பொய் மதம் அதன் அழிவை நாடிச் செல்கிறது!
இவ்வுலகின் மதங்கள் அவற்றின் முடிவை நெருங்குகின்றனவா என்று கண்டுபிடிப்பதற்காக, பைபிளின் அதிக உயிர்த்துடிப்புள்ள தீர்க்கதரிசனங்களில் முதன்மையான ஒன்றை நாம் இப்போது நுணுக்கமாய் ஆராய்வோம். அது, பைபிளின் கடைசி புத்தகமான வெளிப்படுத்துதலில் விளக்கப்பட்டிருக்கும் இரகசியமான, அடையாளப்பூர்வ பெண்ணைப் பற்றியது.
தேசங்களின்மீது ஆதிக்கம் செலுத்திவந்திருக்கும், வரலாறு முழுவதிலும் நூற்றுக்கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையின் செல்வாக்கு செலுத்திவந்திருக்கும் ஒரு பெண்ணை—இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டுள்ள செல்வமிக்க ஒரு பெண்ணை—நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவளுடைய நெற்றியில், ஓர் இரகசியமான, “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்ற ஒரு நீண்ட பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இவ்வுலகத் தலைவர்களுடன் “வேசித்தனம்” செய்திருந்திருக்கும், கட்டுக்கடங்காத, தாறுமாறான வாழ்க்கையால் அவள் நன்கு அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறாள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டியிருக்கிறது. அவள், பயங்கரமாயிருக்கும் ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடைய, சிவப்புநிறமுள்ள மூர்க்க மிருகத்தின்மேல் சவாரி செய்கிறாள்.—வெளிப்படுத்துதல் 17:1-6; 18:5.
இப் பெண்ணை நீங்கள் கற்பனை செய்ய முடிந்தால், இயேசுவினுடைய அப்போஸ்தலனான யோவான், ஒரு தூதன் மூலமாக அவருக்குக் காட்டப்பட்ட ஒரு தரிசனத்தில் பார்த்த தீர்க்கதரிசன நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தைப் பற்றிய ஓர் எண்ணம் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அவர் அதை வெளிப்படுத்துதல் 17-வது மற்றும் 18-வது அதிகாரங்களில் தெளிவாக விவரிக்கிறார். இவ்வதிகாரங்களை உங்கள் சொந்த பைபிளிலிருந்து வாசியுங்கள். இந்த இரகசியப் பெண்ணைப் பற்றிய அடையாளத்தை வெளிப்படுத்துவதுமுதல் மரணத்தில் அவள் முடிவடைவதுவரையான தொடர் நிகழ்ச்சிகளை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
இந்த வேசியை அடையாளம் கண்டுகொள்ளுதல்
அவளைப் பற்றிய அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு துப்பு, அந்த வேசியும், அரசியுமானவள் அடையாளப்பூர்வமாய் உட்கார்ந்திருக்கும் அந்த இரண்டு காரியங்களில் காணப்படுகிறது. வெளிப்படுத்துதல் 17:18-ல், அவள் ‘பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரம்’ என்று விவரிக்கப்படுகிறாள். வெளிப்படுத்துதல் 17:1, 15-ல் காட்டப்பட்டிருக்கிறபடி, ‘ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரும்’ என்ற அர்த்தமுடைய “திரளான தண்ணீர்கள்மேல்” உட்காரும்படி அவளை இது அனுமதிக்கிறது. அதே அதிகாரத்தில் வசனம் 3-ன்படி, ஏழு தலைகளையுடைய ஒரு மூர்க்க மிருகத்தின்மேல் உட்கார்ந்திருப்பதாகவும் அவள் காணப்படுகிறாள்—மிருகங்கள் உலகப்பிரகாரமான அரசியல் ஆட்சிகளின், அல்லது அமைப்புகளின் சின்னங்களாக பைபிளில் பொதுவாய் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது, அந்த வேசியான மகா பாபிலோன், உயர்த்தப்பட்ட ஒரு பேரரசின், பிற அரசாங்கங்களின்மீதும் அவற்றினுடைய குடிமக்களின்மீதும் மேலோங்கி இருக்கும் ஒரு பேரரசின் உருவாய் இருப்பதைக் குறித்துக் காட்டுகிறது. இது இவ்வுலக பொய் மதங்களின் ஒரு பேரரசாகவே இருக்க முடியும்.
அரசின் கொள்கைகள் மற்றும் அரசியல் சம்பந்தமான விஷயங்களில் மதத் தலைவர்களின் செல்வாக்கு, வரலாற்றின் நன்கறியப்பட்ட ஒரு பாகமாய் இருக்கிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு [5-வது நூற்றாண்டு], ஐரோப்பாவில் வேறு எவரையும்விட போப்புக்கு மிகுந்த அதிகாரம் இருந்தது. . . . போப் அரசியல் மற்றும் ஆவிக்குரிய அதிகாரம் செலுத்தினார். 800-ம் ஆண்டில், மேற்கு ஜெர்மானியரைச் சேர்ந்த சார்லிமேனை [மகா சார்லஸ்] ரோமர்களின் பேரரசராக போப் லியோ III முடிசூட்டினார். . . . ஒரு பேரரசரின் அதிகாரத்தைச் சட்டப்பூர்வமானதாய் ஆக்குவதற்கான போப்பின் உரிமையை லியோ III நிலைநாட்டியிருந்தார்”.
கத்தோலிக்க சர்ச்சும் அதன் “இளவரசர்களும்” ஆட்சியாளர்கள்மீது செலுத்தின அதிகாரம் கார்டினல் தாமஸ் உல்ஸியால் (1475?-1530) மேலுமாக எடுத்துக்காட்டப்பட்டது. அவர், “பல்லாண்டுகளாக இங்கிலாந்தின் மிகவும் பலம்வாய்ந்த நபர்” என்பதாக விவரிக்கப்படுகிறார். ஹென்றி VIII அரசருடைய ஆட்சியின்கீழ், அவர் “சீக்கிரத்தில் அரசு விவகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நபராய் இருந்தார். . . . அவர் ராஜரீக சிறப்புடன் வாழ்ந்தார், தன் அதிகாரத்தில் திளைத்தார்.” அந்த என்ஸைக்ளோப்பீடியா விவரிப்பு இவ்வாறு தொடருகிறது: “கார்டினல் உல்ஸி, ஓர் அரசியல்வாதி மற்றும் நிர்வாகியாக தனக்கிருந்த சிறந்த திறன்களை, ஹென்றி VIII-க்காக இங்கிலாந்தின் வெளிநாட்டு விவகாரங்களை நிர்வகிக்கும் நிர்வாகியாய் இருப்பதில் முக்கியமாய் பயன்படுத்தினார்.”
அரசாங்கத்தின் மதச் சார்பற்ற விவகாரங்களின்மீது கத்தோலிக்க அதிகாரத்தின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த உதாரணமாயிருப்பவர், பிரான்ஸைச் சேர்ந்த கார்டினல் ரிஷல்யூ (1585-1642); அவர், “18-க்கும் அதிகமான ஆண்டுகளாக . . . பிரான்ஸின் மெய்யான ஆட்சியாளராய் இருந்தார்.” முன்பு மேற்கோள் காட்டப்பட்ட தகவல் மூலம் இவ்வாறு கூறுகிறது: “அவர் மேன்மையடைவதற்கு மிதமிஞ்சிய விருப்பமுடையவராய் இருந்ததோடு, உயர் பதவியடைவதற்காக விரைவில் பொறுமையற்றவராய் ஆனார்.” அவர் 1622-ல் ஒரு கார்டினலாக ஆக்கப்பட்டு, “விரைவில் பிரெஞ்சு அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவரானார்.” தெளிவாகவே, அவர் செயலில் காட்டும் ஒரு மனிதராய் இருந்தார், ஏனெனில், “அவர் லாரஷெல் நகரைக் கைப்பற்றுவதில் அரசுப் படையை நேரில் சென்று வழிநடத்தினார்.” அக் கட்டுரை இவ்வாறு மேலும் கூறுகிறது: “ரிஷல்யூவின் தலைசிறந்த அக்கறை, வெளிநாட்டு விவகாரங்களில் இருந்தது.”
வத்திகன் தொடர்ந்து அரசியல் அதிகாரங்களில் தலையிட்ட விஷயமானது, வத்திகன் செய்தித்தாளான லாஸ்ஸேர்வாடோர்ரே ரோமான்னோ-வில் அவர்களின் அறிமுக சான்றுகளைப் பேரரசர் போப்பின் முன்னிலையில் வைக்கும் வெளிநாட்டு தூதர்களைப் பற்றிய தொடர்ந்த அறிவிப்புகளால் தெளிவாகக் காணப்படுகிறது. உலகளவிலான அரசியல் மற்றும் தூதரக முன்னேற்றங்களைப் பற்றிய தகவல்களைப் போப்புக்கு அறிவிக்கத்தக்க உண்மைப் பற்றுறுதியுள்ள கத்தோலிக்கருடன் வத்திகன் பின்னிப்பிணைந்திருப்பது தெளிவாயுள்ளது.
இவ்வுலகின் அரசியல் விவகாரங்களில் மதத் தலைவர்களின்—கிறிஸ்தவ மண்டலத்தைச் சேர்ந்த மற்றும் சேராதவர்களின்—சக்திவாய்ந்த செல்வாக்கை விளக்கிக் காட்டுவதற்கு இன்னும் பல உதாரணங்கள் கொடுக்கப்படலாம். இந்த அடையாளப்பூர்வமான வேசி “திரளான தண்ணீர்கள்” (“ஜனங்களையும் கூட்டங்களையும் ஜாதிகளையும்” குறிப்பது) அனைத்தின் மேலும் உட்கார்ந்திருப்பதும், மூர்க்க மிருகத்தின்மேல் (அரசியல் உலக வல்லரசுகள் அனைத்தையும் குறிப்பது) உட்கார்ந்திருப்பதுமான இந்த உண்மை, ஜனங்கள், ஜாதிகள், மற்றும் வல்லரசுகளின் மீது அவள் செலுத்தும் செல்வாக்கு, வெறுமனே அரசியல் செல்வாக்கின் இயல்பைக் காட்டிலும் வேறுபட்ட, உயர்வான இயல்புடையதாய் இருப்பதை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. அது என்ன வகையானது என்பதை நாம் காண்போம்.
அவளது நெற்றியிலிருந்த நீண்ட பெயரின் ஒரு பகுதி, “மகா பாபிலோன்” என்பதாய் இருந்தது. அது, மெய்க் கடவுளாகிய ‘யெகோவாவுக்கு எதிராக’ இருந்த நிம்ரோதால் சுமார் 4,000 ஆண்டுகளுக்கும் முன்பு நிறுவப்பட்ட பூர்வ பாபிலோனுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. (ஆதியாகமம் 10:8-10, NW) இப் பெயரை அவள் தாங்கியிருப்பது, பூர்வீக பாபிலோனை அதைப்போன்ற அம்சங்களுடன் சிறப்பித்துக்காட்டும், அதன் மிகைப்படுத்தப்பட்ட உயிர்ப்புள்ள விளக்கமாய் இருப்பதைக் குறித்துக் காட்டுகிறது. என்ன அம்சங்கள்? பூர்வ பாபிலோன் புரிந்துகொள்ள முடியாத மதம், தரக்குறைவான பாரம்பரியங்கள், விக்கிரக வணக்கம், மந்திரவித்தை, சோதிட சாஸ்திரம், மூட நம்பிக்கை ஆகியவற்றால்—யெகோவாவின் வார்த்தையால் கண்டனம் செய்யப்பட்ட அனைத்துக் காரியங்களால்—வியாபித்திருந்தது.
பொ.ச.மு. 18-வது நூற்றாண்டில், மார்துக் “பாபிலோனின் நகர்க் கடவுளாய் ஆக்கப்பட்டது, ஆகவே, சுமேரிய அக்காத் கோயிலின் சுமார் 1,300 தெய்வங்களின் முதன்மையான தெய்வமாக ஆனது. அது எல்லா மதப் பாரம்பரியங்களையும் ஓர் அமைப்புக்குள் கொண்டுவந்தது. . . . ஆதியாகமம் 11:1-9-ல் பாபிலோனின் அப் பிரமாண்டமான கோயிலின் கட்டிடப்பாங்கு, வானத்தைக் கைப்பற்ற விரும்பிய மனித கர்வத்தின் வெளிக்காட்டு என்று இழிந்துரைக்கப்படுகிறது” என தி நியூ இன்டர்நேஷனல் டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்ட்டமன்ட் தியாலஜி கூறுகிறது.
இவ்வாறு, பூர்வ பாபிலோன், பொய் மதத்தின் மையமாய் இருந்தது; அதுவே காலப்போக்கில் முழு உலகிலும் பரவியது. பாபிலோனிய மதப் பழக்கங்கள், கொள்கைகள், பாரம்பரியங்கள், சின்னங்கள் ஆகியவை பூமி முழுவதும் ஊடுருவியுள்ளன. இவை உலகின் பல்லாயிரக்கணக்கான மதங்களின் கதம்பமாகப் பிரதிபலிக்கின்றன. அரசியல் ராஜ்யங்களும் பேரரசுகளும் எழுச்சியுற்றுள்ளன, வீழ்ச்சியடைந்துமுள்ளன; ஆனால் பாபிலோனிய மதம் அவை எல்லாவற்றினூடேயும் தப்பிப் பிழைத்துள்ளது.
அழிவு ஏன் அவ்வளவு அருகில் உள்ளது?
இப் பத்திரிகையின் முந்தைய இதழ்களில் அடிக்கடி விளக்கப்பட்டுள்ளபடி, பைபிள் தீர்க்கதரிசனமும், 1914 முதற்கொண்டு நிகழும் உலகைக் குலுக்கும் சம்பவங்களும், ‘இக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில்’ நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாய்க் குறித்துக்காட்டுகின்றன. (மத்தேயு 24:3, NW) அந்த வேசி இப்போது சவாரி செய்துகொண்டிருக்கும் பத்துக் கொம்புகளையுடைய ‘சிவப்புநிற மூர்க்க மிருகத்தின்’ முடிவு நெருங்கி வருவதால், இது மிருகத்தனமான உலக ஒழுங்குமுறையின் முடிவு விரைவில் நெருங்கி வருகிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 17:3) இம்மிருகம், பூமியின்மீதுள்ள கிட்டத்தட்ட எல்லா தேசங்களின் அரசியல் கதம்பத் திரளை—ஐக்கிய நாடுகளை—தெளிவாகவே குறித்துக்காட்டுகிறது. அந்த முன்னுரைக்கப்பட்ட முடிவு, பிரிவுற்ற மற்றும் தேவபக்தியற்ற அரசியல் ஆட்சியை மனிதகுலத்தின்மீதிருந்து நீக்குவதை அர்த்தப்படுத்துகிறது. ஆனால் மிருகத்தின்மேல் சவாரி செய்யும் அந்த வேசியும், அரசியுமானவளைப் பற்றியென்ன?
கடவுளுடைய தூதன் இவ்வாறு விவரிக்கிறார்: “நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள். தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.”—வெளிப்படுத்துதல் 17:16, 17.
இவ்வாறு, அந்த அரசியல் மூர்க்க மிருகம் அழிக்கப்படுவதற்கு சற்று முன்பு, அது அதன்மேல் சவாரி செய்பவளைப் பகைக்க ஆரம்பித்து, அவளுக்கு எதிராகத் திரும்பும் என்று அத் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. ஏன்? தங்கள் ஆட்சியும் அதிகாரமும், தங்களின் எல்லைக்குள் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தால் அச்சுறுத்தப்பட்டு வருவதாய் ஆட்சியாளர்களும் அரசாங்கங்களும் தெளிவாக உணருவர். திடீரென, ஒரு தூண்டும் சக்தியால் துரிதப்படுத்தப்பட்டு, அந்த வேசித்தனமான, இரத்தக்கறைபடிந்த பொய் மத உலகப் பேரரசின்மீது கடவுளுடைய தீர்ப்பைச் செயலாற்றுவதன் மூலம், அவருடைய ‘யோசனையை,’ அதாவது, அவருடைய தீர்மானத்தை நிறைவேற்றுவர். a—எரேமியா 7:8-11, 34-ஐ ஒப்பிடுக.
இவ்வுலகினுடைய பொய் மதங்களின் முடிவு, அவை இன்னும் சக்திவாய்ந்தவையாகவும், செல்வாக்கு மிகுந்தவையாகவும் இருப்பவையாய்த் தோன்றும்போதே வரும். ஆம், அந்த வேசி அழிக்கப்படுவதற்கு சற்று முன்பு, “நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லை” என்று அவள் இன்னும் தன் இருதயத்தில் எண்ணுவாளென்பதாக அத் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 18:7) என்றபோதிலும், அவளுடைய நூற்றுக்கோடிக்கணக்கான பிரஜ்ஜைகள் ஆச்சரியப்படும் வகையில் அவளுக்கு அழிவு நேரிடும். அது மனித வரலாற்றிலேயே மிகவும் எதிர்பாராதவையும், பேரழிவை ஏற்படுத்தும் சம்பவங்களுமானவற்றில் ஒன்றாக இருக்கும்.
பூர்வ பாபிலோன் தோன்றியது முதல், பொய் மதங்களின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள்; அவற்றின் கொள்கைகள், பாரம்பரியங்கள், பழக்கங்கள் ஆகியவற்றின் மூலமும், எண்ணற்றவையாய் இருக்கும் அவற்றின் நிறுவப்பட்ட வணக்கத்துக்கான கட்டடங்களின் மூலமும், அவற்றின் ஆச்சரியமான ஐசுவரியங்களின் மூலமும் அவை ஒரு பயங்கரமான செல்வாக்கை மனிதகுலத்தின்மீது செலுத்திவந்திருக்கின்றன. அவை யாவும் பிறர் காணாத வகையில் மறையப்போவதில்லை. ஆகவே, அந்த வேசியின்மீதான நியாயத்தீர்ப்புச் செய்தியைத் தெரிவிக்கும்படி ஒப்படைக்கப்பட்ட தூதன், “அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய யெகோவா வல்லமையுள்ளவர்” என்று அறிவித்தபோது, இயல்புமீறிய வகையில் வார்த்தைகளைக் கொட்டவில்லை. ஆகவே, மகா பாபிலோனின் முடிவு இடியுடன்கூடிய மின்னல் திடீரென்று வெட்டுவதைப்போன்று எந்த முன்னறிவிப்புமின்றி வரும்; அதோடு “ஒரே நாளில்” வருவதைப்போல சீக்கிரம் முடிந்துவிடும்.—வெளிப்படுத்துதல் 18:8, NW; ஏசாயா 47:8, 9, 11.
அத் தூதனின் சக்திவாய்ந்த வார்த்தைகள், ஏதாவதொரு மதமாவது விட்டுவைக்கப்படுமா, அப்படியென்றால், எந்தவொன்று மற்றும் ஏன் என்ற கேள்விக்கு வழிநடத்துகிறது. தீர்க்கதரிசனம் என்ன காட்டுகிறது? இது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்பு]
a இத் தீர்க்கதரிசனங்களின் விவரமான கலந்தாராய்ச்சிக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, அதிகாரம் 33-ஐக் காண்க.
[பக்கம் 6-ன் பெட்டி]
ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவமண்டலத்தின் இரத்தப்பழி
வெளிப்படுத்துதல் 18:24-ல், “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும்” மகாபாபிலோனில் காணப்படுவதாக பைபிள் கூறுகிறது. மத வேற்றுமைகள் காரணமாகவும் அவற்றை விலக்குவதில் மதத் தலைவர்களின் தோல்வி காரணமாகவும் தொடுக்கப்பட்டிருக்கும் போர்களைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இதற்கான ஒரு சமீபத்திய உதாரணம், ருவாண்டாவில் செய்யப்பட்ட இனக்கொலையின் மூலம் தெளிவாய் இருந்தது. அதில், சுமார் 5,00,000 பேர் கொலை செய்யப்பட்டனர்—அவர்களில் மூன்றில் ஒரு பங்கானோர் சிறார்கள்.
கனடாவைச் சேர்ந்த நூலாசிரியர் ஹியூ மகெலம் ருவாண்டாவிலிருந்து இவ்வாறு அறிக்கை செய்கிறார்: “ஒழுக்க நெறிகளில் வழிகாட்டுதல் அளிப்பதில் சர்ச்சின் தோல்வி விளக்கப்பட முடியாதது என்று கிகலியில் [ருவாண்டா] ஹூட்டூ இனத்தைச் சேர்ந்த ஒரு மதகுரு கூறுகிறார். ருவாண்டா மக்கள் சமுதாயத்தில் பிஷப்புகளின் நிலைநிற்கை மிகவும் முக்கியமானதாய் இருந்திருக்க வேண்டும். கொலைகள் சம்பவித்ததற்கு வெகு முன்னதாகவே, வரவிருந்த பேரழிவைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அந்த இனக்கொலையைத் தடுக்க முடிந்திருக்கும் ஒரு பலமான செய்தியைக் கிட்டத்தட்ட முழு ஜனக்கூட்டமும் கேட்கும்படியான ஒரு சந்தர்ப்பத்தை சர்ச் பிரசங்கிகள் அளித்திருந்திருக்கலாம். அதற்கு மாறாக, அத் தலைவர்கள் அமைதியாய் இருந்துவிட்டனர்.”
1994-ல் நடந்த மிகமோசமான அப் படுகொலைக்குப் பிறகு, சர்ச்சின் ஒரு மூப்பரான ஜுஸ்டன் ஹாகிஸிமானா, கிகலியிலுள்ள பிரஸ்பிட்டரியன் சர்ச் ஒன்றில் நடத்தப்பட்ட ஒரு சிறிய கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: “ஹாபியாரிமானாவின் [ருவாண்டாவின் ஜனாதிபதி] அரசியலோடு சர்ச் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. நடந்துகொண்டிருந்ததற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை, ஏனெனில் நாங்கள் தீய முறையில் செல்வாக்கு செலுத்தப்பட்டோம். எங்களுடைய சர்ச்சுகளில், விசேஷமாக கத்தோலிக்க சர்ச்சுகளில் எதுவும் அப் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கவில்லை.”
அந்த இனக்கொலைக்குப் பிறகு ருவாண்டாவில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில், சர்ச்சின் ஒரு பாதிரியான ஆரான் மூகமெரா இவ்வாறு கூறினார்: “சர்ச்சுக்கு வெட்கக்கேடு. . . . 1959-லிருந்து இங்குக் கொலைகள் செய்யப்பட்டு வந்திருந்தன. அவற்றுக்கு எவருமே கண்டனம் தெரிவிக்கவில்லை. . . . எங்களுக்குப் பயமாய் இருந்ததாலும், எங்களுக்கு வசதியாய் இருந்ததாலும், நாங்கள் வெளிப்படையாய்ப் பேசவில்லை.”
[பக்கம் 7-ன் படம்]
இந்த “வேசி” முழு உலகையும் பாதிக்கிறாள்
[படத்திற்கான நன்றி]
Globe: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.