போப்பின்—ஐநா விஜயம் அது எதை நிறைவேற்றினது?
நியூ யார்க் நகரத்திலுள்ள ஐநா-வில் சொற்பொழிவாற்ற அட்லான்டிக் கடலுக்கு மேலே பறந்து சென்றபோது, போப் ஜான் பால் II தனது உலக சுற்றுப்பயணத்தின் 10,00,000 கிலோமீட்டர் தூரக் குறியைக் கடந்துவிட்டார். அது அக்டோபர் 4, 1995-ஆக இருந்தது, மேலும் போப்பாக, அவரது 68-வது வெளிநாட்டுப் பயணமாய் இது இருந்தது. சந்தேகம் ஏதுமின்றி, ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் வரலாற்றிலேயே மிக அதிகம் பயணம் செய்திருக்கும் போப் இவர்தான்.
மழை பெய்துகொண்டிருந்த ஒரு புதன்கிழமையன்று, இதுவரை எந்தவொரு மதிப்புவாய்ந்த நபருக்கும் ஏற்பாடு செய்திராத சிறப்பான பாதுகாப்புத் திரையொன்றால் சூழப்பட்ட நிலையில், அவர் நியூ ஜெர்ஸியிலுள்ள நியூயர்க் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். சுமார் 8,000 மாநில மற்றும் நகர அதிகாரிகள் போப்பைப் பாதுகாக்கும்படி நியமிக்கப்பட்டிருந்ததாகக் கணக்கிடப்பட்டது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஸ்க்யூபா முக்குளிப்பவர்களை உள்ளடக்கிய “ஒரு விரிவான பாதுகாப்பு ஓடு” என்று ஓர் அறிக்கை அதை அழைத்தது.
ஏன் இந்த விஜயம்?
விமான நிலையத்தைச் சென்றடைந்தவுடன் தான் ஆற்றிய சொற்பொழிவில், அவருக்கு முன்னிருந்த போப் பால் VI, ஐநா பொது மாநாட்டில் சொற்பொழிவாற்றியிருந்தபோது, “இனிமேலும் போர் செய்ய வேண்டாம், வேண்டவே வேண்டாம்!” என்று கேட்டுக்கொண்டதை நினைவுகூர்ந்தார். “அரை நூற்றாண்டுக்கு முன்பு ஐநா-வைத் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த இலட்சியங்களும் நோக்கங்களும், நோக்கத்தைத் தேடும் ஓர் உலகில் எக்காலத்திலும் தேவைப்பட்டதைவிட இன்று மிகவும் இன்றியமையாததாய் உள்ளதுபற்றி [தனது] திட உறுதியைத் தெரிவிக்க” தான் திரும்பி வந்திருப்பதாக ஜான் பால் II கூறினார்.
நியூயர்க்கிலுள்ள ஸேக்ரட் ஹார்ட் கத்தீட்ரலில் மாலை ஜெபங்களின்போது, “மனிதக் குடும்பத்தின் பொதுநலம் கருதி சேவை செய்யவே அந்த அமைப்பு இருக்கிறது, ஆகவே சுவிசேஷத்தின் நம்பிக்கைக்கு ஒரு சாட்சியாக போப் அங்கு உரையாற்றுவது பொருத்தமாய் இருக்கிறது” என்று கூறினதன் மூலம் ஐநா-வுக்கான தனது ஆதரவை மீண்டும் தெரிவித்தார். “ஆகவே சமாதானம் வேண்டி நாம் விண்ணப்பம் செய்வது ஐக்கிய நாட்டுச் சங்கத்துக்கான விண்ணப்பமுமாய் இருக்கிறது. அஸிஸியைச் சேர்ந்த செயின்ட் ஃபிரான்சிஸ் . . . சமாதானத்தைப் பெரிதும் விரும்புபவரும் சமாதானத்துக்காக உழைப்பவருமாக நன்கு அறியப்படுகிறார். உலக முழுவதிலும் நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் எடுக்கும் முயற்சியின்மீது வேண்டுதல் செய்ய அவரிடம் நாம் மன்றாடுவோம்” என்றும் கூறினார்.
ஐநா-வில் அவர் ஆற்றிய சொற்பொழிவில், பல நாடுகள் தங்கள் சுதந்திரத்தைத் திரும்பப் பெற்றிருந்த கிழக்கு ஐரோப்பாவில் 1989-ல் அகிம்சை முறையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அவர் போற்றினார். ‘குறுகிய மனப்பான்மை மற்றும் தனிப்பட்ட நாட்டுப்பற்றிலிருந்து’ வேறுபட்ட ‘மெய்யான தேசபக்தியைக்’ காட்ட உத்வேகப்படுத்தினார். “கோடிக்கணக்கான மக்கள், பசி, ஊட்டக் குறைவு, நோய், கல்வியறிவின்மை, சீரழிவு ஆகிய வறுமையால் துன்புறும்போது, . . . எவரும் தன் சொந்த நலத்திற்காக மற்றொருவரை சுரண்ட உரிமை பெற்றிருக்கவில்லை என்பதை நமக்குநாமே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும்” என்று தற்போதைய ஒழுங்குமுறையின் அநீதிகளைப் பற்றி அவர் பேசினார்.
“இம் மிகப் பெரிய சவால்களை நாம் எதிர்ப்படுகையில், ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் பங்கை எப்படி ஏற்றுக்கொள்ளாதிருக்க முடியும்?” என்று பிறகு அவர் கூறினார். “உலகின் அனைத்து நாடுகளும் வசதியாக உணரும் ஓர் இடமாகிய ஒழுக்கநெறி சார்ந்த ஓர் அமைப்பாக ஐநா ஆக” வேண்டும் என்று அவர் கூறினார். “முழு மனிதக் குடும்பத்தின் ஒற்றுமையை” மேம்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் அழுத்திக் காட்டினார்.
மெய்ச் சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
பல உயரிய கருத்துக்களை அவர் தெரிவித்தார் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனாலும், தன் நீண்ட சொற்பொழிவில் எந்தக் கட்டத்திலாவது, மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கான கடவுளுடைய தீர்வுக்கு—கிறிஸ்து இயேசுவின் மூலமாக அவரது ராஜ்ய ஆளுகைக்கு—உலகத் தலைவர்களின் கவனத்தைத் திருப்பினாரா? (மத்தேயு 6:10) இல்லை. உண்மையில், ஐநா-வில் ஆற்றிய தன் சொற்பொழிவில் பைபிளிலிருந்து ஒருபோதும் அவர் மேற்கோள் காட்டவில்லை. அதற்கு முரணாக, “கடவுளுடைய அருளின் உதவியால், அடுத்த நூற்றாண்டிலும் அடுத்த ஆயிரமாண்டிலும் மனிதத் தன்மைக்கு உகந்த ஒரு நாகரிகத்தை, சுதந்திரத்தின் ஒரு மெய்யான கலாச்சாரத்தை நாம் கட்டியமைக்கலாம்” என்று அவர் கூறினார். பைபிள் மாணாக்கருக்கு இக் கருத்துக்கள், “நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள்” என்று சுமார் 4,000 ஆண்டுகளுக்கும் முன்பு, மனிதகுலத்தை மனித மூலங்களின் உதவியால் தாங்கள் ஒன்றுபடுத்த முடியும் என்று எண்ணிய பண்டைய பாபேலைச் சேர்ந்தவர்களால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஒத்த வார்த்தைகளை எதிரொலிப்பதாகத் தோன்றலாம். (ஆதியாகமம் 11:4) ஆகவே, இந் நோக்குநிலையில், ஐநா-வைப் பிரதிநிதித்துவம் செய்யும் மனிதகுலத்தின் அரசியல் தலைவர்களே சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய நாகரிகத்தைக் கட்டியமைக்கப் போகிறார்கள்.
ஆனால் மனிதனின் அரசியல் சார்ந்த அரசாங்கங்களுக்கும் அந்த ஐநா-வுக்கும் வரப்போகும் அந்த எதிர்காலத்தைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனம்தான் என்ன? தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்கள் அவற்றிற்கு வரவிருக்கும் அந்த எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான தரிசனத்தைக் காட்டுகின்றன. ‘மனித கைகளால் பெயர்க்கப்படாத’ ஒரு பெரிய கல்லைப் போன்ற தமது ராஜ்ய ஆளுகையை, கடைசி நாட்களில் கடவுள் நிறுவுவார் என்பதாக தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்தார். அது என்ன நடவடிக்கை எடுக்கும்? “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” எல்லா மனிதகுலத்துக்கும் ஒரே நீதியான ஆளுகையால் மனித அரசாங்கங்கள் பதிலீடு செய்யப்படும்.—தானியேல் 2:44.
ஐநா-வுக்கு என்ன சம்பவிக்கவிருக்கிறது? வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரம் ஐநா-வை (மேலும் அதற்கு முந்தி குறைந்த காலமே இருந்த சர்வதேச சங்கத்தை) “நாசமடையப் போகிற” ஒரு சிவப்பு-நிற மூர்க்க மிருகமாக சித்தரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:8) a அதைப் பின்பற்றுவோர் எவ்வளவுதான் உள்ளார்ந்தவர்களாய் இருந்தாலும், யெகோவா கொண்டுவரவிருக்கும் மெய்ச் சமாதானத்தின் ஊற்றுமூலம், எந்தவொரு அபூரண மனித மூலமும் அல்ல. பரலோகங்களில் இருக்கும் உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து இயேசுவின் கைகளிலுள்ள கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்யத்தின் மூலம் மெய்ச் சமாதானம் வரும். “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்று வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் கடவுள் வாக்களித்திருப்பதனுடைய நிறைவேற்றத்தின் அடிப்படையாய் அது இருக்கிறது.
இவ் விஜயம்—விளைவு எந்தளவுக்கு?
தன் சொற்பொழிவுகளில் போப் பைபிளை மேற்கோள் காட்டினபோது, கத்தோலிக்க விசுவாசிகள் பைபிளை எடுத்து அதில் அந்த மேற்கோள்களைச் சரிபார்க்கும்படி உற்சாகப்படுத்தப்பட்டார்களா? உண்மையில், மிகப்பெரும்பாலானோர் ஒரு பைபிளைத் தங்களிடம் எடுத்துச் செல்லவும்கூட இல்லை. கேட்போர் கூட்டத்தினருக்கு பைபிள் வாசிப்பை வசதியாக்கும்படி குறிப்பிட்ட வசனம் எதையாவது அரிதாகவே போப் மேற்கோள் காட்டினார்.
நியூ ஜெர்ஸியிலுள்ள ஜயண்ட்ஸ் ஸ்டேடியத்தில் 83,000 பார்வையாளருக்கு முன்பாக அவர் பேசுகையில், “உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்கும்படி கர்த்தர் திரும்பி வருவதற்கு நாம் காத்திருக்கிறோம். மகிமையுடன் வரவிருக்கும் அவரது வருகைக்காக, கடவுளுடைய ராஜ்யம் அதன் முழு அளவில் வருவதற்காக நாம் காத்திருக்கிறோம். அதுவே சங்கீதங்களின் நிலையான வரவேற்பாய் இருக்கிறது: ‘தைரியத்துடன் கர்த்தரின் வருகைக்காகக் காத்திருங்கள்; உறுதியான இருதயம் உள்ளவர்களாயிருந்து, கர்த்தருக்காகக் காத்திருங்கள்,’ ” என்று கூறினது ஓர் உதாரணமாகும். சங்கீதங்களிலிருந்து எந்த வசனத்தை அவர் மேற்கோள் காட்டினார்? மேலும் அவர் மேற்கோள் காட்டிய கர்த்தர் எந்தக் கர்த்தர்—இயேசுவா அல்லது கடவுளா? (சங்கீதம் 110:1-ஐ ஒப்பிடுக.) வத்திகனின் லோஸ்ஸேர்வாடோரே ரோமானோ என்ற செய்தித்தாளின்படி, “யாவேயில் உங்கள் நம்பிக்கையை வையுங்கள், உறுதியாய் இருங்கள், உங்கள் இருதயம் தைரியமாய் இருக்கட்டும், உங்கள் நம்பிக்கையை யாவேயில் வையுங்கள்” என்று இன்னும் தெளிவாக வாசிக்கும் சங்கீதம் 27:14-ஐ (தி ஜெருசலம் பைபிள்) அவர் மேற்கோள் காட்டிப் பேசினார். ஆம், கர்த்தராகிய இயேசுவின் கடவுளான யாவேயில், அல்லது யெகோவாவில் நம் நம்பிக்கையை வைக்க வேண்டும்.—யோவான் 20:17.
வரலாறு முழுவதிலும், கத்தோலிக்க குரு மற்றும் தலைவர்கள் தேசங்களிடையே சமாதானத்தை மேம்படுத்தியுள்ளனரா? இனம், வகுப்பு, மரபு சார்ந்த வேறுபாடுகளைத் தீர்க்கக் கத்தோலிக்கப் போதனை உதவியிருக்கிறதா? 1994-ல் ஆப்பிரிக்காவின் மத்தியக்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ருவாண்டாவில் நடந்த படுகொலைகள், முன்னாள் யுகோஸ்லாவியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த உட்பகை சார்ந்த போர்கள் இவையனைத்தும், பொதுவாக மத நம்பிக்கைகள் மனித இருதயத்தினுள் மறைந்திருக்கும் ஆழ்ந்த பகை மற்றும் தப்பெண்ணங்களை ஒழிக்கத் தவறுகின்றன என்பதைக் காட்டுகின்றன. வாரந்தோறும் பாவ அறிக்கை செய்வது, அல்லது பூசைக்குத் தவறாமல் செல்வது, மக்கள் சிந்திக்கும் விதத்தையும், செயல்படும் விதத்தையும் மாற்றப்போவதில்லை. விசுவாசியின் இருதயத்தையும் மனதையும் ஊடுருவிச் செல்லும்படி கடவுளுடைய வார்த்தையை அனுமதிக்கும்போது மட்டுமே ஏற்படும் இன்னும் ஆழ்ந்ததோர் செல்வாக்காக அது இருக்க வேண்டும்.
ஒரு மெய்க் கிறிஸ்தவனின் மாற்றமடைந்த நடத்தை மதசம்பந்தமான வழிபாட்டுமுறைகளால் தூண்டப்பட்ட ஓர் உணர்ச்சிப்பூர்வமான பிரதிபலிப்பைச் சார்ந்ததாயில்லை, ஆனால், ஒவ்வொரு தனி நபருக்குமான கடவுளின் சித்தம் என்னவாயிருக்கிறது என்பதைச் சிந்தனை செய்து புரிந்துகொள்வதைச் சார்ந்திருக்கிறது. “உங்களைச் சுற்றியுள்ள உலகின் நடத்தையைக் குறித்து உங்களுக்குள்ளே ஆச்சரியப்பட வேண்டாம், ஆனால் உங்கள் நடத்தை உங்கள் புதிய மனதின் மாதிரியின்படி மாறட்டும். தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று கண்டறியத்தக்க ஒரே வழி இதுவே” என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார். (ரோமர் 12:1, 2, JB) இப் புதிய நடத்தை கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவுக்கு வழிநடத்தும் அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் பெறப்படுகிறது. மனதைத் தூண்டுவிப்பதன் மூலம் கிறிஸ்தவ நடத்தையில் விளைவடையும் ஓர் ஆவிக்குரிய சக்தியை அது உருவாக்குகிறது.—எபேசியர் 4:23; கொலோசெயர் 1:9, 10.
சர்ச் ஒரு “கொடிய கட்டத்தில்” இருக்கிறதா?
போப் ஜான் பால் II 75 வயதானவராய் இருந்தபோதிலும், “அசாதாரணமான சக்தி” உடையவர் என்பதாக ஸ்பானிய செய்தித்தாள் எல் பாயிஸ் விவரித்தது, மேலும் ஐ.மா. செய்தித்தாள் ஒன்று, “மக்கள் தொடர்பு சாதனங்களின் ஒரு நிபுணர்” என்று அவரை அழைத்தது. அவர் செய்தியாளர்களைக் கையாளும் விதத்திலும், நெருக்கமான தொகுதியிலுள்ள பெருவாரியானவர்களை அவர்களின் பிள்ளைகளோடு ஒன்றுபடுத்துவதிலும் திறமை வாய்ந்தவர். அவரது சுற்றுப்பயணங்களில் வத்திகன் நகரிலுள்ள போப்பின் அதிகாரத்தை திறமையாகப் பிரதிநிதித்துவம் செய்கிறார். வத்திகனுக்கு ஐநா-வில் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இருந்தபோதிலும், அந்த அமைப்பை போப் ஆசீர்வதிப்பது, அதன்மீது யெகோவா தேவனின் ஆசீர்வாதம் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்போவதில்லை.
போப்பின் விஜயத்திற்கு வெவ்வேறான பிரதிபலிப்புகள் இருந்தன. வெளிப்பூசையில் கலந்துகொள்ளும்படி நுழைவுச் சீட்டுகளைப் பெற்றிருந்த கத்தோலிக்கரில் பெரும்பாலானோர் அந்த அனுபவத்தால் உணர்ச்சிப்பூர்வமாக எழுச்சி கொண்டனர். என்றபோதிலும், சில கத்தோலிக்கத் தலைவர்கள் அவ்விஜயத்தைப் பற்றியும் அதோடு சம்பந்தப்பட்ட விளைவுகளைப் பற்றியும் மிகவும் எதிர்மறையான ஒரு நோக்குநிலையைக் கொண்டிருந்தனர். கேத்தலிக் நேஷனல் சென்டர் ஃபார் பாஸ்ட்டரல் லீடர்ஷிப்பின் தலைவர் திமத்தி பி. ரேகன் பின்வருமாறு கூறியதாக தி நியூ யார்க் டைம்ஸ் மேற்கோள் காட்டியது, “அந்தப் போப்பின் விஜயம் நழுவ விடப்பட்ட ஒரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தது. அப் பயணம் ‘பெரும்பாலானோரை உணர்ச்சிப்பூர்வமாக எழுச்சிகொள்ளச் செய்வதாயும், முக்கியப் புனித நிகழ்ச்சியாயும் இருந்தாலும்,’ ” கத்தோலிக்கத் தலைவர்கள் பலருக்கு அது, “போப்பின் பங்கில் செவிகொடுப்பதற்கான சந்தர்ப்பமாய் இருக்கவில்லை, கருத்துப் பரிமாற்றத்திற்கான ஏற்பாடாய் இருக்கவில்லை.” மணத்துறவு, பிறப்புக் கட்டுப்பாடு, மணவிலக்கு போன்ற பிரச்சினைகளின் சம்பந்தமாக போப்பின் தனிமொழி ஒன்றை மட்டும் தாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்படி வற்புறுத்தப்பட்டதாகக் கத்தோலிக்கரில் பலர் உணர்ந்தனர்.
“சர்ச் ஒரு கொடிய கட்டத்தில் இருக்கிறது” என்றும், கத்தோலிக்கர் பலர், “குறிப்பாக இளைஞர் கத்தோலிக்கராய் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதன் ஒரு தெளிவான பொருளை இழந்துவருவதாக” அவர்கள் அஞ்சுகின்றனர் என்பதைச் சில கத்தோலிக்க அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். கத்தோலிக்கப் பரம்பரையாளர் ஜேம்ஸ் ஹிட்ச்காக், “மாற்றத்தை விரும்பாதவர்களாய் இருப்பதில் அதிகரித்துவரும் குருக்களாட்சிக்கும் சுயாதீனப்போக்குடைய ‘மத்திப மேலாண்மைக்கும்’ இடையேயுள்ள அழிவுக்கேதுவான ஒரு பனிப் போரைப் போன்று இப்பிரச்சினையைக் காண்கிறார்.”
சர்ச்சுக்குச் செல்லும் தனிநபர்த் தொகுதிகளிலுள்ள இடர்ப்பாடுகளைப் போப்பின் விஜயம் எவ்வாறு பாதிக்கும் என்ற விஷயத்தைப் பொறுத்தமட்டில், ஹிட்ச்காக் கூறினார்: “அவர் இங்கு வருகிறார், மட்டுக்குமீறி முகஸ்துதி செய்யப்படுகிறார், பிறகு வீடு திரும்புகிறார்—வேறொன்றும் நடக்கிறதில்லை. என் நோக்குநிலையில், அந்த விளைவுகள் ஏமாற்றமடையச் செய்வதாகவே இருக்கின்றன.” மெய்ச் சமாதானத்தின் ஊற்றுமூலம் எங்கே காணப்பட வேண்டும் என்று ஐநா-வைச் சேர்ந்த அரசியல் தலைவர்களிடம் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை போப் நிச்சயமாகவே நழுவ விட்டுவிட்டார்.
ஐநா சாசனமும் மனிதப் பிரச்சாரமும் “சமாதானம், பாதுகாப்பு” என்ற ஓர் இலக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தபோதிலும், ஏமாற்றப்பட்டுவிடாதீர்கள். “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை” என்று பைபிள் எச்சரிக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:3) மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் கடவுளுடைய விருப்பப்படியும் அவருடைய வழியின்படியும்—ஐநா-வின் மூலமாக அல்ல, அவருடைய ராஜ்ய ஆளுகையின் மூலமாக—மட்டுமே வரும்.
[அடிக்குறிப்பு]
a வெளிப்படுத்துதலிலுள்ள இத் தீர்க்கதரிசனத்தின் விவரமான தகவலுக்கு, 1988-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கங்கள் 240-51-ஐக் காண்க.
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
UN photos