“போட்டஸியில் வெள்ளி —இருக்கிறது!”
பொலிவியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
வருடம் 1545, பரந்த இன்கா பேரரசை ஃப்ரான்ஸிஸ்கோ பஸாரோ கைப்பற்றி 12 வருடங்கள் மட்டுமே கடந்திருந்தன. ஓரிளம் இந்தியன், தற்போதிருக்கும் பொலிவியாவிலுள்ள ஆண்டீஸ் மலைத்தொடரில் இருந்த இரகசியமான ஓரிடத்திலிருந்து மறைவாக வெள்ளி தாதுவைப் பிரித்தெடுத்துக் கொண்டிருப்பதை ஸ்பானியர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடம் போட்டஸி என்றழைக்கப்பட்டது. திடீரென்று இந்தச் செய்தி பரவியது: “போட்டஸியில் வெள்ளி இருக்கிறது!” குளிர்காலம் நெருங்கி வந்துகொண்டிருந்தபோதிலும், அந்தப் பகுதியில் உரிமையை ஸ்தாபிப்பதற்காக அநேகர் அங்கு அவசரமாகச் சென்றனர். அந்தத் தாது, நம்பமுடியாத அளவுக்கு உயர்மதிப்புள்ளதாய் இருந்தது—50 சதவிகிதம் சுத்தமான வெள்ளி! 18 மாதங்களுக்குள் 14,000 மக்கள் போட்டஸியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கடல் மட்டத்திற்கு மேலே 4,688 மீட்டர் உயர்ந்திருக்கிற ஒரு மலையின் பக்கத்தில் அந்தத் தாது படிவம் இருந்தது. கிட்டத்தட்ட தாவரங்களே இல்லாது, மர வளர்ச்சியின் எல்லையை நன்கு கடந்துவிட்ட, ஆதரவு தராத ஓரிடமாக அது இருந்தது. உயர்மதிப்புள்ள அந்தத் தாது, கரியை சரியான வெப்பத்தில் வைப்பதற்கு காற்றைப் பயன்படுத்திய, எடுத்துச் செல்லத்தக்க அடுப்புகளில் உருக்கி பிரித்தெடுக்கப்பட்டது. அந்தக் காலத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், ஒரே சமயத்தில் 15,000 அடுப்புகள் செயல்படுவதைக் கண்டதாக விவரித்தார். இரவுநேரத்தில் அவை நட்சத்திரங்களின் பால்வழி மண்டலம் ஒன்றைப்போல காட்சியளித்தன.
மலையின் அடிவாரத்தில் இருந்த நகரம், உறையவைக்கும் காற்றுகளிலிருந்து கொஞ்சம் பாதுகாப்பை அளிக்கும்வண்ணமாக குறுகிய, வளைவுநெளிவுள்ள தெருக்களால் ஒழுங்கற்றவிதத்தில் கட்டப்பட்டிருந்தன. வரலாற்றாசிரியர் ஆர். சி. பாடன் எழுதினார்: “அங்கு திட்டமைப்பும் இருக்கவில்லை ஒழுங்கமைப்பும் இருக்கவில்லை, பெரும்பாலும், அங்கு வெள்ளி அதிகமாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படாததே காரணம் என்று எண்ணப்படுகிறது.” ஆனால் அது கிடைத்துக்கொண்டே இருந்தது. ஸெரோ ரீகோ (செழுமையான மலை) என்றழைக்கப்பட்ட மலை, எக்காலத்திலும் கண்டெடுக்கப்பட்டதிலேயே பேரளவான வெள்ளி படிவங்களை உடையதாக ஆனது.
அடிமைப்படுத்தல்
ஸ்பானியர்கள், வெள்ளிக்கான தங்கள் தேடலில் கடுமையான அசௌகரியங்களைச் சகித்தார்கள். அடிக்கடி உணவு பற்றாக்குறை இருந்தது, தண்ணீர் மாசுபட்டதாய் இருந்தது, மேலும் சுரங்கங்கள் ஆபத்தானவையாய் இருந்தன. உறையவைக்கும் வானிலை ஒரு கடுமையான பிரச்சினையாக இருந்தது. கரியால் தங்களை அனலாக வைத்துக்கொள்ள முயன்றவர்கள், சிலசமயங்களில் கார்பன் மோனாக்ஸைட் விஷமூட்டப்படுதலால் கஷ்டப்பட்டனர்.
தங்கள் வசதியின்மையைக் குறைப்பதற்கான ஒரு வழியை ஸ்பானியர்கள் சீக்கிரத்தில் கண்டுபிடித்தனர். வெற்றி பெறுகிறவர்களாக அவர்கள் இந்தியர்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கினர். லா பாஸின் பொலிவியன் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “80 லட்சம் இந்திய அடிமைகள் அழிக்கப்பட்டதாக,” குடியேற்றக் காலப்பகுதியில் போட்டஸியின் சுரங்கங்களில் இறந்துவிட்டதாகச் “சொல்லப்படுகிறது.” கொடுமை, மட்டுமீறிய வேலைப்பளு, நோய் ஆகியவை மக்கள்தொகையைப் பயங்கரமாகக் குறைத்தது. 1550-ல் காலநிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் போட்டஸியை “நரகத்தின் வாய்” என்றழைத்ததில் ஆச்சரியமேதுமில்லை!
பாபிலோன்
1572-க்குள், ஸ்பெய்னிலுள்ள எந்த நகரத்தைக் காட்டிலும் போட்டஸி பெரியதாக இருந்தது. 1611-க்குள், அது 1,60,000 குடியிருப்பாளர்களைக் கொண்டதாகவும், பாரிஸையும் லண்டனையும் ஒத்த அளவானதாய் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. உலகிலேயே மிகவும் பணக்கார நகரங்களில் ஒன்றாகவும் அது இருந்தது. பொன் மற்றும் வெள்ளி சரிகை தொங்கல்களை உடைய பட்டுத்துணியை அணிவதே அப்போதைய பாணியாக இருந்தது. உங்களுக்கு வசதி இருந்தால் எந்தவிதமான ஆடம்பரப் பொருளையும் வாங்க முடியும் எனத் தோன்றியது: சீனாவிலிருந்து பட்டுகள், இங்கிலாந்திலிருந்து தொப்பிகள், நேபிள்ஸிலிருந்து உள்ளாடைகள், அரேபியாவிலிருந்து வாசனைப் பொருட்கள். அங்கு குடியிருந்தவர்கள், பெர்சியாவிலிருந்து தரைவிரிப்புக் கம்பளங்கள், ஃப்ளான்டர்ஸிலிருந்து தட்டுமுட்டு சாமான்கள், இத்தாலியிலிருந்து ஓவியங்கள், வெனிஸிலிருந்து கண்ணாடி ஆகியவற்றால் தங்கள் வீடுகளை அலங்கரித்தார்கள்.
ஆனால் போட்டஸி எவ்வளவு செழுமையாக இருந்ததோ அவ்வளவு வன்முறையுள்ளதாகவும் இருந்தது. இரத்தம் சிந்தும் பூசல்கள், திறந்த வெளியிடங்களில் தினசரி காட்சியாக இருந்தன. சூதாட்ட வீடுகளும் விபசார விடுதிகளும் நிறைந்து காணப்பட்டன. போட்டஸி, பாபிலோன் என அறியப்படலானது.
ஸ்பானிய வெற்றியாளர்களின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று என்னவென்றால், தங்கள் கத்தோலிக்க மதத்தை அமெரிக்காக்களில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதாகும். என்றாலும், கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிய இவர்கள், அடிமைத்தனத்திலிருந்து பெற்ற பேரளவு லாபத்தை எப்படி நியாயப்படுத்தினார்கள்? சர்ச் குருமார் சிலர் அந்த அநியாயங்களுக்கு விரோதமாய் வெளிப்படையாகப் பேசினபோதிலும், இன்கா மக்கள் செய்த கொடுங்கோன்மையைவிட ஸ்பானியர்களின் கொடுங்கோன்மை குறைவானதே என்று கூறி மற்றவர்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி பேசினார்கள். இந்தியர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் இயல்பாகவே தவறுசெய்யும் மனச்சாய்வுள்ளவர்கள் என்றும்—எனவே சுரங்கங்களில் வேலைசெய்வது அவர்களுக்கு நன்மையானதே என்றும்—அவர்கள் வாதாடினர். இன்னும் மற்றவர்கள், இந்தியர்களைக் கத்தோலிக்கர்களாக மாற்றுவதற்கான ஒரு முக்கியப் படி அவர்களைச் சுரங்கங்களில் வேலை செய்யும்படி கொண்டுவருவது என்று வாதாடினார்கள்.
என்றபோதிலும், போட்டஸியிலிருந்த மிகப் பெரும் பணக்காரர்களில், மத குருமார் அடங்கினர் என்பதாக வரலாறு காண்பிக்கிறது. வரலாற்றாசிரியர் மாரியானோ பாப்டிஸா சொல்கிறார்: “ஒரு நிறுவனமாக சர்ச்சும், தனிப்பட்டவர்களாக அதன் அங்கத்தினர்களும்,” இந்தியர்களைச் “சுரண்டும் வட்டாரத்தின் ஒரு சிலாக்கியம் பெற்ற பாகமாக இருந்தனர்.” மத குருமார் “சாதாரண மனிதரைவிட அதிக பேராசையுடனும் பெரு விருப்பத்துடனும் இந்தியர்களின் இரத்தத்தை உறிஞ்சினர்” என்பதாக 1591-ல் ஒரு வைஸ்ராய் முறையிட்டதாக இந்த வரலாற்றாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
வீணாக்கப்பட்ட பொக்கிஷம்
ஸ்பெய்ன் ஓர் ஏழை நாடாக இருந்தது, ஆனால் ஒருசில பத்தாண்டுகளாக, அதன் செல்வங்கள் அதைப் பூமியிலேயே மிகப் பெரிய வல்லரசாக்கின. ஆனால் அப்பேர்ப்பட்ட சிலாக்கியமுள்ள நிலை நீடித்திருக்கவில்லை. ஸ்பெய்னுக்கு அதன் செல்வங்கள் ஏன் நிலையான நன்மைகளை அளிக்க தவறின என்பதைப் பற்றி குறிப்பிடுவதாய், ஜே. ஹெச். எலியட்டின் இம்பீரியல் ஸ்பெய்ன்—1469-1716 என்ற புத்தகம் சொல்லுகிறது: “போட்டஸியின் சுரங்கங்கள், சொல்ல முடியாத செல்வத்தை அந்நாட்டுக்குக் கொண்டுவந்தன; இன்று பணம் குறைவுபட்டதென்றால், பொக்கிஷ திரள் செவைல்லைச் சென்றெட்டியபோது நாளை அது மீண்டும் அதிகரிக்கும். ஏன் திட்டமிட வேண்டும், ஏன் சேமிக்க வேண்டும், ஏன் வேலை செய்ய வேண்டும்?”
போட்டஸியின் பொக்கிஷம் வீணாக்கப்பட்டது; அந்தக் காலப்பகுதி இடையிடையே பேரளவான நொடிப்புகளால் குறிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட ஒரு சொல்லின்படி, பொக்கிஷ திரள்களின் வரவுகள், கோடைகாலத்தில் ஒரு கணம் பெய்த லேசான மழை கூரை ஓடுகளை நனைத்து பின்னர் ஆவியாகிவிடுவதைப்போன்று இருந்தன. ஸ்பெய்னின் வீழ்ச்சியைக் குறித்து 17-ம் நூற்றாண்டின் கருத்துக்கணிப்பாளர் ஒருவர் பொருத்தமாகவே சொன்னார்: “அதன் செழுமை திரளின் காரணமாகவே அது செழுமையற்றிருக்கிறது.”
18-ம் நூற்றாண்டின்போது, வெள்ளி குறைவுபட்டபோது போட்டஸி வீழ்ச்சி அடைந்தது, ஆனால் வெள்ளீயம் முக்கியத்துவம் பெற்றபோது அது மறுமலர்ச்சி அடைந்தது. உற்பத்திக்கும் சுரங்கவேலைக்கும் தொழில்ரீதியிலான மையமாக போட்டஸி இன்னும் இருக்கிறபோதிலும், தற்போது வெள்ளீயம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. ஆனால் போட்டஸியின் குடியேற்றக் கவர்ச்சியை அனுபவிப்பதற்காக அநேக சுற்றுலா பயணிகள் விஜயம் செய்கிறார்கள். கத்தோலிக்க மதத்தில் ஆர்வம் குறைந்துகொண்டே வருவதற்குச் சான்றுபகருபவையாய் அவற்றில் பல காலியாக நிற்கும், மிகவும் அலங்காரமான அதன் சர்ச்சுகளையும் அவர்கள் கவனிக்கக்கூடும்.
பேராசை, அரசியல் சூழ்ச்சி, மதத்தின் தவறான வழிநடத்துதல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கடுமையான மனித துயரின் சோக நினைவுச்சின்னமாய் இன்று போட்டஸி நிற்கிறது, “போட்டஸியில் வெள்ளி இருக்கிறது!” என்ற அழைப்புடன் தொடங்கிய பொலிவியாவின் வரலாற்றில் ஓர் அத்தியாயத்தை நினைவூட்டுவதாய் நிற்கிறது.