பொய் தூதுவர்களுக்கு சமாதானமில்லை!
“பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:9, 11.
1. இந்த ‘முடிவு காலத்தில்,’ உண்மையான தூதுவர்களும் பொய்யான தூதுவர்களும் இருப்பார்கள் என்பதை நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
தூதுவர்கள்—பொய்யானவர்களா அல்லது உண்மையானவர்களா? பைபிள் காலங்களில் இரண்டு வகையான தூதுவர்களும் இருந்தார்கள். ஆனால் நம்முடைய நாளைப் பற்றியென்ன? தானியேல் 12:9, 10-ல், பரலோக தூதுவர் ஒருவர் கடவுளுடைய தீர்க்கதரிசியிடம் இவ்வாறு சொன்னதாக நாம் வாசிக்கிறோம்: “இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ [“உட்பார்வையுள்ளவர்களோ,” NW] உணர்ந்து கொள்ளுவார்கள்.” நாம் இப்போது அந்த ‘முடிவு காலத்தில்’ வாழ்ந்துவருகிறோம். ‘துன்மார்க்கருக்கும்’ ‘உட்பார்வையுள்ளவர்களுக்கும்’ இடையே உள்ள தெள்ளத் தெளிவான வித்தியாசத்தை நாம் காண்கிறோமா? நிச்சயமாகவே நாம் காண்கிறோம்!
2. ஏசாயா 57:20, 21 இன்று எவ்வாறு நிறைவேறி வருகிறது?
2 57-ம் அதிகாரம் 20, 21 வசனங்களில், கடவுளுடைய தூதுவராகிய ஏசாயாவின் வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம்: “துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப் போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.” இவ்வுலகம் 21-ம் நூற்றாண்டை நெருங்குகையில் இந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அதை வர்ணிக்கின்றன! ‘நாம் என்றாவது அந்த நூற்றாண்டை எட்டுவோமா?’ என்றும்கூட சிலர் கேட்கிறார்கள். உட்பார்வையுள்ள தூதுவர்கள் நமக்குச் சொல்லுவதற்கு எதை வைத்திருக்கிறார்கள்?
3. (அ) 1 யோவான் 5:19-ல் என்ன வித்தியாசம் காண்பிக்கப்படுகிறது? (ஆ) வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் ‘உட்பார்வையுள்ளவர்கள்’ எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறார்கள்?
3 அப்போஸ்தலனாகிய யோவான் கடவுளால் ஏவப்பட்ட உட்பார்வையைப் பெற்றிருந்தார். 1 யோவான் 5:19-ல் அது சொல்லப்பட்டிருக்கிறது: “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.” 1,44,000 பேரடங்கிய ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் இந்த உலகத்திலிருந்து வித்தியாசப்பட்டிருப்பவர்களாய் இருக்கிறார்கள்; அவர்களில் மீதியானோர் வயதானவர்களாக இன்னும் நம்முடன் இருக்கிறார்கள். இன்று இவர்களுடன் சேர்ந்துகொண்டிருப்பவர்கள், ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . ஒரு திரள் கூட்டத்தாராவர்;’ இப்பொழுது இந்தத் திரள் கூட்டத்தினர் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையுடையோராகவும், உட்பார்வையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்.” இவர்கள் ஏன் பலனளிக்கப்படுகிறார்கள்? ஏனென்றால், இவர்களும்கூட இயேசுவினுடைய கிரயபலியில் விசுவாசம் வைத்து, ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருக்கிறார்கள்.’ ஒளியின் தூதுவர்களாக, இவர்களும்கூட ‘இரவும் பகலும் [தேவனுக்கு] பரிசுத்த சேவை செய்துவருகிறார்கள்.’—வெளிப்படுத்துதல் 7:4, 9, 14, 15, NW.
பெயரளவில் சமாதான தூதுவர்கள் என்றழைக்கப்படுபவர்கள்
4. (அ) சாத்தானிய உலகில் இருக்கும் பெயரளவில் சமாதான தூதுவர்கள் என்றழைக்கப்படுபவர்கள் ஏன் தோல்விக்கு விதிக்கப்பட்டிருக்கிறார்கள்? (ஆ) எபேசியர் 4:18, 19 இன்று எவ்வாறு பொருந்துகிறது?
4 இருப்பினும், சாத்தானிய உலக ஒழுங்குமுறையில் சமாதான தூதுவர்கள் என்று பெயரளவில் அழைக்கப்படுகிறவர்களைப் பற்றியென்ன? ஏசாயா 33-ம் அதிகாரம் 7-ம் வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் [“தூதுவர்கள்,” NW] மனங்கசந்து அழுகிறார்கள்.” சமாதானத்தைக் கொண்டுவரும் முயற்சியில் உலகத்தின் ஒரு தலைநகரத்திலிரந்து மற்றொன்றுக்கு பரப்பரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறவர்களைக் குறித்ததில் இது எவ்வளவு உண்மை! எவ்வளவு பயனற்ற செயல்! ஏன் அப்படி? ஏனென்றால் உலக வியாதிகளுக்கான மூலகாரணங்களை போராடி கையாளுவதற்கு பதிலாக, இவர்கள் அதற்கான அறிகுறிகளைச் சமாளிக்கிறார்கள். முதலாவதாக, சாத்தான் இருப்பதைக் குறித்து அவர்கள் குருடராயிருக்கிறார்கள், அவனை “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார். (2 கொரிந்தியர் 4:4) மனிதவர்க்கத்தினரின் மத்தியில் சாத்தான் துன்மார்க்கத்தை விதைத்திருக்கிறான்; அதன் விளைவாக பெரும்பான்மையானோர், அநேக ஆட்சியாளர்கள் உட்பட, எபேசியர் 4:18, 19-ன் வர்ணனைக்கு இப்பொழுது பொருந்துகிறார்கள்: “அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.”
5. (அ) மனித அமைப்புகள் ஏன் சமாதான தூதுவர்களாய் இருக்க தவறிவிட்டார்கள்? (ஆ) சங்கீதம் 37-ம் அதிகாரம் ஆறுதலூட்டும் என்ன செய்தியைக் கொடுக்கிறது?
5 அபூரண மனிதர்களடங்கிய எந்தவொரு ஸ்தாபனத்தாலும் இன்று அவ்வளவு பரவலாக காணப்படுகிற பேராசையையும் சுயநலத்தையும் பகையையும் மனித இருதயத்திலிருந்து பூண்டோடு ஒழிக்க முடியாது. நம்முடைய படைப்பாளரும் சர்வலோக பேரரசரும் கர்த்தருமாகிய யெகோவா மாத்திரமே அதைச் செய்யமுடியும்! மேலும், மனிதவர்க்கத்தினரில் உள்ள சிறுபான்மையினராகிய சாந்தகுணமுள்ளவர்களே அவருடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய மனவிருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இவர்களுக்கும் இந்த உலகத்தின் துன்மார்க்கத்தினருக்கும் வரும் பலன், சங்கீதம் 37:9-11-ல் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கப்படுகிறது: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”
6, 7. உலக மதங்கள் சமாதான தூதுவர்களாய் சேவிக்க தவறிவிட்டன என்பதைக் குறித்து அவற்றின் பதிவு என்ன காட்டுகிறது?
6 அப்படியானால், நோயுற்ற நிலையில் இருக்கும் இந்த உலக மதங்களின் மத்தியில் சமாதான தூதுவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? சரி, இன்றுவரையாக மதத்தின் பதிவு என்ன? மதம் இரத்தம் சிந்துதலில் பங்குகொண்டிருக்கிறது, ஆம், நூற்றாண்டுகள் முழுவதிலும் பேரளவான இரத்தம் சிந்துதலைத் தூண்டிவிடுவதாகவும்கூட இருந்திருக்கிறது என்பதை சரித்திரம் காண்பிக்கிறது. உதாரணமாக, 1995, ஆகஸ்ட் 30-ம் வார கிறிஸ்டியன் சென்ச்சுரி என்ற பத்திரிகை, முன்னாள் யுகோஸ்லாவியாவில் ஏற்பட்ட கொந்தளிப்பைக் குறித்து அறிக்கை செய்கையில் இவ்வாறு குறிப்பிட்டது: “செர்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போஸ்னியாவில், பார்லிமெண்ட் என்று தாங்களாகவே அழைத்துக்கொள்கிற கூட்டத்தின் முன் வரிசையில் பாதிரிகள் உட்கார்ந்திருக்கிறார்கள், அதோடு போர் முனையிலும் இருக்கிறார்கள்; போருக்கு முன்பாக இராணுவ வீரர்களையும் போராயுதங்களையும்கூட அவர்கள் அங்கே ஆசீர்வதிக்கின்றனர்.”
7 80-சதவீத கத்தோலிக்கர்களுக்குப் பெயர்போன ஒரு தேசமாகிய ருவாண்டாவில் நன்கு விளக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளபடி, ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகளின் நூறு ஆண்டுகால சேவை எந்தவொரு சிறந்த பலனையும் கொண்டுவரவில்லை. 1995, ஜூலை 7 தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு அறிவித்தது: “லையன்ஸில் [பிரான்ஸில்] பிரசுரிக்கப்படுகிற முற்போக்கான, பாமர கத்தோலிக்க பத்திரிகையாகிய கோலியா, கடந்த வருடத்தில் ருவாண்டாவில் கொலை செய்ததாக அல்லது கொலையை ஊக்கப்படுத்தியதாக அது சொல்லுகிற இன்னும் 27 ருவாண்டா பாதிரிமார்களையும் நான்கு கன்னியாஸ்திரீகளையும் அடையாளம் காண்பிக்க திட்டமிட்டிருக்கிறது.” லண்டனிலுள்ள மனித உரிமைகள் அமைப்பாகிய ஆப்பிரிக்கன் உரிமைகள் என்ற அமைப்பு இந்தக் குறிப்பை சொன்னது: “சர்ச்சுகள் அமைதலாக இருப்பதற்குப் பொறுப்புடையவையாய் இருப்பதோடுகூட, அதிலுள்ள சில பாதிரிமார்களும் பாஸ்டர்களும் கன்னியாஸ்திரீகளும் மனித இனப் படுகொலையில் பங்குகொண்டதற்காகவும் அதிக பொறுப்புள்ளவையாய் இருக்கின்றன.” யெகோவாவின் உண்மை தூதுவராகிய எரேமியா, இஸ்ரவேலின் ஆட்சியாளர்கள், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் ஆகியோரோடுகூட அதன் ‘வெட்கத்தை’ விவரித்தபோது, இஸ்ரவேலில் இருந்த சூழ்நிலைக்கு இது ஒத்திருக்கிறது. மேலும் அவர் சொன்னதாவது: “உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது.”—எரேமியா 2:26, 34.
8. எரேமியா ஒரு சமாதான தூதுவராக இருந்தார் என ஏன் சொல்லப்படலாம்?
8 அழிவை அறிவிக்கும் தீர்க்கதரிசியென அடிக்கடி எரேமியா அழைக்கப்படுகிறார், ஆனால் அவர் கடவுளுடைய சமாதான தூதுவர் என்றும் அழைக்கப்படலாம். அவருக்கு முன்பாக வாழ்ந்த ஏசாயா அடிக்கடி ‘சமாதானத்தை’ குறிப்பிட்டதுபோல இவரும் அடிக்கடி குறிப்பிட்டார். எருசலேமின்மீது நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கு எரேமியாவை யெகோவா பயன்படுத்தி, சொன்னதாவது: “அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள் முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாகவும், நான் அதை என் முகத்தைவிட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது. எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும்.” (எரேமியா 32:31, 32) இன்று ஆட்சியாளர்களின்மீதும் கிறிஸ்தவமண்டலத்திலுள்ள குருவர்க்கத்தினரின்மீதும் வரும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பை இது முன்நிழலாக காண்பித்தது. உண்மையான சமாதானம் வியாபித்திருப்பதற்கு, கெட்ட காரியங்களையும் வன்முறைகளையும் தூண்டிவிடுகிற இவர்கள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும்! அவர்கள் நிச்சயமாகவே சமாதான தூதுவர்கள் அல்ல.
ஐநா ஒரு சமாதான தூதுவனா?
9. ஐநா எவ்வாறு சமாதான தூதுவனாக தன்னை உரிமைபாராட்டியிருக்கிறான்?
9 ஐக்கிய நாடுகள் சமாதானத்தின் உண்மையான தூதுவனாக இருக்க முடியாதா? ஜூன் 1945-ல், ஹிரோஷிமாவை அணுகுண்டு பாழாக்கியதற்கு வெறும் 41 நாட்களுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட அதன் சாசனத்தின் முகப்புரையே, “போரின் துன்பத்திலிருந்து பின்வரும் சந்ததியாரைப் பாதுகாப்பதற்கான” அதன் நோக்கத்தைக் குறிப்பிட்டது. ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் அங்கத்தினர்களாக ஆகவிருந்த 50 உறுப்பினர்கள், “சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக்கொள்வதற்கு [தங்களுடைய] பலத்தை ஒன்றுதிரட்ட” இருந்தார்கள். இன்று ஐநா 185 தேசங்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது, எல்லா தேசங்களும் அதே நோக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவையாக கருதப்படுகிறது.
10, 11. (அ) மதத் தலைவர்கள் எவ்வாறு தங்கள் ஆதரவை ஐநா-வுக்கு தெரிவித்திருக்கிறார்கள்? (ஆ) எந்த முறையில் “கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை” போப்புகள் தவறாக பிரதிநிதித்துவம் செய்திருக்கிறார்கள்?
10 கடந்துசென்ற வருடங்களில் எல்லாம் ஐநா பாராட்டுப் பேரொலியுடன், விசேஷமாக மதத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 11, 1963-ல், “பாக்கெம் இன் டெரிஸ்” (“பூமியில் சமாதானம்”) என்று தலைப்பிடப்பட்ட தன்னுடைய பொது சுற்றறிக்கையில் போப் ஜான் XXIII கையெழுத்திட்டார், அதில் அவர் குறிப்பிட்டதாவது: “ஐக்கிய நாட்டு அமைப்பு—அதன் இயங்கும் விதத்திலும் மூலாதாரத்திலும்—அதன் சாதனைகளின் அளவிலும் உயர்ந்த தன்மையிலும் காரியங்களைச் சமாளிப்பதில் அதிக திறமையுடன் ஆகவேண்டும் என்பதே எங்கள் உள்ளார்ந்த ஆவல்.” பின்பு, ஜூன் 1965-ல், உலக ஜனத்தொகையில் பாதியை பிரதிநிதித்துவம் செய்வதாக கருதப்படும் மதத் தலைவர்கள், ஐநா-வின் 20-வது பிறந்த நாளை சான் பிரான்ஸிஸ்கோவில் கொண்டாடினார்கள். அதோடு 1965-ல், போப் பால் VI, ஐநா-வுக்கு விஜயம் செய்கையில், “ஒத்திசைவுக்கும் சமாதானத்திற்குமான கடைசி நம்பிக்கை” என அதை விவரித்தார். 1986-ல், சர்வதேச சமாதான ஆண்டை முன்னேற்றுவிப்பதில் இரண்டாம் போப் ஜான் பால் ஐநா-வுடன் ஒத்துழைத்தார்.
11 மறுபடியும், 1995 அக்டோபரில் போப் விஜயம் செய்தபோது இவ்வாறு அறிவித்தார்: “இன்று நாம் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைக் கொண்டாடுகிறோம்.” ஆனால் அவர் உண்மையிலேயே ராஜ்ய நற்செய்தியை அறிவிக்கும் கடவுளுடைய தூதுவரா? உலகப் பிரச்சினைகளைப் பற்றி பேசுபவராய், அவர் தொடர்ந்து சொன்னதாவது: “மிகப் பெரிய இந்தச் சவால்களை நாம் எதிர்ப்படுகையில், ஐக்கிய நாட்டு சங்கத்தின் பங்கை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியும்?” கடவுளுடைய ராஜ்யத்திற்குப் பதிலாக, ஐநா-வே போப்பினுடைய தெரிவாக இருக்கிறது.
‘மனங்கசந்து அழுவதற்கான’ காரணங்கள்
12, 13. (அ) எரேமியா 6:14-ல் விவரிக்கப்பட்டுள்ள முறையில் எவ்வாறு ஐநா செயல்பட்டிருக்கிறது? (ஆ) ஏசாயா 33:7-ல் உள்ள வர்ணனையில் ஏன் ஐநா-வின் தலைமைத்துவம் சேர்க்கப்பட்டிருக்கிறது?
12 ஐநா-வின் 50-வது ஆண்டுவிழா கொண்டாட்டம் ‘பூமியில் சமாதானத்திற்கான’ எந்தவொரு உண்மையான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தத் தவறிவிட்டது. கனடா நாட்டு தி டோரன்டோ ஸ்டார் பத்திரிகையின் எழுத்தாளர் ஒருவரால் ஒரு காரணம் சுட்டிக்காண்பிக்கப்பட்டது, அவர் எழுதினார்: “ஐ.நா. என்பது பல்லுபோன சிங்கம், மனித கொடூரத்தை எதிர்ப்படும்போது அது கர்ஜிக்கிறது, ஆனால் அது கடிப்பதற்கு முன்பாக பொய் பல்செட்டை அதன் வாயில் மாட்டிவிடுவதற்கு அதன் அங்கத்தினர்களுக்காக காத்திருக்க வேண்டும்.” அடிக்கடி அதன் கடி, லேசாகத்தான் இருந்திருக்கிறது, அதுவும் அதிக பிந்திதான் வந்திருக்கிறது. இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறையிலுள்ள “சமாதான தூதுவர்கள்,” முக்கியமாக கிறிஸ்தவமண்டலத்திலுள்ளவர்கள், எரேமியா 6:14-ல் உள்ள வார்த்தைகளை எதிரொலித்து வந்திருக்கிறார்கள், “சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.”
13 அடுத்தடுத்து வந்த ஐநா தலைமை செயலர்கள் ஐநா-வை வெற்றிபெறச் செய்வதற்காக கடினமாகவும், சந்தேகமின்றி, உண்மையாகவும் உழைத்திருக்கிறார்கள். ஆனால் பல்நோக்குடைய 185 அங்கத்தினர்களுக்கிடையே தொடர்ந்து நடைபெறும் சச்சரவுகளான, எவ்வாறு போரைக் கட்டுப்படுத்துவது, கொள்கையை உருவாக்குவது, நிதியை கையாளுவது போன்றவை வெற்றிக்கான எதிர்பார்ப்புகளை தடைசெய்திருக்கின்றன. 1995-க்கான அவருடைய வருடாந்தர அறிக்கையில், “பூகோள அணு ஆயுதப் பேரழிவின் திகில்” குறைந்துவருவது, “முழு மனிதவர்க்கத்தினருக்கான பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்றத்தை நோக்கி தேசங்கள் ஒன்றுசேர்ந்து உழைப்பதற்கான” வழியைத் திறப்பதாக அப்போதைய தலைமை செயலர் எழுதினார். ஆனால் அவர் தொடர்ந்து சொன்னார்: “வருத்தகரமாக, கடந்த சில ஆண்டுகளாக, உலக விவகாரங்களின் பதிவு அந்த நம்பிக்கையான எதிர்பார்ப்புகளை பெருமளவில் பொய்த்துப்போகும்படி செய்திருக்கிறது.” உண்மையிலேயே, இந்த எதிர்கால சமாதான தூதுவர்கள் ‘மனங்கசந்து அழுகிறார்கள்.’
14. (அ) ஐநா நிதி ரீதியிலும் தார்மீக ரீதியிலும் நொடித்துப்போய் விட்டது என்று ஏன் சொல்லலாம்? (ஆ) எரேமியா 8:15 எவ்வாறு நிறைவேற்றமடைந்து வருகிறது?
14 கலிபோர்னியாவின் தி ஆரன்ஜ் கெளன்டி ரெஜிஸ்டர் என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்புச்செய்தி இவ்வாறு வாசிக்கிறது: “நிதி ரீதியிலும் தார்மீக ரீதியிலும் ஐ.நா. நொடித்துப்போய் விட்டது.” 1945-க்கும் 1990-க்கும் இடையே, 80-க்கும் மேற்பட்ட போர்கள் நடைபெற்றன, அவை மூன்று கோடிக்கும் மேலான உயிர்களை பலிவாங்கின என்பதாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. அக்டோபர் 1995 ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ஒரு எழுத்தாளர் இவ்வாறு விவரித்திருப்பதாக அது மேற்கோள் காண்பித்தது: “ஐ.நா.-வின் இராணுவ நடவடிக்கைகள், ‘தகுதியற்ற தளபதிகள், ஒழுங்கற்ற போர்வீரர்கள், வலிய தாக்குபவர்களுடன் உறவுகள், கொடூரங்களை தடைசெய்ய தவறுதல், சில சமயங்களில் பயங்கரத்திற்கும்கூட உதவிசெய்தல்’ ஆகியவற்றினால் வர்ணிக்கப்படுகின்றன. மேலும், ‘வீணாக்குதல், மோசடி செய்தல், துர்ப்பிரயோகம் செய்தல் ஆகியவற்றின் அளவு திணறடிக்கச்செய்வதாய் இருக்கிறது.’” “50-ம் வயதில் ஐ.நா” என்று தலைப்பிடப்பட்ட ஒரு பிரிவில், “மோசமான நிர்வாகமும் விரையமும் ஐ.நா.-வின் மிகச் சிறந்த நோக்கங்களை அரித்தழித்துவிடுகின்றன” என்ற தலைப்புச் செய்தியை தி நியூ யார்க் டைம்ஸ் பிரசுரித்தது. இங்கிலாந்திலுள்ள லண்டனின் தி டைம்ஸ், ஒரு கட்டுரையில் பின்வரும் வார்த்தைகளைத் தலைப்பாக போட்டிருந்தது: “ஐம்பதில் நலிவடைந்த நிலை—ஐ.நா. ஆரோக்கியமான நிலைக்கு வர உடற்பயிற்சி திட்டம் தேவை.” உண்மையில், எரேமியா 8-ம் அதிகாரம் 15-ம் வசனத்தில் நாம் வாசிக்கிறபடி அது உள்ளது: “சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.” அணு ஆயுத பேரழிவைப் பற்றிய அச்சுறுத்துதல் இன்னும் மனிதவர்க்கத்தினரை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. தெளிவாகவே, மனிதவர்க்கத்தினருக்குத் தேவைப்படுகிற சமாதான தூதுவன் ஐ.நா. அல்ல.
15. பூர்வ பாபிலோனும் அதன் சந்ததியும் எவ்வாறு அழிவுண்டாக்குவதாயும் மந்தமாக்குவதாயும் நிரூபித்திருக்கின்றன?
15 இவையனைத்தின் விளைவு என்னவாக இருக்கும்? யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை எந்தச் சந்தேகத்தையும் விட்டுவைப்பதில்லை. முதலாவதாக, ஐநா-வுடன் மிக அடிக்கடி மிதமிஞ்சிய அளவுக்கு சிநேகம் வைத்துவந்திருக்கிற உலக பொய் மதங்களுக்கு என்ன காத்திருக்கிறது? இந்தப் பொய் மதங்கள் விக்கிரகாராதனையின் ஒரே ஊற்றுமூலமாகிய பாபிலோனிலிருந்து வந்த சந்ததியினர். பொருத்தமாகவே, வெளிப்படுத்துதல் 17:5-ல் அவை இவ்வாறு வர்ணிக்கப்பட்டிருக்கின்றன: “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்.” இந்தப் பாசாங்குத்தன அமைப்புக்கு வரும் அழிவைக் குறித்து எரேமியா விவரித்தார். ஒரு வேசியைப் போல, அவை பூமியின் அரசியல்வாதிகளை மோசம்போக்கியிருக்கின்றன, மேலும் ஐநா-வைப் புகழ்ந்து, அதன் உறுப்பினராய் இருக்கும் அரசியல் அதிகாரங்களுடன் கள்ளக்காதல் நடத்திவருகின்றன. சரித்திரத்தின் போர்களில் அவை பெரும்பங்கு வகித்து வந்திருக்கின்றன. இந்தியாவில் நடைபெறும் மதசம்பந்தமான சண்டையைக் குறித்து ஒரு குறிப்புரையாளர் இவ்வாறு சொன்னார்: “மதத்தை மக்களின் அபினி என்பதாக காரல் மார்க்ஸ் குறிப்பிட்டார். ஆனால் அந்தக் கூற்று முற்றிலும் சரியாக இருக்கமுடியாது, ஏனென்றால் அபினி என்பது மனச்சோர்வுண்டாக்கும் ஒரு போதைப்பொருள், அது மக்களை மந்த நிலைக்குள் மதிமயங்கச் செய்து தாலாட்டுகிறது. அதற்கு மாறாக, மதமானது நன்கு சுத்திகரிக்கப்பட்ட கோக்கைன் துண்டுகளைப் போல் இருக்கிறது. அது பயங்கரமான வன்முறையை அவிழ்த்துவிடுகிறது, அது மிகவும் அழிக்கும் சக்தியாகவும் இருக்கிறது.” ஆனால் இந்த எழுத்தாளர் சொன்னதும் முற்றிலும் சரியல்ல. பொய் மதமானது மந்தத்தன்மை மற்றும் அழிவு ஆகிய இரண்டையும் உண்டாக்குவதாய் இருக்கிறது.
16. நேர்மை இருதயமுள்ள மக்கள் ஏன் மகா பாபிலோனைவிட்டு வெளியேற வேண்டும்? (வெளிப்படுத்துதல் 18:4, 5-ஐயும் காண்க.)
16 அப்படியானால், நேர்மை இருதயமுள்ள மக்கள் என்ன செய்யவேண்டும்? கடவுளுடைய தூதுவராகிய எரேமியா நமக்கு பதிலளிக்கிறார்: “பாபிலோனின் . . . நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள். இது, கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது.” பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் கட்டுகளிலிருந்து ஓடிவந்திருக்கிற லட்சக்கணக்கானவர்களாகிய நாம் மகிழ்ச்சியுள்ளவர்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா? அப்படியானால், பூமியிலுள்ள தேசங்களை மகா பாபிலோன் எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும்: “அதன் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப் போனார்கள்.”—எரேமியா 51:6, 7.
17. மகா பாபிலோனின்மீது என்ன நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படவிருக்கிறது, அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து என்ன ஏற்படும்?
17 சீக்கிரத்தில், வெளிப்படுத்துதல் 17:16, 17-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, “புத்திமயங்கிப்போன” ஐநா-வின் அங்கத்தினர்கள் பொய் மதத்தைத் தாக்கும்படி யெகோவாவால் வழிநடத்தப்படுவார்கள்: “[இவர்கள்] அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.” இது, மத்தேயு 24:21-ல் குறிப்பிடப்பட்டுள்ள மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்; பின்பு அது அர்மகெதோனில், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் உச்சக்கட்டத்தை அடையும். பூர்வ பாபிலோனைப் போல, எரேமியா 51:13, 25-ல் அறிவிக்கப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பை மகா பாபிலோன் பெறும்: “திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது. இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” போரைத் தூண்டுவிக்கிற ஊழல்மிக்க தேசங்களின்மீது யெகோவாவின் பழிவாங்கும் நாள் வருகையில், இவர்களும் அழிவுக்குள்ளான பொய் மதத்தைப் போல் அழிவார்கள்.
18. எப்பொழுது மற்றும் எப்படி ஏசாயா 48:22 இன்னும் நிறைவேறவுள்ளது?
18 1 தெசலோனிக்கேயர் 5:3-ல், துன்மார்க்கரைக் குறித்து இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.” இவர்களைக் குறித்துதான் ஏசாயா இவ்வாறு சொன்னார்: ‘இதோ, சமாதான தூதுவர்கள் மனங்கசந்து அழுவார்கள்.’ (ஏசாயா 33:7, NW) உண்மையிலேயே, ஏசாயா 48:22-ல் நாம் வாசிக்கிறபடி, “துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.” ஆனால் உண்மையான தேவ சமாதான தூதுவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது? நம்முடைய அடுத்த கட்டுரை சொல்லும்.
மறுபார்வைக்கான கேள்விகள்
◻ பொய் தூதுவர்களை என்ன பலமான வார்த்தைகளால் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்?
◻ நிரந்தரமான சமாதானத்திற்கு வழிநடத்துவதில் ஏன் மனித ஸ்தாபனங்கள் தவறுகின்றன?
◻ உண்மையான சமாதான தூதுவர்கள் எவ்வாறு ஐநா-வின் ஆதரவாளர்களிலிருந்து வித்தியாசப்படுகிறார்கள்?
◻ யெகோவாவின் வாக்குப்பண்ணப்பட்ட சமாதானத்தில் களிகூருவதற்கு சாந்தகுணமுள்ளோர் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 15-ன் படங்கள்]
சமாதானத்துக்கான வெறும் மனித முயற்சிகள் தோல்வியுறும் என்பதை ஏசாயா, எரேமியா, தானியேல் ஆகியோர் முன்னறிவித்தனர்
[பக்கம் 16-ன் படம்]
‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’—அப்போஸ்தலன் யோவான்
[பக்கம் 17-ன் படம்]
‘அவர்கள் புத்தியிலே அந்தகாரப்பட்டிருக்கிறார்கள்.’—அப்போஸ்தலன் பவுல்