டின்னிடஸ்—சகித்துக்கொண்டு வாழவேண்டிய ஓசையா?
பீதோவன், ஜெர்மானிய எழுத்தாளரான ஜியோத, இத்தாலிய சிற்பியான மைக்கலான்ஜலோ ஆகிய அனைவருக்கும் இது ஒருவேளை இருந்திருக்கலாம். அதேபோன்று பூர்வ எகிப்தியர்களும் அதைப் பற்றி அறிந்திருக்கலாம்; “சூனியம் வைக்கப்பட்ட காது” என்பதாக அந்த வியாதியை அநேகமாக அவர்கள் குறிப்பிட்டிருக்கலாம். இன்று அது டின்னிடஸ் என்பதாக அழைக்கப்படுகிறது; மேற்குநாட்டவர்களில் 15 சதவீதத்தினர் அதை அடிக்கடியோ எப்பொழுதுமோ கொண்டிருக்கின்றனர். 1,000 பேரில் சுமார் 5 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தொல்லைபடுத்தும் இந்த வியாதி உண்மையிலேயே என்ன? “டின்னிடஸ்” என்ற வார்த்தை “மணிபோல் ஒலிப்பது” என்று அர்த்தப்படுத்தும் டினிரெ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது; “எந்த வெளிப்புற தூண்டுதல்களினாலும் உண்டாக்கப்படாத காதோசை,” என்பதாக அது விளக்கப்படுகிறது. கண்டுபிடித்தல் மற்றும் குணப்படுத்துதலுக்கான மெர்க் கையேடு (ஆங்கிலம்) என்பதன் பிரகாரம், அது ஒருவேளை “ரீங்கார ஓசை, மணியோசை, முழக்க ஓசை, சீழ்க்கை ஓசை அல்லது நீராவி வெளியேறும் ஓசை ஆகியவையாக இருக்கலாம் அல்லது காலத்திற்கேற்ப வித்தியாசப்படும் அதிக சிக்கலான ஓசைகளையும் உள்ளடக்கலாம். அது அவ்வப்போது வருவதாகவோ எப்போதும் வருவதாகவோ துடிப்பு சார்ந்ததாகவோ இருக்கலாம்.” இந்த ஓசை, கேட்பதற்கே கடினமாயிருக்குமளவுக்கு லேசாகவும் இருக்கலாம், தொந்தரவு உண்டாக்குமளவுக்கு சப்தமாகவும் இருக்கலாம். பாதிக்கப்பட்டிருப்போர் தடுத்துநிறுத்த முடியாத ஓர் ஓசையாகவும் இது இருக்கிறது. இவ்வாறு, மனத்துயரம், தூக்க பிரச்சினைகள், வலி, கவனம் செலுத்துவதில் கஷ்டங்கள், களைப்பு, பேச்சுத்தொடர்பு பிரச்சினைகள், மனச்சோர்வு போன்ற மற்ற அநேக பக்க விளைவுகளை, தணியாத ஓசை உண்டாக்கலாம்.
இந்த வியாதியை எது உண்டாக்குகிறது?
டின்னிடஸினால் தாக்கப்பட்ட பிறகு, என்ன தவறு ஏற்பட்டுவிட்டதென்று பாதிக்கப்பட்டவர் பயத்தோடு ஒருவேளை யோசிக்கலாம். பெருமூளை இரத்தக்கசிவு தனக்கு ஏற்பட்டுவிட்டதா, மனக்கோளாறினால் தான் அவதிப்படுகிறாரா அல்லது ஒரு கட்டியைப் பெற்றிருக்கிறாரா என்றெல்லாம் நினைத்து அவர் ஒருவேளை பயப்படலாம். நல்லவேளையாக, டின்னிடஸ் அரிதாகவே ஓர் ஆபத்தான வியாதியால் உண்டாகிறது. சிலர் தலையில் அடிபட்ட பிறகு டின்னிடஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஸ்வீடனிலுள்ள கோடேபோர்க்கைச் சேர்ந்த பேராசிரியரும் டின்னிடஸ் ஆராய்ச்சியாளரும் நிபுணருமான ஆல்ஃப் ஆக்சல்சோன், விழித்தெழு!-விடம் இவ்வாறு சொன்னார்: “ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகள் அதிக அளவில் உட்கொள்ளப்படும்போது டின்னிடஸ் ஒரு தற்காலிக பக்கவிளைவாக ஏற்படலாம்.”
எனினும், மொத்தத்தில், டின்னிடஸ் காது கோளாறினால் உண்டாவதாகும். பேராசிரியரான ஆக்சல்சோன் இவ்வாறு விளக்கினார்: “உள்செவிப் பகுதியான நத்தை எலும்பில்தான் பொதுவாக பிரச்சினை இருக்கிறது; அது சுமார் 15,000 நுண்ணிய உணர் மயிர் செல்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சில சேதமடைந்திருந்தால், நரம்பு சிக்னல்களின் பாய்வை சமநிலையற்ற விதத்தில் அனுப்புகின்றன, பெறுகின்றன. இது பாதிக்கப்பட்டவரால் ஓசையாக உணரப்படுகிறது.”
அப்படிப்பட்ட காது கோளாறுக்கு காரணம் என்ன? பேராசிரியர் ஆக்சல்சோனின்படி, டின்னிடஸுக்கு ஒரு காரணம் சப்தமான ஓசைகளைக் கேட்பதாகும். உதாரணத்திற்கு, ஸ்டீரியோ ஹெட்ஃபோன்களை உபயோகிப்போர், உயர்ந்த-டெசிபெல் அளவுகளில் இசையை ஒலிக்கச்செய்வதன் மூலம் தங்களுக்கே தீங்கு விளைவித்துக்கொள்கின்றனர். டின்னிடஸ் ஒரு சாத்தியமான விளைவாக இருக்கலாம்.
சந்தேகமில்லாமல், டின்னிடஸுடன் வாழ்வது (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் ரிச்சர்ட் ஹாலம்மினால் சொல்லப்பட்டுள்ள குறிப்பை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நன்மையானது: “உடல், முழுமையாகவே மௌனமான ஓர் இடமல்ல, ஆகவே குறிப்பிட்ட அளவிலிருக்கும்போது ‘டின்னிடஸ்’ இயல்பானதுதான். தசைகள், எலும்புகள், இரத்தம் மற்றும் காற்றின் இயக்க அசைவுகளால் ஓசைகள் உண்டாகின்றன. . . . தினசரி சூழ்நிலைகளில், இந்தப் பின்னணி ஓசைகள் சுற்றுப்புறத்தின் அதிக சப்தமான ஓசைகளால் கேட்கப்படாமல் செய்யப்படுகின்றன—அவை வெறுமனே கேட்கப்படுவதில்லை.” இந்தக் கட்டுரையை வாசித்திருப்பது, அப்படிப்பட்ட பின்னணி ஓசைகளைக் குறித்து இன்னுமதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவியிருக்கும். எனினும், அவை பெரும்பாலான ஜனங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை.
எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
இந்த வியாதியினால் மிகவும் கடுமையாக நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போது என்ன? உங்கள் டாக்டருடன் தொடர்புகொள்வதே நீங்கள் செய்யவேண்டிய முதலாவது காரியம். உங்களுக்கிருக்கும் அறிகுறிகளுக்குக் காரணமான கோளாறுக்கு சிகிச்சை அளிக்கப்பட முடியுமா என்பதைக் கண்டுபிடிக்க அவர் உங்களுக்கு உதவுவார். துக்ககரமாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்த ஓசைக்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் அதை சகித்துக்கொண்டு வாழ்வதற்கு உங்களுக்கு உதவ அநேக காரியங்கள் செய்யப்படலாம்.
▪ இரணசிகிச்சை: தி ப்ரிட்டிஷ் டின்னிடஸ் அஸோஸியேஷனால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் சிற்றேடான டின்னிடஸ் (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “சிலசமயங்களில் டின்னிடஸ் நடுச்செவி கோளாறினால் உண்டாகிறது, எப்போதாவது காதிலேயோ அதற்குப் பக்கத்திலேயோ உள்ள இரத்தக் குழாய்கள் அல்லது தசைகளின் கோளாறினால் உண்டாகிறது. இப்படிப்பட்ட மிக அரிய சந்தர்ப்பங்களின்போது இரணசிகிச்சையின் மூலம் டின்னிடஸை முழுமையாகவே அகற்றிவிடும் சாத்தியம் இருக்கிறது.”
▪ மருந்து மருத்துவம்: பாதிக்கப்பட்டவர் தூங்க கஷ்டப்பட்டாலோ கவலை, பதற்றம் அல்லது சோர்வைக் கொண்டிருந்தாலோ, இந்த அறிகுறிகளை நீக்க டாக்டர் தூக்க மருந்துகளையோ உளச்சோர்வு போக்கிகளையோ பரிந்துரைக்கலாம்.
▪ கேட்கும் கருவிகளும் “மாஸ்குகளும்”: கேட்குமாற்றல் சிறிது குறைவுபட்டால், கேட்கும் கருவி அதிக உபயோகமானதாக இருக்கும். பார்ப்பதற்கு கேட்கும் கருவியைப் போன்றே இருக்கும் மாஸ்கர் என்ற மற்றொரு கருவியும் இருக்கிறது. டின்னிடஸ் ஓசைகள் கேட்கப்படாமலிருக்க செய்யும் ஒரு பின்னணி ஓசையை அது உண்டாக்குகிறது. எனினும், சில சமயங்களில், வெறுமனே ரேடியோவை ஒலிக்க செய்வதோ ஃபான்களை ஓடச்செய்வதோ அதேபோன்ற விளைவை உண்டாக்கலாம்.
▪ மற்ற சிகிச்சைகள்: பேராசிரியரான ஆக்சல்சோன் விழித்தெழு!-விடம் இவ்வாறு சொன்னார்: “அதி அழுத்த ஆக்ஸிஜன் தெரபி சில நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கலாம். இது பாதிக்கப்பட்டவர் சுத்தமான பிராணவாயு உள்ள பிரஷ்ஷர் சேம்பரில் வைக்கப்படுவதை உட்படுத்துகிறது. அது உட்செவியை ஒருவேளை சீக்கிரமாக குணப்படுத்தலாம்.” சில நோயாளிகளுக்கு டின்னிடஸ் அறிகுறிகள், பதற்றமாகவோ கவலையாகவோ இருக்கும்போது இன்னும் மோசமாவதாகத் தோன்றுவதால், சில டாக்டர்கள் அநேக ஓய்பாடு-பயிற்றுவிப்பு சிகிச்சைகளை (relaxation-training therapies) பரிந்துரைத்திருக்கின்றனர். a எனினும், இயன்ற அளவு ஓய்வெடுக்க கற்றுக்கொள்வதும் சரீர மற்றும் மன சோர்வை தவிர்ப்பதும் உதவிகரமாக இருக்கலாம்.
நோயை சகித்துக்கொண்டு வாழ்வது
இதுவரையாக, டின்னிடஸுக்கு எந்த உண்மையான பரிகாரமும் சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்படுமென்று தோன்றவில்லை. ஆகவே டின்னிடஸ், சகித்துக்கொண்டு வாழ நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் ஓசையாக இருக்கலாம். டின்னிடஸை சகித்துக்கொண்டு வாழ்தல் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “நானும் என்னுடன் வேலை செய்பவர்களும், டின்னிடஸுக்கான பொதுவான பிரதிபலிப்பு, படிப்படியாக முன்னேற்றமடையும் சகிப்புத்தன்மை என்பதாக உறுதியுடன் நம்புகிறோம்.”
ஆம், ஓசையை புறக்கணிக்க வேண்டுமென்று, கவனம் செலுத்துவதற்கு தகுதியற்ற ஒன்றாக கருதவேண்டுமென்று, உங்கள் மூளைக்கு நீங்கள் கற்பிக்கலாம். நீங்கள் இரைச்சல் நிறைந்த சுற்றுப்புறத்தில் வாழ்கிறீர்களா? அல்லது ஒரு ஃபானையோ ஏர் கண்டிஷனரையோ பயன்படுத்துகிறீர்களா? முதலில், அப்படிப்பட்ட ஓசைகள் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கும், ஆனால் கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் வெறுமனே அதைப் புறக்கணித்து விட்டீர்கள். உண்மையில், அப்படிப்பட்ட ஓசைகளோடு தூங்கவும்கூட நீங்கள் ஒருவேளை கற்றுக்கொண்டிருப்பீர்கள்! அதேவிதமாக, உங்களுக்கிருக்கும் டின்னிடஸுக்கு அதிக கவனம் செலுத்தாமலிருப்பதையும் உங்களால் கற்றுக்கொள்ள முடியும்.
டின்னிடஸ் என்பது கடவுளுடைய வரவிருக்கும் புதிய உலகத்தின் வருகைவரை சகித்துக்கொள்ளப்பட வேண்டிய அநேக வியாதிகளில் ஒன்றாகும்; அங்கே ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லமாட்டார்கள்.’ (ஏசாயா 33:24) அதுவரையாக, டின்னிடஸ் சோர்வுண்டாக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கலாம், ஆனால் அது உங்களது வாழ்க்கையை சீரழிக்கவோ ஆதிக்கம் செலுத்தவோ வேண்டியதில்லை. இந்த ஓசையை சகித்துக்கொண்டு வாழ உங்களால் கற்றுக்கொள்ள முடியும் என்பதைக் குறித்து நிச்சயமாக இருங்கள்!
[அடிக்குறிப்பு]
a அப்படிப்பட்ட சிகிச்சை பைபிள் நியமங்களுக்கு முரண்பாடாக இல்லை என்பதை ஒரு கிறிஸ்தவர் நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்ப வேண்டும். உதாரணத்திற்கு, பிப்ரவரி 22, 1984, விழித்தெழு! (ஆங்கிலம்) பிரதியிலுள்ள ஆட்டோஜீனிக் பயிற்சியின்பேரிலான கட்டுரைகளைக் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
தகுதிபெற்ற மருத்துவர் ஒருவரால் பரிசோதனை செய்துகொள்வதே டின்னிடஸை சகித்துக்கொண்டு வாழ கற்றுக்கொள்வதன் முதல் படியாக இருக்கும்