உலகத்தைக் கவனித்தல்
சர்ச் பாலின அவதூறு
“பல ஆண்டுகளாக, நியுஃபெளன்லாந்து பங்குகளிலுள்ள ரோமன் கத்தோலிக்க மதகுருமாரும் மற்ற சர்ச் ஊழியர்களும் திரும்பத்திரும்ப டஜன் கணக்கில் பிள்ளைகளைப், பெரும்பாலும் பையன்களை துர்ப்பிரயோகம் செய்து வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் தாக்குதல் செய்யும் ஆட்களின் ஆதரவிலிருக்கும் அனாதைப் பிள்ளைகளாவர்” என்பதாகக் கானடாவின் செய்தி பத்திரிகை மக்ளீன்ஸ் அறிவிப்பு செய்கிறது. “அவதூறு நியுஃபெளன்லாந்துக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை: கத்தோலிக்க சர்ச் ஆட்களால் செய்யப்பட்ட குறைந்தபட்சம் இன்னும் ஆறு பாலின துர்ப்பிரயோக வழக்குகள் கானடாவிலுள்ள வேறு இடங்களிலும், 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஐக்கிய மாகாணங்களிலும் பதிவாகியிருக்கின்றன.” மாதந்தோறும் பாலின துர்ப்பிரயோக அறிக்கைகள் அதிகரித்துக்கொண்டுவருவதன் காரணமாக —மதகுருமாரும் சர்ச் உறுப்பினர்களுமாக மொத்தம் 17 பேர் ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டிருக்க—தங்கள் குருமாரில் அநேக கத்தோலிக்கர்களின் விசுவாசமும் நம்பிக்கையும் ஆட்டங்கண்டுவிட்டது. சர்ச்சில் பாலின துர்ப்பிரயோகம் நெடுங்காலமாயுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், அது பொதுவாக மூடிமறைக்கப்படுவதும், குற்றமிழைக்கும் மதகுரு மற்றொரு பங்குக்கு மாற்றப்பட்டு அங்கே சில சமயங்களில் புதிய குற்றங்கள் இழைக்கப்படுவதைப் பற்றிய குற்றச்சாட்டுமே அதிகமாக நிலைகுலையச் செய்வதாக உள்ளது. பெற்றோர் தங்கள் பையன்களை பலிபீட பையன்களாக இருக்க இடங்கொடாமலும், தங்கள் பையன்களை மதகுருவின் பாவமன்னிப்பறைக்குள் பிரவேசிக்கவும்கூட அனுமதியாமலும் இருப்பதன் மூலம் தங்கள் பிரதிபலிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். “ஒரு சமயம் பெருமையோடு அணிந்து கொள்ளப்பட்ட ரோமானிய கழுத்துப்பட்டை சங்கடத்துக்கும் சந்தேகத்துக்கும் மூலகாரணமாகிவிட்டிருக்கிறது,” என்பதாக செயின்ட் ஜான்ஸ் கத்தோலிக்கப் பள்ளி குழுவின் துணைத் தலைவர் பால் ஸ்டப்பிள்டன் தெரிவிக்கிறார். “அண்மைக் காலச் சம்பவங்கள் எல்லாக் குருமாரையும், வெளிப்படையாகப் பேசப்படும் அல்லது மெளனமான சந்தேக மேகங்களின் கீழ் வைக்கிறது. உங்களையும் கடவுளையும் தவிர வேறு எவரையும் நீங்கள் நம்ப முடியாது என்பது செய்தியாக இருப்பது போல் தெரிகிறது.”
“மறைவை நோக்கி வேகமாகப் போய்கொண்டிருக்கிறது”
“உலகம் முழுவதிலும் நடந்துவரும் பேராசைமிக்க தந்த வியாபாரத்தின் பலியாளாகிய ஆப்பிரிக்க யானை மறைவை நோக்கி வேகமாகப் போய்கொண்டிருக்கிறது” என்கிறது விஞ்ஞானம் பத்திரிகை. கடந்தப் பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 40 சதவீதம் சரிந்துவிட்டிருக்கிறது—13 இலட்சத்திலிருந்து 7,50,000 ஆக குறைந்துவிட்டிருக்கிறது. யானை அழிக்கப்படுவது இப்பொழுது இருப்பதுபோல் இருந்தால் அது அதன் மறைவை நோக்கி 50 ஆண்டுகளுக்குள்ளாக சென்றுவிடும். ஆனால் அதிகம் இதில் உட்பட்டிருக்கிறது. “தந்தத்திற்கான வேட்கை இவ்வினத்தின் புள்ளிவிவர ஆய்வையும் சமுதாய அமைப்பையும் திரித்துவிடுகிறது” என்கிறது விஞ்ஞானம். சில இடங்களில் யானைகளில் 3 சதவீதத்துக்கும் குறைவானவை ஆண் யானைகளாகும். ஆகவே புணர்ச்சி வேட்கை சமயத்தில் பெண் யானைகள் துணையோடு சேர்க்கப்படாமல் போக, இது எண்ணிக்கை விகிதத்தை இன்னும் குறைத்துவிடுகிறது. அதிகமான பெரிய உருவ ஆண்யானைகள் மரித்துப் போய்விட்டதன் காரணமாக அதே அளவு தந்தத்தைப் பெற அதிகமான யானைகள் கொல்லப்பட வேண்டும். மரித்துப் போகும் யானைகளில் நான்கில் ஒரு பங்கு, தாய் யானை கொல்லப்பட்ட பின், அனாதைக் குழந்தைகளாகி பட்டினியால் உயிரிழப்பவையாகும். வர்த்தகத் தந்த வியாபாரத்தில் முழுமையான தடை ஒன்று உத்தேசிக்கப்படுகையில், வரவிருக்கும் தடையைப் பற்றிய செய்தி, மீதமிருக்கும் யானைகளை ஒருவித வெறியோடு கடைசி நிமிடத்தில் கொலை செய்ய, சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்களை வழிநடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிறைவின் மத்தியில் வறுமை
குறைந்தபட்சம் 50 இலட்சம் ஆட்கள் பசியிலிருக்கிறார்கள் என்பதாக ஐ.நா.-வின் ஏஜென்சியான உலக உணவு குழுவின் 15-வது ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சொல்லப்பட்டார்கள். உலகமானது அதன் தேவைக்கு மேல் சுமார் 10 சதவிகித உணவை உற்பத்திசெய்தபோதிலும் இலட்சக்கணக்கானோர் தன்னிறைவினாலும் அசட்டை மனப்பான்மையினாலும் திறமையின்மையினாலும் பசியாக விடப்படுகிறார்கள். மெக்சிக்கோவைச் சேர்ந்த குழுத் தலைவர் இக்குயார்டோ பெஸ்குரியாவின் பிரகாரம், உலகம் முழுவதிலுமுள்ள வறுமையை முடிவுக்குக் கொண்டுவர, “சமாதானம் ஓர் அடிப்படை முன்தேவையாகும்;” யுத்தம் செய்துகொண்டிருக்கும் பல நாடுகள், “தங்களிடமுள்ள பற்றாக்குறையான வளஆதாரங்களை உணவு திட்டங்களுக்காகச் செலவிடுவதற்குப் பதிலாக போரயுதங்களுக்குச் செலவிடுகிறார்கள்.” பெரும்பாலான ஊட்டக்குறைவுள்ள ஆட்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்ந்துவருகிறார்கள். ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 140 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய்களோடு சேர்ந்து ஊட்டச்சத்துக்குறைவினால் சாகிறார்கள் என்று குழு கூறியது. (g89 11⁄8)
எய்ட்ஸ் நச்சுக்கிருமியின் அபூர்வமான வடிசாறு
மேற்கத்திய ஆப்பிரிக்காவில் முக்கியமாகக் காணப்படும் எய்ட்ஸ் நச்சுக்கிருமியின் இரண்டாவது வடிசாறு, நியு யார்க் நகர இரத்த மாதிரிகள் பலவற்றில் காணப்பட்டுவருகிறது. ஐக்கிய மாகாணங்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான எய்ட்ஸ் பரிசோதனைகள் HIV–2 என்ற புதிய வடிசாற்றின் நோய் எதிர்ப்பு பொருட்களை கண்டுபிடிப்பதில் தோல்வியடைகின்றன. இது இரண்டுவகையான ஆட்களுக்கு அநிச்சயத்தைக் கொடுக்கிறது: வழக்கமான எய்ட்ஸ் பரிசோதனையில் நோய் இருப்பதைக் காண்பிக்காதவர்கள் மற்றும் இரத்த வங்கிகள் வைத்து நடத்துபவர்கள். ஏனென்றால் தானம் செய்யப்பட்ட இரத்தம் பாதுகாப்பானதா என்பதை அவர்கள் நிச்சயமாக அறியமாட்டார்கள். நோய்குறிகள் கவனிக்கப்படுவதற்கு முன் நீண்ட காலப்பகுதிக்கு புதிய வடிசாறு “மெளனமாக” தங்கியிருக்கக்கூடும் என்பதாகவும் முதல் எய்ட்ஸ் நச்சுக்கிருமி, HIV–1-ஐப் போன்று அதேவிதமாக பெருவாரியாகப் பரவும் வாய்ப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்றும்கூட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். நியு யார்க் டைம்ஸ் பிரகாரம் HIV–1” பத்து இலட்சம் அல்லது அதற்கும் அதிகமான அமெரிக்க மக்களைப் பாதித்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. [1989] மே 31 வரையாக 97,193 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் 56,468 பேர் மரித்துவிட்டிருக்கின்றனர்.” (g89 10/8)
“வெறியூட்டப்பட” எதுவும்
போதைப் பொருளை துர்ப்பிரயோகம் செய்பவர்கள், அவர்கள் விரும்பும் இரசாயன மயக்கத்தைப் பெற எந்த அசாதாரணமான அளவுகளுக்கும் செல்வர். பின்வரும் மூன்று காரியங்கள் இதை விளக்குகின்றன.
◼ நியு யார்க் நகரில் போதப் பொருள் துர்ப்பிரயோகம் செய்பவர்கள், க்ராக் என்றறியப்படும் ஒரு போதப் பொருளிலிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் குறுகிய, திடீர் எழுச்சியான வெறிமயக்கத்தைத் தொடர்ந்து ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட மனச்சோர்வை எதிர்த்து சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்கள், கொக்கேனின் ஓர் உருவான க்ராக்கை, ஹெராயினோடு சேர்த்து ஒரு குழாயில் இவ்விரண்டையும் புகைக்கிறார்கள். ஹெராயினிலிருந்து கிடைக்கும் மயக்கம் பல மணிநேரங்கள் நீடித்து, க்ராக்கிலிருந்து தெளிவடையும் வேகத்தை மென்மைப்படுத்துகிறது. போத மருந்து துர்ப்பிரயோகம் செய்வதில் அனுபவ குறைவுள்ள அநேகர் ஊசிகளைப் பயன்படுத்துவது குறித்து தயக்கமுள்ளவர்களாக இருந்தபடியால், ஹெராயின் மீது அவர்களுடைய அபிமானம் குறைந்து வந்தது. ஆனால் இப்போது, புதிய வாடிக்கையாளர் மொத்த குழுவும் ஒருநாள் ஹெராயினுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கக்கூடும்.
◼ மெக்சிக்கோவிலுள்ள ஜூரஸில், உள்ளூர்வாசி பிள்ளைகள், நகராட்சி குப்பைக்கொட்டுமிடத்தில், அவர்கள் கண்டெடுத்த விநோதமான பச்சை நிறப் பாறைகளை முகர்ந்து கொண்டிருந்தார்கள். இப்பாறைகள், மெக்சிக்கோவில் அமைந்திருந்த ஐ.மா. கம்பெனிகளால் சட்டவிரோதமாக வீசியெறிப்பட்ட கடினமான நச்சுத்தன்மையுள்ள கழிவுப்பொருட்களாக இருந்தன. பாறைகளை முகர்ந்தது, வச்சிரப் பசையை முகருகையில் ஏற்படுவது போன்று அதேவிதமாக இளைஞரின் மீது விளைவுகளை உண்டுபண்ணியது: சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளைச் சேதம், மற்றும் மலட்டுத்தனம் அல்லது ஒருநாள் உருச்சிதைந்த குழந்தைகளை பிறப்பிக்கும் அபாயம்.
◼ சான் ஃபிரான்சிஸ்கோ எக்ஸாமினரின் பிரகாரம், வெறியூட்டப்படும் பொருட்டு சில ஆட்கள் தேரையைக்கூட நக்குவார்கள். ஒரு சில தேரைகளின் தோலிலிருந்து பஃப்போடெனைன் என்றழைக்கப்படும் ஓர் இரசாயனம் கசிந்து வெளிப்படுகிறது. சிறிய அளவுகளில் அது வயிற்றுக்குள் கொண்டுச் செல்லப்படுகையில், அது புலனுணர்வுகளைப் பாதித்து ஏதோ திசைக்குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. பெரிய அளவுகளில் இது அபாயத்துக்கேதுவாக நச்சுத்தன்மையுள்ளதாகிவிடுகிறது. மேலும் இது போதப்பொருள் நிபுணர்களால் LSD மற்றும் ஹெராயின் போன்று சட்டவிரோதமான போதப்பொருளோடு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுவான ஒரு பழக்கமாக இல்லாவிட்டாலும், தென் அமெரிக்கா, ஐக்கிய மாகாணங்கள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தம்முள் மாறுபட்டத் தன்மையுள்ள நிலப்பகுதிகளில் மக்கள் தேரைத் தோலிலிருந்து வெறியூட்டப்பட முயற்சி செய்வதாகத் தெரிகிறது.
உணவை வீணாக்குவது
ஐரோப்பாவில் உணவுப் பொருளை அழிப்பது நெடுநாளாக ஒரு நடத்தைப் போக்காக இருந்து வந்திருக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலையை ஒரே நிலையில் வைப்பதற்காக, ஐரோப்பிய பொது சந்தை அமைப்பு மிகை உற்பத்தியை விலைகொடுத்து வாங்கிவிடுகிறது. ஆனால் ஐரோப்பிய தணிக்கை அலுவலகத்தின் சமீப கால அறிக்கை ஒன்றின்படி, இத்தாலி, ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் கிரீஸில் வாங்கப்பட்ட மிகை உற்பத்தியில் ஏறக்குறைய 84 சதவீதம்—ஆண்டுதோறும் சுமார் 25 இலட்சம் டன்கள் விளைபொருள்—அழிக்கப்படுகிறது. மீதமிருப்பதில், “10 சதவீதம் மிருகங்களுக்கு தீவனமாகவும், 5 சதவீதம் சாராயம் வடித்திறக்கவும் 1 சதவீதமே ஏழைகளுக்கு உணவாகவும் விநியோகிக்கப்படுகிறது” என்பதாக ஜெர்மன் செய்தித்தாள் வெட்டராயர் ஸீட்டங் குறிப்பிடுகிறது. (g89 10/22)