உலகை கவனித்தல்
புகைக்கும் பெண்களில் இறப்பு விகிதம் அதிகரிப்பு
கனடாவைச் சேர்ந்த பெண்களிடையே 1985-ல் 9,009-ஆக இருந்த புகைத்தல்-தொடர்பான இறப்புகள் 1991-ல் 13,541-ஆக அதிகரித்தது என்று தி கனடியன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வின் மதிப்பீட்டின்படி, சமீப போக்கு தொடருமானால், 2010-ம் வருடவாக்கில் புகைப்பதன் மூலம் ஆண்களைவிட அதிகப் பெண்கள் மரிப்பர். 1991-ல், ஒரு மதிப்பீட்டின்படி, புகைத்ததனால் ஏற்பட்ட மரணம் 41,408 பேர் (27,867 ஆண்களும் 13,541 பெண்களும்) என்று தி டோரன்டோ ஸ்டார் கூறுகிறது. ஐக்கிய மாகாணங்களில், நுரையீரல்-புற்றுநோய் மரணங்கள் புகைக்கும் பெண்களிடையே ’60-களுக்கும் ’80-களுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஆறு மடங்காக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க கேன்ஸர் சொஸைட்டியைச் சேர்ந்த டாக்டர் மைக்கல் டூண் கூறுகிறார். “சிகரெட் புகைப்பது ஐக்கிய மாகாணங்களில் ஏற்படும் குறைப்பிரசவ இறப்பின் அதிக அளவைத் தவிர்க்கமுடிந்த ஒரே காரணமாய் இருக்கிறது” என்று கனடா நாட்டுப் பத்திரிகையான தி குளோப் அண்ட் மெயில் ஆஃப் டோரன்டோ அறிக்கை செய்கிறது.
ஜெர்மானிய பள்ளிகளில் போதைப்பொருட்கள்
அடிமையாக்கும் பொருட்கள் பள்ளிகளில் விரிவான அளவில் பயன்படுத்தப்பட்டதை ஜெர்மனியின் வடபகுதியைச் சேர்ந்த 3,000 மாணவர்களுக்கு அதிகமானோரிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது. 17 வயதுடைய மாணவர்களில் பெரும்பாலும் பாதிப்பேர் தனிப்பட்ட வகையில் சட்டவிரோதமான போதைப்பொருட்களை வைத்திருந்ததாகவும், மூன்றில் ஒரு பங்குக்கு மேலானோர் தற்போது பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதாய் வாராந்தர செய்தி பத்திரிகையான ஃபோகஸ் கூறுகிறது. “ஹாம்பர்க்கிலுள்ள பல உயர்நிலைப் பள்ளிகளில், தூண்டும் போதைப்பொருட்கள் அல்லது அமைதிப்படுத்தும் போதைப்பொருட்களை மாற்றி மாற்றி தொடர்ச்சியாக பயன்படுத்தும் 16 அல்லது 17 வயதுடைய பள்ளி மாணவர்களை நீங்கள் காண்கிறீர்கள்” என்று பேராசிரியர் பேட்டர் ஷ்ட்ருக் விவரித்தார். ஆனால் போதைப்பொருட்களை பயன்படுத்துவது ஏன் அவ்வளவாய்ப் பரவியுள்ளது? இளைஞரிடையே போதைப்பொருட்களின் உபயோகம் இருப்பதற்கான மூன்று காரணங்களை பேராசிரியர் க்ளாவுஸ் ஹுரல்மான் கொடுத்தார்: வாழ்க்கையில் சலிப்பு, தனிப்பட்ட விதத்தில் சாதனை படைத்தவற்றிற்கான குறைவான அங்கீகாரத்தைப் பெறும் உணர்வு, சகாக்களின் அழுத்தம் ஆகியவை.
குறிப்பிடத்தகுந்த பயணிகள்
அலைந்து திரியும் ஆல்பட்ராஸ் 72 நாட்களில் 26,000 கிலோமீட்டர் தூரம் பறந்தது, ஒரு சாம்பல்நிற கடல்நாய் மூன்று மாதங்களில் 5,000 கிலோமீட்டர் தூரம் நீந்தியது. தெரிந்தெடுக்கப்பட்ட ஆல்பட்ராஸ் மற்றும் கடல்நாய்களின் அசைவுகளை செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் பொருட்டு அவற்றின் உடலோடு மிகச் சிறிய ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களைப் பொருத்திய பிறகு, பொறுமையை வெளிக்காட்டுகிற பிரமிப்பூட்டும் இந்த சாகசங்களை பாதுகாப்பு அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த ஆல்பட்ராஸ் தென் பசிபிக் பெருங்கடலுக்கு மேல் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 3,000 கிலோமீட்டர் தூரம் பறந்தது. இந்தக் கடல்நாய் ஸ்காட்லாந்துக்கும் ஃபேரோஸ் தீவுகளுக்கும் இடையே ஒரு நாளில் 100 கிலோமீட்டர் தூரம் வரை நீந்திச்சென்று, தரைப்பகுதியை விட்டு மிகத் தொலைவிலுள்ள கடற்பகுதியின் வழியே கடல்யாத்திரை செய்யும் ஒரு பிரமிக்கத்தக்க திறமையை மெய்ப்பித்துக் காட்டியது என்பதாக லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. இந்த இரு மாரத்தான் பயணங்களையும் தூண்டியது என்னவாயிருந்தது? உணவுக்கான ஒரு தேடியலைதல் என்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
“நெறிகெட்ட ஓர் உலக அமைப்பு”
“கடந்த வாரம் மூன்று நாட்களாக, ஐக்கிய நாடுகளின் 50-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, உலகத்தின் நிலைமையைப் பற்றி மகத்தான சொற்பொழிவுகளாற்றும்படி ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் தலைவர்கள் வந்து சேர்ந்தனர்” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த அக்டோபரில் அறிக்கை செய்தது. என்றபோதிலும், தெளிவாகவே, எண்ணற்ற ‘மகத்தான சொற்பொழிவுகளிலிருந்து’ ஒரு முக்கிய ஆக்கக்கூறு குறைவுபட்டது—நேர்மை. “எவ்விடத்திலுமுள்ள அரசியல்வாதிகளைப் போல, அவர்கள் நிறைவேற்ற முடியாத வாக்குகளை அளித்தனர், மேலும் தங்களுடைய குறைபாடுகளுக்காக வேறொருவரைக் குறைகூறினர்” என்று டைம்ஸ் பத்திரிகை கூறியது. தங்கள் நாடுகளின் செயல்களிலிருந்து முரண்பட்ட விதத்தில் பேசியிருந்த எட்டு தேசியத் தலைவர்களை மேற்கோள் காட்டிய பிறகு, அவர்களது செல்வாக்குமிக்க செய்தி: “உலகமே, நான் செய்வதை மறந்துவிடு; நான் சொல்வதற்குச் செவிகொடு” என்பதுபோல் இருப்பதாக அந்தச் செய்தித்தாள் முடித்தது. யூ.எஸ்.நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் ஐக்கிய நாட்டுச் சங்கத்தை, “நெறிகெட்ட ஓர் உலக அமைப்பு” என்று அழைத்ததில் ஆச்சரியமில்லை.
உயர்-வெப்பநிலை தேனீக்கள்
ஜப்பானிய தேனீக்கள், தங்கள் உடலின் வெப்பநிலையைக் கொண்டு மிகப்பெரிய குளவியைக் கொல்லுவதன் மூலம் அதன் தாக்குதலை எதிர்த்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளுகின்றன என்று சயன்ஸ் நியூஸ் அறிக்கை செய்கிறது. ஒரு பெரிய குளவி வந்திருப்பதைக் கண்டுபிடித்தவுடன், அந்த தேனீக்கள் அந்த எதிரியைக் கூட்டிற்குள் தந்திரமாய் வரச்செய்து, அங்குள்ள நூற்றுக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் அதை மடக்கி அதைச் சுற்றி ஒரு பந்தை உருவாக்குகின்றன. பிறகு, “அந்த தேனீக்கள் அதிர்வதன் மூலம் சுமார் 20 நிமிடங்களாக அப்பந்தின் தட்பவெப்பநிலையை மரணத்துக்கேதுவான தட்பவெப்பநிலையாகிய 47 ° C-க்கு உயர்த்துகின்றன” என்று அப்பத்திரிகை குறிப்பிடுகிறது. ஜப்பானிய தேனீக்கள் சுமார் 50 ° செல்சியஸ் வரையில் வெப்பநிலைகளைத் தாங்கமுடிவதால், இந்த சாமர்த்தியச் செயல் அவற்றிற்குத் தீங்கு விளைவிக்காது. என்றபோதிலும், எல்லா குளவிகளும் இந்தத் தேனீயின் கண்ணியில் அகப்படுவதில்லை. “20 முதல் 30 குளவிகள் 30,000 தேனீக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை 3 மணிநேரங்களில் கொல்லக்கூடும்,” மிகப் பெரிய குளவிகள் ஒரு கூட்டு தாக்குதலை நடத்துவதன் மூலம் தேனீக்களை வெல்ல முடியும். “இச் சந்தர்ப்பங்களில், அவை கூட்டையே கைப்பற்றி அதிலுள்ள தேனீக்களின் லார்வாக்களையும் பியூப்பாக்களையும் எடுத்துக்கொள்ளும்” என்று நியூஸ் பத்திரிகை கூறுகிறது.
சிலுவை—வன்முறையின் அடையாளம்?
வன்முறையான சம்பந்தங்களுக்காக, கிறிஸ்தவத்தின் அடையாளமாய் இருந்துவரும் சிலுவையின் பொருத்தத்தைப் பற்றி சில இறையியலாளர்கள் வினவுகின்றனர் என்பதாக தி டல்லாஸ் மானிங் நியூஸ் அறிக்கை செய்கிறது. இயேசுவின் மரணத்தைப் பிரதிபலிக்கும் அடையாளங்களைக் காட்டிலும் அவரது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அடையாளங்களைப் பயன்படுத்துவதை இறையியலாளர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். சிலுவையானது “ஒரு மரண வழிபாட்டை முன்னேற்றுவிக்கிறது” என்று அ.ஐ.மா.-வைச் சேர்ந்த நியூ ஜெர்ஸியின் மாடிஸனிலுள்ள ட்ரூ யுனிவர்சிட்டி தியாலஜிக்கல் ஸ்கூலில் இறையியலாளராயுள்ள கேத்தரின் கெல்லர் கூறினார். “ஒரு மின்சார நாற்காலியையோ அல்லது பொறியையோ விசுவாசத்தின் அடிப்படையான அடையாளமாகப் பயன்படுத்துவதை எவருமே விரும்பமாட்டார், ஆனால் இன்றுள்ள அரசாங்கத்தால் இயேசு மரண தண்டனை அளிக்கப்பட்டிருப்பாரேயானால், அப்படிப்பட்டதைத்தான் நாம் பயன்படுத்துகிறவர்களாயிருப்போம்.”
நீர் தெள்ளுப்பூச்சிகள் காப்பாற்றும் பணியில்
தூய்மைக்கேடுற்ற உள்ளூர் நீர்நிலைகளின் பிரச்சினைக்கு தாழ்மையான நீர் தெள்ளுப்பூச்சிகள் தீர்வு அளிக்கலாம் என்று லண்டனின் இன்டிபென்டென்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இது தற்போது நடைபெற்றுவரும் ஒரு மீட்புப்பணியால் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. முதலில், இங்கிலாந்தின் நார்ஃபோக்கைச் சேர்ந்த ஆம்ஸ்பீ ப்ராட் ஆற்றிலிருந்து நீர் தெள்ளுப்பூச்சியை உட்கொள்ளும் 9.5 டன் மீன்களை உயிரியலாளர்கள் அகற்றினர். இது, தெள்ளுப்பூச்சிகள் விரைவாக வளரும்படியும், குளத்தின் தூய்மையைக் கெடுக்கும் கடற்பாசிகளை வேகமாய் விழுங்கிவிடும்படியும் அனுமதித்தது. பிறகு, முளைவிடாதிருந்த விதைகளிலிருந்து மற்ற தாவரங்கள் தோன்றின, மேலும் வாத்துகள் அன்னங்கள் போன்ற பறவைகளும் திரும்பின. காலப்போக்கில், மீன்கள் மறுபடியும் போடப்படும், மேலும் ஐந்து ஆண்டுகளில் முழு சூழலியல் மண்டலமும் இயல்பான நிலைக்குத் திரும்பும் என்று கணிக்கப்படுகிறது. ஐரோப்பாவைச் சேர்ந்த இயற்கைவளக் காப்பாளர்கள் இத்திட்டத்தின் விளைவுக்கு அக்கறையுடன் கவனம் செலுத்துகின்றனர்.
வழிவிலகும் பாவம்
“பாவத்திற்கு என்னதான் நேர்ந்திருக்கிறது?” என்று நியூஸ்வீக் பத்திரிகை கேட்கிறது. “தனிப்பட்டவர் செய்யும் பாவம் என்பதெல்லாம் அமெரிக்க மதத்திலுள்ள நவீன பாணியின் உச்சத்தினால் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.” திருச்சபை வட்டாரக் குடிவாணர்கள் “தங்கள் சுயமதிப்பைக் குலைவிப்பதாய் இருக்கும் பிரசங்கங்களைக் கேட்க விரும்புவதில்லை,” மேலும் கத்தோலிக்கரிடையே, “ஒரு குருவிடம் ஒழுங்காக பாவ அறிக்கை செய்வது ஒரு கடந்த காலச் சடங்காக ஆகிவிட்டது.” போட்டியில் உட்பட்டுள்ள பாதிரிமார் தங்கள் மந்தைகளைவிட்டு விலகிச் செல்வதற்கு பயப்படுகின்றனர். பலர் “அத்தகைய ‘பெரிதான’ சமூகத் தீங்குகளை இனபேதம் [மற்றும்] பால் வேறுபாடு என்பதாய் ஒழுங்காக கண்டனம் செய்கின்றனர்” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. “ஆனால் மக்களை அதிகம் பாதிக்கும் விஷயங்கள்—மணவிலக்கு, பெருமை, பேராசை, அகந்தையுடன் தனிப்பட்ட ஆதிக்கம் பெற விரும்புதல் போன்றவை—வருகையில் வினோதமாய் அவர்களது வாய் அடைக்கப்படுகின்றன.”
இரத்தினக் கல்லின் “விரல் பதிவுகள்”
பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சுமார் $1,750 கோடி மதிப்புள்ள 3.9 கோடி விதமான வைர நகைகளை உடையவர்களாய் இருக்கின்றனர், அவற்றுள் ஒவ்வொரு ஆண்டும் $45 கோடி மதிப்புள்ள நகைகள் திருடப்படுகின்றன. இவ்விதமாக இழக்கப்பட்ட பெரும்பாலான நகைகள் மீட்கப்படமுடியாமல் உள்ளன. வைரம் பதிக்கப்பெற்றுள்ள உலோகம் விரைவில் உருக்கப்படுகிறது. பிறகு அந்த இரத்தினக் கற்கள் வேறுவிதமாகப் பதிக்கப்படுகின்றன. என்றபோதிலும், இப்போது, ஒரு மத்திப கம்ப்யூட்டரின் உதவியைக் கொண்டு, நகை வியாபாரிகள் ஒவ்வொரு கல்லின் தனித்தன்மையுள்ள குறைபாட்டையும் கம்ப்யூட்டருக்குள் பதிவு செய்கின்றனர். இந்த “விரல் பதிவுகள்” ஒரு குறை-அடர்த்தி லேசர் கதிரால் கண்டுபிடிக்கப்படுகிறது, அது ஒவ்வொரு கல்லின் குறையையும்—எந்த இரு கற்களும் ஒரேவிதமாயிராது—கண்டறிகிறது. திருடர்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும்படியாகச் செயல்படக்கூடிய ஒரே வழியானது, அக்கற்களை மறுபடியும் வெட்டுவதுதான், அதுவோ செலவுபிடித்த ஒரு செயலாகும், மேலும் அவற்றின் மதிப்பையும் குறைக்கும் ஒரு செயலாகும் என்பதாக லண்டனின் தி சன்டே டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது.
வாணவெடி எச்சரிப்பு
“ஐ.மா.-வைச் சேர்ந்த அவசரப் பிரிவுகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 12,000 பேர் வாணவெடி தொடர்பான காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்” என்று அதிகாரிகள் அறிக்கை செய்வதாக மர்பிடிட்டி அண்ட் மார்ட்டலிட்டி வீக்லி ரிப்போர்ட் (MMWR) கூறுகிறது. நுகர்வோர் உற்பத்திப் பொருள் காப்புக் குழுவால் தொகுக்கப்பட்ட 1990-1994 ஆண்டுகளுக்கான அந்த அறிக்கை, வாணவெடியால் ஏற்பட்ட எல்லாவித காயங்களில் 20 சதவீதம் கண்ணில் ஏற்பட்ட காயங்களாய் இருந்தனவென்று மதிப்பீடு செய்கிறது. இவை, “பொதுவாக வெகு கொடிதான ஒன்று என்பதாயும், கண்ணின் கூர்மையை நிரந்தரமாய் குறைக்கும் தன்மை கொண்டதாய் அல்லது குருடாக்குவதாய் இருப்பதாயும்” MMWR கூறுகிறது. வாணவெடி வைப்பவர்களைவிட அதிகமாக அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களே கண் காயங்கள் பட்டவர்களாயிருந்தனர் என்பது தெளிவாயிருந்தது குறிப்பிடத்தக்கதாயும் உள்ளது.
“வெடிக்கும் தன்மையுள்ள ஒரு டைம்பாம்”
உலக ஜனத்தொகையில் சுமார் 45 சதவீதத்தினர் தற்போது நகரங்களில் வாழ்கின்றனர் என்று ஃபோகஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது, மேலும் 2000 ஆண்டு வாக்கில், ஜனத்தொகையில் பாதிப்பேர் நகர்வாழ் மக்களாய் இருப்பர் என்று மதிப்பிடப்படுகிறது. வட ஐரோப்பா, இத்தாலி, ஐக்கிய மாகாணங்களின் கிழக்குப்பகுதி ஆகியவற்றின் பெரும்பகுதிகளில் கணிசமானளவு அதிக ஜன நெருக்கம் உள்ளது; சீனாவின் சில பகுதிகள், எகிப்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் ஏதோ கொஞ்சம் ஜன நெருக்கம் மிகுந்துள்ள நகரங்கள் நாட்டுப்புறஞ் சார்ந்த கிராமங்களுக்கு மத்தியில் உள்ளன. என்றபோதிலும், இப்பூமியின் 3 முதல் 4 வரையான சதவீதம் மட்டுமே நகர்ப்புறமாய் மாற்றப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படம் இப்போது வெளிப்படுத்துகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 6.1 கோடி மக்கள் நகரங்களுக்குள் குடிபுகுவதால், பெரும்பாலும் வளர்முக நாடுகளில் இந்த நகர்ப்புற பகுதிகளில் ஜன நெருக்கம் அதிகரிக்கிறது, ஏனெனில் “இந்த நகரங்கள் அவற்றின் ஜனத்தொகை பெருகுவதைப் போன்றதொரு வேகத்தில் வளர்ச்சியடைய முடியாது” என்பதாகக் கூறும் ஃபோகஸ் பத்திரிகை, “இந்தச் சூழ்நிலை வெடிக்கும் தன்மையுள்ள ஒரு டைம்பாம் ஆக உள்ளது” என்று மேலும் கூறுகிறது.