தன் குழந்தைகளுடன் ஒரு தாயின் பிணைப்பு
அவளோ, ஈஸ்ட் நியூ யார்க் தெருக்களில் ஐந்து குட்டிகளோடு பிழைத்து வாழ முயல்கிற, தெருவில் திரியும், குட்டை மயிருள்ள, பெயரற்ற ஒரு பூனைதான். பாழடைந்ததும் கைவிடப்பட்டதும் அநேக சந்தேகத்திற்குரிய தீப்பிடித்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதுமான வாகன கொட்டில் ஒன்றில் அவள் தன் இருப்பிடத்தை அமைத்திருந்தாள். தன்னுடைய வளரும் குட்டிகளுக்கு ஊட்டமளிப்பதைச் சாத்தியமாக்கும்படி குப்பைக்கூளங்களின் துணுக்குகளுக்காக அவள் அந்த சுற்றுவட்டாரமெங்கும் அலைந்து தேடினாள்.
மார்ச் 29, 1996 அன்று காலை 6:06 மணிக்கு இதெல்லாம் மாறவிருந்தது. சந்தேகத்திற்குரிய தீயொன்று விரைவில் அந்த வாகன கொட்டிலைச் சூழ்ந்தது. பூனை குடும்பத்தின் இல்லம் எரிந்துகொண்டு இருந்தது. லாடர் கம்பெனி 175 செயல்பட்டு, விரைவில் அந்த நெருப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தீயணைப்பாளர்களில் ஒருவராகிய டேவிட் ஷானலி, பூனைக்குட்டிகளின் கதறல்களைக் கேட்டார். அவற்றில் மூன்றை அந்தக் கட்டடத்திற்கு வெளியேதானேயும், மற்றொன்றை அந்தத் தெருவில் முக்கால்வாசி தூரத்திலும், ஐந்தாவதை நடைபாதையிலும் கண்டார். அந்தப் பூனைக்குட்டிகள் தாமாகவே தப்பியிருக்க முடியாதளவுக்கு மிகச் சிறியவை. ஒவ்வொரு பூனைக்குட்டியின் தீப்புண்களும் மற்றொன்றுடையதைவிட அதிக கடுமையானவையாக இருந்தன; தாய் பூனை அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வெளியே கொண்டு சென்றதால், தப்புவதற்காக சில குட்டிகள் மற்றவற்றைவிட அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதாகக் கவனித்தார் ஷானலி.
அந்தத் தாய் இருந்த இடத்தைக் குறித்தும் அதன் கவனிப்பைக் குறித்தும் ஏப்ரல் 7, 1996-ன் நியூ யார்க் டெய்லி நியூஸ் பதிவு இந்த அறிக்கையைக் கொடுத்தது: “அருகிலுள்ள வெற்றிடத்தில் அந்த அம்மா வேதனையில் விழுந்து கிடப்பதைக் கண்டார் ஷானலி; அந்தக் காட்சி அவருடைய உள்ளத்தை நெகிழ்வித்தது. அவளுடைய கண் இமைகள் அந்தப் புகையின் காரணமாக வீக்கத்துடன் மூடியிருந்தன. அவளுடைய உள்ளங்கால்கள் மோசமாக வெந்துபோயிருந்தன. அவளுடைய முகத்திலும், காதுகளிலும், கால்களிலும் கோரமான பொசுங்கிய அடையாளங்கள் இருந்தன. ஷானலி ஓர் அட்டைப் பெட்டியைக் கண்டுபிடித்தார். அவர் மெதுவாக அம்மா பூனையையும் பூனைக்குட்டிகளையும் உள்ளே வைத்தார். ‘அவளால் கண்ணைத் திறக்கக்கூட முடியவில்லை,’ என்றார் ஷானலி. ‘ஆனால் அவள் தன் பாதத்தை வைத்து அவற்றை ஒவ்வொன்றாகத் தொட்டு எண்ணிப் பார்த்தாள்.’ ”
நார்த் ஷோர் அனிமல் லீக்குக்கு அவை வந்து சேர்ந்தபோது, நிலைமை ஆபத்தானதாகவே இருந்தது. அந்தப் பதிவு தொடர்ந்து சொன்னது: “அதிர்ச்சியைச் சமாளிப்பதற்கான மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. நுண்ணுயிர் எதிர் மருந்துகளால் நிரப்பப்பட்ட குழாய் ஒன்று அந்தத் தைரியமான பூனையின் நரம்பில் உட்செலுத்தும் வகையில் பொருத்தப்பட்டது. நுண்ணுயிர் எதிர் மருந்து கிரீம்கள் மிருதுவாக அவளது வெந்தப்புண்கள்மீது தடவப்பட்டன. பின்னர் சுவாசிக்க வைக்க உதவும்படி அவள் ஆக்ஸிஜன் டாங் கூண்டில் வைக்கப்பட்டாள்; அந்த விலங்கு கழகத்தின் பணியாளர் அனைவரும் மூச்சைப்பிடித்துக்கொண்டு இருந்தனர் . . . 48 மணிநேரங்களுக்குள், அந்தக் கதாநாயகி எழுந்து உட்கார்ந்தாள். அவளது வீங்கிய கண்கள் திறந்தன, எவ்வித சேதத்தையும் மருத்துவர்கள் காணவில்லை.”
சற்று நின்று சிந்தித்துப் பாருங்கள். தீக்கு அஞ்சும் தன் சுபாவத்துடன், புகை நிறைந்துள்ள, எரிந்துகொண்டிருக்கும் கட்டடத்திற்குள் கதறிக்கொண்டிருக்கும் தன் குட்டிகளை விடுவிப்பதற்காக உட்செல்லும் இந்தத் தைரியமுள்ள தாயை ஒரு கணம் உங்கள் மனக்காட்சிக்குக் கொண்டுவந்து பாருங்கள். உதவியற்ற தன் சிறு குட்டிகளை வெளியே கொண்டுவருவதற்காக ஒருமுறை உள்ளே போவது நம்புவதற்கரிய செயலாக இருக்கும்; அதை ஐந்து முறை செய்வது என்பது, அதுவும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய பாதங்களிலும் முகத்திலும் ஏற்படும் கூடுதலான தீப்புண்களின் வேதனையுடன்கூட என்பது கற்பனை செய்ய முடியாததாய் இருக்கிறது! தைரியமுள்ள அந்த விலங்கு ஸ்கார்லட் என்று அழைக்கப்பட்டது, ஏனென்றால் தீப்புண்கள், அடியிலிருந்த தோலை ஆழ்ந்த சிவப்பு, அல்லது சிவப்பு நிறமாகக் காண்பித்தன.
தன் குழந்தைகளுடன் ஒரு தாய்க்கு இருந்த பிணைப்பைப் பற்றிய இந்த நெகிழ்விக்கும் கதை, நார்த் ஷோர் அனிமல் லீக்கிலிருந்து உலகெங்கிலும் விரைவாக ஒலிபரப்பப்பட்டபோது, தொலைபேசி அழைப்பொலிகள் நிலையாக ஒலித்துக்கொண்டே இருந்தன. ஜப்பான், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து 6,000 பேருக்கும் அதிகமானோர் ஸ்கார்லட்டின் நிலைமையைக் குறித்து விசாரிக்கும்படி அழைத்தார்கள். சுமார் 1,500 பேர், ஸ்கார்லட்டையும் அவளுடைய குட்டிகளையும் தத்தெடுக்க முன்வந்திருக்கின்றனர். ஒரு பூனைக்குட்டி பின்னர் இறந்துவிட்டது.
ஸ்கார்லட், உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைத் தொட்டாள். ஒரு தாய்க்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் மத்தியிலுள்ள பிணைப்பைப் பற்றிய ஸ்கார்லட்டின் உதாரணத்தினால், இன்று கருவிலிருக்கும்போதே அல்லது துர்ப்பிரயோகத்தின் காரணமாக பிறந்து கொஞ்ச காலத்திலேயே தங்கள் குழந்தைகளை அழித்துவிடுகிற கோடிக்கணக்கான தாய்மாரின் இதயங்கள் நெருடப்படாதா என்று இது உங்களை யோசிக்க வைக்கிறது.