ப்ரோல்கா, காசவரி, ஈமு, மற்றும் பெருநாரை ஆஸ்திரேலியாவின் வினோதப் பறவைகளில் சில
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
காசவரி, பயமூட்டும் கால்நகங்களை ஆயுதமாக உடையது; உலகத்திலேயே மிகவும் ஆபத்தான பறவை என விவரிக்கப்பட்டிருக்கிறது. பறக்க இயலாத இந்தக் காசவரியால், திணறடிக்கும் பலத்தோடு குதிக்கவும் உதைக்கவும் தாக்கவும் முடியும். அதே ஜாடையிலும் அதேபோன்று பலமான ஆயுதம் தரித்திருப்பதும் அதே வழித்தோன்றலுமான ஈமுவிற்கு சிறகுகள் தேவையில்லை—அது காற்றைப் போல் வேகமாக ஓடுகிறது. நடனத்தில், ப்ரோல்கா, அதன் சிருஷ்டிகராயும் நாட்டிய அமைப்பாளராயும் இருப்பவரின் அறிவுஜீவியத்தைப் பறைசாற்றுகிறது. நடைபயின்று செல்லும் பெருநாரை, உயரமாகவும் ஒல்லியாகவும், பறவைகளுக்கே உரிய கண்ணியத்திற்கும் ஒய்யார தோற்றத்திற்கும் ஓர் இலக்கணமாக திகழ்கிறது. ஆப்புவடிவ வாலுள்ள கழுகு, பறந்துகொண்டிருந்தாலும் சரி, இறைச்சியை காவல்புரிந்துகொண்டிருந்தாலும் சரி, ஒரு பூரண வான்வெளி வேடனென்ற சிறப்பியல்பை டாம்பீகமாக காட்டிக்கொள்கிறது. ஆம், சிறப்புவாய்ந்த இந்தப் பறவைகள் ஒவ்வொன்றும் உண்மையில் படைப்பின் அதிசயம். ஆகவே, மகிழ்ச்சியோடு நாங்கள் அறிமுகப்படுத்துவது . . .
வர்ணஜாலமிக்க காசவரி—மழைக் காட்டின் நண்பன்
30-லிருந்து 60 கிலோகிராம் எடையுள்ளதும், வடகிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினீயிலுள்ள வளம்மிக்க மழைக்காடுகளில் காணப்படுவதும், கழுத்தடியில் இரு சதைப்பாகங்களை உடையதுமான காசவரி, ஓர் அழகிய ஆனால் ஏகாந்தமான பறவையாகும். சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள பெண் பறவை, ஆணைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது; மேலும், வழக்கத்திற்கு மாறாக, பெண் பறவை ஆணைக் காட்டிலும் சற்று அதிக வண்ணம்நிறைந்ததாய் இருக்கிறது. பெண் பறவை, இனச்சேர்க்கை காலத்தைத் தவிர மற்றபடி ஞானமாய் ஒதுங்கிவிடுகிறது. இனச்சேர்க்கை முடிந்த பிறகு, அது குவியலாக, பளபளப்பான பச்சைநிற முட்டைகளை இடுகிறது, ஆனால் அதன் பிறகு அவற்றை அடைகாக்கும் வேலையையும் குஞ்சுகளைப் பார்த்துக்கொள்ளும் வேலையையும் ஆண் பறவைக்கு விட்டுவிட்டு, வெறுமனே அவ்விடத்தை விட்டுச் சென்றுவிடுகிறது. பின்பு அது மற்ற ஆண் பறவைகளோடு இனம்சேர்ந்து, அவை ஒவ்வொன்றிற்கும், கவனித்துக்கொள்வதற்கு ஒரு குவியலான முட்டைகளை விட்டுச்செல்கிறது!
எனினும், காடுகளை அழித்தல் காசவரிகளுக்கு தீங்குவிளைவிக்கிறது. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில், க்வீன்ஸ்லாந்திலுள்ள டௌன்ஸ்விலுக்கு அருகிலிருக்கும் பிலபாங் சரணாலயம், பறவைகளுக்கு போதிய வயதான பிறகு மீண்டும் காட்டிற்குள் விட்டுவிடும் குறிக்கோளுடன், சிறைபிடித்து-இனச்சேர்க்கை செய்யும் ஒரு திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. காசவரிகள் எல்லாவித ஆகாரத்தையும் உண்கிறபோதிலும், அவை முக்கியமாக பழவகைகளைச் சாப்பிடுகின்றன, அவற்றை லபக்கென்று விழுங்கிவிடுகின்றன. இவ்வாறு, நூறுக்கும் அதிகமான செடி வகைகளின் விதைகள், பறவையின் குடல்வழியாக ஜீரணமாகாமலேயே பயணம்செய்து, சேதமடையாததும் ஊட்டச்சத்துள்ளதுமான எரு உருண்டைகளாக காடு முழுவதிலும் பரவலாக சிதறப்படுகின்றன. இது, ஒருவேளை காசவரியை ஒரு ஜீவாதார உயிரினமாக்கலாம், ஏனெனில் அது மறைந்துபோனால் அதைப் பின்தொடர்ந்து அநேக செடியினங்களும் மறைந்துபோகும் என்பதாக சரணாலய நிபுணர்கள் சொல்கின்றனர். ஆனால் இந்தப் பறவை மனிதர்களுக்கு ஆபத்தானதா?
மிகவும் அருகில் செல்லும் முட்டாள்களுக்கு மட்டும்தான். சொல்லப்போனால், மனிதர்களுக்கு காசவரி ஒரு அச்சுறுத்தலாக இருந்திருப்பதைக் காட்டிலும் மனிதர்களே அதிகளவில் அதற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கின்றனர். பனி மூடிய மழைக் காடுகளின் இருளில், தான் அருகிலிருப்பதை உங்களுக்கு எச்சரிப்பதற்காக அடித்தொண்டையிலிருந்து இப்பறவை உறுமுகிறது. நாசூக்காக சொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள்; சிறிதும் கிட்டே போகாதீர்கள். அநேகமாக, தனது தலையைப் பாதுகாக்க கடினமான தலைக்கவசத்தை அல்லது ஹெல்மெட்டைப் பயன்படுத்தி அது சிறுசெடிகளுக்கிடையே ஊடுருவிச் சென்றுவிடும். ஆனால் அது ஓரம்கட்டப்படும்போதோ காயமடைந்திருக்கும்போதோ குஞ்சுகளைப் பாதுகாக்கும்போதோ நீங்கள் மிகவும் நெருங்கினால் உங்களை ஒருவேளை தாக்கலாம்.
ஈமு—நாடோடியும் தேசிய சின்னமும்
காசவரியின் குடும்பத்தைச் சேர்ந்ததும் அதைக் காட்டிலும் சற்று உயரமாக இருப்பதுமான ஈமு, ஆஸ்திரேலியாவின் தொலைதூர கிராமப்புறங்களின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. பறவைகளில், நெருப்புக் கோழிதான் ஈமுவைக் காட்டிலும் பெரிதானது. எளிதில் மிரளும் தன்மையுள்ள ஈமு, மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் திடீரென பாய்ந்துசெல்ல உதவும் நீண்ட, வலிமைமிக்க கால்களைப் பெற்றிருக்கிறது; மேலும், காசவரியைப்போல் ஒவ்வொரு காலிலும் மூன்று உயிர்க்கொல்லி நகங்கள் இருக்கின்றன. எனினும், ஓரிடத்திற்கே உரித்தான காசவரியைப் போல் இராமல், ஈமு நாடோடியைப் போல் அலைந்து திரிவதாயும் அரிதாகவே தாக்குவதாயும் உள்ளது. அது எதை வேண்டுமானாலும் உண்ணும்—கம்பளிப்புழுக்கள், முட்டைகோஸுகள், பழைய பூட்ஸுகளையும்கூட உண்ணும்! பெண் ஈமு, கரும் பச்சைநிற முட்டைகளை இட்ட உடனேயே—பொதுவாக 7-லிருந்து 10 வரை, ஆனால் சிலசமயங்களில் 20 வரை—காசவரியைப்போல், அடைகாக்கும் வேலையையும் குஞ்சுகளை வளர்க்கும் வேலையையும் ஆண் பறவையிடம் ஒப்படைத்துவிடுகிறது.
ஐரோப்பியர்களை எதிர்படுவது ஈமுவிற்கு பேரிடைஞ்சலாக இருந்தது. குடியேறியவர்கள், அவற்றை விரைவிலேயே டாஸ்மேனியாவிலிருந்து பூண்டோடு ஒழித்துக்கட்டினர். அக்கண்டத்தில், கோதுமையை உண்ண அதற்கு விருப்பமிருந்ததால், இம்சைபிடித்த பறவை என்ற பட்டத்தை சம்பாதித்துக் கொடுத்தது; அதனால் சன்மானத்திற்காக வேட்டையாடுவோருக்கு இரையானது. எனினும், சரமாரியாக அவற்றைக் கொன்றுதள்ளியபோதிலும் குறிப்பிடத்தக்க விதத்தில் ஈமுவின் எண்ணிக்கை அந்தளவுக்கு அதிகரித்ததால், மேற்கத்திய ஆஸ்திரேலியாவில் 1932-ல் இந்தப் பறவையின்மீது நேரடியான போர் தாக்குதல் பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையிலேயே, படையையும் இரண்டு லூயிஸ் இயந்திர பீரங்கிகளையும் அந்த அரசாங்கம் வரவழைத்தது! ஈமு அதன் புத்திசாலித்தனத்திற்கு பேர்போனதாய் இல்லாவிட்டாலும், இந்தப் போரில் வெற்றிபெற்றது. அந்தப் “போர்” வெளிப்படையாக ஒரு கேலிக்கூத்தாக இருந்தது, அரசியல் ரீதியில் தர்மசங்கட நிலையை உண்டாக்கியது; பத்தாயிரம் முறை சுட்டபோதும், அதிக பட்சமாக, சில நூறு பறவைகளைத்தான் கொல்ல முடிந்தது. ஆனால் அதைப் பின்தொடர்ந்த தொடர்ச்சியான போரில்—ஒரு பக்கத்தில் ஈமுவும், எதிர்ப்பக்கத்தில், கொல்லுவதற்கான சன்மானம் மற்றும் அரசாங்க ஆதரவோடு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட இலவச வெடிகுண்டுகள் ஆகிய இரட்டைத் தாக்குதல்—ஈமுக்களால் இனியும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
எனினும், இப்போது, ஈமு தேசிய சின்னமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய வீர மரபுச் சின்னத்தில் கங்காருவை பெருமையுடன் பார்த்தவாறு நின்றுகொண்டிருக்கிறது, மேலும் புதர்களிலே பாதுகாப்பாக சுற்றித்திரிகிறது. வறட்சி அதன் மிகப் பெரிய எதிரியாக இருக்கிறது. ஈமுக்கள், பல்வகையான பொருட்களைத் தயாரிக்க—கொழுப்பு சத்து முழுமையாகவே இல்லாத இறைச்சி; உறுதியான, நீண்டநாள் உபயோகிக்கக்கூடிய தோல்; இறகுகள்; பறவையின் மார்புப்பகுதியில் உள்ள தளதளப்பாகத் தொங்குகிற கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணை போன்றவற்றிற்காக—பரிசோதனை முறையில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஒரே இடத்தில் கொழுப்பு சேகரிக்கப்பட்டிருப்பதே, மாம்சம் முழுமையாகவே கொழுப்பற்றதாக இருப்பதற்கு காரணமாகும்.
நீங்கள் நடனமாட விரும்புகிறீர்களா?
ஒருவேளை விரும்பாமல் இருக்கலாம், ஆனால் ப்ரோல்காக்கள் நிச்சயமாகவே விரும்புகின்றன. அவற்றின் நீர்க்கரை “நாட்டிய கூடத்தில்,” “[இந்தச் சாம்பல்நிற கொக்குகள்] ஒரு ஜோடியிலிருந்து ஒரு டஜன் வரையாக எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தாலும், கிட்டத்தட்ட எதிரெதிரே நேரான வரிசையில் நின்றுகொண்டு நடனமாட ஆரம்பிக்கின்றன,” என்பதாக ஆஸ்திரேலியாவின் நீர்ப்பறவைகள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. அவை, இறக்கைகளை பாதியாக விரித்துக்கொண்டும் அசைத்துக்கொண்டும், மரக்கால் போன்ற கால்களைக் கொண்டு முன்னால் துள்ளிக்குதிக்கின்றன. அவற்றின் தலைகளை குனிந்தவாறு மேலும்கீழும் ஆட்டிக்கொண்டு, முன்னும்பின்னும் சென்று, மென்மையாக களகளவென்றும் குழல்போன்றும் சப்தமிடுகின்றன. இடையிடையே ஒரு பறவை நின்று, அதன் தலையை சாய்த்து உரக்கமாக எக்காளமிடும். இந்தப் பறவைகள், காற்றில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு குதித்து, பின் அவற்றின் அகலமான கறுப்பு மற்றும் சாம்பல்நிற இறகுகளை விரித்து வான்குடைபோல் மிதந்தும் இறங்கலாம். ப்ரோல்காக்கள், இளம் கொப்புகளையோ புற்களையோ வீசி எறிந்து, பின் அவற்றைப் பிடிக்கவோ அலகுகளால் பட்டென தட்டிவிடவோ முயற்சி செய்கின்றன.” உணர்ச்சிகளைத் தூண்டும் என்னே ஒரு காட்சி, விசேஷமாக ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ளதும் சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள விரிக்கப்பட்ட இறகுகள் உடையதுமான இப்பறவைகளின் உருவளவை கருத்தில்கொள்ளும்போது!
அநேக இனங்களைச் சேர்ந்த பறவைகள், இனச்சேர்க்கை சமயத்தின்போது ஆடல்பாடலோடு காதல் லீலைகள் செய்துகொண்டிருக்கிற சமயத்தில், அனைத்து கொக்குகளிலும் மிகப் பெரிதான ப்ரோல்கா, எல்லா காலங்களிலேயுமே அதிக ஆவலோடு நடனமாடும் ஒன்றாய் உள்ளது. சொல்லப்போனால், அது, அபோரிஜினல் புராணக்கதையிலுள்ள பூரல்கா என்ற புகழ்பெற்ற நடனக்காரியை முன்னிட்டு பெயரிடப்பட்டது. ஒரு பொல்லாத மந்திரவாதி காண்பித்த நேசத்தை அவள் புறக்கணித்தாள். அதனால் அவன் அவளை ஒரு நளினமான கொக்காக மாற்றினான்.
பெருநாரை—ஆஸ்திரேலியாவின் ஒரே நாரை
ஈரப்பிரதேசங்களில் காணப்படும் பெருநாரை அல்லது கருகழுத்துள்ள நாரை, ஆஸ்திரேலியாவின் வெப்பம் நிறைந்த வட மற்றும் கிழக்கு கரையோரங்களுக்கு அடிக்கடி செல்கிறது. (தென் அமெரிக்க பெருநாரை வேறு இன நாரையாகும்.) மெலிதான, 130 சென்டிமீட்டர் உயரமுள்ள, கண்ணைப் பறிக்கும் வர்ணமுள்ள பெருநாரை, ஈரப்பிரதேசங்களிலுள்ள மற்ற எண்ணற்ற பறவைகளின் மத்தியில் பளிச்சென்று தெரிகிறது. ஆழமற்ற இடங்களில் இரைக்காக தேடும்போது, அது அதன் நீண்ட பலமான அலகை அவ்வளவு வேகமாக தண்ணீருக்குள் பாய்ச்சுவதனால் அந்த விசையை சமாளிக்க அதன் இறகுகளை சட்டென்ற துடிப்புடன் ஓரளவுக்கு விரிக்க வேண்டும்.
அந்த இறகுகள் எவ்வளவு பலம் பொருந்தியவையாய் உள்ளன! ஒரு நுனியிலிருந்து மற்றொரு நுனிவரை சுமார் இரண்டு மீட்டருக்கு அதன் இறகுகளை விரித்து, முதல்நிலை இறகுகளை (primary feathers) விரல்கள்போல் விரித்து, வானில் வெறுமனே ஒரு சிறிய சிலுவையைப்போன்று காட்சியளிக்கும்வரை மெதுவாக வட்டமிட்டு பறக்கிறது. உண்மையில், பெருநாரை, காற்றில் பறக்கும் விதமாக, அதன் நீண்ட இறகுகளும் கழுத்தும் கால்களும் பெரிய சிவப்பு பந்துபோன்ற நிலநடுக்கோட்டு சூரிய மறைவின்மீது நிழற்படமாக காட்டப்பட்டிருப்பது, வட ஆஸ்திரேலிய ஈரப்பிரதேசங்களின் அதிக நேசமான சின்னமாக இருக்கிறது.
ஆப்புவடிவ வாலுள்ள கழுகு—வானரசன்
விக்டோரியாவிலுள்ள பாறைகள் நிறைந்த ஒரு மலை உச்சிக்குக் கொஞ்சம் தொலைவில், மற்ற அனைத்து பறவைகளையும் விரட்டிவிட்ட கடுங்காற்றை எதிரெதிராக சந்தித்து ஒரு ஆப்புவடிவ வாலுள்ள கழுகு மிதந்து விளையாடியது. எழுத்தாளரான டேவிட் ஹாலன்ட்ஸ் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆகாயவித்தையின் ஒரு காட்சியைப் பார்த்தார்: “அந்தப் புயல் காற்றிலே அந்தக் கழுகு கிட்டத்தட்ட கொஞ்சம்கூட அசையாமலும் சொகுசாகவும் தொங்கிக்கொண்டிருந்தது. . . . நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அது இறகுகளை மூடியவாறு செங்குத்தாக விழுந்தது. அது நூறு மீட்டருக்குக் கீழே விழுந்தது, பின் அந்த இறகுகளை அவ்வளவு இலேசாக விரித்து, விழுந்ததால் இழந்த உயரத்தில் பெரும்பாலானவற்றை மீண்டும் அடைய மேலே உயர பறந்தது. . . . அது சரிந்து பறந்தது, பின்பு இன்னும் உயரத்தில் பறந்து மறுபடியும் மறுபடியுமாக தலைக்குப்புற விழுந்து, பள்ளத்தாக்கின் தரையை நோக்கி உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் பாய்ந்திறங்கி, பின் மீண்டும் மேல்நோக்கி தளராமலும் சிலிர்க்க வைக்கும் விதத்திலும் பறந்தது.”
விரிக்கப்பட்டிருக்கும்போது இரண்டரை மீட்டர் நீளமுள்ளதாய் இருக்கும் இறகுகளுடனும், தெளிவான ஆப்புவடிவ வாலுடனும் உள்ள இந்த நளினமான, பலம்பொருந்திய ராஜாவை, ஆஸ்திரேலிய ஆகாயத்திலுள்ள மற்ற எந்தப் பறவையோடும் குழப்பிவிட முடியாது. அதன் கூர்நகங்களால் மூன்று டன் விசையுடன் இறுகப்பற்ற முடியும்! எனினும், சிறிது காலத்திற்கு, ஆப்புவடிவ வாலுள்ள கழுகைப் பார்ப்பதற்கான ஒரே “சரியான” வழி, துப்பாக்கிக் குழாயின் மூலமாகவே இருந்தது. அதே குடும்பத்தைச் சேர்ந்ததும், வஞ்சிரமீன் மற்றும் மிருகரோமம் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்காக இரக்கமற்று சுடப்பட்டதுமான அமெரிக்க வழுக்குத்தலை கழுகைப்போன்று (bald eagle), இந்த ஆஸ்திரேலிய கழுகு, எப்போதாவது ஒரு ஆட்டுக்குட்டியை கொன்றதன் காரணமாக துன்புறுத்தப்பட்டது. “ஆப்புவடிவ வாலுள்ள கழுகைப்போன்று அந்தளவுக்கு கொடுமையாக உலகிலுள்ள மற்ற கொடும்பறவைகள் [பிற உயிரினங்களைக் கொன்றுதின்னும் பறவைகள்] துன்புறுத்தப்படவில்லை . . . சுமார் 100 வருடங்களுக்கு அது இம்சையாக கருதப்பட்டது . . . , அதைக் கொன்றதற்கு அத்தாட்சி காண்பிக்கப்படும்போது போனஸ் பணம் வழங்கப்பட்டது,” என்பதாக கொடும்பறவைகள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.
எனினும், சென்ற பல வருடங்களில் குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன. அது முக்கியமாக காட்டு முயல்களையும் அதன் எடையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக எடையுள்ள சிறு கங்காருக்களும் உட்பட எப்போதாவது மற்ற நாட்டு மிருகங்களையும் சாப்பிட்டது. புதிதாய் அறியப்பட்ட இந்த உண்மை, இறுதியில், மனிதர்களோடு சிநேகத்தையும் சட்டப்பூர்வ பாதுகாப்பையும்கூட இந்தக் கழுகிற்கு பெற்றுக்கொடுத்தது.
ஆம், பறவைகள், வாழ்க்கைச் சூழலில் பின்னிப் பிணைந்திருக்கும் என்னே ஒரு மலைக்கவைக்கும் சிக்கலான, அழகான, முக்கியமான பாகமாக இருக்கின்றன! இதை நாம் ஒருவேளை காலப்போக்கில் புரிந்துகொள்வோம், ஆனால் ஞானம் அதிக காலம்பிந்தியே—பேராசையும் அறியாமையும் தீங்குவிளைவித்த பிற்பாடே—வருகிறது. ஆனால் கொள்ளை அழகுள்ள இந்த கிரகத்தின் ஆகாயத்திலும் வனாந்தரங்களிலும் ஈரப்பிரதேங்களிலும், நாம் செவிசாய்த்தால், களகள ஓசை, கீச்கீச் ஓசை, விசில் சப்தம், கிரீச் ஒலி, குழல் ஓசை, குவாக்குவாக் ஓசை, குவிக்குவிக் ஒலி போன்றவை இப்போதும்கூட நம் காதுக்கு மதுரமாக இருக்கும் என்பதை அறிவது மனதிற்கு எவ்வளவு இதமாய் உள்ளது!
[பக்கம் 16-ன் படங்கள்]
காசவரி
ப்ரோல்கா
[படத்திற்கான நன்றி]
Left and bottom: Australian Tourist Commission (ATC); top middle and right: Billabong Sanctuary, Townsville, Australia
[பக்கம் 17-ன் படங்கள்]
கழுகு
ஈமு
பெருநாரை
[படத்திற்கான நன்றி]
Eagle chicks and emu head: Graham Robertson/NSW National Parks and Wildlife Service, Australia; flying eagle: NSW National Parks and Wildlife Service, Australia; emu with young and jabiru: Australian Tourist Commission (ATC)
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
Left: Graham Robertson/NSW National Parks and Wildlife Service, Australia; right: Australian Tourist Commission (ATC); top: Billabong Sanctuary, Townsville, Australia