எமது வாசகரிடமிருந்து
இனிய பொழுது “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் இன்பமாய் பொழுதைக் கழிப்பது எப்படி?” (செப்டம்பர் 22, 1996) என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது போல, இளைஞர் மகிழுவதற்கு பல பாதுகாப்பான வழிகள் இருக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஓர் அருங்காட்சியகத்துக்கு, அல்லது ஒரு மிருகக்காட்சி சாலைக்கு, அல்லது ஓர் உல்லாசப் பயணத்துக்கு, அல்லது ஒரு விருந்துக்கூட்டத்துக்கும்கூட நாம் போகலாம். நம்மில் குறைந்தளவு பணவசதியை உடையவர்களும்கூட, கேம்ஸ் விளையாட, அல்லது ஒருவேளை உணவுக்காக நம் வீட்டுக்கு மற்ற இளைஞரை அழைப்பதன் மூலமாக இனிய பொழுதைக் கழிக்கலாம்.
வி. ஏ., பிரேஸில்
வீரப் பூனை செப்டம்பர் 22, 1996 தேதியிட்ட வெளியீட்டில் காணப்பட்ட “தன் குழந்தைகளுடன் ஒரு தாயின் பிணைப்பு” என்ற கட்டுரை எந்தளவுக்கு எனக்குப் பிடித்திருந்தது என்பதை உங்களிடம் நான் தெரிவித்தே ஆக வேண்டும். கட்டுக்கடங்கா பாலியல் நடவடிக்கைகள் பெருகிவரும் ஒரு நாட்டில் நான் வசித்துவருகிறேன். இங்கு பல இளம்பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்ளத் தயங்குவதில்லை. வீரப்பெருந்தகை ஸ்கார்லட் என்று பெயர்பெற்ற தாய் பூனை, மனசாட்சியுடைய ஒரு தாய்க்கு நேர்த்தியான முன்மாதிரியாய் இருப்பதாக நான் நம்புகிறேன்.
இ. பி., மாலி
ஸ்கார்லட்டின் கதையை வாசித்துக் கிளர்ச்சியுற்றேன். அவள், எரிந்துகொண்டிருந்த வாகன கொட்டில் ஒன்றிலிருந்து தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்ற, கொஞ்சமும் பயமில்லாத தீரத்தைச் செயலில் காட்டினாள். ஏராளமான பாடத்தை மனிதர் கற்றுக்கொள்ளக் காரணமாய் இருக்கும் ஒரு பூனையாக அவள் என்னை ஈர்த்துவிட்டாள். அப்படிப்பட்ட கட்டுரைகளை நீங்கள் பிரசுரிப்பதை மிகச்சிறந்ததாய் நான் நினைக்கிறேன்.
டி. டபிள்யூ., ஜெர்மனி
ஸ்கார்லட்டையும் அவளுடைய குட்டிகளையும் பற்றிய இதயத்தை நெருடிய உங்கள் கட்டுரை, நான் இதுவரை வாசித்திராத, கருச்சிதைவு பற்றிய உள்ளத்தை உருக்கும் மிகச் சிறந்த கட்டுரையாய் இருந்தது.
ஜே. ஜி., ஐக்கிய மாகாணங்கள்
அந்தக் கட்டுரையை வாசித்தபொழுது, நான் கண்ணீர் சிந்தினேன். எல்லா விதமான விலங்குகளிடத்திலும் எப்பொழுதுமே நான் நேசம் காட்டியிருக்கிறேன். அவற்றின் மூலமாக யெகோவா நமக்குக் கற்பிக்கும் பாடங்களையும் மதித்துணருகிறேன். “மதிநுட்பமுள்ள” மனிதர் அதைப்போன்ற அக்கறையையும் கவனிப்பையும் தங்கள் சந்ததியிடம் காட்டுவதில்லை என்பதை அறிவது என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது.
சி. சி., ஐக்கிய மாகாணங்கள்
டின்னிடஸ் “டின்னிடஸ்—சகித்துக்கொண்டு வாழவேண்டிய ஓசையா?” (செப்டம்பர் 22, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. அந்த நோயால் ஆறு ஆண்டுகளாக நான் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். என் நிலை குறிப்பாக என்னவென்று எந்த டாக்டருக்கும் சொல்ல முடியாமல் இருந்ததால், சிகிச்சையளிக்கப்பட முடியாத ஒரு நோய் எனக்கிருப்பதாக நான் பயந்தேன். உங்கள் கட்டுரையை வாசித்தபோதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. இப்போது அதைச் சகித்துக்கொள்ள முயன்றுவருகிறேன்; ஏனெனில் வியாதிப்பட்டிருப்பதாக எவருமே சொல்லாத, கடவுளுடைய புதிய உலகை எதிர்நோக்கியிருக்கிறேன்.—ஏசாயா 33:24.
கே. எஃப்., இத்தாலி
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பிரச்சினை எனக்கு ஆரம்பித்தது. இந்த இரைச்சல் தொடர்ந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது கொடுமையாய் இருந்தது! ஆனால் இன்றோ, இரைச்சல்மிக்க காதுடன் வாழக் கற்றுவருகிறேன். யெகோவாவின் உதவியினால் நான் மீண்டும் அமைதியைக் கேட்கும் காலம் வருவதை எதிர்நோக்கியிருக்கிறேன்!
ஜே. எஸ்., செக் குடியரசு
கடந்த இரண்டரை ஆண்டுகளாக டின்னிடஸால் நான் அவதிப்பட்டுவருகிறேன்; மூளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் கதிரியக்கப் படம் (CT scan) உட்பட எல்லாவிதமான மருத்துவ சோதனைகளும் நடத்தப்பட்டுவிட்டன. கவலையும் மன உளைச்சலும் என் வாழ்வில் ஏமாற்றமடையச் செய்யும் பிரச்சினைகளாக இருந்தன. உங்கள் கட்டுரையை வாசித்ததும், அந்த வேதனையைச் சகித்துக்கொள்ள நான் கற்றுவருகிறேன்.
எம். ஜி. டி. எஃப்., இலங்கை
என் கணவர் டின்னிடஸால் அவதிப்படுகிறார். மிகையான மனச்சோர்வாலும் சிரமப்படுகிறார். அவரிடம் இன்னும் பரிவோடு நடக்க இந்தத் தகவல் எனக்கு உதவியிருக்கிறது. சில சமயங்களில், அந்த இரைச்சல் அவருக்கு மிகவும் தொந்தரவாய் இருக்கிறது; நான் அவரிடம் எந்தளவுக்கு இரக்கமாய் இருந்திருக்க வேண்டுமோ அந்தளவுக்கு இரக்கமாய் இருக்கவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரை எழுதப்பட்ட தர்க்கரீதியான விதத்தை நான் உண்மையிலேயே மதித்துணருகிறேன். டின்னிடஸால் அவதிப்படும் துணைகளையுடையவர்களுக்கு, இன்னும் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களாக செயல்பட இந்தக் கட்டுரை உதவும் என்று நான் நிச்சயமாய் இருக்கிறேன்.
எல். எஃப்., ஐக்கிய மாகாணங்கள்