என் பிள்ளையோடு பேச, நான் இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டேன்
ஆகஸ்ட் 1982-ல், எங்கள் மகன் ஸ்பென்ஸர் பிறந்தது எங்களது வாழ்க்கையிலேயே அதிக மகிழ்ச்சியான சமயமாக இருந்தது. அவன் ஆரோக்கியமான குழந்தையாக இருந்தான்! ஐந்து வருடம் காத்திருந்து முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வதென என் கணவரும் நானும் திட்டமிட்டிருந்தோம். அவன் பிறந்தபின் மாதங்கள் கடந்து செல்லச்செல்ல, அவன் வளருவதைக் கவனிப்பதில் எங்களுக்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷம்! டாக்டரிடம் ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்த செக்கப்புகளில் எப்போதுமே எந்தக் குறையுமில்லை. அப்படிப்பட்ட ஒரு அருமையான ஆசீர்வாதத்திற்காக நான் யெகோவாவிற்கு நன்றி சொன்னேன்.
எனினும், ஸ்பென்ஸருக்கு ஒன்பது மாதங்களானபோது, ஏதோவொரு கோளாறு இருப்பதாக நான் சந்தேகிக்க ஆரம்பித்தேன். பேச்சுகளுக்கோ குறிப்பிட்ட சப்தங்களுக்கோ அவன் பிரதிபலிக்கவில்லை. அவனால் கேட்க முடிகிறதா என்பதை தெரிந்துகொள்ள, அவனால் என்னை பார்க்க முடியாத இடத்தில் நின்றுகொண்டு, பாத்திரங்களையோ மற்ற பொருட்களையோ ஓங்கி அடிப்பேன். சிலசமயங்களில் அவன் திரும்பிப் பார்த்தான், ஆனால் எப்போதுமே அல்ல. ஒன்பது மாத செக்கப்பின்போது, அவனது டாக்டரிடம் என் கவலைகளைப் பற்றி சொன்னேன், ஆனால் என் மகனுக்கு எந்தக் குறையுமில்லை என்பதாகவும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதாகவும் சொல்லி அவர் எனக்கு நம்பிக்கையளித்தார். இருந்தபோதிலும், மாதங்கள் கடந்துசென்றன, இன்னும் அவன் பிரதிபலிக்கவோ பேசவோ இல்லை.
அவனது ஒரு வயது செக்கப்பின்போது, மறுபடியும் என் கவலைகளை நான் டாக்டரிடம் சொன்னேன். மறுபடியும் அவரால் எந்தக் கோளாறையும் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் ஒரு காது மருத்துவரை சந்திக்கும்படி சொன்னார். நான் ஸ்பென்ஸரை பரிசோதனைக்காக அங்கு கூட்டிக்கொண்டு சென்றேன், ஆனால் ரிஸல்ட்டுகள் வேறுபட்டு இருந்தன. இரண்டுமூன்று தடவை நான் மறுபடியும் சென்றேன், ஆனால் அப்போதும் ரிஸல்ட்டுகள் வேறுபட்டே இருந்தன என்று சொன்னார்கள். ஸ்பென்ஸர் வளரவளர பரிசோதனை ரிஸல்ட்டுகளில் முன்னேற்றத்தைப் பார்க்கலாம் என்பதாக டாக்டர் நினைத்தார். பிள்ளையின் வாழ்க்கையினுடைய முதல் மூன்று வருடங்கள் மொழி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சமயமாகும். நான் மிகவும் கவலையடைந்தேன். திட்டவட்டமான முடிவுகளை கொடுக்கும் பரிசோதனையைக் குறித்து நான் அந்த காது மருத்துவரிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். கடைசியில், மாஸச்சூஸெட்ஸ் கண் மற்றும் காது சிகிச்சையகத்தில் செய்யப்படும் மூளைத்தண்டு கேள்விநரம்பு (auditory brain-stem) பரிசோதனையைப் பற்றி அவர் என்னிடம் சொன்னார்.
நான் அப்படியே இடிந்துபோனேன்
அதற்கடுத்த வாரம் பாஸ்டனில் உள்ள மருத்துவமனைக்கு நாங்கள் சென்றோம். ரிஸல்ட்டுகள் என்னவாக இருந்தாலும் அவற்றை தாங்கிக்கொள்வதற்கான பலத்தைக் கேட்டு நான் யெகோவாவிடம் ஜெபித்தேன். என் மனதில், ஸ்பென்ஸருக்கு சரியாக காது கேட்கவில்லை என்றும் தேவைப்படுவதெல்லாம் காது கேட்கும் கருவிதான் என்றும் நான் நினைத்தேன். நான் நினைத்தது எவ்வளவு தவறு! பரிசோதனைக்குப் பின், டெக்னீஷியன் அவரது ஆபீசுக்குள் எங்களை அழைத்தார். ரிஸல்ட்டுகள் உறுதியாகிவிட்டன: ஸ்பென்ஸர், செவிநரம்புக் காதுகேளாமையால் (sensory-neural hearing loss) அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தான். அது குறிப்பாக எதை அர்த்தப்படுத்தியது என்று நான் கேட்டபோது, என் மகன் பேச்சையும் பெரும்பாலான மற்ற சப்தங்களையும் கேட்க முடியாமலிருந்தான் என அவர் விளக்கினார். இதைக் கேட்பேன் என நான் எதிர்ப்பார்க்கவில்லை; நான் அப்படியே இடிந்துபோனேன்.
உடனடியாக, ‘இது எவ்வாறு நடந்திருக்க முடியும்? இது எதனால் ஏற்பட்டிருக்கும்?’ என நான் யோசித்தேன். நான் கர்ப்பமாயிருந்த சமயத்தையும் பிள்ளைபெற்ற சமயத்தையும் நினைத்துப்பார்த்தேன். எல்லாமே பிரச்சினையில்லாமல் நடந்தன. ஸ்பென்ஸருக்கு காது நோயோ சளியோ வந்ததேயில்லை. நான் உணர்ச்சியால் கொந்தளித்தேன்! இப்போது நான் என்ன செய்வது? எனது குடும்பத்தாருக்கும் சில நண்பர்களுக்கும் ஃபோன் செய்து, பரிசோதனை ரிஸல்ட்டுகளைக் குறித்து சொன்னேன். சாட்சியாக இருக்கும் ஒரு சிநேகிதி, இதை ஒரு சவாலாக கருதுமாறு என்னை உற்சாகப்படுத்தினார்கள்; ஸ்பென்ஸருக்கு நான் வெறுமனே வித்தியாசமான ஒரு முறையில் கற்றுக்கொடுக்க வேண்டும். தேவையான பலத்தைக் கொடுத்ததற்காக நான் யெகோவாவிற்கு நன்றியுள்ளவளாக இருந்தேன்.
ஸ்பென்ஸருக்கு எது சிறந்ததாக இருக்கும்?
காதுகேளாத ஒரு பிள்ளையை வளர்ப்பதைப் பற்றியோ காதுகேளாதவராக இருப்பது எப்படிப்பட்டது என்பதைப் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என் மகனை நான் எவ்வாறு வளர்த்து எல்லாவற்றையும் அவனோடு பேச முடியும்? அவ்வளவநேக யோசனைகளும் கவலைகளும் என் மனதில் அலைபாய்ந்தன.
அதற்கடுத்த வாரத்தில், நாங்கள் ஆஸ்பத்திரிக்கு மறுபடியும் சென்றோம், நாங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி டெக்னீஷியன் பேசினார். ஒரு வழி, பேச்சுப் பயிற்சி; அது, பேச்சை வளர்ப்பதிலும் உதடு அசைவுகளைப் புரிந்துகொள்ளும் திறமையை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தும் என்பதாக அவர் சொன்னார். மற்றொரு வழி, காதுகேளாதோரின் மொழியாகிய சைகை மொழியைப் பயன்படுத்துவதாகும். முதலில் சைகை மொழியைக் கற்றுக்கொடுத்து, அதற்குப்பின் உதடு அசைவுகளைப் புரிந்துகொள்வதன்பேரிலும் பேச்சு திறமைகளின்பேரிலும் கவனம் செலுத்தும் ஒரு பயிற்சி இருந்தது. என் மகனுக்கிருந்த கொஞ்சநஞ்ச செவியாற்றலையும் அதிகப்படுத்துவதற்கு காது கேட்கும் கருவிகளை பயன்படுத்துமாறு அந்த டெக்னீஷியன் சிபாரிசு செய்தார். பின்பு நாங்கள் உள்ளூரிலிருந்த காது மருத்துவர் ஒருவரை சந்தித்தோம், அவர் ஸ்பென்ஸருக்கு காதில் செருகிக்கொள்ளும் மோல்டுகளையும் (ear molds) கேட்கும் கருவிகளையும் பொருத்தினார். அந்தச் சந்திப்பின்போது, ஸ்பென்ஸர் பேச்சுப் பயிற்சிக்கு சிறந்த மாணாக்கனாக இருப்பான் என்பதாக அந்தக் காது மருத்துவர் சொன்னார்.
ஸ்பென்ஸருக்கு எது சிறந்ததாக இருக்கும்? உண்மையிலேயே எது முக்கியமாயிருந்ததோ அதைக் குறித்து நான் யோசித்தேன். நமது பிள்ளைகளோடு பேச்சுத்தொடர்பு கொள்ளவேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்; வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க நாம் விரும்பினால் இது முக்கியம். பேச்சுப் பயிற்சியை ஏற்றுக்கொண்டு, பேச்சு மற்றும் உதடு அசைவுகளைப் புரிந்துகொள்ளும் திறமைகளை முன்னேற்றுவிப்பதன்பேரில் கவனம் செலுத்தலாம். மற்றவர்கள் அவனைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு ஸ்பென்ஸர் தனது பேச்சுத் திறமைகளை வளர்த்துக்கொள்வது ஆகிற காரியமாக இருந்தது. ஆனால் அது பல வருடங்களுக்குப் பிறகுதான் தெரியும்! நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? சைகை மொழியைப் பயன்படுத்த நாங்கள் முடிவு செய்தோம்.
அதற்கடுத்த மாதம், முழுமையான பேச்சுத்தொடர்பு பயிற்சி என அழைக்கப்பட்ட ஒன்றில் ஸ்பென்ஸரின் பெயர் பதிவு செய்யப்பட்டது. ஸ்பென்ஸரும் நானும் அடிப்படை சைகை மொழியைக் கற்றுக்கொண்டோம்; ஸ்பென்ஸருக்கு பேச்சுவழக்கிலிருந்த ஆங்கிலமும் உதட்டசைவுகளும் கற்றுகொடுக்கப்பட்டன. என் மகனுக்கு நான் எவ்வாறு கற்பிக்கலாம் என்பதும் எனக்கு காட்டப்பட்டது. மாதங்களும் கடந்துசென்றன, ஸ்பென்ஸரும் நன்றாக முன்னேற்றமடைந்துவந்தான். ஆனாலும், சிலசமயங்களில் நிலைமையை சமாளிப்பதை நான் மிகவும் கடினமாகக் கண்டேன். மற்ற பிள்ளைகள் “அம்மா” என்று சொல்வதையோ “யெகோவா” என்று சொல்ல கற்றுக்கொள்வதையோ நான் கேட்டபோது உற்சாகமிழந்துபோனேன். ஆனால் என்னை நானே இவ்வாறு கேட்டுக்கொள்வேன், ‘நான் ஏன் இவ்வாறு உணருகிறேன்? என் மகன் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறான்.’ அப்படிப்பட்ட ஒரு நல்ல பிள்ளையை பெற்றிருக்கும் சிலாக்கியத்தை போற்ற உதவுமாறு நான் யெகோவாவிடம் ஜெபித்தேன்.
ஸ்பென்ஸருக்கு இரண்டு வயதானபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டிற்குச் செல்ல நாங்கள் ஏற்பாடுகளைச் செய்தோம்; அங்கே நிகழ்ச்சிநிரல் அமெரிக்க சைகை மொழியில் (ASL [American Sign Language]) மொழிபெயர்க்கப்படவிருந்தது. காதுகேளாத சாட்சிகளோடு பல வருடங்களாக வேலை செய்திருந்த ஒரு தம்பதியிடம் என் நம்பிக்கையற்ற உணர்ச்சிகளைப் பற்றி நான் பேசினேன். மாஸச்சூஸெட்ஸில் ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய ASL கூட்டங்களைப் பற்றி அவர்கள் எனக்கு சொல்லி, அங்கு செல்லும்படி என்னை உற்சாகப்படுத்தினார்கள்.
அவர்களது ஆலோசனையை நான் பின்பற்றினேன்; ஸ்பென்ஸரும் நானும் அங்கு செல்ல ஆரம்பித்தோம். அங்கே, வயதுவந்த காதுகேளாதோரைச் சந்தித்து அவர்களோடு பழகுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆங்கில சபையிலிருந்தபோது, கூட்டங்களிலிருந்து ஸ்பென்ஸர் அதிக நன்மை பெறவில்லை. அவன் என் பக்கத்திலேயே ஒட்டிக்கொள்ளுவான், ஏனெனில் என்னிடம் மாத்திரம்தான் அவனால் பேச முடிந்தது. அப்படிப்பட்ட கூட்டங்களின்போது, அவனுக்கு ஏமாற்றவுணர்ச்சி வயதாகவயதாக அதிகமானது, மேலும் அவனது நடத்தையும் மோசமானது. எனினும், சைகை மொழியில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு நாங்கள் சென்றபோது, இது அவ்வாறு இல்லை. அம்மா விளக்கவேண்டிய அவசியமில்லாமல், அவனாலேயே மற்றவர்களோடு சுலபமாக தொடர்புகொள்ள முடிந்தது. அதிகம் தேவைப்பட்ட உறவுகளை சபையிலிருந்த ஆட்களோடு அவன் வளர்த்துக்கொண்டான். நாங்கள் இருவரும் சைகை மொழியைப் பயன்படுத்துவதில் முன்னேற்றமடைந்தோம், மேலும் எங்களது வீட்டு பைபிள் படிப்பின்போது எவ்வாறு ஒரு மேம்பட்ட ஆசிரியையாக இருப்பதென்பதை நான் கற்றுக்கொண்டேன். அது எவ்வளவு அருமையாய் இருந்தது! இப்போது, முதன்முறையாக, கூட்டங்களில் என் மகனுடன் அவனது மொழிபெயர்ப்பாளராக இல்லாமல் வெறுமனே அவனது அம்மாவாக என்னால் இருக்க முடிந்தது!
எனக்கு ஒரு பெரிய திருப்புக்கட்டம்
எனது கணவரின் சம்மதத்தோடு, ஸ்பென்ஸருக்கு மூன்று வயதாயிருக்கும்போது, அரசாங்க பள்ளிக்கூடத்தில் அளிக்கப்பட்ட, காதுகேளாத மற்றும் குறைவான செவியாற்றலுள்ள பிள்ளைகளுக்கான ஒரு பயிற்சியில் நான் அவனது பெயரை பதிவு செய்தேன். பெற்றோருக்குப் போதனையளிப்பதற்காக தொகுதிதொகுதியாக கூட்டங்கள் நடத்தப்பட்டன, இன்னுமதிகம் கற்றுக்கொள்ள நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். ஒரு கூட்டத்தின்போது, வயதுவந்த மற்றும் பருவவயது காதுகேளாதோரின் ஒரு குழு, அந்தத் தொகுதியிடம் பேசியது. தங்கள் பெற்றோர்களோடோ குடும்பத்தினரோடோ தங்களுக்கு சிறிதளவே அல்லது சிறிதும் பேச்சுத்தொடர்பு இருந்ததில்லை என்பதாக அந்தக் குழுவினர் விவரித்தனர். ஏன் என்று நான் அவர்களைக் கேட்டபோது, அவர்களது பெற்றோர் சைகை மொழியை கற்றுக்கொள்ளவே இல்லை என்பதாக அவர்கள் பதிலளித்தனர்; ஆகவே அவர்களது வாழ்க்கை, உணர்ச்சிகள், ஆர்வங்கள் ஆகியவற்றைப் பற்றி அவர்களது பெற்றோரிடம் அவர்களால் ஒருபோதும் பேச முடியவில்லை. தங்கள் குடும்பங்களின் ஒரு பாகமாக அவர்கள் உணரவில்லை என்பதாக தோன்றியது.
இது எனக்கு ஒரு பெரிய திருப்புக்கட்டமாக இருந்தது. நான் என் மகனைப் பற்றி நினைத்தேன். அவன் தன் பெற்றோரோடு தொடர்பு வைத்துக்கொள்ளாமலேயே வளர்ந்து வீட்டைவிட்டுச் செல்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சைகை மொழியிலுள்ள எனது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள எப்போதுமில்லாத அளவில் நான் தீர்மானமாயிருந்தேன். காலம் செல்லச்செல்ல, சைகை மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானமே எங்களுக்கு சிறந்தது என்பதை அதிகமதிகமாக நான் உணர்ந்தேன். அவனது மொழி தொடர்ந்து முன்னேற்றமடைந்தது, நாங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவோம்; உதாரணத்திற்கு, “விடுமுறைக்கு நாம் எங்கே போகலாம்?” அல்லது “நீ பெரியவனாகும்போது என்னவாக ஆகவிரும்புகிறாய்?” அவனோடு தொடர்புகொள்ள பேச்சின்மீது சார்ந்திருக்க நான் முயன்றிருந்தால் எத்தனை காரியங்களை இழந்திருப்பேன் என்பதை நான் உணர்ந்தேன்.
ஐந்து வயதில், காதுகேட்கும் பிள்ளைகளும் சைகை மொழி தெரிந்த ஆசிரியையும் உள்ள ஒரு சாதாரண பள்ளி வகுப்பில் ஸ்பென்ஸர் சேர்க்கப்பட்டான். இந்தப் பயிற்சியை அவன் மூன்று நீண்ட வருடங்கள் பெற்றுக்கொண்டான். அவன் பள்ளியை வெறுத்தான், அவன் அந்தளவுக்கு கஷ்டப்படுவதைப் பார்ப்பது சுலபமாக இல்லை. நல்லவேளையாக, அவனது ஏமாற்றவுணர்ச்சிகளை வித்தியாசமான வழிகளில் சமாளிக்க நாங்கள் முயற்சி செய்கையில் என்னால் அவனோடு பேச முடிந்தது. எனினும், முடிவில், அரசாங்கப் பள்ளியில் அவன் பெற்ற இந்தப் பயிற்சி அவனது சுயமரியாதைக்கோ அவனது கல்வி வளர்ச்சிக்கோ நல்லதல்ல என்பதாக முடிவு செய்தேன்.
1989-ல் என் திருமணம் முடிவடைந்தது. இப்போது நான், சைகை மொழியில் வேகமாக முன்னேறிவரும் திறமைபெற்ற ஆறு வயது பிள்ளையை உடைய ஒரு ஒற்றைப் பெற்றோராக இருந்தேன். அவனோடு நான் பேச முடிந்தாலும், எங்களுக்குள் கருத்துப் பரிமாற்றத்தை காத்துக்கொள்ளவும் பலப்படுத்தவும், ASL-ல் எனது திறமைகளை முன்னேற்றுவிப்பது அவசியம் என்பதை நான் அறிந்திருந்தேன்.
இடமாற்றத்திற்கான ஒரு சமயம்
அநேக நகரங்களில் காதுகேளாத குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பலவித பயிற்சிகளைக் குறித்து நான் விசாரித்தேன், ASL மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டையுமே, இருபாஷை அணுகுமுறை எனக் கருதி பயன்படுத்தும் ஒரு பள்ளி மாஸச்சூஸெட்ஸில் இருப்பதைக் கண்டேன். அதோடுகூட, பாஸ்டன் பகுதியில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு ASL சபை விரைவில் ஆரம்பமாகும் என்பதாக சொல்லப்பட்டேன், அங்கே குடிபெயர்ந்து செல்லும்படி ஒரு நண்பர் ஆலோசனையளித்தார். ஒற்றைப் பெற்றோராக, கிராமப்பகுதியான நியூஹாம்ப்ஷயரிலிருக்கும் எங்கள் வீடு, குடும்பம், நண்பர்கள் ஆகிய எல்லாவற்றையும் விட்டுவிட்டு பெருநகர் பகுதியில் குடியேறுவதென்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாய் இருந்தது. ஸ்பென்ஸரும்கூட நாட்டுப்புறத்தில் வாழ்வதை மகிழ்ந்தனுபவித்தான். எனினும், நான் சிந்திப்பதற்கு இரண்டு காரியங்கள் இருந்தன. ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகிய அனைவருமே சைகை மொழியில் நன்றாக பேசும் ஒரு பள்ளியில் ஸ்பென்ஸர் இருக்க வேண்டும், மேலும் மற்ற காதுகேளாத சாட்சிகளோடு ஒரு சபையில் இருப்பது மேலானதாக இருக்குமென நான் உணர்ந்தேன்.
நான்கு வருடங்களுக்கு முன்பு, ஸ்பென்ஸருக்கு ஒன்பது வயதாயிருந்தபோது நாங்கள் இடம்மாறினோம். கொஞ்ச காலத்திற்குள்ளாகவே, மாஸச்சூஸெட்ஸிலுள்ள மால்டனில், சைகை மொழியை பயன்படுத்தும் சபை ஏற்படுத்தப்பட்டது; அது முதற்கொண்டு ஸ்பென்ஸர் மிக அதிகமாக முன்னேற்றமடைந்திருக்கிறான். அவனது நடத்தை அதிகளவில் முன்னேறியிருக்கிறது, கூட்டங்களில் இருப்பதை அவன் மகிழ்ந்தனுபவிக்கிறான். அவன் மற்றவர்களோடு பேசி உறவுகளை வளர்த்துக்கொள்வதைப் பார்ப்பது எனக்கு அதிக சந்தோஷமளிக்கிறது. சபையிலுள்ள காதுகேளாத சகோதரர்களும் சகோதரிகளும் என் மகனுக்கு அருமையான முன்மாதிரிகளாக இருந்து, அவனும் ஆவிக்குரிய இலக்குகளை எட்ட முடியும் என அவன் உணர்ந்துகொள்வதற்கு உதவியிருக்கின்றனர். இதை அவன் செய்திருக்கிறான். இப்போது அவன் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சுக்களைக் கொடுக்கிறான், மேலும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக சேவித்துவருகிறான். முழுக்காட்டப்படுவதற்கான அவனது ஆவலை அவன் தெரிவித்திருக்கிறான்.
சைகை மொழியில் மற்ற காதுகேளாத ஆட்களிடம் அவன் தனது நம்பிக்கையைத் தெரிவிப்பதைப் பார்க்கும்போது, ஊழியத்தில் எனக்கு என்னே ஆனந்தம்! அவனது சுயமரியாதை பேரளவில் அதிகரித்திருக்கிறது. சபையைக் குறித்து ஸ்பென்ஸர் எவ்வாறு உணருகிறான் என்பதை அவன் எனக்கு சொல்லியிருக்கிறான். அவன் சொன்னான்: “இதுதான் நமக்குரிய இடம். சகோதரர்களாலும் சகோதரிகளாலும் என்னிடம் பேச முடிகிறது.” இனியும், கூட்டங்கள் முடிந்தவுடனேயே அங்கிருந்து புறப்பட வேண்டுமென என் மகன் என்னைக் கெஞ்சுவதில்லை. இப்போது, ராஜ்ய மன்றத்திலிருந்து புறப்படுவதற்கு நேரமாகிவிட்டது என நான் அவனுக்கு சொல்ல வேண்டும்!
தற்போதிருக்கும் பள்ளியில், மற்ற காதுகேளாத பிள்ளைகளோடு ஸ்பென்ஸரால் சுலபமாக பேச முடியும். அவர்களோடு அவன் கலந்தாலோசித்தது, பிள்ளைகளைக் குறித்து இந்த உலகம் கருதுவதற்கும் யெகோவா கருதுவதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காண அவனுக்கு உதவியிருக்கிறது. பைபிள் நியமங்களுக்கிசைய, ஸ்பென்ஸரும் நானும் நன்றாக பேசுகிறோம், ஒரு நெருக்கமான உறவையும் கொண்டிருக்கிறோம். பிற்பகலில் அவன் வீட்டிற்கு வந்தபிறகு, நாங்கள் இருவரும் சேர்ந்து வீட்டுப்பாடங்களைச் செய்கிறோம். கூட்டங்களுக்கும் வீட்டுக்குவீடு ஊழியத்திற்கும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து செல்கிறோம். எனினும், பள்ளியில் உள்ள அனைத்து பிள்ளைகளும் தங்கள் பெற்றோரோடு இவ்வளவு நெருக்கமாக இருப்பதில்லை என்பதை ஸ்பென்ஸரால் உணர முடிகிறது.—கொலோசெயர் 3:20, 21.
“நம்மால் எதை வேண்டுமானாலும் பேச முடியும்”
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, என்னிடம் ஏதோ சொல்ல வேண்டுமென்பதுபோல் ஸ்பென்ஸர் என்னையே பார்த்துக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அவனுக்கு ஏதாவது வேண்டுமா என நான் கேட்டேன். “வேண்டாம்” என்பதாக அவன் பதிலளித்தான். பள்ளியில் எவ்வாறு எல்லா காரியங்களும் நடந்துவருகின்றன போன்ற சில கேள்விகளை நான் அவனிடம் கேட்டேன். என்னிடம் எதையோ சொல்ல வேண்டுமென அவன் நினைப்பது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பின், எங்களது காவற்கோபுர குடும்பப் படிப்பின்போது, அவன் சொன்னான், “என் பள்ளியிலுள்ள பிள்ளைகளின் பெற்றோர் சிலருக்கு சைகை மொழி தெரியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?” நான் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தேன். “உண்மையாகவேதான். சில அம்மா அப்பாவால் அவர்களுடைய பிள்ளைகளுடன் பேசவே முடியவில்லை,” என்பதாக அவன் சொன்னான். சில பெற்றோர் பள்ளிக்கு வந்திருந்ததாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு எதையாவது தெரிவிக்கும் முயற்சியில், அவர்கள் சொல்ல நினைப்பதை கையைக் காட்டி நடித்துக்காண்பிப்பதை தான் பார்த்திருப்பதாகவும் அவன் விளக்கினான். “நீங்கள் சைகை மொழியைக் கற்றிருப்பது என் பாக்கியம். நம்மால் பேச முடியும். நீங்கள் வெறுமனே கையால் சுட்டிக்காண்பிப்பதில்லை; நம்மால் எதை வேண்டுமானாலும் பேச முடியும்.”
இது எந்தளவுக்கு என் இருதயத்தைத் தொட்டது! வளர்ச்சியடையும்வரை, நம்மில் பலர் நமது பெற்றோர் எடுத்திருக்கும் சிரமங்களை போற்றுவதில்லை. ஆனால் என் மகனோ, 12 வயதில், அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்பை நாங்கள் மகிழ்ந்தனுபவிப்பதற்கு தான் எவ்வளவு நன்றியுள்ளவனாயிருக்கிறான் என்பதை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஒரு தாயாக, என் மகனோடு ஒரு நல்ல உறவை வைத்துக்கொண்டு அவனோடு நெருக்கமாக இருப்பதே என் இலக்குகளில் ஒன்றாக இருந்தது. நான் சைகை மொழியை கற்றிருக்காவிட்டால் இது ஒருவேளை நடந்தேயிருக்காது. யெகோவாவிற்கு என்னை ஒப்புக்கொடுத்திருந்தது, ஒரு பெற்றோராக என் பொறுப்புகளுக்கு கருத்தூன்றிய விதத்தில் கவனம் செலுத்த என்னை உந்துவித்தது; இது, பேச்சுத்தொடர்பு சார்ந்த முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதை எளிதாக்கியது. இந்த தீர்மானங்களின் விளைவாக நாங்கள் இருவருமே ஆவிக்குரிய விதத்தில் நன்மையடைந்திருக்கிறோம். உபாகமம் 6:7-ல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானவை; அங்கே, பெற்றோர் ‘வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்’ யெகோவாவின் கட்டளைகளை தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஸ்பென்ஸரும் நானும் “தேவனுடைய மகத்துவங்களைப்” பற்றி நன்றாக பேசலாம் என்பதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். (அப்போஸ்தலர் 2:11)—ஸின்டி ஆடம்ஸ் என்பவரால் சொல்லப்பட்டது.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
‘தன் பெற்றோரோடு தொடர்பு வைத்துக்கொள்ளாமலேயே அவன் வளர்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’