உலகத்தைக் கவனித்தல்
தேவைக்கு மிகுதியான பால் கீழே ஊற்றப்பட்டது
கடுமையான உணவு பற்றாக்குறைகள் இருந்தபோதிலும், கடந்த ஐந்து வருடங்களில் தென்னாப்பிரிக்க பால் பண்ணைகளால் லட்சக்கணக்கான லிட்டர் பால் கீழே ஊற்றப்பட்டது. இந்தப் பால் பண்ணைகள் பால் பண்ணை வாரியத்தால் ஒரு வரி விதிக்கப்படுகின்றன. இந்தப் பால் பண்ணை வாரியம் தேவைக்கதிகமான பாலை விநியோகம் செய்ய முன்னேற்பாடு செய்திருக்கவேண்டும். ஆனால் அது அவ்வாறு செய்யாததனால், தேசீய பால் விநியோகஸ்தர் சங்கத்தின் அதிகாரி ஒருவர் சொன்னார்: “நாங்கள் என்ன செய்யமுடியும்? நாங்கள் கீழேதான் ஊற்றியாகவேண்டும். அதை இலவசமாக கொடுப்பதனாலோ இதை எடுத்துக்கொண்டு போவதற்காக செலவு செய்வதனாலோ எங்களுடைய சொந்த பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்துவது பொருளாதாரரீதியில் புத்தியுள்ள காரியமல்ல.” மறுபட்சத்தில் மற்ற நிறுவனங்கள் இந்த வீணடிப்பைப்பற்றி வருத்தம் தெரிவித்தன. “இலட்சக்கணக்கான தென்னாப்பிரிக்க முதியோர்கள் பிழைத்திருப்பதற்கான குறைந்தபட்ச தேவைகளை வாங்குவதற்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமயத்தில்” பால் கீழே ஊற்றப்படுகிறது என்று முதியோர்களுக்கான மன்றம் (The Council for the Aged) சொல்கிறது. (g92 11/22)
மேக அறுவடை
சிலியின் வறுமையில் வாடிய சுங்குங்கோ என்ற சிறிய மீன்பிடி கிராமத்தில், வருஷங்களாக சுத்தமான குடிநீர் இல்லாதிருந்தது. ஆனால் அது சமீபத்தில் மாற்றப்பட்டது, குறிப்பிடத்தக்க ஒரு தண்ணீர் சேகரிக்கும் முறைக்கு நன்றி. இப்பகுதியில் மழை மிகவும் குறைவு, ஆனால் பசிபிக் பெருங்கடலிலிருந்து அடிக்கடி மூடுபனி திரண்டு வருகிறது. இந்தக் கிராமத்துக்குமேல் 800 மீட்டர் மலைகளின் உயரே கடந்து செல்லும்போது இம்மூடுபனி குறிப்பாக அடர்த்திமிகுந்ததாக இருக்கிறது. இங்கு கனடா மற்றும் சிலி போன்ற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஒரு குழு, இந்த மேகங்களிலிருந்து தண்ணீர் அறுவடை செய்ய அமைக்கப்பட்ட, மிகச் சிறிய கண்ணிகளைக்கொண்ட 50 பெரிய பிளாஸ்டிக் வலைகளை விரித்தனர். கண்ணிகளின்மேல் சிறுதுளிகள் சேரும்போது, அவை ஒன்றுசேர்ந்து வலையின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயினுள் வடிந்தோடுகின்றன. இந்தக் குழாய்களெல்லாம் ஒன்றுசேர்ந்து கிராமத்துக்குத் தண்ணீரைக் கொண்டுச்செல்கின்றன. மின்சக்தியே பயன்படுத்தப்படாமல், எளிதில் பராமரிக்கப்படக்கூடிய இந்த முறை சுங்குங்கோவில் குடியிருக்கும் 350 ஆட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு சுமார் 25 லிட்டர் சுத்தமான குடிநீரைக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு திட்டத்தினால் ஆறு கண்டங்களிலுள்ள சுமார் 22 நாடுகள் பயனடையக்கூடும் என இத்திட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் இது ஒரு புதுக் கருத்தல்ல; ஆயிர வருடங்களாக மரங்கள் மூடுபனியிலிருந்து தண்ணீர் அறுவடை செய்துகொண்டிருக்கின்றன. (g92 12/8)
சர்க்கரைப்பாகு ஆறு
தாய்லாந்தின் நாம் பொன் ஆறு, அதன் கரை நெடுகே உள்ள நூற்றுக்கணக்கான கிராமவாசிகளுக்கு உணவின் முக்கிய மூலமாக இருந்துவருகிறது. இது சமீபத்தில் திடீரென அடர்த்தி மிகுந்ததாகவும் ஒட்டக்கூடியதாகவும் மாறிற்று. ஏசியாவீக் பத்திரிகையின்படி, ஓர் உள்ளூர் சர்க்கரைத் தொழிற்சாலையின் ஒரு பதனக்குழியில் திடீரென ஒரு கசிவு ஏற்பட்டு, 9,000 டன் சர்க்கரைப்பாகு இந்த ஆற்றில் சென்று கலந்தது. குமட்டுமளவுக்கு இனிப்பாக இருந்த இந்தச் சிந்தலானது ஆற்றின் பிராணவாயுவை இழக்கச் செய்ததனால், அது நீரோட்டத் திசையில் பரவிச்சென்ற ஒவ்வொரு கிலோமீட்டர் தொலைவிற்கும் மதிப்பிடப்பட்ட 1,000 பவுன்ட் மீன்களைக் கொன்றது. “தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு நஷ்ட தடுப்பு முயற்சி” என்று ஏசியாவீக் அழைத்த முயற்சியில் அதிகாரிகள் அருகிலிருந்த ஓர் அணையிலிருந்து 840 லட்சம் கனமீட்டர் தண்ணீரைத் திறந்துவிட்டு சர்க்கரைப்பாகைத் துப்புரவு செய்ய முயற்சி செய்தனர். நீரோட்டத்திசையில் 600 கிலோமீட்டர் தொலைவிற்கும் வேறு இரண்டு ஆறுகளுக்கும் சர்க்கரைப்பாகைப் பரவச்செய்வதிலேயே இத்திட்டம் வெற்றிபெற்றது. இந்த மூன்று ஆறுகளும் மீட்கப்படவேண்டுமானால் குறைந்தது 12 வருடங்கள் தேவைப்படுகிறது என்பதாக ஒரு சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பிடுகிறார்.
வெளிநாட்டுதவி—யார் எதைப் பெறுகிறார்கள்?
வெளிநாட்டுதவி ஏழைகளுக்கு அதிக பயனளிக்கிறதா? ஐ.நா.-வின் ஹியூமன் டிவலப்மென்ட் ரிப்போர்ட் 1992 சொல்கிறபடி வெளிநாட்டுதவியில் 27 சதவீதம் மட்டுமே உலகின் மக்கள் தொகையில் மிக ஏழைகளில் 72 சதவீதத்தினர் வாழும் பத்து நாடுகளுக்குச் செல்கிறது. வளரும் உலகின் பெரிய பணக்காரர்களில் 40 சதவீதத்தினர், மிக ஏழைகளில் 40 சதவீதத்தினருக்குக் கொடுக்கப்படும் உதவியைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம் பெறுகின்றனர். உலகின் ஏழைகளில் சுமார் பாதிபேர் வாழும் தென்னாசிய நாடுகள், ஓர் ஆளுக்கு 5 டாலரை உதவியாக பெறுகின்றன. தென்னாசியாவைவிட மூன்று மடங்கு அதிக தலைவீத வருமானமுடைய மத்திய கிழக்கு நாடுகள் ஆளுக்கு 55 டாலர் பெறுகின்றன. போர்க்கருவிகளில் அளவுக்குமீறி செலவு செய்யும் நாடுகள் மிக அளவுடன் செலவுசெய்யும் நாடுகளைவிட இரண்டு மடங்கு அதிக தலைவீத உதவி பெறுகின்றன என்பதாக அறிக்கை மேலும் சொல்கிறது. நிதியின் மிகக் குறைந்த பகுதி (இருமுனை உதவியின் [Bilateral aid] சுமார் 7 சதவீதமும் பன்முனை உதவியின் [Multilateral aid] 10 சதவீதமும்) மட்டுமே கல்வி, சுகாதார பராமரிப்பு, சுத்தமான குடிநீர், சூழல் துப்புரவு, குடும்ப கட்டுப்பாடு மற்றும் சத்துணவு திட்டங்கள் போன்ற மனித அடிப்படை தேவைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. (g92 11/22)
நெடு-நாள் வாழும் ஜப்பானியர்கள்
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி உலக நாடுகளிலனைத்திலுமே ஜப்பானியர்கள் அதிக வாழ்க்கைக்கால எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றனர். ஜப்பானில் பெண்களின் சராசரி வாழ்க்கைக்கால எதிர்பார்ப்பு 82.5 வருடங்களும், ஆண்களுக்கு 76.2 வருடங்களும் ஆகும். பெண்களின் இரண்டாவது அதிகபட்ச வாழ்க்கைக்கால எதிர்பார்ப்பு 81.5 வருடங்கள் பிரான்ஸிலும் அதைத் தொடர்ந்துவரும் ஸ்விட்ஸர்லாந்தில் 81.0 வருடங்களாகும். ஆண்களுக்கு இரண்டாவது இடம், 75.4 வருடங்கள் ஐஸ்லாந்திலும் அதைப் பின்தொடர்ந்துள்ள கிரீஸில் 74.3 வருடங்களாகும். அக்கறையூட்டும் மற்ற உண்மைகளையும்கூட இந்த 350-பக்க புள்ளியியல் வருடாந்தர புத்தகம் கொடுத்தது. உலகில் மிக உயர்ந்த கருவுறுதிறன் வீதம் (Fertility rate) உள்ள நாடு ருவாண்டா. இங்கு ஒவ்வொரு பெண்ணும் சராசரி 8.3 குழந்தைகளைக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு 1,00,000-ஆட்களுக்கும் 1.3 என்ற உலகிலேயே மிகக் குறைந்த தற்கொலை வீதம் பஹாமாவிலும் 1,00,000-க்கு 38.2 என்ற மிக அதிக தற்கொலை வீதம் ஹங்கேரியிலும் காணப்படுகிறது. தென்னமெரிக்காவின் சிறிய நாடாகிய சூரினாமில் மிக அதிக மோட்டார் வாகன விபத்து மரணங்கள், 1,00,000-க்கு 33.5 என்ற வீதத்தில் காணப்படுகிறது. மிகக் குறைவு? மால்டா, 1,00,000 ஆட்களுக்கு 1.6 வாகன விபத்து மரணம் மட்டுமே. (g92 11/22)
சிலந்தி பயம் தேவையில்லை
சிலந்தி பயம் “பெரும்பாலும் அறியாமையின் விளைவு,” என்று செளத் ஆப்பிரிக்கன் பேனரோமா பத்திரிகை கூறுகிறது. ஆப்பிரிக்க சிலந்திகளின்பேரில் ஒரு முதன்மையான நிபுணர் டாக்டர் ஆன்ஸி டிப்பனார் செய்த ஆராய்ச்சியின்மீது அறிக்கை செய்யும்போது, உலகில் அறியப்பட்ட சிலந்தியினங்களில் 0.2 சதவீதத்திற்குக் குறைவானவையே மனிதனுக்கு ஆபத்தானவை என அது குறிப்பிடுகிறது. அவற்றின் தகுதியான இடத்தில், இந்தச் சிறிய படைப்புகள் எதிரிகளைப்போலல்ல, ஆனால் நண்பர்களைப்போல பாவிக்கப்படவேண்டும். பயிர்களின் நோய்ப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அவை விலைமதிப்பற்றவையாக இருக்கின்றன. ஏதோவொரு இனத்தைச் சேர்ந்த ஒரு சிலந்தி நாள் ஒன்றுக்கு 200 நோய்ப்பூச்சியின் புழுக்களைக் கொல்லக்கூடும். உதாரணமாக, சிலந்திகள் ஸ்ட்ராபெரியின் தோட்டத்தில் அனுமதிக்கப்படுமானால் அதன் அறுவடை, சிலந்திகள் கொல்லப்பட்ட தோட்டங்களைவிட ஏக்கருக்கு 2.4 டன் அதிகம் கிடைக்கக்கூடும். “விவசாயிகள் சிலந்தி இனத்தொகையைப் பாதுகாக்கவேண்டும், இதன்மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விலையுயர்ந்த பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தை மட்டுப்படுத்தலாம்,” என்பதாக அந்தக் கட்டுரை மேலும் கூறுகிறது. (g92 11/22)
ஆக்கிரமிப்பவரால் சிக்கல்
கொடுமையான வறட்சியின் முக்கிய காரணமாக, தென்னாப்பிரிக்காவின் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய கிராமப்புற வீடுகளை விட்டுவிட்டு வேலை தேடி நகர்ப்புறங்களில் குடியேறிக்கொண்டிருக்கின்றனர். நிதானமாகச் சொல்லவேண்டுமானால், பின்னடைந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலைமையில் நகர்ப்புறத்தில் வேலையைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் நல்லதாக இல்லை. தற்காலிக குடிசைகளைக்கொண்ட ஆக்கிரமிப்புக் குடியேற்றங்கள் பெருகிவிட்டன. அருகிலுள்ள குடியிருப்புகளின் சொந்தக்காரர்கள் சொத்துக்களின் விலைமதிப்புத் திடீரென குறைவதைப்பற்றியும் திடீரென அதிகரித்த திருட்டைப்பற்றியும் முறையிடுகின்றனர். அரசு இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்குக் குறைந்த செலவு குடியிருப்புகளைக் கொடுக்கவேண்டும் என்பதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் சவேட்டன் செய்தித்தாள் குறிப்பிடுவதுபோல, அப்படிப்பட்ட திட்டம் “செலவு-குறைந்ததாகவோ”—அல்லது சுலபமான ஒன்றாகவோ இருக்காது. நாடு முழுவதும் 70,00,000 ஆட்கள் ஆக்கிரமிக்கப்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர் என ஆராய்ச்சிக் குழு ஒன்று மதிப்பிடுகிறது. (g92 12/8)
காபி ஒரு மருந்தாகவா?
விளையாட்டு வீரர்கள், தங்கள் செயலாக்கத்தை அதிகரிக்க ஒரு போதை மருந்தைப் பயன்படுத்துவதைப்போல காபியை—சிலசமயங்களில் பயன்படுத்துவதுபோல—பயன்படுத்தமுடியும், என பிரேஸிலின் ஒரு பேராசிரியர் கூறினார். ஓ எஸ்டாடோ டே S. பாவ்லோ செய்தித்தாளின்படி, லூயிஷ் ஓஷ்வால்டு ருத்ரிகிஸ், மைனாஸ் கெராய்ஸின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கல்லூரியின் பேராசிரியர், கூறுகிறார்: “என்னுடைய ஆராய்ச்சியில் நான் பரிசோதித்த விளையாட்டு வீரர்கள் சட்டவிரோதம் என கருதப்பட்ட அளவைவிட மிகக்குறைந்த காஃபின் உட்கொண்டிருந்தபோதிலும், போதையூட்டப்பட்ட நிலையில் இருந்தனர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” சர்வதேசீய ஒலிம்பிக் கமிட்டி 750 மில்லிகிராம் காஃபினின் வரம்பு என்பதாக நிர்ணயித்திருக்கிறது. இது 11 கப் திடமான காபி ஆகும். மருத்துவரின்படி, காபியிலுள்ள காஃபின் காரணமாக நெடுதூர ஓட்டக்காரர்கள் தங்களுடைய செயலாக்கத்தை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர். (g92 12/8)
மருத்துவர்களுக்கு ஒற்றுணர்வைப் போதித்தல்
அதிக ஒற்றுணர்வைக் கொண்டிருக்கும்படி மருத்துவர்களுக்குப் பயிற்சியளிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள சில மருத்துவமனைகளும் மருத்துவக் கல்லூரிகளும் வினோதமான செயல்முறைகளை அமுல்படுத்துகின்றன. நியூ யார்க் நகரத்திலுள்ள ஒரு மருத்துவமனை நோயாளிகளின் பாத்திரத்தில் நடிக்க நடிகர்களை வாடகைக்கு அமர்த்துகிறது. பயிற்சியிலுள்ள மருத்துவர் ஒருவர் நோயாளியின் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் வீடியோவில் பதிவுசெய்யப்படுகிறார். பின்பு அவர் தான் கையாளும் விதத்தை அந்த வீடியோவில் பார்க்கிறார். “அவர்கள் ஒளிநாடாக்களில் காண்பதைக் குறித்து வியப்புற்றுத் தாழ்ச்சியடையச் செய்யப்படுகிறார்கள்,” என்பதாக டாக்டர் மார்க் ஷ்வோர்ட்ஸ், மருத்துவமனையின் மருத்துவர் தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறுகிறார். “அவர்கள் சொல்கிறார்கள், ‘நான் இப்படிப்பட்ட வெளிக்காட்டுதலையா என் முகத்தில் எப்பொழுதும் கொண்டிருக்கிறேன்?’ ‘உண்மையிலேயே நான் அவ்வளவு கொடூரமானவனா?’” மற்றொரு மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளிகளைப்போல் வந்து சிகிச்சை பெறும் நிலையில் இருந்தால் எவ்வாறு உணருவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள மருத்துவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இன்னும் மற்றொரு மருத்துவமனை அரசு பிரதிநிதிகளின் இருப்பிடத்தில் சேவை செய்யும் மருத்துவர்களை முதியோரிடம் இரக்கம் காட்டுவதற்குப் பயிற்றுவிப்பதற்காக, மங்கலான ஒட்டுவில்லை, காதடைப்பான், ரப்பர் கையுறைகள் போன்றவற்றை அணிவித்து தற்காலிகமாக அவர்களுடைய புலனுணர்வுகள் மந்தமாக்கப்பட்டன. இந்தப் பயிற்சியாளர்கள் தங்களுடைய மூட்டுகளை விறைப்படையச் செய்ய சிம்புகளை அணிந்து, காய்ப்புகள் மற்றும் புண்ணடித்தசைகள் போல உணர்ச்சிப்பெற கடினமான பட்டாணிகளைத் தங்கள் காலணிகளுக்குள் இட்டுக்கொள்ளவேண்டும். பிறகு அவர்கள் காப்பீட்டுறுதி விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்தல், குழந்தைகளால் திறக்கப்படக்கூடாத புட்டிகளிலிருந்து மூடிகளை அகற்றுதல் போன்ற “எளிய” வேலைகளைச் செய்யவேண்டும். “அதைத் தொடர்ந்து வரும் கலந்துரையாடல் சமயத்தில் அரசு பிரதிநிதிகளின் இருப்பிடத்தில் சேவை செய்யும் அந்த மருத்துவர்கள் கடந்த காலத்தில் சில வயதுசென்ற நோயாளிகளால் தங்களுக்கு ஏற்பட்ட எரிச்சலைப் பற்றி அடிக்கடி மனவருத்தம் தெரிவித்தனர்,” என்று டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. (g92 12/8)
போப் மன்னிப்புக் கோருகிறார்
போப் ஜான் பால் II அடிமை வியாபாரத்திற்காக ஆப்பிரிக்க கண்டத்தின் மக்களிடத்தில் இரண்டுமுறை மன்னிப்புக் கோரியிருக்கிறார். முதலாம் முறை, பிப்ரவரியில் போப்பின் செனகல் பயணத்தின்போதாகும். அப்பொழுது “கிறிஸ்தவர்களும்கூட . . . களங்கப்படுத்தப்பட்ட, வரலாற்றுப் புகழ்பெற்ற அடிமைமுறைக்காக ‘பரலோகத்தின் மன்னிப்பையும்’ ஆப்பிரிக்காவின் மன்னிப்பையும்,” போப் கோரியதாக இத்தாலிய தினசரி கொரியரா டலா சரா அறிக்கை செய்கிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய சவோ டோமி பயணத்தின்போது இரண்டாம் முறையாக, மன்னிப்புக் கோரினார். வாடிகனில் போப் விவரித்ததாவது: “சர்ச் பாவிகளாலும்கூட உண்டாக்கப்பட்ட ஒரு சமுதாயமாகையால், நூற்றாண்டுகளாக அன்பு கட்டளைக்கெதிராக மீறுதல்கள் இருந்துவந்திருக்கின்றன. . . . அவை கிறிஸ்தவர்கள் என்ற பெயரோடு தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்த தனிநபர்கள் மற்றும் தொகுதிகளின் பங்கில் ஏற்பட்ட தவறுதல்களாகும்.” “போப்பின் மன்னிப்பு கோர”லின்பேரில் கருத்து விவரிக்கையில், தினசரி லா ரிப்பப்லிகா போப் “கிறிஸ்தவர்களின் பாகத்தில் இருந்த பாவத்தைப் பற்றி பொதுவாக பேசினார், ஆனால் போப்புகளைப்பற்றியும், ரோம சபைகளைப்பற்றியும், பிஷப்புகளைப்பற்றியும் குருமார்களைப்பற்றியும் பேசியிருக்கலாமே. அடிமைத்தனத்தின் இந்த வரலாறு, உண்மையிலேயே, கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரப்படிநிலையின் பங்கில் உள்ள பொறுப்புகளோடும்கூட கலந்திருக்கிறது,” என கூறிற்று. (g92 11/22)