கூடிய வர்த்தகத் துறைகளோ அல்லது கார்ப்பரேஷன்களோ இருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?
இப்பிரச்சினைக்குக் காரணங்கள்
ஆயிரக்கணக்கான இளைஞர்கள்—தாங்கள் ஒரு கல்லூரிப்பட்டத்தை வைத்திருந்தாலும், வைத்திராவிட்டாலும்—தாங்கள் முதல்முறையாக ஒரு வேலையைக் கண்டடைய முடிவதில்லை. உதாரணமாக, இத்தாலியில், வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர், 15-க்கும் 24-க்கும் இடைப்பட்ட வயதுடைய மக்களாவர். ஏற்கெனவே வேலைக்குப் போய்க்கொண்டும், தங்கள் வேலையைக் காத்துக் கொள்வதற்காக முயற்சி செய்துகொண்டும் இருப்பவர்களின் சராசரி வயது அதிகமாகிறது, அதனால் இளைஞர்கள் முதல்முறையாக தங்களுக்கென்று ஒரு வேலையைக் கண்டடைவது இன்னும் கடினமாகிறது. தொழிலாளர் சந்தையில் அதிகமதிகமான இடத்தைப் பெறும் வாய்ப்பை உடைய பெண்களின் மத்தியிலும்கூட, வேலையில்லா திண்டாட்டத்தின் விகிதம் அதிகமாயுள்ளது. இவ்விதமாக, மிகமிக அதிக எண்ணிக்கையானோர் தொழில் சந்தையில் வேலைவாய்ப்பைப் பெற்று நிலைத்திருக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
முதல்முதலாக தொழிற்சாலை இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து தொழில் நுணுக்க ரீதியிலான புதிய கண்டுபிடிப்பு, தொழிலாளர்களின் தேவையைக் குறைத்திருக்கிறது. பல தொழிலாளர் சேர்ந்து பல மணிக்கணக்கான ஷிஃப்டு வேலையை தண்டனை போன்று செய்துகொண்டிருக்க வேண்டியிருந்ததால், இயந்திரங்கள் அப்படிப்பட்ட வேலையைக் குறைக்கும் அல்லது அறவே எடுத்துப்போடும் என்பதாக தொழிலாளர்கள் நம்பினர். தானியங்கு சாதனங்களைப் பயன்படுத்துவது, உற்பத்தியைப் பெருக்கியிருக்கிறது, பல அபாயங்களை நீக்கியுமிருக்கிறது, ஆனால் வேலைவாய்ப்பைக் குறைத்தும் விட்டது. தேவைக்கு மேற்பட்டு இருக்கும் தொழிலாளர்களில் ஒருவராகுபவர்கள் தாங்கள் புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ளாவிட்டால் நீண்ட கால வேலையில்லா திண்டாட்டத்தினால் ஏற்படும் ஆபத்தைச் சந்திப்பர்.
ஏராளமான வணிகப் பொருட்களின் உற்பத்தியால் மூழ்கடிக்கப்படும் அபாயத்தில் நாம் இருக்கிறோம். வணிகத்துறையில் வளர்ச்சியின் எல்லைகளை தாங்கள் ஏற்கெனவே எட்டிவிட்டதாக சிலர் உணருகின்றனர். அதோடுகூட, பணியாளர்கள் குறைவாக இருப்பதால் பொருட்களை நுகர்வோரும் குறைவாகவே உள்ளனர். இவ்வாறு, நுகரப்படுவதற்கும் அதிகமான பொருட்களை வணிகச்சந்தை உற்பத்தி செய்கிறது. உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்பைக் கையாளுவதற்காகக் கட்டப்பட்ட, பொருளாதார ரீதியில் வெற்றிகரமாக இயங்கும் தன்மைகொண்ட, பெரிய கட்டடங்கள் இனிமேலும் மூடப்படுவதில்லை, அல்லது வேறு உபயோகத்திற்காக மாற்றப்படுவதில்லை. இவைபோன்ற போக்குகள் பலியாட்களை அறுவடை செய்கின்றன—அவர்கள்தாம் வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டவராகுபவர்கள். பொருளாதார நடவடிக்கை குறைவாகும்போது, தொழிலாளருக்கு இருக்கும் மவுசு குறைகிறது, மேலும் அச்சந்தர்ப்பத்தில் இழக்கப்பட்ட வேலைகளை, பொருளாதார நடவடிக்கை அதிகரிக்கும்போது மீண்டும் பெறுவது ஒருபோதும் நடக்காத காரியம். தெளிவாகவே, வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணம் உள்ளது.
ஒரு சமூகத் தொல்லை
வேலையில்லா திண்டாட்டம் எவரையும் தாக்கலாம் என்பதால், அது ஒரு சமூகத் தொல்லையாய் உள்ளது. இன்னும் வேலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பதற்காக சில நாடுகள் வெவ்வேறான வழிமுறைகளைக் கையாளுகின்றன—உதாரணமாக, குறைந்த ஊதியத்தோடுகூடிய ஒரு குறைக்கப்பட்ட வேலைவாரம். என்றபோதிலும், இது வேலைக்காகத் தேடிக்கொண்டிருக்கும் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு சேதம் விளைவிக்கலாம்.
வேலைவாய்ப்பைப் பெற்றவரும் பெறாதவருமாகிய இரு தரப்பினருமே வேலை தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி அடிக்கடி அதிகமதிகமாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் வேலையில்லாதவர் புதிய வேலைகளுக்காக அழைப்பு விடுக்கப்படுகையில், ஏற்கெனவே ஒரு வேலையிலிருப்பவர் தனது வேலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வேண்டிய முயற்சி எடுக்கிறார்—ஒன்றோடு மற்றொன்று எப்போதும் ஒத்திசைந்துபோகாத இரண்டு நோக்கங்கள். “ஒரு வேலையில் இருப்பவர்கள் பொதுவாக கூடுதலான மணிநேரங்கள் வேலை செய்யும்படி அழைக்கப்படுகின்றனர். வேலை இல்லாமல் வெளியே இருப்பவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்கின்றனர். சமுதாயம் . . . ஒரு புறத்தில் கூடுதல் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டவரும் மற்றொரு புறத்தில் கிட்டத்தட்ட முற்றிலும் பிறரைச் சார்ந்து அவரது கவனிப்பால் வாழ்க்கையை நடத்தும் அந்நியராய்க் கருதப்படுபவரும் ஆகிய இரண்டு பிரிவாக பிரியும் வகையில், அபாயத்தில் இருக்கிறது” என்பதாக இத்தாலிய பத்திரிகை பனோரமா கூறுகிறது. ஐரோப்பாவில், பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட பலன்களை வேலையில்லாமல் இருப்பவர்கள் அனுபவிப்பதைக் காட்டிலும் ஏற்கெனவே வேலைபார்த்துக் கொண்டிருப்பவர்களே முதலாவதாக அனுபவிக்கின்றனர் என்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலுமாக, வேலையில்லா திண்டாட்டம் உள்நாட்டிலுள்ள, பொருளாதார வளங்களைப் பயன்படுத்தும் நிலையோடு தொடர்புடையது, ஆகவேதான் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற குறிப்பிட்ட நாடுகளில் ஒரு பகுதியின் தேவைக்கும் மற்றொரு பகுதியின் தேவைக்கும் இடையே அதிக வேறுபாடு உள்ளது. தொழிலாளர்கள் புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ளவோ, மற்றொரு பகுதிக்கு அல்லது மற்றொரு நாட்டிற்கு இடம் மாறிச் செல்லவோ விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்களா? இது பொதுவாக ஒரு தீர்வான அம்சமாயிருக்கலாம்.
தீர்வுகள் ஏதாகிலும் அருகில் இருக்கின்றனவா?
பெரும்பாலும், பொருளாதார மேம்பாட்டிலேயே நம்பிக்கைகள் வைக்கப்படுகின்றன. ஆனால் சிலர் சந்தேக மனப்பான்மை உள்ளவர்களாய், அத்தகைய ஒரு பொருளாதார மேம்பாட்டை சுமார் 2000-ம் ஆண்டிற்கு முன் அடையப்போவதில்லை என்று நினைக்கின்றனர். மற்றவர்களுடைய எண்ணத்தின்படி, மேம்பாடு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது, ஆனால் அது, இத்தாலியில் வேலைவாய்ப்பில் ஏற்பட்ட சமீபத்திய சரிவிலிருந்து தெளிவாவது போன்று, பலன்களை அளிப்பதில் தாமதமாய் இருக்கலாம். பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைதல் என்பது, வேலையில்லா திண்டாட்டம் குறைவதைத்தான் அர்த்தப்படுத்துகிறது என்ற கட்டாயம் இல்லை. வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்கையில், நிறுவனங்கள் மற்றவர்களைப் பணியில் அமர்த்துவதைக் காட்டிலும் தங்களிடம் உள்ள பணியாளர்களை மேம்பட்ட விதத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்—அதாவது, அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், “வேலைவாய்ப்பளிக்காத வளர்ச்சி” உள்ளது. மேலுமாக, உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையைவிட வேலையில்லாமல் திண்டாடுபவர்களின் எண்ணிக்கை வேகமாக வளருகிறது.
இன்று தேசிய பொது வளங்கள் பூகோள ரீதியாக்கப்படுகின்றன. வட அமெரிக்க தடையிலா வணிக உடன்படிக்கை (NAFTA), ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) ஆகிய பகுதிகளைப் போன்ற, ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாலும் வாணிகம் செய்யும் பகுதிகளைப் புதிதாக ஏற்படுத்துவது, உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை உந்தும் சக்தியாகவும் இருக்கலாம் என்பதாக சில பொருளியலாளர்கள் எண்ணுகின்றனர். என்றபோதிலும், இப்போக்கு, கூலி எங்கு குறைவாக உள்ளதோ அங்கு தங்கள் நிறுவனங்களை ஸ்தாபிக்கும்படியாக பெரிய கார்ப்பரேஷன்களைத் தூண்டுகிறது, அதன் விளைவாக, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் வேலையை இழக்கின்றன. அதே சமயத்தில், அதிக ஊதியத்தைப் பெறாத பணியாளர்கள் ஏற்கெனவே தாங்கள் பெறும் குறைவான ஊதியங்கள் இன்னும் குறைவதைக் காண்கின்றனர். பல நாடுகளில் பலர் இத்தகைய வணிக உடன்படிக்கைகளுக்கு எதிராக வன்முறையாகவும்கூட எதிர்ப்பைக் காட்டியிருப்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல.
வேலையில்லா திண்டாட்டத்தை வெல்லுவதற்காகப் பல வழிமுறைகளை நிபுணர்கள் ஆலோசனையாகக் கூறுகின்றனர். பொருளியலாளர்கள், அரசியல்வாதிகள், அல்லது தொழிலாளர்கள் ஆகிய இவர்களைப் போன்று தாங்கள் யாரால் ஆலோசனை கூறப்படுகிறார்களோ, அதைப் பொறுத்து சிலர் முரண்பட்டவர்களாகவும்கூட உள்ளனர். வரிச்சுமையைக் குறைப்பதன்மூலம் பணியாளர்களை அதிகரிக்கும்படியாக நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் ஏற்பாடுகளை முன்மொழிபவர்களும் உள்ளனர். சிலர் அரசாங்கத்தின் மொத்தத் தலையீட்டை ஆதரித்தும் ஆலோசனை கூறுகின்றனர். மற்றவர்கள், வேலையை வெவ்வேறாகப் பகிர்ந்தளிப்பதன்மூலம் வேலை நேரத்தைக் குறைக்கும்படியான ஆலோசனை கூறுகின்றனர். சில பெரிய நிறுவனங்களில் ஏற்கெனவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது, கடந்த நூற்றாண்டில், தொழில்மயமாக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் வேலைவாரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருக்கிறபோதிலும் குறைந்த வேலையில்லா திண்டாட்டத்தில் இது விளைவடையவில்லை. “காலப்போக்கில்,” என ஆரம்பித்து, பொருளியலாளர் ரேனாட்டோ புரூனெட்டா தொடர்ந்து சொல்கிறார், “ஒவ்வொரு கொள்கையும், அதைச் செயற்படுத்துவதற்கு ஆகும் செலவு அதனால் ஏற்படும் நன்மையை மிஞ்சுவதால் பயனற்றதாகிறது.”
“நம்மைநாமே தவறாக வழிநடத்திக் கொள்ளக் கூடாது, இந்தப் பிரச்சினை கடினமானது” என்று எல்’எஸ்பிரஸ்ஸோ பத்திரிகை முடிக்கிறது. தீர்ப்பதற்கு மிகக் கடினமானதா? வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு உள்ளதா?
[பக்கம் 8-ன் பெட்டி]
ஒரு பண்டைய பிரச்சினை
வேலையில்லா திண்டாட்டம் ஒரு பழமையான பிரச்சினை. பல நூற்றாண்டுகளாக மக்கள் தாங்கள் விரும்பாமலேயே சில சந்தர்ப்பங்களில் வேலை இல்லாமல் இருந்திருக்கின்றனர். வேலை முடிந்ததும், பெரியளவான கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட பத்தாயிரக்கணக்கான பணியாளர்கள்தாமேயும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களாகின்றனர்—வேறெங்காவது அவர்கள் பணியில் அமர்த்தப்படும் வரையாவது அவ்விதம் வேலைவாய்ப்பு இல்லாதவர்களாகின்றனர். குறைத்துக் கூற வேண்டுமென்றால், அதற்கிடையில் அவர்கள் பாதுகாப்பற்ற ஒரு வாழ்க்கையைத்தான் அனுபவித்திருந்தனர்.
இடைக் காலங்களின்போது, “வேலையில்லா திண்டாட்டம் எனப்படும் ஒரு பிரச்சினை நவீன கருத்தில் அதுவரை இருந்திராவிடினும்,” வேலையில்லாதவர்கள் இருந்தனர். (லா டிஸோகூபாட்ஸ்யோனெ நெல்லா ஸ்டோரியா [வரலாற்றில் வேலையில்லா திண்டாட்டம்]) என்றபோதிலும், அக்காலத்தில், வேலை செய்யாமல் இருந்தவர்கள், பெருமளவில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றோ, நாடோடிகள் என்றோ கருதப்பட்டனர். வெகு பிந்தி, 19-ம் நூற்றாண்டின்போதுகூட, பிரிட்டனைச் சேர்ந்த பல பகுப்பாய்வாளர்கள், “வேலையில்லாமல் இருந்தவர்களை, வெளியில் தூங்கிய அல்லது இரவு நேரத்தில் தெருக்களைச் சுற்றிவந்த ‘ரவுடிகளாகவும்’ ஊர்சுற்றிகளாகவும் ஆரம்பத்தில் இணைத்துப் பேசினர்” என்று பேராசிரியர் ஜான் பர்னட் விளக்குகிறார்.—ஐடில் ஹேண்ட்ஸ்.
இந்த “வேலையில்லா திண்டாட்டக் கண்டுபிடிப்பு” 19-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியை ஒட்டி, அல்லது 20-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில்தான் சம்பவித்தது. இப்பிரச்சினையை ஆய்வு செய்து அதைத் தீர்ப்பதற்கென்று, 1895-ல் “வேலை இல்லாமையின் துன்பம்” என்ற பொருளில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்ந்தெடுப்புக் குழு போன்ற விசேஷித்த அரசு ஆணையங்கள் நிறுவப்பட்டன. வேலையின்மை ஒரு சமூகத் தொல்லையாகியிருந்தது.
இப்புதிய அறிவானது திடீரென்று, குறிப்பாக முதல் உலகப் போருக்குப் பிறகு வளர்ந்தது. அப்போர், அதன் பைத்தியக்காரத்தனமான போராயுத உற்பத்தியினால், வேலையில்லா திண்டாட்டத்தை நடைமுறையில் ஒழித்திருந்தது. ஆனால் 1920-களில் தொடங்கிய, மேலை நாடுகள் எதிர்ப்பட்ட குறைந்த பொருளாதார நடவடிக்கைக் காலத்தின் ஒரு தொடர்ச்சியானது, 1929-ல் ஆரம்பமான உலக தொழில்துறையின் பொருளாதாரத்தை வெகுவாய் பாதித்த உலக பொருளாதார பெருமந்த காலங்களில் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல நாடுகள் ஒரு புதிய பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தன, மேலும் வேலையில்லா திண்டாட்டமும் குறைந்தது. ஆனால் “இன்றைய வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினையின் ஆரம்பம் மத்திப 1960-கள் வரை செல்லக்கூடும்,” என்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறுகிறது. 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் வள நெருக்கடியாலும், அதிகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் உபயோகத்தின் விளைவால் நேரிட்ட தற்காலிக வேலை நிறுத்திவைப்புகளாலும் (layoffs) ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய வீழ்ச்சியை தொழிலாளர் சந்தை அனுபவித்தது. வேலையில்லா திண்டாட்டம், முன்னொரு காலத்தில் பாதுகாப்பான துறைகளாக நம்பப்பட்டு வந்த ஒயிட்-காலர் மற்றும் நிர்வாகத் துறைகளையும்கூட ஊடுருவிச்செல்லும் தன்மை கொண்டதாய், ஓர் இரக்கமற்ற ஏற்றத்தை ஆரம்பித்திருக்கிறது.
[பக்கம் 7-ன் படம்]
அதிக வேலைகளை வற்புறுத்துவது வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினையைத் தீர்த்துவிடாது
[படத்திற்கான நன்றி]
Reuters/Bettmann