யெகோவா உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்
யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வந்தார்கள். பொருளாசை பிடித்த மக்கள் மத்தியில் வாழ்ந்ததால், அப்படிப்பட்ட ஆசையையும் அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இவர்களுக்கு ஊக்கமூட்டுவதற்கு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் நுழையும் முன்பு யெகோவா சொன்ன வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் மேற்கோள் காட்டினார். “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று அவர் எழுதினார். (எபிரெயர் 13:5; உபாகமம் 31:6) இந்த வாக்குறுதி முதல் நூற்றாண்டு எபிரெய கிறிஸ்தவர்களைப் பலப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.
நாம் ‘கொடிய காலங்களில்’ வாழ்வதால் உண்டாகும் கவலைகளைச் சமாளிக்க இதே வாக்குறுதி நமக்கும் உதவும். (2 தீமோத்தேயு 3:1) யெகோவாமீது நம்பிக்கை வைத்து அதற்கு இசைவாக செயல்பட்டால், மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளிலும்கூட அவர் நம்மைத் தாங்குவார். இந்த வாக்குறுதியின் பேரில் யெகோவா எப்படி செயல்படுவார் என்பதை அறிந்துகொள்வதற்கு, வாழ்க்கையில் ஒருவர் திடீரென வேலை இழப்பதைப் பற்றிய உதாரணத்தை சிந்தித்துப் பார்க்கலாம்.
எதிர்பாராத ஒன்றை சந்தித்தல்
வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வேலையின்மை என்பது “சமுக பொருளாதார பிரச்சினைகளில் மிகச் சிக்கலான ஒன்று” என போலந்து நாட்டு பத்திரிகை ஒன்று கூறுகிறது. தொழில்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உதாரணமாக, உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியிலும்கூட 2004-க்குள் வேலையின்மை “3.2 கோடிக்கும் மேலாக உயர்ந்திருந்தது. இது, 1930-களில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயத்தில் இருந்ததைவிட மிக அதிகம்.” டிசம்பர் 2003-ன் புள்ளிவிபரப்படி, முப்பது லட்சம் ஆட்கள் வேலையின்றி இருந்ததாக போலந்து நாட்டு மத்திய புள்ளியியல் அலுவலகம் பட்டியலிட்டுள்ளது. இது “வேலை செய்யும் வயதுடைய ஆட்களில் 18 சதவீதம்.” தென் ஆப்பிரிக்காவில் வாழும் கருப்பு இனத்தவர் மத்தியில், 2002-ல், வேலையின்மை வீதம் 47.8 சதவீதத்திற்கு எட்டியதாக ஓர் ஆதாரம் சொன்னது!
திடீரென வேலையில்லாமல் போவதும் எதிர்பாராத விதமாக வேலையிலிருந்து நீக்கப்படுவதும் யெகோவாவின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரை உண்மையிலேயே அச்சுறுத்துகின்றன. “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” யாருக்கும் நேரிடலாம். (பிரசங்கி 9:11, NW) சங்கீதக்காரன் தாவீது சொன்னதுபோல, “என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது” என்று நாமும் ஒருவேளை சொல்லலாம். (சங்கீதம் 25:17) இத்தகைய கடினமான சூழ்நிலைகளை உங்களால் சமாளிக்க முடியுமா? உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவை உங்களை பாதிக்கலாம். வேலை பறிபோயிருந்தால், மீண்டும் உங்களுடைய சொந்த காலில் நிற்க முடியுமா?
உணர்ச்சி ரீதியிலான அழுத்தத்தை சமாளித்தல்
“வேலை இழப்பது ஆண்களை அதிகமாக புண்படுத்துகிறது,” ஏனெனில் அவர்களே குடும்பத்தின் வயிற்றுப்பாட்டுக்கு வழி செய்பவர்கள் என்ற பாரம்பரிய கருத்து நிலவுவதாக உளநூல் வல்லுனர் யனூஷ் வீயெட்ஸின்ஸ்கி விளக்குகிறார். இது மனிதனுக்குள் “உணர்ச்சி ரீதியில் பெரும் போராட்டங்களை உண்டாக்குகிறது,” அதாவது திடீரென கோபாவேசப்படுவார்கள், மறுகணமே வேறு வழியின்றி அமைதியாகிவிடுவார்கள். வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு தகப்பன் சுய மரியாதையை இழந்தவராக “தன் குடும்பத்தாருடன் சண்டையிட” ஆரம்பித்துவிடலாம்.”
இரு பிள்ளைகளுக்குத் தகப்பனான ஆடம் என்பவர் வேலையை இழந்தபோது அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை விளக்குகிறார்: “நான் எளிதில் அமைதியிழந்தேன், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைந்தேன். இராத்திரியில் கனவில்கூட, வேலைக்கு என்ன செய்வேன், என் மனைவி மக்களுடைய சாப்பாட்டுக்கு இனி என்ன செய்வேன் என்ற எண்ணமே வந்தது. பிற்பாடு என் மனைவிக்கும் வேலை போய்விட்டது.” ரைஷார்டுக்கும் மாரியோலாவுக்கும் கல்யாணமாகி ஒரு பிள்ளை இருந்தது; அவர்கள் திடீரென வேலையை இழந்துவிட்டார்கள், வங்கிக்கு பெரும் கடனும் கட்ட வேண்டியிருந்தது. மனைவி இவ்வாறு கூறுகிறார்: “என் மனசுக்குள் ஒரே போராட்டமாக இருந்தது, கடன் வாங்கியது ரொம்ப தப்புன்னு என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது. எல்லாமே என் தப்புதான் என்று சதா அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.” இத்தகைய நெருக்கடி நிலைகளை எதிர்ப்படும்போது, நாம் எளிதில் கோபப்படலாம், கவலைப்படலாம், அல்லது மனக்கசப்படையலாம், உணர்ச்சிகள் நம்மை அலைக்கழிக்கலாம். அப்படியானால், பொங்கிவரும் தேவையற்ற உணர்ச்சிகளை எப்படி நாம் அடக்கலாம்?
நம்பிக்கையான மனநிலையுடன் இருப்பதற்கு பைபிள் நல்ல அறிவுரைகளைத் தருகிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) ஜெபத்தில் யெகோவாவை அணுகும்போது, ‘தேவ சமாதானம்,’ அதாவது அவர்மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் மனசாந்தி கிடைக்கும். ஆடமுடைய மனைவி இரேனா இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் நிலைமையையும் எங்கள் வாழ்க்கையை எப்படி எளிதாக்குவோம் என்பதையும் பற்றி ஜெபத்தில் யெகோவாவிடம் தெரிவித்தோம். பொதுவாய் அதிகமாக கவலைப்படும் இயல்புடைய என் கணவர், அதற்கு ஒரு தீர்வு இருக்குமென்று உணரத் தொடங்கினார்.”
எதிர்பாராத விதமாக உங்களுடைய வேலை பறிபோயிருந்தால், மலைப் பிரசங்கத்தில் இயேசு கூறிய இந்த அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு உள்ளது: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் . . . முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:25, 33) ரைஷார்டும் மாரியோலாவும் தங்கள் உணர்ச்சிகளைச் சமாளிக்க இந்த அறிவுரையைப் பொருத்திப் பிரயோகித்தார்கள். “என் கணவர் என்னை எப்போதும் ஆறுதல்படுத்தி, யெகோவா நம்மைக் கைவிடமாட்டார் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்” என்று மாரியோலா கூறுகிறாள். அவளுடைய கணவர் மேலும் இவ்வாறு கூறினார்: “நாங்கள் ஒன்றுசேர்ந்து, விடாமல் ஜெபித்ததால் கடவுளிடமும் ஒருவருக்கொருவரிடமும் நெருங்கி வந்திருக்கிறோம், அது எங்களுக்குத் தேவையான ஆறுதலை தந்திருக்கிறது.”
எதிர்த்துச் சமாளிப்பதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவியும் நமக்கு உதவும். அந்த ஆவி நம்மில் தன்னடக்கத்தை உண்டாக்குகிறது, அது நம்மையும் நம் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. (கலாத்தியர் 5:22, 23) அது ஒருவேளை எளிதாயிராது, ஆனால் அது சாத்தியமே, ஏனென்றால் “பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம்” என்று இயேசு வாக்குறுதி அளித்தார்.—லூக்கா 11:13; 1 யோவான் 5:14, 15.
உங்கள் ஆன்மீகத் தேவைகளை அசட்டை செய்துவிடாதீர்கள்
எதிர்பாராத விதமாக வேலையிலிருந்து நீக்கப்படுகையில், நல்ல சமநிலையுடைய கிறிஸ்தவருக்கும்கூட முதலில் மிகவும் கவலையாக இருக்கும், ஆனால் அந்தச் சமயத்தில் நம் ஆன்மீகத் தேவைகளை அசட்டை செய்துவிடக்கூடாது. உதாரணமாக, 40 வயதான மோசேயை எடுத்துக்கொள்ளுங்கள். உயர்குடி வகுப்பினர் மத்தியில் தனக்கிருந்த ஸ்தானத்தை இழந்து ஒரு மேய்ப்பனாக வேலை செய்ய வேண்டிய—எகிப்தியர் இழிவாகக் கருதிய ஒரு வேலையைச் செய்ய வேண்டிய—சூழ்நிலை வந்தபோது அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. (ஆதியாகமம் 46:34) மோசே தன்னுடைய புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்குப்பின் 40 ஆண்டுகளில், பிற்பாடு செய்யவிருந்த புதிய வேலைகளுக்கு யெகோவா அவரை உருப்படுத்தி தயார்படுத்த அனுமதித்தார். (யாத்திராகமம் 2:11-22; அப்போஸ்தலர் 7:29, 30; எபிரெயர் 11:24-26) இக்கட்டுகளை எதிர்ப்பட்டபோதிலும், மோசே ஆன்மீக காரியங்களில் கவனத்தை ஊன்றினார், யெகோவாவின் பயிற்றுவிப்பை ஏற்பதற்கு மனமுள்ளவராக இருந்தார். மோசமான சூழ்நிலைகள் நம் ஆன்மீக நெறிமுறைகளை மறைத்துப்போட ஒருபோதும் அனுமதியாதிருப்போமாக!
திடீரென வேலை இழக்கையில் அது நமக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கலாம், என்றாலும் யெகோவா தேவனுடனும் அவருடைய ஜனங்களுடனும் நம் பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு அது நல்ல சந்தர்ப்பம். முன்னால் குறிப்பிடப்பட்ட ஆடம் அப்படித்தான் உணர்ந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “என் மனைவியும் நானும் வேலையை இழந்தபோது, கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்லாதிருப்பதையோ பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்வதைக் குறைத்துக்கொள்வதையோ பற்றிய எண்ணம் எங்கள் மனதிற்கு வரவே இல்லை. அத்தகைய நோக்குநிலைதானே அடுத்த நாளைக்காக மிதமீறி கவலைப்படாதிருக்க உதவியது.” ரைஷார்டு இதைப் போலவே உணருகிறார்: “கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் போகாதிருந்திருந்தால் எங்களால் சமாளித்திருக்கவே முடியாது, கவலை எங்களை நிச்சயம் வாட்டி வதைத்திருக்கும். மற்றவர்களுடன் ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசுவது ஊக்கமளிக்கிறது, ஏனென்றால் அது எங்கள்மீது கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மற்றவர்களுடைய தேவைகள்மீது கவனம் செலுத்த வைக்கிறது.”—பிலிப்பியர் 2:4.
ஆம், வேலையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, கிடைக்கும் நேரத்தை ஆன்மீக காரியங்களுக்கும் தனிப்பட்ட படிப்பிற்கும் சபை காரியங்களுக்கும் ஊழியத்தை விரிவாக்குவதற்கும் பயன்படுத்த முயலுங்கள். வேலை இல்லாதபோது சும்மா இருந்துவிடுவதற்குப் பதிலாக, ‘செய்வதற்கு ஏராளம் உள்ள கர்த்தருடைய வேலையில்’ ஈடுபடலாம்—அது உங்களுக்கும் நீங்கள் பிரசங்கிக்கும் ராஜ்ய செய்திக்கு உள்ளப்பூர்வமாய் செவிசாய்க்கும் ஆட்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும்.—1 கொரிந்தியர் 15:58, NW.
உங்கள் குடும்பத்திற்குப் பொருளுதவி அளித்தல்
என்றாலும், ஆன்மீக போஷாக்கு காலி வயிற்றை நிரப்பிவிடாது. பின்வரும் இந்த நியமத்தை நாம் மனதில் வைக்க வேண்டும்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் பராமரியாமற்போனால் அவன் விசுவாசத்தை மறுதலித்தவன், அவிசுவாசியிலுங் கெட்டவன்.” (1 தீமோத்தேயு 5:8, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆடம் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “சபையிலுள்ள சகோதரர்கள் நம்முடைய சரீர தேவைகளை உடனடியாக கவனிக்கிறபோதிலும், கிறிஸ்தவர்களாக நாம் ஒரு வேலைக்காக தேடி அலைய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.” யெகோவா மற்றும் அவருடைய ஜனங்களின் ஆதரவை நாம் நம்பியிருக்கலாம், ஆனால் வேலையைக் கண்டுபிடிப்பதற்கு நாம்தாமே முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
என்ன முன்முயற்சி எடுக்க வேண்டும்? “கடவுள் அற்புதமாக நமக்கு ஒரு வேலை வாங்கித் தருவார் என்ற எண்ணத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்காதீர்கள்” என்று ஆடம் கூறுகிறார். “வேலைக்காக தேடுகையில், நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை சொல்லத் தயங்காதீர்கள். வேலைக்கு அமர்த்துகிறவர்கள் பொதுவாய் அதை உயர்வாக மதிக்கிறார்கள்.” ரைஷார்டு இந்த அறிவுரையை அளிக்கிறார்: “வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்த யாரிடமாவது கேளுங்கள், தொடர்ந்து வேலைவாய்ப்பு ஏஜன்ஸியை தொடர்புகொள்ளுங்கள். ‘ஊனமுற்ற நபரை கவனிக்க பெண் தேவை’; அல்லது, ‘ஸ்டிராபெர்ரி பறிக்கும் தற்காலிக வேலை’ போன்ற விளம்பரங்களைப் பாருங்கள். விடாமல் தேடிக்கொண்டே இருங்கள்! அது வேண்டாம், இது வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிக்கொண்டே இராதேயுங்கள், சாதாரண வேலையாக இருந்தாலும் உங்களுக்குப் பிடித்த வேலையாக இல்லாதிருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.”
ஆம், ‘யெகோவா உங்கள் சகாயர்.’ அவர் ‘உங்களைவிட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை.’ (எபிரெயர் 13:5, 6) நீங்கள் மிதமீறி கவலைப்பட வேண்டியதில்லை. சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு எழுதினார்: “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” (சங்கீதம் 37:5) நம் வழியை யெகோவாவுக்கு ஒப்புவிப்பது என்பது சூழ்நிலைகள் நமக்கு சாதகமாய் இல்லாதிருந்தாலும்கூட நாம் அவரில் நம்பிக்கை வைக்கிறோம் என்பதையும், காரியங்களை அவர் வழிப்படி செய்கிறோம் என்பதையும் அர்த்தப்படுத்துகிறது.
ஜன்னல்களைக் கழுவுதல், மாடி படிக்கட்டுகளைக் கழுவுதல் போன்ற வேலைகள் மூலமும், பொருட்கள் வாங்குகையில் சிக்கனமாக இருப்பதன் மூலமும் ஆடமும் இரேனாவும் வாழ்க்கையை சமாளித்தார்கள். மேலும், வேலைவாய்ப்பு ஏஜன்ஸிக்கும் தவறாமல் சென்று விசாரித்து வந்தார்கள். “எங்களுக்குத் தேவைப்பட்ட சமயத்திலெல்லாம் உதவி கிடைத்தது” என்று இரேனா குறிப்பிடுகிறாள். அவளுடைய கணவர் கூறுகிறார்: “நாங்கள் ஜெபத்தில் கேட்ட காரியங்கள் எல்லாமே கடவுளுடைய சித்தத்தின்படி இருக்கவில்லை என்பதை அனுபவத்தில் தெரிந்துகொண்டோம். ஆகவே, எங்களுடைய சொந்த புத்தியின்படி செயல்படமால் கடவுளுடைய ஞானத்தில் சார்ந்திருக்க கற்றுக்கொண்டோம். கடவுளிடமிருந்து தீர்வு வருவதற்காக பொறுமையுடன் காத்திருப்பதே நல்லது.”—யாக்கோபு 1:4.
ரைஷார்டும் மாரியோலாவும் எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்தார்கள், அதேசமயத்தில் தேவை அதிகமிருந்த பிராந்தியங்களில் சாட்சி கொடுப்பதிலும் ஈடுபட்டார்கள். “எப்போதெல்லாம் சாப்பாடுக்கு வழியில்லாமல் போனதோ அப்போதெல்லாம் ஏதாவது வேலை எங்களுக்கு கிடைத்தது. நல்ல வருமானமுள்ள வேலையாக இருந்தாலும் தேவராஜ்ய காரியங்களில் ஈடுபடுவதற்குத் தடையாக இருந்த வேலைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தகுந்த வேலை கிடைப்பதற்காக யெகோவாவை நோக்கி பொறுமையாக காத்திருக்கவே மனமுள்ளவர்களாக இருந்தோம்” என்று ரைஷார்டு சொல்கிறார். குறைந்த வாடகைக்கு ஒரு வீடு கிடைப்பதற்கு யெகோவாவே வழிசெய்தார் என அவர்கள் நம்புகிறார்கள். கடைசியில் ரைஷார்டுக்கு ஒரு வேலையும் கிடைத்தது.
ஒருவர் தன்னுடைய பிழைப்புத் தொழிலை இழப்பது அதிக வேதனையாகத்தான் இருக்கும், ஆனால் யெகோவா உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை அனுபவத்தில் தெரிந்துகொள்ள அதை ஏன் ஒரு வாய்ப்பாக கருதக்கூடாது? யெகோவா உங்களைக் கவனித்துக் காக்கிறார். (1 பேதுரு 5:6, 7) தீர்க்கதரிசியான ஏசாயாவின் வாயிலாக அவர் இவ்வாறு வாக்குறுதி அளித்திருக்கிறார்: “திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்.” (ஏசாயா 41:10) வேலையை இழந்துவிடுதல் உள்ளிட்ட எந்தவொரு எதிர்பாராத சம்பவமும் உங்களை ஸ்தம்பிக்கச் செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களால் இயன்றதையெல்லாம் செய்யுங்கள், மீதியை யெகோவாவின் கைகளில் விட்டுவிடுங்கள். யெகோவாவுக்காக ‘அமைதலாக காத்திருங்கள்.’ (புலம்பல் 3:26, NW) அப்போது, அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.—எரேமியா 17:7.
[பக்கம் 9-ன் படம்]
நேரத்தை ஆன்மீக காரியங்களுக்குப் பயன்படுத்துங்கள்
[பக்கம் 10-ன் படங்கள்]
சிக்கனமாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள், வேலை தேடுகையில் பிடித்த வேலைதான் வேண்டுமென இருக்காதீர்கள்