வேலையில்லா திண்டாட்டத்தின் தொல்லை
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
வளர்ச்சியடைந்த பல நாடுகளில் அது ஓர் அவசர நிலைமையாக உள்ளது—ஆனால் வளர்முக நாடுகளை அது கவலையுறவும் செய்கிறது. அது முன்னொரு சமயத்தில் இல்லாதிருப்பதாய்த் தோன்றிய இடங்களையும் தாக்கியுள்ளது. அது கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது—அவர்களில் பலர் தாய்மார்களும் தந்தைமார்களுமாய் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு இத்தாலியர்களுக்கு, அது “செல்வாக்கு செலுத்தும் காரியங்களில் முதலாவதாக” உள்ளது. அது புதிதான ரீதியில் சமுதாயப் பிணிகளை உருவாக்குகிறது. ஓரளவு, போதைப்பொருட்களின் புழக்கத்தில் ஈடுபடுபவராகும் பல இளைஞர்களுடைய பிரச்சினைகளுக்கு அது மூலகாரணமாய் உள்ளது. அது பல லட்சக்கணக்கான மக்களின் தூக்கத்தைக் கலைக்கிறது, இன்னும் லட்சக்கணக்கான மற்றவர்களுக்கு, அது விரைவில் நேரிடப்போவதாயும் இருக்கலாம் ...
“வேலையில்லா திண்டாட்டம் நம் நாட்களில் ஒருவேளை வெகு பரவலாக பயப்படச்செய்யும் ஓர் உண்மையான காரியமாய் உள்ளது,” என்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக் குழு (OECD) ஆணித்தரமாகக் கூறுகிறது. “இவ்வுண்மையின் பரப்பெல்லையும் விளைவுகளும் தெரிந்தவையே” என்றும், ஆனால் “அதைக் கையாளுவது கடினமானது” என்றும் கமிஷன் ஆஃப் ஈரோப்பியன் கம்யூனிட்டீஸ் எழுதுகிறது. அது “பழங்கண்டத்தின் வீதிகளை ஆட்கொள்ளத் திரும்புகின்ற ஒரு பேய்” என்பதாக ஒரு நிபுணர் கூறுகிறார். ஈரோப்பியன் யூனியனைச் (EU) சேர்ந்தவர்களில், இப்போது சுமார் இரண்டு கோடி பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர், மேலும் அக்டோபர் 1994-ல், இத்தாலியில் மட்டும் 27,26,000 பேர் வேலையில்லாதிருந்தனர் என்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்தது. ஈரோப்பியன் யூனியனின் ஆணையரான பாத்ரிக் ஃப்ளின் கூறியதிலிருந்து, “வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து சமாளிப்பது, நாம் எதிர்ப்படும் மிக முக்கியமான சமுதாய மற்றும் பொருளாதார ரீதியிலான சவாலாக உள்ளது.” நீங்கள் வேலையில்லாதவராகவோ, உங்கள் வேலையை இழக்கும் அபாயத்திலோ இருந்தால், அதனால் ஏற்படும் பயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.
ஆனால் வேலையில்லா திண்டாட்டம் என்பது வெறுமனே ஓர் ஐரோப்பியப் பிரச்சினை அல்ல. அது எல்லா அமெரிக்க நாடுகளையும் துன்புறுத்துகிறது. அது ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா ஆகியவற்றிலுள்ள நாடுகளையும் விட்டு வைப்பதில்லை. கிழக்கத்திய ஐரோப்பிய நாடுகள் சமீப ஆண்டுகளில் அந்தக் கஷ்டத்தை உணர்ந்திருக்கின்றன. மெய்தான், அது எல்லா இடங்களிலும் ஒரே விதமாக தாக்குகிறதில்லை. ஆனால் சில பொருளியலாளர்களின்படி, ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வேலையில்லா திண்டாட்டம் முந்திய பத்தாண்டுகளைக் காட்டிலும் அதிகமாய், நீண்டகாலம் நிலைத்திருக்கும்.a மேலும் அந்தச் சூழ்நிலையானது, “போதிய வேலையில்லாமையின் அதிகரிப்பாலும், கிடைக்கும் வேலைகளின் தரத்தில் ஒரு பொதுவான சீர்கேட்டாலும் மோசமடைகிறது,” என்று பொருளியலாளர் ரேனாட்டோ புரூனெட்டா குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
தணியாத ஒரு போக்கு
வேலையில்லா திண்டாட்டமானது, பொருள்வளத்தை பயன்படுத்தும் எல்லாத் துறைகளையும் ஒவ்வொன்றாய் பாதித்திருக்கிறது: முதலாவதாக வேளாண்மையை நோக்குமிடத்து, அதன் சம்பந்தமான வேலைகளை அதிகளவில் இயந்திரமயமாக்கி விடுவதால், மக்களுக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது; பிறகு தொழிற்துறையை எடுத்துக் கொண்டால், 1970-களிலிருந்து மின்சக்தி நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது; மேலும் இப்பொழுது, எவ்வித கேள்விக்கும் சந்தேகத்துக்கும் இடமளிக்காத ஒன்றாய் முன்பு கருதப்பட்டு வந்த உத்தியோகத் துறையையும்—வணிகத் துறை, கல்வித்துறை ஆகியவற்றையும் —பாதித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், வேலையில்லா திண்டாட்ட விகிதம் மிஞ்சிப்போனால் 2 அல்லது 3 சதவீதமாய் இருந்தாலே, மிகுந்த எச்சரிக்கையை விடுத்திருக்கும். ஆனால் இன்றோ, தொழில்மயமாக்கப்பட்ட ஒரு நாடானது, அதன் வேலையில்லா திண்டாட்ட விகிதத்தை 5 அல்லது 6 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்டிருந்தால், அது வெற்றிபெற்ற நாடாகவே தன்னைக் கருதிக்கொள்ளுகிறது, மேலும் வளர்ச்சியடைந்த பல நாடுகளில் இன்னும் அதிகளவு வேலையில்லா திண்டாட்ட விகிதம் உள்ளது.
இன்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் (ILO) கூறுவதற்கிசைய, வேலைவாய்ப்பு இல்லாத ஒரு நபர், வேலையில்லாமல் இருக்கிறார், வேலை செய்யத் தயாராய் இருக்கிறார், மேலும் ஒரு வேலைக்காக சுறுசுறுப்பாய்த் தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால், ஒரு நிரந்தரமான முழுநேர வேலையைக் கொண்டிராத அல்லது ஒரு வாரத்தில் சில மணிநேரம் மட்டுமே வேலைசெய்து சமாளிக்கும் ஒரு நபரைப் பற்றியதென்ன? பகுதிநேர வேலை என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. சில நாடுகளில் உண்மையிலேயே வேலைவாய்ப்பைப் பெறாதவராய் இருக்கும் சிலர், வேலைவாய்ப்பு உடையவராய் அதிகாரப்பூர்வமாகக் கணக்கிடப்படுகின்றனர். வேலைவாய்ப்புக்கும் வேலையில்லா திண்டாட்டத்துக்கும் இடையேயுள்ள போதியளவு வரையறையில்லாத சூழ்நிலைகள், யார் உண்மையிலேயே வேலையின்றி இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதைக் கடினமாக்குகின்றன, மேலும் இக்காரணத்தால், ஓரளவு உண்மையை மட்டுமே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. “[OECD நாடுகளில்] 3 கோடி 50 லட்சம் பேர் வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ எண்ணிக்கையும்கூட, வேலையில்லாமையின் முழு அளவைக் காட்டுவதாயில்லை,” என்பதாக ஐரோப்பாவில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது.
வேலையில்லா திண்டாட்டத்தின் உயர்ந்த விலை
ஆனால் அந்த எண்ணிக்கைகள் விஷயமனைத்தையும் சொல்லுகிறதில்லை. “வேலையில்லா திண்டாட்டத்தினால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூக இழப்புகள் எக்கச்சக்கம்” என்றும், அவை “வேலையின்றி இருப்போருக்காக வழங்கப்படும் உதவித்தொகையின் வடிவில் ஆகும் நேரடியான செலவினால் மட்டும் விளைவடைவதில்லை, ஆனால் வேலையின்றி இருப்பவர்கள் வேலையிலிருந்தால் மொத்தமான பொது வருவாய்க்குத் தங்கள் பாகத்தைச் செலுத்தும் பணத்தின் வடிவில் இழக்கும் தொகையினாலும் அவை விளைவடைகின்றன” என்றும் கமிஷன் ஆஃப் ஈரோப்பியன் கம்யூனிட்டீஸ் கூறுகிறது. மேலுமாக, வேலையில்லா திண்டாட்டத்தில் உள்ளவர்களுக்காக வழங்கப்படும் உதவிப்பண ஏற்பாடுகள், அரசாங்கங்களுக்கு மட்டுமே ஒரு சுமையாக அல்லாமல் உயர்த்தப்பட்ட வரியைக் கட்டவேண்டியிருக்கும், வேலையிலுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சுமையாகிக் கொண்டு வருகிறது.
வேலையில்லா திண்டாட்டம் என்பது எளிதில் பெறக்கூடியதாய் இருக்கும் விஷயமான, இது இவ்வளவு-அது அவ்வளவு என்னும், புள்ளிவிவரங்களை மட்டும் உட்படுத்தும் ஒன்றல்ல. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சூழ்நிலை விளைவாய் உள்ளது, ஏனெனில் இத்தொல்லையானது ஒவ்வொரு சமூகப் பிரிவையும் சேர்ந்த மக்களை—ஆடவரை, பெண்டிரை, மற்றும் இளைஞரை—தாக்குகிறது. இந்தக் ‘கடைசிநாட்களின்’ மற்ற பிரச்சினைகள் அனைத்தோடும் சேர்ந்து, வேலையில்லா திண்டாட்டம் ஒரு பிரம்மாண்டமான சுமையாய் இருக்கக்கூடும். (2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 6:5, 6) விசேஷமாக, வேலைவாய்ப்பின்றி இருக்கும் ஒரு தனிநபருக்கும் மற்றவர்களுக்கும் இடையேயுள்ள சூழ்நிலையின் பிற அம்சங்கள் ஒரே விதமாயிருந்து, அந்த ஒருவர் மட்டும் ‘நீண்ட கால வேலையில்லா திண்டாட்டத்தால்’ பாதிக்கப்பட்டால், நீண்ட காலமாய் வேலையில்லாமல் இருக்கும் அந்த நபர் தனக்கென்று ஒரு வேலைவாய்ப்பைப் பெறுவதை இன்னும் அதிகக் கடினமான ஒன்றாய்க் காண்பார். விசனகரமாக, சிலருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு இல்லாமலே ஆகிவிடலாம்.b
இன்றைய வேலையில்லா திண்டாட்டத்தில் உள்ளவர்களிடையே, மனநோய்ப் பிரச்சினைகளும் உளவியல் பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டு வருவதாயும், அதைப்போன்றே, உணர்ச்சிப்பூர்வமாய் நிலையற்ற தன்மை, விரக்தி, அதிகரிக்கும் அக்கறையின்மை, சுய-மரியாதை இழப்பு ஆகிய பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டு வருவதாயும் உளவியல் வல்லுநர்கள் கண்டறிகின்றனர். ஒருவர் தன் பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டியவராயிருந்து, வேலையை இழந்துவிட்டால், அது ஒரு பயங்கரமான தனிப்பட்ட பெருந்துயராகும். அவர்களைச் சுற்றியிருக்கும் இந்த உலகம் வீழ்ந்துவிட்டது. பாதுகாப்பு காற்றோடு போய்விட்டது. இன்று, உண்மையில், ஒருவரது வேலை இழக்கப்படும் சாத்தியத்தோடு தொடர்புடைய “எதிர்நோக்கும் கவலை” ஒன்றின் அவசரத் தன்மையை சில நிபுணர்கள் கவனிக்கின்றனர். இக்கவலை, குடும்ப அங்கத்தினர்களோடு வைத்துள்ள உறவை கொடிதாய் பாதிக்கலாம், மேலும் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்த நபர்களின் சமீபத்திய தற்கொலைகள் குறிப்பிட்டுக் காட்டுவதுபோல், இன்னும் அதிகளவில் துயர விளைவை ஏற்படுத்தலாம். கூடுதலாக, தொழிற்சந்தையில் ஓர் இடத்தைப் பிடிப்பதில் உள்ள கஷ்டம்தானே, இளைஞர்கள் சமுதாயத்திலிருந்து தங்களைத் தனியே பிரித்துக்கொள்வதற்கும், வன்முறையில் ஈடுபடுவதற்கும் சாத்தியமான காரணங்களுள் ஒன்றாய் உள்ளது.
‘ஓர் இயல்புமீறிய ஒழுங்கின் சிறைவாசிகள்’
தங்கள் வேலையை இழந்துவிட்ட அநேகம் பேரை விழித்தெழு! பேட்டிகண்டுள்ளது. “30 ஆண்டுகளாகச் செய்துவந்த முயற்சிகள் அனைத்தும் வீணாய்ப்போவதைக் காண்பதையும், மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியதையும், ஓர் இயல்புமீறிய ஒழுங்கின் ஒரு சிறைவாசி போன்று இருப்பதையும்” அது அர்த்தப்படுத்தியதாக ஐம்பது வயதான ஆர்மான்டோ கூறினார். ஃபிரான்சேஸ்கோ ‘இந்த உலகம் தன் தலைமீது நொறுங்கி விழுவதைக் கண்டார்.’ ஸ்டேஃபானோ “இந்தத் தற்போதைய வாழ்வின் ஒழுங்குமுறையில் ஏமாற்றத்தின் ஓர் அளவிடமுடியாத உட்கருத்தை உணர்ந்தார்.”
மறுபட்சத்தில், சுமார் 30 ஆண்டுகளாக ஒரு பிரபலமான இத்தாலிய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தொழில் நுணுக்க நிர்வகிப்பில் வேலை செய்தபிறகு வேலைநீக்கம் செய்யப்பட்ட லூசானோ, “அத்தனை வருடமாய், தான் செய்த முயற்சி, உத்தமமாய் நடந்துகொண்டது மற்றும் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருந்தது அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விட்டதைக் காண்கையில், கோபத்தையும் ஏமாற்றத்தையுமே அனுபவித்தார்.”
முன்னறிவிப்புகளும் ஏமாற்றங்களும்
சில பொருளியலாளர்கள் மிகவும் வேறுபட்ட நிகழ்ச்சிகளின் தொடரை எதிர்நோக்கியிருந்தனர். 1930-ல், பொருளியலாளராயிருந்த ஜான் மேனார்டு கேன்ஜ் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் “அனைவருக்கும் வேலை” என்பதாக நன்னம்பிக்கையோடு முன்னறிவித்தார், மேலும் பல பத்தாண்டுகளாக, அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளித்தல் அடையப்படக்கூடிய ஓர் இலட்சியமாகக் கருதப்பட்டுவந்திருக்கிறது. 1945-ல், ஐக்கிய நாடுகள் சாசனம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளித்தல் என்ற நிலையை விரைவில் அடைவதை ஒரு இலக்காக வைத்தது. சற்று முந்திய காலம்வரை, அந்த மேம்பாடு அனைவருக்கும் ஒரு வேலையையும், வேலையில் குறைந்த மணிநேரம் மட்டும் வேலைசெய்தால் போதுமானது என்ற நிலையையும் அர்த்தப்படுத்தியதாக நம்பப்பட்டது. ஆனால் காரியங்கள் அதுபோன்று நடக்கவில்லை. கடந்த பத்தாண்டின் தீவிரமான, குறைவுபட்டுவரும் பொருளாதார நடவடிக்கையானது ‘’30-களின் உலக பொருளாதார பெருமந்த காலங்களிலிருந்து படுமோசமான உலகளாவிய வேலைவாய்ப்பு நெருக்கடிக்குக்’ காரணமாய் இருந்திருக்கிறது என்று ILO கூறுகிறது. தென் ஆப்பிரிக்காவில், சுமார் 30 லட்சம் கறுப்பு ஆப்பிரிக்கர் உட்பட, குறைந்தபட்சம் 30.6 லட்சம் மக்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். ஜப்பானிலும்கூட—சுமார் 20 லட்சம் பேர் கடந்த வருடத்தில் வேலையில்லாமல் இருந்ததோடு—ஒரு நெருக்கடி இருந்துகொண்டிருக்கிறது.
வேலையில்லா திண்டாட்டம் ஏன் அப்படி எங்கும் பரவியுள்ள ஒரு தொல்லையாய் இருக்கிறது? அதைக் கையாளுவதற்கு என்ன விதமான தீர்வுகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன?
[அடிக்குறிப்புகள்]
a வேலையில்லா திண்டாட்ட விகிதம் என்பது வேலையில்லாமல் இருக்கும் மொத்தமான தொழில் வலிமையின் சதவீதம் ஆகும்.
b “நீண்ட காலமாய் வேலையில்லாமல் இருப்பவர்கள்” என்பவர்கள் 12 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருப்பவர்கள் ஆவர். EU-வில் வேலையில்லாமல் இருப்பவர்களில் சுமார் பாதிப்பேர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவராவர்.
[பக்கம் 2, 3-ன் வரைப்படம்]
கனடா 9.6 சதவீதம்
அ.ஐ.மா. 5.7 சதவீதம்
கொலம்பியா 9 சதவீதம்
அயர்லாந்து 15.9 சதவீதம்
ஸ்பெய்ன் 23.9 சதவீதம்
பின்லாந்து 18.9 சதவீதம்
அல்பேனியா 32.5 சதவீதம்
தென் ஆப்பிரிக்கா 43 சதவீதம்
ஜப்பான் 3.2 சதவீதம்
பிலிப்பீன்ஸ் 9.8 சதவீதம்
ஆஸ்திரேலியா 8.9 சதவீதம்