உலகை கவனித்தல்
மனநோய் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன
உலக சுகாதார நிபுணர்களின் குழு ஒன்று, “வளரும் நாடுகளில் மனநல பிரச்சினைகள் அச்சம் தரும் அளவில்” உள்ளதாக எச்சரித்ததைப் பிள்ளைகளுக்கு முதல் கவனிப்பு (ஆங்கிலம்) என்ற இதழ் குறிப்பிடுகிறது. “போர், இயற்கைச் சேதங்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளின் துர்ப்பிரயோகமும் கொலையும், மக்கள் தொகையியலில் (demographic) நிகழும் மாற்றம், அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளில் மாற்றம் ஆகியவற்றால் உண்டான” அநேக மனநோய்களின் உயர் விகிதங்களை ஹார்வர்டு மருத்துவ பள்ளியிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் அளித்துள்ளனர். கூடுதலாக, குறைந்த வருவாய் உள்ள சமுதாயங்களில், மனநலம் குன்றுதல், வலிப்பு ஆகியவற்றின் விகிதங்கள் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; இளைஞர் மத்தியில் நிகழும் மரணத்திற்கு ஒரு பிரதான காரணியாக உயர்ந்தோங்கி நிற்கிறது தற்கொலை. அந்தக் குழுவுக்குத் தலைமைதாங்கிய டாக்டர் ஆர்த்தர் க்ளைன்மன் கருத்தின்படி, மனநலத்திற்கு சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்படவேண்டும். “மனநலத்தைப் புதுப்பிக்கவும் காக்கவும் தேவைப்படும் முதலீட்டை செய்ய ஏழை நாடுகளும் சரி, பணக்கார நாடுகளும் சரி ஒன்றுபோல தவறிவிட்டன” என்று அவர் கூறினார்.
ஒப்பந்தத்தின் முக்கிய செய்தி
“மத்திய ஆசியாவில் செல்வாக்குப் பெற்றுவருகின்ற மத உட்பிரிவுகளையும் நெறிவிலகிய மதக் குழுக்களையும் கட்டுப்படுத்துவதற்காக, பெருவாரியாக இஸ்லாமியர் உள்ள முன்னாளைய சோவியத் யூனியனின் நான்கு குடியரசுகளின்—கஸகஸ்தான், டாஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின்—இஸ்லாமிய மற்றும் ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள் இதுவரை ஏற்படாத ஒரு கலப்பு விசுவாச ஒப்பந்தத்தை ஏற்றுள்ளனர்” என்று இன்றைய கிறிஸ்தவம் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. உஸ்பெகிஸ்தானின் தலைநகராகிய தாஷ்கென்டில் நடந்த கூட்டத்தில் அந்த மதத்தலைவர்கள் “இவான்ஜலிக்கல் கிறிஸ்தவர்கள், பாப்டிஸ்ட்டுகள், மார்மன்கள், யெகோவாவின் சாட்சிகள் ஆகியோரின் செல்வாக்கைத் தடுப்பதில் ஒத்துழைக்க உறுதிமொழி பூண்டார்கள்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
பாதுகாக்க அக்கறையில்லை
சிகப்பு-கழுத்துள்ள ஓர் அரிய நீர்ப்பறவை, இங்கிலாந்தின் லிஸ்டர்ஷயர் என்னும் இடத்திலுள்ள நீர்த்தேக்கத்தின் அண்டையில் காணப்பட்டது, அதைப் பார்க்க பிரிட்டனெங்குமுள்ள பறவை-பார்வையாளர்கள் பிரயாணம் செய்தார்கள். ஆனால், இடம்பெயர்ந்து வந்த அந்தப் பறவையை மிகப் பெரிய, நான்கு அடி நீளமுள்ள, கூர்முகவாயையுடைய பைக் என்னும் மீன் ஒரே கடியில் விழுங்குவதை மிரண்டுநின்று பார்த்தார்கள். “இது ஜாஸ் திரைப்படத்தின் ஒரு காட்சியைப்போல் இருந்தது” என்றார் ஒரு டுவிச்சர்—பறவை-பார்வையாளர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர். “அந்தப் பறவை ஒரு கணம் நீந்தியது, அடுத்த கணத்தில் ஒரே கவ்வு, நீர் சிதறியது, மறைந்து விட்டது.” “லிஸ்டர்ஷயர் நீர்த்தேக்கத்திற்கு அந்த வசீகரமான நீர்ப்பறவை வந்தது என்று நிரூபிக்க சில இறகுகள் மாத்திரம் இருந்தன” என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை செய்கிறது.
“பைபிளைத் தணிக்கை செய்யக்கூடாது”
இந்தத் தலைப்பின்கீழ், தி வீக்கென்டு ஆஸ்ட்ரேலியன் என்னும் செய்தித்தாளின் ஆசிரியர் பகுதி, “நவீன நாளைய தேவைகளுக்குப் பொருந்துமாறு பைபிள் பகுதிகளுக்கு மறுவிளக்கம் கொடுப்பதற்கான மற்றும் திருத்தம் செய்வதற்கான முயற்சிகளை” கண்டனம் செய்தது. அநேக புதிய மொழிபெயர்ப்புகள் “பண்டைய ஏடுகளின் புதிய கண்டுபிடிப்புகளின் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியின் அனுகூலத்தைப் பயன்படுத்துகிற திறம்பட்ட இலக்கியப் படைப்புகளாக இருந்தாலும்,” அந்த ஆசிரியர் பகுதி “மொழிபெயர்ப்பு வேலையை விளக்கம் கொடுப்பதுடன் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது” என்று எச்சரித்தது. யூதப்பகைமையின் எந்தவொரு தடயத்தையும் தவிர்க்கும் முயற்சியாக கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர் மன்றம் வெளியிட்ட, குருமாருக்கும் போதகர்களுக்குமான பின்பற்றத்தக்க வழிமுறைகளே சர்ச்சைக்குள்ளானவையாக இருந்தன. இயேசுவின் வழக்குவிசாரணையோடும் மரணத்தோடும் தொடர்புபடுத்தி உபயோகிக்கப்பட்ட “யூதர்கள்” என்ற பதமானது “எருசலேமின் குடிமக்கள் சிலர்” என்றும், “பரிசேயர்” என்ற பதம் “சில மதத்தலைவர்கள்” என்றும் மாற்றப்படவிருக்கின்றன. அந்த ஆசிரியர் பகுதி மேலும் கூறியது: “புதிய ஏற்பாட்டின் ஆதாரச்சான்றுகள் கருத்தின் வெளிப்பாடு அல்ல. . . . வார்த்தைகளில் தலையிடுவதும், மூலபாடத்தில் மாற்றங்களைச் செய்வதும் வெகு எளிதாகக் கட்டுப்பாடின்றிபோய், இயேசுவின் வாழ்க்கை சரிதையை நேர்மையற்ற விதத்தில் அளிப்பதற்கு வழிநடத்தும். அவர் வாழ்நாளின் சமுதாய சூழமைவு அவர் காலத்திற்கு இசைவாகவே இருத்தல் வேண்டும்.”
தட்பவெப்பநிலை பேரழிவை தடுத்தல்
உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளுக்குள் பூமியின் தட்பவெப்பநிலை பேரழிவை எதிர்ப்படும் என்று ஜெர்மானிய விஞ்ஞான அறிவுரைக் குழுமம் எச்சரிக்கிறது. “தட்பவெப்ப கொல்லியாகிய கார்பன் டைஆக்ஸைடு (CO2) வெளிப்படுவதை, உலக அளவில் ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 1 சதவிகிதமாவது குறைக்கவேண்டும் என்று நிபுணர்கள் கோருகிறார்கள். ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 0.2 டிகிரி செல்சியஸுக்கு மேல் தட்பவெப்பநிலையில் அதிகரிப்பை அனுமதிக்கக்கூடாது” என்பதாக ஸுட்டொய்ச்ச ட்ஸைடுங் செய்தித்தாள் அறிவிக்கிறது. உலக தட்பவெப்பநிலைக்கு 80 சதவிகித அளவான சேதம் விளைவிக்கும் தொழில்மயமாக்கப்பட்ட உலகின் நாடுகளே முக்கிய குற்றவாளிகளாகும். உதாரணத்திற்கு, சராசரியாக, ஓர் இந்திய குடிமகன் உற்பத்திசெய்யும் கார்பன் டைஆக்ஸைடின் அளவைப்போல 20 மடங்கு ஜெர்மானிய குடிமகன் உற்பத்தி செய்கிறான். மண் அரிப்பு, சுத்தமான தண்ணீர் பற்றாக்குறை, உயிரின வகைகள் அழிதல் போன்றவை மனிதனால் உண்டான மற்ற பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளாகும்.
“குடும்பத்தை மீண்டும் கட்டியமைத்தல்”
பிள்ளைகளைப் புறக்கணிப்பதும், அவர்களிடத்தில் கொடூரமாக நடப்பதும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன என்று பிரேஸிலின் செய்தித்தாள் ஆ எஸ்டாடொ ட சௌ பவ்லொ அறிவிக்கிறது. சமுதாய பொருளாதார பிரச்சினைகள் ஒரு காரணியாக இருந்தபோதிலும், பிள்ளையை மோசமாக நடத்துதல் ஏழ்மையான அயலகங்களுடன் நின்றுவிடுவதில்லை. பிள்ளைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் தொடர்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லீய ஜூங்கேராவின்படி, ‘எப்படி இருப்பினும் பணக்காரனுக்கும் ஏழைக்கும் வித்தியாசம் ஏதுமில்லை, வித்தியாசம் என்னவென்றால், குச்சுவீடுகளில் அல்லது நெருக்கமாக அமைந்த மாடிவீடுகளில் பிள்ளைகள் அழுவது அனைவர் காதுகளிலும் விழுகிறது; பெரும் மாளிகைகளில் ஏற்படும் அழுகையின் சத்தத்தைச் சுவர்கள் தடுத்துவிடுகின்றன.’ குடும்பப் பிணைப்புகளை வலுப்படுத்துவதே பிரச்சினையை எதிர்த்துப்போராட இருக்கும் சிறந்த வழி என்று SOS குழந்தை அமைப்பின் இயக்குநர் விக்டர் பவுலோ சாப்பீன்ஜா கருதுகிறார். “ஒரு பிள்ளையை ஸ்தாபனம் ஒன்றில் சேர்ப்பதனால் ஒன்றையும் சாதிக்கமுடியாது, அங்கு அவனுக்கு அன்போ பாசமோ கிடைக்காது. குடும்பத்தை மீண்டும் கட்டியமைப்பதில் உதவுவதுதான் தேவையாக இருக்கிறது, அப்பொழுது பிள்ளைகள் வீட்டிலேயே பாசத்தையும் அன்பையும் கொண்டிருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.
கேஃபின் பிள்ளைகள்
பிள்ளைகள் அதிகளவு கேஃபின் உட்கொள்ளுவதினால், கூர்ந்த கவனமின்மை, அமைதியற்றிருத்தல், எளிதில் கவனம் சிதறப்படுதல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றால் துன்பப்படக்கூடும் என்று டஃப்ஸ் யூனிவர்ஸிட்டி டயட் & நியூட்டிரிஷன் லெட்டர் கூறுகிறது. 18 கிலோ கிராம் எடையுள்ள ஒரு பிள்ளைக்கு “ஒரு கோலா கேனும், ஒரு அரைக் கப் ஐஸ் டீயும்” வளர்ந்த ஒருவர் அருந்தும் “மூன்று கப் காபிக்குச் சமானம்.” அந்தக் கட்டுரை, ஹாஃப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் மிச்சல் ஷாரின் ஆராய்ச்சியைக் குறிப்பிட்டது, அது காண்பித்ததாவது: “பிள்ளைகள் அதிகளவு கேஃபின் உட்கொள்ளுதலின் அறிகுறிகள் கவனக்குறைவு/கவனப்பற்றாக்குறை மிகை இயக்க கோளாறின் அறிகுறிகள் போன்றே இருக்கின்றன.” அது மேலும் கூறியதாவது: “உங்களுடைய அமைதியற்ற அல்லது துள்ளும் இளம்பிள்ளைக்கு அத்தகைய பிரச்சினை இருக்கிறதா என்று நீங்கள் முடிவுசெய்வதற்கு முன், கோலா மற்றும் டீ உட்கொள்ளுதலை வெறுமனே குறைப்பதன் மூலம் அமைதியற்றிருக்கும் நிலைக்கு எளிதான தீர்வை நீங்கள் காணலாம்.”
விலங்குப் பிரியர்களுக்கு நினைப்பூட்டுதல்
நீங்கள் ஒரு விலங்குப் பிரியரா? அப்படியென்றால், ஒரு பிரியமான நாய் உங்கள் முகத்தையோ கைகளையோ நக்கியிருக்கலாம். மானிடோபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒட்டுண்ணியியல் வல்லுநர் லேன் கிரஹாமின் கருத்தின்படி, ஒட்டுண்ணியின் அல்லது நாக்குப் பூச்சியின் லார்வாவை நீங்கள் பெறும் சாத்தியம் இருக்கிறது. “உங்களுடைய வாய்க்கு மிக அருகில் உங்களுடைய நாயின் வாய் வராதபடி தடுப்பது மிகவும் சிறந்தது” என்று வின்னிபெக் ஃப்ரி பிரஸ் அறிவிக்கிறது. நாய்கள் தங்களைச் சுத்தப்படுத்த நாக்கைப் பயன்படுத்துகின்றன; அவற்றின் நாக்குச் சலவைத் தேய்ப்புக் கட்டையைப்போன்று இருப்பதால், அவை தொற்றை உண்டுபண்ணும் கழிவையும் சேர்த்து, பல பொருட்களை ஒற்றி எடுக்கின்றன. நாய்க்குட்டிகள் “கிருமிகளைச் சுமக்கும் மென்மையான மயிரின் பொதிகள் என பேர்போனவை” என்று அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. நோயுறுவதற்கான வாய்ப்பு குறைவே என்றாலும், அறிவுரையானது “எதற்கும் பாதுகாப்பை கருதி, நீண்ட நேரம் நாய் நக்கிய எந்தவொரு நிகழ்விற்குப்பிறகும் உங்கள் கைகளையும் முகத்தையும் உங்களுடைய சிறு பிள்ளைகளுடையதையும் கழுவுங்கள்.”
நிறைவேற்றாத வாக்குறுதிகள்
“இதற்கு முன்னான அனைத்து மருத்துவ புரட்சியைப்போன்றே, மரபணுச் சிகிச்சையும் (gene therapy) ஒளிமயமான எதிர்கால எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டது” என்று டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது. “பரம்பரை கோளாறுகளான, சிஸ்டிக் பைபுரோசிஸ் (cystic fibrosis), தசை நலிவு, சிக்கில்-செல்-அனிமியா (sickle-cell anemia) போன்றவற்றை வழக்கமான மருந்தால் அல்ல, ஆனால் மரபணுப் பொறியியலின் (genetic engineering) மிதமிஞ்சிய சக்தியினால், குறைபாடு உள்ள மரபணுக்களை அகற்றி, சாதாரண எதிரிணைகளால் (counterparts) மாற்றீடு செய்வதன்மூலம் குணப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் வாக்குறுதி அளித்தனர்.” ஆனால் இப்பொழுது, முதல்முறையாக, மனித பரிசோதனைகள் அங்கீகரிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கும் மேலானப்பின்பு, 100 விதமான மருத்துவ சோதனைகளில் 600 பேர் ஈடுபட்டும், எந்தவிதமான சாதகமான விளைவுகளும் இருக்கவில்லை. “அந்த அனைத்து பரிசோதனைகளுக்கும், விளம்பரங்களுக்கும்பின், மரபணுச் சிகிச்சை ஒரு நோயாளியையாவது குணமாக்கியது—அல்லது உதவியது—என்பதற்கான தெளிவான ஆதாரம் இதுவரை ஒன்றுமில்லை” என்று கூறுகிறது டைம்ஸ். பார்க்கப்போனால், பாதிக்கப்பட்ட செல்களின் இடத்தில் மரபணுக்களைப் போடும் சிறந்த முறையை அல்லது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அவற்றைத் தள்ளிவிடாதபடி எப்படிக் காப்பது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும்கூட அறியாமலிருக்கிறார்கள். “ஏதோவொன்று செயல்படுகிறது என்பதற்கு எப்போது ஆதாரம் இல்லையோ, அது மருத்துவத்தன்மை அற்ற கலவையைக்காட்டிலும் வேறொன்றுமில்லை” என்று அரிஜோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியலர் ராபர்ட் எரிக்சன் கூறுகிறார்.
கடம்பை மானை எதிர்த்து சமாளித்தல்
“சுவீடனில், போலீஸுக்குப் புகார் செய்யப்பட்ட அனைத்து சாலைவிபத்துக்களிலும், பாதியளவு வனவிலங்குகளின்மீது மோதுவதினால் ஏற்பட்ட விபத்துகளாகும்” என்று நியூ சயன்டிஸ்ட் அறிவிக்கிறது. அத்தகைய மோதல்களின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 12 முதல் 15 பேர் சாகிறார்கள். அவற்றுள் முக்கியமாகக் கவலைகொள்ள செய்வன ஐரோப்பிய கடம்பை மான்களே; அவை 800 கிலோகிராம் எடை வரை வளருகின்றன, இயல்புணர்வாகவே, கார்களைக் கண்டால் பயப்படுவதில்லை. பக்கத்திலுள்ள பின்லாந்தில், ‘சாலைவிபத்துக்களை ஏற்படுத்துவதில் மதுபான குடித்தலை அடுத்து இரண்டாம் காரணியாக’ தேசியளவில் இருப்பது கடம்பை மான்களே என்று கூறுகிறது நியூஸ்வீக். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க உதவுவதற்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த சாப் என்னும் கார் தொழிற்சாலை, தங்கள் கார்களின் பாதுகாப்புத்திறனைச் சோதிப்பதற்காக, போலி கடம்பை மானைக்கொண்டு மோதல்-சோதனைகளை நடத்துகிறது. பின்லாந்தின் அதிகாரிகள், நெரிசல் மிகுந்த சாலையை ஒட்டினாற்போல், கடம்பை மான்களுக்குச் சுரங்கப்பாதை அமைப்பதற்காக $2.2 கோடியை ஒதுக்கியுள்ளனர். ‘சுரங்கத்தின் அடுத்த முனையைக் கடம்பை மான்கள் பார்க்கத்தக்க விதத்தில் கட்டப்படும், அவற்றிற்கு பிடித்தமான செடிகள் நடப்படும். இணைசேரும் காலம் வந்துவிட்டால், கடம்பை மான்கள் சாலையின் இருபக்கங்களையும் பார்ப்பது கிடையாது’ என்று நியூஸ்வீக் கூறுகிறது.