உலகை கவனித்தல்
இந்தியாவின் HIV வகை
ஹார்வர்ட் எய்ட்ஸ் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் மாக்ஸ் எஸக்ஸ் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்றோடு ஒத்துழைக்கும் வகையில், இந்தியாவைச் சேர்ந்த புனேயிலுள்ள நேஷனல் எய்ட்ஸ் ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட்டில் விஞ்ஞானிகள், மிகவும் பொதுவாயுள்ள HIV வகையைப் பகுத்துப் பிரித்துள்ளனர். அது HIV-1C என்பதாகும். அது, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பொதுவாயுள்ள வகையான HIV-1B-யைக் காட்டிலும் ஐந்திலிருந்து பத்து மடங்கு அதிக ஆற்றலுடன் பரவுவதாக நம்பப்படுகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின்படி, இந்தியாவில் HIV பரவும் வேகம் உலகின் மற்ற பகுதிகள் பலவற்றில் பரவுவதைவிட மிக அதிகமாய் இருப்பதாகத் தெரிகிறது என்று டாக்டர் எஸக்ஸ் கூறினார். எய்ட்ஸ் வராது காக்கும் தடுப்பு மருந்தாக நம்பப்படும் சிலவற்றில் ஒன்றுகூட HIV-1C-க்கு எதிரான தடுப்பு மருந்தாக வேலை செய்யவில்லை என்று விஞ்ஞானியான டாக்டர் வி. ராமலிங்கசுவாமி குறிப்பிட்டார்.
ஜிம்பாப்வி வறட்சி நிவாரணம்
சமீப ஆண்டுகளில், யெகோவாவின் சாட்சிகள் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிக்கடி உதவியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளை வறட்சி அதிகம் பாதித்திருக்கும் ஜிம்பாப்வி போன்ற வளர்முக நாடுகளில் அவர்களது கிறிஸ்தவ ஆவி விசேஷமாக தேவைப்படுகிறது. இம் முயற்சிக்காக உணவும் உடையும் பெருமளவில் அன்புடன் வழங்கப்பட்டன, ஜிம்பாப்வியிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகமும் இப் பொருட்களை நாட்டின் கடைக்கோடிப் பகுதிகளிலுள்ள சாட்சிகளுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் வெற்றிகரமாக விநியோகித்தது. உணவு மற்றும் உடையோடுகூட, ஜிம்பாப்வியைச் சேர்ந்த சாட்சிகள் 7,500 டாலரை (ஐ.மா.) வழங்கினர், நிவாரணப் பணியை நிறைவேற்ற உவாட்ச் டவர் சொஸைட்டி இன்னும் 20,500 டாலரைச் செலவழித்தது. தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களால் காட்டப்பட்ட தாராளமான அன்புக்காக சொஸைட்டியும் பாதிக்கப்பட்ட சாட்சிகளும் தங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
பொதுவான தொடக்கங்கள்?
“இஸ்லாமிய குர்ஆன், இந்து மத வேதங்கள் மற்றும் பகவத்கீதை, மேலும் சீனாவின் டாவோ, மற்றும் ஜப்பானின் ஷின்டோ மதங்களின் புனித நூல்கள் போன்ற பல விதமான புத்தகங்களின் வாயிலாக, கடவுள் பேசியிருந்திருக்கலாம்” என்பதாக ஒரு கட்டுரையில், செல்வாக்குமிக்க ஜெஸ்யுட் பத்திரிகையான லா சிவில்டா காட்டோலிக்கா உறுதியுடன் கூறுவதாய் பாரிஸில் வெளியிடப்படும் இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிப்யூன் சொல்கிறது. இவையும் பிற மதப் புத்தகங்களும் “வெறும் இலக்கியம் அல்லது தத்துவத்தையல்ல, மாறாக ‘வெளிப்படுத்துதலை’—கடவுள் மனிதனின் மூலமாகப் பேசுவதை—தெரிவிக்கின்றன.” அப் பத்திரிகையின் கட்டுரைகள் வத்திகன் தணிக்கையாளர்களால் முறைப்படியல்லாமல் ஆய்வு செய்யப்படுவதால், இக் கருத்துக்கள், இவ்விஷயத்தின் பேரில் போப்பின் சொந்த நோக்குநிலையைத் தெரிவிப்பதாய் இருக்குமோ என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. சர்ச் போதனைகளுக்கு ஒத்த பொதுவான தொடக்கம் ஏதேனும் ஒன்று உள்ளதா என்று பிற மதங்களில் சர்ச் தேடிக்கொண்டிருப்பதாய் கிராஸிங் தி திரஷோல்ட் ஆஃப் ஹோப் என்ற தனது புத்தகத்தில் ஜான் பால் II குறிப்பிட்டிருந்ததாக டிரிப்யூன் குறிப்பிட்டுக் காட்டியது.
100-ஆண்டு கால நெருப்பு அணைந்தது
100-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவிலுள்ள பயன்படுத்தப்படாத நிலக்கரி படுகை ஒன்று தீப்பற்றியது, சமீப காலம் வரை அது தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்திருக்கிறது. அந்த நெருப்பு சுமார் ஆறு சதுர கிலோமீட்டர் பரப்பில் பற்றியதோடு, ஆண்டுதோறும் 3,00,000 டன் நிலக்கரியை எரித்தது. பல்லாண்டுகளாக அப் பெரிதளவான நெருப்பை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன. என்றபோதிலும், முடிவில், தீ அணைப்பவர்கள் அந் நெருப்பை அணைப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றனர். தீச்சுடரை அணைக்கும் பொருட்டு, துளையிடுவதற்கு வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, பிறகு ஜுவாலையின்மீது மணல், கல் மற்றும் தண்ணீரைக் கொட்டினர்.
உயர் இரத்த அழுத்தமும் நினைவிழப்பும்
“உயர் இரத்த அழுத்தமுடைய நடுத்தர வயது ஆண்கள், 70-களின் பிற்பகுதியை எட்டியதும், நினைவாற்றல், தீர்மானித்தல், சிந்தனையை ஒருமுகப்படுத்துதல் ஆகியவற்றில் குறைவு ஏற்படுவதால் சிரமப்படுவதுபோல் தோன்றுவதாய் ஓர் ஆய்வு காட்டியது” என்பதாக சைக்காலஜி டுடே அறிக்கை செய்கிறது. இதயச் சுருக்க இரத்த அழுத்தத்தில் ஒவ்வொரு பத்து-புள்ளி அதிகரிப்புக்கும், மூளையின் செயல்பாட்டில் குறைவு ஏற்படுவதில் 9 சதவிகித அதிகரிப்புக்கு சாத்தியம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “உயர் இரத்த அழுத்தம், தாக்கத்துடனும் இதய நோயுடனும் தொடர்புடையது என்று நமக்குத் தெரியும்; அதைக் குறைப்பதற்கு இது மற்றொரு காரணமாக மட்டுமே இருக்கிறது” என்று அந்த ஆய்வின் இயக்குநரான லேனோர் லௌனர், Ph.D., கூறுகிறார்.
பேச்சுத்தொடர்பில் இடைவெளி
உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பருவவயது மாணவர்கள் எப்போதாவது, அரிதாகவே தங்கள் தகப்பன்மாரோடு உள்ளார்ந்த அக்கறையுடைய விஷயங்களைப் பற்றி உரையாடுகின்றனர் என்று ஒரு சமீப ஆய்வு கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரிஸ்பேனின் செய்தித்தாள், தி குரியர்-மெய்ல் அறிக்கை செய்கிறது. மிகப் பெரும்பாலான பருவவயதினர் தங்கள் தகப்பன்மாரோடு ஒரு நாளுக்கு 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே செலவழிக்கின்றனர், ஆனாலும் தங்கள் தாய்மாரோடு பேசுவதில் ஒரு நாளுக்கு சுமார் ஒரு மணிநேரம் செலவழிக்கின்றனர் என்பதாக அச் சுற்றாய்வு காட்டியது. பெற்றோர் அரிதாகவே தங்கள் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுகின்றனர், அல்லது அவர்கள் எப்படிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புலனாய்வு செய்கின்றனர். மகன்களுக்கும் தகப்பன்மாருக்கும் இடையே உரையாடல் ஏதாவது நடந்தாலும், அது, கார்கள், விளையாட்டுகள் போன்ற மேலோட்டமான விஷயங்களைப் பற்றியே இருப்பதுபோல் தோன்றியது. தாய்மாரோடு பேச்சுத்தொடர்பு கொள்கையில், அது பெரும்பாலும் நண்பர்கள், பள்ளி, மற்றும் தோழமைக்காகக் கூடிவரும் திட்டங்கள் பற்றியும், அரிதாகவே உள்ளார்ந்த அக்கறையுடைய விஷயங்களைப் பற்றியும் இருந்தது. பல சந்தர்ப்பங்களில், ஒருவரோடு ஒருவர் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும் நடந்துகொள்வதோடு மட்டுமே தகப்பன்-மகள் பேச்சுத்தொடர்பு இருந்தது.
போக்குவரத்து விபத்துகள்—ஏன்?
சுமார் 90 சதவிகித போக்குவரத்து விபத்துகள், ஓட்டுநரின் தவறு அல்லது கவனக்குறைவால் நிகழ்கின்றன என்று பிரேஸிலின் போக்குவரத்து அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி, நல்ல காலநிலையிலோ, நேரான பெருவழிகளிலோ ஓட்டுகையில் ஓட்டுநர்கள் அடிக்கடி மிதமிஞ்சி நம்பிக்கை கொண்டவர்களாகின்றனர். சாலை மோசமான நிலையில் இருந்ததனாலும், கார் ஊறுபாடுகளினாலும் ஏற்பட்ட ஆட்டோமொபைல் விபத்துகள், பிரேஸிலில் ஒவ்வொரு ஆண்டும் 25,000 பேர் இறப்பதிலும், 3,50,000 பேர் காயமடைவதிலும் விளைவடைகின்றன என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
பெருங்கடல்களைக் கொள்ளையிடுவது
“புதிய மற்றும் லாபம் தரக்கூடிய மருந்துகளைக் கண்டுபிடிக்க விழையும் ஒரு வெறிபிடித்த பந்தயத்தில், மருந்து வழங்கீடு விற்பனை சார்ந்த நிறுவனங்களில் (pharmaceutical) பணிபுரியும் ‘வணிகரீதியில் சுரண்டப்படக்கூடிய உயிர்ப்பொருட்களுக்காகத் தேடிக்கொண்டிருப்போர்’ பின்விளைவுகளைப் பற்றி எதையும் சிந்திக்காமலே அதிகளவான உயிர்ப்பொருட்களைப் பெருங்கடல்களிலிருந்து எடுக்கின்றனர்” என்று நியூ சயன்டிஸ்ட் கூறுகிறது. ஆஸ்திரேலியா, யுனிவர்ஸிட்டி ஆஃப் க்வீன்ஸ்லாந்தைச் சேர்ந்த கடல்சார்ந்த உயிர் வேதியலாளர் ஒருவரான, மேரி கார்ஸனின்படி, சேகரிக்கப்பட்ட உயிர்ப்பொருட்களில் 98 சதவிகிதம் தீர பரிசோதிக்கப்படாமலே எறியப்படுகின்றன. உதாரணமாக, ஆய்வு செய்வதற்காக, 450 கிலோகிராம் அகோன் புழுவிலிருந்தும் (acorn worm), 2,400 கிலோகிராம் கடற்பஞ்சிலிருந்தும் ஒவ்வொரு மில்லிகிராம் அளவில் மட்டுமே கேன்ஸரை எதிர்க்கும் பொருள் ஒன்றையும், 1,600 கிலோகிராம் கடல் முயலிலிருந்து, பத்து மில்லிகிராம் அளவில் மட்டுமே கருங்கட்டிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் பெப்டைடு ஒன்றையும் பெறமுடிந்தது, மேலும், வெறுமனே 0.35 மில்லிகிராம் நிறையுள்ள சிகுவாடாக்ஸின் (ciguatoxin) என்ற மருந்தைப் பிரித்தெடுக்க, 847 கிலோகிராம் மரி விலாங்கின் ஈரல் தேவைப்பட்டது. “எவ்வளவுதான் பயனுள்ளவையாய் இருந்தாலும், உயிர்ப்பொருட்களைத் துடைத்தழிக்கவில்லை என்று நாம் நிச்சயமாய் அறிந்திருந்தாலொழிய அவற்றைப் பெருமளவில் வெறுமனே நாம் அகற்றிவிட முடியாது” என்று கார்ஸன் கூறினார்.
தற்செயலாய்க் கண்டுபிடிக்கப்பட்ட கோள்
இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமமான பிராட்ஃபீல்டைச் சேர்ந்த பொழுதுபோக்கு வானவியல் நிபுணர் ஜார்ஜ் சாலட், அவருடைய தோட்டக் குடிலில் ஒரு தொலைநோக்கியின் மூலமாக நோக்குகையில், சமீபத்தில் ஒரு சிறிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. “அது முற்றிலும் தற்செயலாய் இருந்தது” என்று அவர் ஒப்புக்கொண்டார். “நான் ஒரு ஃபோட்டோ பிடித்து, அதை சோதனை செய்து பார்க்கையில், ஒரு படத்தில், குறுக்கே ஒரு கோள் மெதுவாக நகர்ந்து செல்வதை நான் உணர்ந்தேன்.” இப்போது சாலட் வன் என்று அழைக்கப்படும் அப் புதிய கோள், சுமார் 30 கிலோமீட்டர் மட்டுமே விட்டமுடையது, பூமியிலிருந்து சுமார் 60 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அதன் கோள்வீதி செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையிலாகும். பயன்படுத்தப்பட்ட தொலைநோக்கி, 30 சென்டிமீட்டர் [அதன் ஆடியின் விட்டம்] உள்ள, கம்ப்யூட்டரால் இயக்கப்படும் மாடலாகவும், 7,000 டாலர் மதிப்புடையதும், ஆனால் ஹபிள் தொலைநோக்கியில் பயன்படுத்துவதற்கென்று வடிவமைக்கப்பட்ட மென்பொருள் (software) சாதனமே அதிலும் பயன்படுத்தப்படுவதாகவும் லண்டனின் தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. அதுபோன்ற சிறு கோள்கள், அல்லது குறுங்கோள்கள் ஆயிரக்கணக்கில் நம்முடைய சூரிய மண்டலத்தில் இருக்கலாம்.
அரிசி விளைவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு வியப்பு
பல்லாண்டுகளாக, ஆசியாவில் நெல் விளைவிக்கும் விவசாயிகள் பருவகாலத்தின் முற்பகுதியில், நெற்பயிரின் இலைகளை அழிக்கும் அந்துப்பூச்சிகளின் இலைச்சுருட்டுப் புழுக்களைக் கொல்லுவதற்காக, அவர்களுடைய பயிர்களுக்குப் பெருமளவில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துள்ளனர். என்றபோதிலும், அவை விளைவிக்கும் அரிசியின் அளவில் எந்தவொரு பாதிப்பும் இன்றியே, நெற்பயிர்கள் அவற்றின் இலைகளைப் பாதியளவு இழக்க முடியும் என்பதாக சமீபத்திய பரிசோதனைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. வியட்நாமைச் சேர்ந்த சில விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை—ஆசிய விவசாயிகள் பயன்படுத்தும் எல்லா பூச்சிக்கொல்லி மருந்துகளின் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையான பூச்சிக்கொல்லி மருந்தை—பருவகாலத்தின் முற்பகுதியில் தெளிக்கத் தேவையில்லை என்று உறுதியுடன் நம்பினர், விளைச்சல்களும் கடுமையாக ஒன்றும் பாதிக்கப்படவேயில்லை என்றும் கண்டறிந்தனர்.
மதம் மற்றும் அரசியலுக்கு மறுப்பு தெரிவித்தல்
தி ஆஸ்திரேலியன் செய்தித்தாளின்படி, “பொதுவாக ஆஸ்திரேலிய இளைஞனுக்கு” அரசியலிலோ, மதத்திலோ உண்மையான அக்கறை இல்லை. இம் முடிவு, யுனிவர்சிட்டி ஆஃப் சிட்னியைச் சேர்ந்த விரிவுரையாளர் டாக்டர் ஜெனிஃபர் போஸ் தொகுத்த, 13 மற்றும் 16 வயதுடைய மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின் அடிப்படையிலானது. அவ்விளைஞர்களின் முன்னுரிமைகள் இந்த முக்கியத்துவத்தின் இறங்கு வரிசையில் இருந்தன: “நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருப்பது, ஒரு நல்ல கல்வியைப் பெறுவது, ஒரு நல்ல வேலையைக் கொண்டிருப்பது, என்னுடைய திறமைகளை அபிவிருத்தி செய்வது, என் குடும்பத்துடன் நெருங்கியிருப்பது, எதிர்கால சந்ததிகளுக்காக பூமியைப் பாதுகாப்பது, விலங்குகளைப் பாதுகாப்பது, ஒரு நல்ல வீட்டைக் கொண்டிருப்பது, பிற நாடுகளுக்குப் பயணம் செய்வது, நிறைய பணம் சம்பாதிப்பது, தூய்மைக்கேட்டை நிறுத்துவதற்கு ஏதாவது செய்வது, திருமணம் செய்வது, வசதியற்றோருக்கு உதவுவது, என் தேசத்துக்கு உதவுவது, சமுதாயத்துக்குப் பயனுள்ள எதையேனும் செய்வது, பிற மக்களிடம் ஏதாவது செல்வாக்கு செலுத்துவது.” வரிசைப்படுத்தப்பட்ட அந்த 18 மதிப்பீடுகளில் மிகக் குறைந்த முக்கியத்துவமுடைய இரண்டு காரியங்கள், “என் மதத்தின் நியமங்களைப் பின்பற்றுவது,” மற்றும் “அரசியலில் மும்முரமாய் இருப்பது.”