ஒரு சிறை எழுச்சியின்போது நாங்கள் பிணைக்கைதிகளாய் இருந்தோம்
மார்ச் 30, 1996, சனிக்கிழமை, பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு எட்கர்டோ டாரஸும் ரூபன் சேபெலும் நானும் அர்ஜன்டினாவிலுள்ள போனஸ் அயர்ஸ் மாகாணத்தில் பலத்த பாதுகாப்பு சிறைச்சாலையான ஸியெரா சிக்காவிற்கு வந்துசேர்ந்தோம். சுமார் 800 கைதிகள் தங்கும்படி கட்டப்பட்ட இந்த ஜனநெருக்கமுள்ள அரணில் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 1,052 பேர் இருந்தனர். அவர்களது குற்றச்செயல்கள், திருட்டிலிருந்து ஆரம்பித்து தொடர் கொலைகள் வரை வித்தியாசப்பட்டவையாய் இருந்தன. நாங்கள் அங்கே பார்வையாளர்களாக சென்றிருந்தோம்.
பிரபலமான இந்தச் சிறைக்கு எட்கர்டோவும் ரூபனும் எப்போதும்போல் அன்றைய சனிக்கிழமையும் சென்றிருந்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபை ஒன்றின் மூப்பர்களாய், அவர்கள் சுமார் 15 கைதிகளுக்கு வாராந்தர பைபிள் பேச்சுக்களைக் கொடுப்பதற்கு காலம்தவறாமல் அங்கே சென்றனர். சிறைச்சாலையில் ஒரு கூட்டத்தை அதற்குமுன் நான் ஒருபோதும் தலைமைதாங்கி நடத்தியிராததன் காரணமாக, பயணக் கண்காணியான எனக்கு அது ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது.
அந்தச் சிறைச்சாலையில் 12 அறைகள் விசிறி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்டிடங்களுக்குள் நாங்கள் நுழைந்தபோது, நான்கு கைதிகள் எங்களைப் பார்த்து மிகுந்த ஆர்வத்தோடு கையசைப்பதைத் தூரத்திலிருந்து பார்த்தோம். இந்தக் கைதிகள், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முழுக்காட்டப்படாத நபர்களாக ஆகுமளவுக்கு தங்களது பைபிள் படிப்புகளில் முன்னேறியிருந்தனர். நாங்கள் விரைவில் அறை எண் 9-க்கு கொண்டுசெல்லப்பட்டோம், அங்கே நாங்கள் கூட்டத்தை நடத்த வேண்டியதாயிருந்தது. அங்கே, ஒரு அறை பெயின்ட் செய்யப்பட்டும், ஸ்கிரீன்களால் அலங்கரிக்கப்பட்டும் மதிப்பான தோற்றத்தை அளித்தது.
எழுச்சி ஆரம்பமாகிறது
எனினும், ஏதோவொன்று இயல்புக்கு மாறாக இருந்தது. எப்போதும்வரும் 15 கைதிகளுக்குப் பதிலாக 12 கைதிகள் மாத்திரமே அங்கு வந்திருந்தனர். ஏன் என நாங்கள் அனைவரும் யோசித்தோம். எப்போதும்போல் கூட்டம் பாட்டோடும் ஜெபத்தோடும் ஆரம்பமானது. சில நிமிடங்களுக்குப் பிறகு, துப்பாக்கியால் சுடும் சப்தமும் அதைப் பின்தொடர்ந்து இயந்திர பீரங்கிகளின் வெடிச்சத்தமும் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்பு ஆரவாரங்களையும் கூச்சல்களையும் நாங்கள் கேட்டோம். ஒரு சிறை எழுச்சி அப்போதுதானே ஆரம்பமாயிருந்தது!
முகமூடி அணிந்த அநேக கைதிகள், கையில் கிடைத்த கத்திகளோடு கூட்டம் நடக்கும் அறைக்குள் திபுதிபுவென்று நுழைந்தார்கள். மூன்று விருந்தாளிகளான எங்களைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள்! புகை நிரம்பிய அறைக்கு நாங்கள் விரைவில் காவலுடன் கொண்டுசெல்லப்பட்டோம். படுக்கைகள் எரிந்துகொண்டிருந்தன, கைதிகள் குழப்பத்தில் ஓடிக்கொண்டிருந்தனர், காயப்படுத்தப்பட்ட ஒரு காவலாளி தரையில் கிடந்தார். சிறைச்சாலையின் நடுவிலிருந்த காவல் கோபுரம், சிறையிலேயே செய்யப்பட்ட வெடிகுண்டினால் முழுவதும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. நாங்கள் வெளியே கொண்டுபோகப்பட்டு, முக்கிய வேலியிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் நிற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டோம். நேராக பார்த்தபோது, வேலிக்கு வெளியே போலீஸ்காரர்களும் சிறைக் காவலாளிகளும் எங்களை நோக்கி துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்பதை எங்களால் பார்க்க முடிந்தது. கைதிகளின் ஒரு கும்பல், எங்கள் பின்னால் மறைந்துகொண்டு, எங்கள் கழுத்துகளுக்கருகே கத்திகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இன்னுமதிக பிணைக்கைதிகள்
ஐந்து மணிநேரங்களுக்குப் பிறகு, சூரிய மறைவுக்குப் பின், காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்க சிறைச்சாலைக்குள் ஒரு மருத்துவர் நுழையும்படி அந்தக் கும்பல் தலைவர்கள் அனுமதித்தனர். அந்த டாக்டரும்கூட ஒரு பிணைக்கைதியாகிவிட்டார். கடைசியாக, இரவு ஒன்பது மணிக்கு நாங்கள் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டோம். அங்கே காவலாளிகளின் ஒரு கூட்டத்தோடு நாங்கள் சேர்ந்துகொண்டோம், அவர்களும் அங்கே பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். இப்போது அந்தக் கலகக்காரர்கள், எல்லா பிணைக்கைதிகளையுமே தங்களுக்கு மனித கேடயங்களாக மாறிமாறி நிற்கும்படி கட்டாயப்படுத்தினர்.
சிறிது நேரத்தில், காரியங்களை சமாதானமாக தீர்த்துக்கொள்ளும் முயற்சியில், ஒரு நீதிபதியும் அவரது செயலாளரும் அந்தக் கலகக்காரர்களை சந்திக்கும்படி அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கைதிகள் அவர்கள் இருவரையும் பிணைக்கைதிகளாக துணிச்சலுடன் பிடித்துவைத்துக்கொண்டபோது பிரச்சினை அதிகமானது.
இரவு முழுவதுமாக அவ்வப்போது சண்டை நடைபெற்றது. நாங்கள் தூங்க முயற்சி செய்தோம், ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் கண் அசந்தபோது, பெரிய கூச்சல் எங்களை தூக்கத்திலிருந்து திடுதிப்பென எழுந்திருக்கச் செய்தது. பின்பு, அதிகாலை நேரத்திலேயே, உயிருள்ள கேடயங்களாக நிற்பதற்கான எங்கள் வேளை மீண்டும் வந்தது.
வன்முறை அதிகரிக்கிறது
எழுச்சியின் இரண்டாம் நாளான மார்ச் 31, ஞாயிறு அன்று, நிலைமை மிகவும் மோசமானது. கும்பல் தலைவர்கள் தங்களது கோரிக்கைகளில் ஒத்துப்போக முடியவில்லை. இது கோபமும் வன்முறையும் நிறைந்த ஒரு நிலையை உருவாக்கியது. கலகக்கார கும்பல்கள், தங்கள் வழியிலிருந்த அனைத்தையுமே அழித்துப்போடுவதன் மூலமும் எரித்துப்போடுவதன் மூலமும் கலவரம் உண்டாக்கினர். பழைய சண்டைகள், வன்முறையாலும் கொலையாலும் தீர்க்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் சேர்ந்துகொள்ள மறுத்த அநேக கைதிகள் கொல்லப்பட்டனர். சில பிரேதங்கள் பேக்கரி அவனில் எரிக்கப்பட்டன.
எங்கள் விடுவிப்பைக் குறித்த எல்லா வித புரளிகளும் மாறுபாடான அறிக்கைகளும் சிறைச்சாலைக்குள் பரவிவந்தன. பிணைக்கைதிகளான எங்களுக்கு அது ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்தது. சிலசமயங்களில் நாங்கள் தொலைக்காட்சி செய்தியைப் பார்க்க அனுமதிக்கப்பட்டோம். தொலைக்காட்சி அறிக்கைகள் எந்தளவு உண்மைக்கு மாறாக இருந்தனவென்பதை பார்த்தபோது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அது நம்பிக்கையை இழக்க வைத்தது.
நாங்கள் எவ்வாறு சமாளித்தோம்? ஜெபம் செய்வது, பைபிள் வாசிப்பது, சந்தோஷமான எதிர்காலத்தைப் பற்றிய பைபிள் வாக்குறுதிகளை மற்றவர்களிடம் சொல்வது போன்றவற்றில் கவனம் செலுத்தினோம். சோதனைக்காலத்தின்போது அவைதான் எங்களுக்கு மனபலத்தை அளித்தன.
திங்கட்கிழமையன்று, கும்பலின் தலைவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர். எழுச்சிக்கு ஒரு முடிவு விரைவில் வருமென்பதாக தோன்றியது. சில கைதிகளுக்கிடையே துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, எட்கர்டோவையும் அநேக கைதிகளையும் கலகக்காரர்கள் கேடயங்களைப் போன்று பயன்படுத்தினர். அதனால் விளைவடைந்த குழப்பத்தில், பிணைக்கைதிகள் சுடப்பட்டதாக நினைத்துக்கொண்ட போலீஸ், அவர்களது ஆயுதங்களால் சுட ஆரம்பித்தனர். சரமாரியாக பாய்ந்த குண்டுகளிலிருந்து எட்கர்டோ தப்பித்துக்கொண்டார், ஆனால் சிறையிலடைக்கப்பட்ட காவலாளிகளில் சிலர் சுடப்பட்டனர்.
சாவு பக்கத்திலிருப்பதுபோல் தோன்றியது
நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதை அதிகாரிகளுக்குக் காண்பிக்க, பிணைக்கைதிகளான எங்களை மாடிக்கு கொண்டுசென்றனர். ஆனால் போலீஸ் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தது. இது கலகக்காரர்களுக்கு எரிச்சலூட்டியது. அனைவரும் ஒரே சமயத்தில் கூச்சலிட ஆரம்பித்தனர். சிலர் இவ்வாறு கத்தினார்கள்: “பிணைக்கைதிகளை கொன்றுபோடுங்கள்! அவர்களை கொன்றுபோடுங்கள்!” மற்றவர்கள் இவ்வாறு கெஞ்சினர்: “அதற்குள் வேண்டாம். காத்திருப்போம்!” சாவு பக்கத்திலிருப்பதுபோல் தோன்றியது. ‘புதிய உலகம் வரும்வரை,’ என்பதாக சொல்வதைப் போல் ரூபனும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். பின் நாங்கள் இருவரும் மனதில் ஜெபம் செய்துகொண்டோம். உடனடியாக, மன அமைதியையும் சாந்தத்தையும் நாங்கள் உணர்ந்தோம்; அந்தச் சூழ்நிலைகளில் அவை யெகோவாவிடமிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்.—பிலிப்பியர் 4:7.
திடீரென, போலீஸ் சுடுவதை நிறுத்திவிட்டனர், கும்பல் தலைவர்களில் ஒருவன் நாங்கள் கொல்லப்படுவதை ரத்து செய்தான். போலீஸை எச்சரிப்பதற்காக, என்னை கூரையின்மீது முன்னும் பின்னும் நடத்திச் செல்ல வேண்டுமென என்னைப் பிடித்துக்கொண்டிருந்த இளம் கைதிக்கு கட்டளை வந்தது. அவன் மிகவும் பயந்து நடுங்கினான். அப்போதே அங்கேயே நான் அவனோடு பேச ஆரம்பித்தேன், அதனால் இருவரும் அமைதியானோம். மனித துன்பம் சாத்தானாலும் அவனது பேய்களாலும் தூண்டப்படுகிறது என்பதையும் அப்படிப்பட்ட எல்லா துன்பங்களுக்கும் யெகோவா தேவன் விரைவில் ஒரு முடிவைக் கொண்டுவருவார் என்பதையும் நான் விளக்கினேன்.—வெளிப்படுத்துதல் 12:12.
சிறைச்சாலை மருத்துவமனைக்கு நாங்கள் மீண்டும் கொண்டு செல்லப்பட்டபோது, அநேக பிணைக்கைதிகள் பீதியடைந்திருப்பதை நாங்கள் கண்டோம். எங்களுடனிருந்த மற்ற பிணைக்கைதிகளுக்கு யெகோவாவினுடைய வாக்குறுதிகளின் பேரிலுள்ள எங்களது விசுவாசத்தைப் பற்றி சொல்ல முயன்றோம். பூமியில் பரதீஸில் உயிர்வாழும் ஒரு எதிர்காலத்திற்கான பைபிள் அடிப்படையிலான நம்பிக்கையைக் குறித்து நாங்கள் அவர்களிடம் பேசினோம். சில பிணைக்கைதிகள் யெகோவாவை பேர்சொல்லி அழைக்க ஆரம்பித்தனர். அந்த டாக்டர் விசேஷ அக்கறை காண்பித்து அநேக குறிப்பான கேள்விகளைக் கேட்டார். இதனால், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை வைத்து நீண்டநேரம் பைபிளைப் பற்றி கலந்தாலோசித்தோம்.
நினைவுநாளைக் கொண்டாடுதல்
நாங்கள் அகப்பட்ட நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை, இயேசு கிறிஸ்துவின் மரண நினைவுநாளாக இருந்தது. அந்த நாளில் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளும் ஆர்வமுள்ள ஆட்களும் இயேசுவின் கட்டளைக்கு இணங்க உலகம் முழுவதுமாக இந்த சம்பவத்தை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடுவர். (லூக்கா 22:19) நாங்கள்கூட நினைவுநாளைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தோம்.
தனிமைக்காக அறையின் ஒரு மூலை தேர்ந்தெடுக்கப்பட்டது. சின்னங்களாகப் பயன்படுத்த புளிப்பில்லாத அப்பமோ திராட்சை ரசமோ இல்லை. ஆனால் நாங்கள் மூவரும், யெகோவாவிற்கு துதிப்பாடல்கள் பாடி, ஜெபம் செய்து, இயேசுவின் கடைசி இரவையும் அவரது மரணத்தைச் சுற்றியமைந்த மற்ற சம்பவங்களையும் குறித்த பைபிள் பதிவை மறுபார்வை செய்து இவ்வாறு மகிழ்ந்தோம். அதே நேரத்தில் நாடு முழுவதிலும் எங்கள் குடும்பத்தினரும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளும் நினைவுநாளை கொண்டாடியபோது, நாங்கள் அவர்களோடு மிகவும் நெருங்கியிருந்ததாக உணர்ந்தோம்.
சோதனைக்காலம் முடிவடைகிறது
அதைப் பின்தொடர்ந்த நான்கு நாட்களின்போது கவலையும் பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்த ஒரு சூழ்நிலை நிலவியது. இருந்தபோதிலும், உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் வந்த அநேக கடிதங்கள் எங்களுக்கு ஆறுதலளித்தன; அவற்றைப் பெற்றுக்கொள்ள கைதிகள் எங்களை அனுமதித்தனர். ஒரு சமயத்தில், தொலைபேசி மூலம் எங்கள் குடும்பத்தினரோடு பேசவும் நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். அவர்களது குரல்களை கேட்பதும் அன்பும் அக்கறையும் நிறைந்த அவர்களது வார்த்தைகளை வாசிப்பதும் எவ்வளவு புத்துணர்ச்சியூட்டுவதாய் இருந்தது!
நாங்கள் அகப்பட்டு எட்டாவது நாளான சனிக்கிழமையன்று, கலகக்காரர்கள் அதிகாரிகளோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்தனர். அடுத்த நாள் நாங்கள் விடுவிக்கப்படுவோம் என்பதாக எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஏப்ரல் 7, ஞாயிறு, பிற்பகல் 2:30 மணிக்கு, “புறப்பட்டுச்செல்ல தயாராகுங்கள்!” என்ற தகவலை நாங்கள் பெற்றோம். அந்தக் கைதிகள், எங்களை கௌரவத்தோடு அனுப்பிவைக்க ஒரு வழிக்காவலரை ஏற்பாடு செய்தனர்! நாங்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, கும்பல் தலைவர்களின் சார்புப்பேச்சாளன் எட்கார்டோவை அணுகி இவ்வாறு சொன்னான்: “சகோதரரே, உங்கள் நடத்தை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. இப்போது முதற்கொண்டு சிறைச்சாலையில் நடைபெறும் சனிக்கிழமைக் கூட்டங்களுக்கு நான் கண்டிப்பாக வருவேன். இங்கே நடந்ததைப் பார்த்த பிறகும்கூட நீங்கள் இன்னும் கூட்டங்களை இங்கே நடத்துவீங்க இல்லையா?” எட்கர்டோ புன்முறுவலுடன் இவ்வாறு பதிலளித்தார்: “நிச்சயமாகவே!”
வெளியே எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அந்தக் கட்டிடத்தை விட்டு நாங்கள் வெளியே வந்தவுடனேயே, அங்கே இருந்த அனைத்து கைதிகளும் எங்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். அது, நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவிப்பதற்கான அவர்களது பாணியாக இருந்தது. அது உணர்ச்சியைத்தொடும் ஒரு சமயமாக இருந்தது. யெகோவாவிற்கு புகழ்சேர்க்கும் விதத்தில், அந்த ஒன்பது நாட்களாக எங்களுடைய கிறிஸ்தவ நடத்தை சந்தேகமில்லாமல் அவர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது.
சிறைச்சாலை வேலிக்கு வெளியே, எங்கள் குடும்பத்தினரையும் சுமார் 200 ஆவிக்குரிய சகோதர சகோதரிகளையும் நாங்கள் சந்தித்தோம். அதிக நிம்மதிப்பெருமூச்சோடு ஒருவரையொருவர் கட்டித்தழுவினோம். நாங்கள் தப்பிப்பிழைத்துவிட்டோம்! ஒரு பிணைக்கைதி என் மனைவியை அணுகி இவ்வாறு சொன்னார்: “யெகோவா என் இருதயத்தை தொட்டுவிட்டார், அவரை நான் சேவிக்கும்படி விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன்.”
யெகோவாவால் தமது ஊழியர்களை மிகக் கொடூரமான இன்னல்களின்போதும்கூட பாதுகாக்க முடியும் என்பதை எட்கர்டோவும் ரூபனும் நானும் மிக விசேஷமான விதத்தில் புரிந்துகொண்டோம். யெகோவாவிடம் ஜெபிப்பதும் அவர் நமக்கு செவிகொடுப்பதும் எவ்வளவு அருமையான ஒன்று என்பதை எங்களால் உணர முடிந்தது. சங்கீதக்காரனைப் போல் எங்களால் இவ்வாறு சொல்ல முடியும்: “கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப் பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.” (சங்கீதம் 30:1-3)—டாரியோ மார்டின் என்பவரால் சொல்லப்பட்டது.
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
முகமூடி அணிந்த அநேக கைதிகள் கையில் கிடைத்த கத்திகளை எடுத்துக்கொண்டு கூட்டம் நடக்கும் அறைக்குள் திபுதிபுவென நுழைந்தார்கள்
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
எட்கர்டோவையும் அநேக சிறைச்சாலை காவலாளிகளையும் கலகக்காரர்கள் கேடயங்களாக பயன்படுத்தினர்
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
அந்தக் கைதிகள், எங்களை கௌரவத்தோடு அனுப்பிவைக்க ஒரு வழிக்காவலரை ஏற்பாடு செய்தனர்!
[பக்கம் 18-ன் படம்]
மூன்று பயணக் கண்காணிகள் (இடமிருந்து வலம்): எட்கர்டோ டாரஸ், ரூபன் ஸிபெல், டாரியோ மார்டின்